அத்தியாயம் 91-1
/*சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ..ஓ.. அன்புச் சின்னம் தந்ததே அள்ளித் தந்து நின்றதே என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ..ஓ.*/
கிருத்திகா மருத்துவமனையை விட்டு நகரவே இல்லை… பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை என்பதாலும் அதி தீவிரச் சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்ததாலும் அதைப் பார்க்கவும் முடியவில்லை… கிருத்திகா கெஞ்சிக் கேட்டும் கூட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது
“என்னம்மா… நீங்களே ஒரு டாக்டர்… உங்களுக்குக் கூட புரியலேனா பாமரமக்களுக்கு எப்படி புரிய வைப்பது… குழந்தை ரொம்ப கிரிட்டிக்கல் சிச்சுவேஷன்ல இருக்கு… பெத்த தாயும் இல்லை… ஃபீட் பண்ணவே இல்லை.. எல்லாமே மருந்துதான்… அந்தக் குழந்தைக்கு எல்லாமே பிரச்சனைனு எவ்ளோ சொல்லியும் புரியாம பேசிட்டு இருக்கீங்க… முதல்ல அந்தக் குழந்தைக்கு அடுத்த வேளை ட்ரீட் பண்ணா முடியுமான்னு வேற தெரியலை… மெடிசின்ஸ்லாம் அவ்ளோ காஸ்ட்லி” என்று வேறு சொல்லப்பட்டு விட
கிருத்திகாவுக்கு கண்கள் மறைத்த நீர் பெருகி ஓடியது… கண் முன்னாலேயே ஒரு குடும்பம் கண்ணாடி போல சில்லு சில்லாக சிதறிய விதத்தை நினைத்த போது அவளுக்கு இந்த உலகமே பொய்யாகத் தோன்றியது… கடவுள் இருக்கிறாரா அவளுக்கு முதன் முதலாக அவள் தெய்வநம்பிக்கை கேள்விக் குறியாக வந்திருந்தது…
தாய். தந்தை. அவர்கள் பெற்ற பெண். மூவரும் வேறு வேறு இடத்தில்… வேறு வேறு நிலைகளில்… பவித்ரா மொத்தமாக இந்த உலகை விட்டுப் போய்விட்டாள்… ராஜ் அவன் மனைவியின் நிலை அறிந்த அதிர்ச்சியில்… அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில்… மன அழுத்தம் தாங்க முடியாமல் ,நடந்து கொண்டிருப்பது ஏதும் தெரியாமல்… ஏன் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கின்றாள் என்று கூட தெரியாத மயக்கநிலையி்ல்… அவன் ஒருபுறம் மருத்துவமனையில்.. இங்கு அவர்கள் பெற்ற பெண்ணோ இந்த உலகில் வாழப் போராடிக் கொண்டிருக்கும் நிலை…
கிருத்திகாவின் தைரியம் எல்லாம் எங்கோ போய்க்கொண்டிருப்பது போல பிரமை… தான் ஒரு மனநல வைத்தியர் என்பதெல்லாம் மறந்த தருணம்…
பவித்ராவைப் பார்க்கவோ அனுமதி இல்லை… நட்ராஜைப் பார்க்கவோ நேரம் இல்லை… குழந்தை அருகில் இருந்தும் பார்க்கவே முடியாத நிலை… பைத்தியம் பிடித்துவிடும் நிலையில் இருந்தாள் கிருத்திகா… விசாகனின் ஆறுதல் எல்லாம் அவளைக் கட்டுக்குள் கொண்டுவரவே முடியவில்லை..
இதற்கிடையே … கிருத்திகாவின் பெற்றோர்கள் விசாகனின் பெற்றோர்கள் என இரு குடும்பப் பெரியவர்களும் கிருத்திகவாயும் விசாகனையும் அழைத்துப் போக வந்து விட்டனர்
“கிருத்தி… அந்தக் குழந்தையை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்ட தானே… இனி அவங்க வீட்டு சைட் பார்த்துக்குவாங்க… நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இங்க டைம வேஸ்ட் பண்றீங்க… அந்தப் பையனோட அப்பா அம்மா உயிரோடத்தானே இருக்காங்க” எனும்போதே கிருத்திகா மருதுவைப் பார்க்க
“அக்கா அவங்க அப்பாவும் அம்மாவும்… அண்ணனைப் பார்க்க போய்ட்டாங்க அதுமட்டும் இல்லை பாப்பாவையும் ரொம்பப் பேசிட்டாங்க… செத்தா கூட அவங்க வீட்டுப் பக்கம் கொண்டு வரக் கூடாதுன்னு சொல்லிருச்சு அந்தக் கெழவி… அதிர்ஷ்டமில்லாத குழந்தையாம்… அவங்க மருமகளை முழுங்கிருச்சாம்… அவங்க பையனையும் கொன்னுருமாம்… இந்தக் குழந்தையை வீட்டுக்குள்ள சேர்த்தால் அந்தக் குடும்பம் விளங்காதாம்… சாபக்கேடு அதுஇதுன்னு” எனும் போதே கிருத்திகாவின் பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் அதே நேரம் அழவும் முடியாமல் திணற ஆரம்பித்திருக்க
விசாகனின் பெற்றோர் விசாகனிடம்
“டேய் விசாகா… இந்த மாதிரி கிருத்தி ஃப்ரெண்டுக்கு நடந்தது கஷ்டம் தான்… ஆனால் அதுக்காக தேவையில்லாத சுமையை ஏத்துக்கப் போறீங்களா… எவ்வளவோ ஆர்ஃபனேஜ் இருக்கு… காப்பகம் இருக்கு … உனக்குத் தெரியாததா… அவங்ககிட்ட ஒப்படச்சுட்டு ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து சேருங்க” எனும் போதே
“அம்மா… நான் எல்லாம் பார்த்துக்கறேன்… நீங்க போங்க” என்றவனிடம் பேசாமல்
“சொல்றதை சொல்லிட்டேன்… ஃப்ரெண்ட்… ஃப்ரெண்ட் குழந்தைனு எல்லாத்தையும் எவ்வளவுக்கெவ்வளவு முடிச்சுட்டு வரணுமோ… என்ன பண்ணிட்டு வரனுமோ அத்தனையும் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து சேருங்க” விசாகனின் தாய் இதை விசாகனிடம் சொல்லவில்லை கிருத்திகாவிடம் சொல்லிவிட்டுச் செல்ல.. கிருத்திகாவின் பெற்றோர் சாதரணமாகவே பயப்படுவர்… இப்போது சொல்ல வேண்டுமா… மகள் வாழ்க்கை மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக இருக்க…
“நாங்க அவளை அனுப்பி வச்சுறோம் சம்பந்தி… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் டைம் கொடுங்க…” கிருத்திகாவின் பெற்றோர் … விசாகனின் பெற்றோரைத் தனியாகச் சந்தித்து சமாதானப்படுத்தி அனுப்பி இருந்தனர்….
--
அன்று மாலை 3 மணி ஆகி இருக்க..
