அத்தியாயம் 85-2:
முக்கியமான ஒருவரைப் பார்க்கச் செல்கிறோம் என ரிஷி அழைத்ததும்… அவனுடனே கிளம்பி விட்டாள் தான்… ஆனால் யாரைப் பார்க்கச் செல்கிறோம் என்பது தெரியாமல்… ரிஷியிடம் கேட்டுக் கொண்டே வந்துகொண்டிருக்க… அவள் வந்து நின்றதோ அர்ஜூனின் முன்பு…
கண்மணி இப்போதோ ரிஷியை முறைத்தாள்…
”நம்ம அர்ஜூன் சார் தான் கண்மணி… சார்க்கு கூட்டத்துல பதில் சொல்ல முடியல…. அதுதான் ….தனியா பேசிறலாம்னு வந்தேன்..” கண்மணியின் கோபமான பார்வையில் ரிஷி நக்கலாகக் அவளுக்கு விளக்கம் அளிக்க
“ரிஷி…. இது என்ன விளையாட்டு… “ என்றவள்… அவனிடம் பேசாமல்
“அர்ஜூன்… நீங்க தாத்தாவோட கிளம்பலையா… தேவையில்லாமல் ரெண்டு பேரும் பிரச்சனையை விலை கொடுத்து வாங்குற மாதிரி இருக்கு… நீங்க முதல்ல கிளம்புங்க” அர்ஜூனை அங்கிருந்து கிளப்ப முயல… அர்ஜூனாவது அவள் பேச்சுக்கு மதிப்பளிக்க நினைத்திருப்பானோ என்னவோ… ரிஷி கண்மணியின் வார்த்தைகளுக்கு எல்லாம் மதிப்பே அளிக்கவில்லை…
”ஹலோ… ஹலோ…இரும்மா.. அர்ஜூன் சார் உன்கிட்ட சொல்லிட்டுத்தான் கிளம்பப் போனாரு… ஆனால் நான் தான் நிறுத்தி வச்சுருக்கேன்…. நீ பாட்டுக்கு அவரைக் கிளம்பச் சொன்னா என்னம்மா அர்த்தம்..” என்றபடியே…. ரிஷி… கண்மணியின் தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள… அர்ஜூன் முகம் சட்டென்று மாறி இருக்க
கண்மணியுமே ரிஷியின் இந்த மாதிரியான நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை…
முறைத்தபடியே அவன் கைகளைத் தோளில் இருந்து எடுத்து விட்டவள்… அதே நேரம். அவன் கைகளை விடாமல் அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முயல… ரிஷியோ ஆணி அடித்தார் போல ஒரு இஞ்ச் கூட நகராமல் நிற்க…
“ரிஷி… இது பழிக்கு பழி வாங்குற நேரம் இல்லை… அர்ஜூனைக் காயப்படுத்துறேன்னு சொல்லி…. என் மனசைக் காயப்படுத்திறாதீங்க…. அர்ஜூன் பண்ணின அதே தப்பை நீங்களும் பண்ணாதீங்க” எச்சரித்தாள் கண்மணி
“இங்க பாரு… நான் இவன் கிட்ட என்னைக்காவது வம்புக்கு போயிருக்கேனா…. இன்னைக்குமே உன் தாத்தாகிட்ட நான் பேசும் போது… இவன் தான் இடையில வந்தான்… அப்போ நான்… பதில் சொல்லி ஆகனும் தானே…. எனக்கும் இந்த அர்ஜூனை பழி வாங்கனும்ன்ற எண்ணம்லாம் இல்லை… அப்படி இருந்திருந்தால்… இதோ இன்னைக்கு வரைக்கும் எல்லாம் காத்திருந்திருக்க மாட்டேன்… “ ரிஷி சொன்ன போதே அர்ஜூன் அவனை எள்ளளாகப் பார்த்தவன்… அடுத்த நிமிடமே சிரிக்கவும் ஆரம்பித்தவன்
”என்ன பார்க்கிற… நீயெல்லாம் ஒரு ஆளே கிடையாது எனக்கு…என் முன்னால நின்னு திமிரா வசனம் பேசினா ஹீரோ ஆகிருவியா… அப்படிலாம் உன் மனசுல ஒரு நினைப்பு இருந்தால் அழிச்சுக்கோ… என்ன… இவளைக் கல்யாணம் பண்ணிட்டேன்னு பார்க்கிறேன்…. உன்னை எல்லாம் அன்னைக்கே போட்டுத் தள்ளிருக்கனும்… தப்பு பண்ணிட்டேன்… புள்ளப்பூச்சினு விட்டேன் பாரு அதுதான் நான் பண்ணின மாபாதக தப்பு… அதுக்கான தண்டனை தான் என் பக்கத்துல இருக்க வேண்டியவ… உன் பக்கத்துல நிற்கிறா… அனுபவிச்சுட்டு இருக்கேன்” சொன்ன போது அவன் வார்த்தைகளில் அத்தனை வலி… சொல்லி விட்டு அவனால் அவர்கள் இருவரையும் நேரில் கூடப் பார்க்க முடியவில்லை….
ரிஷி அர்ஜூனை அப்போது பாவம் பார்க்க வில்லை… கண்மணியிடம் திரும்பியவன்
“மிஸஸ் ரிஷிகேஷ்… இப்போ நீங்க என்ன பண்றீங்கண்ணா… சார்க்கு சில விளக்கம் கொடுக்கனும்… என்னன்னா… இந்த உலகத்திலேயே இவர் மட்டும்தான் உங்களுக்கு சரியான ஜோடின்னு … இவருக்கு மட்டும் தான் எல்லா தகுதியும் இருக்குன்னு…. நெனச்சுக்கிட்டு... இன்னும் சுத்திட்டு இருக்கார்… ”
கண்மணியின் கண்கள் கோபத்தில் தீப்பிழம்பாக மாறி இருக்க…
“என்கிட்ட அப்புறமா கோபத்தைக் காட்டலாம் மே..ட்..டம்… இப்போ என்ன பண்றீங்கன்னா… நோக்கு உன் ஆத்துக்காரர் மேல எவ்வ்வ்வ்வ்ளோ காதல் இருக்குனு மட்டும் இவாகிட்ட காட்டுங்க அது போதும்…” என்றவனின் பேச்சில்… கடுகடுத்த கண்மணிய முகத்தைப் பார்த்தபடியே
”எனக்கும் உங்க கோபம் புரியுதுங்க மேடம்… ஆனால் நீங்க தான் இங்க பேசனும்… இவனைலாம் நான் காதலிப்பேனான்னு சொன்னீங்க பாருங்களேன்… அதுனாலதான்… அந்த வார்த்தைலதான்…. தலைவர் இன்னும் அவருக்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமோன்னு இங்கேயே சுத்திட்டு இருக்காரு… அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லைனு உங்க வாயாலேயே சொல்லிட்டீங்கன்னு வச்சுக்கங்க…… அவரும் அவர் வேலையைப் பார்ப்பாரு… நாமளும் நம்ம வேலையைப் பார்ப்போம்… அவர் ஹீரோதான்… ஆனால் இன்னும் சின்னப் பையன் இல்லயேம்மா நம்ம அர்ஜூன்…. அவருக்கும் எல்லாம் நடந்து… காலாகாலத்துல நம்ம ஹீரோ சாரும் சம்சாரி ஆக வேண்டாமா…” ரிஷி சொல்லிக் கொண்டிருந்த போதே… கண்மணி சட்டென்று அவன் கைகளை உதறியவளாக அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க… ரிஷி அவளை விட்டான்தான்… அதே நேரம் நக்கப் பேச்சை எல்லாம் விடுத்தவனாக…
“சொல்லுடி… உன் புருசனோட தகுதியை எல்லாம்… ஆஸ்திரேலியால பார்த்ததானே… எத்தனை பொண்ணுங்க எனக்காக என் ஒரு பார்வைக்காக காத்திருந்தாங்கன்னு… ” கண்மணி இரண்டடி தூரம் சென்றிருக்க… வேகமாக கைகளை நீட்டி… கோபத்தோடு இழுத்து அவளைத் தன்னோடு சேர்த்து நிற்க வைத்தவன்… அதே வேகத்தில் தன் முகத்தை மாற்றியவன்
“சரி விடு… நானே சொல்றேன்…. என்னோட பெருமையை என் பொண்டாட்டி சொன்னா நல்லா இருக்கும்னு நெனச்சேன்… நீ சொன்னா என்ன… நான் சொன்னா என்ன” என்றபடி
“ஃபேபியோவோட என்னோட பார்ட்னர்ஷிப்… பிஸ்னஸ் டீல் உனக்குத் தெரியும் தானே….. எவ்வளவு இருக்கும்னு இந்த அர்ஜூனுக்கு சொல்லுவோமா…”
“இல்ல ’ஆர் கே’ இண்டஸ்ட்ரீஸோட பில்டப் இனிஷியல் ப்ளான் எவ்வளவு மில்லியன்னு சொல்லுவோமா….” யோசித்தபடியே… அவளிடம் கேட்க… கண்மணி இப்போது அவனை விட்டு மீண்டும் விலகியவள்… அங்கிருந்து நகரவெல்லாம் இல்லை…. ரிஷியை மட்டுமே பார்த்தபடி நின்று கொண்டிருக்க…
“என்னடா… ஓவரா பேசிட்டு இருக்க…” அர்ஜூன் கோபத்துடன் அவன் முன் வந்து நிற்க
”ஓவரா… இல்லையே இப்போதானே பாஸ் உங்ககிட்ட ஆரம்பிச்சுருக்கேன்… “ என ஆரம்பித்தவன்… அடுத்தடுத்து அவனுக்கு கிடைத்த வாய்ப்புகள்… கிடைக்கப் போகு வாய்ப்புகள் என பட்டியலிட்டு முடித்தவனால….
