/* சின்ன பட்டாம்பூச்சி
ரெக்க கட்டி பறக்குது கண்ணா
அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா
அந்த பட்டாம்பூச்சி போலே
நாமும் பறக்கணும் கண்ணா
நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை
ரசிக்கணும் கண்ணா
உள்ளம் துள்ளி சென்றால்
துன்பம் இல்லை மனமேவாடாதே..
இந்த வானும் மண்ணும் இனிமையானது
இங்கு வாழும் காலம் அருமையானது*/
அத்தியாயம் 92-1
”அடேய் என் புள்ளைய என்னடா பண்ணுனீங்க… கொலகாரப் பாவிங்களா”
கதறியபடியே மருத்துவனைக்குள் நுழைந்த கந்தம்மாள் … அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பார்த்து அழ ஆரம்பித்திருக்க… … அவள் பின்னாலேயே சென்று கொண்டிருந்த கண்மணி… இப்போது சற்று தள்ளியே நிற்க…
அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் கந்தம்மாளை உள்ளே அழைத்துச் சென்று விட… இன்னொருவன் மட்டுமே அங்கு நின்று கொண்டிருந்தான்…
கண்மணி… இப்போது வேகமாக அவனருகில் போய் நின்று கொண்டவளாக… அவனைப் பார்க்க… அவனோ அவளை குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்க…
அந்த இளைஞனைப் பார்த்து…
“என்ன… ஏன் அப்படி பார்க்கிற… நான் அந்தக் கெழவியோட பேத்திதான்… “ எனும் போதே மருதுவின் கண்கள் இன்னும் பெரியதாக விரிந்து… ஆர்வத்துடனும்… திகிலுடனும் கண்மணியை பார்க்கத் தொடங்க… அது அவன் முகத்திலும் தெரிய ஆரம்பித்திருக்க… கண்மணியோ அவனையே அவன் பார்வை மாற்றங்களையே கண் சிமிட்டாமல் பார்த்தபடியே இருக்க…
மருதுவுக்கோ அவளிடம் என்ன பேசுவது என்ன கேட்பது எனப் புரியவில்லை… பவித்ரா அக்காவின் சாயல் அவளிடம் இருந்ததா அதை எல்லாம் சொல்லத் தெரியவில்லை…
ஒரு மாதிரியான பரவச சந்தோசத்தில் இருக்க… அவனுக்கு சொற்கள் எல்லாம் மறந்து போன மாதிரியான நிலை… எல்லாம் ஒரே நிமிடம்தான்.. பவித்ரா ஞாபகம் வந்த போதே அவள் இறந்து போன ஞாபகங்களும் வந்து சேர்ந்திருக்க… அவன் முகம் அப்படியே சுருங்கி பின் கவலையில் வாடி இருக்க அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டவன் அவளிடம் பேசவே இல்லை… வேகமாக வேறு புறம் திரும்பிக் கொள்ள
“என்ன… இவன்… ஆ’ன்னு பார்த்தான்… அப்புறம் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்… சோக கீதம் வாசிச்சான்… இப்போ திரும்பிகிட்டான்…” என்றபடியே…. உட்கார்ந்திருந்தவன் முன் போய் நின்றவளாக
“என் பேர் கண்மணி…” என தானாகவே தன்னை அறிமுகப்படுத்தியவளாக… அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் கண்மணி…. மருது இப்போதும் பேசாமல் திரும்பிக் கொள்ள…. வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்தவளுக்கு ஒரு நிமிடம் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.. உட்கார்ந்த வேகத்திலேயே எழுந்தவளாக… சற்று தள்ளிச் சென்று நின்றபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருக்க…
அப்போது வாசு வெளியே வந்தவனாக… மருதுவிடம் வந்தவன்
“டேய்… நான் கிளம்புறேன்… நீயும் சீக்கிரம் கிளம்பி வர்ற வழியைப் பாரு,,, அதான் அண்ணனோட அம்மா வந்துட்டாங்கள்ள… நம்ம உதவி ஏதாவது தேவைப்பட்டா கடை நம்பர் கொடுத்துருக்கேன்… மத்தபடி கெழவி அது பார்த்துக்கும்… நீயும் வீட்டுக்கு போய் குளிச்சுட்டு வேலையைப் பார்க்க வா ” எனும் போதே மருதுவும் தலை ஆட்ட… வாசுவும் கிளம்பிவிட… வாசு சென்ற சிறிது நேரம் கழித்து மருதுவின் அருகில் மீண்டும் வந்தவள்…
