அத்தியாயம் 91-2
/* கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான் தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம் சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான் எங்க சுதந்திரம்தான்
கட்டிப் போட நாங்க ஒரு பெட்டிப் பாம்பு அல்ல
பொட்டுப் பூவும் சூடும் வெறும் பட்டிக்காடும் அல்ல
எல்லைக்கோடு போட்டு அது இல்லையென்று சொல்ல
அந்தக்கால சீதை அது இந்த பாவையல்ல
நள்ளிரவில்.. ஜாங்கு சக்கர ஜாங்கு சக்கர சச்சச்சா
இந்த வெள்ளிரதம்.. ஜாங்கு சக்கர ஜாங்கு சக்கர சச்சச்சா
நள்ளிரவில்.. ஆடி நடப்பதும் பாடி நடப்பதும் ஜாலி
இந்த வெள்ளிரதம்.. வீதி வலம் வர
ஏது இதற்கொரு வேலி
*/
பால்வாடிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆயா அந்தத் தெருவிற்கு வந்திருக்க… இரண்டு வீடு தள்ளி அவள் குரல் கேட்ட போதே கண்மணி வேகமாக வீட்டுக்குள் ஒழிந்து கொண்டவள்… விஜியிடமும் பொய் சொல்லச் சொல்லியிருந்தாள்… அதன்படியே விஜியும்
“அக்கா… கண்ணுமணிக்கு காச்சல்… படுத்துட்டா… இன்னைக்கு அவ வரமாட்டா “
“என்னது… “ என அந்த ஆயா கடுங்குரலில் கேட்டபோதே கண்மணிக்கு இங்கு உள்ளே நடுங்கியதுதான்…
“ஒரு வேளை வீட்டுக்குள் வந்து… கட்டி இழுத்துச் சென்று விடுவார்களோ “ என்று…
அவள்தான் பார்த்திருக்கின்றாளே… வராமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை அந்த ஆயா இழுத்துச் செல்வதை…
“எங்கே அப்படி தனக்கும் நடந்தும் விடுமோ” எனக் கண்களை இறுக மூடியபடி… போர்வையைப் போர்த்தியபடி படுத்திருக்க…
“நாளைக்கு மட்டும் அவ வரலை… கண்ணுல பச்சை மிளகாதான் வைப்பேன்னு சொல்லிவை…” என அந்த ஆயா சென்று விட நிம்மதியுடன் கண்மணி வெளியே வந்திருந்தாள்… வேலைக்குச் சென்று திரும்பிய கந்தம்மாளையும் அந்த ஆயாவைப் போல எப்படியோ உடம்பு சரி இல்லை என்று நம்ப வைத்திருக்க
“ஊரெல்லாம் காய்ச்சல் வருதாம்… ஊசி போட்டுட்டு வந்துரலாம்… நான் பத்து பாத்திரம் வெளக்கப் போற டாக்டர் ஐயா வீட்டுக்கே கூட்டிட்டுப் போறேன்…” எனச் சொன்ன கந்தம்மாள் அந்த ஏரியாவில் தான் வேலை பார்க்கும் மருத்துவர் வீட்டிற்கு கூட்டியும் போய் இருந்தார் கந்தம்மாள்…
கண்மணிக்கோ ஊசி என்றால் மிகவும் பயம்… பொய் சொன்னோம் என்று தெரிந்தால் கிழவியிடம் அடி விழும்…
அடியா… ஊசியா என யோசித்தபடியே வந்தவளுக்கு… ஊசியை விட அடியே மேல் எனத் தோன்றியதுதான்… ஆனால் உடனே சொன்னால் அடி விழுமே… ஊசியும் போடக் கூடாது…. அடியும் வாங்கக் கூடாது… யோசித்தவளுக்கு நல்ல யோசனை தோன்ற…
மருத்துவர் வீட்டுக்கும் சென்றாள் தான்… மருத்துவரின் முன்னாலும் நின்றாள்தான்…
”என்ன பண்ணுது பாப்பாக்கு” என ஸ்டெதஸ்கோப்பை எடுத்த போதே
”எனக்கு ஃபீவர்லாம் இல்லை… சும்மா ஸ்கூலுக்கு போகாமல் இருக்க…. பொய் சொன்னேன்… இவங்ககிட்ட சொன்னா அடிப்பாங்கன்னு சொல்லல… ஆனால் ஊசி போட கூட்டிட்டு வந்துட்டாங்க… உண்மையைச் சொல்லிட்டேன்ல… அவங்களை அடிக்கக் கூடாதுன்னு சொல்லுங்க” கந்தம்மாளைப் பார்த்தபடியே பயந்து சொல்ல… கந்தம்மாள் ருத்ர அவதாரம் எடுத்த போதும் அங்கு காட்ட முடியவில்லை…”
கண்மணியைப் பார்த்த அந்த மருத்துவருக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை…
“காந்தா நீங்க அவளை அடிக்காதீங்க… போதுமாம்மா சொல்லிட்டேன்… அடிக்க மாட்டாங்க…” எனும்போதே
“இல்லல்ல இங்க அடிக்க மாட்டாங்க… ஆனால் வீட்டுக்குப் போய் அடிப்பாங்க…” கண்மணி எடுத்து சொன்னவள்… கந்தம்மாளைப் பார்த்தபடியே… அந்த மருத்துவரிடம்
“என்னை அடிச்சா இந்த வேலை கிடையாதுன்னு சொல்லுங்க… அப்போதான் இவங்க அடிக்க மாட்டாங்க… ப்ளீஸ் ப்ளீஸ்” கண்மணி கெஞ்சலாக கொஞ்சலாகச் கேட்க… யார்தான் மயங்க மாட்டார்கள் அந்தக் கன்னக்குழி கெஞ்சலுக்கு கொஞ்சலுக்கும்…
அந்த மருத்துவரும் கண்மணி சொன்னதையே கிளிப்பிள்ளை போல திரும்பச் சொல்ல… கந்தம்மாளும் அடங்கினார் தான்
”அப்போ நான் வீட்டுக்கு போகவா” என்ற போதே
“ரோட் தாண்டி போகனும்.. சிக்னல் எல்லாம் இருக்கு” என மருத்துவர் சொன்னபோதே… கண்மணியோ
‘டெய்லி நாலு ரோட் தாண்டி கட வீதிக்குப் போறேன்… வார வாரம் நாலு சிக்னல் தாண்டி விஜி அக்காவையே நான் தான் தியேட்டர் கூட்டிப் போறேன்… இந்தாளு என்ன இப்டி சொல்றாரு…. “ என யோசித்த போதே… கந்தம்மாளுக்கு பேத்தி யோசிப்பது தெரியாதா என்ன..