பவித்ராவின் இறுதி ஊர்வலம் நடக்கப் போகும் விசயம் கிருத்திகாவுக்கு தெரியவர…
விசாகனிடம் ஓடி வந்தாள்…
“விசாகா பவியை ஒரே ஒரு தடவை பார்த்துட்டு வந்துறேன்… ம… ம மயானம் எல்லோருக்கும் பொதுவானதுதானே… நான் பார்க்கிறதை அவங்க அப்பா கூடத் தடுக்க முடியாது… எனக்கு ஒரே ஒரு ஹெல்ப்… எப்படியாவது நட்ராஜைக் கூட்டிட்டு வந்துரனும்… ராஜ் பவித்ராவைப் பார்க்கனும் விசாகா… அவர் பாவம் ராஜ்” எனத் துக்கம் தாளாமல் துடித்தவளிடம்… விசாகன் முறைத்தான்
“இங்க பாரு… உன் ஃப்ரெண்டைப் பார்க்கப் போகனும்னு கேளு… நானே கூட்டிட்டு போறேன்… உன் ஃப்ரெண்டோட குழந்தைக்கு ஹெல்ப் வேணுமா… ஹெல்ப் பண்றேன்… ஆனால் அந்த நட்ராஜுக்கு இனி ஒரு உதவியும் பண்ண முடியாது… அவன் ஒரு கோழை… மனசாட்சி இல்லாதவன்… பொண்டாட்டி போயிட்டாதான்… ஆனால் குழந்தையைப் பற்றி ஒரு வார்த்தை கேட்டானா… இப்போ மயக்கமாகி ஹாஸ்பிட்டல்ல வேற… என்ன சொல்லி அவனைக் கூட்டிட்டு வரச் சொல்ற… “ என்றவனிடம் கிருத்திகா என்ன சொல்ல… அமைதியாகி இருக்க
“நீ வா… உன்னை நான் கூட்டிட்டு போறேன்… உன் ஃப்ரெண்டை கடைசியா பார்க்க வாய்ப்பு கெடச்சுருக்கு பார்க்க வர்றியா இல்லையா” விசாகன் கடுமையான குரலில் கேட்க… இருக்கின்ற சூழ்நிலைக்கு விசாகனிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை… நட்ராஜைப் பற்றி விசாகனுக்குத் தெரியாமல் விசாரிக்க… அவனுக்கு இன்னுமே நினைவு திரும்பவில்லை என்று தகவல் வர… கிருத்திகா மட்டும் விசாகனுடன் மயானத்துக்குச் சென்றாள்… அங்கு சென்றவளிடம் நாராயணனும் பெரிதும் பிரச்சனை வைத்துக் கொள்ளவில்லை… கண்டு கொள்ளாமல் இருந்து விட…. நிம்மதியான முடிவுற்ற மீளா உறக்கத்தில் இருந்த தோழியைப் பார்த்தபடியே இருந்தவளுக்கு இதுதான் தோன்றியது…
அவள் உயிர் என்று தூக்கி வைத்துக் கொண்டாடிய கணவனையும் மறந்து விட்டாள்… கற்பனைகளைச் சுமந்து கொண்டாடிய மகளையும் மறந்து விட்டாள்… அவர்களை விட்டு எங்கோ பறந்து விட்டாள்… இனி நட்ராஜின் வாழ்க்கையில் என்ன பிடிப்பு… அவன் மகள் மட்டும் தான்… அந்த மகளும் உயிருக்காகப் போராடுகிறாள்… அவளை எப்பாடு பட்டாவது காப்பாற்றி நட்ராஜிடம் ஒப்படைக்க வேண்டும்… ஆனால் முடியுமா… முடியும் நாராயணன் மனது வைத்தால் மட்டுமே” வேகமாக நாராயணனிடம் ஓடினாள் பவித்ரா…
அவர் அவளைக் கண்டுகொள்ளாமல் நின்ற போதும் குழந்தையின் நிலையைச் சொல்லி… அவரிடம் பண உதவி கேட்க
“நான் அதை கருவிலேயே கொல்ல நினச்சேன்… பாவி என் குல வாரிசையே கொன்னுட்டா… அவளுக்கு நான் உதவி பண்ணனுமா… செத்து ஒழியட்டும்.. இங்க பாரு வைதேகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்… அந்தக் குழந்தை வயித்துலயே செத்துருச்சுனு… அங்கயே புதச்சுட்டு வந்துட்டேன்னு… ஏற்கனவே சமாதி கட்டின கொழந்தைக்கு நான் உதவி பண்ணனுமா… கெளம்பு.. கெளம்பு… ஏற்கனவே என் மக போன சோகத்துல இருக்கேன்…. இதுக்கு மேல என்னைப் போட்டு படுத்தாதீங்க.. ஆனால் ஒண்ணு சொல்றேன் புத்திர சோகம் பெரிய சோகம்… அந்த வேதனையோட சொல்றேன்… அந்த நட்ராஜும் அதை அனுபவிக்கனும்…. என் பொண்ணை என் கிட்ட பறிச்ச மாதிரி அவன் பொண்ணையும் அவன்கிட்ட இருந்து பறிப்பான் அந்த கடவுளுக்கு கண்ணு இருந்தால் இது நடக்கும்… என் பொண்ணுக்கு கடைசி அட்சதை போட வச்சவன் பொண்ணுக்கும் அது நடக்கும்… நடக்கனும்.. அவன் பொண்ணுக்கு கடைசி அட்சதை போட்ற நல்ல நாள் வந்தால் என்னைக் கூப்பிடு வர்றேன்… இதே இடத்துல அவனும் இதே மாதிரி நிப்பான்… அப்போ அவனோட சேர்ந்து அவன் மகளுக்கு நானும் போட்றேன்…” அந்தச் சூழ்நிலையிலும் நாராயணன் நட்ராஜுக்கு சாபம் விட… கிருத்திகாவும் அதற்கு மேல் அவரைத் தொல்லை செய்யவில்லை…
மொத்த நம்பிக்கையும் போய்த் துவண்டு நின்றிருக்க… மருது வந்திருந்தான்… அவசர அவசரமாக…
“அக்கா… சீக்கிரம் வாங்கக்கா… பாப்பாக்கு ரொம்ப முடியலயாம்… உங்களை உடனே வரச் சொன்னாங்க… நீங்கதான் கார்டியனாம்… உங்ககிட்ட தான் ஒப்படைக்கனுமாம்… “ என்ற போதே கிருத்திகாவும் ஓரளவு நடப்பைத் தெரிந்து கொண்டாள்… விசாகனைப் பார்த்தவள்…
“அவ்ளோதானா விசாகா…. இதுக்குத்தான் இவ இவ்வளவு பாடுபட்டாளா… “ என்றபடி… அங்கு காற்றில் கரைந்துக் கொண்டிருந்த பவித்ராவை நோக்கியவளாக
“ராஜோட மொத்த உலகமா இருந்த நீ இப்படி அவரை விட்டுட்டியேடி… இப்போ உன் பொண்ணையும் விட்டுட்டு போய்ட்ட… நீ இல்லாத இந்த உலகத்துல உன் பொண்ணுக்கும் இடம் வேணாம்னு கூட்டிட்டு போகப் போறியா… ரெண்டு பேரோட எதிர்காலத்தையும் உன்னோட சேர்த்து புதச்சுட்ட பவித்ரா… இனி அவங்களுக்கு யார் இருக்கா… என்ன இருக்கு ” புலம்பியவளாக மருத்துவமனை வந்திருக்க..
அதே நேரம்… மருத்துவமனை நிர்வாகமும் அவர்களைக் கை விட்டிருந்தது…
“இருந்த வரைக்கும் எல்லாம் பார்த்துட்டோம்… ஃபண்ட் கிடைக்காதது ஒருபக்கம் இருந்தாலும்… குழந்தையோட கண்டிஷன் கிரிட்டிகல் ஆயிருச்சு… இனி ஏதும் நம்ம கைல இல்லை… அவ்ளோதான்… ”
கிருத்திகாவும் ஓரளவுக்கு இயல்பாகி இருந்தாள்… நேற்றில் இருந்து இப்போது வரை அவளுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள்… போராடி போராடித் தோற்றதுதான் மிச்சம்… அவளும் ஓய்ந்திருந்தாள்…
---
தனசேகர் முன் அந்த செக் காற்றில் பறந்து கொண்டிருந்தது… 4 மணி நேர கால தாமதம்… ஒரு உயிரின் மதிப்பு தெரியாமல் போய்விட்டோமோ…
அவர் மகன் வரவேற்பறையில் சத்தமாகச் சிரித்தபடி… கலகலப்பாக அவன் தங்கை மற்றும் இவர் தங்கை மகனுடன் விளையாண்டு கொண்டிருந்தான்
“மகிப் பாப்பாவை ஃபர்ஸ்ட் வைங்க அத்தை… அவதான் ஃபர்ஸ்ட்… ஹை சிரிக்கிறா” என அவர் மகன் சந்தோசத்துடன் அன்று வாங்கிக் கொடுத்த சைக்கிளுடன் விளையாண்டு கொண்டிருக்க…
“என் மகனின் இந்த சந்தோச முகத்தைப் பார்க்க… இன்னொரு சின்னஞ்சிறு உயிருடன் விளையாண்டு விட்டேனோ..” பரிதவித்தது அவர் மனம்
குடும்பத்தோடு வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்து உடனே கிருத்திகாவுக்கு தொடர்பு கொண்டார்தான்… ஆனால் கிருத்திகாவோ
“பரவாயில்ல சார்… நீங்க மறுபடி அழைத்ததுக்கு நன்றி… ஆனால் இனி அந்தப் பணம் தேவையில்லை… குழந்தையைக் காப்பாத்த முடியாது… கடைசி நிமிஷங்களை எண்ணிட்டு இருக்கு… “ என்ற போதே அவள் குரல் தடுமாறியதுதான்… இருந்து அடுத்த நொடியே
“வேற யாருக்காவது அந்த உதவியைப் பண்ணுங்க சார்…. அட்லீஸ்ட் அவங்களுக்காவது கரெக்ட் டைமுக்கு அந்த உதவி கிடைக்கனும்னு வேண்டிக்கறேன்…” என்றவள்…
“தென் உங்க பையனுக்கு இன்னைக்கு பிறந்த நாள் தானே… என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிருங்க” என்றபடி கிருத்திகா வைத்து விட்டிருக்க… தனசேகர் மனமெங்கும் குற்ற உணர்ச்சி முள்ளாக குத்த ஆரம்பித்திருந்தது…
அவர் இயல்பிலேயே இரக்க குணம் உள்ளவர்… இதோ இப்போதும் கிருத்திகா பேசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது… ’கரெக்ட் டைமுக்கு உதவி கிடைச்சிருக்கனும்… இனி அந்தப் பணம் தேவையில்லை… கடைசி நிமிடங்கள்…’ கிருத்திகாவின் குரலில் வேதனையை விட… இவன் மேல் கோபப்பட முடியாத விட கையறு நிலை… செயலற்ற நிலை… விரக்தி மட்டுமே…
“நீ அப்போதே உதவி செய்திருந்தால் அந்தக் குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாம் எனச் சொல்லாமல் சொல்லியது அந்தக் குரலில் இருந்த வேதனை விரக்தி எல்லாம்… அது ஒருவர் அளிக்கும் சாபத்தை விடப் பெரியது
“அய்யோ… அந்தப் பெண் என் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னது கூட மனதில் இருந்த வேதனைகளை எல்லாம் மறைத்துச் சொன்ன வாழ்த்தே… என் பையனை இந்த வாழ்த்து வாழ வைக்குமா” தனசேகர் பொதுநலத்திலும் சுயநலமாக தன் மகனைப் பற்றி மட்டுமே அப்போதும் யோசித்தார்…
அதுமட்டுமில்லாமல் காலையில் கோவில் வாசலில் வேறு அந்த சாமியார் சொன்னது வேறு…
ரிஷி கோவிலுக்குள் வரமாட்டேன் என்று வழக்கம்போல பிடிவாதம் பிடித்திருக்க… மொத்தக் குடும்பமும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க
” கோவிலுக்கு வர மாட்டேனு சொல்ற குழந்தையக் கட்டாயப்படுத்தப்பா…
“இல்ல சாமி… அவனுக்கு நான் தான் எல்லாம் பண்றேனாம்… சாமிலாம் கிடையாதுனு சொல்லி சொல்லி பழகிட்டான்… நாங்களும் சின்ன வயசுதானேன்னு விட்டுட்டோம்…. இனி சொல்லிக் கொடுக்கனும் தானே… “ என்ற தனசேகரைப் பார்த்து சிரித்தவர்… ரிஷியைப் பார்த்தபடி
“பொன் இன்றி… செல்வம் இன்றி… உறவின்றி நடு வீதியில் நிற்கும் போதும்… நாட மாட்டான் தெய்வத் துணையை தனையனவன்”
”அவனைப் போய் கட்டாயப்படுத்துறியேப்பா…” புன்னகை முகத்தோடு ரிஷியைப் பார்த்தபடி சொல்ல… தனசேகர் மட்டுமல்ல அவரது குடும்பமே புரியாத பார்வை பார்க்க
”கன்னிகை ஒருத்தி பல துன்பம் தாண்டி… பல துயர் தாண்டி இவனுக்காக … உயிர் பூத்திருப்பாள்… காத்திருப்பாள்… கரம் கொடுப்பாள்… கடந்தும் செல்வாள்…”
“கடந்து சென்றவளைக் காற்றில் தேடி வீதியில் கரையும் நிலையும் வரும்… தெய்வத்தின் வாசல் வழியும் தெரியும்… அப்போது” எனும் போதே தனசேகர் ஆத்திரத்தோடு
“நிறுத்தறீங்களா… இலட்சுமி… முதல்ல கெளம்பு… வீட்டுக்குப் போகலாம்… வீட்லயே போய் சாமி கும்பிடலாம்…” அந்தச் சித்தர் சாமியாரை நிறுத்தச் சொன்னதோடு… தன் குடும்பத்தார் அனைவரையும் கிளப்பி வீட்டுக்கும் கூட்டி வந்து விட்டார்…
வீட்டுக்கு வந்த போதும்… அதன் பின் இயல்புக்கு வரமுடியவில்லை அவரால்
”நான் செய்த பாவம் என் மகனைத் தாக்கிவிடக் கூடாது… என் குடும்பத்தைத் தாக்கி விடக் கூடாது…” வேக வேகமாக அந்த செக்கை எடுத்தவராக… அதில் இருந்த தொகையை மாற்றியவராக… மீண்டும் கிருத்திகாவுக்கு தொடர்பு கொண்டார்..