”அந்த உடம்பு சரியில்லாதவருக்கு சரி ஆகிருச்சா… இப்போ நல்லா இருக்கார் தானே… ஏன் அவருக்கு யாரும் இல்லையா” கண்மணி பெரிய மனுசி போல் கேட்க…
“ஹ்ம்ம்” என பேசுவதற்கே காசு கேட்பவன் போல சொல்லிவிட்டு மருது திரும்பி விட… கண்மணி அவனிடம் மீண்டும் பேச்சுக் கொடுக்க நினைத்த போதே…. மருது கண்களை மூடியிருக்க… கண்மணி எரிச்சலுடன் அவனைப் பார்த்தபடி…மீண்டும் முதலில் தான் நின்று வேடிக்கைப் பார்த்த இடத்திற்கே போய்விட்டாள்
மருது வேண்டுமென்றேதான் கண்களை இறுக மூடியிருந்தான்… கண்மணியோடு பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென்றுதான் அவனும் அப்படி பண்ணினான்… ஏனோ அவனுக்கு அவளைப் பிடிக்காதது போலத் தோன்றியது… அதனால் பேசவும் தோன்றவில்லை…
கண்மணியும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள்தான்… அவள் பசி அவளைப் பொறுக்க விடுமா… முடியவில்லை அவளால்… காலையில் தண்ணீர் குடித்தது… அதன் பின் ஒரு பச்சைத் தண்ணீர் கூட அவள் பல்லில் படவில்லை… மணி 11 ஆகி இருக்க… அவளுக்கு 8 மணியே அதிகம்… அப்படி இருக்க 11 மணி என்றால் கேட்கவா வேண்டும்… பசியில் ராட்சசி ஆகவில்லை அவ்வளவுதான்… வேகமாக அடி எடுத்து வந்தவள்… மருதுவின் முன் வந்து நின்றவள்… அவன் யார்… இதற்கு முன்னால் பேசியது கூட இல்லை என்றெல்லாம் நினைக்கவில்லை… தன் பாட்டி உரிமையுடன் அவர்களுடன் பேசியதே அவளுக்குப் போதுமாயிருக்க… மருது அவர்களுக்குத் தெரிந்தவன்… அவர்கள் கூட்டக்காரன்… அது மட்டுமே அவளுக்குத் தோன்ற… வேகமாக அவன் தோள்ப்பட்டையை பிடித்து உலுக்க… மருது உண்மையிலேயே தூங்கி இருந்தான் பாவம்… இவள் பிடித்து உலுக்கியதில்… என்ன ஏதென்று தெரியாமல் பதறிப் போய் விழித்தவன்… கண்மணியைப் பார்க்க…
“வந்ததுலருந்து பார்த்துட்டு இருக்கேன்… என்ன நீ தூங்கிட்டே இருக்க… சாப்பாடுலாம் வாங்கிக் கொடுக்கத் தெரியாதா… எவ்வளவு தூரத்தில இருந்து வந்திருக்கோம்ல… அந்தக் கெழவி அது பாட்டுக்கு விசுவிசுன்னு போயிருச்சு… நீ என்னடான்னா குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருக்க… எழுந்திரு… சாப்பாடு வாங்கி கொடு…” என அவனைக் கைப்பிடித்து எழுப்ப…
மருதுவே ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றான் தான்… பார்த்து சில நிமிடங்களே ஆகியிருக்க… இந்தப் பெண் என்ன இப்படி உரிமையாகப் பழகுகிறாள்… அதட்டுக்கிறாள்… மருது கைத்துப் பார்க்க
“என்ன பார்க்கிற… வா… வா… பசிக்குது… இப்படியே பார்த்துட்டு இருந்தா… எனக்கு இன்னைக்கு ஹாஸ்பிட்டல் சாப்பாடுதான் கிடைக்கும் போல… என் பிறந்த நாள் இன்னைக்கு… இன்னைக்குப் போய்… ஹாஸ்பிட்டல்ல பேஷண்டா சாப்பாடு சாப்பிடனுமா..” எனச் சொன்னபடியே… அவன் பதிலை எல்லாம் கேட்காமல் அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனவள்… அங்கிருந்த டீக்கடைக்கு முன்னால் நிறுத்தி இருக்க
“முதல்ல டீயும் பன்னும் வாங்கித்தா” எனச் சொன்னபடி அங்கிருந்த மேஜையில் அமர்ந்துவிட… மருது அவனையுமறியாமல் சட்டைப்பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவனாக… பின் தனக்கும் அவளுக்குமாக டீயை வாங்கிக் கொண்டு அவள் எதிரே அமர….