“இது எல்லாம்… என் அப்பாவோட சொத்தோ… என் முப்பாட்டன் சொத்தோ… எதுவுமே ஒரு பைசா கூட இதுல கிடையாது… எல்லாம் என் முயற்சில மட்டுமே… வந்தது…. இந்த பரம்பரை பணம்… அதை யூஸ் பண்ணி… பெரிய ஆளா காமிக்கிறது இதெல்லாம் பழைய ஸ்டைல் அர்ஜூன் சார்… ட்ரெண்டிங்க்ல இருந்து… பெரிய ஆளா காமிக்கிறதுதான் இப்போ புது ஸ்டைல்… பார்க்கறீங்களா… ” என்றவன்… அவனது அலைபேசியை எடுத்து…
“ஆஸ்த்திரேலியால இந்த இயரோட மோஸ்ட் ட்ரெண்டிங் அண்ட் ஃபேவரைட் ஆண்கள் இந்த கேட்டக்ரில அவார்ட் கிடைச்சிருக்கு… நாளைக்கு இந்த வாங்கத்தான் ஆஸ்திரேலியா போறேன்… எத்தனை கம்பெனியோட நெக்ஸ்ட் ஃபைவ் இயர்… நான் ப்ராண்ட் அம்பாசிடர்னு சொல்லவா… லிஸ்ட் கொஞ்சம் பெருசு… கேட்க தயாரா… எக்சட்ரா… எக்சட்ரா…. லிஸ்ட் எல்லாம் சொல்லவா… இப்போ சொல்லுங்க… இந்தத் தகுதியெல்லாம் இவ புருசனா இருக்கிறதுக்கு போதுமா… இன்னும் ஏதாவது வேணுமா… இல்லை இன்னும் ஏதாவது இருந்தால் சொல்லுங்க… அதையும் நம்ம லிஸ்ட்ல ஆட் பண்ணிறலாம்… நான் இவ வீட்ல மாடி ரூம்ல இருக்கிற சாதாரண ரிஷின்னு நீங்க நெனச்சுட்டு இருந்தீங்கன்னா… அது உங்க தப்பு… நீங்க இந்த RK பற்றின GK வ வளர்த்துக்கலன்னு நினைக்கிறேன் அர்ஜூன் சார்… இதுவரை ஏன் காட்டிக்கலேன்னா… எனக்கு இதெல்லாம் விட என் அப்பாவோட கம்பெனி கைக்கு வரனும்… அது கிடைச்ச பின்னாடிதான் என்னோட மத்த அடையாளம் எல்லாத்தையும் இந்த உலகத்துக்கு காட்டனும்… பேசனும்னு நினைத்தேன்… இப்படி என்னை முன்னாடியே பேச வச்சுட்டீங்களே… ” என்ற ரிஷி…. அர்ஜூனைப் பேச விடாமலேயே தொடர்ந்தான்
”அதெல்லாம் என் பிரச்சனை… அதெல்லாம் விடுங்க… நம்ம பிரச்சனைக்கு வருவோம்… அதாவது… இன்னொரு தடவை… தகுதி… கண்மணிக்கு ஏத்தவன் இல்லை… நீயெல்லாம் ஒரு ஆளான்னு…. நீ மட்டும் இல்லை… எவனாவது என்கிட்ட வந்தீங்க… அதோட காலி…. இப்போ சொல்றேன் கேட்டுக்க…. நான் மட்டும் தாண்டா அவளுக்கு இந்த ஜென்மத்துல இல்ல்லல்ல… ஏழு ஜென்மத்துக்கும்… இல்லை அவ எப்போ பொறந்தாலும்… எந்த உலகத்தில பிறந்தாலும்… அவளுக்காக அவளத் தேடி நான் போய்ட்டேதான் இருப்பேன்… எவனும் நெருங்க முடியாது… நெருங்கவும் விட மாட்டேன்… ” அழுத்தமாகச் சொன்னவன்…
“இங்க பாரு… இது உன் நல்லதுக்கு சொல்றேன்… புரிஞ்சுக்கோ… உனக்காக எவனாச்சும் பிறந்திருப்பா… அவளைப் போய்த் தேட்ற வழியப் பாரு… இன்னொரு தடவை பவித்ரா அத்தை… அவங்க வார்த்தை…அப்புறம்… நீ என்னைத்தான் முதன் முதல்ல காதலோட பார்த்தேன்னு… இவகிட்ட வசனம் பேசுனேன்னு வச்சுக்க… ” என்றவன்… கண்மணியைப் பார்த்துவிட்டு மீண்டும் அர்ஜூனிடம் திரும்பியவனாக
“இந்த சாதாரண பையன் கிட்ட.. ஹீரோ சார் மரியாதையைக் காப்பாத்திப்பீங்கன்னு நினைக்கிறேன்… அவ்ளோதான் ஹீரோ சார் நான் பேச வந்தது… இப்போ நீங்க கிளம்பலாம்…” என்று முடித்தவனாக… கண்மணியைப் பார்க்க… அவளோ ஆத்திரமும் படவில்லை… ஆவேசமும் படவில்லை…
“பேசீட்டீங்க தானே… முடிச்சுட்டீங்க தானே நான் கிளம்பலாமா….” என மிகப் பணிவாக கணவனிடம் உத்தரவு கேட்க… அதிலேயே அவளின் அடக்கப்பட்ட கோபம் ரிஷிக்கும் புரிய…
“நீ மட்டும் எங்க போகப் போற… நான் தானே கூட்டிட்டுப் போகனும்” என ரிஷி இப்போது பொறுப்பான கணவனாக மாறி இருக்க
”எனக்கு யாரும் தேவையில்லை… தனியா வீட்டுக்கு வர வழி தெரியும்” என்றவள்… அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றிருந்தாள்..
அர்ஜூனும்… ஏனோ ரிஷியிடம் வம்பு வளர்க்க வில்லை… கண்மணி ரிஷியிடம் கோபமாகச் செல்வதைப் பார்த்தே அவனுக்குள் ஒரு விதமான நிம்மதி வந்திருக்க… அதிலும் ரிஷி அவன் தகுதிகளைப் பற்றி அவனிடம் சொல்லச் சொன்ன போது… அவள் சொல்லாமல் நின்றதே அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தந்திருக்க… ரிஷியிடம் கோப முறைப்பை மட்டுமே காட்டி விட்டு அவனும் கிளம்பிச் சென்றிருந்தான்…
---
கண்மணி இல்லம்…
“மச்சான்… என் தாத்தா இங்க இருந்து இப்போதைக்கு வர மாட்டார் போலடா…. கண்மணி இல்லத்திலேயே செட்டில் ஆகிருவார் போலயே… சோலை மாறி இருக்கே இங்கேயே இருந்திறலாம்னு… ஆயிரம் தடவை சொல்லிட்டார்… இது போதாதுக்கு நட்ராஜ் சார் கூட பேச ஆரம்பிச்சவர் தான்… முடிக்கவே மாட்டேன்கிறாரே… “ விக்கி சலிப்பாகச் சொல்ல…
ரிஷி சிரித்தபடியே….
“விட்றா… அவரே தேடித் தேடி இன்னைக்குத்தான் கண்மணியைப் பார்த்திருக்கார்… பாசமழையைக் கொட்ட விட்டு… அவரை நாம ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்… நீ சொல்லு…. ரிது என்னடா சொல்றா…” என இருவருமாகப் பேச ஆரம்பித்தவர்கள்… மாப்பிள்ளை மச்சானில் தொடங்கி… நண்பர்கள் என எல்லா வகையிலும் அவர்கள் சந்தோசம் விரிந்திருக்க
”அண்ணா… மாமா…. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க… அண்ணி கூப்பிட்டாங்க” ரித்விகா அழைக்க…
“டேய் விக்கி… நீ போடா… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… நாளைக்கு வேற மெல்பர்ன் கிளம்பிடுவேன்… இப்போ விட்டால் முடியாது… “ என்றவன் அங்கிருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு விடைபெற்றபடி… பைக் நிறுத்தியிருந்த இடத்திற்குச் செல்ல… அவனுக்கும் முன் கண்மணி அங்கு வந்து நின்றிருந்தவள்…
”சாப்பிட்டுட்டு போங்க…” என அமைதியாக கண்மணி அவன் முன் வந்து நிற்க…
”பசி இல்லடி…” அவள் முகத்தைப் பார்க்காமலேயே…. பைக்கை ஸ்டார்ட் செய்திருக்க…. அவனைப் போக விடாமல் பைக்கை ஆஃப் செய்தவளாக…
“அப்போ தப்பு செஞ்சிருக்கோம்னு தெரியுது… முகத்தைக் கூடப் பார்த்து பேச முடியல சார்க்கு… அந்த அளவுக்கு மனசாட்சி இருந்தால் போதும்” கண்மணி அவனின் முகம் பார்த்துக் கேட்க… அப்போதும் மௌனத்தின் உருவமாகவே ரிஷி தொடர… பைக்கில் இருந்து கையை எடுத்தவள்…
“இப்போ போங்க… நைட் அதோ அந்த மாடி ரூம்க்குத்தானே வரணும்… அப்போ பார்த்துக்கிறேன்… கிளம்புங்க என்றபடி கண்மணியும் வழியை விட… பதிலேதும் சொல்லவில்லை ரிஷி… அடுத்த நிமிடமே கண்மணி இல்லத்தை விட்டு வெளியேறி இருந்தான்…
---
ரிஷி மீண்டும் வந்த போது மணி இரவு பத்து மணிக்கும் மேலாக ஆகி இருக்க… கடந்த இரண்டு நாட்களாக அனைவரும் ஓய்வின்றி அலைந்த காரணத்தாலோ என்னவோ… வெகு சீக்கிரமாக இரவு உணவை முடித்து விடுத்து உறங்கி இருந்தனர்..
ரிஷியும் இரவு உணவை வெளியே முடித்து விட்டு வந்திருக்க… ஒரு வித தயக்கத்தோடுதான் மாடிக்குச் சென்றான்… அவனுக்குத் தெரியும் கண்மணி கோபமாக இருக்கின்றாள் என்பது… அதே நேரம் அவளை எப்படி சமாளிப்து என்பதும் அவனுக்குத் தெரியும்… ஒரு முறை தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டவனாக… அறைக்குச் செல்ல… எதிர்பார்த்தவாறே… கண்மணி.. இன்னும் உறங்க வில்லை…
“ம்ஹ்க்கும்….” என்றபடியே சுவரில் சாய்ந்தபடி தரையில் ஏதோ படித்துக் கொண்டிருந்த மனைவியின் அருகில் போய் நல்ல பிள்ளை போல் அமர்ந்தான் ரிஷி… அவளோ… நிமிர்ந்து பார்க்காமலேயே இன்னுமே புத்தகத்தை விட்டு தலையை விலக்காமல் இருக்க
“சாப்பிட்டியா…” மென்மையான குரலில் கேட்டபடியே… அவள் தோள் உரசும்படி நெருங்கியவனிடம்… கண்மணி பதிலே சொல்லவில்லை…
“கேட்கிறேன்லடி… சாப்பிட்டியா… ”
“சாப்பாடு எடுத்துட்டு வரவா…. நீ சாப்பிட்டு இருக்க மாட்டேன்னு தெரியும்… நான் வருவேன்னு பார்த்துட்டே இருந்துருப்ப… என் போன் காலை எதிர்பார்த்துட்டு இருந்துருப்ப… சாரிடி…. உன்கிட்ட பேச முடியல… நான் டின்னர் முடிச்சுட்டேண்டி… சாரிடி…” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்…
கோபமோ… என்னவோ… கண்மணியுமே வழக்கம் போல் சாப்பிடாமல் இவனுக்காக காத்திருக்கத்தான் நினைத்தாள்… ஆனால் முன்னர் போல இவளால் இருக்க முடியவில்லை இப்போதெல்லாம்… அகோரப் பசி… தாங்கவே முடியவில்லை… அப்போதும் இவனுக்காக காத்திருக்கத்தான் நினைத்தாள்… ஆனாலும் முடியவில்லை… பிடிவாதமாவது, கோபமாவது, வழக்கமாவது… வீட்டில் மற்ற அனைவரும் சாப்பிடும் போதே அவர்களோடே அமர்ந்து சாப்பிட்டும் விட்டாள்…
இப்போது ரிஷி… தான் சாப்பிட்டு இருக்க மாட்டேன் என நம்பி… இப்படி வேறு கேட்க… அவன் மீது மட்டும் இல்லாமல் தன் மீதும் கோபம் வந்திருக்க… அத்தனை கோபத்தையும் இழுத்துப் பிடித்தபடி அமர்ந்திருந்தவள்
”இப்போல்லாம் யாருக்காகவும் காத்திருக்கிறது இல்லை… யாரும் ஊட்டி விடனும்னு எதிர்பார்க்கிறதும் இல்லை…” சட்டென்று சொன்னவளிடம்
“ஏய் கோபப்படாதடி…. உனக்காகத்தாண்டி… வேகமா வந்தேன்… நீ சாப்பிடாமல் இருப்பேன்னு தெரியும்… எனக்கு போன் பண்ணவே இல்லை… பொய் சொல்லாத… நீ சாப்ட்டுருக்க மாட்ட…” நம்பாமல் ரிஷி அவளைப் பார்த்தபடியே… அவளிடம் பேசாமல் வேகமாக… ரித்விகாவுக்கு அழைக்க அவளும் கண்மணி சாப்பிட்டு விட்டாள் என்பதைச் சொல்ல… ரிஷியும் அதற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்யவில்லை…
”சாப்பிட்டுட்டேனா… ஓகே… ஹேப்பி” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே….
