அத்தியாயம் 89-3
”குணா ஹாஸ்பிட்டல்…”
கிருத்திகாவுக்கு நோயாளிகளை பார்க்கும் நேரம் முடிந்திருக்க… ஓய்வாக தன் அறையிக் அமர்ந்தபோதே… பவித்ராவின் முகம் வந்து போக…
“என்ன அம்மணி முகம் காலையில இருந்து டல்லடிச்சுட்டு இருக்கு…. என்னன்னு கேட்டுட்டு வருவோம்” என தன் அறையில் இருந்து எழுந்தவளாக பவித்ராவின் அறைக்குச் செல்ல
பவித்ராவும் அவளது அறையில்தான் இருந்தாள்… இப்போதும் தளர்வாக அமர்ந்திருந்தவள்… எதையோ எழுதிக் கொண்டிருந்தவள்… இவளைப் பார்த்ததும் அந்த நோட்டை மூடி வைத்து விட்டு கிருத்திகாவைப் பார்த்து புன்னகைக்க…
”என்னது அது… என்னைப் பார்த்த உடனே வேகமா மூட்ற…” என்றபடி வேகமாக அந்த நோட்டை எடுக்க… பவித்ராவும் அதைத் தடுக்கவில்லை…
பவித்ரா-ராஜ் காதல் கடிதங்களிலும் அலைபேசி உரையாடல்களிலுமே கிருத்திகா இடையே வருவாள்… இது என்ன பெரிய விசயமா அவளுக்கு…
நோட்டின் பக்கங்களைத் திருப்பியபடியே
“ஹ்ம்ம்… கண்மணி… பேர்லாம் வச்சுட்ட போல… நீ ஏண்டி ஜெண்டரை பார்த்த… சர்ப்ரைஸா இருந்தால் தான் இதெல்லாம் சூப்பரா இருக்கும்… சரி விடு.. டாக்ரா போய்ட்ட… நீயும் என்ன பண்ணுவ…“ என்று சலித்தவளாக… திடீரென்று அதிருந்தவளாக
”ஏய்… என்னடி… ட்ராலாம் பண்ணி வச்சுருக்க… தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்கிற… வயித்துல இருக்கிற குழந்தைக்கு உருவம்லாம் கொடுக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க பவி… ” கிருத்திகா பேசிக் கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து அந்த நோட்டைப் பறித்துப் பத்திரப்படுத்தியவள்…
“என்னோட கற்பனை… இதுல என்ன இருக்கு… ஏன் வரஞ்சா என்ன… நான் என்னோட ஒவ்வொரு விசயத்தையும் என் பொண்ணோட கம்பேர் பண்ணி வரஞ்சுருக்கேன்… இன்னும் வரைவேன்” என்றவளை என்னவென்று சொல்ல…
”என்னமோ பண்ணு… நீயெல்லா அடங்குற ஆளா..” என்ற போதே…
“கிருத்தி…” என்றவளின் குரலில் கிருத்திகாவும் தோழியைப் பார்க்க…
“அம்மாவைப் பார்க்கனும் போல இருக்கு… அப்பாவையும் தான்… கன்சீவ் ஆனதுல இருந்தே அவங்களைப் பார்க்கனும் போல இருந்தது… ஆனால் இப்போ எனக்கு பொண்ணுனு தெரிந்த பின்னால இன்னும் ஆசையா இருக்குடி… இப்படித்தானே என்னையும் ஆசையோட கனவுகளோட வளர்த்துருப்பாங்க என் பொண்ணை நான் எப்படி வளர்க்கனும்னு ஆசைப்பட்றேனோ அதே மாதிரிதான் என்னை வளர்த்துருப்பாங்க…” என்ற போதே அவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் முத்துக்களை அந்த மேஜை வேதனைகளின் அழகான அடையாளங்களாக நிரப்பிக் கொண்டிருக்க
“ப்ச்ச்… ஆனால் ராஜ் மாதிரி மாப்பிள்ளை எல்லாம் கோடில ஒருத்தவங்களுக்குத்தான் கிடைக்கும்… அது ஏன் அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க…” என்ற தோழியிடம்… மேஜையில் இருந்த பவித்ராவின் அடையாள அட்டையைக் காட்டிய கிருத்திகா
“N.பவித்ரா… ஆனால் அந்த ‘N’ நட்ராஜ் பொண்டாட்டி… நாராயணன் மகள்… ரெண்டுல ஏதாவது ஒரு ஜாய்ஸ்தான்… இனி வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது ” என்று பவித்ராவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… மருது அறை வாசலில் வந்து நின்றிருக்க… பவித்ரா அவனை உள்ளே அழைத்திருக்க… அவனும் உள்ளே வந்தவனாக…
“அக்கா… நீ மத்தியானத்துக்கு மேல லீவ் போட்ருக்கியாமே… அண்ணா சொன்னுச்சு… அதுக்கு ஏதோ வேலை வந்துருச்சாம்… யாரையோ பார்க்கப் போகனும்னு கிளம்பிருச்சு… என்னை வந்து உன்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்லுச்சு” என்றவன்…