--
நாட்கள் சென்றிருக்க… கிருத்திகாவின் முகத்தில் வெகு நாட்களுக்குப் பிறகு சந்தோசம் வந்திருந்தது…
”ஏய் என்னடி பண்ணிட்டு இருக்க… அதுவும் கண்மணி போட்டோஸை வச்சுட்டு” என்றபடி மேஜையில் இருந்த கண்மணியின் புகைப்படங்களை விசாகன் பார்க்க
”சத்தியமா… கண்மணி நமக்கு திரும்பக் கிடைப்பான்னு எனக்கு நம்பிக்கையே இல்லை…. பவித்ராவே திரும்ப வந்தது மாதிரி இருக்கு… கடைசி நேரத்துல தனசேகர் சார் கண்மணியோட ட்ரீட்மெண்டுக்கான மொத்த தொகையையும் ஏத்துக்கிட்டது இப்போ கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை… இவ்ளோ நாள் கண்மணி மட்டும் தான் கண்ணுக்குத் தெரிந்தாள்… இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது மாதிரி ஃபீல்… அவருக்கு தேங்க்ஸ் சொல்லனும்னு நினைக்கிறேன்”
உண்மையான நன்றியுணர்வோடு நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தவள்…..
“நன்றிக் கடிதம்… அப்புறம் அதோட அவர் பையனுக்கு ஒரு வாழ்த்து அட்டையும்… அதுவும் நம்ம கண்மணி சொல்ற மாதிரியே…”
”அதெல்லாம் சரி… இந்த ஃபோட்டோலாம் எதுக்கு….” விசாகன் தன் சந்தேகத்தைக் கேட்க
“அவரும் பார்க்கட்டும்… எப்படி பிறந்த குழந்தை இப்போ எப்படி இருக்குனு… அவராலதான் இப்படி ஒரு மேஜிக் … ஆச்சரியம் நடந்ததுன்னு காட்ட வேண்டாம்” என்றபடி… அனைத்தையும் ஒட்டியவள்…
”இதை ஸ்பீட் போஸ்ட் பண்ணிருங்க விசாகன்” என்றபடி அவனது தோளில் சாய்ந்தபடியே…
“கண்மணியை நாம தத்து எடுத்துக்கறதைப் பற்றி என்ன முடிவு பண்ணிருக்கீங்க விசாகன்…” கிருத்திகாவின் குரலில் கெஞ்சல் வந்திருக்க… எப்படியாவது விசாகன் சம்மதம் சொல்ல வேண்டும்… தன் கணவனை சம்மதம் சொல்ல வைக்க வேண்டும் என்பது மட்டுமே அவள் நோக்கம்…
விசாகன் அவளைப் பார்த்தபடியே
“முதல்ல கண்மணி ஹாஸ்பிட்டல்ல இருந்து வரட்டும்… அப்போ சொல்றேன்… வக்கீல் வரச் சொல்லிருக்கார்…” என்று எப்போதும் போல இன்றும் பதில் கூறாமல் தவிர்த்தவன்
”ராஜை எப்படியும் ஜாமின்ல எடுத்துறலாம்… நாராயணன் பெருசா இண்ட்ரெஸ்ட் காட்டல… அந்த டைம்ல ராஜ் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுனு பண்ணியிருப்பார் போல… அதுமட்டுமில்லாமல் அவருக்கும் உடம்பு சரி இல்லையாம்… கேள்விப்பட்டேன்… சரி நான் கிளம்புறேன்…”
கிருத்திகாவும் காத்திருக்க ஆரம்பித்திருந்தாள் கணவனின் சம்மததுக்காக ….
---
கிட்டத்தட்ட 3 மாதங்கள் சென்றிருக்க…
“இந்த ஒன் வீக்கா… எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு… என்னையும் கண்மணியோடவே இருக்கச் சொல்லிட்டாங்க… கண்மணியைப் பாருங்க அப்படியே பவி மாதிரியே இருக்கிற மாதிரி இருக்கு…” எனும் போதே விசாகன் அவளிடம் விமான டிக்கெட்டை நீட்டியிருக்க… குழப்பமாகப் பார்த்தாள் கிருத்திகா
“நாம ரெண்டு பேரும் நெக்ஸ்ட் வீக் கனடா கெளம்புறோம்…”
“அப்போ கண்மணி… நான் உங்ககிட்ட கேட்டது” பரிதவிப்பாக கிருத்திகா கேட்க
“நம்மளால முடிந்த அளவு… ஏன் அதை விட அதிகமாகவே அந்தக் குழந்தைக்கு பார்த்துட்டோம்… என் வீட்ல உன் வீட்ல இதுனால எத்தனையோ பிரச்சனை வந்தபோதும்… இந்தக் குழந்தைக்காக எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணின… நானும் உனக்கு சப்போர்ட் பண்ணினேன்… ஆனால்… அந்த ராஜ்… ஜெயில்ல இருந்து வெளிய வந்து எத்தனை நாள் ஆகிருச்சு… கிட்டத்தட்ட 2 மாதம்… ஒரு தடவை வந்து பார்த்தானா… அவன் குழந்தை மேல அவனுக்கே இல்லாத அக்கறை உனக்கும் எனக்கும் எதுக்கு கிருத்தி… பவித்ரா முக்கியம்னா இந்தக் குழந்தையும் அவனுக்கு முக்கியம் தானே… “ விசாகன் எதிர்கேள்வி கேட்க… கிருத்திகா பதில் சொல்லத் தடுமாறினாள் தான்…. இருந்தும் சமாளிக்க முயன்றவளாக
“ராஜோட நிலைமை அப்படி… என்ன செய்ய… நாம வளர்த்துப்போம்… கண்டிப்பா ஒரு நாள் ராஜ் அவர் பொண்ணைத் தேடி வருவார்…” எனும் போதே
“என்னது நாம வளர்த்து அவர் தேடி வரும் போது அவர் கைல கொடுக்கனுமா… இது என்ன நியாயம்” விசாகன் நக்கலாகக் கேட்க
“இதுல என்ன அநியாயம்… அவரோட பொண்ணு… அவர் கேட்கும் போது அவர்கிட்ட ஒப்படைக்கனும் தானே” கிருத்திகா விசாகன் விரித்த வலையில் அழகாக மாட்டி இருந்தாள்….
