அத்தியாயம் 86
/* அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியாதோ
ஏலோ ஏலேலோ
பாத மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள் தானோ*/
ரிஷி ஆஸ்திரேலியா சென்று ஒரு வாரம் கடந்திருந்தது…
மாணவர்களுக்கு தேர்வுகள் போய்க் கொண்டிருக்க… அன்றைய தினம் கண்மணிக்கு அரை நாள் மட்டுமே வேலை… ஆனால் ரித்விகாவுக்கு முழு நேரம்… அதனால் ரித்விகாவுக்காக கண்மணி முழு நேரமும் பள்ளியில் இருந்து… காத்திருந்து… அவளை அழைத்துக் கொண்டுதான் வீடு திரும்புவாள்..
ஆனால் இன்று பணி முடிந்தவுடனே பள்ளியை விட்டு கிளம்ப ஆயத்தமாகி இருந்தாள் கண்மணி… அதற்கு காரணமும் இருந்தது… அவளுக்கே அவளுக்குள் சில மாற்றங்கள் உணர்ந்திருக்க… அதற்கேற்றார் போல நாட்களும் தள்ளிச் சென்றிருக்க… ஓரளவு தனக்குள் உறுதி செய்து கொண்டவளாக… அருகில் இருந்த மருத்துவமனைக்கு செல்ல நினைத்திருந்தாள் கண்மணி…
’அம்பகம்’ மருத்துவமனைக்குத்தான் முதலில் செல்ல நினைத்தாள்… ஆனால் இவள் அங்கு சென்றால்… உடனடியாக தாத்தா பாட்டி ஏன் அர்ஜூன் உட்பட என அனைவருக்கும் விசயம் தெரிந்து விடும்… அவர்களுக்குத் தெரிவதில் பிரச்சனை இல்லை தான்… ஆனால் முதன் முதலாக ரிஷிக்கு சொல்ல வேண்டும்… அவனுக்குப் பின் தான் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கண்மணி விரும்பிய காரணத்தால் அங்கு செல்லவில்லை…
இதற்கிடையே நட்ராஜ் வேறு… அன்று அவர்கள் கம்பெனிக்கு வரச் சொல்லி இருக்க… அன்று ரிஷியை சேர்த்திருந்த மருத்துவமனை ஞாபகத்துக்கு வந்திருக்க… அது கம்பெனிக்கு அருகில் இருப்பதும் வசதியாக இருக்க… அங்கேயே டெஸ்ட் செய்து விட்டு… ரிஷியின் மருத்துவ அறிக்கைகளையும் வாங்கி வரலாம்… அதற்குள் ரித்விகாவுக்கும் வகுப்புகள் முடிந்திருக்கும்… மீண்டும் பள்ளிக்கு வந்து கூட்டி சென்று விடலாம் என முடிவு செய்தவளாக… பைக் நிறுத்தும் இடம் நோக்கி வந்து கொண்டிருக்க… அப்போது அவள் அலைபேசி ஒலிக்க… எடுத்துப் பார்த்த போதே… ரிஷியிடமிருந்து அழைப்பு வந்து உடனடியாக நின்றும் இருக்க… யோசித்தாள் கண்மணி…
இந்த நேரத்தில் தான் வகுப்பில் இருப்போம் என ரிஷி தனக்கு இந்த நேரத்தில் அழைக்க மாட்டானே… அப்படி அழைத்திருக்கின்றான் என்றால் என்னவாக இருக்கும் என யோசித்த படியே மீண்டும் அவனுக்கு கால் செய்ய ஆரம்பித்திருக்க… ரிஷியும் உடனடியாக அவள் அழைப்பை எடுத்தவன்…
“சாரி அம்மு… மிஸ்டேக்கனா உனக்கு வந்துருச்சு… ஆனால் உடனே உனக்கு கட் பண்ணிட்டேனே…. சாரி… வொர்க் நடுவுல டிஸ்டர்ப் பண்ணதுக்கு” ரிஷி உண்மையாகவே மன்னிப்பை வேண்ட… அதில் இருந்தே தெரிந்தது… தெரியாமல் வந்த அழைப்புதான் என்பது…
“ஹ்ம்ம்… நினைத்தேன்… இருந்தாலும் ஏதாவது இருந்தால்… அதுனாலதான் போன் பண்ணனும்னு தோணுச்சு… இப்போ ஓகே… அப்போ வைக்கவா… ” என்றபடியே வைக்கப் போனாள் தான்… ஆனால் அவளால் கணவனின் குரல் கேட்ட பின் வைக்கத்தான் முடியவில்லை
“ஆனால் நான் கொஞ்சமே கொஞ்சம் ஃபிரீ…. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…. ஒரு 300 செகண்ட் ஃபிரீ…. ” என அவனிடம் கொஞ்சல் மொழியால் வம்பிழுக்க ஆரம்பிக்க
“ஆமா… 5 நிமிசத்துக்கு எவ்ளோ பெரிய பேச்சு… நான் உன்னை மாதிரிலாம் கஞ்சம் இல்லைடி… ஆல்டைம் ஃப்ரீ தான்…. இப்போதான் ரூம் வந்தேன்” ரிஷி பேச ஆரம்பிக்க… ரிஷியோடு பேச ஆரம்பித்தால் கண்டிப்பாக இப்போது அவனும் வைக்க மாட்டான்… தானும் வைக்க மாட்டோம்… ரித்விகாவை அழைத்துப் போக வேண்டும்… அதற்குள் கம்பெனிக்குச் சென்று விட்டு… மருத்துவமனைக்கும் போக வேண்டும்… அவன் ஒழுங்காக பேசி வைக்கத்தான் போனான்… தான்தான் வைக்காமல் பேச ஆரம்பித்தது…
தன்னையே திட்டிக் கொண்டவளுக்கு… அவனோடு பேச ஆசை இருந்தும்… அன்று நேரம் இல்லாமல் போயிருக்க… தன்னைக் கட்டுப்படுத்தியவளாக
“இல்ல ரிஷி… அப்பா கம்பெனிக்கு வர சொல்லிருக்காங்க… ஏதோ டீட்ல டவுட்டாம்… வந்து பார்க்கச் சொன்னார்… லேட் ஆனதுனா… ரித்வி எனக்காக வெயிட் பண்ணனும்… வைக்கட்டுமா” என்று அவன் மனம் நோகாதவாறு பேசி முடிக்க… ரிஷியும் வற்புறுத்தவில்லை
”சரி… பார்த்துப் போ… வைக்கிறேன்” என்றவன்… அடுத்த நொடியே
“கண்மணி…. நான் நாளைக்கு ” என்று ஏதோ வேகமாக சொல்ல வந்தவன்… பின் என்ன நினைத்தானோ….
“சரி ஒண்ணுமில்ல…. சஸ்பென்சாவே இருக்கட்டும்” என்றவனிடம்… இவள் விடுவாளா
“மிஸ்டர் ரிஷிகேஷ்… மைண்ட் வாய்ஸ்ல பேசறீங்களா என்ன… என்ன உங்க மைண்ட் வாய்ஸ்… ஆஸ்திரேலியா இருந்து இந்தியா வரைக்கும் கேட்ருச்சு அவ்ளோதான்… சரி விடுங்க… அது என்ன அந்த சஸ்பென்ஸ்…” கிண்டலில் ஆரம்பித்து மிரட்டலில் முடித்திருக்க
“ஒண்ணு இல்லை ரெண்டு இல்ல… உனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கு கண்மணி… காத்துட்டே இரு…” ரிஷி சந்தோஷமான குரலில் உற்சாகமாகச் சொல்ல
“அப்படியா… சரி… அப்போ வைக்கவா…” என்று கண்மணி சிரித்தபடி கேட்க… ரிஷியின் உற்சாகம் நிமிடத்தில் வடிந்திருந்தது
“ஏண்டி… இதே வேறொரு பொண்ணுகிட்ட சொல்லி இருந்தால்… என்ன என்னன்னு ஒரு ஈகரா கேட்ருப்பா… தொல்லை பண்ணியிருப்பா… உன்கிட்ட போய் சொன்னேன் பாரு” ரிஷி எரிச்சலுடன் சொல்ல
“அதுதான் சஸ்பென்ஸுன்னு சொல்லிட்டிங்களே.. அப்புறம் எப்படி கேட்கிறது” என்றவளை… ரிஷி என்ன சொல்வது… என்ன செய்வது… வேறு வழி தனக்குள் பல்லைக் கடிக்கத்தான் முடிந்தது…
அந்தப்புறம் அவன் நிலை தெரிந்தும்… ஒன்றுமே அறியாதவள் போல
”ரிஷிக்கண்ணா… நானும் ஒரு சர்ப்ரைஸ் வச்சுருக்கேன்… விரைவில் எதிர்பாருங்கள்…” என்ற போது அவள் குரல் அவளையுமறியாமல் மென்மையை பூசியிருந்ததோ அவளே அறியவில்லை… அவள் கணவனும் அதை அறியும் நிலையில் இல்லை… மாறாக அந்த சஸ்பென்ஸ் என்ன என்ற ஆர்வத்தில் மட்டுமே ரிஷி இருந்தான்…
