அத்தியாயம் 87-2
/* நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பார்வையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே */
அனைத்து வேலைகளும் முடிந்து வீடு திரும்ப கிட்டத்தட்ட இரவு ஏழு மணி ஆகி இருக்க… மற்ற அனைவரும் நீலகண்டன் வீட்டில் இருக்க… ரிஷியோ நீலகண்டன் வீட்டிற்குச் செல்லவில்லை…
மகிளா வீட்டிற்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை விட அவனுக்கு தனிமை தேவைப்பட்டதும் முக்கிய காரணமாக இருக்க… நேரடியாக தங்கள் வீட்டுக்குச் சென்றவன்… வேறு எங்கும் செல்லாமல் நேரடியாகச் சென்றது தன் அறைக்குத்தான்…
தன்அறையின் நடுநாயகமாக நின்று அதைச் சுற்றிப் பார்த்தான் நிதானமாக… வெகுநாட்களுக்குப் பிறகு…
இதோ அந்த அறை… தன் அறை…. தன் இளமைக்காலக் கனவுகளை… குறும்புகளை… சந்தோஷங்களைத் தாங்கிய அறை… இன்றோ அவனுக்கு அந்நியமாகப் பட.. அவனால் அந்த அறையில் நிற்கக் கூட முடியவில்லை…
தன் வீடு… தன் அறை… மீண்டும் சேர்ந்து விட்டேன் என எந்த விதத்திலும் சந்தோசப்பட முடியவில்லை… மனம் துள்ள உற்சாகத்தில் ஆட முடியவில்லை… இதற்குத்தான் வெகுநாளாக ஆசைப்பட்டானா… வெறியோடு அதைத் துரத்தி ஓடிக்கொண்டிருந்தானா… நம்ப முடியவில்லை ரிஷிக்கு…
அதே நேரம் ‘கண்மணி’ இல்லமும் அவன் ஞாபகத்திற்கு வந்தது
’கண்மணி’ இல்லம்… அதன் வெளி வாயில்… தன் முதலாளி வீடு… தான் இருந்த மாடி அறை… தங்கள் குடும்பம் இருந்த வீடு… இவைகள் தான் அவன் கண் முன் வந்து நின்றது… அவன் வாழ்ந்த அவன் இருபது வருட சந்தோஷ வாழ்க்கையின் ஞாபகங்களை… கடந்த ஏழு வருட வைராக்கிய வாழ்க்கை ஞாபகங்கள் புரட்டிப் போட நினைக்கிறது… என்று நினைத்த போதே….
’கண்மணி’ என்பவள் மட்டுமல்ல… ’கண்மணி’ இல்லமும் அவனுக்குள் இரண்டறக் கலந்திருக்கின்றது… என்ற உண்மை அப்போதுதான் அவனுக்கே புரிந்தது… கண்மணி அவனது உயிர் அது என்றோ அவன் உணர்ந்து கொண்டது… ஆனால்
’கண்மணி’ மட்டும் அல்ல… ’கண்மணி’ இல்லத்தையும் அவன் தன் உயிராக நினைத்திருக்கின்றான் என்பதையும் இன்றுதான் உணர்ந்தான் ரிஷி…
’அந்த மாடிப்படி…’ அந்த வீட்டின் உரிமையாளராக கண்மணி அவனோடு உரையாடிய எல்லைக் கோடு…
’அந்த மாடி அறை…’ அவன் மனைவியாக கண்மணி அவனோடு வாசம் செய்த மாளிகை…
’அவனது வீடு..’ அவன் வீட்டு எஜமானியாக கண்மணி வளைய வந்த அரண்மனை…
’கண்மணியின் தந்தை வீடு…’ பைக் நிறுத்தும் இடம்… பூஞ்சோலையாக காட்சி தரும் அந்த வீட்டின் நந்தவனம்… அந்த மாமரத் திண்டு,… கண்மணி இல்லத்தில் எங்கு திரும்பினாலும்…. எந்த இடத்தை நினைத்தாலும் ’கண்மணி’ இல்லம் என்ற பெயரில் மட்டுமல்லாமல்… கண்மணியே அவனுக்கு காட்சி தந்தாள்… அவனை ஆட்சி செய்தாள்…
‘கண்மணி’ இல்லம்… வெறும் இல்லம் மட்டுமல்ல… கண்மணி என்ற பேரரசியின் ஆளுமைக்குட்பட்ட… அவள் கோலோச்சிய சிறு ராஜ்ஜியம்…
கடினப்பட்டு தன்னை ’கண்மணி’ என்ற நினைவில் இருந்து பிரித்தெடுத்து மீட்டெடுத்தவன்… மீண்டும் அறையைப் பார்க்க ஆரம்பித்தான்…
அந்த அறை எங்கும் அவன் புகைப்படங்கள்…
அவன் மட்டும் தனித்து நின்ற புகைப்படங்கள் …. அவன் குடும்பத்தோடு… அதாவது குடும்பம் என்றால்… தனசேகர், இலட்சுமி, ரிதன்யா, ரித்விகா மட்டுமல்ல…. மகிளாவும் சேர்ந்துதான்… அவர்களோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்கள்…
இந்த அறையில் தான் மட்டும் அல்ல… தன் உலகம் … தன் வாழ்க்கை… என நினைக்கும் இவர்களுக்கும் இடம் இருக்க வேண்டும்.. தன்னைச் சுற்றி இருக்க வேண்டும் என மாட்டி வைத்த புகைப்படங்கள்…
அத்தனை புகைப்படங்கள் இருந்தும்… அவனுக்குப் பிடித்த அத்தனை பேர் இருந்தும் அந்த அறை முழுமையற்ற அறையாக, வெறுமையாகக் காட்சி அளித்தாற் போலத் தோன்றியது ரிஷிக்கு. அவனது உலகம் முழுமை பெற… சமனம் பெற… கண்மணி என்ற ஒற்றை மையப் புள்ளி தேவைப்பட்டது.