“பன் எங்க…” கண்மணி பசியில் தவிப்புடன் கேட்க… அப்போது கடைக்காரர் எடுத்து வந்து கொடுக்க… அடுத்த நொடி கண்மணியின் கவனம் முழுவதும் அந்த டீ பன்னில் மட்டுமே… முடித்தவளாக….
”இன்னோரு டீ… அப்புறம் 2 பன்னு… மூனுன்னா கூட ஓகே” என்றபடி மருதுவைப் பார்க்க
ஏய் என்ன திமிரா… வா கெளம்பு… இவ்வளவுக்குதான் என்கிட்ட காசு இருக்கு…” என்று மருது கடுகடுத்த போதே… எக்கி… அவன் சட்டைப்பையை எட்டிப் பார்த்தவள்…
“அதான் இன்னும் இருக்கே… வாங்கிக் கொடு…” சலுகையாகக் கேட்டபடி... அங்கிருந்த இருக்கையில் இருந்து எழாமல் ஜம்பமாக அமர்ந்திருக்க…
அவனோ… வேகமாக எழுந்திருக்க…
“ப்ளீஸ்… பசிக்குது… பொய் சொல்லல… உண்மைதான்….” கண்மணி பரிதாபமாகக் சொல்ல… மருது எரிச்சலுடன்…
“ஒரு பன்னு… அவ்ளோதான் அதுக்குத்தான் காசு இருக்கு” என்று சொல்ல…. கண்மணியும் சோகமாக வேறுவழியின்றி சரி என்று தலை அசைக்க… இவனும் வாங்கிக் கொடுக்க… அவளும் சாப்பிட்டு முடித்திருந்தாள்…
“சாப்பிட்டேல்ல… கெளம்பு… நாம இருந்த ஹால்ல போய் வெயிட் பண்ணு…” என மருது சொல்ல…
“நீயும் வா… சேர்ந்தே போகலாம்… நான் மட்டும் போய் என்ன பண்ண போறேன்” என்றபடியே மருதுவின் அருகில் போய் நின்றிருக்க
“போன்னா… போ… புரிஞ்சதா… ” மருதுவின் மிரட்டலான குரலில் கண்மணிக்கு ஏனோ கோபம் வரவில்லை… மாறாக அவன் வார்த்தைகளைக் கேட்கவேண்டும் போல் தான் தோன்றியது…
“சரி சரி… நான் போறேன்…” என்றபடி… முன்னே போனவள்… மீண்டும் ஏதோ ஞாபகம் வந்தவளாக…
”நான் போனபின்னால… வேறு ஏதாவது வாங்கிச் சாப்பிடப் போறியா என்ன… இந்த வெரட்டு வெரட்ற” என்றவளை பார்த்து மருது பல்லைக்கடிக்க…. அதற்கு மேல் அவனோடு வம்பிழுக்காமல்… முன்னே நடந்தவளுக்கு இன்னுமே சந்தேகம் தீரவில்லை…
”நம்மள விட்டுட்டு…. வேற ஏதாவது வாங்கிச் சாப்பிடறானா….” இந்த எண்ணம் கண்மணிக்குள் வந்திருக்க.. மெதுவாகத் தலையைத் திரும்பிப் பார்க்க… மருதுவோ… புகைபிடித்துக் கொண்டிருக்க…
“அடப்பாவி… இதுக்குத்தான் நம்ம பன்னைக் கட் பண்ணினானா…. ப்ச்ச்… பசிக்குதே…” என்றபடி மருத்துவமனைக்குள் நுழைந்தும் விட்டாள்…
மருதுவோ அதற்குப் பின்… மருத்துவமனைக்குச் செல்லவில்லை… நேற்றே வாசு சொல்லியிருந்தான்…. கம்பெனி ஆர்டர் விசயமாக இரண்டு மூன்று கடைகளுக்குச் சென்று வர வேண்டும் என்று… அது ஞாபகம் வந்திருக்க…. வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு… தன் வேலையைப் பார்க்க கிளம்பியும் விட்டான்…
---