”வேலையை முடிச்சுட்டு… இங்க சாப்பாடு தருவாங்க சாப்பிட்டுட்டு போகலாம்… இல்லை உனக்கு தனியா வந்து செய்யனும்” என்று கண்மணியைக் சரியாகக் கணித்துச் சொல்ல…
“கெழவி… வேலை பார்க்கப் போற இடத்துல எல்லாம் ருசியா தின்னுட்டு வந்துதான் நமக்கு வாய்க்கு ருசியா செஞ்சு கொடுக்க மாட்டேங்குது…’ கந்தம்மாளை முறைத்தாலும்… இன்றைய இரவுச் சாப்பாடு நன்றாக இருக்கப் போகிறது… ஒரு வெட்டு வெட்டித்தான் போக வேண்டும்.. என்று முடிவெடுத்துக் கொண்டவளாக.. அவளும் கந்தம்மாளுடன் அங்கே இருக்க… இருந்தவள் சும்மா இருப்பாளா… அந்த வீட்டின் ஒவ்வொரு அறையாகப் பார்த்தபடி வந்து கொண்டிருக்க… அந்த வீட்டின் இல்லத்தரசி… கண்மணியைப் பார்த்தவளாக
“என்ன கந்தம்மாள் உன் பேத்தி ஒரு இடத்துல சும்மா இருக்க மாட்டாளா… துரு துருன்னு இருக்கா…. ஏம்ம்மா !!! இந்தா பொண்ணே… இங்க வா” என அழைக்க… கண்மணியும் போக
“ஸ்கூல் போறியா…”
“போறேன்… போறேன்…” எனக் கண்மணி தலை ஆட்டியபடி சொல்ல
”முருகேசு… முருகேசு” என மகனை அழைக்க… அவனும் வந்தான்…
“இந்தப் பாப்பாக்கு உன் புக் ஏதாவது கொடு…. ட்ராயிங் புக் இருந்தால் கொடு… வரையட்டும்” என அவனிடம் விட்டு விட்டு போக…
அந்த முருகேஷும் அவளை அழைத்துக் கொண்டு போனான் அவன் படிக்கும் அறைக்கு…
---
“நீ என்ன படிக்கிற… “ கண்மணியிடம் முருகேஷ் விசாரிக்க.. கண்மணியோ அந்தக் கேள்விக்கு மிகப் பெரிதாக யோசிக்க ஆரம்பித்திருக்க
“நான் செகண்ட் ஸ்டேண்டர்ட்…. நீ” அவன் அவனின் வகுப்பைச் சொல்லிக் கேட்க… கண்மணியோ உதட்டைப் பிதுக்கினாள்… அவள் படிக்கும் பாலர்பள்ளியில் ஏது வகுப்பு… எல்லாம் ஒன்றே…
“உங்க அப்பா பேர் என்ன… அம்மா பேர் என்ன” அடுத்த கேள்வி கேட்க
“அப்பா பேர் ராசு… அம்மா பேரு…” யோசித்தபடியே இழுத்தவள்…
“தெரியல… ஆனால் எங்கம்மாவும் டாக்டரு.. உங்க அப்பா மாதிரியே… ஊசிலாம் போடுவாங்க… ஆனால் வலிக்காம போடுவாங்க தெரியுமா… உங்க அப்பா வலிக்காமல் ஊசி போடுவாங்களா”
“எங்க அப்பாவும் தான்… ஆனால்… உன் அம்மா டாக்டர்னா… நீ ஏன் இப்படி இருக்க…” இவன் தன் சந்தேகத்தைக் கேட்க
‘எப்படி இருக்கேன்… அவங்க வெளிநாட்ல இருக்காங்க… என்னை வளர்க்கிறத்துக்கு இந்த கெழவிக்கு காசு கொடுக்கிறாங்க… ஆனால் இதுதான் எதுவுமே எனக்குத் தராது… எங்கம்மா பணத்தை எல்லாம் அதுவே வச்சுக்குது…. பாவம் எங்கம்மா…” அவன் காதுக்குள் ரகசியமாகச் சொல்ல… சொன்னவளை[ பாவமாகப் பார்த்தான் அந்த முருகேஷ்…
“உங்க அம்மா வந்தவுடனே இதைச் சொல்லிரு… அவ்ளோ காசையுமா இந்தக் கெழவி எடுத்துக்கும்… உனக்குத் தராதா… ” என்று விசனப்பட்டவன்
கண்மணியைத் தன்னருகே அழைத்தவன்… அவள் காதில் கிசுகிசுப்பாகச்
”உனக்கு ஒரு உண்மையச் சொல்றேன்… டாக்டர்னா ரொம்ப சம்பாதிப்பாங்க… அதுவும் வெளிநாட்ல இருந்தா அவங்களாம் பெரிய பணக்காரங்க… அவ்ளோ காசு வச்சுருப்பாங்க… பெரிய வீடு… முன்னால தோட்டம் எல்லாம் இருக்கும் நீ சீக்கிரமா உங்க அம்மாகிட்ட போய்ச் சேர்ந்துரு…”
இப்போது அவளை விட்டு தள்ளி அமர்ந்தவனாக
“நான் சொல்றது புரிஞ்சதுதானே…” என இப்போது சத்தமாகக் கேட்க… கண்மணியும் தலை ஆட்ட.. பார்த்த சில நிமிடங்களிலேயே அந்தப் பாலகனும்… சிறுமியும் நண்பர்கள் ஆகி இருந்தனர்… முருகேசுக்கு எப்படியோ… கண்மணியைப் பொறுத்தவரையில் அவளது முதல் நண்பன் இந்த முருகேஷ்…
“சரி விடு… இப்போ நீ ட்ரா பண்ணு “ என அவளிடம் வரைவதற்கான புத்தகத்தையும்…. உபகரணங்களையும் கொடுக்க… கண்மணியும் வண்ணம் தீட்ட ஆரம்பித்திருக்க… அருகில் சுவரில் சாத்தப்பட்டிருந்த அவனது கற்பலகையில் அவனின் பெயர் ‘முருகேஷ்…” என்பதை பெரியதாக எழுதியிருந்தான் அந்த முருகேஷ்…