ஆனால் இங்கு கண்மணி என்பவளை நினைவுபடுத்த… கண்மணியின் சிறு துரும்பு கூட இல்லையே…
யோசித்த போதே… கிருத்திகா அவனிடம் கொடுத்த கண்மணியின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் கொடுத்த ஞாபகம் வர….
“அந்த டைம்ல… அப்பாக்கும் அவங்க கண்மணியோட ஃபோட்டோஸ் அனுப்பினாங்கன்னு சொன்னாங்கள்ள…. அப்போ அவ ஃபோட்டோ அப்பா ரூம்ல இருக்குமா” எண்ணம் வந்த போதே வேக வேகமாக மாடியில் இருந்து இறங்கி தனது தந்தையின் அறைக்குச் சென்றவன்… அங்கு வைத்திருந்த அத்தனை டைரிகளையும்…. காகிதங்களையும்…. தேடிப் பார்க்க… தோல்விதான் கிடைத்தது ரிஷிக்கு… கண்மணியின் புகைப்படங்கள் அந்த அறையில் கிடைக்கவில்லை…
எத்தனையோ பேருக்கு உதவி செய்திருப்பார்… அதை எல்லாம் சேகரித்து வைத்திருப்பாரா என்ன?… அது மட்டுமல்லாமல்… அவர் இறந்தவுடன் தேவையில்லை என எத்தனையோ பொருட்களை… காகிதங்களை…. பத்திரங்களை எல்லாம் அவனே கிழித்து குப்பையில் போட்டானே… அதில் கண்மணியின் புகைப்படமும் இருந்திருக்கலாம்…. ஏதோ குழந்தையின் புகைப்படம் என தூக்கிப் போட்டிருப்போம்… ஏமாற்றத்தோடு ரிஷி தன் அறைக்கு மீண்டும் சென்றான் ரிஷி…
சலனமின்றி தன் அறையை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி…. பின் தன் கட்டிலில் வெகுநாட்களுக்குப் பிறகு அமர்ந்தவன்… அதில் சாய்ந்து படுத்தபடி விட்டத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்த போதே… அந்த அறையின் நிசப்தத்தையும் மீறி மெல்லிய கொலுசு சப்தம்…
ரிஷி தன் தொண்டைக்குழியில் எச்சிலை விழுங்கினான்…. ஏனோ அவனது இதயம் படபடத்தது… ஆயிரம் இல்லையில்லை ஓராயிரம் முறை அவன் கேட்ட கொலுசொலி… மாடிப்படி ஏறும் போதே அவனுக்கு அவனுக்கு சமிக்கை காட்டி வரும் அவன் அத்தை மகள்…. இன்றும் அப்படியே வந்தாள்…
சட்டென்று வேகமாக எழுந்து அமர்ந்த போதே… மகிளா அவன் அறை வாசலில் வந்திருக்க… அவன் கண்கள் பெரிதாக விரிந்தது…
நெற்றியில் ஏனோ வியர்வை பூக்கள் பூத்திருந்தது… அவள் இந்த அறைக்கு வரும்போதெல்லாம் அவள் என்ன கேட்பாள் என நினைத்தப்போதே…
ஆனால் அவற்றை எல்லாம் இப்போது மனதில் கொண்டு வராமல்… சட்டென்று தடை போட்டவன்…
“மகி… நீ… ப்ச்ச்… லூசா நீ..” என்றவன்…
மகிளாவிடம் அடுத்த வார்த்தை பேச ஆரம்பித்த போதே
கையோடு தான் கொண்டு வந்திருந்த பெரிய அட்டைப் பெட்டியை… கீழே வைத்தவளாக
“என்ன ரிஷி மாமா… இவ்ளோ பதட்டம்… இப்போ நீங்க என் பழைய ரிஷி மாமாவும் இல்லை… நான் உங்க மகி டார்லாவும் இல்லை… பாருங்க கதவைக்கூட திறந்துதான் வச்சுட்டு உள்ள வந்திருக்கேன்… இல்லல்ல வாசல்ல நிற்கிறேன்” என அறை வாசலில் நின்றபடியே கைகளைக் கட்டிக் கொண்டு மகிளா… அவனைப் பார்க்க..
ரிஷி இப்போது நிதானத்திற்கு வந்தவனாக… தன்னைத் தானே தனக்குள் திட்டிக் கொண்டவனாக
”ஒண்ணுமில்லை… ஏதோ ஒரு குழப்பத்துல இருந்தேன்னா… திங்க் பண்ணிட்டு இருந்தேன்னா… அதுதான்…. சரி அதை விடு…. ஏன் அங்கேயே நிற்கிற… உள்ள வா… என்ன விசயம்… “ என அவளை வரவேற்று விசாரித்தபடி… இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டவனாக… கட்டிலில் அமர்ந்தான் ரிஷி…
“ஒண்ணுமில்லை… காலையில வீடு க்ளீன் பண்ணினப்போ என் போட்டோஸ் இன்னும் இந்த ரூம்ல இருந்ததை பார்த்தேன்…. அப்போ எடுக்க முடியல… அதுதான் இப்போ எடுக்க வந்தேன்” என்றபடியே… அவள் பார்வை அந்தப் புகைப்படங்களில் பதிந்திருக்க… அவள் அழ நினைக்கவில்லைதான்… ஆனாலும் அவள் கண்களிலோ கண்ணீர்..