“சமைச்சும் எடுத்துட்டு வந்துட்டேன்… கிருத்திக்கா… உனக்கு நெத்திலி மீன் குழம்பு ரொம்ப பிடிக்குமாமே… உனக்குக் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி அண்ணா சொல்லி விட்டுச்சு” எனும் போதே
“ராஜ் மாம்ஸுக்கு என் மேல இருக்கிற பாசமோ பாசம்… அக்கறையோ அக்கறை… அது வேற லெவல்டி பவி்… கன்சீவா இருக்கிற பொண்டாட்டி மேல கூட அக்கறை இல்லை… ஆனா பாரு என் மேல எவ்ளோ அக்கறை” கிருத்திகா நீட்டு முழங்க… கையில் கிடைத்த மாத்திரை அடங்கிய அட்டைப் பெட்டியை அவளை நோக்கி எறிந்தவளாக
“ஒழுங்கா போயிரு… கொன்னுருவேன்… போய் நல்லா கொட்டிக்கோ… என் வாய்ல ஏதாவது வந்துறப்போகுது… ட்யூட்டி டைம்ல கெட்ட வார்த்தைலாம் பேசக் கூடாதுனு… நானே எனக்கு ஒரு கொள்கை வச்சுருக்கேன்… இல்லை என் புருசண்ட்ட கத்து வச்சுருக்கிற கெட்ட வார்த்தை எல்லாம் இறக்கி விட்ருந்திருப்பேன்… ” கடுப்பாக பவித்ரா அவளைத் திட்ட ஆரம்பித்திருக்க… கிருத்திகா இன்னும் உற்சாகமாக
“நல்ல கொள்கை… வச்சுக்கோ.. வச்சுக்கோ… என்ன பெருசா கெட்ட வார்த்தை… நானும் என் மாம்ஸ்கிட்ட போய்க் கேட்டுட்டு வந்து திட்டப் போறேன்… போடி… ”
“டேய் மருது நீ என் பாக்ஸைக் கொடு… எனக்கு இப்பவே பசிக்க ஆரம்பிச்சுருச்சு” என்றபடி மருதுவிடமிருந்து தனக்கான கூடையை வாங்கிக் கொள்ள
மருது இருவரையும் பார்த்து சிரித்தபடியே… அருகில் இருந்த மேஜையில் பவித்ராவுக்கு உணவை எடுத்து பறிமாற ஆரம்பித்திருக்க…
“இவளை என்னடா பண்றது… அடங்க மாட்றாளே… “ என மருதுவிடம் குறை கூறியவளிடம்
“உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லை… டைம் ஆகிருச்சு…. சாப்பிட வாக்கா…” என்றவனிடம் பவித்ரா ஏதோ யோசித்தபடியே இருக்க…
“என்னக்கா யோசிச்சுட்டு இருக்க… ப்ச்ச்… வா… சூடா இருக்கு சாப்பாடு” என அவளை அழைத்த போதே
“மருது... என் அப்பா வீட்டுக்கு போய்ட்டு... அப்டியே... வீட்டுக்கு போகலாம்” என்ற பவித்ராவிடம் மருதும் தலையாட்டியபடி
“நீ பர்ஸ்ட் சாப்பிடுக்கா... உனக்காக இல்லைனாலும்... கண்மணி பாப்பாவுக்காக” என்றவனிடம் பவித்ரா தலை ஆட்டியபோதே
கிருத்திகா… மருதுவிடம்…
“டேய்… அவதான் குழந்தைக்கு பேர் வைக்கிறேன்… அது இதுன்னு கிறுக்குத்தனம் பண்ணிட்டு இருக்கான்னா… நீயும் அவகூட சேர்ந்துட்டு பேர் சொல்வியா… குழந்தை பிறக்கிற வரை பேர்லாம் வச்சு சொல்லாத… என்ன புரிஞ்சுதா ” என மருதுவை அதட்டியவளாக..
”ஏய்… நீ உங்க வீட்டுக்குப் போறேன்னு ராஜ்கிட்ட சொன்னியா… தேவையில்லாத வேலை எல்லாம் பண்ற… ஏண்டி அவசரப் பட்ற எல்லாத்திலயும்…” என்ற போதே
“நெத்திலி மீன் குழம்பு வந்திருச்சுதானே… கெளம்பு கெளம்பு…. “ என்றவளிடம்
“பவி… அங்கிள் பற்றி நல்லா தெரியும் உனக்கு… எவ்வளவுக்கெவ்வளவு பாசக்காரரோ அவ்ளோ கோபக்காரரும் கூட…”
“என்கிட்ட அவர் கோபமெல்லாம் ஒரு அளவுக்குத்தாண்டி இருக்கும்… நான் பார்த்துக்கிறேன்…” என்று தன் தோழிக்கு பதில் கொடுத்தவள்… அடுத்த சில மணி நேரத்தில் ’பவித்ரா விகாஸி’ன் முன் நின்றிருந்தாள் மருதுவோடு…
---
”பவிம்மா… வாடா வாடா… ” காவலாளி பவித்ராவை வரவேற்றபடி
”அப்பாவும் இல்லை…. அம்மாவும் இல்லை… அர்ஜூன் தம்பி மட்டும் தான் இருக்காரு… ” என்றவன்… இப்போது தயங்கியபடியே
“ஐயா உங்களை உள்ள விடக் கூடாதுன்னு சொல்லிருக்கார்மா… ஆனால் என்னால உங்க முகத்தைப் பார்த்து அப்படி சொல்ல முடியலம்மா… ஏன்மா இப்படி பண்ணுனீங்க…” என்றபோதே