“என்னது நீயும் சர்ப்ரைஸ் வச்சுருக்கியா… அது என்னடி ’விரைவில் எதிர்பாருங்கள்னு’ அட்வர்சைஸ்மெண்ட் லேபிள் மாதிரி வேற வசனம்…. அப்படி என்னடி… சொல்லுடி… சொல்லுடி ப்ளீஸ்… உன்னை மாதிரிலாம் எனக்கு கல் மனசு கிடையாது… தாங்காதுடி… தலையை வெடிச்சுரும்… “
“ஏன் ’ரிஷிகேஷ் தனசேகர்’ மட்டும் தான் வசனம் பேசனுமா… ’கண்மணி நட்ராஜ்’ வசனம் பேசக் கூடாதா… சஸ்பென்ஸ்…அவ்ளோதான்… இப்போ பை”
”ஏய் ஏய்… சொல்ல்…” என்று இவன் இந்த முனையில் கத்த ஆரம்பித்த போதே… கண்மணி அவன் அழைப்பை கட் செய்திருக்க…
“வச்சுட்டா… படுபாவி…” என்றபடியே… போனை வெறித்தவன்… இவன் மட்டும் விடுவானா என்ன… விடாமல் இவனும் மீண்டும் கண்மணிக்கு அடித்தான்…. அவளும் எடுத்தாள்
“ஏய் சொல்லுடி… ப்ளீஸ்டி… அட்லீஸ்ட் ஒரு ஹிண்ட்னாச்சும் கொடுடி… சர்ப்ரைஸ்னு சொல்ற வாய்ஸ் மாடுலேஷனாச்சும் வச்சு கண்டுபிடிக்கலாம்னு பார்த்தால் எப்போ பாரு மிரட்ற மாதிரியே… ரியாக்ஷனே இல்லாத ஒரு குரல்… ப்ளீஸ்டி… “ கிட்டத்தட்ட சலிப்பாகவும் கெஞ்சலாகவும் ரிஷி கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன் மனைவியிடம்
“அதுக்கு என்ன பண்றது… என்னோட குரலே அப்படித்தான்…. அது என்ன… சொல்ற டோன்ல கண்டுபிடிக்கிறது… அது எப்படி” கண்மணி பேச்சைத் திசை மாற்றி விசாரிக்க…
“ஹ்ம்ம்ம்.. ரொம்ப முக்கியம்டி… சரி சொல்றேன்… இப்போ என்னை எடுத்துக்க… சஸ்பென்ஸுனு நான் எப்படி சொன்னேன்… சந்தோஷமா… அந்தக் குரல்ல எவ்ளோ எமோஷனல் இருந்துச்சு… நீயும் தான் சொன்னியே…. நான் சொன்ன உடனே… நானும் ஒரு சர்ப்ரைஸ் வச்சுருக்கேன்னு ரிப்ளை மோட்ல சொல்ற” சொன்னபடியே…
“இங்க பாரு கண்மணி…. நான் சொன்ன சர்ப்ரைஸ்ல உனக்கு கொஞ்சம் சொல்வேனா… நீயும் அதே மாதிரி உன் சர்ப்ரைஸ்ல இருந்து கொஞ்சம் சொல்லனும்… டீல் ஓகேவா… இப்போ என்னோடது… என்னன்னா கோர்ட்ல ஃபைனல் ஜட்ஜ்மெண்ட் டேட் சொல்லிட்டாங்க… ஆனால் டேட் எப்போன்றது சஸ்பென்ஸ்… இப்போ நீ சொல்லு பார்க்கலாம்…”
“ஓஓஒ… அப்டியா… சரி… அப்புறம்” கண்மணி உள்ளுக்குள் சிரிப்பை மறைத்தபடி கேட்க…. ரிஷியும் தொடர்ந்தான்
”சோ… எப்டியும் நமக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்…. நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன்னு எனக்கே சொல்லத் தெரியலை…. அவ்ளோ சந்தோசமா இருக்கேன்…” ரிஷி அவனையே மறந்திருந்த சந்தோசத்திற்கு தாவியிருந்தவனாக
“சொல்லுடி…. உனக்கு என்ன வேணும்… நீ இப்போ என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு… உடனே… இப்போவே… இந்த நிமிசமே கொடுக்கிறேன்… என்ன என்ன வேணும்னு சொல்லு…. அந்த ஆகாயம் வேணுமா… அதுல இருக்கிற அந்த நட்சத்திரம் வேணுமா…” ரிஷி வசனம் பேச ஆரம்பித்த போதே… கண்மணி வேகமாக அலைபேசியைத் தள்ளி வைத்தவளாக… மற்றதெல்லாம் மறந்து…. தன் ஸ்கூட்டியின் மேல் ஏறி அமர்ந்து… அவனோடு பேசுவதில் ஐக்கியமாகி இருந்தாள்…
“தம்பி… ரிஷித் தம்பி… இந்த வசனம்லாம்… எஜமான் படத்துலயே சூப்பர் ஸ்டார் சொல்லியே கேட்டாச்சு… கொஞ்சம் நிறுத்துறீங்களா…” கண்மணி அவன் வார்த்தைகளை தடா போட்டு நிறுத்தியிருக்க
“இவ இந்தப் படம்லாம் பார்க்க மாட்டான்னு.. அடிச்சு விட்டா கண்டுபிடிச்சுட்டாளே…” மாட்டிக் கொண்டவனாக… மனதுக்குள் தன்னைத் தானே நொந்து கொண்டிருக்க
“பாட்டுதான் எனக்குத் தெரியாது… ஆனால் படம்லாம் நானும் பார்த்திருக்கேன்… ஆஸ்திரேலியா ராக் ஸ்டாரா இருங்க… இல்லை… ட்ரெண்டிங் அண்ட் என்னமோ சொன்னீங்களே… அது எல்லாம் இருந்துக்கங்க… எங்க ஊர் சூப்பர் ஸ்டார் டையலாக் பக்கத்துல எல்லாம் வரக்கூடாது தம்பி..” அவனை வாறியபடியே
“ஆனாலும்… என்ன வேணும்னு கேட்டிங்கதானே…. யோசிக்கிறேன்” என்றபடியே வானத்தைப் பார்த்து யோசிக்க ஆரம்பித்திருக்க
ரிஷி இப்போது…
“மொக்கையாலாம் கேட்க கூடாது…. அந்த வண்ணத்துப்பூச்சி புடிச்சுத்தா… பூ மலரும் போது பறிச்சுத்தான்னு…. புரியுதா…” ரிஷி உஷாராகக் கேட்க
“ஹ்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…. யோசிக்க விடுங்க” என்றவளின் முகம் உற்சாகமாக மாறி இருக்க…
“என்ன கேட்டாலும் செய்வீங்களா… எது கேட்டாலும் செய்வீங்களா… இன்னொரு தடவை யோசிச்சுக்கங்க… அப்புறம் கேட்ட பின்னால பின் வாங்கக் கூடாது ரிஷிக்கண்ணா…”
“நீ சொல்லுடி… என்னவா இருந்தாலும்… எதுவா இருந்தாலும்… ஏழு கடல்” எனும் போதே
“ஸ்டாப்… ஸ்டாப்…. இந்த மாதிரி ஓவர் பில்டப்லாம் கண்மணிக்கு பிடிக்காது… அதுனால ஓவர் ரியாக்ஷனை கட் பண்றீங்களா ரிஷிகேஷ் சார்…” என கண்மணி அதட்டலான குரலில் சொல்ல… ரிஷியும் அமைதி ஆனான் தான்… ஆனாலும் ரிஷியும் ஆவலாக இருந்தான்… அவள் என்ன கேட்கப் போகிறாள்… என்று அறிவதற்கு… அதே நேரம் அவள் கேட்கப் போவதை எப்பாடு பட்டாவாது செய்யத் தயாராகவும் இருந்தான்…
“ஓகே… எனக்கு…” என கண்மணி இழுத்து பின் நிறுத்த
“உனக்கு…” ரிஷி அதைத் தொடர….
“எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை ரிஷி… நீங்க இதைப் பண்ணனும்னு… உங்ககிட்ட கூட கேட்ருக்கேன்” கண்மணி தொடர்ந்து பீடிகை போட
“அப்படி என்னவாக இருக்கும்…” ரிஷி யோசித்துக் கொண்டிருக்கும் போதே…
“நீங்க செமையா குத்து டான்ஸ் போடுவீங்க தானே… உங்க காலேஜ்ல… அப்புறம் உங்க தங்கைங்க கூட… அப்புறம்… காலேஜ் வீடியோஸ்லாம் பார்த்துருக்கேன்… ரித்வி காட்டி யிருக்கா..” என்ற போதே
ரிஷியின் மொத்தமாக நொந்தவனாக
“ஏண்டி… எவ்ளோ நாள் ஆசைடி இது உனக்கு….”