கண்மணி வழக்கமாக நாளிதழை வாசிக்கும் பழக்கத்தில் அந்த எழுத்துக்களையும் பார்த்து படிக்க முயல… அவளால் முடியவில்லை…
”ஏய் முருகேசு… இது என்ன… வாசிச்சுக் காமி….” என்று கண்மணி கேட்க
“இது என் பேரு.. மு… ரு… கே… ஷ்….” என நிறுத்தி நிதானமாக வாசித்துக் காட்ட
இவளும் சொல்லிப் பார்க்க…”முருகேசு…” … யோசித்தவள்… தப்பா எழுதியிருக்கான்… அவன் மனதில் இதுதான் தோன்றியது…
ஆனாலும் கேட்க வில்லை… அவன் பெயரை விட்டவள்…
“ஏய் ஏய்… எனக்கும் என் பேர் எழுதச் சொல்லித் தர்றியா…. அட்லீஸ்ட் ‘கண்’ மட்டுமாவது…”
“சொல்லித் தரேன்… எனக்கு தமிழ்ழ எல்லா லெட்டரும் தெரியும்…. உன் முழுப்பேர் என்ன சொல்லு…”
“கண்மணி…” கண்மணி உற்சாகமாகச் சொல்ல… அவனும் ஆசிரியர் தோரணையோடு கண்மணிக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தாள்…
மீண்டும் அவள் பெயரைச் சொல்லிப் பார்த்தவன்… சிலேட்டில் எழுத ஆரம்பித்தான்
“க…ண்…” அவனுக்கு தெரிந்த வார்த்தை என்பதால் வேகமாக எழுதியவன்…
“மணிதானே…” என்றபடியே எழுத ஆரம்பித்தான்
“க…ண்… ம…….. னி” எழுதிக் காட்டி இருக்க… கண்மணி அதிருப்தியான பாவனையோடு அவனைப் பார்த்தவள்… மீண்டும் எழுத்துக்களைப் பார்க்க
“தப்பு தப்பா எழுதியிருக்க.. நீ ஒழுங்கா படிக்க மாட்டியா… மக்கா நீ” எனும் போதே அந்தச் சிறுவனுக்குத் தன்மானம் சுட்டிருக்க..
“நான்தான் க்ளாஸ் டாப்பர்…”
கண்மணி அதைக் கண்டு கொள்ளாமல்…
“இந்த ‘னி’-ல ரெண்டு முட்டை வராது… மூணு வரும்… தாத்தா அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்… ”
”எது வேணும்னாலும் போடலாம்… எல்லாம் ‘ன’ தான்… என் கிளாஸ்லயே எனக்கு மட்டும் தான் இவ்ளோ தெரியும்… என் ஃப்ரெண்டுக்கெல்லாம்… ஆ ஆவன்னா கூட தெரியாது… ஏ பி சி டி மட்டும் தான் தெரியும்… கணக்குல முட்டைதான் எடுப்பான் ஒருத்த… தெரியுமா” சொல்லியவன்… அவன் தாயை அழைத்து பஞ்சாயத்தும் வைக்க…
”மூணு சுழி ‘ண்’தான் வரும் முருகேஷ்… அந்தப் பாப்பா சொல்றது கரெக்ட்தான்…” எனக் கண்மணிக்குச் சப்போர்ட் செய்ய… கண்மணிக்கு இப்போது பெருமை… அது அவள் கண்ணில் வந்திருக்க… அதே பார்வையோடு முருகேஷையும் பார்த்தாள்…
தான் சொன்னது தவறாகிவிட்டதே என்ற அவமானத்தில் முருகேஷோ உம்மென்று இருக்க… கண்மணிக்கு இப்போது ஒரு மாதிரி இருக்க… அவன் அருகே நெருங்கி அமர்ந்தவள்… அவன் தோள் மேல் கை போட்டவளாக
”ஏய் முருகேசு.. உன் ஃப்ரெண்ட் ஒருத்தன் கணக்குல முட்டை எடுப்பான்னு சொன்னேல.. அவனை எனக்கு ஃப்ரெண்ட் ஆக்கி விடறியா” கண்மணி குறும்போடு கேட்க… முருகேஷ் விழிக்க
”அவன் தான் முட்டை எடுப்பான்ல…. அப்போ எனக்கு டெய்லி எனக்கு முட்டை கிடைக்கும்ல… ஜோக்கு சூப்பரா இருக்கா… சிரியேன்…” கண்மணி அவன் தோளை இடித்துச் சிரிக்க.. முருகேஷுக்கு இப்போது சிரிப்பு வந்திருக்க…
“அய்யே… நான்லாம் நூத்துக்கு நூறு எடுப்பேன்… அப்போ உனக்கு ரெண்டு முட்டைல கிடைக்கும்… இப்போ சொல்லு என் ஃப்ரெண்ட்ஷிப் பெருசா… அவன் ஃப்ரெண்ட்ஷிப் பெருசா…”
கண்மணி… வேகமாக அவனை நோக்கி கைகாட்ட… முருகேஷுக்கும் சந்தோசம் வந்திருக்க
“டெய்லி… நீ எங்க வீட்டுக்கு வர்றியா… நாம ஜாலியா விளையாடலாம்… நெறய டாய்ஸ் இருக்கு… நான் எல்லாம் தாறேன்” எனச் சொன்னவனிடம் குதுகலமாகத் தலை ஆட்டியவள்…
“ஏய் முருகேசு… இப்போ நான் உன் பேரை அந்த புக்ல கண்டுபிடிக்கவா…” என அவன் புத்தகத்தை வாங்க… முருகேஷும் கொடுக்க… கண்மணி தமிழ் எழுத்து வரிசை பட்டியலில் அவன் பெயரைத் தேட ஆரம்பித்திருந்தாள் ஆர்வமுடன்….
