அத்தியாயம் 85-1:
/*ஹே சீதா உயிர்நுழையவாசல்தா ஹே சீதா உன்னில் வசிக்க வாய்ப்பை தா என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா பூமிஅறிந்திடா காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமைவேண்டும் தா */
மொத்த குடும்பமும் சந்தோஷத்துடன் இருக்க… தான் மட்டும் ஏனோ தனித்து இருப்பது போன்ற உணர்வில் இருந்தார் வேங்கட ராகவன்… வெறுப்பில்லைதான் அதே நேரம் எப்போதுமே அந்த வீட்டில் முதன்மையாக நின்று அனைத்தும் செய்பவர் அவரே… இப்படி இருப்பதும் பிடிக்கவில்லை… ஏன் இந்த மனநிலை அவருக்கே தெரியவில்லை… எப்படியோ பேரன் அவன் ஆசைப்பட்டபடி நன்றாக இருந்தால் போதும்… அது மட்டுமே அவர் மனதில் ஆட்சி செய்திருக்க… அனைவருக் சந்தோசமாக இருக்கும் போது தான் அவர்கள் மத்தியில் இப்படி வேண்டா வெறுப்பாக இருப்பது போல் தன் குடும்பத்தினரின் அழகான… மகிழ்ச்சியான தருணங்களுக்கு தடையாக இருப்பது போன்ற எண்ணமே கோவிலுக்கு வந்ததில் இருந்து அவருக்கு இருக்க
தன் மகனை அழைத்தவர்
“அம்மன் கோவிலுக்கு போறோம்னு சொன்னதால… அம்மனுக்கு புடவை வாங்கிட்டு வந்தேன்… நான் போய் இதைக் கொடுத்துட்டு அர்ச்சனை பண்ணிட்டு வர்றேன்…” சொல்லியபடியே கிளம்ப…
“அப்பா… எல்லோரும் வரட்டுமா “ என விக்கியின் தந்தை அவரிடம் கேட்க
“அதெல்லாம் வேண்டாம்… நீங்க இங்க இருந்து எல்லாம் பாருங்க… பொண்ணு வீடு வந்த பின்னாடி நானே வர்றேன்…” என்றபடி மகனிடம் பதிலேதும் எதிர்பார்க்காமல் கிளம்பி இருந்தார்…. அம்மனின் மூலஸ்தானத்தின் போய் நின்றும் இருந்தார்
வேங்கட ராகவன் கொடுத்த புடவையை வாங்கிய… அங்கிருந்த அர்ச்சகர்…
“ஐயா… பத்து நிமிசம் ஆகும்… அம்மனுக்கு நீங்க கொடுத்த புடவையை சாத்தி… அலங்காரம் எல்லாம் பண்ணிண்டு… கூப்டறேன்…. பிரகாரத்தை சுத்திட்டு வாரேளா…” என்றவரிடம் தலை ஆட்டியபடி… சுற்றுப்புற பிரகாரத்தை சுற்றி வர போனார்…
---
“ரிஷி…. ரிஷிக்கண்ணா… எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா… உங்க கூட முதன் முதலா அம்மனை தரிசிக்கிறதுல… நம்ம மேரேஜப்போ கூட நீங்க தாத்தா பாட்டி கிட்ட ஆசிர்வாதம் வாங்கினதோட சரி… ஆமாம் உங்களுக்கு இந்தக் கையை எடுத்து கூப்பி நிற்கிறதுல அப்படி என்ன கௌரவக் குறைச்சல் வந்துறப் போகுது… ட்ரை பண்ணலாமே.. தெரியலேண்ணா சொல்லுங்க… நான் சொல்லித்தர்றேன்” என்று அப்பாவி போல உற்சாகக் குரலில் கண்மணி சொன்ன போதே