மருதுவின் வரவை எதிர்பார்த்தபடியே… ஒரு அரைமணி நேரம் அந்த மருத்துவமனைக்குள் சுற்றிக் கொண்டிருந்தவள்… அவன் வராமல் போக… வேகமாக வெளியே ஓடி வந்தவள்… டீக்கடையில் பார்த்துவிட்டு… அந்த மருத்துவ வளாகம் முழுவதும் தேட… மருதுவைக் காணவே இல்லை… அவன் பேர் கூடக் கேட்கவில்லை… டீக்கடையில் கூட டீயும் பன்னுமே முக்கியம் என்பது போல பேரைக் கேட்கவில்லையே… தன்னையேத் திட்டிக் கொண்டவளுக்கு… சட்டென்று ஏனென்று தெரியாத ஒரு பாரம் மனதினுள்… திருவிழாவில் வாங்கிய பொம்மையை வாங்கிய அடுத்த நிமிடமே தொலைத்த குழந்தையைப் போன்ற நிலையில் இருந்தாள்… தானாகவே உதடுகள் பிதுங்க ஆரம்பித்திருந்தது கண்மணிக்கு அழுகையில்…
மீண்டும் மீண்டும் அந்த மருத்துவ வளாகத்தையே சுற்றி சுற்றி வந்து அவனைத் தேடியவள் ஒரு கட்டத்தில் சோர்ந்து விட்டவளாக… அங்கிருந்த காவலாளியின் அருகில் போய் அமர்ந்தவளாக… அவரிடம் கதை பேச ஆரம்பித்து விட்டாள்…
“ஏம்மா யாரைப் பார்க்க வந்திருக்க…”
“என் பாட்டியோட பையன்… அவருக்கு முடியல… பார்க்க வந்தோம்… தாத்தா எனக்கு இன்னைக்கு பிறந்த நாள்” கண்மணி பட பட வென்று சொல்ல…
“இவள் மகள் வயிற்றுப் பேத்தி போல…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவராக… அதைக் கண்டு கொள்ளாமல்… கண்மணி பிறந்த நாள் என்று சொன்னதால்
“அப்படியா தாயி…. நல்லாருடா…” என்றபடி இருவருமாக பேசிக்கொண்டிருக்க
அதில் நேரமும் போயிருக்க… ஒரு கட்டத்தில் கண்மணிக்கு பசிக்க ஆரம்பித்திருக்க…
“ப்ச்ச்…. இந்தக் கெழவி வேற… அந்த ரூமை விட்டே வரவே மாட்டேங்குது… என்ன பண்ணலாம்” என யோசித்தபடியே… அதை அந்தக் கிழவரிடம் சொல்ல
“ஏன் தாயி… பாட்டியை தொல்ல பண்ணாத… இங்க பக்கத்துல அன்னதானம் போட்றாங்களாம்… நான் போறேன்… நீயும் வர்றியா…” எனக் கேட்க…
“ஹாஆஆஅ…. அன்னதானமா…. போலாம் தாத்தா… போலாம்… ஆனா அதுக்குள்ள பாட்டி வீட்டுக்கு போயிருச்சுனா… என்ன பண்றது… நான் இந்த ஏரியாக்கு புதுசு… ” என சுதாரித்து கேட்க…
“ஓ அப்டியா” என யோசித்தவராக கண்மணியைப் பார்க்க…
“சரி வாங்க பார்த்துக்கலாம்… போயிருச்சுனா என் ஏரியாக்கு பஸ் ஏத்தி விட்றங்க… அட்ரஸ் தெரியும்… எனக்கு” எனச் சொன்னவளிடம்… அவரும் சிரித்தபடி…
“அப்டிலாம் உன் பாட்டி உன்னை விட்டுப் போகுமா பாப்பா.. இங்கதான் இருக்கும்… அப்படியே போனா கூட நானே விசாரிச்சு வீட்ல கொண்டு விட்றேன்… இங்க பக்கத்துல பெரிய பணக்காரங்க வீட்ல அன்னதானம் போட்றாங்க வர்றியா… “ என்றபடி தன் சைக்கிளை எடுக்க..
“ஹை சைக்கிள்ள போறோமா… ஜாலி ஜாலி…. நான் நான் முன்னால தாத்தா… நான் தான் ஹேண்ட்பார் பிடிச்சுப்பேன்” குதூகலித்தவளை சைக்கிளில் ஏற்றி வைத்தவர்…
“நான் ஓட்டலடா… நீ உட்கார்ந்துக்கோ” என்றபடி சைக்கிளைத் தள்ளியபடியே செல்ல…. கண்மணிக்கு அவ்வளவு சந்தோசம்…
கண்மணி என்பவளுக்கு அவளது பள்ளிக் கூடத்தில் மட்டுமே திமிர்…போட்டி… பொறாமை எல்லாம்… ஆனால் வெளியே உள்ள உலகத்தில் யாரிடம் வேண்டுமானாலும் சிரித்து பேசுவாள்… பழகுவாள்… அவர்களை நம்பவும் செய்வாள்… அப்படித்தான் இந்த தாத்தாவும்..