“நான் உன்கிட்ட பெர்மிஷனே கேட்கலை… என்னோட பேர் இந்த வீட்டுக்கு அப்படியே இருக்குதானே… இன்னும் மாறலைதானே… அப்போ என்னையும் யாரும் தடுக்க முடியாது” என்று ஆளுமையோடு உள்ளே நுழைந்தவளை யார் அங்கு தடுக்க முடியும்… அனைவரும் கை கட்டி நின்று வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடிந்தது
ஆனாலும்… பவித்ராவால் மட்டுமே ஒரு எல்லையைத் தாண்டிப் போக முடிந்தது… மருதுவை தடுத்து நிறுத்தி இருந்தனர் அங்கிருந்த ஆட்கள்…
“மருது நீ இங்கேயே இரு… சாரிடா இதுக்கு மேல எல்லாரும் வர முடியாது… இந்த வீட்டோட ரூல் அது… நீ வெயிட் பண்ணு.. யார் உன்னை மிரட்டினாலும்… மிரட்ட மாட்டாங்க…. ஆனாலும் நான் பார்த்துக்கிறேன்…” என்ற போதே
“நீ போக்கா… நான் பார்த்துக்கிறேன்…” என்றவன்…
“ஆனால் யக்கா.. எம்மாம் பெரிய மாளிகை… எத்தனை வேலையாள்… பத்தாதுக்கு அடி ஆளுங்க வேற… வசதி… ஆடம்பரம்… வேற லெவல்ல இருக்குக்கா… சினிமாலதான் இதெல்லாம் பார்த்துருக்கேன் நான்… இவ்ளோ பெரிய வாழ்க்கையை விட்டுட்டா… அண்ணா பின்னால வந்துட்ட… அண்ணா ’பவி பவி’ ன்னு உன் பின்னால சும்மா சுத்தலைனு இப்போ புரியுது… ஆனால் நீ சவால் விட்டதை நினைக்கும் போது இப்போ எனக்கே தல சுத்துது… இந்த அளவுக்குலாம் நம்ம அண்ணன் ஏழு ஜென்மம் எடுத்தாலும் சம்பாதிக்க முடியாது” என்றவனிடம்
“டேய் உன் அண்ணனைப் பற்றி தெரியாது… ஒரு நாள் பாரு… கண்டிப்பா… இதை விட உன் அண்ணன் சம்பாதிச்சுக் காட்டுவார்… உங்க அண்ணாக்கு திறமை இருக்கு… அதை எப்படி யூஸ் பண்றதுன்னு தெரியலை… அதுக்கு சரியான ஆள் கிடைக்கலை… ஆனால் இனி அந்தக் கவலை இல்லை… நான் வந்துட்டேன்லச… அவரை எங்க கொண்டு போய் நிறுத்துறேன்னு பாரு.. அப்புறம் நீ சொல்வ… என் ராஜைப் பற்றி…” என்றவளின் கண்களில்.. அவளது நம்பிக்கை… தன் கணவனின் எதிர்கால நிகழ்வுகளை நட்சத்திரமாக கொட்டி மின்ன வைக்க ஆரம்பித்திருக்க… இருந்தும் அதில் மூழ்கி விடாமல்
“சரி… சரி… நான் சீக்கிரம் வந்துறேன்” என்றபடி தன் பிறந்த வீட்டுக்குள் சென்றாள்..
---
”அர்ஜூனன்… ’ரிஷி’ போல ’சந்நியாச’ துறவறம் பூண்டு… சுபத்ராவோட மாளிகைக்குச் செல்கின்றான்…. துறவியாகச் சென்ற அர்ஜூனன் மேல சுபத்திராவுக்கு மெல்ல மெல்ல பிரியம் வளர்கிறது… ஆனால் பலராமன் துரியோதனுக்கு சுபத்ராவை திருமணம் செய்து கொடுக்க வாக்குக் கொடுத்திருக்க… கிருஷ்ணரா பலராமரா வென்றது யார்…”
அர்ஜூனனுக்கு மகாபாரத உபந்நியாசம் வகுப்பு நடந்து கொண்டிருக்க… மகாபாரதக் கதை சொல்லிக் கொண்டிருந்த ஆசிரியர் பவித்ராவைப் பார்த்ததும் சட்டென்று கதையை நிறுத்தி விட… அர்ஜூன் வேகமாகத் திரும்பிப் பார்க்க… அங்கு பவித்ரா நின்றிருக்க
”அத்தை” என வேகமாக ஓடி வந்து அவளைக் கட்டிக் கொள்ள… அவனைத் தூக்கிக் தட்டாமலைச் சுற்றிய்வளாக பின் உச்சி முகர்ந்தவள்…
“அஜுக் குட்டி என்ன பண்றாங்க…”
“மகாபாரதக் கதை… அர்ஜூனன் சுபத்ரா பகுதி… விளக்கிட்டு இருக்கா… நானும் அர்ஜூன் மாதிரிதானே அத்தை… பெரிய பலசாலி… “ எனக் புஜங்களை உயர்த்திக் கேட்க…
“அதேடா… அந்த அர்ஜூனை விட நீ பெரிய ஆளு… ஆனால் பீமா தானே பலசாலி…“ என்று அவனது கன்னத்தில் முத்தமிட்ட போதே… அர்ஜூன் குழப்பத்தில் யோசனைக்குப் போயிருக்க
“மாமா… நாளைக்கு க்ளாஸ் கண்டினுயூ பண்ணிக்கோங்களேன்… “ என்று அர்ஜூனை தன்னோடு அழைத்துச் சென்று தன் மடியிலேயே வைத்துக் கொண்டவளாக….