“சோ… என்னதான் நாம வளர்த்தாலும்… பார்த்துகிட்டாலும்… கண்மணி நட்ராஜோட பொண்ணு இதை மாற்ற முடியாது அப்படித்தானே” விசாகன் கேட்க … கிருத்திகா விழிக்க…
“இங்க பாரு கிருத்திகா… கண்மணி யாருமில்லாத அநாதை இல்லை… அதே போல ராஜுக்கு கண்மணியை விட வேற ஆறுதலும் இல்லை… ராஜ் இன்னைக்கு இப்படி இருக்கலாம்… கண்டிப்பா ஒருநாள் மாறுவான்… அது கண்மணியை அவன்கிட்ட ஒப்படைத்தால் மட்டுமே நடக்கும்… பவித்ராவோட கணவன்… ஒரு நாள் கண்மணியோட அப்பாவா மாறுவான்… அப்படி நடக்கனும்னா கண்மணி அவன் கூட இருக்கனும்… கண்மணியை நாம வளர்த்தால் கண்மணி மட்டும்தான் நல்லா வருவா… ராஜ்ன்றவன் பட்ட மரமாகிருவான்… எனக்கு ராஜ் மேல கோபம் இருக்குதான்… அதே நேரம் ராஜ் இப்போ இருக்கிற நிலையைப் பார்க்க முடியலை… அவனுக்கு மருந்து இந்தக் கண்மணிதான்… நாம இதைச் செஞ்சே ஆகனும் … அதே போல கண்மணி பக்கத்தில நாமளும் இருக்கக் கூடாது… நாம இருக்கோம்னு தெரிந்தால் ராஜ்ஜோட கவனம் அவன் குழந்தை பக்கம் திரும்பவே திரும்பாது… “
கிருத்திகாவுக்கும் இது புரியாமல் இல்லை… ஆனால் அதற்காக இப்போது இருக்கும் ராஜ்ஜிடம் எப்படி விட்டுப் போவது… 24 மணி நேரமும் குடி போதையில் இருக்கும் அவனை நம்பி… இந்தப் பச்சிளம் குழந்தையை விட்டுச் செல்வது எப்படி… யோசித்துப் பார்க்கும் போதே பயமாகவும் இருக்கிறதே… கிருத்திகா தடுமாறினாள் முடிவெடுக்க முடியாமல்… அவள் படித்த படிப்பு கூட அவளுக்கு கைகொடுக்கவில்லை இப்போதெல்லாம்… மீண்டும் சோகத்தில் மூழ்கினாள் கிருத்திகா…
---
அந்த வாரத்தின் இறுதியில்… நட்ராஜின் வீட்டில்… கிருத்திகாவும் விசாகனும் கண்மணியோடு வந்து நின்றனர்…
“மருது… நான் யாரையும் பார்க்க விரும்பல… எனக்கு யார் கூடவும் பேசவும் விருப்பம் இல்லை… போகச் சொல்லு” எனக் காட்டுக் கத்தாக நட்ராஜ் கத்திக் கொண்டிருக்க…
விசாகனும் கிருத்திகாவும்…. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…
“நாங்க கனடா கெளம்புறோம் ராஜ்… ” கிருத்திகா சொல்ல… நட்ராஜ் அமைதியாகி இருந்தான் இப்போது… ஆனால் அப்போதும் அவர்கள் புறம் திரும்பவில்லை… அவர்கள் கொண்டு வந்த அவன் குழந்தையையும் அவன் பார்ப்பதை அறவே தவிர்த்தான்…
விசாகன் அதற்கெல்லாம் அசரவேயில்லை… கிருத்திகாவைப் பார்த்து குழந்தையைக் அவனிடம் ஒப்படைக்க சைகை காட்ட…. கிருத்திகாவும் மனதைக் கல்லாக்கி கொண்டவளாக
“கண்மணியைப் பார்த்துக்கங்க…” என்ற போதே நட்ராஜின் உடல் விறைக்க
”என்னை மன்னிச்சுக்கங்க ராஜ்…“ உங்க அனுமதி இல்லாமல் பெர்த் செர்டிஃபிகேட்ல கண்மணினு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்… ”
“என்னோட ஃப்ரெண்டைத்தான் உங்ககிட்ட ஒப்படைக்க தவறிட்டேன்… ஆனால் அவ குழந்தையை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன்… அந்த சந்தோஷத்துல நான் கிளம்பறேன்…” சொன்னபடியே குழந்தையை அங்கிருந்த கட்டிலில் கிடத்த
“அதை எங்காச்சும் அநாதை இல்லம் பார்த்து போட்டுட்டுப் போங்க… “ நட்ராஜ் மனசாட்சி என்ற ஒன்றே இல்லாமல் சொன்னதோடு.. கண்மணி தன் குழந்தை என்பதையே அவன் மறந்திருந்தான்… வெறுத்திருந்தான்
“அதை நீங்க பண்ணிக்கங்க ராஜ்… எங்க வாழ்க்கையை நாங்க வாழ ஆரம்பிக்கவே இல்லை உங்க குடும்பத்தால… இனி உங்க பாடு… உங்க குழந்தை பாடு… கிருத்தியோட நிம்மதி எனக்கு முக்கியம்… உங்களால அவளையும் கஷ்டத்தை அனுபவிக்கிறா… அவ நல்லா இருக்கனும்னு நினைத்தால்… கிருத்திய இந்தக் குழந்தைக்காக டிஸ்ட்ரப் பண்ணாதீங்க… கிருத்தி வா போகலாம்… பை ராஜ்” என்ற விசாகன் அதன் பின் ஏதுமே சொல்லாமல்… கிருத்திகாவை கிளம்பச் சொல்ல
நட்ராஜ் யோசித்தான் சில வினாடிகள்
”கிருத்தி ஒரு நிமிசம்….” நட்ராஜ் நிறுத்தினான்
“உன்னோட வாழ்க்கைல பவின்னு ஒரு ஃப்ரெண்ட் இருந்தா…. அவ இப்போ இல்லை…. அதே போல ராஜும் இல்லை… பவி-ராஜ் சம்பந்தப்பட்ட ஏதும் இனி உன் வாழ்க்கைல இருக்கக் கூடாது.. அதுல இனி தலையிடவும் கூடாது…. உன்னைப் பார்க்கிற கடைசி நாள் இதுவே இருக்கட்டும்… எல்லாத்துக்கு நன்றி…” திரும்பி விட்டான்
கிருத்திகாவுக்கோ இரண்டும் கெட்டான் நிலை… கலங்கி நிற்க
“நீ இப்போ பவியோட ஃப்ரெண்டா இருக்காத… ராஜ்ஜை உன்னோட பேஷண்டா நினை… “ விசாகன் முடித்து விட்டான்… கிருத்திகாவையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டான்
----
”அண்ணே கண்மணிப் பாப்பா அழுதுட்டே இருக்கு… என்ன பண்ண” மருது தயங்கி தயங்கி நட்ராஜிடம் வந்து நிற்க… நட்ராஜின் பார்வை அந்தக் குழந்தையிடம் இல்லாவிட்டாலும்…. செவியில் வந்து விழும் குரலைத் தடுக்க முடியவில்லையே
”கத்தி கத்தி செத்துப் போகட்டும் விடு” நட்ராஜ் கடுப்பாகச் சொல்லியபடி வெளியே போய் விட… மருதுவுக்குத்தான் என்ன செய்வதென்று தெரியாத நிலை… வெளியே போன நட்ராஜ் மீண்டும் வீட்டுக்கு வந்திருக்க… வந்தவன் யோசனையோடு மோட்டு வளையத்தையும் பார்த்தபடி படுத்து விட… இப்போது வேக வேகமாக ஓடிப் போய் பால் மற்றும் பால் பாட்டிலை வாங்கிக் கொண்டு வர…
குழந்தையும் இல்லை… அதன் அழுகுரலும் இல்லை… திகிலுடன் தன் முதலாளியைப் பார்க்க
“டேய் வாசுகிட்ட பாட்டில் வாங்கி வைக்கச் சொல்லிருக்கேன்… எடுத்துட்டு வா” என்றவனிடம்
”அண்ணே… பாப்பா எங்க” நடுக்கத்துடன் மருது கேட்க…
“ஹ்ம்ம்ம்… ஒழிச்சு விட்டுட்டேன்… நான் சொன்ன வேலையைப் போய்ப் பாரு” என நட்ராஜ் மனைவியின் புகைப்படத்தை வெறிக்க ஆரம்பித்திருந்தான்…
மருது வாசுவிடம் வந்து நிற்க…
“டேய் அவர்கிட்ட அவர் பொண்ணப் பற்றி இனி கேட்காத… அவங்க அம்மாவை வந்து தூக்கிட்டு போகச் சொல்லிட்டாரு…. “
‘ஏண்ணே அவங்க பார்த்துப்பாங்களா… பிறக்கும் போது வந்தது… மூணு மாசமா ஹாஸ்பிட்டல் பக்கம் கூட வந்து எட்டிப்பார்க்கலை… அவங்க எப்படி…” மருது தவித்துக் கேட்க
“இதெல்லாம் நமக்குத் தேவையா… “ என்று முடித்தவன்
“அண்ணே மாசமாசம் காசு அனுப்புறேன்னு சொன்ன உடனே சரின்னு சொல்லிருச்சு அந்தக் கெழவியும்… நீ போய் உன் வேலையைப் பாரு” என்றவனிடம் பேசாமல்
“ம்க்கும்… இவர் இங்க வர்றதே இல்லை… குடிச்சு குடிச்சு மட்டை ஆகிருவாரு… 2 மாசமா எந்த வேலையும் வர்றதில்லை… ஒழுங்கான சாப்பாடு இல்லை… இப்படி போகுது அவர் வாழ்க்கையே… இதுல இவர் எங்கிட்டு காசு அனுப்புறது…” சலித்தபடி போனவனுக்கு அடுத்த நாளே கம்பெனிக்கு வந்து ஆச்சரியம் தந்தான் நட்ராஜும்…
---
விமான நிலையத்தில் விசாகன் கிருத்திகாவைத் தேற்றிக் கோண்டிருந்தான்…
“ராஜ் மெல்ல மெல்ல இயல்புக்குத் திரும்புவான் கிருத்தி… முதல்ல மாதிரி இல்லைனாலும்… ஓரளவாவது… மாறுவான்… இப்போ பாரு மறுபடியும் கம்பெனிக்கு வர ஆரம்பிச்சுருக்கானாம்…”
“ப்ச்ச்… இந்த ராஜ் பவித்ரா ஆசைப்பட்ட ராஜ் இல்லை விசாகன்… அதோட ராஜ் வேலைக்குப் போறதா முக்கியம்…. கண்மணியை ஏத்துக்கிறனும்… அதானே முக்கியம்… ராஜ்ஜோட அம்மா அவளை வளர்க்கப் போறத நினைத்தால் எனக்கு மனசு தாங்கவே இல்லை… “
விசாகன் அவளைப் பார்த்தபடி…
“அவளோட விதி அப்படி இருக்கும் போது நாம அதை மாத்த முடியாது கிருத்தி… ஆனால் கண்மணி கண்டிப்பா ஒரு நாள் தன்னையும் மாத்திக்குவா…. இங்க இருக்கிற அத்தனை பேரையும் மாத்துவா… அவளுக்குள்ள வில் பவர் அதிகமா இருக்கு… நீ கொஞ்ச நாள் அவளை மற… நீயோ நானோ எதையும் மாற்ற முடியாது… நடக்கிறதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்… ராஜ்ஜும் கண்மணியும் பவித்ரா ஆசைப்பட்டபடி வருவாங்க…”
கிருத்திகா நிராசையுடன் பார்க்க…
“அப்படிப் பார்க்காத… அவங்க வாழ்க்கைல பவி இனி கிடையாதுதான்… ஆனால் பவியோட ஆத்மா அவங்க கூடத்தான் இருக்கும்… கண்டிப்பா அவங்களுக்கான வாழ்க்கையை மாத்த கண்டிப்பா யாரையாவது அனுப்பி வைக்கும்” என்றவனின் தோள் சாய்ந்து அனைத்தையும் கிருத்திகா மறக்க முயல… பவித்ராவின் ஆத்மா ரிஷியை அவர்களை நோக்கி தேடி வரவைத்ததா….