அவளைக் கண்டு கொள்ளாமல்… ரிஷி… இப்போது எழுந்தவனாக…
”நானே அதை எல்லாம் எடுக்கலாம்னுதான் இருந்தேன் மகி… அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்…. நல்ல வேளை நீயே வந்துட்ட… இரு எடுத்து தர்றேன்”
மாட்டியிருந்த புகைப்படங்களில் மகிளா மட்டும் தனித்திருந்த புகைப்படம்… அவர்கல் இருவரும் சேர்ந்திருந்த புகைப்படம்… எல்லாம் எடுத்துக் கொடுத்தவன்… அவன் குடும்பத்துடன் மகிளாவும் சேர்ந்திருந்த புகைப்படங்களை விடுத்து மற்ற அனைத்தையும் எடுத்து கொடுக்க… அவனையே பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் மகிளா…
கொஞ்சம் கூட அவன் முகத்தில் மாறுதல் இல்லை… அவர்கள் காதலித்த நாட்களின் நினைவுகளின் தாக்கம் தெரியவில்லை… சட்டென்று அவள் கண்களில் கண்ணீர் கன்னம் தாண்ட… அதே நேரம் பிரேமின் முகம் ஞாபகம் வர… நிமிடத்தில் தடுமாறிய மனது மீண்டும் அதன் நிலைக்கு வந்து நின்ற போதிலும்… இவ்வளவு ஆன பிறகும் இவனிடம் போய் இன்னும் தன்னைப் பற்றிய எண்ணங்களை ஏன் எதிர்பார்க்கிறோமே… வேக வேகமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் மகிளா …
அதே நேரம் அவளுக்குள் அவளையும் மீறி அவள் மீதே கடும் கோபம் வந்திருக்க… அதை அடக்க பெரும் பாடு பட்டுக் கொண்டிருக்க…. ரிஷியோ அவளிடம் அந்த புகைப்படங்களை எல்லாம் நீட்ட….
அவனைப் பார்த்தபடியே அதை வாங்கியவள்…. அவற்றை எல்லாம் மீண்டும் பார்த்தபடி இருந்தவள்… சில நிமிடம் கழித்து… தான் மட்டும் தனித்திருந்த இருந்த புகைப்படங்களை எல்லாம் வைத்துக் கொண்டு…
“ரிஷி மாமா…” என அவனை அழைத்தபடி நோக்க
“சொல்லும்மா” என்று ரிஷி அவளிடம் மிகச் மிகச் சாதாரணமாக பேச ஆரம்பித்திருக்க…
தான் கொண்டு வந்திருந்த அட்டைப் பெட்டியை வலியோடு பார்த்தபடியே…. அதை அவனிடம் காட்டியபடியே…
“இதெல்லாம் உன்கிட்ட இருந்த என்னோட ஞாபகங்கள்… உன் பிறந்த நாள்… அந்த நாள் இந்த நாள்னு… நான் கொடுத்த கார்ட்ஸ்… கிஃப்ட்ஸ் எல்லாம்… உன் ரூம்ல இருந்த பரண்ல இருந்த பெட்டில சேர்ந்து இருந்தது… அதை பிரிச்சு எடுத்துட்டேன்…. இனி இதெல்லாம் எதுக்கு…. குப்பைதானே… எரிச்சுறலாம்…” சொன்னவள்
“லைட்டர் தா…” எனும் போதே ரிஷி முறைக்க…
“ஓ…ஓ…. நீங்க இப்போ பழைய ரிஷி இல்லைல… சிகரெட்லாம் அடிக்க மாட்டிங்கதானே… ச்சேய் நான் மறந்துட்டேன் மாமா… நான் இன்னும் உங்கள பழைய ரிஷியாவே பார்த்துட்டு இருக்கேன்… ப்ச்… இந்த மரமண்டைக்குத் தெரிய மாட்டேங்குது… நீங்க இப்போ வேற ஆளுதானே” அவளின் குரல் மாறிய விதத்திலேயே… ரிஷியும் சுதாரித்தவனாக
“என்ன… பிரச்சனை பண்ணனும்னு வந்துருக்கியா…”
“ஆமாம்னா என்ன பண்ணுவ மாமா” என்றபடியே அவனை நோக்கி அடி எடுத்து வைத்தாள் மகிளா…
உண்மையிலேயே சொல்லப் போனால்… மகிளாவு இதை எல்லாம் பேச நினைத்தே வரவில்லை… ஆனால்… ஒரு கட்டத்தில் அவளால் தவிர்க்க முடியவில்லை… மறைக்க முடியவில்லை அவளால்…. வெகு நாட்களுக்குப் பிறகு… இந்த அறை… அருகே ரிஷி… என அவன் நினைவுகளை வெகு சாதாரணமாகக் கடக்க முடியவில்லை மகிளாவால்…
இன்னும் சொல்லப் போனால் தான் கணவனுடன் சந்தோசமாக வாழ்கிறோம்… அந்த வாழ்க்கைக்கு அடையாளமாக குழந்தை… அப்படி இருந்தும்… இந்த வீட்டில் இந்த அறையில் காலடி எடுத்து வைத்த போது… நினைவுகளின் தாக்கத்தில் மனம் வலிக்கிறதே…
ஆனால் இவன்… அவனுக்கு அப்படி ஏதும் இருப்பது போல் தெரியவில்லையே… தன்னைப் பற்றி சிறு ஞாபகக் கூட இல்லையா… மகிளாவை அறியாமலேயே அந்த அறை… தனிமையில் ரிஷியின் அருகாமை அவள் உணர்வுகளால் பந்தாடப் பட ஆரம்பித்திருக்க…. பேச ஆரம்பித்திருந்தாள் மகிளா…