“ரித்வி வீடியோ காட்னதுல இருந்து ரிஷிக்கண்ணா…” கண்மணி துள்ளளோடு சொல்ல…
“ஹ்ம்ம்ம்.. இப்போ உன் எமோஷன் எக்ஸ்பிரஷனை எல்லாம் இந்தக் குரல்ல காட்டு… என்ன ஒரு சந்தோசம் உன் குரல்ல… என் ரெண்டு தங்கச்சியும்… ரெண்டு விதம்… ஆனால் எனக்கு ஆப்பு வைக்கிறதுல மட்டும் ஒரே விதம்…” ரிஷி கடுப்பாகச் சொன்ன போதே
“நீங்க கேட்டீங்கதானே… நான் சொல்லிட்டேன் தானே… செய்வீங்களா மாட்டீங்களா…” கண்மணி அடம் பிடிக்க
“ஹான்… ஹான்… செஞ்சுருவோம்… பொண்டாட்டி கேட்டு செய்யாமல் இருந்தால் அது புருசனுக்கு அழகா…” என்றவன்
“சரி… இப்போ சொல்லுங்க… மேடம் உங்க சர்ப்ரைஸ் என்ன…” தன் காரியமே கண் என அந்த முனையில் மனைவியிடம் இருந்து வரும் வார்த்தைகளுக்காக கூர்மையாகக் காதைத் தீட்டிக் காத்திருக்க
“நான் எப்போ நீங்க சொன்ன டீல்க்கு ஓகேன்னு சொன்னேன் ரிஷி…… நீங்க சொன்னா நான் சொல்வேன்னு சொன்னானா என்ன… சஸ்பென்ஸ்னா சஸ்பென்ஸ்தான் பாஸ்… பை….. எனக்கு லேட்டாகிருச்சு… போன் பண்ணாதீங்க… அப்புறம் என்ன பாட்டுக்கு டான்ஸ் பண்ணலாம்னு யோசிச்சு வைங்க…” என்றவள் போனை வைத்தும் விட… ரிஷியும் அதற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்யவில்லை…
ரிஷியிடம் பேசிவிட்டு போனை வைத்தவள்… உற்சாகமாக… சந்தோசமாக வண்டியை எடுத்தவளின் நினைவுகளில் ஒரு வாரத்திற்கு முன் ரிஷி ஏர்போர்ட் செல்லும் முன் நிகழ்ந்த நிகழ்வுகள் இப்போது வந்து போயின..……
ரிஷி ஆஸ்திரேலியா சென்ற தினத்தன்று…. இவளிடம் சொல்லாமல் விமானநிலையத்துக்கு சென்ற நிலையில்… உற்சாகமும்… சந்தோஷமும் இன்றி… அதே நேரம்…. ரித்விகாவிடம் இவளைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிச் சென்ற கணவனின் வார்த்தைகளில் ஓரளவு சமாதானமானவளாக பள்ளிக்கு வந்திருந்தாள்… ரித்விகாவை இறக்கி விட்டு விட்டு… பைக் ஸ்டாண்டை நோக்கி வந்தவளுக்கோ… அவள் கண்களையே நம்ப முடியவில்லை… ஆம்… ரிஷி அவளுக்காக அங்கு காத்திருந்தான்…
இதை விட அதிகமான நாட்கணக்கில்… மாதக்கணக்கில் அவளை விட்டு பிரிந்திருக்கின்றான்…. சில சமயம் நேரில் சொல்லாமல்… அலைபேசியில் அழைத்தோ… குறுந்தகவலோ பறிமாறி சொல்லி சென்றிருக்கின்றான்… மிகவும் அரிதாக சொல்லாமலே கிளம்பிப் போய்விட்டு… சேர்ந்தபின் இவளுக்கு அழைத்துச் சொல்லி திட்டும் வாங்கி இருக்கின்றான்…
அப்போதெல்லாம் சாதாரணமாக எதிர்கொண்டவளால்தான் இப்போது முடியவில்லை… அவளுக்கே தெரிகிறது… தான் ரிஷியிடம் எல்லைகள் தாண்டுகிறோம்… அவனை மிகவும் எதிர்பார்க்கின்றோம்…. அது கிடைக்காமல் போகும் போது… உணர்வுகளின் தாக்கத்தில் வீழ்கிறோம் என்பதும்…. எப்போதிருந்து இப்படி மாறினாள்… அவளுக்கேத் தெரியவில்லை… ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்… சிறு விசயம் என்றாலும்… அவளுக்கு அவனது சமாதானம் இப்போதெல்லாம் தேவைப்படுகிறது… ஏன் இப்படி ஆனோம்… யோசனை ஒரு புறம் இருந்தாலும்… இது சரி இல்லை எனத்தெரிந்த போதிலும் அவளால் தவிர்க்க முடியவில்லை… இதோ இப்போதும் அப்படித்தான்…. ரிஷி அவளுக்காகக் காத்திருக்கின்றான்… அவளிடம் சொல்லாமல் போக வில்லை… அது போதாதா அவளுக்கு…
அவனைப் பார்த்தபோதே ஆயிரம் சந்தோச மத்தாப்புகள் அவளுக்குள் பூத்தூவ ஆரம்பித்திருக்க… கண்மணி தன் உணர்ச்சிப் பெருக்கை அடக்க முயற்சித்தாள் தான்… ஆனால் முடியவில்லை… பைக்கை பிடித்திருந்த கைகள் சந்தோசத்தில் நடுங்க… கண்களிலோ கணவனைக் கண்ட ஆனந்தத்தில் இலேசாக ஈரம் கசிய ஆரம்பித்திருக்க…
அவளுக்கே… தெரிகிறது… இந்த அளவு உணர்ச்சிவசப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பது… இது அதிகம் என்று… ஆனாலும் அது முடியவும் இல்லை… அதை மறைக்கத் தெரியவில்லை…
அவன் தன்னிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை என்று எவ்வளவுக்கெவ்வளவு வருத்தப்பட்டாளோ… அதே போல ஏர்ப்போர்ட்டுக்கு போகாமல் தன்னை பார்க்க வந்து நின்றிருக்கும் தன் கணவனைப் பார்த்த உடன் அவ்வளவு சந்தோசம் அவளுக்கு…
இவள் இப்படி இருக்க… இவளைப் பார்த்ததும் ரிஷியின் முகத்திலும் ஆயிரம் கதிர்களை வீசிய கதிரவன் போல ஒளி வந்திருக்க… கண்மணியோ இப்போது தன் பைக்கை நிறுத்தும் சாக்கில் ஒரளவு தனக்குள் சரி ஆகி இருக்க… முகத்தை மாற்றியபடி… அவன் முன்னே வந்து நின்றாள் தான்… எப்படி சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும்… அவளால் முடியவில்லை…. எப்படி பேசுவதும் என்றும் தெரியவில்லை… இருந்தும் சமாளிக்க நினைத்தாள்
அதே நேரம்… அப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை ஒருவர் அங்கு வந்து பைக்கை நிறுத்திவிட்டு… கண்மணியிடமும் பேசிச் செல்ல… தன்னை நிலைப்படுத்த அவகாசம் கிடைத்தது போல… அதைப் பயன்படுத்திக் கொண்டாள் கண்மணி… அந்த ஆசிரியைக்கு பதில் அளித்து சில வினாடிகள் பேசிவிட்டு… ரிஷியின் புறம் திரும்பியவள்… கண்சிமிட்டியவளாக
“பரவாயில்லையே… புதுசா வந்த மிஸ் எத்தனை மணிக்கு வருவாங்கன்னு… ரித்விகிட்ட கரெக்டா கேட்டு வந்துருக்கீங்க போல ரித்வி அண்ணா… அப்புறம் சைட் அடிச்சு முடிச்சுட்டீங்களா” கண்மணி கணவனைச் சீண்ட ஆரம்பித்திருந்தாள்… படபடத்த அவள் உள்ளத்தில் இருந்த உற்சாகத்தை எல்லாம் மறைக்கும் விதத்தில்
ரிஷி இப்போது அவளை முறைத்தபடியே
”கொழுப்புடி உனக்கு… ஓ மேடத்துக்குத் தெரியாது… நான் யாருக்காக வந்தேன்… யாரைப் பார்க்க வந்திருக்கேன்னு… அப்படித்தானே மேடம்…” என பல்லைக் கடிக்க… கண்மணியோ அதற்கெல்லாம் அசரவில்லை
“நான் கரெக்டாத்தான் பேசுறேன்னு நினைக்கிறேன்… பொண்டாட்டி வீட்ல இருக்கும் போது… அவகிட்ட சொல்லாமல்… அவ முகத்தைக் கூடப் பார்க்காமல் வந்தவர்… பொண்டாடிக்காகவா வந்திருப்பார்… அப்போ நான் சரியாத்தானே சொல்றேன்” என்றபடியே கைக்கடிகாரத்தைப் பார்த்தவள் முகம் மாறியது…
தேர்வுக்கு சரியாக 15 நிமிடங்கள் இருக்க… இவள் வேறு முன்னதாகப் போக வேண்டுமே… சற்று முன் காதலில் படபடத்த மனது… கடமையில் படபடக்க ஆரம்பித்திருந்தது… இருந்தும்… நேரத்தைப் பார்த்தபடியேதான் பேச ஆரம்பித்திருந்தாள்…
விளையாட்டாக பேசிக் கொண்டே வந்தவளின் வார்த்தைகள்…. எப்படி திடிரென தீவிரத் தொணியில் உணர்ச்சி வயமாகியது என்று அவளுக்கேத் தெரியவில்லை
“என்னை மட்டும் பார்க்காமல் போயிருந்தீங்க….” எனும் போதே… அவள் கண்களில் கண்ணீர் வந்து விட…
“ஏய் என்னடி” பதறியபடி ரிஷி வேகமாக அவள் அருகே வரப் போக… அவனை விட்டு தள்ளிப் போனவளாக… வந்த கண்ணீரையும் அது வரும் முன்னே துடைத்தபடியே
“பெரிய அக்கறை… போயிருக்க வேண்டியதுதானே… பெரிய இவனாட்டம் முகத்தைத் திருப்பிட்டு இருந்தீங்க சார்…. இப்போ எதுக்கு வந்தீங்க… யாரைப் பார்க்க வந்தீங்க” கண்மணி அவனிடம் மூக்கை உறிஞ்சியபடி பேச… ரிஷி வார்த்தையின்றி அவளையேத் திகைத்துப் பார்த்தபடி இருக்க…
கண்மணியோ இப்போது
“சரி நான் வர்றேன்… எனக்கு லேட் ஆகியிருச்சு… லேப்க்கு போகனும்” நொடியில் மாறிய அவளின் வார்த்தைகளில்… ரிஷி திகைப்பு மறந்து உணர்வுக்கு வந்தவனாக
“ஏய்.. என்னடி திமிரா… ஃப்ளைட்டுக்கு லேட் ஆனாலும் பரவாயில்லைனு… உனக்காக வந்தால் என்ன விளையாடுறியா… அதெல்லாம் முடியாதுபேசிட்டு போ” ரிஷி அவள் அருகே வந்திருக்க
கண்மணி.. உண்மையிலேயே அவஸ்தையுடன் அவனைப் பார்த்தவள்…
“ஃபைவ் மினிட்ஸ் தான் இருக்கு ரிஷி…. நீங்க வந்தீங்கள்ள… இது போதும் எனக்கும்… என் மேல உங்களுக்கு கோபம் இல்லைனு தெரிஞ்சிருச்சு எனக்கு… இப்போ கண்மணி ஹேப்பி” என்றவளிடம்
“எனக்குப் போதாதே… என் பொண்டாட்டி கோபம் போயிருச்சான்னு எனக்குதெரியலையே..” ரிஷி கல்மிஷமாக அவள் அருகே நெருங்கி வந்து நிற்க… வேகமாக விலகியவள்…
“என் கோபம்லாம் எப்போதோ போயிருச்சு… உண்மையிலேயே ரிஷிக்கண்ணா…” சத்தியம் செய்யாத குறையாக அப்பாவியாக அவள் சொல்ல
“அப்படியா… ஆனால் எனக்கு அப்படி தெரியலையே… சரி கோபம் போயிருச்சுன்னு நம்பனும்னா” என அவன் அவளைப் பார்த்த பார்வையிலேயே…
”நம்பனும்னா” கண்மணி மிரட்சியுடன் கேட்டவள்… அவளையுமறியாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொள்ள
“வேற என்ன யூனிவெர்ஷல் லவ்வர்ஸ் சமாதான முத்திரையான… முத்தம் தான்… உதட்லலாம் வேண்டாம்மா…” எனும் போதே கண்மணியின் கண்கள் விரிய ஆரம்பித்திருக்க
“அதான் சொல்றேனே… லிப் டூ லிப் லாம் இல்லைனு… அப்புறம் எதுக்குடி இவ்ளோ பெரிய ரியாக்ஷன் கொடுக்கிறடி பொண்டாட்டி… அதாவது… கன்னம்… லிப் டூ சீக்.. அவ்ளோதான் சிம்பிள்…” எனும் போதே
“ஸ்கூல்ல வந்து நின்னுகிட்டு… என்ன பேச்சு இது” கண்மணி உண்மையாகவே முறைக்க… ரிஷி அடங்குபவனா என்னா
“ஸ்கூல்ல இருக்கிறதால… நீ மேத்ஸ் டீச்சர்ன்றதுனால… உன்கிட்ட கணக்குச் சூத்திரமாடி கேட்க முடியும்… எனக்கு என் பொண்டாட்டிக்கிட்ட என்ன கேட்க முடியுமோ… அதைத் தான் கேட்க முடியும்… சரி சரி.. கொடு… நான் கோபமா இல்லைனு… நீ நம்பிட்ட… அதே போல நான் நம்பனும்தானே… லேட்டாகுது… சீக்கிரம் சீக்கிரம்” ரிஷி வேகமாக அவளை நோக்கி எட்டுகள் வைக்க… கண்மணியோ பதறி… பின்னால் அடி எடுத்து வைத்தவளாக… தயங்கியவள்… ஒரு கட்டத்தில் சுதாரித்து… சுற்றி முற்றி தேட ஆரம்பித்தபடி… பின் வேகமாக குனிந்து அங்கிருந்த கூழாங்கற்களை பொறுக்கியவள்…
“பக்கத்துல வந்தீங்க… அவ்ளோதான்…” என அவனை நோக்கி கற்களைக் காட்டி குறி வைக்க….