கண்மணி இப்போது புத்தகத்தை மூடிவிட்டு எழுந்திருந்திருக்க… வேகமாக அவளது கையைப் பிடித்து ரிஷியும் நிறுத்தி இருக்க… நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவளிடம் ஏதோ ஒரு காகிதங்கள் அடங்கிய தொகுப்பையும் கொடுத்திருக்க…
கண்மணி ஏனோ அவளை மீறின நிலையில் இருந்தாள்… சராசரி மனைவியாக மட்டுமே அவள் இருந்திருப்பாளோ என்னவோ!!!!.
அவன் கொடுத்தது என்ன என்று கூடப் பார்க்காமாலேயே சட்டென்று தூக்கி எறிந்திருக்க… தூரமாய்ப் போய் விழுந்திருந்த அந்தக் காகிதங்களைப் பார்த்தபடியே
”ஏய்” கோபத்தோடு ரிஷி இப்போது அவளைப் பிடித்து இழுக்க… அமர்ந்திருந்த அவன் மீதே விழுந்திருந்தாள் கண்மணி…
“இப்போ எதுக்குடி இவ்ளோ கோபம்… அப்படி என்ன நான் என்ன சொன்னேன் அந்த அர்ஜூன் கிட்ட… என்னவோ சொல்லுவ… உங்கள இப்படி புரிஞ்சு வச்சுருக்கேன்… அப்படி புரிஞ்சு வச்சுருக்கேன்னு… அந்த அண்டர்ஸ்டேண்டிங்லாம் எங்க போச்சு… நான் ஏன் அவன் கிட்ட அப்படி பேசினேன்னு உனக்கு புரிஞ்சுக்க முடியலையா… பெருசா இவ மாதிரி காலையில இருந்து இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு சுத்திட்டு இருக்க…” என்றவன் அவள் தன்னை விட்டு எழுந்திருக்கவே முடியாதபடி… அவளைத் தனக்குள் கொண்டு வந்திருக்க… கண்மணி விலக முயற்சித்தபடியே
‘ஒருத்தங்க மனசைக் காயப்படுத்துறது தப்பாத் தெரியலையா ரிஷி…” கண்மணி கேள்வியாகக் கேட்க
“கசப்புனு தெரிஞ்சும் மருந்து ஏன் சாப்பிடறோம்…” இவனும் எதிர்க் கேள்வி கேட்டவன்…
“ஏன் நீ… கந்தம்மாள் பாட்டிகிட்ட என்ன பண்ணின… நாம ரெண்டு பேரும் எப்படி இருக்கோம்னு அவங்ககிட்ட காட்டலையா… அதே மாதிரிதான் இதுவும் “ சாதரணமாகச் சொன்னவனிடம்
“அவங்ககிட்ட நான் பேசினதும்… அர்ஜூன் கிட்ட நீங்க பேசினது ஒரே மாதிரியா ரிஷி”
“என்னைப் பொறுத்தவரைக்கும் ஒண்ணுதான் கண்மணி… அர்ஜூனுக்கு இன்னும் நிதர்சனம் புரியலை கண்மணி… அவரால உன்னை விட்டு போக முடியலை… அது அவர்க்கு மட்டும் இல்லை…. நமக்குமே நிம்மதி இல்லாத நிலைதான்… இந்த மாதிரி அவர்கிட்ட பேச ஆரம்பித்தால் தான் மெல்ல மெல்ல அவர் அவரோட வாழ்க்கையைப் பற்றி யோசிப்பார்… புரிஞ்சுக்கோடா அம்மு” கண்மணியிடம் சொல்ல
அமைதியாக அமர்ந்திருந்தவள்…
“அர்ஜூனை விடுங்க…” என்ற போதே கண்மணியின் கோபம் பாதி அளவு குறைந்திருக்க…. ரிஷியும் அவள் இப்போது முதலில் இருந்த அளவுக்கு கோபமாக இல்லை என்பதை உணர்ந்தவனாக… அவள் அடுத்து என்ன கேட்க வருகிறாள் என்று யோசித்தவனாக
“இங்க பாரு கண்மணி… அடுத்து நீ என்ன கேட்கப் போறேன்னு தெரியும்… சொல்லிக் காட்டனும்னு நினைக்கவெல்லாம் இல்லை…. இந்த மகாராணிக்கு ஏத்த மாதிரி… அட்லீஸ்ட் கொஞ்சமாவது என்னை உயர்த்திக்கனும்னு எனக்குள்ள வெறி இருந்துச்சு… அது உண்மைதான்… இப்போ கூட இந்தக் கண்மணிக்கு ஏத்தவனா நான்… அந்தக் கேள்வி இருக்குதுதான்… ஆனாலும் பரவாயில்லை… கூடுதலோ… குறைச்சலோ.. அவளுக்கு நான் தான்… நான் மட்டும் தான்… அதுல தெளிவா இருக்கேன்… நான் உன்கிட்ட அப்படி பேசினது உனக்கு ஹர்ட்டா ஆகி இருக்குன்னா… ஆயிரம் மன்னிப்பு கேட்டுக்கிறேன்… ப்ளீஸ்டி… உனக்கு தெரியாதாடி என்னைப் பற்றி“ என்றவனிடம்
முறைத்தவள்…
“அது எப்படி ரிஷி… எல்லாம் பண்ணிட்டு… எல்லாம் பேசிட்டு… நான் பண்ணினது தப்புதான்… தெரிஞ்சுதான் பண்ணேன்…சொல்ல முடியுது… என்ன ஒரே ஒரு முன்னேற்றம்னா… மன்னிப்புலாம் கேட்க மாட்டீங்க… இன்னைக்கு என்ன புதுசா மன்னிப்பெல்லாம்…” கடுப்பும் நக்கலுமாகக் கேட்டவள்…
“எப்படியோ… மனசுல…நான் அன்னைக்கு கேட்ட வார்த்தை இன்னும் ஒரு ஓரத்துல இருக்குதானே… ” என்று அவனைப் பார்த்தவளின் கண்களில் கோபத்தோடு வலியும் இருக்க
”சோ… இப்போ இதைப் பற்றி பேசி என்கிட்ட சண்டை போடனும் அதுதானே் வேணும் உனக்கு… ” என்றவன்…
“சண்டை போடு… உனக்கில்லாத உரிமையா… ஆனால் இப்போ வேண்டாமே…. எனக்கு சண்டை போட்ற மூட் இல்லை… தூக்கம் வருதுடி… கடந்த ரெண்டு நாளா… ஒழுங்கான தூக்கமே இல்லடி…. அவ்ளோ டயர்ட்… உன் ரிஷிக்கண்ணாவைப் பார்த்தால் பாவமா தெரியலையா உனக்கு… ப்ளீஸ்டி… வேணும்னா ஒண்ணு பண்ணு… மார்னிங் அலார்ம் வச்சு எழுப்பி சண்டை போடு… நானும் கேட்கிறேன்… ஆனால் ஒண்ணு சொல்லவா… எதுக்கு தேவையில்லாத சண்டைனுதான் தோணுது… ஏன்னா… எல்லாம் பண்ணிட்டு… நானும் வெட்கமே இல்லாமல் கண்மணி என் அம்முனு வரப் போறேன்… நீயும் ரிஷிக்கண்ணான்னு வரப் போற… அதுக்கு எதுக்கு சண்டை… சண்டைக்குனு ஒரு மரியாதை இருக்கு அம்மு… யோசிச்சுக்க ” என்றவன் அவளைத் தள்ளி அமர வைத்து எழுந்து படுக்கையில் போய்ப் படுத்தும் இருக்க….
கண்மணிக்குத்தான் இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை…. எதிர்த்து வாதம் செய்தால் பேசலாம்… இப்படி பேசினால் என்ன செய்வது…
வேறுவழி… கடுப்போடு தலையணையை வேகமாகப் போட்டபடி.. அவனருகில் படுத்தவளைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டவன்… சிரிப்பை வெளியே காட்டாமல்…
“இதுதான் என் பொண்டாட்டி… செல்லப் பொண்டாட்டி… கண்மணி என் கண்ணின் மணி” என்றபடி அவள் மேல் கை போட… பட்டென்று தட்டி விட்டவளிடம்
“ஹேய்… இங்க பாரு… கோபப்பட்றது பொண்டாட்டியா உன் உரிமை… கோபத்தோட படு… ஏன்னு கேட்டேன்னா சொல்லு… அதே மாதிரி.. உன் மேல கை போட்றது புருசனா என் உரிமை… அதுல ஏதாவது சொன்ன… அவ்ளோதான்… உன் உரிமை உன்னோட… என் உரிமை என்னோட… “ என்றவனிடம்
“உங்கள எல்லாம் வச்சுக்கிட்டு…. ஐயோ… ஒண்ணும் பண்ண முடியாது… கை மட்டும் நகரட்டும்… அப்புறம் இருக்கு” எனும் போதே
“பண்ணலாம்…பண்ணலாம்… ஆயிரம் பண்ணலாம் அம்மு… இன்னைக்கு நீ கோபமா இருக்க… அதுனால காட்ட முடியல” என்றவனிடம்… இவள் முறைக்க
“கண்மணி மேடம் உங்க கோபத்துக்கு மதிப்பு கொடுக்கிறேன்…. மனைவிக்கு மரியாதை” பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் பலத்த அடி அவன் மனைவியின் கையால் விழுந்திருக்க… வலி தாங்க முடியாமல் கைகளை அவளிடமிருந்து எடுத்தவன்…
“ஏய் ஏண்டி வலிக்குது… எனக்கு என் பைக் ஞாபகம் வந்துச்சுடி…. முதன் முதலா என் சம்பாத்யத்துல… என் உழைப்புல… வாங்கினது… ” செய்வதெல்லாம் செய்து விட்டு…. நல்லவன் போல் வீர வசனம் பேசிய போதே… அவள் அவன் புறம் திரும்பி இருக்க
“ஓகே ஒக்கே… லிமிட் ஃபிக்ஸ் பண்ணிக்கிறேன்… கோபமா இருக்கீங்கள்ள மேடம்…” என்றவன் அப்போதும் தன் குறும்பை விடாமல்..