“என்னடா மெலிஞ்சு போய்ட்ட… கொழுக் மொழுக் கன்னமெல்லாம் என் அஜூக் குட்டிக்கு காணாமல் போச்சே… சாப்பிடறதே இல்லையா… இல்லை என் அஜூக் குட்டி பெரிய பையன் ஆகிட்டாங்களா… அடப் பாருடா… என் செல்லக் குட்டிக்கு ஆர்ம்ஸ்லாம் வந்துருச்சா” எனக் கொஞ்சியபடியே…. அந்த வீட்டை சுற்றி பார்வையை ஓடவிட்டவளாக
“தாத்தா பாட்டிலாம் எங்கடா… உன்னை அமெரிக்கா போக விடலையா இந்த நாராயணனும் வைதேகியும்… சீக்கிரமா உனக்கு ரிலீஸ் கொடுக்கிறேன் இவங்க கிட்ட இருந்து… “என்றவளிடம்…
“இல்லை நான் தாத்தா பாட்டிக்கிட்டயே இருக்கேன்… அம்மா அப்பாலாம் அங்கேயே இருக்கட்டும்… பாட்டி அழுதுட்டே இருக்காங்க… நான் இருந்தால் மட்டும் தான் ஏதோ பேசுறாங்க… நீ ஏன் இங்க வர மாட்ற… பிரபா பாட்டி வீட்டு மாட்டுப் பொண்ணெல்லாம் அவா புக்காத்து விட்ல இருந்து அவா வீட்டுக்கு போகத்தானே செய்றா… நீ மட்டும் ஏன் வர மாட்ற…” அர்ஜூன் கேள்வி மழையாக பொழிய ஆரம்பித்திருக்க
“டேய் டேய் பெரிய மனுசா… இவ்ளோ கேள்வி கேட்டேனா… நான் எதுக்கு பதில் சொல்றது… நீ பெரிய பையன் ஆனா இதுக்கெல்லாம் தானா பதில் கிடைக்கும்… இப்போ சொல்லு… பாட்டி எங்க… தாத்தா எங்க… “ எனும் போதே
“பாட்டி… டெல்லி போயிருக்கா… பிரபா பாட்டி வீட்ல விஷேசம்… பெரிய பாட்டி தாத்தாக்கு சதாபிஷேக ஃபங்ஷன்…. “ அர்ஜூன் சொல்ல…. பவித்ராவின் முகம் சட்டென்று தொங்கிப் போக… இருந்தும் சமாளித்தவளாக
“டேய் உங்க மாமா நேத்து, உன்னை… அப்பாவைலாம் கோவில்ல பார்த்து பேசினேன்னு சொன்னாரு… எப்போ போனாங்க… உன்னை மட்டும் விட்டுட்டு போயிட்டாங்களா என்ன” பவித்ராவை முடிக்க விட வில்லை அர்ஜூன்
“அந்த ரவுடிலாம்… என் மாமா இல்லை… அவர் பேசுறதெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை… அவரை என் மாமான்னு சொல்லாதிங்கோ” பட்டென்று அர்ஜூனிடமிருந்து வார்த்தைகள் வந்திருக்க
பவித்ராவின் முகம் கவலையில் சுருங்கியதுதான்… அதற்காக அவனிடம் நட்ராஜைப் பற்றி விளக்கவா முடியும்… இல்லை புரிந்து கொள்ளும் வயதா என்ன அர்ஜூனுக்கு…
நட்ராஜைப் பற்றிய பேச்சைத் தவிர்த்தவளாக….
“அதெல்லாம் விடு… இப்போ பாரதக் கதை சொல்லிக் கொடுத்தார்ல… என்ன கத்துண்ட…” என அவனிடம் பேச்சை திசை மாற்றியவளுக்கு உள்ளுக்குள் தன் அன்னையை பார்க்க முடியாத கவலை வேறு சேர்ந்து கொண்டது…
வைதேகி மட்டும் ஒருவாரம் முன்பே டெல்லி விசேசத்துக்குச் சென்று விட்டதாகவும்… இன்னும் ஒரு வாரம் ஆகும் சென்னை வருவதற்கு என்பதையும் அர்ஜூன் சொல்லி இருந்திருக்க
பவித்ராவுக்கு அழுகையே வரும் போல இருந்ததுதான் இருந்தாலும்… தன்னையே தேற்றிக் கொண்டவளாக… அர்ஜூனிடம் பேசிக் கொண்டிருந்த போதே…
“வெளிய போ முதல்ல”
நாராயணனின் சிம்மக் குரல் கர்ஜனையோடு அந்த அறை முழுக்க பட்டு எதிரொலிக்க…. அவ்வளவு ஆக்ரோசமாக கத்தியதோடு அல்லாமல் வேகமாக மகளின் அருகே வந்தவர்… அர்ஜூனை அவளிடமிருந்து இழுத்து… தன் புறம் கொண்டு வந்திருக்க…
அர்ஜூன் பயந்தபடி… அங்கிருந்து ஓடிச் சென்று…. அந்த வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்ளும் காவேரி அம்மாவின் பின் சென்று நின்று கொள்ள…
”அப்பா…” என தயங்கி பவித்ரா எழும் போதே…. வேகமாக அவளின் கைப் பிடித்து இழுத்து நிறுத்தியவர்
“அப்பான்னு சொல்லாத… என் பொண்ணா வந்திருக்கியா… அப்போ அப்பான்னு சொல்லு” எனும்போதே பவித்ரா
“நான் பவித்ரா நட்ராஜா மட்டும் தான் இனி இருக்க முடியும்… இது ஏன்ப்பா உங்களுக்குப் புரிய…” எனும் போதே… அதற்கு மேல் நாராயணன் அவளைப் பேச விடவில்லை… தரதரவென அவளை வெளியே இழுத்து வந்தவர்… வாசல் படியில் நிறுத்தி வைத்தவராக…