“அடிப்பாவி… ரவுடி … நான் உன் புருசண்டி…”
“அதெல்லாம் வீட்ல… இல்லல்ல ரூம்ல… இப்போ ஒழுங்கா… சமத்தா… நல்ல புள்ளையா… ஏர்போர்ட் போவிங்களாம்…. இல்லை… ” என்றபடியே… விலகி திரும்பி நடக்க ஆரம்பித்திருக்க
“ஏய் ஏய்… அட்லீஸ்ட்… வாய் வார்த்தைலயாவது முத்தம்டி… “ ரிஷி ஏக்கமாகக் கேட்க… நின்றவள்… அவனை நோக்கித் திரும்பி…
“கல்லால முத்தம் வாங்கி இருக்கீங்களா… கண்மணியின் கணவர் அவர்களே“ கொஞ்சம் கூட இரங்காமல் ரிஷியிடம் அவன் மனைவி கேட்ட போதே… பள்ளியில் மணி அடிக்க ஆரம்பித்திருக்க… தன் விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டவள்… வேகமாக கல்லைக் கீழே போட்டபடி…
“பை…. பை… டைம் ஆகிருச்சு…. ரிஷி… கார்லாக்கு என் விஷ்ஷை சொல்லிருங்க… நெக்ஸ்ட் டைம் வர்றேன்னு சொல்லுங்க“ என்றபடியே… வகுப்பறையை நோக்கிப் போனவள்… இப்போது போகாமல்…. மீண்டும் திரும்பி அவனை நோக்கி வந்தவளிடம்… ரிஷி ஆச்சரியப் பார்வை பார்த்தபடியே… ஏதோ பேசப் போக
“ஷ்ஷ்ஷ்ஷ்” என தன் உதட்டில் விரல் வைத்து அவனைப் பேசாமல் இருக்குமாறு சொல்ல… இப்போது ரிஷி புரியாமல் புருவம் சுருக்கிப் பார்க்க… அவன் அருகில் வந்தவள்… இப்போது தன் உதட்டில் இருந்த விரலை எடுத்து அவன் உதட்டில் வைத்திருக்க… அவள் செய்கையில் முகம் மலர்ந்தவனாக…. அவள் விரல் மென்மையில் தன்னை இழந்தவனாக… தன் உதட்டில் வைத்திருந்த அவள் விரலில் இதழ் குவிக்க… இப்போது வெட்கச் சிவப்பில் கண்மணியின் முகம் சிவந்திருக்க… வேகமாக விரலை எடுத்தவள்… அதே வேகத்தில் அவனை விட்டும் கடந்திருக்க… சற்று முன் மனைவியின் விரல் தொட்ட உதடுகளை இப்போது புன்னகை தொட்டிருக்க… அதேப் புன்னகையோடு… விமானநிலையைத்தை நோக்கியும் சென்றிருந்தான்…. இதோ இன்று அவளோடு அங்கிருந்து பேசியும் இருந்தான்
அன்றையை நினைவுகளில் தன்னையுமறியாமல் புன்னகைத்தபடியே… தன்னவனின் நினைவுகளைச் சுமந்தவள்… தன் வயிற்றில் கை வைத்தபடியே…
“நீங்க அப்பா ஆகப் போறீங்கன்னு தெரியும் போது… தனசேகர் பையனா… அவரோட வாரிசா… உங்க வருத்தங்கள்… வேதனைகள்… பழி வாங்குற குணங்கள்… மிதமிஞ்சிய கோபம்… எல்லாம் உங்கள விட்டு போயிருக்கனும்… பழைய ரிஷியா… சிரிச்சுட்டே இருக்கிற ரிஷியா மாறனும்…” தனக்குள் சொல்லியும் கொண்டாள்…
----
அதன்பின் அடுத்த இரண்டு நாள் கடந்திருக்க…
“அம்மா… யாரோ கதவைத் தட்றாங்க…” ரிதன்யா தன் தாயை எழுப்பியபடியே… தானும் எழுந்தவள்… கடிகாரத்தைப் பார்க்க… மணியோ அதிகாலை 4.30 மணி…
“ரித்வி படிக்க எழுந்துருச்சுருப்பாள்ள… புக்ஸ் ஏதாவது தேவைப்பட்டிருக்கும் எடுக்க வந்திருப்பாளா இருக்கும்... கதவைத்திற ரிது” இலட்சுமி சொல்ல….
”நைட்டே படிக்க வேண்டிய புக்ஸ் எல்லாம் எடுத்துட்டுத்தானே மாடிக்குப் போனா…” ரிதன்யா தனக்குள் சொல்லியபடியே... இருவருமாக அறையை விட்டு வெளியே வந்து… கதவைத் திறந்திருக்க…
அங்கு நின்றதோ ரிஷி… கூடவே ரித்விகாவும் நின்றிருந்தாள்… இலட்சுமிக்குப் புரிந்தது… ரிஷி மாடிக்கு போய்விட்டுத்தான் இங்கே வந்திருக்கின்றான் என்று… ரிதன்யா அதெல்லாம் யோசிக்க வில்லை….
“அண்ணா… வர ரெண்டு வாரம் ஆகும்னு சொன்ன…. அதுக்குள்ள வந்துட்ட… எங்க பேக்கெல்லாம் காணோம்“ ரிதன்யா பாதித் தூக்க கலக்கத்தோடு… வந்தவனை உள்ளே விடாமல்… வாசலில் வைத்தபடியே கேள்விக் கனைகள் தொடுக்க
”ஏன் வர்றேன்னு சொன்ன நாளுக்கு முன்னால வந்தால் உள்ள விட மாட்டீங்களா என்ன…” என்றபடியே… உள்ளே வந்தவன்… நேராக தந்தையின் புகைப்படம் நோக்கிச் செல்ல… இலட்சுமிக்கும் ரிதன்யாவுக்கும் ஒன்றுமே புரியவில்லை…
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள்… ரிஷி யாரிடமும் ஏதும் பேசவில்லை… அவன் கண்களில் கண்ணீர் மட்டுமே வழிந்து கொண்டிருக்க…
“அப்பா… நான் இன்னைக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கேன்னு தெரியுதா உங்களுக்கு… இதப் பார்க்கிறதுக்குத்தான் நீங்க இல்லை… நம்ம கைக்கு நம்ம ஃபேக்டரி வரப்போகுது… உங்களோட கனவுகள்… எதிர்பார்ப்புகள் மறுபடியும் உயிர் பெறப் போகுது உங்கள என்னால காப்பாத்த முடியல…. அம்மா தங்கை இவங்களையும் கை விடாமல்… இப்போ கம்பெனியையும் மீட்டெடுத்துட்டேன்பா…. இப்போ சந்தோசமாப்பா… என் மேல நம்பிக்கை வந்திருக்காப்பா” தனக்குள் மௌனமாக இப்போது பேச ஆரம்பித்திருந்தான்
“ஆனால் உங்க மேல விழுந்த பழியை அதை என்னால ஒண்ணும் பண்ண முடியலைப்பா….. இல்லைனு காட்றதுக்கு ஆயிரம் ஆதாரம் இருக்கு…. அதை எல்லார்கிட்டயும் காட்டுவேன்… ஏன் அம்மாக்கு தெரிந்தால் கூட அதை சமாளிக்க முடியும்… ஆனால் உங்களுக்கு அதைச் சொல்ல முடியாதேப்பா… குற்ற உணர்ச்சில நொந்து செத்த உங்க மனசுக்கு அதைச் சொல்ல முடியலயேப்பா….. ஹர்ஷித் உங்க பையன்னு நெனச்சு என்கிட்ட அவனையும் பார்த்துக்கச் சொன்னீங்க… அதையும் நிறைவேத்திட்டேன்ப்பா… நாளைக்கு கோர்ட்ல அவனோட கையெழுத்து வாங்கிட்டோம்னா… அவன் ஆஸ்திரேலியா போயிருவான்… ஃபேபியோ அவனை பார்த்துக்கிறேன்னு… அவர் மகனா தத்தெடுத்து வளர்த்துக்கிறேன்னு சொல்லிட்டாருப்பா… ஹர்ஷித்தும் சரின்னு சொல்லிட்டான்… அவனை அந்த திருமூர்த்திக்கிட்ட ஒப்படைக்கலப்பா…. ”
“ஆனால் இவ்வளவு செஞ்ச என்னால அம்மாகிட்ட மட்டும் என்னால சொல்ல முடியலப்பா… பயமா இருக்குப்பா… அம்மாவால தாங்கிக்க முடியுமான்னு தெரியல… நீங்க தப்பு செஞ்சீங்கன்றதை சொல்றது பெரிய விசயமா படலை எனக்கு…. ஆனால் தப்பு செய்யாமல் மனசு நொந்து இறந்து போனீங்கன்னு அம்மாக்கு தெரிந்தால் அதுதான்ப்பா அவங்களால தாங்க முடியாது… உங்க இறப்பையே என்னால தாங்க முடியலை… துடிச்சுட்டு இருக்கேன்… இப்போ அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுனா… என்னால முடியாதுப்பா… உங்க மருமகள்கிட்ட கிட்ட எப்படியோ இதைச் சொல்லித்தான் அவளைச் சமாளிச்சு வச்சுருக்கேன்… ஆனாலும் அவ திட்றாப்பா… நான் அம்மாகிட்ட சொல்லாமல் இருக்கிறது தப்பாப்பா ” நினைத்த போதே அவன் கண்களில் கர கரவென கண்ணீர் வழிய…
அவன் முன் வந்து நின்ற இலட்சுமி… ரிதன்யாவின் கண்களிலும் நீர் வழிந்திருக்க
“என்னண்ணா… அப்பா ஃபோட்டோ முன்னால எப்போதும் வந்து நிற்க மாட்டியே… என்னன்னா ஆச்சு… ஏதாவது பிரச்சனையா… அழாதண்ணா… அம்மாவும் அழறாங்க பாரு” எனும் போதே ரிஷி வேகமாக கண்களைத் துடைத்து தன் அன்னையைப் பார்க்க… இலட்சுமியும் கண்ணீரைத் துடைத்தபடியே அவனைப் பார்க்க
”அம்மா… இனி நீங்க எப்போதுமே அழக் கூடாது… அழற சூழ்நிலையும் வராது…” என்று பேசிக் கொண்டிருந்தவன்… சிறிதி நேரம் அமைதியாக இருந்தான்…பின் அவனே இயல்புக்கு வந்தவனாக
“கண்மணி கோவிலுக்குப் போயிருக்காளாம்… போய்க் கூட்டிட்டு வர்றேன்…” எனச் சொல்லியபடியே… தன் அன்னையின் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல்…. சில நிமிடங்களில் தன் பைக்கை எடுத்துக் கொண்டு கண்மணி இல்லத்தை விட்டு வெளியேறி இருந்தான்… கோவிலையும் சென்றடைந்திருந்தான்….