”எக்ஸ்கியூஸ்மி டீச்சர்… இந்தக் காதல் முத்தம்… காம முத்தம்… சைவ முத்தம்… அசைவ முத்தம்… இந்த மாதிரி கோப முத்தம்… அப்படி ஏதாவது இருக்கா…”
கண்மணி சமாளிக்க முடியாமல் ஒய்ந்து போன பார்வையால் அவனைப் பார்க்க… அவள் பார்த்த பார்வையில்
”சரி சரி விடு… டீச்சருக்கே தெரியலையா… டீச்சர் ரொம்ப பிரிலியண்ட்னு ஊர்ல சொல்லிக்கிட்டாங்க… அப்படிலாம் இல்லை போல… அப்போ ஸ்டூடண்ட்ஸை எல்லாம் ஏமாத்திட்டு இருக்கேன்னு சொல்லு” எனும் போதே
அவன் வாயில் இப்போது அடி விழுந்திருக்க…
“இதுக்கு பேர் தான் கோப முத்தம்… கையால உதட்டுல கிடைக்கும்” என்றவளிடம்
“ராட்சசி…. ரௌடி…” அடி வாங்கிய வலியோடும் இவன் பேச… அவள் மீண்டும் கைகளை உயர்த்தப் போக
”சரி சரி… குட்நைட்” என்றவன் அதற்கு மேல் அவளைப் படுத்தாமல் கண்களை மூடி படுத்தவன்… சில நிமிடங்களிலே தூங்கியும் இருக்க… கண்மணியும் உறங்க முயற்சித்தாள் தான்… அவளுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை… ரிஷியின் கை பாரம் மொத்தமும் அவளை அழுத்த ஆரம்பித்திருக்க… அதில் இருந்தே அவன் நல்ல உறக்கத்திற்கு போய் விட்டான் என்பது புரிய… மெல்ல ரிஷியின் கைகளை விலக்கி அவன் புறம் திரும்பி… அவன் முகத்தைப் பார்த்தபடியே இருந்தவள்…
“அலார்ம் வச்சு சண்டை போட்ற ஆளப் பாரு” அவன் நெற்றியில் முத்தமிட்டவளை… தூக்கத்திலேயே அனிச்சையாக மீண்டும் அவன் கைகள் வளைக்க… அவளும் அவன் மார்பில் துஞ்சியவள் தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்… ஆனாலும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை… ரிஷியை எழுப்பவும் மனம் வராமல் அவன் முகத்தையே பார்த்து, கொண்டிருந்தாள் கண்மணி…
நிமிடங்கள் கடந்திருக்க… கண்மணிக்கும் தூக்கம் வருவது போல் இருக்க… மெல்ல கண் உறங்கப் போக… அதே நேரம்.. ரிஷியின் அலைபேசி ஒலிக்க… நேரத்தைப் பார்த்தாள் கண்மணி
சற்று தள்ளி ரிஷி அவன் அலைபேசியை வைத்திருக்க.. ரிஷியின் தூக்கம் கெடாமல் மெல்ல அவனை விட்டு எழுந்தவள்… அலைபேசி இருந்த இடத்திற்கு செல்வதற்கும்… அலைபேசி ஒலி அழைப்பு நிற்பதற்கும் சரியாக இருக்க … எடுத்துப் பார்க்க ஏதோ ஒரு எண்ணில் இருந்து வந்திருந்தது அழைப்பு…
கண்மணியின் புருவம் சுருங்கியது…. இந்த நேரத்திற்கு ரிஷிக்கு அழைப்பு என்றால் அது சத்யாவிடம் இருந்துதான் வந்திருக்கும் என நினைத்து வந்தவளுக்கு… அது எண்ணாக இருக்க… யாராக இருக்கும்… ஒரு வேளை சத்யாதான் ஏதோ ஒரு எண்ணில் இருந்து அழைக்கிறாரா???… யோசித்தபடியே அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த போதே… மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு… கண்மணி யோசிக்கவெல்லாம் இல்லை… சட்டென்று அதை எடுக்க.. மறு முனையில் அமைதி மட்டுமே… எதிர் முனையில் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்க…
ரிஷியைத் திரும்பிப் பார்த்தவள்…. தயக்கத்தோடே…
“ஹலோ…” எனச் சொன்ன போதே அடுத்த முனையில் அப்போதும் பதிலேதும் வராமல் போக… மீண்டும் மீண்டும் அழைத்த போதே…. அலைபேசியை கட் செய்யாமல் அதே நேரம் இவளுக்கும் பதில் சொல்லாமல் எதிர்முனை அப்படியே இருக்க….
”பேசுங்க.. யார் வேணும் உங்களுக்கு… யார்கிட்ட பேசனும்னு சொன்னால்தானே தானே தெரியும் கரெக்டான நம்பர்க்கு போன் பண்ணிருக்கீங்களான்னு” கண்மணி கேட்டுக் கொண்டிருந்தவள்… அதற்கு மேல் அந்த அழைப்புடன் போராடாமல்.. சட்டென்று அணைத்து வைத்தவள்…
“தேவைனா அவங்களே போன் பண்ணட்டும்…” நினைத்தாலும்… ரிஷி எடுத்திருந்தால் எதிர்முனையில் இருப்பவர் பேசி இருப்பாரோ.. அந்த சந்தேகம் இப்போது வந்திருக்க… அழைப்பு வரிசையைப் பார்க்க… அவள் நினைத்தது சரியே என்பது போல… அவன் பேசிய எண்ணில் இருந்து ஏற்கனவே பல அழைப்புகள் வந்திருக்க… நிமிடக்கணக்கில் பேசிய நேரமும் இருந்திருக்க…
“அப்போ… நான் எடுத்ததாலதான் பேசலை… சந்தேகப்பட்டது சரிதான்” தன் சந்தேகம் சரி என்பது போல… ரிஷிக்கு தெரிந்தவர்தான் பேசி இருக்கிறார் என்பதை உறுதி செய்தவள்… கீழே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ரிஷியைப் பார்த்த பார்வையில் இப்போது கவலை மட்டுமே
ரிஷியை அவன் போக்கில் விடும் தன் இயல்பு சரியில்லையோ… நினைத்தபோதே துரையை இவன் கையால் கொலை செய்தது… அந்த ஆதவன் மிரட்டல்… யமுனா விசயம்… எல்லாம் அவளுக்குள் வந்து போக… இதெல்லாம் இவளுக்குத் தெரிந்து… தெரியாதது இன்னும் என்னென்னவோ…
தலையை வலித்தது கண்மணிக்கு… மனம் பாரமாகி இருக்க… மீண்டும் அலைபேசி ஒலிக்க… இந்த முறை அது சத்யாவாகவே இருக்க… எடுத்தும் விட்டாள்…
“சொல்லுங்க… நீங்க அவருக்கு வலது கை இடது கை எல்லாம் தாம்.. என்னதான் அவசரம்னாலும்… நேரம் காலம் இல்லையா…. “ கண்மணி சட்டென்று வார்த்தைகளை விட…
“மேடம் ரொம்ப முக்கியமான விசயம்… அதனால தான்… “ சத்யாவின் குரல் முற்றிலும் உள்ளே போயிருக்க… சத்யா ரிஷிக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தவளாக… கண்மணி இப்போது நிதானத்திற்கு வந்து
“சாரி… இருங்க அவர்கிட்ட கொடுக்கிறேன்… இப்போ முன்னாடி பண்ணினதும் நீங்கதானே” எனக் கேட்க ஆரம்பித்த போதே ரிஷியும் இவள் குரல் கேட்டு எழுந்திருந்திருக்க…
“சத்யா” என்று அவனிடம் அலைபேசியைக் கொடுத்தபடி… அவன் அருகில் அமர… இப்போது ரிஷி அங்கிருந்து எழுந்து போக நினைக்க… கண்மணியோ விட வில்லை…
ரிஷியும் விலகிச் செல்லாது… பேச ஆரம்பித்தான்…
“என்ன சத்யா.. இந்த நேரத்துல… மணி ரெண்டாகுது… ஹர்ஷித் கூடத்தானே இருக்கீங்க…” என்ற போதே
“என்னது… காணோமா… எப்போ… எத்தனை மணி நேரமா… உங்களை நம்பித்தானே அவனை உங்க கூட இருக்க வைத்தேன்.. நீங்க வைங்க.. நான் உடனே வர்றேன்” ரிஷி பட படவென பேசியபடியே… எழுந்தவன்… சட்டையை மாட்டியபடி பைக் கீயைத் தேட ஆரம்பித்திருக்க… அது அவன் கையில் சிக்கவேயில்லை…
“பைக் கீ.. பைக் கீ…. ப்ச்ச் ச்ச்சேய் எங்க போச்சு…. எங்க வச்சேன்” பதட்டமாகி இருந்தவனுக்கு அப்போதுதான் கண்மணி ஒருத்தியே அந்த அறையில் இருக்கும் ஞாபகம் வந்தது போல
”மணி பைக் கீ… இங்கதான் வச்சேன்… கொஞ்சம் தேடிக் கொடு…” என்றபடியே அவளைப் பார்க்க… அவனது பைக்கின் சாவியோ அவளிடம்
“ஏய்,…. லூசாடி நீ… இதைத்தானே தேடிட்டு இருக்கேன்… கைல வச்சுக்கிட்டு பார்த்துக்கிட்டு இருக்க… கொடு…” என்று அவளிடம் வாங்க முயற்சிக்க…
சட்டென்று அதைத் தன் கைக்குள் வைத்து மூடிக் கொண்டவள்… அவனிடம் கொடுக்காமல்
“எங்க போறீங்க… என்ன ஆச்சு… ஹர்ஷித் எப்போ சென்னை வந்தான்… ஏன் என்கிட்ட சொல்லல… அவனை ஏன் இப்போ சென்னைக்கு வரவாழைச்சீங்க… ஏதாவது பிரச்சனையா” கண்மணி அவனிடம் விசாரணை போல் அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக…
“ப்ச்ச்… இருடி… நான் பாண்டிச்சேரி போனேன்ல… அப்போ.. ரெண்டு நாளைக்கு முன்னாலதான் சத்யா கூட்டிட்டு வந்தாரு…… நீ சாவியைக் கொடு…. இப்போ அவனைக் காணோமாம்…. வந்து உன்கிட்ட எல்லாம் சொல்றேன்“ என்று சொன்னபடியே…. அவளிடமிருந்து சாவியை வாங்க முயல… கண்மணி அவனிடம் அதைக் கொடுக்க நினைத்தால்தானே
“சாரி மிஸ்டர் ’ஆர் கே’…. நீங்க இப்போ போகக் கூடாது…” என கண்மணி கட்டளை போல் கூற… முதன் முறை ரிஷியின் கண்கள் கண்மணியிடம் கூரான கத்தியைப் போல் பார்வை வீச்சைக் காட்ட
”இந்தப் பார்வைலாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கங்க…”
“ஏய்… சாவியைக் கொடு… விளையாடாத… “ என்றவன் இப்போது அவளிடமிருந்து சாவியை வலுக்கட்டாயமாக வாங்க முயற்சித்திருக்க
வேகமாகத் தள்ளி விட்டவள்… தள்ளிச் சென்றவளாக
“நான் தர மாட்டேன்… தரவே மாட்டேன்… “ கண்மணி கத்த
“ஏண்டி இப்போ கத்துற… எல்லோரும் எழுந்துக்கப் போறாங்க…”
“தெரியுதுதானே… அப்போ நான் சொல்ற மாதிரி பண்ணலாம்… வாங்க ரெண்டு பேரும் போகலாம்..” என்றவளை… கடுப்பாக ரிஷி பார்த்தவனாக
”எங்க ரெண்டு பேரும் போக…”
“போலிஸ் ஸ்டேஷன்… இல்லை எங்க தாத்தா கிட்ட போகலாம்… அவர் இன்ஃப்ளூயன்ஸ்ல கண்டிப்பா ஹர்ஷித்தை தேடலாம்…”
ரிஷியோ பல்லைக் கடித்தான்…
“என்ன… பெரிய புத்திசாலின்னு நினைப்பா… அப்டிலாம் பண்ண முடியாது… ஃபர்ஸ்ட்… நீ சாவியைக் கொடு….” வேகமாக அவளிடம் சொன்னபடியே…
“இங்க பாரு… புரிஞ்சுக்கோ… உனக்கு ஹர்ஷித் யாருன்னு தெரியும்… அதுனால ஈஸியா சொல்ற…. புரிஞ்சுக்கடி… போலிஸ் கேஸ்னு போக முடியாதுடி… அம்மாக்கு தெரிஞ்சால் என்ன ஆகும்… யோசிக்காமல் பேசுற… இப்போ புரியுதா… ஏன் நான் போலிஸுக்கு போக முடியாதுன்னு.” ரிஷி இப்போது தண்மையாக பேசி அவளிடம் புரிய வைக்க முயற்சிக்க…
“எல்லாம் தெரியும்… ஏன் அத்தைக்கும் மத்தவங்களுக்கும் தெரிந்தால் என்ன ஆகும்… இனி என்ன ஆகப் போகுது… என்னைக்கோ தெரியப் போகிற உண்மை… இன்னைக்குத் தெரியப் போகுது… அவ்ளோதான்” என்ற போதே ரிஷியின் கண்களில் கோபம் வந்து அவனை முற்றிலும் ஆட்கொண்டிருக்க
“கண்மணி… உன் லிமிட் தாண்டி நீ பேசிட்டு இருக்க…”
“ப்ச்ச்… எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன்…. இவ்ளோ கோபப்படுறதுக்கு ஒண்ணுமே இல்லை… என்னமோ இன்னைக்கு அவ்ளோ பேசுனீங்க… ரியாலிட்டி ஃபேஸ் பண்றதுதான் கரெக்ட்னு… உங்க அம்மான்னு வரும் போது மட்டும் வேற மாதிரி பேசுறீங்க…” கண்மணி அலட்சியமாகப் பேச
“என்ன… நான் சொன்னதையே என்கிட்டயே சொல்றியா… இங்க பாரு… அது வேற, இது வேற… அதை எல்லாம் விட இப்போ எனக்கு உன் கிட்ட ஆர்க்யூ பண்றதுக்கு டைம் இல்லை….” என்றபடியே… சட்டென்று அவளிடமிருந்து அவனது பைக் சாவியைக் கைப்பற்றி இருக்க…
சாவியை விட்டுக் கொடுத்து விட்டாள் தான்… பதிலாக
கண்மணி இப்போது அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்…
“நீங்க போகக் கூடாது ரிஷி… என் பேச்சைக் கேட்பீங்களா மாட்டீங்களா… “ என்றவளிடம் ரிஷி பேச முடியாமல் இயலாமையாய் பார்க்க
“நான் முக்கியம்னா… நான் வேணும்னா… நீங்க போகக் கூடாது… இது என் மேல சத்தியம்… ” தான் பிடித்திருந்த அவன் கைகளைத் தன் தலைமேல் வைத்திருக்க
ரிஷி பதறவெல்லாம் இல்லை….