”இதோ இந்த இடம் ஞாபகம் இருக்கா மாமா… இங்கதான் நீ எனக்கு முதன் முதலா ’ஐ லவ் யூ’ சொல்லி…” என்றவள் அதற்கு மேல் பேசாமல் நிறுத்த… ரிஷியுமே சுதாரித்து அவளை பேச விடவில்லை…. இடையிலேயே அவள் பேச்சினை நிறுத்தியவனாக
“மகிளா… இப்போ தேவையில்லாத பேச்சை எடுத்து பேசிட்டு இருக்க… ” எனும் போதே மகிளா குரலை உயர்த்த ஆரம்பித்திருந்தாள்…
“எது மாமா தேவையில்லாத பேச்சு… எனக்கு அப்போ என்ன வயசிருக்கும் சொல்லு…. நம்ம ரித்வி வயசு இருக்குமா… அந்த வயசுல எனக்கு காதலை மட்டுமா சொல்லிக் கொடுத்த… பைத்தியக்காரி மாதிரி உன் பின்னால அலஞ்சிருக்கேன்… அலைய வச்ச… உனக்காக நான் என்ன பண்ணல சொல்லு… கிட்டத்தட்ட எட்டு வருசம் நீதான் என் புருசன்னு மனசுல நெனச்சு வச்சுருந்தேன்… ” என்று நிறுத்தியவள்…
“உனக்காக என் வீட்டை விட்டு வெளியேறி உன்னைத் தேடி வந்தேனே… நீ என்ன பண்ணின எனக்கு… என் அப்பாகிட்ட சொல்லி அவரை வைத்தே என்னைக் கூட்டிட்டு போக வச்ச… அப்போ கூட போலிஸ் ஸ்டேஷன்ல நீதான் வேணும்னு பிடிவாதமா நின்னேனே… யாரோ ஒரு கண்மணி அவ கூட எனக்காக பாவம் பார்த்தாள்… எனக்காக பேசினாள்… நீ பாவம் பார்த்தியா…. இதெல்லாம் விட உனக்காக கடைசி நிமிசம் வரை நீ வருவேன்னு உன்னை மனசுல வச்சுட்டுத்தான் பிரேம் கட்டின தாலிக்கு தலையைக் குனிந்தேன்… உன்னை மனசுல வச்சுட்டு… பிரேம் கூட என்ன வாழ்க்கை வாழ்ந்துருப்பேன்… அந்த வாழ்க்கைக்கு என்ன பேருன்னு யோசிச்சுப் பார்த்துருப்பியா மாமா… ”
ரிஷி அமைதியாக… அவள் வார்த்தைகளைக் கேட்டபடியே… அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தான்… அவள் பேசியதை எல்லாம் விட… இந்த அளவுக்கு தெளிவாக… கூர்மையான வார்தைகள் கொண்டு பேசுவாளா மகிளா… இவளுக்குள் இத்தனை மாற்றமா… இப்படி எண்ணத்தோடுதான் ரிஷி மகிளாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்…
”ஆனால் நீ எவ கழுத்துலயோ தாலி கட்டிட்டு… கேட்டால் குடும்பம் அம்மா தங்கைனு சொன்னது கூட ஓகே… ஆனால் என் சந்தோசத்துக்காகன்னு சொன்ன பாறேன்…”
ரிஷி இப்போது இன்னும் நிதானமாக அவளைப் பார்த்தபடி…
“இப்போதும் அதையேதான் சொல்றேன்… எப்போதும் உன்” என அவன் வார்த்தைகளை முடிக்கவில்லை… சட்டென்று மகிளா அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.. ரிஷியே எதிர்பார்க்காத நிலையில்…
ரிஷி இதை எதிர்பார்க்கவே இல்லை… மகிளாவின் இந்தச் செயலை… ’தன்னை அறைந்து விட்டாளா’… ஒரு நொடி தனக்குள் அதிர்ந்தான் தான்…
கண்கள் சிவந்து… கோபம் வந்து… அவன் முகம் இறுகியபோதும்… அவன் நிதானம் தவறவில்லை ஏன் மீண்டும் அவளை மீண்டும் அடிக்கக் கூட கை ஓங்க நினைக்க வில்லை… மாறாக சட்டென்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனாக… தன் கோபத்தை எல்லாம் காட்டாமல்…
“இங்க பாரு மகிளா… இப்போ நான் என்ன செய்யனும்னு நினைக்கிற… இல்லை என்ன சொல்லனும்னு நினைக்கிற… ஒண்ணு தெரிஞ்சுக்கோ… உன்னோட காலம் கடந்த கோபத்துக்கு பதில் சொல்ற நேரம் இது இல்லை… அதே போல உன்னைச் சமாதானப்படுத்த எனக்கு ஒரு தேவையுமில்லை…. முதல்ல இங்கிருந்து போ மகிளா” அவளிடமிருந்து கன்னத்தில் அடி வாங்கிய போதும்… தன்மையான குரலில் அவளிடம் இப்போதும் பேசினான் ரிஷி
”முடியாது…. நான் போக முடியாது… என் சந்தோசம் எதை நினைச்ச நீ… சொல்லு.. வேசி வாழ்க்கையா… மனசுல ஒருத்தனையும்… ” என்ற போதே
”மகிளா” ரிஷி அவனையும் மீறி கத்தியவனாக… உடனே அதையும் அடக்கியவனாக