---
கோவிலில் அம்மன் சந்நிதியின் முன் அமைதியாக அமர்ந்திருந்தாள் கண்மணி…. அவளுக்கே புரியவில்லை… தான் எடுத்திருக்கும் முடிவு சரிதானா… குழப்பமாக… தலையைப் பிடித்தபடி அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் எண்ணங்களில் தேவையில்லாத நினைவுகள் வேறு…
“ஏய் மணி… இங்க இன்னாத்துக்கு உட்கார்ந்துருக்க…. இப்டி உர்ருனு இருக்க… வா நீ… முதலாளிய நான் இன்னான்னு கேக்கிறேன்…. வான்னா வா… சொன்னாலாம் கேட்க மாட்ட நீ…” என உரிமையுடன் தோளைத் தொட்டு அவளை இழுத்துக் கொண்டு போன கரங்களை இன்று உணர்ந்த போதே… பதறியவளாக…. சுற்று முற்றி பரபரத்த பார்வை பார்த்தவள்… வேகமாகத் தட்டி விட… மருதுவின் குரல் அவள் அருகில்… மிக மிக அருகில் ஒலித்தது போல்… மன பிரமை… அவளையுமறியாமல் உடல் நடுங்க ஆரம்பித்திருக்க… மீண்டும் கண்களை மூடி தன்னை ஒருநிலைப்படுத்த ஆரம்பித்திருக்க… அவள் ஒதுக்கி வைத்திருந்த சிறு வயது எண்ணங்கள் எல்லாம் அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்க… அந்த நினைவுகள் எல்லாம் சிறு துளியும் அவளுக்கு சந்தோசத்தை கொடுக்க வில்லை… மாறாக அவளை ஆழிக் கடலுக்குள் அழுத்துவது போல இருக்க…. அந்த நினைவுகள் இன்னும் இன்னும் ஆழத்தில் அழுந்த ஆரம்பித்திருக்க…
தான் சாதரணமாக இல்லை…. குழப்பத்தின் உச்சத்தில் இருக்கின்றோம்… மன அழுத்தத்தில் புழுங்கிய நாட்களில் இருந்த கண்மணியாக மாறி விட்டோமா… அவளைச் சுற்றி பயம் மட்டுமே… எத்தனை பேர் இருந்தும் தான் மட்டுமே தனித்தீவில் இருப்பது போல மீண்டும் அவளுக்குள் அச்சம் வந்திருக்க…. வேக வேகமாக அலைபேசியை எடுத்தவள்… நடுங்கும் விரல்களால்… கிருத்திகாவின் எண்களை எடுத்து பேச நினைக்கும் பொதே…
“இல்லை வேண்டாம்…. ரிஷி அவங்ககிட்ட ஏதோ பேசிருக்காரு… ஆண்டியும் என்கிட்ட அதை மறச்சுருக்காங்க… ஆன்டிக்கிட்ட பேசினால் ரிஷிகிட்ட சொல்லிருவாங்க… பேசாத… வை ” தனக்குள் சொல்லியவளாக அந்த அலைபேசி கீழே வைத்த போதே
“கண்மணி” அவளது ரிஷியின் குரல் அவள் அருகே ஒலிக்க… அத்தனை பாதுகாப்பும் அவளைச் சூழ்ந்தது போல சந்தோசமாக நிமிர்ந்தவள்… அடுத்த நொடியே தன்னை மாற்றிக் கொண்டவளாக…. உணர்ச்சியின்றி அவனைப் பார்த்தபடியே இருக்க…
‘ஓய் என்னடி… புருசனைப் பார்த்த சந்தோசத்துல ஃப்ரீஸ் ஆகிட்டியா…” கேட்டபடியே ரிஷி அவள் அருகே அமர்ந்தவனாக…
“எப்படி என் சர்ப்ரைஸ்… ரியாக்ஷன் கூட கொடுக்க முடியலை பாரு உன்னால” புருவம் உயர்த்த… இப்போது அவனைப் பார்த்து அமைதியாக புன்னகைத்தவளின் கன்னக் குழிகளைப் பார்த்து சிரித்தவன்…
“என்ன மேடம்… உங்க அடாப்ஷன் மம்மி கிட்ட ஸ்பெஷல் வேண்டுதலா என்ன… அப்டியே அவங்க மருமகனுக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க” வேண்டுமென்றே அவளைச் சீண்ட… அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்
“கார்லா… கான்வகேஷன் மிஸ் பண்ணிட்டீங்க போல...” கண்மணி இப்போது வாய் திறக்க…
“சத்யா சொல்லிட்டாராக்கும்…” என்று சொன்னவனுக்கு… கண்மணிக்கு இவன் வரப்போவது முன்னரே தெரிந்து விட்டது என்பதில் கடுப்பான பாவனை கொண்டவன்… சத்யாவுக்கு தனக்குள் அர்ச்சனை கொடுத்துக் கொண்டிருக்க
“அவரைத் திட்டாதீங்க… எப்போ வர்றீங்கன்னு சொல்லல… ஆனால் நாளைக்கு ஜட்ஸ்மெண்ட் டேட்னு சொல்லிட்டாரு… அவரும் இண்டென்ஷனா சொல்லல… வாய் தவறி சொல்லிட்டாரு… சோ எக்ஸ்பெக்ட் பண்ணேன்… இன்னைக்கு வந்துருவீங்கன்னு” கண்மணி அவனைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்க
”ஜட்ஜ்மெண்ட் டேட் சொன்னா… நான் வந்துருவேன்னு தெரியாதா… நீ சும்மாவே கோடு போட்டாலே ரோடு போடுவ… அவ்ளோ சொன்னா பத்தாதா உனக்கு” எனப் பொறிந்தவன்… அடுத்த நொடியே… குரலை மாற்றியவனாக
”சாரிடி… இன்னைக்கே ஊருக்கு கிளம்பனும்… நீ… அம்மா… ரிது.. ரித்வி… மாமா எல்லாம் நாளைக்கு வாங்க… ஹர்ஷித்தை மட்டும் இன்னைக்கு கூட்டிட்டு போகனும்… அவன் சைன் போட்ட பின்னால… அம்மாவை ஊருக்கும் கோர்ட்டுக்கும் வர வைக்கிற மாதிரி ப்ளான்… உனக்குப் பிடிக்காதுதான்… தெரியும்” என அவளைப் பார்த்தவன்
“ஹர்ஷித்தை இனி ஃபேபியோ பார்த்துக்குவாரு… எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா… ரிதன்யா மேரேஜும் இன்னும் ரெண்டு வாரத்துல… அப்புறம் நம்ம வீடு பூமி பூஜை… இது எல்லாம் விட… எங்க வீடு… என் அப்பாவோட நாங்க வாழ்ந்த வீட்டுக்கு உன்னை முதன் முதலா கூட்டிட்டு போற சந்தோசம்… நான் நானா இல்லை கண்மணி… நீ கேட்பேல்ல… சிரிச்சுட்டே இருக்கிற ரிஷி… இனி அந்த பழைய ரிஷியை பார்க்கப் போற…“ என அவள் கைகளைப் பிடித்தவனின் கண்களைப் பார்க்காமல்… அவன் வார்த்தைகளையும் கண்டு கொள்ளாமல்
“வீட்டுக்கு போலாமா” கண்மணி கேட்க… ரிஷியும் தன் வார்த்தைகளை நிறுத்தியவனாக
”என்னடி… விரதமா… இல்லை ஏதாவது நேர்த்திக் கடன்… அது இதுன்னு பண்ணித் தொலஞ்சியா… இவ்ளோ டயர்டா இருக்க… டல்லா பேசுற” ரிஷியின் வார்த்தைகளில் கடுப்பும் கோபமும் இருந்தாலும்… அவன் பார்வை அவளை ஆராய ஆரம்பித்திருக்க
“ப்ச்ச்… அதெல்லாம் இல்லை… காலையில யார் விரதம் இருப்பாங்க…. வாங்க போகலாம்” என எழுந்தபடியே… அவனுக்கும் கை கொடுக்க… அவள் கைப் பிடித்து எழுந்தவன்… வேறு ஏதும் பேசவில்லை…