“இவளை உள்ள விட்டது… யார் யாரெல்லாம் இவளை உள்ளே விட்டீங்களோ… யார்க்கும் இனி இங்க வேலை கிடையாது… என் பொண்ணை உள்ள விடலாம்… கண்டவன் பொண்டாட்டியை உள்ள விட இங்க யாருக்கு சம்பளம் கொடுக்கலை” என்ற போதே
“டாடி… நான் சொல்றதைக் கேளுங்க… யாரும் என்னை விடலை… நானா தான் வந்தேன் டாடி… ப்ளீஸ்… எனக்கு உரிமை இல்லையா… நான் இங்க வரக் கூடாதா” பவித்ராவின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்திருந்தது…
அத்தனை வேலையாட்களும்… அங்கு வந்து சேர்ந்திருக்க… இதற்கிடையே மருதுவும் பவித்ராவை நோக்கி வந்திருக்க…
“இங்க யாரும் நிற்க கூடாது… எல்லோரும் அவங்கவங்க இடத்துக்குப் போங்க” என்ற நாராயணனின் ஒரு வார்த்தையில் அடுத்த நொடியே மற்ற மொத்த கூட்டமும் கலைந்திருந்தது அந்த இடத்தை விட்டு… அர்ஜூனும் மருதுவும் மட்டுமே அங்கு…
நாராயணன் இப்போது… மகளைப் பார்த்து நக்கல் பாவனையில்
”உரிமையா… முதல்ல இதைச் சொல்லு… உன்னை யாரு... இங்க வரச் சொன்னது... அவன் தான் முக்கியம்னு போனேல்ல... என்கிட்டயே சவால் விட்டதானே....” என பவித்ராவின் கழுத்தைப் பிடித்து நாராயணன் தள்ளிவிட... படிகளில் தடுமாறியபடியே பவித்ரா விழப் போக…
”அத்தை....” கத்தியபடியே அர்ஜூன் வேகமாக ஓடி வந்தவனாக... அவளைத் தாங்கிக் கொண்ட போதே... அந்த ஏழு வயது சிறுவனால் அவளைப் பிடிப்பதற்கு பலமில்லாமல் போக... அவன் கை நழுவியபோதே... வெளியே நின்றிருந்த மருதுவும் வேகமாக ஓடி வந்து பவித்ராவை விழாமல் பிடித்துக் கொள்ள...
அவர்கள் இருவரின் உதவியால் எப்படியோ தன்னை... தன் வயிற்றில் உதித்திருந்த தன் கருவை காப்பாற்றிக் கொண்ட பவித்ரா... இப்போது நடுங்கும் கைகளால் தன் வயிற்றைப் பாதுகாப்பாகப் பிடித்தபடியே... தன் தந்தையை கண்களில் வழிந்த நீரோடு பார்த்தபடி நிற்க
“வாட்ச்மேன்... இனி இவளை உள்ள விட்ட... ” எனக் கர்ஜித்தார் நாராயணன்....
“அப்பா.. அம்மா இருந்தாங்கன்னா… இப்படி பண்ணிருப்பாங்களா…” அவமானப்பட்ட அப்போதும் பவித்ரா அழுதபடி கேட்க…
“ஹ்ம்ம்ம்… கண்டிப்பா பண்ணியிருப்பா… என் பொண்ணுன்றதை நீ வேணும்னா மறந்திருக்கலாம்… என் பொண்டாட்டின்றதை அவ எப்போதுமே மறக்க மாட்டாள்.. இதுநாள் வரை என்னை மீறி உன்னை வந்து பார்த்திருப்பாளா என்ன… அவ வயித்துல பிறந்து… எப்படி இப்படி ஒரு துரோகியா ஆன… என்னை விடு ஒத்தைப் பொண்ணுனு அவ உன்னை எப்படி வளர்த்தா… அவளைக் கூட மறந்துட்டு அந்த பொறுக்கிதான் முக்கியம்னு போனதானே… இப்போ என்ன அம்மா.. பாசம்னு… நானாவது கழுத்தைப் பிடிச்சுதான் தள்றேன்.. அவ உன்னைக் கொன்னே போட்ருப்பா” என்ற போது நாராயண குருக்களுக்குமே குரல் தடுமாற…
“ப்பா… நீங்க அம்மாவைப் பற்றி அப்டி சொல்லாதீங்க… நான் சொல்லப் போற விசயத்துக்கு… கண்டிப்பா அம்மா இருந்திருந்தால் என்னைக் கொண்டாடிருப்பாங்க” மனதில் எங்கோ சிறு ஓரத்தில் நம்பிக்கை வந்திருக்க… அந்த நம்பிக்கை ஒரு துணிவும் கொடுத்திருக்க… கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே தன் அப்பாவிடம் பேச ஆரம்பித்தாள் பவித்ராவும்…
“அப்படி என்ன பெருமையான விசயம் நீ பண்ணிட்டம்மா… எங்க என்கிட்டயும் சொல்லு பார்ப்போம்… ” நாராயணன் குரலில் ஏகத்தும் நக்கல் வழிந்தோட
அமைதியாக தலை குனிந்து நின்றாள் பவித்ரா… என்னதான் தான் கர்ப்பமான விசயம்… சந்தோசமான விசயம் என்றாலும்… தந்தை முன் சொல்ல தயக்கமாக இருந்ததுதான் பவித்ராவுக்குமே…