“எங்க எங்க” என தேட கை வைத்தபடி தேட ஆரம்பித்தவள்…
“கண்டுபிடிச்சுட்டேன்… இதோ இங்க இருக்கு ‘மு’ இதோ அடுத்து… ‘ரு’ ” என்றவள்…”
”அப்புறம்… அப்புறம்… ‘’கே’ இங்க இருக்கு” எனத் துள்ளிக் குதித்தவள்… அந்த ஸ்லேட்டில் இருந்த ‘ஷ்’ என்ற எழுத்தை நன்றாகப் பார்த்துவிட்டு… புத்தக்கத்தில் இருந்த தமிழ் எழுத்துக்கல் வரிசையில் தேட… தேடித் தேடி ஒரு கட்டத்தில் களைத்தவளாக…
“தமிழ்லயே இல்லாத எழுத்துல உன் பேர் வருமா… நீ தப்பா எழுதி இருக்க… “ எனத் தன் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க
“இவர் பெரிய படிப்பாளியாம்…” என வேறு மீண்டும் சொல்லிக் காட்ட
அவ்வளவுதான் முருகேஷுக்கு கோபம் வந்திருக்க…
“நான் எழுதினது கரெக்ட்தான்…” சுள்ளென்று விழுந்தான்…
‘அப்போ எங்க அந்த எழுத்து… காக்கா தூக்கிட்டு போச்சா என்ன…” கண்மணி கன்னக் குழி சிரிப்போடு அவனை நக்கல் செய்தவள்…
“தப்பு… உன் பேர்… முருகேஷ் இல்லை… முருகேசு … பாரு… ‘சு’ இந்தாருக்கு…. இனி இது மாதிரி எழுது… ‘ஷ்’ ஐ அழித்துவிட்டு…” என சிலேட்டை அவள் சொன்ன எழுத்தை எழுதுமாறு அவனிடம் நீட்ட… அவ்வளவுதான்… சிலேட்டை தூக்கி எறிந்திருந்தான் அந்த முருகேஷ் அவ்வளவு கோபம் வந்திருந்தது அவனுக்கு…
அடுத்த நிமிடம்…
“அம்மா” என கத்தி அழைத்திருக்க… அந்தப் பையனின் அம்மாவும் வந்திருக்க
“மம்மி… இனிமேல இந்த கேர்ள் நம்ம வீட்டுப் பக்கமே வரக் கூடாது… என்னையே கிண்டல் பண்ணுது” என அழ ஆரம்பித்திருக்க… கண்மணிக்கு முதல் நட்பு ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்திருந்தது…
நட்பு முடிந்திருந்தால் கூடப் சரியென்று போயிருக்கலாம்… ஆனால் கண்மணி அவனை இலேசில் விட்டாளா என்ன…. மனதிலேயே வஞ்சத்தை வைத்திருந்தவள்… அவனை பழி வாங்க தருணம் பார்த்து காத்திருக்க… ஒரு நாள் அவனும் சரியாக அவளிடம் மாட்டினான்… வாய்ப்புக்காக காத்திருந்தவள் விடுவாளா என்ன…
அந்த ஏரியாவில் இருந்த கோவிலிலுக்கு அவள் அன்னையோடு சாமி கும்பிட முருகேஷ் வந்திருக்க… கண்மணியும் விஜியுடன் அங்கு வந்திருக்க… அவனைப் பார்த்தவள்…
“யக்கா… இவன் அந்த டாக்டர் மவன்… பெரிய அதிபுத்திசாலின்னு நெனப்பு… சாப்புட்டுட்டு போகலாம்னு இருந்தேன்… மண்ணள்ளிப் போட்டுட்டான்… இன்னைக்கு இவன விடக் கூடாது… என்னையவே வீட்டை விட்டுப் போகச் சொல்லிட்டான்” என்றபடி அவன் தனியே வரும் சமயக் காத்து காத்திருக்க… முருகேஷும் வந்தான்…
அந்தக் கோவிலில் குழாயடி இருந்த இடத்தில் கண்மணி நின்றிருக்க… அந்த முருகேஷும் வந்திருக்க…
“என்ன தம்பி… முருகேசு…. நல்லா இருக்கியா” தானாகவே அவனிடம் முன்னே சென்று வம்பிழுக்க
“இங்க பாரு… உன்னை மாதிரி பொண்ணுங்க கூடலாம் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்க மாட்டேன்… என்கிட்டலாம் பேசாத… வழியை விடு” என முருகேஷ் அவளிடம் சொல்லி நகரப் போக போக…
“அப்டிலாம் போக முடியாதுப்பா… அன்னைக்கு உங்க வீட்ல இடியாப்பம் சாப்பிட விட்டியா நீ… எவ்ளோ ஆசையா இருந்தேன்… மண்ணள்ளி போட்டேல… அதுக்கு பதில் சொல்லனும்ல…” என அவன் கைகளை முறுக்கியவளை… அதிர்ச்சியாக அந்தச் சிறுவன் பார்க்க
“ஏண்டா என் சிப்ஸ்… பெரிய இவனா நீ… பேரை ஒழுங்கா தெரியலை… உனக்கெல்லாம் எதுக்கு இவ்ளோ வீராப்பு…” பிடித்திருந்த கையை விட்டவள்… மீண்டும் அதை விட வேகமாகப் பிடித்து முறுக்க… அந்தச் சிறுவன் கண்மணியிடம் இப்படிப்பட்ட முரட்டுத்தனத்தை எதிர்பார்க்கவே இல்லை…
வலி தாங்க முடியாமல் அழ ஆரம்பித்திருக்க….