கண்மணிக்காக ரிஷி பிறந்தானா… ரிஷிக்காக கண்மணி பிறந்தாளா… இந்த உலகின் விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று…
---
மூன்றாண்டுகளுக்குப் பிறகு….
அந்த ஓட்டு வீட்டின் தாழ்வாரத்தின் வழியே சூரியன் சுள்ளென்று விழுந்து வீட்டுக்குள் வந்திருக்க… அந்த வீட்டின் ஒரு பகுதியின் சுவரோடு சுவராக ஒன்றிப் படுத்திருந்தாள் கண்மணி
“ஏய் கண்ணுமணி…. ஏந்துக்கோ…….. உங்க வீட்டுக் கெழவி எழுப்பி விடச் சொல்லுச்சு…” என பக்கத்து வீட்டு விஜி அக்கா எழுப்பிவிட்டிருக்க
கண்மணியும் கண் திறந்தவளாக எழுந்து அமர்ந்தவள்… சோம்பல் முறித்தவளாக வெளியே எழுந்து வந்தவள்… மேல்சட்டை பாவாடை ஏதுமின்றி மோக்லியின் பெண் அவதாரமாக வெளியே வந்தவள்… பரட்டைத் தலையுடன் நேராக… சென்றது அவள் வீட்டின் எதிர்புறம் இருந்த டீக்கடைக்குத்தான்… கையில் தூக்கு வாளியும் அவளோடு
தூக்கு வாளியை வெளியே இருக்கும் டீ ஸ்டாலில் மாஸ்டரின் அருகில் வைத்தவளாக
“அண்ணே… டீ ஊத்திக் கொடு…” என்ற படி… கடைக்குள் வந்தவள்…
அங்கு போட்டிருந்த நாற்காலியின் மீது ஏறி… பன் இருந்த கண்ணாடி பாட்டிலை திறக்க முயற்சித்திருந்தாள்…
வழக்கமான தினசரி செயல் என்பதால்.. கடைக்காரரின் அனுமதி ஏதும் இல்லாமல் எடுக்க முயற்சிக்க… வேகமாக
“ஏய் கண்மணி… பன்ல இருந்து கையை எடு… “
“மாஸ்டர்… இந்தப் புள்ளைக்கு ஏதும் கொடுக்காத… இவங்க வீட்டுக் கெழவி 5 மாசமா பாக்கி வச்சுருக்கு… “ என்றபடி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்திருக்க…
”ஏய்.. அதை எங்க வீட்டு கெழவி கெழவன் கிட்ட கேளு… எனக்கு பசிக்குதுல… நான் எடுக்கத்தான் செய்வேன்” கண்மணி அவனோடு மல்லுக்கட்ட…
“என்ன திமிரா பேசுற… நான் என்ன உங்க வீட்டுக்கு வச்ச ஆளா… போ போ… போனாப் போகுதுன்னு சின்னப் புள்ளைனு இத்தனை நாள் நீ வந்தப்போ ஒண்ணும் சொல்லல… பணம் கேட்டால் அந்த கந்தம்மாள் கடையையே காலிபண்ண வச்சுருவேன்னு சொல்லுது…. கெளம்பு…”
“எங்க வீட்ல ஒண்ணும் இருக்காதே.. இன்னைக்கு மட்டும் கொடு… டீ கூட வேண்டாம்” என்றபடி வேகமாக அந்தப் பாட்டிலில் மீண்டும் கை வைக்க… கடைக்காரனோ கண்மணியை வேகமாகத் தள்ளி விட்டிருக்க… அவ்வளவுதான் கீழே விழுந்து கிடன்ந்த கண்மணிக்கு கோபம் வந்திருந்தது… கண்மணி எப்போதுமே பசி தாங்க மாட்டாள்… அவள் எப்போதும் ருசிக்குச் சாப்பிட்டதில்லை… பசிக்கு மட்டுமே அதுவும் அவள் யானைப் பசிக்கு போதுமான உணவு கிடைத்ததே இல்லை… பத்தாத உணவே அவளுக்கு கிடைக்கும் என்பதால் அதனால் அடிக்கடி அவளுக்கு பசி ஏற்படும்…. அதனாலே அவளுக்கு பசி என்றால் எல்லாமே மறந்து போகும்…பசி வ்ந்து விட்டால் அவள் யாரையும் பார்க்க மாட்டாள்… எதையும் பார்க்க மாட்டாள்…
”ஏய் இப்போ தருவியா மாட்டியா… பசிக்குது… நான் தினமும் இங்கதானே நாஷ்டா துன்னுவேன்… இப்போ தரலைனா… பாட்டிலை உடச்சுருவேன்” என்றபடி கீழே விழுந்த கல்லை எடுத்திருக்க…
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் கூட்டம் அவளையே பார்த்து சிரித்தபடி இருக்க
“யார்டா இது… உங்க ஏரியால குழந்தைங்க கூட வேற லெவல்ல இருக்குதுக” அவன் பார்வை சின்னஞ்சிறு குழந்தை என்பதைக் கூட விட்டுவிட்டு அந்தக் குழந்தையின் உடலை அலசி ஆராய்ந்து கொண்டிருக்க…
”அந்த எதிர்த்த வீட்டுக் கெழவியோட பேத்தி… ” மற்றொருவன் பதில் எனும் போதே… அந்த இளைஞன்
“பாப்பா… பன்னு தானே வேணும்… இந்தா…” அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த எச்சிலை நீட.. கண்மணிக்கு இருந்த பசியில் அவளையும் மீறி கை நீட்ட நினைத்தாள் தான்… ஆனாலும் அவள் பிச்சைக்காரியா என்ன… யோசித்து தயங்கியவளாக…
“இல்ல… இது வேண்டாம்.. வேற வாங்கிக் கொடு… நாளைக்கு எங்க கெழவிட்ட காசு வாங்கிக் தாறேன்..” என்றவளிடம்
“என்னடா பொண்ணு கொஞ்சம் ஷார்ப்பா இருக்கு… நாமளும் அது வழியே போவோம்” என்றபடி…
“சரி சரி… வாங்கித்தறேன்… வா மாமா பைக்ல உட்கார்ந்துக்கோ… வா… வா நான் தூக்கி வைக்கிறேன்” என அவளைத் தூக்கப் போக… வேகமாக நகர்ந்தவள்…
“நான் சிந்தி சாப்பிடுவேன்… பைக் அழுக்காயிடும்…” எனக் கண்மணி சொல்ல
“பராவயில்ல செல்லம்… பைக் தானே… மாமா பைக்கையும் தொடச்சிக்கிறேன்… உன் மேல சிந்தினாலும் தொடச்சு விட்றேன்…”
“நீ சிந்தியே சாப்பிடு… அதுதான் எங்களுக்கு முக்கியம்… என்னடா நான் சொல்றது கரெக்ட்தானே” என்றவனிடம் அவனது நண்பர்கள் கூட்டம் கை கொடுக்க… அங்கு குபீரென்ற சிரிப்பலை…
கண்மணிக்கு அவர்களின் விரசமானப் பேச்சை பிரித்துக் பார்க்கும் அளவிற்கு வயதும் இல்லை…
அப்போது அவளுக்கான டீயும் ரொட்டியும் வந்திருக்க… கண்மணிக்கு அது மட்டுமே முக்கியமாகப் பட்டிருக்க… அங்கு நின்று கொண்டு குடிப்பதென்பது முடியாத காரியம்… வேகமாக அந்த இளைஞனை நோக்கி தூக்கும்படி கை உயர்த்தி இருக்க… அந்த இளைஞனும் அவளைத் தூக்கப் போக… அதே நேரம்…
கண்மணியின் வெற்று முதுகில் பளார் என்று சூளீர் அடி விழுந்திருந்ததுது…
“அம்மா” எனக் கண்மணி பின்னால் முதுகைப் பிடித்தபடியே அந்த அடியின் வேகம் தாங்காமல் சுருண்டு கீழே விழுந்திருக்க…. கையில் இருந்த டீ ரொட்டியும் எப்போதோ தரைக்கு தாரை வார்க்கப்பட்டிருந்தது…