இருவருமாக வெளியே வந்திருக்க… ரிஷி அவன் பைக்கை நோக்கிச் சென்று பைக்கில் ஏறி அமர்ந்திருக்க… கண்மணியும் அவன் அருகே வந்து நிற்க…
“உன் ஸ்கூட்டி…” ரிஷி கேள்வியாகக் கேட்டவன்
“ஸ்கூட்டிலதானே வந்த…”
“ஹ்ம்ம்… ஆனால் இப்போ உங்க கூடவே வர்றேன்… ஸ்கூல் போகும் போது என் பைக்கை வந்து எடுத்துட்டு போகிறேன்” என்றவள்
“ரிஷி..” என்று மட்டும் அழைக்க… இவனும் திரும்பிப் பார்க்க
“வீட்டுக்கு போக வேண்டாம்… ஒரு லாங்க் ட்ரைவ்… ப்ளீஸ்” வழக்கமாக அவனிடம் அவள் காட்டும் துள்ளல் இல்லை…
கண்மணியின் வேண்டுகோளில் ரிஷியின் எண்ணம் அவன் ஊருக்குச் செல்லும் நேரத்தை நோக்கி தாவி இருக்க…. அதைக் கணக்கீடு செய்தவனாக இருந்தவன் அப்போதும் அவளின் மாறுபாட்டை எல்லாம் உணரவில்லை… வெறுமை படர்ந்த அவள் கண்களையும் ஏனோ காணத் தவறி இருந்தான்…
”இல்லடி… இன்னொரு நாள் போகலாம்… உடனே கிளம்பனும்… அட்லீஸ்ட் ஒரு மணி நேரத்துக்குள்ள கிளம்பினால் தான்… ஊருக்கு சரியான நேரத்துக்குப் போக முடியும்… அங்க ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல… டைமுக்குள்ள ஹர்ஷித்தை சைன் போட வைக்கனும்… ஒவ்வொரு நிமிசமும் முக்கியம்டி… எவ்வளவு சீக்கிரம் கிளம்பனுமோ… அவ்ளோ சீக்கிரம் கிளம்பனும்… சத்யா ஹர்ஷித்தை கூட்டிட்டு இன்னேரம் கிளம்பியிருப்பார்… விக்கியும் நானும் இன்னொரு கார்ல போறோம்” ரிஷி அவளிடம் பேசிக்கொண்டே போக… கண்மணியும் அதற்கு மேல் அவனிடம் வாக்குவாதம் செய்யவில்லை…
“ஓகே… வீட்டுக்கே போகலாம்” என ஏறி அமர்ந்தவளிடம்…
“நாம ஏரியால ஒரு வித்தியாசம் தெரியுதே…. ரோடெல்லாம் அகலமாக்குறாங்க…” என்றவனிடம்
“நம்ம வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற அந்த பெரிய கிரவுண்ட வேறு யாரோ வாங்கிருக்காங்க போல… வீடு கட்ட போறாங்கன்னு சொன்னாங்க… ஷாப்பிங் மால் கட்ட இருந்த இடம்… இங்க இருக்கவங்க எல்லாம் விடல… இப்போ வீடுன்றதுனால பிரச்சனை பண்ணலை போல… அந்த சந்தோசத்துலதான் அந்த ஓனர் ரோட்டுக்கும் இடம் கொடுத்து அகலப்படுத்தச் சொல்லி இருக்கிறார் …”
“ஆனால்… அந்த ஓனர் நம்ம இடத்தையும் கேட்ருப்பான் போல கண்மணி… மாமாக்கு கூட ஓகே தான் போல… ” ரிஷி நக்கல் குரலில் சொல்ல… கண்மணி நம்ப முடியாத பாவனையோடும் புரியாமலும் புருவம் சுருக்கிப் பார்க்க
“சரி விடு…எது எப்படியோ… இனி கார்லாம் வரலாம் நம்ம ஏரியாக்கு… சோ நாமளும் கார் வாங்கறோம்… நம்ம வீட்ல நிறுத்தறோம்… அதுக்கப்புறம் நீயும் நானும் எங்கே வேணும்னாலும் போறோம்… ஓகேவா…” என்றவன்… அதோடு நிறுத்திக் கொண்டவனாக
“பார்த்து உட்காரு… ஏன் இவ்ளோ டயர்டா இருக்க… நைட் சாப்பிட்டியா.. ஸ்டார்ட் பண்ணவா” ரிஷி பேசிக் கொண்டே… கேள்விகளை அடுக்கிக் கொண்டே பைக்கை எடுக்க.. கண்மணியும் தலை ஆட்ட… பின்னால் திரும்பி அவளைப் பார்த்தவன்….
“ஹேய் ரௌடி… தலை ஆட்டுனா எனக்கு எப்படி தெரியும்… வாய்ல சொன்னாத்தானே தெரியும்… தூக்கம் வருதா என்ன… இப்போ யாரு உன்னை இவ்ளோ சீக்கிரம் எழச் சொன்னா…” என்றபடி பைக்கை ஸ்டார்ட் செய்தவன்… அடுத்த பத்து நிமிடத்தில் தன் வீட்டுக்கும் வந்திருந்தவன்… அடுத்த அரை மணி நேரத்தில் பரபரவென கிளம்ப ஆரம்பித்திருந்தவனாக… அனைத்து டாக்குமெண்ட்ஸையும் சரி பார்த்து பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க
ரிதன்யா… ரித்விகா… இலட்சுமி… நம்ப முடியாமல் ரிஷியிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர்…. ரிஷியும்… தான் இருந்த அந்த பரபரப்பிலும் அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் சொன்னபடியே கிளம்பிக் கொண்டிருக்க…
“அப்போ நாம இனிமேல நம்ம வீட்லதான்… நம்ம ஊர்லதான் இருக்கப் போறோமா…” ரிதன்யா சந்தோஷமாகக் கேட்க..
“ஏய் லூசு… அப்போ என் எக்ஸாம்… அது எப்படி எழுதுறது… சென்னை வந்துதானே ஆகனும்” ரித்விகா ரிதன்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல…
”ஆமால்ல… ஆனால் நீ வேணும்னா நீ மட்டும் திரும்பி சென்னைக்குப் போ… அங்கதான் உங்க கண்மணி அண்ணி இருக்காங்கள்ள… நான்லாம் இப்போதைக்கு வர மாட்டேன்” என்று சொன்னபடி… தன் அண்ணனைப் பார்க்க…
”ஜஸ்ட் கோர்ட் ஃபார்மாலிட்டிஸ் முடிச்சுட்டு…. வீட்டைப் பார்த்துட்டு உடனே சென்னைக்கு ரிட்டர்ன்” என்றபடி தன் அன்னையைப் பார்த்தவன்…
“ரிதன்யா மேரேஜ் இருக்குதானே… அப்டியே பெயிண்ட்… ரெனோவேஷன்னுனு…. வேலை இருக்கும்மா…. நம்ம வீட்ல இப்போலாம் தங்க முடியாது… பார்த்துட்டு மட்டும் கிளம்பிடலாம்… ஓகே தானேம்மா” ரிஷி தயக்கமாகச் சொல்ல
“நீ என்ன சொன்னாலும் சரி ரிஷிக்கண்ணா… அம்மா நீ சொல்றதைத் தட்டப் போறேனா” இலட்சுமி சொல்லி முடித்திருக்க… இப்போது ரிஷி கண்மணியைப் பார்த்தபடி… பெருமையாக புருவம் உயர்த்தியவன்… கண்மணியின் அருகில் நின்றவனாக
”நான் இப்போ எங்க அம்மாவோட ரிஷிக்கண்ணா…” என அவளைச் சீண்ட….
கண்மணி இதழ் வளைத்தவளாக
“நீங்க எப்போதுமே இலட்சுமி-தனசேகர் ரிஷிக்கண்ணாதான்… அதுதான் எப்போதும் நிரந்தரம்… எனக்கும் தெரியும்… நீங்க அதைப் புரிஞ்சுகிட்டால் சரி… எனக்கு சந்தோசம்” சொல்லி விட்டு வேலையில் கவனமாக இருப்பதைப் போல கண்மணி திரும்பி விட…
”இல்லையே… மேடத்துக்கு லைட்டா பொறாமை கண்ல தெரியுதே” என அவளைச் சீண்ட ஆரம்பித்த போதே… விக்கி வந்திருக்க….