“என்ன முருகேஷு… முருகேசு தான் இனி நீ… அது கூட இல்லை… இனி உன்னைப் பார்க்கும் போதெல்லாம்… முருகேசு… முட்டைக்கோசுனுதான் கூப்பிடுவேன்… பே… ஆளும் மண்டையும்… ஓடிப் போயிரு…. என் கண்முன்னால நிக்காத” என அவனைத் தள்ளி விட… மண்ணில் விழுந்த முருகேஷ்….. அந்த முருகேஷ் அழுதபடியே எழுந்து நிற்கும் போதே அவன் அன்னை அங்கு வந்து நின்றிருக்க…. தன் மகனைப் பார்த்தவள்… பதறியவளாக
”ஆத்தாடி… என் பையன காப்பத்துங்களேன்… இது ஒரு ரவுடியா இருக்கும் போல.. இரு உன்னை இப்போவே கட்டி வச்சு அடிக்கிறேன்…” என்றபடி அவள் அருகே வர… கண்மணி பயத்திலும் கோபத்திலும் என்ன செய்வதென்று தெரியாமல் கீழே கிடந்த கல்லை எடுத்து அவளைப் பயங்காட்டியவளாக…
“ஏய் பொம்பள… உன் பையனுக்கு ஒழுங்கா பேர் வைக்கத் தெரியலை… நீயெல்லாம் என்னை அடிக்க வர்றியா… போடி…லூசு” என வேகமாக தன் ஏரியாவுக்குள் நுழைந்து தன் வீட்டுக்குள் நுழைந்து… கதவையும் பூட்டியிருக்க சென்றிருந்தாள்…
அடுத்து என்ன நடந்திருக்கும்… கந்தம்மாளுக்கு அந்த வீட்டில் வேலை பறி போயிருக்க… கண்மணிக்குப் பதிலாக கந்தம்மாளுக்கு மண்டகப்படி நடந்திருக்க… கந்தம்மாள் அங்கு வாங்கிய மண்டகப்படி பலமடங்காக பெருகி… கண்மணிக்கும் தப்பாமல் கிடைத்திருந்தது…
---
கண்மணியை கந்தம்மாள் அடக்கி அடக்கி வளர்க்க முயற்சிக்க… கண்மணியோ அதற்கு எதிராக வளர ஆரம்பித்திருந்தாள்… காட்டுச்செடி போலதான் அவள் இருந்தாள்….. சரமாரியான பேச்சும்… அசாதாரண தைரியமும்… முரட்டுத்தனமும்… அதே போல் குறும்பும்… நகைச்சுவையும் என காட்டாற்று வெள்ளமாக அவள் ஓடிக் கொண்டிருக்க… பள்ளிக் கூடத்தில் சேர்ந்திருக்க… முரட்டுத்தனமும்… தைரியமும் மட்டுமே ஒரு சேர இருந்தவளுக்கு மிதமிஞ்சிய அறிவும்… வந்து சேர்ந்திருக்க…. அதைக் கண்டு பள்ளியில் தலைமை ஆசிரியர் முதல் பியூன் வரை அவளை அனைவரும் கொண்டாட ஆரம்பித்திருக்க… கண்மணிக்கு அகந்தையும் திமிரும் அவளோடு சேர ஆரம்பித்திருந்தது… அவள் நடவடிக்கைகளும் மாறி இருந்தது…”
“தாத்தா இந்தாங்க… குறுக்கெழுத்துப் போட்டியில எல்லாம் ஃபில் பண்ணிட்டேன்… சரியானு பாருங்க..” கண்மணி நீட்டிய வாரமலர் பத்திரிகையை வாங்கியவர்…
”அடேங்கப்பா… பத்து நிமிசத்துல முடிச்சுட்டம்மா…. “ என அதைச் சரி பார்த்த போதே…
”இந்த புக்கை எனக்கு இன்னைக்கு ஒரு நாள் கொடுக்கிறீங்களா… படிச்சுட்டு தர்றேன்…” என்றவளிடம்
“இப்போ என்ன படிக்கிற… “ எனக் கேட்க
“ஐந்தாம் வகுப்பு” என கண்மணி அழகான சுத்த தமிழில் சொல்ல… இப்போது கண்மணி புத்தகத்தை எடுத்துப் போவதற்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை… மாறாக
‘படிச்சுட்டு கடைக்காரர் கிட்ட கொடுத்துரு” என்று மட்டும் சொல்ல… அவ்வளவுதான் கண்மணி அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு துள்ளலோடு தன் வீட்டை நோக்கி ஓடினாள்…
---
“ஏண்டா… நம்ம ஸ்கூல் மட்டும் மிடில் ஸ்கூல் இல்லைனா… நாமதான் இந்த ஸ்கூல்லயே சீனியர்… செம கெத்த இருந்துருக்கலாம்…”
மரத்தடியில் கண்மணியின் நண்பர்கள் கூட்டம்… அதில் ஒருவன் தான் இப்படி சொல்லிக் கொண்டிருந்தான்…
மரத்திண்டின் மேல் கண்மணி அமர்ந்திருந்தாள்… அவள் தோழர்கள் எனச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் கீழே அமர்ந்திருந்தனர்….
“தலைவி என்னடா… பண்ணிட்டு இருக்கு…” என்று கண்மணி என்ன செய்து கொண்டிருக்கின்றாள் என்பதைப் பார்க்கும் பொருட்டு அவள் அருகே போய் ஒருவன் அமரப் போக… அடுத்த நொடி..
“கீழ உட்காரு… நான் சொன்னா மட்டும் தான் என் பக்கத்துல வந்து உட்காரனும்” என மிரட்டல் குரலில் கண்மணி சொல்ல… அவனும் பயந்து போய் மீண்டும் கீழேயே அமர…
“ஆமா எல்லாரும்… ஹோம் வொர்க் காப்பி பண்ணிட்டீங்களா” என்றபோதே… அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன்..