“யோவ் சாமி… அவங்க புள்ளத்தாச்சியா இருக்காங்க… உங்களையும் உங்க வீட்டுக்காரம்மாவையும் பார்க்க எத்தனை நாளா ஏங்கிட்டு இருக்காங்க தெரியுமா… இப்படி ஆசையோட உங்களைப் பார்க்க வந்தா இப்படியா பண்ணுவ நீ…” எனும் போதே… நாராயணனின் பார்வை மகளின் வயிற்றில் பதிய… அடுத்த நொடி அவர் முகம் அவமானத்தில் சுருங்கி.. அதே வேகத்தில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்திருந்தது…. அவரின் மொத்த ஆக்ரோஷமும்.. துவேச உணர்ச்சியும் பவித்ராவின் வயிற்றில் இருந்த கருவில் மையம் கொள்ள ஆரம்பித்திருந்தது
அதே நேரம் எங்கிருந்துதான் ஆட்கள் வந்தனரோ…
“எங்க வந்து யார்கிட்ட கை நீட்டி பேசுற..” என நாராயணனை எதிர்த்துப் பேசிய மருதுவை அடி வெளுத்தெடுக்க ஆரம்பித்திருந்திருக்க
“விடுங்க… ஏய் விடுங்க.. சின்னப் பையண்ட்ட உங்க வீரத்தைக் காட்டுவீங்களா என்ன” எனப் பவித்ரா மருதுவின் அருகே போக நினைத்த போதே…
நாராயணன் பார்வையாலே தன் அடி ஆட்களுக்கு சமிக்ஞை செய்தவராக… பவித்ராவின் அருகே வந்து மகளைக் கண்ணீரோடு பார்க்க… அதை எதிர்பார்க்காத பவித்ராவும்
“அப்பா” எனப் அழ ஆரம்பித்திருக்க…
“முதல்லயே இதை சொல்லிருக்கலாம்லடா… ப்ச்ச்… ஏண்டா… உள்ள வாடா நீ” என அழைக்க… பவித்ராவின் முகமெங்கும் சந்தோசத்தில் பரவசம் வந்திருக்க…
“நீ வாடா… உன் ரூம்ல போய் இரு… அம்மாவை இன்னைக்கே வரச் சொல்றேன்… சென்னைக்கு வர ஃப்ளைட்ல இப்போதே டிக்கெட் போடச் சொல்றேன்…” என்று மகளை உச்சி முகர்ந்தவராக தோளோடு தோளாக அணைத்தபடி… அவளை வீட்டுக்குள் அழைத்துச் செல்ல...
“ப்பா.. மருது பாவம்… தெரியாமல் பேசிட்டான்… விடச் சொல்லுங்க“ எனப் பவித்ரா அவரிடம் கூறிய போதே
”அப்பாவை எதிர்த்துப் பேசினால் என்ன ஆகும்னு அவனுக்குத் தெரியனும் தானே… லைட்டா ரெண்டு தட்டு தட்டிட்டு அனுப்பி வச்சுருவாங்க… ஒண்ணும் பண்ண மாட்டாங்க.. நீ போடா…” எனும் போதே பவித்ரா இப்போதும் தந்தையிடம் பரிதாபப் பார்வை பார்க்க
“சரிடா… விடச் சொல்றேன்… போதுமா…” என்றவர்… அங்கிருந்த ஆட்களிடம் உடனே மருதுவை விடச் சொல்ல.. பவித்ராவும் தந்தையை சந்தோசத்தோடு பார்க்க… மகளிடம் சமாதானமாகப் பேசியபடியே உள்ளே கூட்டிக் கொண்டு வந்தவர்… அவளை அறையில் அமர வைத்து விட்டு… வெளியே வந்தவராக…
‘”உடனடியா… நர்சை அனுப்புங்க… என் பொண்ணோட வயித்துல இருக்கிற அவமானச் சின்னத்தை உடனே அப்புறப்படுத்தனும்…. அது இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் நொடியும்… என் வம்சத்துக்கே அசிங்கம்… சீக்கிரம் வரச் சொல்லுங்க” என்று தொலைபேசியை வைத்து முடித்து திரும்ப… அவரின் வார்த்தைகளைக் கேட்டபடி பின்னே நின்றிருந்தாள்… அவர் மகள் பவித்ரா பத்ரகாளியாக…
நாராயணனோ… அதற்கெல்லாம் கொஞ்சம் கூட பயப்படாமல்
“உனக்கு ரெண்டு வருசம் அவகாசம் கொடுத்தது எதுக்கு… கண்டிப்பா திரும்ப வருவேனுதான்… அப்படி நீ திரும்ப வந்தால் சடங்கு சாங்கியம்லாம் பண்ணி அவனோட வாழ்ந்த அசிங்கத்தை மாத்திருவேன்ற நம்பிக்கையோட இருந்தேன்… என் பொண்ணா மட்டும் திரும்ப வருவேன்னுதான் காத்துட்டு இருந்தேன்… ஆனால் இந்த மாதிரி அசிங்கத்தையும் சேர்த்து எடுத்துட்டு வருவேன்னு நினைக்கலையேம்மா… எவனோட அசிங்கமோ… இந்த நாராயனன் பொண்ணோட வயித்துலயா… இது என்னோட அவமானச் சின்னம்… அதை ஒருகாலும் விடமாட்டேன்…” என மகளைத் தன்புறம் இழுக்க… பவித்ரா வேகமாக அவரை விட்டு வெளியே போக நினைக்க… அவளைப் போக விடாமல் அங்கிருந்த அடி ஆட்கள் மறைத்து நிற்க
பவித்ராவிகஸுக்கு வந்த தன் முட்டாள் தனத்தை அப்போதுதான் உணர்ந்திருந்தாள் பவித்ரா…
அதே நேரம் மருது கண்டிப்பாக நட்ராஜிடம் சொல்லி இருப்பான்… தன் கணவன் கண்டிப்பாக வந்து விடுவான்… தன்னைக் கூட்டிச் செல்வான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது…