அவரோடு பேசியபடியே… சந்தோசமாக சாலையில் வந்து கொண்டிருந்த போதே…. அந்த வழி எங்கும் பவித்ராவின் பத்தாவது நினைவஞ்சலி தின பதாகைகள்…
கண்மணி… அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபடியே… அதில் இருந்த பெயரை வாசிக்க ஆரம்பித்தவள்…
”பவித்ரா… டாக்டர் போல தாத்தா… எங்க அம்மாவும் டாக்டர்… அவங்க பேரும் பவித்ராதான்… பிரபா டீச்சர் சொல்லிருக்காங்க” என்ற போதே… அந்தப் பெரியவர் அவள் பேசியதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை… கவலையுடன் பேச ஆரம்பித்திருந்தார்
“இவங்க வீட்டுக்குத்தாண்டா போறோம்… ஒரே பொண்ணு அல்பாயுசுல போச்சு… எவ்வ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம் சந்தோசம் இல்லையே… வாரிசு இல்லையே… எல்லாம் அவங்க வாங்கி வந்த சாபம்” எனும் போதே அவரின் தொணியில் கண்மணியின் முகமும் சுருங்க…
“இந்தப் பொண்ணு போன பின்னால… அந்த வீட்டுப் பெரியம்மாவுக்கு மனநிலை சரியில்லையாம்… எங்கெங்கோ பார்த்தும் சரி ஆகலையாம்…. வெளிநாட்ல இருந்து இப்போதான் வந்திருக்காங்க… பெரிய அளவுல அன்னதானம் கொடுத்தா சரி ஆகிரும்னு ஜாதகத்துல சொல்லியிருப்பாங்க போல… அதான் ஒரு வாரமா அன்னதானம் போயிட்டு இருக்கு…” என்ற போதே அவர் சொன்னதில் மற்றதெல்லாம் விட்டுவிட்டு…
“என்னது ஒரு வாரமாவா… மூணு வேளையுமா… ச்சேய்… பாட்டியோட பையனுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே உடம்பு சரி இல்லாம போயிருந்துருக்கலாம்ல… நான் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துருப்பேன்… “ தனக்குள் கணக்குப் போட்டுக் கொண்டவளாக
”தாத்தா நேத்தும் சாப்பிட்டீங்களா…”
”ஆமாடா… ஆனால் இன்னைக்குத்தான் முக்கியமான நாள்…” என்ற போதே
“பால்பாயசம் இருக்குமா தாத்தா…. “ கண்மணி கண்களை விரித்துக் கேட்க… பெரியவரும் தலை ஆட்ட..
“2… 3…4… இல்லல்ல பத்து கிளாஸ் கேட்டு வாங்கிக் குடிச்சுட்டுத்தான் வருவேன்…” பெரியவருக்கோ சிரிப்பு தாளமுடியவில்லை
“சாப்பாடே செமையா இருக்கும்… பாயாசம் பெருசா எடுக்காதுடா””
“அதெல்லாம் இல்ல தாத்தா… பாயாசத்துக்குனு இந்த வயித்துல இடம் ஒதுக்கி வச்சுட்டுத்தான் சாப்பிடவே ஆரம்பிப்பேன்…” என்றவள் அப்போதே எப்படி சாப்பிடுவது என்று வரிசைப்படுத்த ஆரம்பித்திருக்க… இருவருமாக பேசியபடி பவித்ர விகாஸின் முன் வந்து நின்றிருக்க… அங்கோ மிகப் பெரிய கூட்டம்… இவ்வளவு கூட்டத்தை அந்தப் பெரியவர் எதிர்பார்க்கவேயில்லை… நேற்று வரை இவ்வளவு கூட்டமில்லை… கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை…
‘டோக்கன் வாங்கிக்கங்க…” எனச் சொல்ல… கண்மணி எப்படியோ அடித்துப் பிடித்து தனக்கும் அந்தப் பெரியவருக்குமாக டோக்கன் வாங்கி வந்திருந்தாள்……
“எவ்ளோ பெரிய வீடு பாரும்மா” பெரியவர் அதிசயத்துச் சொல்ல
“தாத்தா… இதை விடலாம் பெரிய அரண்மணைலாம் எனக்குத் தெரியும்… சிறுவர் மலர்… கோகுலம் கதிர்… அப்புறம்… வளைகுடா கதைகள் இதுல எல்லாம் பார்த்திருக்கேன்… அதுக்கு கம்பேர் பண்ணால் இதெல்லாம் தூசு தாத்தா… எனக்கு ஒண்ணும் அப்படி பிரமாண்டமா தெரியல” கண்மணியோ அலட்சியமாகக் சொல்லி முடித்திருந்தா
இப்படியாக இருவருமாக அந்த தெருவின் நீண்ட வரிசையில் பேசியபடி நின்றிருக்க… மருது எதேச்சையாக அந்தப்பக்கம் வந்திருக்க… வந்தவன் வரிசையில் நின்றிருந்த கண்மணியையும் பார்த்து விட…
“அய்யோ….” என தலையிலடித்துக் கொண்டவன்
““இவ ஏன் இங்க நிற்கிறா… கடவுளே… இவளை உள்ள போக விடக் கூடாதே… என்ன ஆகப் போகுதோ…..” என வேக வேகமாக கண்மணியை நோக்கி மருது போக ஆரம்பிக்க… ஆனால் கண்மணி பவித்ர விகாஸின் வாயில் கதவின் அருகே சென்றிருக்க...