“சத்தியம்ன்றது கொடுக்கிறவன் முழு மனசோட கொடுக்கனும்.. வலுக்கட்டாயமா வாங்குறதுக்கு பேரு சத்தியம் இல்லை… சோ இதை மதிக்கவும் மாட்டேன்… இது என்னைக் கட்டுப்படுத்தவும் செய்யாது” என்றவன் கைகளை அவளிடமிருந்து பறித்தபடி வேகமாக திரும்பிப் போகப் பார்க்க
“ரிஷி… நீங்க மறுபடியும் மறுபடியும் தப்பு பண்றீங்க… இவ்ளோ நாள் முட்டாள்தனமா இருந்துட்டேன்… இனிமேல அப்படி என்னால இருக்க முடியாது… எனக்கு நீங்க முக்கியம்… நம்மோட எதிர்கால வாழ்க்கை முக்கியம்… ஏற்கனவே அந்த துரை விசயம்… அப்புறம் ஆதவன் சொன்னானே… உன் புருசன் உனக்கு முக்கியம்னா அவன் கிட்ட சொல்லி வைனு… எனக்கு பயமா இருக்கு ரிஷி” கண்மணியின் குரலில் முற்றிலும் கவலையும் பதட்டமுமே
ரிஷி அவளை முதன் முறை புரியாத பார்வை பார்த்தபடியே
“என்னடி ஆச்சு உனக்கு… இப்படிலாம் நீ பேச மாட்டியே… இப்படிலாம் பேசற ஆள் கிடையாதே”
“எனக்குனு ஆசைகள் இருக்காதா ரிஷி… இல்லை என் புருசனைப் பற்றின கவலை இருக்காதா…. அதை உங்ககிட்ட எதிர்பார்க்கக் கூடாதா” கண்மணி ரிஷியிடம் பரிதவித்தவளாகக் கேட்க
”இருக்கக் கூடாது… இதெல்லாம் கேட்கக் கூடாத ஒருத்திதான்… எதிர்பார்க்காத ஒரு பொண்டாட்டிதான் நான் தேடினேன்னு உனக்குத் தெரியாதா…இவ்ளோ நாள் அப்டித்தானே இருந்த… இப்போதும் அப்டியே இரு…” என்றவன் அவளைக் கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாமல் கிளம்ப…
“சரி அப்போ… நானும் வர்றேன்…” கண்மணியும் அவள் பைக் கீயை எடுக்க… ரிஷியோ அலட்சியமாக அவளைப் பார்த்தான்
‘சந்தோசம்… நீ ட்ரெஸ் மாத்திட்டு வர்றதுக்குள்ள… நான் ஸ்பாட்டுக்கே போயிருவேன்… “ என்றவன்.. என்ன நினைத்தானோ தெரியவில்லை
“மிட் நைட்ல வந்து தொலையுற…. எந்தப் பிரச்சனையிலாவது சிக்கிட்டேன்னு வச்சுக்கோ… எனக்கு மட்டும் கால் பண்ணித் தொலஞ்சுறாதா… உன் தாத்தா…. உன் அப்பா… அந்த அர்ஜூன் இவங்களுக்கு கால் பண்ணு… ஏன்னா ஏற்கனவே வேறொரு பிரச்சனை எனக்கு… எனக்கு அது முக்கியம்” என்றவன் அதற்கு மேல் எல்லாம் காத்திருக்கவில்லை…. கிளம்பி இருக்க..
கண்மணியும் அடங்கி இருக்கவில்லை… வேகமாக அவனின் அருகில் சென்று… அவனது அலை பேசியில் லைவ் லொகேஷனை ஷேர் செய்து அவனிடம் கொடுத்தவள்…
“என் மேல கொஞ்சமாவது அக்கறை இருந்ததுனா… லைவ் லோகேஷன் ஷேரிங்கை மட்டும் டிஆக்டிவேட் பண்ணாதீங்க” கண்மணியின் குரலில் இப்போது ஙஞணநமன வந்திருக்க
“படுத்துறடி என்னை… வேண்டாம்னு சொல்லிட்டேன்… ஏதாவதுன்னா நானே கால் பண்றேன்… இவ்ளோதான் என்னால சொல்ல முடியும்… இதுக்கும் மேலயும் இல்லை நான் வருவேன்… அப்டீன்னா அது உன்னோட விருப்பம்… தெரியும் கேட்க மாட்டேன்னு… அதுக்கப்புறம் உன் இஷ்டம்” அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கீழே இறங்கி விட…
கண்மணியும் வேகமாக …. தனது இரவு உடையை மாற்றி… புடவையை அணிய ஆரம்பித்திருக்க…. போன வேகத்திலேயே இப்போது ரிஷி உள்ளே வந்திருந்தான்….
அவனைப் பார்த்தவுடன் சட்டென்று கண்மணி வேக வேகமாக புடவையை கட்ட ஆரம்பித்திருக்க… ரிஷி எதுவும் கவனிக்காமல்… அங்கிருந்த நாற்காலியில் வந்து தொய்ந்து அமர்ந்தவன்…. சாவியைத் தூக்கிப் போட்டவனாக…
”ஹர்ஷித் வீட்டுக்கு வந்துட்டானாம்… நான் போகலை… நீயும் ட்ரெஸ் மாத்தாத“ என்ற போதே அவன் குரல் சுரத்தின்றி ஒலித்திருக்க… கண்மணியோ புடவையக் கட்டியபடியே இருக்க
“சொல்றது கேட்கலையாடி… புடவையைக் கட்டாதேன்னு சொல்றேனே.” ரிஷியின் குரல் அறை முழுவதிலும் எதிரொலித்திருக்க…. அதைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல்… புடவையை கட்டி முடித்து விட்டு அவன் முன் நிதானமாக வந்து நின்றவள்..
“நான் சொன்னதை நீங்க கேட்டிங்களா… சத்தியம்… அவ்ளோ பெரிய விசயம் … அதைக் கூட நீங்க மதிக்கலை… இப்போ ஏன் இவ்வளவு சத்தம்”
ரிஷி அவளை நேருக்கு நேராகப் பார்த்தான்
“கண்மணி… எல்லாம் தெரிஞ்சும் தேவையில்லாத கட்டுப்பாடு போட்ற…. என்னைக் கன்ட்ரோல் பண்ணனும்னு நினைக்கிற”
“ஏன் என்ன தப்பு… எனக்கு உரிமை இல்லையா”
“நான் இப்படித்தான்னு தெரிஞ்சுதான் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு நினைக்கிறேன்” ரிஷியும் அவளிடம் நிதானமாகக் கேட்க
சிரித்தாள் கண்மணி
“இல்லையே… என் கழுத்துல நீங்க தாலி கட்டும்போது நீங்க இப்படித்தான்னு எனக்குத் தெரியாதே…”
“ப்ச்ச்… மேடம் தெளிவா பேசறீங்கதான்… நானும் தெளிவாவே சொல்றேன்…. அன்னைக்கு நைட் சொன்னேன் தானே… இதுதான் நான்… பிடிக்கலைனா விலகிருன்னு…”
கண்மணி அமைதியாகப் பார்க்க
“அதை விட… ஆஸ்திரேலியா போறதுக்கு முன்னாடியும் உன்கிட்ட சொன்னேனே… விலகி விலகிப் போனேன் தானே… ஆனால் எல்லாம் தெரிஞ்சுதானே… நீதான் என்னைக் கட்டாயப்படுத்தி நம்ம வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போன…”
கண்மணி அவனை அடிப்பட்டாற் போல பார்க்க… சொன்ன வார்த்தைகளின் ஆழம் புரிந்தவனாக…
”அப்படி பார்க்காதடி… எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தும்… மனசு வலியோடத்தான் விலகி இருந்தேன்…” என அவள் கைகளைப் பிடித்தவனின் கைகளை கண்மணியோ விலக்கி இருந்தாள்…
“ப்ளீஸ்டி… கொஞ்ச நாள் தாண்டி… நான் சொல்றதை புரிஞ்சுக்கோ…. என்னை என் பாதைல போக விடு”
அவனையே பார்த்திருந்தவளிடம்
“என்ன பார்க்கிற… “ என்றவன் அவளிடம் சமாதானப் பார்வை பார்க்க… கண்மணியோ சுரத்தின்றி பேச ஆரம்பித்திருந்தாள்…
“நாம ரெண்டு பேரும் என்ன வாழ்க்கை வாழ்றோம்னு யோசிக்கிறேன் ரிஷி… நம்மைச் சுத்தி இருக்கிறவங்க எல்லாம்…. நாம என்னமோ பெரிய புரிதலோட… காதலோட வாழ்றோம்னு நினச்சுட்டு இருக்காங்க… ஆனால் அப்படி இல்லைதானே ரிஷி… நீங்க ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்னு அவங்கவங்க வழில போய்ட்டு இருக்கோம்… அதுதான் உண்மை…” கண்களில் அவளையுமறியாமல் நீர் வழிய ஆரம்பித்திருக்க… ரிஷியோ மறுத்தான் அவளிடம்
”அது நீன்னு சொல்லு… நான் இல்லை… என்னைப் பற்றி உன்கிட்ட என்னடி மறச்சுருக்கேன்… ஆனால் நீ இதுவரைக்கும் ஏதாவது உன்னைப் பற்றி சொல்லிருக்கியா… நானா கேட்டால் கூட சொல்ல மாட்டதானே… எனக்கா தெரிந்ததுதான்…. உன்னோட வலி… வேதனை… சந்தோசம் இப்படி ஏதாவது நீ என்கிட்ட ஷேர் பண்ணிருக்கியா… சொல்லு… நீ தான் என்னை புருசனா ஏத்துக்கலை… ஏதோ இவன் தாலி கட்டிட்டான்… இவனோட வாழ்றோம்… இவனுக்கு பிரச்சனைனா நாம அவனுக்கு பக்கபலமா நிற்போம்… இதுதான் நீ என்னோட வாழ்ற வாழ்க்கை…” என்றவன் தன் மனக் குமுறலை அவனையுமறியாமல் விட… கண்மணி முறைத்தாள்
“உண்மைதானடி… பெரிய இவ மாதிரி பார்க்கிற… மாமா சொல்லாமல் எனக்கென்ன தெரிந்தது… ” என்றவனிடம் பேச்சு திசை மாறும் விதம் உணர்ந்தவளாக
“இப்போ அதெல்லாம் விடுங்க… எனக்கென்னமோ எதுவும் சரியா படலை… நீங்க ஆஸ்திரேலியா போய்ட்டு வாங்க… எல்லாம் பேசுவோம்“ என்ற போதே
“என்ன சரியா படலை.. மேடம் என்ன பண்ண போறீங்க….” கேள்வியாகக் கேட்ட போதே… நக்கலும் வந்திருக்க
கண்மணி யோசிக்கவெல்லாம் இல்லை…
”அத்தைகிட்ட ஹர்ஷித் பற்றி சொல்லப் போறேன்… நீங்க போற பாதை ஏதுமே சரி இ…ல்…ல் “ அவள் முடிக்க வில்லை…. அடுத்த நிமிடம் ரிஷியின் கை அவள் குரல் வளையில் இருக்க….