“ம.. மகிளா… எல்லை மீறிப் பேசிட்டு இருக்க… நீ இங்கயிருந்து கிளம்பு…” ரிஷிக்கும் வார்த்தைகள் தடுமாறியது… அவன் தடுமாற்றம் ஒருபுறம் இருக்க… இதை எல்லாம் பிரேம் கேட்டால் என்னாவது… என்ற கவலையில் அவன் யோசிக்க ஆரம்பித்திருக்க
“முடியாது மாமா… நீ சொன்னால் நா போகனுமா… மாட்டேன்… நீ என்ன சொன்னாலும்… உன் பேச்சைக் கேட்டதெல்லாம் ஒரு காலம்… அதுனாலதானே… இதோ இந்த ரூம்ல வச்சு நீ கேட்டதைக் கொடுத்தேன்… “ என்றவள்… அதற்கு மேல் பேச முடியாமல்… தழுதழுத்தவள்…
“எப்படி மாமா நெனச்ச… இன்னொருத்தனோட நான் சந்தோசமா வாழ்வேன்னு… நீ எப்படியோ… என்னை லவ் பண்ணுனியோ, இல்லையோ எனக்குத் தெரியல… ஆனால் நான் உன்னை உண்மையாத்தான் காதலிச்சேன்… உன்னைக் காதலிச்சத… நீ தொட்ட குறைய… இந்த பாவத்தை எல்லாம் எங்க கழுவுவேன்.. என்னை உறுத்துது… அதுக்கு பதில் சொல்லு… சொல்லு” கத்த ஆரம்பிக்க… அந்த அறை முழுக்க இலேசாக எதிரொலிக்கவும் ஆரம்பித்திருக்க… ரிஷிக்கு என்ன சொல்வதென்றே தெரியாத நிலை.. அவனுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை… அவள் அருகில் கூட அவன் செல்லவில்லை… சொல்லப் போனால் இன்னும் தள்ளியே போய் நின்றிருந்தான்…
ரிஷி பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தபடியே இருந்த போதே
அவளும் இவனுமாக சேர்ந்திருந்த புகைப்படங்களை எல்லாம் அங்கிருந்த தரையில் ஆங்காரத்தோடும் கோபத்தோடும் மகிளா வீசி எறிந்திருக்க…. அதிர்ந்தது ரிஷி மட்டுமல்ல… மேலே இவர்கள் சத்தம் கேட்டு ரிஷியின் அறைக்கு வந்த மொத்தக் குடும்பமுமே
”மகிளா” என மனைவியின் நிலை பார்த்து அதைத் தாளாது… பிரேம் அவளை ஓடி வந்து பிடித்திருக்க… அவனைப் பார்த்தவள்
”எனக்கு பதில் சொல்லச் சொல்லுங்க பிரேம்… என் சந்தோசம்னு சொல்றது எதைனு… நீங்க இல்லாமல் வேற யாராவது என்னை மேரேஜ் பண்ணியிருந்தா என் சந்தோசம் என்ன ஆகியிருக்கும்னு சொல்லுங்க பிரேம்…” தன் கணவனிடம் கண்கலங்கியவளை ரிஷி காண முடியாமல் வேறு புறம் திரும்பிக் கொள்ளா…
மகிளா தன் கண்களைத் துடைத்துக் கொண்டவளாக….
“என் சந்தோசம் தானே… நான் நல்லா இருக்கேன் ரிஷி மாமா… ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்… ஆனால் நீ நல்லா இருக்கியா மாமா… ’கண்மணி’, அந்தப் பொண்ணு… உன்னை ஒரு பொருட்டா கூட மதிக்கலை… எவ்ளோ பெரிய சந்தோசமான நாள் உனக்கு… ஆனா அவளுக்கு நீ முக்கியம் இல்லை… அவளோட வேலைதான் முக்கியம்னு வரலை…”
அவளின் கடந்த கால காதலில் ஆரம்பித்து… ரிஷியின் நிகழ்கால வாழ்க்கைக்கு வந்து நின்றிருந்தாள் மகிளா
அதே நேரம் கண்மணியைப் பற்றி அவள் பேச ஆரம்பித்த போதே… உடனே ரிஷி அவள் முன் வந்தவனாக
“என்னைப் பற்றி ஆயிரம் பேசு… பேசலாம்… ஆனால் அவளைப் பற்றி பேசுறதுக்கு ஒரு ரைட்ஸும் கிடையாது… பேசவும் கூடாது… பேசுன” என ரிஷி கோபத்தோடு எச்சரித்த போதே
“அவளுக்கு நீ முக்கியம் இல்லை… அதுதான் உண்மை… அது புரியல உனக்கு… அது தெரியலை உனக்கு… ஆனால் அவளைப் பற்றி ஒரு வார்த்தை பேசினால்… உனக்கு கோபம் மட்டும் வருது… அவ்வளவு முக்கியமா உனக்கு அவள்“ என்றவளை பிரேம்… அதற்கு மேல் பேசவிடவில்லை
“மகி… இப்படி பிரச்சனை பண்றதுக்குத்தான்… ரிஷி மாமா ரொம்ப நாளா ஆசைப்பட்ட கனவு… அவர் சந்தோசமா கம்பெனிக்குப் போறதைப் பார்க்கனும்னு என்கிட்ட அடம் பிடிச்சு வந்தியா… சரின்னு சொல்லு கூட்டிட்டு வந்த எனக்கு நீ கொடுக்கிற மரியாதை இதுதானா” பிரேம் அவளை அதட்ட
இப்போது மகிளா அமைதியானவளாக… கண்களில் வலியோடு பிரேமைப் பார்த்தவள்..