“ஏய் கண்மணி... கண்மணி... கண்மணி...” வெறியோடு சத்தம் போட்டு கத்தியபடி... மருது அவளை நோக்கி ஓடி வர ஆரம்பித்திருக்க... அதற்குள் கண்மணி நின்றிருந்த வரிசை நகர்ந்து கதவை மூடி விட…
மருது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்ற போதே…
“டோக்கன் டோக்கன் வாங்கிக்கங்க… இந்தப் பந்தி முடியும் போது உள்ள விடுவாங்க” என்று காவலாளிகள் தடுத்திருக்க… வேறு வழியின்றி… டோக்கனை வாங்கிக் கொண்டு… பதற்றத்துடன் காத்திருந்தான் மருது…
---
”தாத்தா… சாப்பிடுங்க… நல்லா வாங்கி சாப்பிடுங்க… என்ன வேணும்னு சொல்லுங்க… “ என்றவள்…
“அண்ணே… தாத்தாக்கு வடை வைங்க… அப்படியே எனக்கு அந்த உருளைக்கிழங்கும் பட்டாணியும் சேர்ந்து ஒரு கூட்டு இருந்துச்சே அது எடுத்துட்டு வாங்க… பெரிய கரண்டியா போட்டு எடுத்துட்டு வாங்கண்ணா…” என்றவள் தன் இலையில் வைத்திருந்த பால்பாயாசக் கப்பையும் நொடிக்கொரு தரம் பார்த்துக் கொண்டாள்…
“கப்பு சின்னதா இருக்கே…. 20 கப்பு கேட்டா தருவாங்களா…” அந்த யோசனை ஒருபுறம் இருக்க….. எப்படியோ…. ஒரு வழியாக சாப்பாட்டை முடித்தபடி… பால்பாயாசத்தை எடுத்த போதே…
“பவிம்மா” கண்மணியின் அருகே குரல் கேட்க… நிமிர்ந்து பார்க்க
“என் பொண்ணு… என் பொண்ணு… “ என்று வைதேகி கண்மணியின் கைகளைப் பிடித்துக் கொள்ள… கண்மணியின் கைகளில் இருந்த பால்பாயாசமோ… கீழே விழும் போல் இருக்க இருந்தும் அதைக் கீழே விழாமல் பிடித்தபடி மெல்ல எழ ஆரம்பித்த போதே… நாராயணனும் அங்கு வந்திருக்க
“ஐயா… அம்மா கையால கொஞ்ச பேருக்கு சாப்பாடு போடனும்னு சொன்னீங்களே… அதுனால அம்மாவைக் கூட்டிட்டு வந்தொம்… அம்மா இந்தப் பொண்ணைப் பார்த்து… நம்ம சின்னம்மா பேரைச் சொல்லிக் கூப்பிடுறாங்க” என்றபோதே…. நாராயணன் அதிருந்தாலும்… வேகமாக முன்னே வந்து நின்று கண்மணியைப் பார்க்க….