“என்ன… உன்னோட அதிமேதாவித்தனைத்தை எல்லாம் என்கிட்டயே காண்பிக்க ட்ரை பண்றியா… “ எனச் சொன்னபடியே… அடுத்த நிமிடம்… தன்னிலைக்கு வந்து… அவனின் கைகளைத் தளர்த்தியபடியே…
”ஏய்… அப்படி பண்ணித் தொலஞ்சுராதடி… என் அம்மா தாங்க மாட்டாங்க” என்றவனிடம்…
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… சொல்லித்தான் ஆகனும் ரிஷி… எவ்ளோ நாள் மறைக்க முடியும்…” கண்மணியும் தன் பிடியிலேயே நின்றாள்
“என்னடி… சொல்லிட்டே இருக்கேன்… அம்மாகிட்ட சொல்வேன் சொல்வேன்னு திமிரா பேசிட்டு இருக்க…” என்றவனின் கை மீண்டும் இறுக ஆரம்பிக்க… இப்போது கண்மணி அவன் கைகளைத் தட்டி விட முயற்சிக்க ஆரம்பித்திருந்தாள்… அவன் கைகளின் இறுக்கம் தாளாமல்…
“நீங்க இன்னும் மிருகத்தனமாத்தான் இருக்கீங்க… நீங்க மாறவே இல்லை… கோபம் வந்தால் என்னைக் கூட மறந்துருவீங்களா என்ன… ஏன் இப்படி அரக்கனா இருக்கீங்க… உங்கள மாத்திக்கவே மாட்டீங்களா… இதெல்லாம் விட்டு எப்போ வெளிய வரப்போறீங்க” கண்மணி பரிதவிப்போடு கேட்க…
அதே நேரம் சத்யா மீண்டும் அழைக்க… கண்மணியைப் பிடித்திருந்த கைகளால் அவளை வன்மையாகத் தள்ளி விட்டவன்
“இப்போ தப்பிச்ச… விட்டுட்டு போறேன்… நான் மிருகமா… செய்யாத தப்புக்கு தண்டனையை அனுபவிச்சுப் பாரு.. அப்போ புரியும்… நான் இப்படித்தாண்டி… ஆனா ஒண்ணூ… ஹர்ஷித் பற்றி என் அம்மாக்குத் தெரியக் கூடாது அது மட்டும் ஞாபகத்தில வச்சுக்கோ… என் அம்மாக்கு ஏதாவது ஆச்சு… உன்னை…” என்றவன்… அதற்கு மேல் பேசாமல்… அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட… கண்மணி அப்படியே சுவரோடு சுவராகச் சாய்ந்து அமர்ந்து விட்டாள்…
என்ன தான் முயன்றாலும்… போராடினாலும்… அன்பைக் கொட்டினாலும்… ரிஷி இன்னுமே தனசேகரின் மகன் தான்… அவனால் அந்த வலியில் இருந்து இன்னும் வெளியில் வர முடியவில்லை அதுதான் உண்மை… கண்மணியின் கண்களில் நிறுத்தவே முடியாமல் நீர் பெருக ஆரம்பித்திருந்தது…
---
”சொல்லுங்க சத்யா… ஹர்ஷித் தூங்கிட்டானா…” ரிஷி மாடிக்குச் சென்றிருந்தான்… சத்யாவுடன் மீண்டும் பேச ஆரம்பித்திருந்தான்
“ஆர் கே… ஒரு முக்கியமான விசயம்… சொல்லனும்…”
“மருது உங்க நம்பர்க்கு ட்ரை பண்ணிருக்கான் போல…”
“ஹ்ம்ம்.. பார்த்தேன்…” ரிஷி சாதாரணமாகச் சொல்ல
”மேடம் அந்தக் கால் பற்றி என்கிட்ட கேட்டாங்க… நான்தான்னு நெனச்சுட்டு கேட்டாங்க பார்த்துக்கங்க… அந்த மாதிரியே சமாளிச்சுருங்க…”
“இருக்கிற பிரச்சனைல… இது வேறயா… சரி நான் பார்த்துக்கிறேன்” என நெற்றியை கட்டை விரலால் நீவியவன்…
“மருதுவுக்கு திரும்ப பேசலை… அவன் தான் ஹர்ஷித்தை தப்பிக்க வச்சான்னு… அந்த ஆதவனுக்குத் தெரியாமல் இருக்கனும்…. இப்போ என் கவலை அதுதான்… இந்தக் கேஸ் முடியற வரை… கொஞ்ச நாள் மருது நமக்கு வேணும்… அப்போதான் ஆதவனோட ப்ளான்லாம் ஓரளவாவது நமக்குத் தெரிய வரும்” ரிஷி சத்யாவோடு பேசிக் கொண்டிருந்த அதே நேரம்…
ஆதவன் ஜெயிலில் இருந்தபடி அவன் உதவியாளரோடு பேசிக் கொண்டிருந்தான்…
”என்னடா இந்த டைம்ல.. அப்படி என்ன் அவசரம்…” ஆதவன் கேட்க
“அந்த ஹர்ஷித் தப்பிச்சுட்டான் பாஸ்….” என உதவியாளர் பதறிப் பயந்து சொல்ல… ஆதவனோ அந்த அளவு கோபப்படவெல்லாம் இல்லை… பதறவும் இல்லை
‘ஹ்ம்ம்… நெனச்சேன்… எனக்கு இதுல ஆச்சரியமே இல்லை… எதிர்பார்த்ததுதான்… கொஞ்ச நாளா… நம்ம கூட்டத்துல ஒரு கருப்பு ஆடு இருக்குனு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்துச்சு… இன்னைக்கு கன்ஃபார்ம்… அதை விடு.. பார்த்துக்கலாம்… திடீர்னு பெயில் கிடைக்காமல் போனதுக்கு என்ன காரணம்… அதை விசாரிச்சியா ”
“விசாரிச்சுட்டோம்… நீங்க அந்தக் கண்மணியை மிரட்டுனதுதான் பிரச்சனை… அவளோட தாத்தா இன்ஃப்ளூயன்ஸ்..” என்று தகவலைச் சொன்னபோதே…. ஆதவன் முகம் யோசனைக்கு போயிருக்க
“அந்தக் கண்மணிகிட்ட வச்சுக்க வேண்டாம்னு சொல்வீங்களே சார்… அப்புறம் ஏன் சார் அந்தப் பொண்ணுக்கு போன் பண்ணி மிரட்டுனீங்க… இப்போ என்னாச்சுனு பாருங்க… நீங்க பயந்த மாதிரியே ஆகியிருச்சு” உதவியாளன் கேட்க
‘ஹ்ம்ம்ம்… சொன்னேன் தான்… அவகிட்ட பிரச்சனை வச்சுக்கிறது… தேன் கூட்ல கை வைக்கிறதுக்கு சமம்னு சொன்னேன் தான்… ஆனால் இப்போ எனக்கு என்ன தோணுதுனா…” என கோணல் சிரிப்பு சிரித்தவன்…
“ராணித் தேனியவையே போட்டுத் தள்ளிட்டா… மத்த எல்லாமே ஈஸியா ஆகிரும் தானே… இந்த ரிஷி… நட்ராஜ்… அர்ஜூன்… நாராயணன்… எல்லோருக்குமே அந்தக் கண்மணி எவ்ளோ முக்கியம்னு நமக்கும் தெரியும்… இந்த விக்கி மட்டும் தான்… அவனுக்கும் கண்மணிக்கும் தான் பெருசா தொடர்பு இல்லை… பரவாயில்ல… இப்போ அவனும் ரிஷி குடும்பத்தோட ஒரு ஆள் தானே… ஒரே ஒரு பொண்ணு.. நாம அவளை வச்சே… அவளச் சுத்தி இருக்கிறவங்க அத்தனை பேரையும் ஆட்டிப் படைக்கிறோம்… ஆஃப் பண்றோம்… சோ சாரி கண்மணி….” என்றவனின் குரலிலும் கண்களிலும்… இது நாள் வரை இல்லாத… அத்தனை வன்மம் குரூரம்…
வெகு நாட்களுக்குப் பிறகு ஆதவனின் முகத்தில் ஆணவம் கலந்த வெற்றி கொள்ளப் போகும்… தீவிரம் வந்திருந்தது…
கண்மணியைச் சுற்றிய நபர்கள் அத்தனை பேரையும் யோசித்த ஆதவன் …. மருது என்பவனும் கண்மணியோடு சம்பந்தம் கொண்டவன் என்பதை அறியாமல் போனது… அவன் விதியோ???