கீழே விழுந்தவளையும் விடாமல்… மீண்டும் தூக்கி நிறுத்தி கந்தம்மாள்… அருகில் இருந்த கம்பினை எடுத்து காலிலேயே போட… கண்மணி வலி பொறுக்க முடியாமல் கதறித் துடித்து வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்து இருக்க
“சிறுக்கி மவளே… அப்படி டீ கேக்குதா… இந்தா வர்றேன்… அங்க வந்து உன்னை வச்சுக்கறேன்…” என்றபடி கம்பைப் போட்ட கந்தம்மாள்…
“ஏண்டா… பொறுக்கிகளா… குமரிப் புள்ளைகளதான் வம்பிழுப்பீங்க… குழந்தையையும்மா.. இருங்க போலிஸு ச்டேசன்ல அந்த இன்ஸ்பெக்டர் அம்மாவைக் கூப்பிட்டு வர்றேன்…” என அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்தபடியே அவர்களை மிரட்ட ஆரம்பித்திருக்க
“டேய் வாங்கடா முதலுக்கே மோசமாகியிரும் போல… ஓடுங்கடா…இனி இந்தப் பக்கமே வரக் கூடாதுடா”
”எல்லாம் இவனால வந்தது…” இன்னொருவன் கண்மணியோடு வம்பிழுத்த இளைஞனை திட்ட ஆரம்பித்தபடி அங்கிருந்து களைந்து செல்ல…
“அடேய்… இரு உனக்கும் தான்… இதை அப்படியே அந்த இன்ஸ்பெக்டர் அம்மாகிட்ட சொல்லி இட்டாறேன்… உன்னை கடையையே காலி பண்ண வைக்கிறேன்…” எனும் போதே
கடைக்காரன் கெஞ்ச ஆரம்பித்திருந்தான்
‘ஏய் ஏய் கெழவி… இதை பெருசாக்காத… இனி அவனுங்க வர விடாமல் பார்த்துக்கிறேன்.. ஏன் அவனை மாதிரி குமரப் பயலுகளையே இனி வர விடமாட்டேன்… என் பொழப்புல கை வச்சுறாத கெழவி…” கெஞ்சிப் பார்த்தபோதும் சமாதானமடையாமல் கந்தம்மாள் இருக்க
“சரி… இன்னாங்கிற இப்போ… இனி உன் பேத்தி நாஷ்டா இங்க ஃப்ரியாவே சாப்பிடலாம்… காசே வேண்டாம்… “ என்ற போதே கந்தம்மாளுக்கு முகம் மலர்ந்திருக்க
”ஆனால் டீயும் பன்னும் மட்டும்தான் ஃப்ரீ… உன் பேத்தி வயிறு பானை வயிறு… அதுக்கு தீனி போட்டு மாள முடியாது… அதுனால் அது கேட்கிறதை எல்லாம் கொடுக்க முடியாது…” என்று சொல்ல… கந்தம்மாளும்… எப்படியோ இனி இந்த கண்மணிக்காக காலை உணவு தேடத் தேவையில்லை…. காசும் இல்லை… இது நல்ல வாய்ப்பாக இருக்க ஒத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்…
----------
”ஏய்… இந்தா வரக்காப்பி… சண்டை போட்டுட்டு உடனே அவன்கிட்ட போய் டீ வாங்க முடியாது…. அப்படி போய் நின்னா இந்தக் கந்தம்மாள் மானம் இன்னாகும்” என்று கண்மணியிடம் நீட்ட
“ச்சீ பே… எனக்கு ஒண்ணும் வேண்டாம்” என மூலையில் பசியோடு சுருண்டிருக்க… அடுத்த நொடி மீண்டும் ஒரு அடி விழுந்திருக்க.. விழுந்த அடியில் இப்போது வேகமாக எழுந்து அமர்ந்தவள்
“நீ எத்தனை அடி அடிச்சாலும் நான் இந்த கருப்புக் காப்பியக் குடிக்க மாட்டேன்… எல்லாரும் என்னை கருவாச்சி கருவாச்சினு சொல்றாங்க…” எனக் கண்மணி தேம்பி அழ ஆரம்பித்திருக்க
“ஆமா இவங்களுக்காக பெரிய சேட்டு இளவரசன் காத்துட்டு இருக்காரு… இவ கருப்பா போயிட்டா கட்டிக்காம போயிருவாரு…. எழுந்திருடி… குடிடி..” என நக்கலாக அவளைச் சொன்னபோதே
“ஏய் கண்ணுமணி…”அழைத்தபடி பக்கத்து வீட்டு விஜி வந்திருக்க… வந்தவள்…
“ஏய் கெழவி… ஏன் அவளைப் போய் இந்த அடி அடிக்கிற… அந்தத் தெருப்பொறுக்கி நாய்ங்க பண்ணதுக்கு” என்றபோதே
“இவ இப்டி போய் நின்னா… எத்ன தபா சொல்லிருக்கேன்… சட்டை பாவாடை போடு… கவுனு போடுன்னு” சொன்னபோதே
“அதெல்லாம் வேர்க்குதுக்கா…” கண்மணி வேகமாகச் சொல்ல
“ப்ச்ச்… பச்சைப்புள்ளையப் போய் திட்டாதக்கா… குழந்தையக் கூட விட்டு வைக்கமாட்டானுங்க போல…”
“விசியக்கா… பசிக்குது” கண்மணி உதட்டைப் பிதுக்கியபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழ… விஜி கண்மணியைத் தூக்கிக் கொண்டவளாக
“வா… வா.. உங்க அண்ணனும் சாப்பிட்டுட்டு லோடுக்கு போகனும்… உங்க ரெண்டு பேருக்கும் பிடித்த புளி வெங்காயம் பட்ட மிளாக கரச்சு வச்சுருக்கேன்… பழைய சோறுக்கு செமையா இருக்கும்” என்ற போதே
“பெரிய குண்டான்லதான் போடனும்… அவ்ளோ பசிக்குது” எனக் கண்மனி நீட்டி முழங்கி பேச…
“என்னூட்டும் சேத்து துன்னுக்கோ” என்ற போது தன் வீட்டுக்குள் நுழைந்தவள்…
“ஏ மாமா... சாப்பிட வா” என்றபடி உள்ளே நுழைய… வெளியே வந்த அவளது கணவன்… கண்மணியைப் பார்த்தவுடன்
“ஏன் மோக்லி பேபி… என்ன கன்னமெல்லாம் கரை… காலையிலேயே மண்டகப்படியா…” அவள் கன்னத்தில் இருந்த கண்ணீர் கரைகளைத் துடைத்துவிட
“நீ சொல்லலைனா நானும் போயிருக்க மாட்டேன் மாமா… நான் போகும் போதும் கெழவி அடிச்சுட்டுத்தான் இருந்துச்சு… “ என்றபடியே…. இருவருக்கும் சாப்பாடை எடுத்து வைக்க… கண்மணி மற்றதெல்லாம் மறந்தவளாக… சாப்பாடே குறி என சாப்பிட்டுக் கொண்டிருக்க… வயதான முதியவர்கள்… காலைத் தூக்கி வைத்து சாப்பிடுவது போல சாப்பிட்டுக் கொண்டிருக்க… ஏன் விஜியின் கணவனும் அப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்… அவனுக்கு தரையில் சம்மணமிட்டு சாப்பிட முடியாத நி்லை… ஒரு விபத்தில் வலது காலில் அடிபட்டிருக்க அது முதல் ஒரு காலை உயர்த்தித்தான் சாப்பிடுவான்…
கண்மணி குழந்தைதான்… ஆனாலும் அவள் போட்டிருந்த உடை… அப்படி உட்காரும் நிலைக்கு உகந்ததாக இல்லாமல் போயிருக்க
“கண்மணி… சம்மணம் போட்டு சாப்பிட்டு… பொம்பளப் புள்ளைங்க இப்படி உட்கார்ந்து சாப்பிடக் கூடாது…” எனும் போதே
“அப்போ நீங்க இப்படி சாப்பிடலாமா” கண்மணி தன் நிலையை மாற்றாமல் அவனிடமே எதிர் கேள்வி கேட்க…