“இப்போ வாயை மூடிட்டு வர்றியா… இல்ல அப்டியே போய்றவா” ரிஷி கடுப்பைக் காட்ட… முதலுக்கே மோசம் வந்தாற்ப் போல கண்மணி ரிஷியைப் பார்த்தாள்…
“சரி… சரி…. பக்கத்துல வந்து நின்னா போதும்” பல்லைக் கடித்தபடியே ரிஷிக்கு பதில் சொன்னவள்… அடுத்த நொடியே
“ரிஷி…” என்று எட்டி அவன் காதருகே ரகசியம் போல ஹஸ்கி குரலில் அவனைக் கூப்பிட… அவளின் அருகாமையில் ரிஷி அதிர்ந்தவனாக
“ஏண்டி இது என்ன நம்ம ரூமா… கோவில்டி.” என அவளை விட்டு தள்ளி நின்றவனிடம்
“ப்ச்ச்… ரொம்ப பண்ணாதீங்க…. “ என்றவள் அவனிடம்
“உங்களுக்கு ஒரு தங்க மலை ரகசியம் ஒண்ணு சொல்லவா… ஒரு வேளை ஒரு நாள்… உங்களுக்கு இந்த ரகசியம் உதவலாம்” என குரலை தாழ்த்தி ரகசியக் குரலில் அவனிடம் சொல்ல
“தங்க மலை ரகசியம்…. குழந்தைங்களுக்கு கதை ஏதும் எழுதுறியா அம்மு… அட்லீஸ்ட் அதையாவது வெளில புத்தகமா போட ட்ரை பண்ணுவியா… இல்லை நீயே எழுதி நீயே பார்த்துப்பியா…” ரிஷியும் நக்கலடிக்க
கண்மணி மற்றதெல்லாம் விட்டுவிட்டு…
“எனக்கு கதையோட முடிவுல குழப்பம்… நெகட்டிவ் எண்ட்தான் கதைக்கு சரியான முடிவு… ஆனால் படிக்கிற மக்கள் ஏத்துக்கிறனும்ல… ஒரே குழப்பமா இருக்கு… எனக்கே கான்ஃபிஃடெண்ட் இல்லாத ஒரு நிலைல எப்படி புத்தகமா போட முடியும்…”
“ஏண்டி… உன் அப்பா அம்மா கதைதானே… அப்போ உண்மை என்னவோ அதைத்தானே போடனும்… படிக்கிறவங்க அதெல்லாம் ஏத்துக்குவாங்க.. ரியல்லா உங்க அப்பா, நாம ஏத்துக்கிட்ட ஒரு விசயத்தை கற்பனையா படிக்கிறவங்க ஏத்துக்க மாட்டங்களா” ரிஷி அவளிடம் தீவிரமாகச் சொல்ல
“கற்பனைல ஏன் நெகட்டிவா கொடுக்கனும்… அதுதான் என் குழப்பமே… ஏன் சந்தோசமா முடிக்கக் கூடாது…” கண்மணி அப்போதும் குழப்பமாகவே கேட்க…
“இந்தக் கதைக்கு ஹீரோயின் இறந்து போறதுதான் நல்ல முடிவுன்னா… அதுதான் வைக்கனும்… அதைப் படிக்கிறவங்களும் ஏத்துக்கணும்.. நீ ஏத்துக்க வைக்கனும்… அப்படி கொடுக்க முடியலைனா கதை எழுத நினைக்காத…” என்றவனிடம் பேச்சைத் தொடராமல் கண்மணி அமைதியாக இருக்க… ரிஷி அவளையேப் பார்த்தபடி
“ரைட்டர் மேடம் ஒண்ணு பண்ணுங்க… சூப்பர் ஐடியா கொடுக்கவா… ஹீரோயினோட முடிவை திடீர்னு சொல்ல வேண்டாம்… அங்கங்க ஹிண்ட் கொடுக்கலாம்… எப்படினா… எக்சாம்பிளா… ஃபர்ஸ்ட் எபிசோட்லயே ஹிண்ட் கொடுக்கலாம்… இந்தக் கதைக்கே வருவோம்… இப்போ நட்ராஜ் சார் தானே நம்ம ஹீரோ… இவ்ளோ கோபக்கார… யார்க்கும் அடங்காத ஹீரோவையும் காலம் அமைதியானவனாக மாற்றியது… அப்படின்னு…”