அந்த தைரியத்தில் பவித்ரா ஆவேசம் எல்லாம் படாமல் அமைதியாக அமர்ந்தபடி… தன் தந்தையைப் பார்க்க.. அதே நேரம்… அந்தச் செவிலிப்பெண் உள்ளே வந்திருக்க… விபரீதத்தின் உச்சக் கட்டம் பவித்ராவுக்கு மீண்டும் புரிந்திருக்க… அவளின் மொத்த அமைதியும் குலைந்திருந்தது…
“அப்பா… என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க… என் குழந்தையை அழிக்க நினச்சீங்க… யாரோட வாரிசை யார் அழிக்க… என்னை விட்ருங்க.. என் குழந்தைக்கு ஏதாவது ஆச்சு…” என தந்தையை விரல் நீட்டி எச்சரித்துக் கொண்டிருக்கும் போதே… அந்த செவிலிப்பெண்… மாத்திரையை பிரிக்க ஆரம்பித்திருக்க… தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தவள் பதற ஆரம்பித்திருந்தாள்… அதன் விளைவு… மிரட்டலாகப் பேசிக் கொண்டிருந்தவள்… இப்போதோ கெஞ்ச ஆரம்பித்திருந்தாள்…
“டாடி… ப்ளிஸ் டாடி… மிகப்பெரிய பாதகம் பண்ண நினைக்கிறீங்க… ஏழேழு ஜென்மத்துக்கும் இது உங்களைத் தொடரும் டாடி… எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பண்ணலாமா… ப்ளீஸ்ப்பா… விட்ருங்கப்பா” என அவர் காலில் விழுந்திருக்க….
“இனி உன்னை விட்ற ஐடியா இல்லம்மா… சவாலாவது ஒண்ணாவது…. இனி நீ நாராயணன் பொண்ணு மட்டும் தான்” என்ற போதே… பவித்ரா வேகமாக அங்கிருந்து ஓடியவளாக தன் அறைக்குள் நுழைந்து தன் கதவுகளை பூட்டிக் கொள்ள…
அவள் பின்னே… நாராயணின் ஆட்களும் செல்ல….
“விடுங்க… விடுங்க… எங்க போகப் போறா… இந்த வீட்டை விட்டு இனி வெளிய போக முடியாது…” என்றபடி தன் மகளின் அறையின் முன் சென்றவராக
”பவித்ரா… இந்த ரூம்ல எத்தனை மணி நேரம் இருப்ப… வெளிய வந்தால் அரைமணி நேரத்தில எல்லாம் முடிஞ்சிரும்… நீயே டாக்டர் உனக்கு புதுசா சொல்லனுமா என்ன… உள்ள இருந்தால் பட்டினி கெடந்தே…. உன் டென்சன்லயே அந்தக் கரு அழிஞ்சுரும்… என்ன ஒரு ரெண்டு நாளாகும்… எப்படி இருந்தாலும் அந்த அவமானச்சின்னத்துக்கு சமாதிதான்…. நீ கஷ்டப்பட்ற அதுதான் என் வருத்தம்… புத்திசாலி நீ யோசிச்சுக்கோ” என்றவர்
பின் முன் தோட்டத்துக்கு வந்தவர்… அங்கிருந்த அவர் வீட்டு வேலை ஆட்களிடம்…
“இங்க இருந்து என் பொண்ணு வெளியப் போகக் கூடாது… அதே போல… அந்த பொறுக்கி கண்டிப்பா வருவான்… வந்தால் அடிச்சுத் தூக்கிப் போட்ருங்க..” என்றபடி வெளியே கிளம்பியும் விட்டார்…
இதை எல்லாமே அர்ஜூனும் கவனித்துக் கொண்டே இருந்தான் தான்… என்ன நடக்கிறதென்று அவனுக்கு புரியவும் இல்லை… தன் அறிவைக் கொண்டு தெரிந்து கொள்ளவும் முடியவில்லை அந்த சிறுவனால்…
ஒன்று மட்டும் புரிந்தது… தன் அத்தை கஷ்டப்படுகிறாள் என்பது மட்டுமே அது…
---
மருதுவை பெரிதாக அடிக்கவெல்லாம் இல்லை… இலேசாக இரண்டு தட்டு தட்டி எச்சரிக்கை மட்டும் செய்து… வெளியே அனுப்பி விட்டிருக்க… நேராக நட்ராஜிடம் வந்திருந்தான் மருது…
தான் அடிவாங்கியதெல்லாம் சொல்லாமல்…. மற்றவற்றை சொன்னவன்…
“அண்ணே… அக்கா மாசமாயிருக்குனு தெரிந்த உடனே.. அப்டியே மாறிட்டார்னே… அநேகமா உனக்கு உன் மாமனார்கிட்ட இருந்து மாலை மரியாதைதான் கிடைக்கும்னு நினைக்கிறேன்… ஹ்ம்ம்… அக்கா ஏதோ சாதாரண பணக்காரங்கனு நெனச்சேன்… இவ்ளோ பணக்காரங்களா… நீ பெரிய ஆளுதானே… அப்புறம் அக்கா உன்கிட்ட சொல்லச் சொன்னுச்சு… அதே வந்துருமாம்… இப்போதைக்கு நீ வரவேண்டாம்னு… அவங்க அப்பாகிட்ட உனக்காக பேசுறதுக்கு டைம் வேண்டாமா… நீ பாட்டுக்கு போய் உன் முரட்டுத்தனத்தைக் காமிச்சு எல்லாத்தையும் நாசமாக்கிருவேனுதான் பவி அக்கா சொல்லிருக்கும்…. “ எனச் சொல்ல
நட்ராஜ் யோசனை பாவத்துடன்…
“எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு… ஆனாலும்.. அவ எனக்கு போன் பண்ணியிருப்பாள்ள… ஆயிரம் தடவை இந்த எஸ்டிடி பூத்துக்கு போன் பண்றவ… அவங்க வீட்ல இருந்து பண்ணியிருக்க மாட்டாளா… அந்தாளை வேற நம்புறதா வேண்டாமான்னு தெரியலையே…”
“நம்பனும்ணே நம்பிக்கைதான் வாழ்க்கை… பவித்ரா அக்கா மேல கோபமா பேசினாரு… ஆனா பாருங்க நம்ம கண்மணி பாப்பா ஒரே நிமிசத்துல மாத்திருச்சு பாருங்க… மேஜிக் தான் போங்க.. பாருங்க நம்ம பாப்பாதான் உங்களை உங்க மாமானாரோட சேர்த்து வைக்கப் போகுது” என்ற போதே
“ப்ச்ச்… சும்மா இருடா… நீ வேற… ஏதாவது பேசிகிட்டு… வாசு… நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்… அவ்ளோ ஈஸியா ஏத்துக்கிற ஆளாடா அந்தாளு… எனக்கென்னமோ தப்பா தெரியுது…” என்றவன் அடுத்த நொடி… விருட்டென்று தன் பைக்கை எடுக்க…
வாசு வேகமாக….
“நானும் மருதுவும் வர்றோம் அண்ணே…”
சொன்ன வாசுவை வேண்டாமென்று மறுத்த ராஜ்
“என்ன பண்ணிருவானுங்க… அதே பங்களால இருந்துதான் அவளைக் கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணேன்… எவனால என்ன பண்ண முடிந்தது… இப்போதும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது எவனும்… என் பவி எனக்காக காத்துட்டு இருப்பாடா… அவளுக்கு ஏதோ ஆபத்துனு என் உள்மனசு சொல்லுது…” என்றவன்… பவித்ர விகாசையும் அடைந்திருந்தான்… அடுத்த பத்தாவது நிமிடத்தில்…
அதே போல… தன்னைத் தடுத்து நிறுத்திய ஆட்களையும் ஒரே ஆளாக சமாளித்தவன்…
“பவித்ரா” என சத்தமாக அழைக்க… மாடி அறையில் இருந்த பவித்ரா… அவளது கணவனின் ஒரே குரலில் … அவள் நம்பிக்கையை அவன் எப்போதும் போல காப்பாற்றியிருக்க
“ராஜ்… என் ராஜ் வந்துட்டாரு…” தன் அறையை விட்டு சந்தோசத்தோடு வெளியே வந்திருக்க… மீண்டும் நாராயணனால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்க.. அதிர்ச்சியோடு… அலட்சியத்தோடு அவர் கையைத் தட்டி விட்டபடி வெளியேற நினைத்த போதே…
நட்ராஜ்… காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தான்… நாராயணனோ…
“இப்போது என்ன செய்வாய்… அவன் பலசாலியாக இருக்கலாம்… சட்டத்தின் முன் இனி என்ன செய்வான்…” திமிரான பாவத்தில் மகளைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்க…
பவித்ரா மட்டுமல்ல… கணவனுக்காக கதறிய அவள் குரலும் அந்த மாளிகைக்குள்ளாகவே அடங்கி போய் விட்டிருக்க…
“பணத்துக்காக என் பெண்ணை மயக்கி திருமணம் செய்தவன்… உண்மை தெரிந்து இப்போது அவனோடு வாழ மறுக்கும் தன் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துப் போக நினைக்கின்றான்… கலவரம் செய்கிறான்” என நாராயணன் புகார் கொடுத்திருக்க… பணமும் அதிகாரமும் கை மேலோங்கி இருக்க… வீணான பழி சுமத்தப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தான் நட்ராஜ்…
பவித்ரா நிலை என்ன???… அவள் வயிற்றில் இருந்த அவள் மகளின் நிலை என்ன???…
---
/* பறந்து செல்ல வழியில்லையோ
பருவக்குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி.. ஹஆ..
உன் விழியோடையில் நான் கலந்தேன்
உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு
ராஜாவே யார் மூச்சு
நான் தேடும் செவ்வந்திப்பூ இது..ஹஆ..
ஒரு நாள் பார்த்து அந்தியில்*/
Adapaaavi
Nice
எப்படி பாப்பாவை காப்பாற்ற போறா பவித்ரா. I will expect the next epi. Put soon.
Nice
Nice
Nice
kirthi Sonna pavae pavi yosichi irrukalam ,siss
OMG.. Such a rude idiot Narayanan is..? Jii.. Have to prepare our inner self to read RK's FB.. Much Awaiting jii..
Arumaiyana ud. Kanmaniya vendamnu sonnavaru innaikku uruguraru.
First