விஜியின் கணவன் தன் தவறை உணர்ந்தவனாக… முடியாவிட்டாலும்… கண்மணிக்காக சம்மணம் போட்டு அமர… கண்மணியும் இப்போது சம்மணம் போட்டு அமர… விஜி தன் கணவனைப் பெருமையுடன் பார்த்தவளாக
“ஏ மாமா… அவளை ட்ரெஸ் போட்டுட்டு வெளிய வரச்சொல்லு… கெழவி என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா” கணவனிடம் சொல்ல
“கண்மணி…”
“ஹ்ம்ம்ம்…” என்று சாப்பாட்டுத் தட்டை வழித்துக் கொண்டிருக்க…
“நீராற்தண்ணி… ஃபுல்லாகிருச்சு வயிறு… அக்கா என் வயிறைப் பாரு… உன்னை மாதிரியே எனக்கும் பாப்பா வந்திருக்கு” என்றவளிடம் விஜி சிரித்தபடியே
“ஏய்… நீ குமரிமுத்து மாதிரி சிரிப்பதானே… அதை மாமாகிட்ட சிரிச்சுக் காமி” எனும் போதே
“அப்போ நீ கன்னுமனின்னு சொல்லு” என்று கண்மணி கேட்க… விஜியும் அதே போல… கண்மணி அவள் சொன்ன அந்த நடிகரைப் போல் விடாமல் சிரிக்க ஆரம்பித்தவள்…
“யக்கா… கண்ணு கூட மாத்தி சிரிக்கிறேன் பாரு…” என்றவள் சற்று முன் கந்த்தம்மாளிடம் அடி வாங்கியவள் என்றால் கேட்பவர்கள் நம்ப மாட்டார்கள்
“அழகு பாப்பா… எல்லோரும் உன்னை கண்ணு வைக்கப் போறாங்க பாரு…. அக்காவைப் பாரு… ட்ரெஸ் போட்டு எப்படி கவர் பண்ணிருக்கானு… அதே மாதிரி நீயும் ட்ரெஸ் போட்டுக்கனும்…” விஜியின் கணவன் மெல்ல கண்மணிக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்த போதே
“ஏன் கண்ணு வைக்கனும்…” என்றவள் சாப்பிட்டு ஏப்பமும் விட்டு எழ…
”கெழவன்… கெழவியைப் பார்த்து பார்த்தே எப்படி வளர்ந்திருக்கு பாரு… இவள மாத்துறது ரொம்ப கஷ்டம்” என விஜியின் கணவன் சத்தமாகச் சொல்ல
“ஃபர்ஸ்ட்டு உன் பொண்டாட்டிய ஒழுங்கா பேசச் சொல்லு… விஜின்னு சொல்லத் தெரியலை… கண்ணுமணின்னு சொல்லுது… நீ எம்புட்டு அழகா இங்கிலிசு பேசுற… இது உனக்கு மேட்சே இல்ல….. எவன் உனக்கு இதக் கட்டி வச்சான்…” சோறு போட்ட விஜிக்கே ஆப்பு வைத்திருக்க…
விஜியின் கணவனோ தன் மனைவியைக் காதலுடன் பார்க்க ஆரம்பித்திருந்தான்… அதெல்லாம் கண்மணிக்குப் புரியவில்லை… கண்டுகொள்ளவும் இல்லை…
வடக்கே லோடு ஏற்றிப் போவதால்… அவன் இன்னும் இரண்டு மாதத்துக்கு இங்கு வர முடியாது… அந்த ஏக்கத்தில் கர்ப்பிணி மனைவியைப் பார்த்திருக்க… அதே நேரம் அவனுக்கும் அவன் மனைவிக்கும் தனிமையான அந்தரங்க நேரம் எதிர்பார்த்து காத்திருக்க… கண்மணியோ அங்கிருந்து கிளம்பும் எண்ணத்திலேயே இல்லாதவள் போல… விஜியுடனே சுற்றிக் கொண்டிருக்க… பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விஜியின் கணவன்
“ஏய் கண்மணி… உங்க வீட்டுக்குப் போகலையா…. கெளம்பு… கெளம்பு” எனும் போதே
“நான் அங்க போக மாட்டேன்…. மதியச் சாப்பாடும் இங்கயே முடிச்சுட்டுத்தான் போவேன்” எனச் சொல்லிவிட…
“ஏண்டி… அவளை அனுப்பித் தொலையேன்” விஜியின் கணவன் சொல்லும் போதே…
“நீங்கதானே அவளைக் கூட்டிட்டு வரச் சொன்னீங்க…” விஜி கழண்டிருக்க…
“பாப்பு… இங்க வாங்க தங்கம்” என அவன் கண்மணியை அழைத்து தன் மடியில் வைத்துக் கொண்டவனாக
“நான் உனக்கு அட்வைஸ் பண்ணேன்ல… அதே மாதிரி விஜி அக்காக்கும் அட்வைஸ் பண்ணனும்… நீங்க கெளம்புவீங்களாம்… நான் அக்காக்கும் அட்வைஸ் பண்ணுவேனாம்…” எனும் போதே…
“விஜி அக்காவை வச்சுக்கிட்டுதானே எனக்கு அட்வைஸ் பண்ண… அப்போ என்னை வச்சுக்கிட்டு அக்காக்கும் அட்வைஸ் பண்ணு… நான் எதுக்குப் போகனும்’ எனச் சொன்ன கண்மணியோ… அங்கிருந்து போகவே இல்லை … விஜியின் கணவனை வழி அனுப்பி வைத்து விட்டுத்தான்…. வீட்டுக்கே போனாள்… போனவள்… வாங்கிய அடியெல்லாம் மறந்தவளாக
‘ஏய் கெழவி… பசிக்குது.. அந்தக் காப்பித்தண்ணி இருக்கா…” என்று வேறு கேட்டபடியே உள்ளே போக… மீண்டும் அங்கு அடி விழும் சத்தம் கேட்காமலா இருக்கும்… அழுதபடியே… கையில் வேண்டாம் என்று சொன்ன கருங்காப்பி நிரம்பிய டம்ளரோடு வெளியே வந்து குடித்துக் கொண்டிருந்தாள் கண்மணி…
காஃபியைக் குடித்தபடியே
“எனக்கா விசம் வைக்கிற… இரு இரு ஒருநாள் என்கைல நீ இதே மாதிரி காப்பித்தணியை வாங்கிக் குடிக்கிற காலம் வரும்… கெஞ்ச வைக்கிறேன் உன்னை… அப்போ உனக்கு காபிப்பொடி போட மாட்டேன்… விசம் தான்… இந்த உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத ஒரே ஆள்னா அது நீதான் கந்தம்மாள் கெழவி…” என்று தனக்குள் கருவியபோதே… முதுகும் எரிய ஆரம்பித்திருக்க
”ஐயோ வலிக்குதே.. முதுகுல வேற அடிச்சிருச்சு பிசாசு… தடவிக் கொடுக்கக் கூட முடியலை” வாய்க்கு வந்த தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தையை எல்லாம் போட்டு கந்தம்மாளைச் சத்தமாக திட்டவும் செய்திருந்தாள்…
கண்மணி என்பவளுக்குள் குழந்தைத்தனம் மட்டுமே கொண்ட பருவமாக முடிந்திருக்க… காலமும் நேரமும் நிற்காமல் ஓட ஆரம்பித்திருக்க… இப்போது கண்மணியின் வயது ஐந்தைத் தொட்டிருந்தது
இந்த ஐந்து வருடங்களில் நட்ராஜ் ஒரு முறை கூட மகளை வந்து பார்த்தில்லை… ஏன் கந்தம்மாளைக் கூட வந்து பார்த்ததில்லை… கந்தம்மாளே மனது கேட்காமல் அவ்வபோது மகனைப் பார்த்துவிட்டு வருவார்… அப்படிப் போகும் போதெல்லாம் கையில் பெண்களின் புகைப்படங்களையும் ஜாதகங்களையும் தூக்கிக் கொண்டு போக… கந்தம்மாளையும் அறவே வெறுத்திருந்தான் நட்ராஜ்….