---
சத்யாவோடு பேசி விட்டு ரிஷி அறைக்கு வந்திருக்க… கண்மணி அமர்ந்திருந்த இடத்திலேயே… அப்படியே சாய்ந்து வெற்றுத் தரையில் படுத்திருக்க…
அப்போதும் ரிஷி அமைதி ஆகவில்லை… கோபத்தோடே அவளைப் பார்த்தவன்…
“வேணும்னே படுத்துறா… என்னதான் ஆச்சுனு தெரியலை இவளுக்கு… “ என்றபடியே அவளைத் தூக்கப் போக…
கண்மணி சட்டென்று எழுந்து அமர்ந்தவள்…
“போயிருங்க… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று வேகமாகக் கோபத்தோடு சொல்ல…
“போடி…” என்றபடி… இவனும் அதே கோபத்தோடு தங்கள் படுக்கையில் போய்ப்படுத்தான் தான்… அதே நேரம்… தன் அருகில் இருந்த கண்மணியின் போர்வையையும்… தலையணையையும் அவள் இருந்த இடத்தை நோக்கி வீச… இவன் கோபத்தோடு வீசி எறிந்தது… அதே வேகத்தோடு… இல்லையில்லை அதை விட வேகத்தோடு மீண்டும் அவனிடமே வந்து சேர்ந்திருக்க…
”எனக்கென்ன… அனுபவி… நாளைக்கு உடம்பு வலிக்குதுன்னு நீதான் கஷ்டப்படனும்… கேட்கிறதுக்கு கூட நான் இங்க இருக்க மாட்டேன்… ” என்றபடி கண்களை மூடினான்…
---
அடுத்த நாள் காலை… கண்மணி… எழுந்தபோது மணி ஏழாகி இருக்க… வேகமாக பதறி எழுந்தவள்…
“ஹையோ ஸ்கூலுக்கு லேட் ஆகிருச்சே… அத்தை மட்டும் தனியா சமைச்சுட்டு இருப்பாங்களே” இப்படித்தான் எழுந்தாள் கண்மணி…
நேற்று போட்ட சண்டை எல்லாம் அவளுக்கு ஞாபகமே வரவில்லை… ஆனால் நிமிடங்கள் கடந்திருக்க… தான் படுத்திருந்த இடம் அதைப் பார்த்த போதுதான் நேற்றிரவு நடந்த சண்டையே ஞாபகம் வந்திருக்க… வேகமாக கணவனைப் பார்க்க… படுக்கை எல்லாம் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருக்க… அதோடு உடைகள் எல்லாம் அயர்ன் செய்யப்பட்டு நேர்த்தியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தது…
மறந்திருந்த கோபம் இப்போது மீண்டும் வந்து அவளிடம் சேர்ந்திருக்க… சோர்வாக எழுந்தவளுக்கு… உடனே எழ முடியவில்லை…
“இப்போல்லாம் லேட்டா லேட்டா எழுந்திருக்கிறேன்… ரொம்ப டயர்டா வேற ஃபீல் பண்றேன்… எழும் போதே பசி வேற…” என்று யோசித்தவளின் கண்களில் அருகில் தரையில் கிடந்த காகிதம் பட… அது நேற்றிரவு அவள் கைகளில் ரிஷி திணித்த பேப்பர் என்பதையும் உணர… எடுத்துப் பார்க்க… அது அவர்கள் வருங்கால வீட்டின் ப்ளான்… பார்த்த நொடியிலேயேப் புரிய…
கண்மணி அதைப் பார்த்தபடியே… யோசனைக்கு போயிருந்தாள்… தன் தவறும் புரிய ஆரம்பித்திருக்க
“லூசாடி நீ… இதுக்கே…. இதைத் தூக்கி வீசினதுக்கே ரிஷிக்கு கோபம் வந்திருக்கனும்… ஆனாலும் காட்டிக்காமல் தான் பேசியிருக்கார்… முதன் முதலா அவர் கட்டப் போற வீட்டோட ப்ளான்… தூக்கி வீசி வீசிருக்க… உன்னை…” என்று தன்னைத் திட்டிக் கொண்டாலும்
”ஆனாலும் எனக்கு கோபம் தான்“ என்று அருகில் இருந்த மேஜையைப் பார்த்தவள்… அங்கு அன்று அணிவதற்காக தேய்த்து வைத்திருந்த உடையை மட்டும் கசக்கிப் போட்டவள்…
ஏதோ கொஞ்சமா கோபம் இருந்ததுனால… இந்த ட்ரெஸ்ஸை மட்டும் கலச்சு விட்டேன்… இல்ல மொத்த துணியையும் கலச்சு விட்ருப்பேன்…
வில்லத்தனம் தனக்கும் வரும் கண்மணி காட்டியவளாக… வீட்டு ப்ளானை… பீரோவில் வைக்கப் போக… அப்போது… அந்தப் பீரோவில்.. ஏதோ ஒரு நோட் இருக்க.. அதற்குள் இந்தக் காகிதங்களை வைக்க நினைத்தவளாக… அந்த நோட்டைத் திறந்தவளுக்கு… அப்படி ஒரு ஆச்சரியம்… அவள் அன்னை பவித்ரா வரைந்த ஒவியங்கள்… அந்த ஓவியங்கள் இதுவரை பார்க்காதது… டைரியை மட்டுமே இவள் படித்திருக்க… இந்த தொகுப்பு இவள் காணாதது. கண்டபோதோ
தன் அன்னையின் பாசத்தில் அவளையுமறியாமல் கண்கள் கலங்கி விட்டது…. அந்த நோட்டில் கண்மணியின் கண்ணீர் அந்த ஓவியங்களை அழிக்க ஆரம்பித்திருக்க… வேகமாக கண்களைத் துடைத்தவள்…
“ஏன்ம்மா…இவ்ளோ பாசம் வச்சுட்டு என்னை விட்டுட்டு போனிங்க…. எப்படிம்மா மனசு வந்துச்சு… இவ்ளோ கற்பனை… இவ்ளோ ஆசை… ஒண்ணு கூட நிறைவேறலையே உங்களுக்கு… கந்தம்மாள் பாட்டி சொல்ற மாதிரி நானும் நீங்களும் துரதிர்ஷ்டம் பண்ணவங்களா…” முதன் முதலாக கண்மணி தன்னை தன்னையுமறியாமல் தன் தாயோடு ஒப்புமைப்படுத்திப் பேச ஆரம்பித்திருக்க… வரிசையாக அந்த ஓவியங்களைப் புரட்டியபடியே வந்த போதே…
அவளின் மணக்கோல புகைப்படத்தில்…
அர்ஜூன் – சுபத்ரா… என்ற இடத்தில் அடிக்கப்பட்டு
”ரிஷிகேஷ்…. கண்மணி” என்றிருக்க….. இப்போது கண்மணியின் முகம் புன்னைகையில்… கணவனின் காதலில் மலர ஆரம்பித்திருந்தது
”இந்த லவ்வுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை… சார்க்கு ” தனக்குள் சொல்லிக் கொண்டவளாக… அடுத்துப் போக… கண்மணி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த ஓவியம் பட…
பவித்ரா கண்மணியை நினைத்து வரைந்திருக்க… கண்மணியோ தன் தாயை நினைத்து அந்தப் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்…. எத்தனை நிமிடங்கள் கழிந்தனவோ… அதைக் கைகளால் தொட்டுப் பார்த்தபடியே இருந்தவளின் மனம் விம்பியது…
“என்னை நினைத்து வரைஞ்சுருக்கீங்க… ஆனால் இதுல உங்களைத்தான் நான் பார்க்கிறேன்” என அடுத்த பக்கத்தைப் புரட்ட… அங்கு அடுத்து ஏதும் இல்லை
அவளுக்கும் புரிந்தது…
“இதுக்கப்புறம்… உங்க கனவு எல்லாமே நின்னுப் போயிருச்சேம்மா” என்றவள்.. முடிவு இல்லாத கதை போல… என அந்தப் பக்கத்திலேயே உறைந்தவளாக… யோசிக்க ஆரம்பித்த போதே… முகம் மெல்ல வெளிற ஆரம்பித்திருந்தது…
ஏனோ அந்த ஓவியங்கள் எல்லாம்… தனக்கான அடுத்தடுத்த கட்டங்கள் போலத் தோன்ற… அவளையுமறியாமல் மனம் பரபரத்தது
”அம்மாதான் ட்ரா பண்ணாங்க… ஆனால் இது என்னோட வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டம் தானே… எனக்கு ஏன் இது பாதியோட நிற்கனும்…. என்னால உங்கள மாதிரி எல்லாம் என் புருசனை… என் ரிஷிக்கண்ணாவை விட்டு போக முடியாது…” வேக வேகமாக கண்மணி மேஜையில் இருந்து பென்சிலை எடுத்தபடி மேஜை முன் அமர்ந்தவள்… தன் அலைபேசியை எடுத்து… ரிஷியின் சிறு வயது புகைப்படத்தை… அதுவும் கைக்குழந்தை புகைப்படத்தை எடுத்து பார்க்க ஆரம்பித்திருக்க… அப்போது நோட்டின் பக்கங்கள் புரள… அதன் கடைசிப் பக்கத்தில் இப்போதைய ரிஷி- கண்மணியின் புகைப்படம்… அதன் அருகே ஒரு புகைப்படம்… முகம் மட்டுமே தெரியுமாறு இருந்த பிறந்த குழந்தை புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க.. அதே நேரம்ஒட்டப்படாத ரிஷியின் பிறந்த கைக்குழந்த புகைப்படமும் அதில் இருக்க… ஆக மொத்தம் அந்த நோட்டின் கடைசிப் பக்கம் மகிழ்ச்சியாக முடிக்கப்பட்டிருக்க கண்மணியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்….
வரைவதற்காக எடுத்த பென்சிலைக் கீழே வைத்தவள்….
”குழந்தையாக இருந்த ரிஷியின் புகைப்படத்திலும்… வளர்ந்து இருந்த ரிஷியின் புகைப்படத்திலும் மாறி மாறி முத்தங்கள் வைத்தவள்… நிறுத்தவே இல்லை...”
ஆனால் ஒரு கட்டத்தில்… அந்த இன்னொரு குழந்தையின் புகைப்படத்தை புருவம் சுருங்க பார்த்தபடி யோசித்தவள்
“இது யார் போட்டோ… ரிஷி ஃபோட்டோவும் இல்லை…”
மீண்டும் அந்தக் குழந்தையின் புகைப்படத்தையே பார்த்தவள்….