“சாரி பிரேம்… இதுதான் லாஸ்ட்… இதை மட்டும் சொல்லிடறேன்…” என்றபடி… பிரேமை விட்டு நகர்ந்தவள்… ரிஷியின் முன் நின்று அவன் முகத்தை கண்களைப் பார்த்தவள்…
“விட்ட குறை…. தொட்ட குறை… இதுல உனக்கு நம்பிக்கை இருக்கான்னு தெரியலை… ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா… பயமா இருக்கு எனக்கு… இனி எந்த ஜென்மத்துலயும் உன்னோட உறவு எனக்கு தொடரக் கூடாது… இந்த ஜென்மம் போதும்… இனி எப்போதுமே வந்துறாத… வந்துரக் கூடாது” என்றபடியே…
“அதுதான்… அதை இன்னையோட முடிச்சுக்க நினைக்கிறேன்” அவளின் வார்த்தைகள் புரியாமல் மற்றவர்கள் அனைவரும் திகைத்து நிற்க…
அடுத்த நொடி… ரிஷியின் கன்னங்களில் மாறி மாறி அறைய ஆரம்பித்திருக்க… ரிஷி அவளைத் தடுக்கவே இல்லை… மாறாக அவள் தந்த தண்டைனையை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்க… வேகமாக ஓடி வந்த பிரேமையும் தடுத்து நிறுத்தினான் ரிஷி… பதறி அவர்கள் அருகே வந்தவர்களிடமும்
”யாரும் பக்கத்துல வராதீங்க… அவ சந்தோசம் இதுதான்னா… இதையும் ஏத்துக்கிறேன்” என்றபடி ரிஷி மகிளா கொடுத்த அடிகளை வாங்கிக் கொண்டிருக்க… மகிளாவே ஓய்ந்தவளாக அவனை விட்டு தள்ளி நின்றவள் அழ ஆரம்பித்திருக்க… நீலகண்டன் ஒரு புறம் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தார்…
“நான் தாம்மா எல்லாத்துக்கும் காரணம்… ரிஷியை ஒண்ணும் சொல்லாத… உன்னை விட்டு தள்ளி இருக்கனும்னு சத்தியம் வாங்கினது நான் தான்மா… உன் மாமா இறந்த முப்பதாவது நாள் காரியத்துல மனசாட்சியே இல்லாமல் நடந்துகிட்டது நான் தான்ம்மா… ரிஷியத் திட்டாதம்மா”
“ப்ச்ச்… அடப்போங்கப்பா…. உங்க வார்த்தைக்கு ரிஷி மாமா என்றைக்கு மதிப்பு கொடுத்திருக்கு… இவர் சத்தியம் பண்ணினாராம்… அதுனால விலகிப் போனாராம்… நீங்க சொன்னது அவருக்கு சாதகமான விசயம் தான்ப்பா… உங்களுக்கு அது தெரியாது” என மகிளா ரிஷியை முற்றிலுமாக அறிந்தவளாகப் பேச… ரிஷியின் இதழ் வளைந்தது… அவள் புரிதலில்
“இதோ நட்ராஜ் அங்கிள் சொல்லட்டும்… அவர் பொண்ணை விட்டுப் போன்னு… சொன்ன உடனே போய்ருவாரா… போகச் சொல்லுங்க பார்க்கலாம்”… என்றவள் நட்ராஜிடம் திரும்பியவளாக
”எல்லாம் தெரிந்தும்… எப்படி சார் உங்க பொண்ணை இவருக்கு கட்டிக் கொடுத்தீங்க… உங்க பொண்ணும் எப்படி இவரைக் கட்டிக்கிட்டா… அதுதான் எனக்கு எப்படின்னு தெரியலை… போலிஸ் ஸ்டேஷன்ல… எனக்காக அவ்ளோ பேசினா உங்க பொண்ணு… நான் அங்க மணமேடைல இவருக்காக காத்துட்டு இருப்பேன்னு தெரிஞ்சும் இவரை கல்யாணம் பண்ண அவளுக்கு எப்படி மனசு வந்துச்சு… ”
ரிஷி இப்போது வாய் திறந்தான்… ஆனால் மகிளாவிடம் இல்லை அவள் கணவனிடம் பேசினான்
”பிரேம்… உங்க வொய்ஃப்கிட்ட சொல்லி வைங்க… என் மனைவி பற்றி… என் மாமனாரைப் பற்றி பேச அவங்களுக்கு ஒரு தகுதியும் இல்லைனு… என்னைப் பற்றி பேசினா சும்மா இருப்பேன்… அவங்களைப் பற்றி பேசினால்… நான் மனுசனா இருக்க மாட்டேன்” ரிஷி பிரேமிடம் சொன்ன போதே
“நீ மனுசன் இல்லைனுதான் தெரியுமே… அந்த கண்மணியோட அடிமைதானே நீ… அதை அன்னைக்கு கோவில்ல பார்த்தேனே… சாமியாவது பூதமாவதுன்னு பெரிய இவன் மாதிரி பேசுவ… ஆனா அன்னைக்கு அவ சொன்னதுக்கெல்லாம் தலை ஆட்டினதென்ன… சாமி கும்பிட்டதென்ன.. விபூதி வச்சுகிட்டதென்ன… பக்தி பரவசமா நின்னதென்ன… அடேங்கப்பா!!!! “