”நம்ம பொண்ணுங்க… நம்மளத் தேடி வந்துட்டாங்க… என் பொண்ணு என்னை ஏமாத்திட்டு போகல…” வைதேகி… கண்மணியை மீண்டும் பிடித்துக் கொஞ்ச ஆரம்பித்திருக்க…
‘வைதேகியை கூட்டிட்டுப் போங்க… நான் பின்னாலேயே வர்றேன்… டாக்டருக்கும் போன் பண்ணிருங்க” என்றபடி தன் மனைவியை அங்கிருந்து போக வைத்தவர்… வைதேகியின் தலை மறைந்ததும்… கண்மணியை நோக்கி…
“யார் கூட வந்திருக்க” எனக் கேட்க… கண்மணி பக்கத்தில் இருந்த பெரியவரைக் கைகாட்ட.. அடுத்த நொடி… அந்தப் பெரியவரின் கன்னத்தில் நாராயணனின் கை பதிந்திருக்க…
”என்னடா… அந்த நாய்… இவளை உன் கூட அனுப்பி வச்சுருக்கானா…” நாராயணன் அந்தப் பெரியவரை இழுத்து தன் முன் கொண்டு வந்தவராக…… அவரை தன் ஆட்களிடம் தள்ளி விட்டவர்.. கண்மணியை இப்போது நோக்க…
”உனக்குப் இதுதான் முக்கியமோ” என அவள் கையில் இருந்த பாயாசக்கப்பைத் தட்டி விட… கண்மணிக்கு ஒன்றுமே புரியவில்லை…
“உன் பாட்டி பேர் என்ன… கந்தம்மாளா…” நாராயணன் கேட்க… கண்மணி பதில் சொல்லாமல் திமிராகப் பார்க்க….. இப்போது அந்தப் பெரியவர் வேகமாக
“ஆமாங்க ஐயா… அப்டித்தான் இந்தப் பொண்ணு சொன்னது.. ஹாஸ்பிட்டலுக்கு வந்த பொண்ணைத்தான் நான் கூட்டிட்டு வந்தேன்…” என்றார் அந்தப் பெரியவர்…
கேட்ட அடுத்த நொடி…
“இதுக ரெண்டையும் வெளிய பிடிச்சுத் தள்ளுங்க” என்றவர் அப்போதும் அதே பழைய நாராயணனாகத்தான் இருந்தார்… மகள் இறந்தும்… மனைவிக்கு சித்தபிரமை பிடித்த போதும்… மாறவில்லை அவர்… இன்னுமே இறுகிப் போயிருந்தார் என்றே சொல்ல வேண்டும்…
இத்தனை வருடங்கள் இல்லாமல் இந்த வருடம் நட்ராஜஜுக்கு மருத்துவமனையில் சேரும் அளவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதுக்கு காரணம்… பவித்ராவின் நினைவஞ்சலி பதாகைகளைப் பார்த்துதான்…
இதோ இத்தனை வருடங்களில் இந்த வருடம் தான் கண்மணியும் முதன் முதலாக வந்திருக்க… கண்மணிக்கு இப்படி ஒரு அனுபவம்…
கண்மணிக் கடுங்கோபத்தின் உச்சத்தில் நின்றவளாக…நாராயணனைப் பார்த்து முறைத்தவளாக…
“இப்போ இன்னாங்கிற… வெளிய போகனும் அவ்வளவு தானே… வாங்க தாத்தா போகலாம்“ யாரோ ஒருவரை தாத்தா என உரிமையுடன் அழைத்துக் கொண்டு இருந்தாள்…
“தாத்தா என்னமோ ரொம்பத்தான் ஃபீல் பண்ண… பணம் மட்டும் தான் இங்க இருக்கும்… வேற ஏதும் இருக்காது” என்றபோதே நாராயணன் முகம் இரத்தமாக சிவக்க ஆரம்பித்திருக்க
ஒரு சின்னப் பெண்… இந்த அளவு பேசும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை… அவளைப் பார்வையால் சுட்டெரிக்க
“இன்னா பார்க்கிற… இந்தப் பெரியவர் சொன்னாரு… அது உண்மைதான் போல… இந்த மாளிகையோட சாபம்… நீ ஆயிரம் தடவை என்ன இலட்சம் தட்வை அன்னதானம் போட்டாலும்… தீராது… “
அடுத்த நொடி… கண்மணியின் கழுத்தைப் பிடித்து தரதரவென நாராயணன் இழுத்து வந்திருக்க…. அங்கு யாருமே நாராயணனின் இந்தக் கோபத்தை எதிர்பார்க்கவேயில்லை… ஒரு சின்னக் குழந்தையிடம் என்ன இவர் இப்படி நடந்து கொள்கிறார் என அத்தனை பேரும் பார்த்தனரே தவிர ஒரு வார்த்தை கூட நாராயணனை எதிர்த்துப் பேசவில்லை…
“ஏய் கெழவா… கழுத்தை விடுடா… வலிக்குது” கண்மணியால் பேசத்தான் முடிந்ததே தவிர… அவர் பிடித்திருந்த கையை விலக்க முடியவில்லை… பந்தி நடக்கும் இடத்திலிருந்து வெளியே இழுத்து வந்தவர்… ஒரே தள்ளு தள்ளி விட… கண்மணி அந்த பங்களாவுக்குள் வரும் சாலையின் கல்லில் மோதி விழுந்திருக்க… நல்ல வேளை கண்மணிக்கு எங்கும் அடிபடவில்லை… அதே நேரம் கண்மணியும் பெரிதாக அதை அவமானமாகவும் நினைக்கவில்லை… அவமானப்படவில்லையா… அவமானப்பட தெரியவில்லையா… கண்மணிக்குத்தெரியவில்லை…
ஆனால் கோபம் மட்டும் அவள் உச்சிக்கு வந்திருக்க… கீழே விழுந்து கிடந்த அவள் கையில் கல் தட்டுப்பட… அடுத்த நொடி… நாராயணனை குறி பார்த்து எறிய சரியாக நாராயணனின் நெற்றிப் பொட்டிலும் பட்டிருக்க
“செத்து ஒழிடா நாயே… என்னையே தள்ளி விடறியா… சாவடிச்சுருவேன் உன்னை…” கண்மணி மூக்கை விடைத்துக் கொண்டு நாராயண குருக்களின் முன் நின்றிருக்க...