‘பெண் குழந்தை ஃபோட்டோ வேணும்னு…. ரித்விகா ரிதன்யா இவங்க யாரோட ஃபோட்டொவையாவது ஓட்டி வச்சுட்டாரா…’
“அப்போ கூட நம்மள நெனச்சுதானே வச்சுருப்பாரு… அவங்க ஃபோட்டோஸ்லாம் வைக்க சான்ஸே இல்லை… அப்போ என் ஃபோட்டோவா…” யோசித்தபடியே இருந்தவளுக்கு
ஒரு நாள் அவளின் சிறு வயது புகைப்படம்… அதுவும் கைக்குழந்தையாக வேண்டும் என ரிஷி கேட்டது ஞாபகத்துக்கு வந்திருக்க…
“அதுக்கு வாய்ப்பே இல்லையே… என்னை சின்ன வயசுல…அதுலயும் இப்படி பிறந்தப்போ எடுத்த போட்டோ… எப்படி” யோசிக்கும் போதே கிருத்திகா ஞாபகம் வந்திருக்க… ரிஷியும் கிருத்திகாவும் பெரிதாக ஆச்சரியம் காட்டாமல் நேற்று அறிமுகம் ஆகியதும் ஞாபகம் வந்திருக்க
“ஓ… சார் கிருத்தி ஆன்டியை போய்ப் பார்த்திருக்காரு… ஆனால் எங்களுக்கு தெரியக் கூடாதாக்கும்….. ஹ்ம்ம்ம்… எவ்ளோ நாள் இந்த ரகசிய சந்திப்பை காப்பாத்தப் போறிங்கன்னு பார்ப்போம்” என்றபடியே…
இப்போ ஞாபகம் வருது… என்னோட உயிரைக் காப்பாத்துறதுக்காக நிதி திரட்றதுக்காக ஃபோட்டோ எடுத்தாங்கன்னு சொன்னாங்களே… அதுக்காக எடுத்த ஃபோட்டோவா…” தனக்குள் சொல்லிக் கொண்டவளின் ஞாபகத்தில் இதுவும் வந்து போனது
ஏதோ ஒரு மகராஜன் அவனது மகனின் பிறந்த நாள் என்று இவளது சிகிச்சைக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டதாகச் சொன்னது ஞாபகம் வர…
“அவர் மட்டும் இல்லைனா… என் ரிஷிகிட்ட நான் சேர்ந்துருக்கவே முடியாது” மனம் அத்தனை சந்தோசத்தில் இருந்த போதே… விக்கியின் தாத்தா ஞாபகம் வர… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தொடர்புகள்… பெரிதாக அதைப் பற்றி எல்லாம் இவள் நினைத்தது இல்லை… ஒரு வேளை எனக்கும் விபரம் தெரிந்திருந்தால்… நானும் விக்கி தாத்தா போல அந்த நபரைத் தேடியிருப்பேனோ???… யாரோ எவரோ… முகம் தெரியாத நபருக்கு மனம் ஆயிரம் நன்றிகளை செலுத்தியது இன்று… அது தன் மாமனார் தனசேகர் என்று தெரியாமலேயே…
“எப்படியோ… கிருத்திகா ஆன்டிகிட்ட நம்ம போட்டோவைச் சுட்டுட்டாரு நம்ம ஆளு… ஹேப்பி எண்டிங்கும் கொடுத்துட்டாரு… “ என்று உற்சாகப் பாவனையில் சொன்னபடியே
“அது என்ன ரிஷிக்கண்ணா… பொண்ணுதான்னு தான்னு கன்ஃபார்ம் பண்ணி போட்டோ ஒட்டிருக்கீங்க… எனக்கு உங்க மாதிரி ஒரு பையன் வேணும்னு நான் சொன்னால் என்ன சொல்வீங்க…”
”சார்.. இதுக்குத்தான் அன்னைக்கு ஃபோட்டோ கேட்டிங்களா… உங்களுக்கு ட்ராயிங் தெரியாது… அதே நேரம் இப்படி பாதியோட நிற்காமல் ஹேப்பி எண்டிங்கா இதை முடிக்கனும்… யப்பா என்ன ஒரு ஐடியா… லவ்யூடா புருசா“ எனத் தனக்குள் அவனைச் செல்லமாகக் கொஞ்சிய படியே…
“நேத்து நைட்தான் உன் புருசனோட சண்டை போட்ட கண்மணி… அது இன்னும் முடியல… ஞாபகம் இருக்கா என்ன... அவ்ளோதானா அவனோட இருந்த கோபமெல்லாம்... உன்னல்லாம் வச்சுக்கிட்டு” மனசாட்சி அவளுக்கு ஞாபகப்படுத்த… ரிஷியின் முன் கோபமாவது... மண்ணாவது... மனசாட்சியின் வார்த்தைகளை அலட்சியப்படுத்திவிட்டு அதை ஒரு புறம் தள்ளியவளாக…
“காலையில எவ்ளோ பேச்சு என் கதைக்கு… ரியாலிட்டி ஃபேஸ் பண்ணனும்… என்ன முடிவுனாலும் ஏத்துக்கணும்… ஆனால் ஊருக்குத்தான்… படிக்கிற மக்களுக்குத்தான்… தலைவருக்கு கிடையாது போல…” என்றவள்… மீண்டும் நோட்டை எடுத்து…
அவனது குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்னொரு ஓரமாக ஒட்டியபடியே…
“பார்க்கலாம்… உங்க ஆசை ஜெயிக்குதா… என்னோடா ஆசை ஜெயிக்குத்தான்னு…”
“நீங்கதான் என்கிட்ட மறைப்பீங்களா… நானும்… “ என்று அந்த நோட்டை வேறொரு இடத்திற்கு மாற்றியும் இருந்தாள் கண்மணி…
---
உற்சாகமாக அறையை விட்டு வெளியே வந்த போதே… ரிஷியும் கீழே இருந்து மேலே அறைக்கு வரப் போக… இவளைப் பார்த்தவுடன் மாடிப்படி ஏறாமல் இவளுக்காக காத்திருக்க… அதுவும் கோப முறைப்போடு இவளை ஏறெடுத்தும் பார்க்காமல் வேறு புறம் திரும்பியபடி கண்மணி இறங்குவதற்காக காத்திருக்க…
“ஓ…ஓ… சார் இன்னும் முருங்கை மரத்துலதான் இருக்காங்களாமா… அப்டியெல்லாம் விட்ருவோமா… இதோ வர்றேன்” என்றபடி குறும்புப் பார்வையுடன் இறங்கியவள்…. கடைசிப் படியில் ஒரு ஓரத்தில் நின்றபடி… கைகளால் அவனது வழியை மறைத்தபடி நிற்க…
ரிஷி நிமிர்ந்து அவளைப் பார்த்து முறைக்க..
“போங்க ரிஷிகேஷ் சார்…” என்றபடியே வழியை விடாமல் இருக்க… ரிஷி இப்போது அவளது வழியை மறைத்திருந்த அவளது கைகளைப் பார்க்க…
“தட்டி விட்டுட்டு போங்க பாஸ்…” என வம்பிழுக்க…
அவன் அப்போதும் அமைதியாகவே முறைக்க..
‘பேச மாட்டீங்க… தொட்டு தள்ளி விட்டும் போக மாட்டீங்க… அடேங்கப்பா…. என்ன ஒரு ரோஷம்…”
“கையை எடுக்கிறியா இல்லையா…” என்றவனின் கடுகடுத்த குரலில்…
“நான் என்ன அவ்ளோ பெரிய பயில்வானா என்னா… என்னைத் தாண்டி போக முடியாதா…” அறியா பிள்ளைப் போல முகத்தை வைத்துப் பேசியவள்…
“ஓ சார்… என்னைத் தொடமாட்டீங்களா… அவ்ளோ கோபமா… அப்படி என்னை டச் பண்ணீட்டீங்கன்னா… ஏதாவது பறி போயிருமா என்னா… ஆனால்… “ என்று அவன் முகம் பார்த்தவள்… அவள் முகவாயில் கை வைத்து யோசித்த பாவனையில்
“ஆனால் அதெல்லாம்… இந்த ஆஸ்திரேலியா ராக் ஸ்ட்ராருக்கு… ஆஸ்திரேலியாவிலேயே போயிருச்சே… அஸ் பெர் யுவர் யெஸ்டர்டே ஸ்டேட்மெண்ட்…. இந்த கற்புக்கரசரின் கற்பு பறி போனதற்கும் நானே காரணம்… அப்புறம் என்ன இன்னும் வீராப்பு” எனறவளிடம்…
“உன்னை…” என ரிஷி அவளிடம் ஆரம்பித்த போதே
“மணிடாம்மா… என்னம்மா ரிஷி கூட வம்பு பண்ணிட்டு இருக்க… வழிய விடாமல் என்ன பேச்சு,,, ஃபளைட்டுக்கு லேட்டாகப் போகுது… உனக்கு பேசனும்னா… பேசாமல் லீவ் போட்டுட்டு ஏர்போர்ட்டு வரை போயிட்டு வா…” நட்ராஜ்… இருவரும் நின்றிருந்த… பேசிக் கொண்டிருந்த பாவனையில் மகளைப் புரிந்தவராக… ரிஷியைக் காப்பாற்றி விட…
“வந்துட்டாரு குரு… சிஷ்யனுக்கு ஏதாவதுன்னா பறந்து வந்துருவாரே” ரிஷியிடம் நொடித்தபடியே… வழியை விட… ரிஷி அப்போதும் பதில் சொல்லாமால் விடு விடென்று மேலே போய்விட்டான்
“போ போ… ட்ரெஸெல்லாம் கொலச்சு வச்சுருக்கேன்… கண்மணின்னு கத்தித்தான் ஆகனும்…” மனதுக்குள் மாடி அறையைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருக்க… அவள் தந்தையின் குரல்தான் கலைத்தது…
“மணிடாம்மா… லீவ் போடறியா…”
“இல்லங்கப்பா… பப்ளிக் லேப் எக்ஸாம் சூப்பர்வைசிங்பா … லீவ்லாம் போட முடியாது… கண்டிப்பா ஸ்கூல் போகனும்” என்றவளுக்கு அப்போதுதான் கணவன்… காதல் என்பதெல்லாம் மாறி கடமை ஞாபகத்துக்கு வந்திருக்க…. கண்டிப்பாக ரிஷி கிளம்பும் போது எப்படியும் இவளிடம் சொல்லி விட்டுத்தான் போவான் என்று நினைத்தபடி… நம்பிக்கையுடன் குளியலறைக்குப் போக… குளித்துக் கொண்டிருக்கும் போதே ரிஷியின் பைக் சத்தம் கேட்க..
“ரிஷி கிளம்பி விட்டானா” என வேகமாக குளித்தும் குளிக்காமலும் துணியை அள்ளிப் போட்டுக் கொண்டு வர…
ரிஷியோ இவளைப் பார்த்தும் பார்க்காமலும்…. இன்னும் சொல்லப் போனால் அவள் முகமே பார்க்காமல்… தாய் தங்கைகள்… மாமானாரிடம் மட்டும் விடைபெற்றபடி கண்மணி இல்லத்தை விட்டு வெளியேறி இருக்க… கண்மணியின் முகம் நொடியில் அதன் உயிரோட்டத்தை இழந்திருந்தது…
அவனின் கோபம் மலை அளவு இருக்கட்டும்… அதற்காக அவளிடம் சொல்லாமல் போவானா…???
வேகமாக அவளது அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்… ஏதோ ஒரு நப்பாசை… முகம் பார்த்து பேசவில்லை என்றாலும்… அலைபேசியிலாவது சொல்லி இருப்பான் என்று… அதிலும் இல்லை… நொடியில் முகம் மாறி இருந்ததுதான்… வெளிறியதுதான்… ஆனாலும்… யாரிடமும் ஏதுக் காட்டிக் கொள்ளாமல்… வழக்கம் போல பள்ளிக்கு ரித்விகாவுடன் கிளம்பிச் சென்றாள்…
”ஏன் அண்ணி… எல்லாமே வித்தியாசமா இருக்கு” என பள்ளிக்குச் செல்லும் வழியில் ரித்விகா கண்மணியிடம் பேச ஆரம்பித்திருக்க
”என்ன… வித்தியாசமா இருக்கு” குரலில் சுரத்தே இல்லாமல் கண்மணி கேட்க
”இல்ல… அண்ணா எப்போதும் இப்படி போறது வழக்கம் தானே… சில நாள் வீட்டுக்கே வராமல் போன் பண்ணி சொல்வாங்க… நீங்களும் சாதாரணமாத்தான் இருப்பீங்க… இன்னைக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க… அண்ணா போனதுலருந்து உங்கள கவனிச்சுட்டுத்தான் இருக்கேன்… நீங்க எப்போதும் இப்படி இருக்க மாட்டீங்களே… உங்க கண்ணு கூட கலங்குச்சு… சண்டையா என்ன” என்றவள்
“நீங்க இப்படின்னா… எங்க அண்ணன் வந்து… உங்க அண்ணியப் பத்திரமா பார்த்துக்க… அவ நைட்ல வண்டியை எடுத்தான்னா… எங்கேயாவது போறேன்னு சொன்னா…எடுக்க விடாதே… போக விடாதேன்னு புதுசா உங்கள பத்திரமா பார்த்துக்கச் சொல்றாரு… என்ன நடக்குது இங்க..” ரித்விகா மிரட்டலுடன் கேட்க
மற்றதெல்லாம் மறந்து விட்டாள் கண்மணி… ஏன் அவன் சொல்லாமல் போனதும் கூட கோபமாக இல்லை இப்போது… அவனின் காதல்… அக்கறை அவளுக்காக மட்டுமே… அது புரிந்த போது… கண்மணி மீண்டும் ரிஷியின் கண்மணியாக மாறியவளாக… சந்தோசத்துடன் அம்பகம் பள்ளியை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தாள்
/* ஹே ராமா எனை பிரிய வேண்டாமா ஹே ராமா நிழல் அறிய வேண்டாமா நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை இன்றே எழுதுகோல் தீட்டுமா நேற்றே எழுதிய பாடல் ஒன்றை காலம் நாளையும் மீட்டுமா ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே இருக்குமா சும்மா ஹே சீதா இந்ததிரிக்கு தீயை தா ஹே ராமா எனைபிரிய வேண்டாமா */
Lovely update