ரிஷி அவளை அற்பமாகப் பார்க்க ஆரம்பித்த போதே…
”மகிளா… நீ இப்போ இன்னொருத்தவங்களோட பிரைவசில… அவங்க வாழ்க்கைல தலையிடற… புரியுதா இல்லையா…” இப்போது பிரேம் கோபமாக அதட்டலாக அவளிடம் பேச ஆரம்பித்தவனாக… அவளை தன் புறம் இழுக்க… பிரேமின் முக மாறிய விதத்தில்… அவன் கோபத்தில் மகிளா தன் தவறை உணர்ந்து அமைதியாக இருக்க…
ரிஷி அவளிடம் பேச ஆரம்பித்திருந்தான்…
“உன் மனசுல இருந்ததெல்லாம் கொட்டிட்டதானே… இப்போ சந்தோசம் தானே மகி… ஆனால் நான் இப்போதும் சொல்றேன்… உன் சந்தோசத்துக்காகத்தான் உன்னை விட்டு விலகினேன்… அது எப்போ எங்க யார் கேட்டாலும் சொல்வேன் போதுமா… இன்னொன்னும் சொல்றேன் கேட்டுக்க… நான்லாம் தகரம்… இவர் தங்கம்… இவர் கிடைக்க நீ தவம் பண்ணியிருக்கனும்… அந்தத் தவம் தான் இவர்கிட்ட உன்னைச் சேர்த்துருக்கு…. அதைப் புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன்…” என அப்போது தயங்காமல் அவளைப் பார்த்து சொல்ல…
“ரிஷி… என்னப்பா… நீ… என்ன பேச்சு இது… உன்னையே மட்டப்படுத்திகிட்டு,,, பேச்சை விடு” நட்ராஜ் இப்போது ரிஷியை இடை மறித்தவறாக….
”பிரேம்… மகிளாவை கூட்டிட்டுப் போப்பா” என பிரேமுக்குக்கும் சொல்ல…
ரிதன்யா… ரித்விகா… விக்ரம்… நீலகண்டன் என அனைவரும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்…
இப்போது இலட்சுமியும் நட்ராஜும் மட்டுமே ரிஷியோடு அந்த அறையில் நின்றிருந்தனர்…
“ரிஷி… ஏண்டா இப்படி… உனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது… என் கண்ணு முன்னாடியே… இப்படி நீ அடி வாங்குறதை பார்க்கனும்னு என் தலையில எழுதியிருக்கா என்ன… ” மகனைப் பார்த்து இலட்சுமி அழ ஆரம்பித்திருக்க…
“அம்மா… நான் வருத்தப்படலம்மா.. அவ யாரு எனக்கு… நான் சின்ன வயசுல இருந்து பார்த்து வளர்ந்தவ… சொல்லப் போனால் மகி மேல சின்னக் கோபம் கூட எனக்கு இல்லை… அவளுக்கு இல்லாத உரிமையா… ஆனால் அவ அழுதுட்டு இருக்கா பாருங்க…. அவ அழுதா எனக்கு எப்போதுமே பிடிக்காது… சமாதானப்படுதுற நிலைமைல இன்னைக்கு நான் இல்லை… அவளைப் போய்ச் சமாதானப்படுத்துங்க..” எனக் கல் போலப் பேசியவன்… நட்ராஜிடம் திரும்பி
“மாமா… நாம ரெண்டும் பேரும் சென்னைக்கு கிளம்பலாம்… அரை மணி நேரத்துல கிளம்புறோம்… நீங்க ரெடி ஆகுங்க…” என இப்போது இதுதான் முக்கியம் என்பது போலச் சொல்ல நட்ராஜும் சரி எனச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போயிருந்தார்…
இலட்சுமி மட்டுமே அங்கு அவனுடன் இன்னும் நின்றிருந்தவராக… நட்ராஜ் கீழே இறங்கிப் போய்விட்டதை உறுதி செய்தவராக
”கண்மணி இன்னைக்கு நைட் கிளம்பி வர்றேன்னு சொன்னாளேடா… இப்போ நீ சென்னைக்குப் கிளம்பறேன்னு சொன்னா என்னடா அர்த்தம்… மகிளா மேல கோபம்னா இப்படிக் காட்டுவியா” இலட்சுமி கோபத்தோடு மகனிடம் கேட்டுக் கொண்டிருந்த போதே
“உங்க மருமகள் இன்னைக்கு கிளம்பல… வரவும் மாட்டாள்…“ என்றவன்
“எத்தனை தடவை சொல்றது… மகிளா மேல எனக்கு கோபமுமில்லை… வருத்தமும் இல்லை…. அதை முதல்ல புரிஞ்சுக்கங்க… நான் அதுனால கிளம்பல… என் கோபமெல்லாம் இங்க யார் மேலயும் இல்லை… ஆனால் நான் கோபமாத்தான் இருக்கேன்… அது யார் மேல தெரியுமா… அங்க சென்னைல இருக்காள்ள அவ மேலதான்… அப்பா கம்பெனி… அந்த ஒரு விசயத்துக்காக இதுவரை எனக்குள்ள அடக்கி அமைதியா இருந்தேன்… ஆனால் அவளுக்கு இருக்கு ” என்றவனின் உச்சகட்ட இறுக்கமான பாவத்தில்… இலட்சுமி பயந்தவராக…