“கண்மணி இவனுக்கு பார்த்து எழுதக் கூடத் தெரியலை… அநேகமா அஞ்சாப்பூ முடிந்து ஆறாப்பூ போக மாட்டான் போல…”
“முதல்ல ஒழுங்கா பேசுங்கடா… அஞ்சாப்பூ… ஆறாப்பூனு… “ எனக் கண்மணி குனிந்து எழுத ஆரம்பித்து… இருக்க…
”க…….ண்………ம………ணி………” என அவளது கூட்டம் இழுவை போட….. தலையை இலேசாக நிமிர்த்தி கண்களை மட்டும் மேலே சுழற்றியவளாக முன்னே பார்க்க.
அவள் முன் மூவர் நின்று கொண்டிருந்தனர்… பார்வையாலே என்ன என்று கேட்டபடி… தன் கூட்டத்தைப் பார்க்க
“நம்ம கேங்க்ல ஜாயின் பண்ணனுமாம்… ரொம்ப ஆசைப் பட்றாங்க” என்றவர்களைப் பார்த்தபடியே…. புருவம் உயர்த்தியவள்… எழுதிக் கொண்டிருந்த பேனாவை மூடி வைத்தபடியே….
”நம்ம கேங்கோட எண்ட்ரன்ஸ் எக்ஸாம்லாம் தெரியுமா… இவங்களுக்கு ” வந்த மூவரில் ஒருவன் திருதிருவென்று முழிக்க… கண்மணியின் பார்வைக்கும் அவன் தப்பவில்லை… சரியாக அவனைப் பிடித்தாள்….
“ஃபர்ஸ்ட் இவனுக்கு டெஸ்ட் வைப்போம்… பையன் திருதிருனு முழிக்கிறான்… எக்ஸாம் சப்ஜெக்ட்டே தெரியாது போல…” என்றவள்… அவனிடம் பேசாமல்…
“பேர் என்னனு கேளுங்க” என்று நண்பர்களைப் பார்த்து அதட்டல் போட… அவள் குரலே புதியாதாக வந்த பையனுக்கு பயத்தைத் தந்திருக்க
“என் பேரு.. ஜெ… ஜெகதேவ்ங்கக்கா…” எனும் போதே…. கண்மணி அவனை அருகில் கூப்பிட்டவளாக… அவன் சட்டைக் காலரை பிடித்து இழுத்தபடி…
‘டேய்… பசங்களா… கண்மணியோட கேங்க்ல இருக்கனும்னா… பேர் பொருத்தம் எப்படி இருக்கனும்னு தம்பிக்கு சொல்லுங்க… கேட்டுக்கட்டும்” என்று சொல்லச் சொல்ல..
‘டேய் ஜெகதேவ்… ஸ்கூலுக்குப் புதுசா… ” ஜெகதேவ் வேகமாக கண்மணியின் நண்பர்களைப் பார்க்க… அப்போதும் அவன் சட்டைக் காலர் கண்மணியின் கைகளில் தான் இருந்தது…
”இல்லடா பழைய ஸ்டூடண்ட்தான்… என்கூட 6த் படிக்கிறான்… கண்மணியைப் பற்றி சொன்னேன்… அதான் தம்பி கெளம்பி வந்து நிக்கிறாரு… கண்மணி எனக்கு கணக்குப் பாடம்லாம் முடிச்சுக் கொடுக்கும்னு கேட்டதுலருந்து இந்த ஆசை வந்திருக்கும் போல”
கண்மணி அவனை ஏற இறங்கப் பார்க்க
“ஆ… ஆமா கண்மணி… எனக்கு கணக்கே வராது… அதான் …” எனும்போதே
”அதெல்லாம் ஓகே… ஆனா எனக்கும் உனக்கும் பேர் பொருத்தமே இல்லையே…”
“டேய்… ஜெகதேவ்… இந்த ஃப்ளேம்ஸ் கேள்விப்பட்ருக்கியா… அது மாதிரி எங்களுக்கும் கோட் வேர்ட் இருக்கு… அது என்னனா எங்க கண்மணிக்கு இந்த வடநாட்டு எழுத்துல பேர் வந்தா அலர்ஜி… அந்த ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப நாளைக்கு…”
எனும் போதே கண்மணி
“என்ன ரொம்ப நாள்…. ஒரே நாள்ல ஃப்ரெண்ட்ஷிப் கவுந்துரும்… கெளம்பு கெளம்பு…” என்ற கண்மணி சட்டைக் காலரை விட்டு… அதனைச் சரிப்படுத்தி பின் அதட்டி அனுப்பி வைத்தவள்…
“அடுத்து எந்த தம்பி… முன்னால வாங்க” என அழைக்க வந்தவன் தைரியமாக கண்மணியைப் பார்த்தபடி பேச ஆரம்பித்தான்… கண்மணி அசராமல் அவனைப் பார்க்க…
”என் பேர் சுத்த தமிழ்பேர்தான் கண்மணி… வட மொழி எழுத்தெல்லாம் இல்லை…”
”நீ பேரைச் சொல்லுப்பா… நாங்க தமிழ் பேரா… மத்த பேரான்னு முடிவு பண்ணிக்கிறோம்” அலட்சியமாக அவனைப் பார்த்துக் கண்மணி சொல்ல
“ரங்கா…” என அவனும் பெருமையாகச் சொல்ல…. அதைக் கேட்ட உடனே கண்மணிக்கு குபீர் சிரிப்பு வர.. அவனிடம் பேசாமல்…
“டேய் இலட்சுமணா… இப்போ நீ பேசனும்… எங்க பேசு பார்க்கலாம்” என அவள் சொல்ல… இலட்சுமணன் பேச ஆரம்பித்தான்