கண்மணியைக் கூட்டி வந்த பெரியவரோ... கண்மணியின் இந்த அவதாரத்தைப் பார்த்து ஆவென்று பார்த்தபடி இருந்தார்
நாராயணனை அடித்துவிட்ட போதும் கண்மணியால் ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை… சாப்பிடும்போது இடையில் வந்தால் அவள் மனுசியாகவே இருக்க மாட்டாள்… அதுவும் இன்று அனைத்துமே அதிகப்படியா நடந்திருக்க கண்மணி கோபத்தின் அந்த அளவுக்கு உச்சத்தில் இருந்தது… அவள் அடங்கவே இல்லை…
நாராயணனை அவமானப்படுத்த வேண்டும் அது மட்டுமே அவளுக்கு எண்ணமாக இருக்க… வேகமாக காலில் இருந்த செருப்பைக் கழற்றியவள்… நாராயணனை நோக்கிக் காட்டியவளாக…
”த்தூ…. பணக்கார நாயே… பாதிச் சாப்பாடு சாப்பிடும் போது இழுத்துட்டு வந்து வெளிய விட்ற… நீ எவ்வளவு உயரத்துல இருந்தாலும் இதுக்குத்தான் சமம்…” என சொன்ன போதே கண்மணியின் வார்த்தைகள் பாதியிலேயே நின்றிருக்க…. காரணம்… அந்த பவித்ராவிகாஸின் காவல் நாய்கள் அவளை நோக்கிப் பாய்ந்திருந்தன…
கண்மணிக்கு மனிதர்கள்… ஏன் பேய்கள் என்றால் கூட சமாளித்து விடுவாள்… இந்த மிருகங்கள் என்றாலே அவளுக்கு மிகவும் அலர்ஜி…. அதுவும் நாய் என்றால் அவள் காத தூரம் ஓடுவாள்… இப்போது… அதுவும் அந்த நொடியில் அதிர்ச்சியில் எதுவுமே செய்யத் தோன்றவில்லை அவளுக்கு…
நாய்கள் குரைக்கும் சத்தம் தாங்காமல் காதுகளைக் கைகளால் மூடியபடி… கண்களை இறுக மூடியவளாக…. கண்மணி நின்றிருக்க இதோ நாய்கள் அவள் மேல் பாயப் போய்கின்றன என்ற நொடியில்… அவள் திடிரென்று காற்றில் பறந்தார் போன்ற உணர்வு…. அவள் காதுகளில் இப்போது இவள் இதயத்தைக் காட்டிலும் இன்னொரு இதயத்தின் படபடத்த ஒலி…
அவளைத் தூக்கியிருந்த அந்தக் கைகளின் இறுக்கம்… அவன் கோபத்தை சொல்லி இருக்க…
தன் மேல் இத்தனை அக்கறை கொண்ட ஒரு உள்ளமும் இந்த உலகத்தில் இருக்கின்றதா…. கண்மணி மெல்லக் கண்களைத் திறந்து பார்க்க… மருதுவின் கண்களிலோ தீப்பொறி பறந்திருக்க…. இவள் இதயத்திலோ… மகிழ்ச்சி மத்தாப்பூவாக வெடிக்க ஆரம்பித்திருந்தது….
Nice update