”ஓகே… விக்கி வந்துட்டான்… அப்போ கிளம்பவா… நீங்க எல்லோரும் நாளைக்கு பிரேம் கூட வந்திருங்க” என ரிஷியும் கிளம்ப ஆயத்தமாகி இருக்க
கண்மணி வேகமாக அவனிடம் வந்து…
“ரிஷி…. “ என அழைக்க
“உங்க டாக்குமெண்ட்ஸ்லாம் கொடுங்க…. உங்களுக்குப் பிடிக்காதுதான்… நம்பிக்கை இருக்காதுதான்… ஆனாலும் என் நம்பிக்கைக்காக… சாமிகிட்ட வச்சு கும்பிட்டு தர்றேன்… ” என்றபடி அவனிடம் கேட்க
”லூசாடி நீ… இந்தா… தாராளமா உன் திருப்திக்காக…சாமிகிட்ட வச்சுக் கொடு…” எனத் தன் கையில் இருந்த பெட்டியை அவளிடம் கொடுத்தவன்…
”அதோட இதையும்” வை… என்றபடி… தன்னிடமிருந்த பேனாவையும் வெளியே எடுத்தான்…
“எனக்கு எத்தனையோ நல்ல விசயங்கள்… பெரிய பெரிய விசயங்கள் எல்லாம் ரீசண்ட் டேஸ்ல நடந்திருக்கு… அப்போதெல்லாம் இந்தப் பேனாவை யூஸ் பண்ணலை… நீ கொடுத்ததுடி… அப்போதே முடிவு பண்ணிட்டேன்…. என்னோட பிரஸ்டிஜியஸ் சைன்னா அது எங்க அப்போட ஃபேக்டரி டாக்குமெண்ட்ஸ்ல போட்ற சைன் தான்… அது இதுலதான் போடனும்னு… அதுவரை வேற எதுக்கும் போடக் கூடாதுன்னு வச்சுருந்தேன்… இதையும் சேர்த்து வை… உங்க மாமனார் சொத்தெல்லாம் அவர் மருமகள் கொடுத்த பேனாவால போட்ட கையெழுத்து மூலமா நமக்குத் திரும்பி வரட்டும்… ஆனாலும் உனக்கும் என் அப்பாக்கும் ஒரு ஜென்ம பந்தம் இருக்குதான் கண்மணி… எனக்கு என் மாமனார்கிட்ட இருக்கிற மாதிரி… ”
ரிஷி அவளிடம் பேனாவைக் கொடுக்க… இந்தக் கண்களில் எங்கிருந்துதான் இப்போதெல்லாம் நீர் வருகிறதோ… கசிந்த ஈரத்தை யாரும் அறியாமல் சட்டென்று துடைத்தபடி… தனசேகர் புகைப்படம் முன் வைத்து… பின் சாமி படத்திற்கு முன் வைத்தும் வைத்து ஆசிர்வாதம் வாங்கியவள்…
தன் அத்தையிடம் திரும்பி…
“அத்தை… அம்மா போட்டோ கிட்டயும்… வச்சு ஆசிர்வாதம் வாங்கிட்டு வர்றேன்… ரிஷி நீங்களும் வாங்க” என அவன் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போக… நட்ராஜ் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்…
”இதெல்லாம் என்கிட்ட கேட்கனுமா… போம்மா… சீக்கிரம் வாங்க… நாங்க இங்க எல்லாத்தையும் எடுத்து வைக்கிறோம்” என இலட்சுமி சொல்ல… ரிஷியும் கண்மணியும் மட்டும் பவித்ராவின் புகைப்படத்தின் முன் நின்றிருந்தனர்……
இருவருமாக மனமாற வேண்டிக் கொண்டபடி… ரிஷி கண்களைத் திறக்க
“ரிஷி… இந்தாங்க… கண்டிப்பா உங்களுக்கு வெற்றி கிடைக்கும்… ஆல் த பெஸ்ட்… கங்கிராஜுலேஷன்ஸ்… வாழ்த்துக்கள்” கை நீட்டியபடி முகமெங்கும் சந்தோஷத்துடன் அவன் கொடுத்த டாக்குமெண்ட்ஸை எல்லாம் சேகரித்து எடுத்துக் கொடுத்தவளிடம் சந்தோசமாக இவனும் கை கொடுத்து வாங்கிக் கொண்டவன்… அவள் கொடுத்த பேனாவையும் மறக்காமல் வாங்கிக் கொண்டவன்…
”இன்னும் ஏதோ மிஸ் பண்றியே அம்மு” வெளியில் கதவுப் பக்கம் பார்வையை வைத்தபடியே அவளிடம் மெல்ல நெருங்க… அவளோ விலகவில்லை… ஆனால் சீண்டியவனோ… நெருங்காமல் அவளிடமிருந்து விலகியவனாக
“சும்மா வம்பிழுத்தேன்… அத்தை இருக்காங்க…“ என்று புகைப்படத்தை நோக்கி கைகாட்டிக் கன்னத்தில் போட்டுக் கொண்டவனிடம்… கண்மணியும் சிரிக்க…
“ஓகே பை… நாளைக்கு உன் மாமனார் வீட்ல மீட் பண்ணுவோம் பொண்டாட்டி” என அவளிடம் மென்குரலில் சொல்லி விட்டு திரும்ப
”ரிஷி… ரிஷிக்… கண்ணா” அழைத்தபோதே கண்மணியின் குரலில் தடுமாற்றம் வந்திருக்க…. வேகமாக ரிஷி திரும்பிப் பார்த்த போதே….
அவன் உள்ளங்கையில் அவள் ஏதோ ஒன்றைத் திணிக்க… ரிஷி வேகமாகப் பார்க்க… ஒரு ரூபாய் நாணயம்….
அவனைப் பார்க்க முடியாமல் கண்மணி வேறு புறம் திரும்பி இருக்க… அவள் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல்
“ஏய் என்னடி இது… உன் லக்கி காயினா… ஓகே… தேங்க்ஸ்…” என தன் வாலட்டில் வைத்துக் கொள்ள…
”இது கொடுக்கிறதுக்கான சரியான நேரம் இப்போ வந்திருச்சு… ரிஷிக் கண்ணா… பை…” கண்மணி தன்னைச் சமாளித்து சொல்ல முயன்றாலும் முடியாமல் அவள் குரல் தழுதழுத்திருக்க…
அவள் நிலை கண்டவன்… அதற்கு மேல் தன்னைச் சமாளிக்க முடியாமல் முடியாமல் அவளை இழுத்தவன் …
“பைடி… ஐ மிஸ் யூடி ஏஞ்சல்.. ஐ லவ்யூடி என் லக்கி ஏஞ்சல் “ என அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன்… சட்டென்று ஞாபகம் வந்தவனாக…
“ஏய் நீ ஏதோ சர்ப்ரைஸ் இருக்குனு சொன்ன… எப்போ சொல்வ…” ரிஷி கேட்க...
அவன் கையில் வைத்திருந்த வாலட்டைக் கண்மணி பார்க்க
“அடிப்பாவி இந்த ஒரு ரூபாய் தானா… உன் லக்கி காயின என்கிட்ட கொடுத்ததுதான் அந்த சர்ப்ரைஸா” என நம்ப முடியாமல் கேட்க… கண்மணி உணர்ச்சி அற்ற பாவையாக… மேலும் கீழுமாகத் தலை ஆட்ட..
“ரொ…ம்… ப பெரிய சர்ப்ரைஸ்டி… இதுக்கு அவ்ளோ பில்டப் வேற அன்னைக்கு…” எனும் போதே விக்கி அழைத்திருக்க…. அதற்கு மேல் கண்மணியிடம் ரிஷி பேச்சை வளர்க்காமல்… வெளியே வந்திருக்க…
அனைவரிடமும் சொல்லிக் கொண்டு… ரிஷி விக்கியுடன் கிளம்பி இருந்தான்…
அன்று பாண்டிச்சேரி செல்லும் போது… ரிஷி காரை ஓட்டிச் சென்றான்… இன்றோ விக்கி அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தான்….
“மச்சான்… ஒரே ஹேப்பி போல…” விக்கி ரிஷியைப் பார்த்துக் கேட்க…
“ஆமாம்டா… சொல்றதுக்கு வார்த்தை இல்லடா… வேற ஒரு மனநிலைல வானத்துல பறந்துட்டு இருக்கேன்… அப்பா அவர் மட்டும் தான் என் ஞாபகத்துல இருக்கார்… அவரோட ஆத்மா இனி சமாதானமா நிம்மதியா தூங்கும் தானே விக்கி” நண்பனிடம் ஆதங்கமாக கேட்க
“கண்டிப்பாடா… அங்கிள் ஆத்மா கண்டிப்பா சமாதானம் ஆகும்டா… அவரை விடு… நீ சொல்லுடா…. இனி நீ நிம்மதியா இருப்பியா… அந்த பழைய ரிஷியா உன்னை இனி பார்க்கலாமாடா…” விக்கி பரிதவிப்பாகக் கேட்க
“இனி எனக்கென்னடா குறைச்சல்… அதெல்லாம் சரி… பெட்ரோல் குறைச்சலா இருக்குனு சொன்னியே… பெட்ரோல் பல்க்ல நிறுத்து… பெட்ரோல் போட்றலாம்” என தன் வாலட்டை எடுத்தபடியே சொல்ல
”டேய் நீ வை… நான் பார்த்துக்கறேன்…“ என விக்கி…. அவன் வாலட்டை அவனிடமே வைக்கச் சொல்லி ரிஷியின் கைகளைத் தள்ள… கண்மணி சற்று முன் கொடுத்த அந்த ஒரு ரூபாய் நாணயம் கீழே விழுந்திருக்க…
”என்னடா… ஒரு ரூபாய்லாம் வச்சுருக்க… சில்லறை எல்லாம் சிதற விடற அளவுக்கு எங்க வசூல்… எந்தக் கோவில் முன்னால கிடைச்சது” ரிஷியிடம் விக்கி நக்கலாக சொல்லி அவனை ஓட்ட… ரிஷிக்கு ஏனோ சட்டென்று கோபம் வந்திருந்தது… தன் கண்மணி கொடுத்த நாணயத்தை நண்பன் கேலியாகப் பேசியதை அவனால் ரசிக்க முடியவில்லை… அந்தக் கோபத்தில்
“தேவையில்லாமல் பேசாத… கடுப்பாகிருவேன்… டேய் உனக்கு ஞாபகம் இருக்கா… என் பொண்டாட்டி உன்னை ஒரு நாள் கதற விட்டாளே… சில்லறையா சிதற விட்டு… அதெல்லாம் ஞாபகம் இருக்கா… இவரு என்னைப் பேச வந்துட்டாரு” என்றபடியே அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து மீண்டும் உள்ளே வைத்த போதே….