‘டேய்.. போன வருசம் வரை… என் பேரு லட்சுமணன்னு… ’ல’-ல என் பேர் இருந்துச்சு… இந்த கேங்ல சேர்றதுக்கு தமிழ்பேர் தான் இருக்கனும்… வட மொழி எழுத்து மட்டும் இல்லை… ’ர’… வரிசை ’ல’ வரிசைல முதலெழுத்து இருக்கக் கூடாதாம்… அப்படி இருந்தால் அதுவும் தமிழ்ப் பெயர் இல்லையாம்… வேணும்னா நீ போய் உன் பேரை ’இரங்கா’ னு மாத்திட்டு அப்புறமா வா… என்ன கண்மணி நான் சொல்றது ரைட்டுதானே” என்க
“ப்ச்ச்… பேசி முடிச்சிட்டியா… ஒத்திக்கோ…” இலட்சுமணனை ஓரம் கட்டியவளாக
“ஏய்… என்ன அவன் சொன்னது கேட்டுச்சு… உன் பேரை ’இரங்கா…’ ’அரங்கா… ’இல்லை ஏன் ’குரங்கானு’ கூட மாத்திட்டு வா… பேசிக்கலாம்… ஆனா ‘ர’ வரிசைல ஆரம்பிக்கக் கூடாது… நீயும் கெளம்பு… இடத்தைக் காலி பண்ணு” எனும் போதே அடுத்த ஆளைப் பார்க்க… அவளோ பெண்…
”உன் பேர் என்னம்மா…”
“ஷரிபா ஐனி…” என்று சொல்ல…
”இப்போ தானே சொல்லிட்டு இருக்கோம்… கேட்டியா கேக்கலையா… அப்டியே மூக்கு மேலேயே ஒண்ணு விட்டேன்னு வச்சுக்கோயேன்… ‘ஐ’னிக்கு ‘நோஸ்’ ’நோ’ னு ஆகிரும்… ஓடிப் போயிரு” எனும் போதே
“கண்மணி… அவங்க பாய்வீடு…. அவங்க பேர் எல்லாமே வடமொழி எழுத்து இல்லாமல் இருக்காது… கொஞ்சம் பார்த்து பண்ணேன்… நம்ம கேங்க்ல கலரா ஒரு ஆளு இருந்தா நமக்கும் கெத்துதானே… அதுமட்டுமில்லை… அந்தப் பொண்ணோட பேர்லயும் ’கண்’… இருக்கு … என்ன ‘ஐ’னு இன்க்லீஷ்ல இருக்கு… என்ன நம்ம இங்க்லீஷ்தானே… யோசியேன்…. ஐயும் கண்ணும் எப்படி சிங்க் ஆகுது பாரு… ப்ளீஸ் பிளீஸ் ” என்று இலட்சுமண் சிபாரிசு செய்திருக்க…
“நீ இந்தக் கூட்டத்தில இருக்கனுமா… வேண்டாமான்னு இப்போ நான் யோசிக்கட்டுமா… வாயை மூடிட்டு இரு… சிங்காகுதாம்ல… இதுல இங்கிலீஷ் வேற தொரைக்கு… வழியுது தொடச்சுக்கோ…. கலரைப் பற்றி பேசுற மூஞ்சியும் முகரையும்… பாரு ” நண்பனைக் கழுவிக் கழுவி ஊத்திவிட்டு… அந்தப் பெண்ணின் புறம் திரும்பியவள்…
“ஐனி… சரி உன் பேர்லாம் இருக்கட்டும்… எங்களுக்கு அது பிரச்சனையே இல்லை” எனும் போதே அந்தப் பெண்ணின் முகத்தில் ஒளிவட்டம் தெரிய… கண்மணியோ அந்த ஒளிவட்டத்தை அடுத்த வார்த்தையிலேயே இருளாக்கியும் இருந்தாள்…
“உனக்கு கோலி விளையாடத் தெரியுமா… கபடி… கிட்டி.. இந்த குரங்குதாண்டல்… ஏரிக்கரையில் நீச்சல்… தெருவுல மண்ணுல விழுந்து புரண்டு சண்டை போடத் தெரியுமா… நைட் ஷோ படம் பார்க்க வருவியா… மரம் ஏறத் தெரியுமா… தட்டான் பிடிக்கத் தெரியுமா… பட்டாம் பூச்சிய பட்டம் விடத் தெரியுமா… தும்பி பிடிக்கத் தெரியுமா… தேன்ராடு எடுக்கத் தெரியுமா… இல்ல அதை நக்கத் தெரியுமா… இன்னும் என்னடா இருக்கு… ஹ்ம்ம்ம் மங்காத்தா சீட்டு விளையாடத் தெரியுமா… பல்லாங்குழி… தாயம்…டேய் வேற என்னடா இருக்கு…”
“என்னை மாதிரி மாடு மேய்க்கத் தெரியுமானு கேளு கண்மணி….”
“ஹான் அதையும் சேர்த்துக்க…. நாங்களாம் பக்கா தரை லோக்கல்… ”
“இன்னும் நெறய இருக்கு… பெரிய ப்ராசெஸ் கண்ணம்மா… போங்க போங்க…” என அனுப்பிவிட்டவள்… இப்போது தன் நண்பர்களிடம் பேச ஆரம்பித்தாள்…
“டேய்… நம்ம ஸ்கூலுக்கு புது கணக்கு டீச்சர் வந்துருக்கங்களாம்.. பேர் என்னனு தெரியுமா… பிரபாவதியாம்… ரொம்ப ஸ்டைலா இருக்காங்க…. செமயா இருக்காங்க… அவங்க புடவை கட்டிருக்க அழகே சூப்பர்டா… முட்டிக் கால் வரைக்கும் ஜடை இருக்குடா…. வயசு 32 ஆம்… கல்யாணம் ஆகலை… இனிமேலயும் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்…
மொத்ததுல மேத்ஸ் பிரபாவதி… மாஸ் பிரபாவதிதான்“ என்று கண்மணி சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… நண்பர்கள் கண்மணியைத் திகிலோடு பார்க்க… கண்மணியும் பின்னால் திரும்பி பார்க்க
அவள் சொன்ன அடையாளங்களோடு… நின்றிருந்த பிரபாவதியை… நண்பர்கள் கூட்டம் கைகாட்ட…
கண்மணி பயப்படவெல்லாம் இல்லை….