“டேய்… அவ என்னடா பண்ணினா… ஏண்டா இப்படி பேசுற… லீவ் போட முடியலேன்னு… வர முடியலேன்னு சொல்ற பொண்ணுகிட்ட என்னடா கோபம் உனக்கு… எப்போதுமே அவகிட்டயே சண்டை போட்டா அவ என்னடா பண்ணுவா… உன் பொறுமை… நிதானம் எல்லாம் யார் யார்கிட்டயோ காட்ற… அவகிட்ட மட்டும் ஏன் இப்படி நடந்துக்கிற… பொறுத்துப் போக மாட்டேங்கிற… நிதானமா இரு… நாளைக்கு கண்மணியே வருவா… ”
“ம்மா…ப்ளீஸ்… இது எனக்கும் அவளுக்கும் உள்ள பிரச்சனை… யாரும் தலையிடாதீங்க… என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடுங்க… இப்போதைக்கு அதை மட்டும் எனக்குக் கொடுங்க… “ என்றவன் வாசலைப் பார்க்க… அவனிடம் வேறு ஏதும் பேச முடியாமல் இலட்சுமி இறங்கிப் போக…
சற்று முன் நடந்த மகிளாவுடன் நடந்த பிரச்சனைகளை எல்லாம் மறந்தவனாக… விட்டவனாக… ஆனால் அவள் சொன்னதில் ஒன்றை மட்டும் தனக்குள் ஏற்றிக் கொண்டவனாக…. ரிஷி வேகமாக… தன் அறைப் பரணில் இருந்த பெட்டிகளை எல்லாம் இறக்க ஆரம்பித்திருந்தான்…
பரபர வென… வேக வேகமாக ஒவ்வொரு பெட்டியாக தான் நினைத்ததை தேட ஆரம்பித்திருக்க…. இந்த முறை அவன் தேடல் ஏமாற்றம் தரவில்லை….
”இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்… ரிஷிகேஷ்….”
”இப்படிக்கு ’கண்மணி’ பாப்பா”
கிருத்திகாவின் வார்த்தைகளை ரிஷி வாசித்தபடியே…. அந்தக் உறையைப் பிரிக்க…அதில் பிறந்து சில நாட்களே ஆன கண்மணியின் புகைப்படங்கள்…
மருத்துவமனை அறையில் பல அதிநவீன கருவிகளின் துணையோடு…. செயற்கை சுவாசக் குழாய்களின் உதவியுடன் கண்களில் மட்டும் ஒளி இருக்க… குறைமாதக் குழந்தையாக நிலையில் காட்சி அளித்தாள் கண்மணி அவனுக்கு…. யாருமே மீண்டும் பார்க்க முடியாத… ஏன் ஒருமுறை கூட பார்க்கக் கூடப் முடியாத நலிந்த கோலத்தில் காட்சி அளித்துக் கொண்டிருந்தாள் கண்மணி…
கண்களில் நீர் திரள… அது அவன் கன்னத்தில் வழிய… வேக வேகமாக அந்தப் புகைப்படங்கள் எல்லாவற்றிருக்கும் அழுத்தமாக முத்தம் பதித்தவன்…
“நான் உன்னைத் தேடி வரலடி… நீ எப்போதும் சொல்வியே … விதி… டெஸ்டினி அது உண்மைதான்… என்னைத் தேடி நீ பிறந்த உடனேயே வந்துட்ட… நீதான் இனி என்னை விட்டுட்டு நீ போகப் போறியா… இல்லை நான் தான் விட்ருவேனா…”
’என்ன சொன்ன என்ன சொன்ன…. என்னோட கணக்கை முடிச்சு அனுப்பிட்டியா நீ… இப்போதான் எனக்கும் உனக்குமான வாழ்க்கையோட முதல் முடிச்சை ஆதாரத்தோட பார்க்கிறேன்… வர்றேண்டி… உன்னை வந்து வச்சுக்கிறேன்…” என்று மீண்டும் மீண்டும் முத்தமிட்டபடி தன்னவளின் புகைப்படத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டவன்
மகிளா வீசி எறிந்த புகைப்படங்களை பார்த்தபடியே
“தேங்க்ஸ் மகிளா… என் கண்மணியோட ஃபோட்டோஸ் கிடைக்க காரணமா இருந்ததுக்கு..” தனக்குள் பேசியபடியே தன்னவளின் புகைப்படங்களைப் பத்திரப்படுத்தியவன்… அடுத்த அரை மணி நேரத்தில் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் தன் மாமனார் நட்ராஜோடு….
/* ஊற்றை போல பேசியவள்
ஊமை ஆகி போனதெங்கே
வாழ்வை மீட்டு கொடுத்தவளே
நீயும் தொலைந்து போனதெங்கே
புன்னகையில் நான் தூங்க ஆசை பட்ட வேளையில்
உன் மடியில் தூங்கும் நிலை நியாயம் இல்லை
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே */
Nice update