“எனக்கு எப்போதும் கணக்கை முடித்துதான் பழக்கம்… யாரோட கணக்கும் என்கிட்ட எஞ்சி நிற்க கூடாது… முடிச்சுக்கலாம்…. இந்தாங்க” அன்று கண்மணி இவனிடம் ஒரு ரூபாயை நீட்டியபடி சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்திருக்க… மெல்ல ரிஷியின் கைகள் நடுங்க ஆரம்பித்திருந்தது…
முகமெங்கும் வியர்வை முத்துக்கள்… இன்று ரிஷியிடம் அவள் மீண்டும் ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்திருக்கின்றாள்… அந்த நாணயம்தான் இது என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை… ஆனால் ஏதோ ஒன்று அன்றைய தினத்தோடு சம்பந்தப்படுத்த…
“இதை என்கிட்ட ஏன் இன்னக்கு கொடுத்தா… எனக்கும் அவளுக்கும்.. எந்தக் கணக்கை முடிக்கிறாளாம்” நினைத்தபோதே…
சட்டென்று அவன் கைகள் அந்த நாணயத்தை மீண்டும் தவற விட்டிருந்தது… அவன் தவற விட்ட அந்த நாணயத்தை விக்கி குனிந்து எடுத்தபடியே அவனைப் பார்க்க ஆரம்பிக்க
எதிர்மறையாக எதையும் நினைக்க முடியவில்லை ரிஷிக்கு… மனம் நம்ப மறுத்தது தான்… அப்படி எல்லாம் இருக்காது… இது அவளோட லக்கி காயின்னு கொடுத்திருப்பா….
ஒரு வழியாகத் தன்னைச் சமாளித்து நண்பனைப் பார்த்தான்…
“என்னடா ஆச்சு… ” பேயறைந்தார்ப்போல இருந்த நண்பனைப் பார்த்து விக்கி கேட்க
“ஒண்ணும் இல்லை…” எனத் தடுமாறிய போதே… பெட்ரோல் போடும் நிலையம் வந்திருக்க…
‘நீ போடுடா… இதோ வர்றேன்” என அலைபேசியை எடுத்தபடி… வேகமாக தனியிடம் தேடிப் போனவன்… அதே வேகத்தோடு படபடத்தோடு எண்ணத்தோடு கண்மணிக்கு அழைக்க… அவளும் உடனே எடுத்திருக்க… அடுத்த மனதில் இருந்த சஞ்சலமெல்லாம் போயிருந்தது…
“என் கண்மணி போனை எடுத்துட்டாள்…” அவனின் சந்தோஷம் நானோ செகண்டுக்கு கூட நிலைக்கவில்லை
“என்ன ஆர்கே சார்… கிளம்பிப் போய் பத்து நிமிசம் கூட ஆகலை… உடனே போன்” எனக் கண்மணி கேட்டபடியே
“அப்புறம்… எப்போ… கண்மணி இல்லத்தை காலி பண்ணப் போறிங்க… எப்போதுமே கஷ்டப்பட்ற குடும்பங்களுக்கு எங்க வீட்டை வாடகைக்கு விட்றதுதான் வழக்கம்… நீங்க எப்போ காலி பண்றீங்கன்னு சொன்னா… நாங்க இங்க ப்ரோக்கர் கிட்ட சொல்லி வைக்கலாம்” கண்மணி மிகச் சாதாரணமாக பேச
“என்னடி லூசு மாதிரி பேசுற…” என்ற போதெரிஷியின் மனதில் மீண்டும் படபடப்பு வந்திருக்க
“க..ண்… மணி… அந்த காயின்…” தடுமாற்றத்துடன் ரிஷி கண்மணியிடம் ஆரம்பிக்க
“பரவாயில்லையே… கண்டுபிடிச்சுட்டீங்க போல… குரல்ல தடுமாற்றம் தெரியுது…. அதேதான்… நீங்க என்ன நினைச்சீங்களோ அதேதான்… எல்லாம் எண்ட் கார்ட்… ஐ மீன் உங்களுக்கு எனக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு… சர்ப்ரைஸ் இதுதான் மிஸ்டர் ரிஷிகேஷ்… உங்க வேலையை முடிச்சுட்டு வாங்க… நிதானமா பேசலாம்… அப்புறம்… நான் நாளைக்கு வர மாட்டேன்… என்னை எதிர்பார்க்காதீங்க… பை… இனி போன் பண்ணாதீங்க… எடுக்க மாட்டேன்… நேர்ல பேசிக்கலாம்” மிக சாதாரணமாகப் பேசி வைக்கப் போனவள்
“அப்புறம்.. அப்பா போன்ல ட்ரை பண்ணனும்னு நினைக்காதீங்க… உங்க வாழ்க்கையோட மிகப் பெரிய இலட்சியம் அதைப் பாருங்க… அதை முடிச்சுட்டு வாங்க… நேர்ல பேசலாம்… வெயிட் பண்றேன்… லீகலா முடிக்கிற வரை… நாம பேசித்தான் ஆகனும்… நேருக்கு நேர் மீட் பண்ணித்தான் ஆக வேண்டும்… அதுனால இப்போ உங்க அப்பா கம்பெனி விசயத்தை மட்டும் கான்செண்ட்ரேட் பண்ணுங்க…” அடுத்த நொடி… ரிஷியின் அலைபேசி நிசப்தம் ஆகி இருக்க…
ரிஷிக்கு கண்மணியின் வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை… நம்பாமல் இருக்கவும் முடியவில்லை…
“விளையாட்றாளா… ஏப்ரல் மந்த் ஃபுல்லா ஃபூல்ஸ் மந்த்னு விளையாட்றாளா… ”
”இல்லையே… இப்படிலாம் விளையாட்ற அளவுக்கு அவள் இம்மெச்சூர்ட் கிடையாது… என் மனசு என்ன பாடுபடும்னு அவள் யோசிக்காமல் இப்படி பேசுவாளா… அவளோட ரிஷிக்கண்ணாவுக்காக அவனை விட அவள்தானே யோசிப்பாள்… அப்புறம் எப்படி இப்படி பேசுவாள்…”
மனம் ஆயிரம் சமாதானங்களை எடுத்து விட… கண்டிப்பாக நாளை இங்கு என் முன்னால் வந்து நிற்பாள்… என் சந்தோஷ முகத்தைப் பார்க்க அவள் வராமல் வேறு யார் வருவார்… அவளை நேரில் பார்க்கும் போதுதான் அவன் மனம் சாந்தமடையும்… இப்போது குழம்பினால் பிரயோசனமே இல்லை…
அதே நேரம்… இப்போது அவளைப் போய்ப் பார்க்கும் சூழ்நிலையும் இல்லை…. ஹர்ஷித்தை உடனடியாக கிளப்ப வேண்டும்… தாமதித்தால் தன் அன்னைக்கு அத்தனை விசயமும் தெரிய வந்து விடும்… தெரிந்தால்… என்ன ஆகும் அடுத்து எதையும் அவனால் யோசிக்கவே முடியவில்லை
ஒரு நல்ல விசயம் நடக்கும் போது அதுவும் இத்தனை வருடங்களாக எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல நிகழ்வு… அதற்கு எந்தத் தடங்கலும் வரக் கூடாது…. மனதில் உறுதி எடுத்துக் கொண்டவனாக காரில் ஏறி வந்து அமர…
“என்னடா ஒரு மாதிரி இருக்க… ஆதவன் ஏதாவது பிரச்சனை பண்றானா …” என விக்கி இழுக்க…
”அதெல்லாம் இல்லடா… ஒண்ணுமில்ல…. நீ காரை எடு” அவன் குரல் அவனுக்கே கேட்காத தொணியில் சொல்ல… விக்கியும் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே வண்டியை எடுக்க
ரிஷியின் மனதில் ஆயிரம் பேரலைகள்… மனமெங்கும் கண்மணியின் அந்நியமான வார்த்தையாடல்களை நினைத்துப் பார்க்க… அது எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்க… அவனால் தாங்கவே முடியவில்லை… ஊரை நோக்கிப் போகவே முடியவில்லை
“டேய் மச்சான்… ரொம்ப தலை வலிக்குதுடா…. ஒரு மாதிரி இருக்குடா…. ஏதாவது ஒரு மெடிக்கல் ஷாப்ல நிறுத்துடா…. எனக்கு தூக்க மாத்திரை வாங்கிக் கொடுடா… தூங்கிறேண்டா… ஊர்ல மட்டும் என்னைக் கொண்டு போய் சேர்த்துருடா” என விக்கியிடம் படபடப்பாகச் சொல்ல…
விக்கி எவ்வளவோ கேட்டும் சொல்லாமல்…. தன் பிடிவாதத்திலேயே இருக்க… வேறு வழியின்றி… ரிஷி கேட்டது போக மாத்திரை வாங்கிக் கொடுக்க… ரிஷி அனைத்தையும் மறந்து தூங்கி இருக்க… அவனின் சொந்த ஊருக்கும் சென்றடைந்திருந்தான்….
எல்லாம் அவன் நினைத்தது போல சுமூகமாக முடிவடைந்திருக்க… இலட்சுமி ரிதன்யா… ரித்விகா… நட்ராஜ் என அனைவரும் அடுத்த நாள் வந்திருக்க… அனைவரும் அவனைச் சுற்றி இருக்க… அவன் தேவதை மட்டும் அவன் அருகே இல்லாமல் போயிருந்தாள்…
கண்மணி கண்டிப்பாக வருவாள் என்று எதிர்பார்த்து காத்திருக்க
“அவளுக்கு சூப்பர்வைசிங் வந்துருச்சுப்பா… வர முடியல… போன் பண்றேன்னு சொன்னா..” என மற்றவர்கள் கண்மணி வராததை இயல்பாக எடுத்துக் கொண்டு… தகவல் சொல்ல…
ரிஷிக்குள் அடக்கப்பட்ட கோபம் எரிமலை தனலாக கொப்பளிக்க ஆரம்பித்திருந்தது… அந்த எரிமலை வெடிக்கும் நேரம்… அவன் மனைவியைப் போய் சந்திக்கும் நேரம் எனச் சொல்ல வேண்டுமா என்ன???…
காத்திருப்போம்…
Nice update
Hoom iva kulamba arambichachu pola ini pirivu