”குட்மார்னிங் டீச்சர்… உங்களுக்குத்தான் இட்ன்ரோ கொடுத்துட்டு இருந்தேன்…. கிளாஸ்ல மீட் பண்ணலாம்” என்றபடி புத்தகப் பையை எடுத்துக் கொண்டு… பிரபாவதியோ கண்மணி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்…
வாரங்கள் கடந்திருக்க… வகுப்பு நேரத்தில் கண்மணி மரத்தடியில் அமர்ந்திருக்க… கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தலைமை ஆசிரியரின் கண்களில் பட்டும் விட… கண்மணியிடம் வந்தார்
‘கண்மணி… என்ன கிளாஸ் போகலையா… என்ன வகுப்பு இப்போ உனக்கு”
”கணக்கு வகுப்பு சார்…”
“ஏன் அட்டென்ட் பண்ணலை”
“கிளாஸ்ரூம்ல இருக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க… நேத்துல இருந்து மேத்ஸ் கிளாஸ் அட்டெண்ட் பண்ணல” கண்மணி சொல்லி முடித்திருக்க… அடுத்த நிமிடமே… பிரபாவதிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்க… கண்மணி… பிரபாவதி…இருவரும் தலைமை ஆசிரியர் முன் வந்து நிற்க… கண்மணியோ பிரபாவதியை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்…
‘என்ன பிரபா… கண்மணி எவ்ளோ பெரிய பிரிலியண்ட் ஸ்மார்ட்னு தெரியுமா… அவளை படிக்க விடாமல் ஏன் வெளிய அனுப்புறீங்க” என்ற போதே
“அந்த ஓவர் ஃப்ரிலியண்ட்னாலதான் அனுப்புனேன் சார்” பிரபாவதியும் தைரியமாக நிமிர்ந்து பேச… தலைமை ஆசிரியர் குழப்பமாகப் பார்க்க
’இந்த கண்மணி கிளாஸ் எடுக்க விட மாட்டேங்கிறா… மத்த பசங்கள படிக்க விட மாட்டீங்கிறா… ஒரு சம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் போதே.. இவ கட கடன்னு போட்டு ஆன்சர் சொல்லிட்டு… அடுத்தடுத்து சம் போட ஆரம்பிச்சுரா… என்னாலயும் கிளாஸ் எடுக்க முடியல… மத்த பசங்களும் இவ ஸ்பீடுக்கு ஃபாளோ பண்ண முடியாமல் திண்றுராங்க சார்… நான் இவளை அமைதி இருன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா… ரெண்டு நாளா… கடைசி பெஞ்ச்ல உட்கார வச்சேன்.. அப்போதும் அடங்கல… அதான் என் வகுப்பு அவளுக்கு வேண்டாம்னு வெளிய அனுப்பிட்டேன்… இவ ஒருத்தியோட மிதமிஞ்சிய அறிவால.. மீதி நாற்பத்து இரண்டு பசங்க வீணாப் போறாங்க… கணக்குல மட்டும் இல்லை…. தமிழ் - தமிழ்ல ஒரு செய்யுள் வாசிச்சு முடிச்ச அடுத்த நிமிசமே அப்படியே மனப்பாடமா திரும்பச் சொல்றா… இங்க்லீஷ்… சயின்ஸ்… எல்லாத்துலயுமே அதிகப்பிரசிங்கித்தனமா இருக்கா… இவளால இங்க ரொம்பப் பேரு… ரொம்ப டவுனா… இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸா ஃபீல் பண்றாங்கா… இங்க இவ மட்டும் முக்கியம் இல்லை… மத்த 42 பசங்களும் முக்கியம்… நான் இங்க எல்லோருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கதான் வந்தேன்… ஒரு ஸ்டூடண்ட் அதிமேதாவிதனத்துக்கு மத்தவங்களை பலிகடா ஆக்க முடியாது… இவளை மத்தவங்க மாதிரி என்னால மெச்சி கொண்டாட முடியாது” என்று முடிக்க…
தலைமை ஆசிரியரும் யோசிக்க ஆரம்பித்திருந்தார்…. பிரபா டீச்சர் சொல்வதும் சரிதான்…
ஆனால் கண்மணியை அவருக்கு மிகவும் பிடிக்குமே… என்ன செய்வது…. என்ன சொல்வது… கண்மணியா… பிரபாவதியா…
ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அவர் இருந்த போதே… அவரைக் காப்பாற்றவென்றே பியூன் உள்ளே வந்தார்
வந்தவர்
“சார்… கலெக்டர் சார்… “ எனும் போதே…. தப்பித்தோம் பிழைத்தோம் என வேகமாக எழுந்த தலைமை ஆசிரியர்… அறையை விட்டு வெளியே வந்திருக்க… அவர் பின்னாடியே கண்மணியும் பிரபாவதி டீச்சரும் வெளியே வந்தனர்…
அங்கு…
”ஐயோ சார்… நான் கலெக்டரா வரலை… என் பொண்ணோட அப்பாவா வந்திருக்கேன்…” என்றபோது அந்த கலெக்டர் முகத்திலோ அவர் மனைவி முகத்திலோ பெரிதாக மலர்ச்சி இல்லை என கண்மணிக்கே புரிய பிரபாவதிக்கு புரியாமலா இருக்கும்… …
இதற்கிடையே தலைமை ஆசிரியர்… கலெக்டரையும்…. அவரது மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தார்… கண்மணியும் பிரபாவதியும் ஒட்டாத பார்வை பார்த்தபடி எதிர் எதிர் திசைகளில் சென்றிருந்தனர்…
---
/* எங்கே போக வேண்டும் நதி யாரை கேட்க வேண்டும்
இஷ்டம் போல ஓடும் தடை போட்டு பாரு தாண்டும்
எப்ப பாட வேண்டும் குயில் யாரை கேட்க வேண்டும்
எண்ணம் போல பாடும் அதில் இன்பம் கோடி தோன்றும்
பள்ளியிலே ஜாங்கு சக்கர ஜாங்கு சக்கர சச்சச்சா
ஒரு ராக்குருவி ஜாங்கு சக்கர ஜாங்கு சக்கர சச்சச்சா
பள்ளியிலே பாடம் படிச்சது போரு அடிச்சது போடி
ஒரு ராக்குருவி கூட்டம் நடத்திட கூவி அழைச்சது வாடி
கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான் தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம் சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான் எங்க சுதந்திரம்தான் */
Semma
Kanmani