கந்தம்மாளுக்கு… வீராவுக்கும் மகனைப் பற்றிய கவலை இப்போதுதான் வரவே ஆரம்பித்திருந்தது…
”அவன் ஒரு இன்னொரு கல்யாணம் காச்சி பண்ணிறனும்ங்க… எப்படியாவது பண்ணி வச்சுறனும்… அதுனாலதான் அந்தச் சிறுக்கி பெத்த சிறுக்கியை வச்சு வளர்த்துட்டு இருக்கேன்… இல்லை எப்போவோ ராசுட்ட அனுப்பி வச்சுருப்பேன்…. புள்ளையா அது… பெத்துப் போட்டுட்டு போய்ட்டா அந்த திமிர் பிடிச்ச மகராசி… இருக்கிறவரையும் நம்மள நம்ம பையன்கிட்ட ஒண்ட விடலை… செத்த பின்னாலும் ஒண்ட விட விட மாட்டேங்கிறா… இப்படி என் புள்ளையையும் நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாளே… பெத்தாளே அதாவது நம்மள மாதிரி இருக்கா… அப்படியே ஆத்தா மாதிரியே அடங்காபிடாரியா வந்து சேர்ந்திருக்கு… ராசி கெட்டதுங்க” மகனுக்காக புலம்புவதுதான் கந்தம்மாளின் வேலையாகப் போயிருந்தது இப்போதெல்லாம்
---
”தாத்தா… இது ‘தி…ன..” அதுக்கப்புறம் என்ன… தினத்தந்தி மாதிரி இதுவும் ’தின’ – ல ஆரம்பிச்சிருக்கு…” கண்மணி டீக்கடை பெஞ்சில் அமர்ந்து அங்கிருந்த பெரியவருடன் சேர்ந்து நாளிதழைப் புரட்டியபடி கேட்க
“ராசு மகளே… வந்துட்டியா கண்ணு… வா வா… படிக்கலாம்…. இப்போ தாத்தா வாசிப்பேனாம்… அதே போல நீயும் ஒருநாள் தாத்தாக்கு படிச்சுக் காட்டனும்” என அவர் சொல்ல… கண்மணியும் சந்தோசமாகத் தலை ஆட்டினாள்…
இந்த ஐந்து வயதில் கண்மணிக்கு பெரிதாக தன் பிறப்பின் வரலாறு தெரியாவிட்டாலும்… எதேச்சையாக அவளுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு அவளாகவே அவளின் பிறப்பை… தாய் தந்தை பற்றி தனக்குள் உருப் போட்டு வைத்துக் கொண்டாள்…
தந்தை பெயர் ராசு… தாய் ஒரு மருத்துவர்… வெளிநாட்டில் இருக்கிறார்… இப்படியாக தன் வரலாறை தானாகவே வரையறுத்து வைத்திருந்தாள்… கந்தம்மாளிடம் இதற்கு மேல் கேட்ட போது அடிதான் பதிலாக கிடைக்க… கந்தம்மாளிடம் கேட்பதையே விட்டு விட்டாள்… ஆனாலும் அவளின் ஆராய்ச்சி மூளை ஒரு பக்கம் தன் பிறப்பைப் பற்றி ஒரு சிறு விசயம் கேள்விப் பட்டாலும்… அதன் அகராதியில் சேர்த்து வைத்துக் கொள்ளும்…
விஜி அக்காவிடமும் கேட்பதில்லை… காரணம்… அவளே ஒரு புறம் அவள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு அழுது கொண்டிருக்கின்றாள்.. இவள் தான் அவளை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பதே…
ஆம் அவள் கணவன்… வடநாட்டில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட… அவன் இங்கு வரும் போதெல்லாம் இருவருக்கும் ஒரே சண்டை சச்சரவுதான்…
கண்மணிக்கு அப்போதெல்லாம் ஒன்றும் புரியாது…
”ஏன்க்கா அண்ணனை திட்ற… சண்டை போட்ற… இங்க நீ சமச்சு போட்ற… அங்க அண்ணாக்கு சமச்சுப் போட ஆள் இல்லைல… இங்க நீ இருக்க… அங்க அந்த அக்கா…” என்ற கண்மணியிடம் விஜி என்ன சொல்வாள்…
“அண்ணே உனக்கும்… உன் புள்ளைக்கும் காசு குடுக்குதுதானே… அப்புறம் என்ன.. அது கூட ஏன் சண்டை போட்ற… எனக்கு கூடப் பாரு… எங்க அப்பா அம்மா வெளிநாட்ல இருக்காங்க… என் டாக்டர் அம்மா… எனக்காக சம்பாதிக்கலை… அது மாதிரி நீயும் எடுத்துக்கோ…” என அவள் கணவனுக்கு ஆதரவாக வேறு பேசுவாள் கண்மணி
அறியாமை ஒரு வரம்… அது கண்மணிக்கு அப்போது கிடைத்திருக்க… அவள் வாழ்க்கை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி சந்தோசமாகவே காட்டாறு போலவே போய்க் கொண்டிருந்தது…
கண்மணி கேட்ட தினசரி நாளிதழ்களின் பெயர் சந்தேகத்தை பெயர் சந்தேகத்தை அந்தப் பெரியவர்
”தினத்தந்தி…. தினமலர்… “ என வாசித்தபடி… இது என்ன… ‘தி…ன… ம…” அடுத்து என்ன கண்மணி அடுத்த சந்தேகத்தைக் கேட்க ஆரம்பிக்க…
“அதுவா கண்ணு… ம… க்கு அப்புறம் ‘ணி’ உன் பேர்ல வருது பாரு,,,”
”அட ஆமால… கண்… மணி…… தினமணி… இது ‘ணி’ யா… “ என மீண்டும் கேட்டுக் கொண்டவளிடம்… இந்த இதைப் பாரு… ‘சிறுவர் மலர்…” இப்போ படம் பாரு… ஸ்கூல் போன பின்னால நீயே இதைப் படிப்ப… என்ற போதே… அப்போ இன்னொரு புக் இருக்கே அது என்ன… கண்மணி ஞாயிறு வரும் வாரமலரைப் பற்றிக் கேட்க
“அது பெரியவங்க படிக்கிறது… அது இப்போ வேண்டாம்…” என்றவளிடம் தலைஆட்டியவளாக சிறுவர் மலரைக் கையில் ஏந்தினாள்… கண்மணி…
---
அத்தியாம் 91-2 இல் இருந்து சில துணுக்குகள்
கண்மணிக்கோ ஊசி என்றால் மிகவும் பயம்… பொய் சொன்னோம் என்று தெரிந்தால் கிழவியிடம் அடி விழும்…
அடியா… ஊசியா என யோசித்தபடியே வந்தவளுக்கு… ஊசியை விட அடியே மேல் எனத் தோன்றியதுதான்… ஆனால் உடனே சொன்னால் அடி விழுமே… ஊசியும் போடக் கூடாது…. அடியும் வாங்கக் கூடாது… யோசித்தவளுக்கு நல்ல யோசனை தோன்ற…
---
“தெரியல… ஆனால் எங்கம்மாவும் டாக்டரு.. உங்க அப்பா மாதிரியே… ஊசிலாம் போடுவாங்க… ஆனால் வலிக்காம போடுவாங்க தெரியுமா… உங்க அப்பா வலிக்காமல் ஊசி போடுவாங்களா”
“எங்க அப்பாவும் தான்… ஆனால்… உன் அம்மா டாக்டர்னா… நீ ஏன் இப்படி இருக்க…” இவன் தன் சந்தேகத்தைக் கேட்க
--
”மூணு சுழி ‘ண்’தான் வரும் முருகேஷ்… அந்தப் பாப்பா சொல்றது கரெக்ட்தான்…” எனக் கண்மணிக்குச் சப்போர்ட் செய்ய… கண்மணிக்கு இப்போது பெருமை அவள் கண்ணில் வந்திருக்க… அதே பெருமையோடு முருகேஷையும் பார்த்தாள்…
---
“அப்டிலாம் போக முடியாதுப்பா… அன்னைக்கு இடியாப்பம் சாப்பிட விட்டியா நீ… அதுக்கு பதில் சொல்லனும்ல…” என அவன் கைகளை முறுக்கியவளை… அதிர்ச்சியாக அந்தச் சிறுவன் பார்க்க
---
“டேய்… ஜெகதேவ்… இந்த ஃப்ளேம்ஸ் கேள்விப்பட்ருக்கியா… அது மாதிரி எங்களுக்கும் கோட் வேர்ட் இருக்கு… அது என்னனா எங்க கண்மணிக்கு இந்த வடநாட்டு எழுத்துல பேர் வந்தா அலர்ஜி… அந்த ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப நாளைக்கு…”
எனும் போதே கண்மணி
“என்ன ரொம்ப நாள் ஒரே நாள்ல ஃப்ரெண்ட்ஷிப் கவுந்துரும்… கெளம்பு கெளம்பு…” என்று கண்மணி அவனை அதட்டி அனுப்பி வைத்தவளாக
--
அதுமட்டும் இல்லை… இந்த தடவை தான்… இப்படி ஒரு காம்போ… பையன் பொண்ணுனு… சிவன் சக்தி மாதிரி மாஸ் காட்டனும்… “
முன்னால் விழுந்திருந்த இரட்டைச் சடையைப் பின்னால் தூக்கிப் போட்டவள்
---
“சிவா மேலயே கை வைச்சுட்டேல… உனக்கு இருக்கு…” என சிவா மிரட்ட ஆரம்பித்த போதே
--
“அப்டியா… சவால்ல ஜெயிக்கிறதுலாம் இருக்கட்டும்... நான் நல்ல பேரை உனக்கு சஜஸ்ட் பண்றேன்… அதைப் பற்றி மட்டும் யோசிச்சுட்டு இரு… இனி நீ அமுதினி இல்லை நஞ்சுனி நல்லா இருக்கானு யோசிச்சுட்டே இரு… டேய் வாங்கடா போகலாம்” எனக் கண்மணி எழும்பி இருக்க…
---
கண்மணியின் அவமானப்பட்ட கண்மணியோ பழிவாங்கும் படலத்தில் இறங்கியிருந்தாள்….
“பிரபாவதியோட டிவிஎஸ் ஃபிஃப்டிக்கு இனி பிரேக் கொடுத்திற வேண்டியதுதான் அதோட ப்ரேக்க புடுங்கி…” என வாகனங்கள் நிறுத்தி இருந்த இடத்திற்கு வர…
---
“ஏன் கந்தம்மாள்… உன் பிள்ளைக்கு என்ன ஆச்சு…. முடியாமல் ஐசியூ ல இருக்கான்னுதானே சொல்லிருக்காங்க… போய்ப் பார்க்கிறதை விட்டுட்டு ஏன் இப்படி அழுது ஒப்பாரி வச்சுட்டு இருக்க”
”ஏம்மா கண்மணி… கெளம்பு… கந்தம்மாளைக் கூட்டிட்டு கெளம்பு” என ஒரு ஆட்டோவைப் பிடித்து அனுப்பி இருக்க
Ssssappa enna solla
Very emotional and