“அப்புறம்…” என்றவள்… அவனை நக்கலாகப் பார்த்தபடியே
“அப்டியே நீங்க சொன்ன மாதிரி எழுதினாலும்… ஹீரோயின் வந்து ஹீரோவைச் சேஞ்ச் பண்ணுவாங்கன்னு நெனச்சுப்பாங்க… அவங்க இறந்து போவாங்கன்னு நினைக்கக் கூட மாட்டாங்க… ப்ச்ச்… விடுங்க… இப்போ அதுவா முக்கியம்… நாம என்ன பேசிட்டு இருந்தோம்” என்ற கண்மணியிடம்… ரிஷியும் அவள் கதை பற்றிய பேச்சை தொடராதவனாக
“தங்க மலை ரகசியம் சொல்லிட்டு இருந்தீங்க மேடம்”
“ஹான்… எஸ் தங்க மலை ரகசியம்… இங்க பாருங்க… நீங்க சொல்லி நான் எதையும் மறுக்க மாட்டேன்தான்… ஆனாலும் ஒரு வேளை நீங்க சொல்லியும் நான் கேட்காமல் இல்லை உங்க விருப்பத்துக்கு மாற நடந்துகிட்டேன்னு வச்சுக்கங்க… அப்போ… இந்த ரகசியம் உங்களுக்கு உதவும்… கீப் இன் மைண்ட்” என்றவளின் பூடாகரமான பேச்சில்
“அடேங்கப்பா… பெரிய ரகசியம் போல… எங்க சொல்லு… அந்த தங்கமலை ரகசியத்தை” ரிஷியும் அவளோடு சரிசமமாக பேச ஆரம்பித்திருக்க
“இந்த அம்மன் இருக்காங்கள்ள… இவங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல்னு உங்களுக்கும் தெரியும்… தெரியும் தானே…”
“தெரியும்”
“என் அம்மா எனக்குத் தெரியாது… அவங்க அன்பு தெரியாது… ஆனால் இந்த அம்மன் தான்…. இந்த கோவில் தான் அதை எல்லாம் எனக்கு கொடுத்தது.. இதுவும் தெரியும் தானே… எனக்கு என்ன வேணும்… வேண்டாம்… நடக்கனும் நடக்கக் கூடாது… எல்லாமே இங்க இருந்துதான் நடக்கும்… நம்ம விசயத்தையே எடுத்துக்கலாம்… சும்மா நான் இருந்திருக்கலாம்… என் பாட்டிகிட்ட ஏதோ சொல்லலாம்னு சொன்னேன்… இந்த மாதிரி எங்க வீட்ல இருக்கிற வாடகைக்கு இருக்கிற ஒரு பையன் என்கிட்ட இப்படி கேட்டான்னு… என்ன ஆச்சு… இவன் தான் உனக்கானவன்னு இந்த கருவறைல இருக்கிறவதான் எனக்கு ஆசிர்வாதம் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தினா…” பேசிக் கொண்டே போனவளிடம்
”நீ அடிச்சு விடுடி… காசா பணமா… ” எள்ளளும் சிரிப்புமாக ரிஷி சொல்ல
“நம்புனாலும் நம்பலைனாலும்… பேக் அண்ட் ஃபோர்த் பார்த்தால்…. பல கனெக்ஷன் கண்டுபிடிக்கலாம்… அதெல்லாம் விடுங்க… எனக்கு ஒரு பிரச்சனை… இல்லை எனக்கு ஒரு கவலை… இல்ல நான் தப்பு பண்றேன்னா…. இந்த சந்நிதில வந்து நின்னா போதும்… எல்லாமே அவ பார்த்துப்பா… நீங்க கூட அதே ஃபாளோ பண்ணலாம்… வேண்டுதலா கூட வேண்டாம்… கம்ளெயின்ட் கூட பண்ணலாம்… மண்டையில தட்டி என் அம்மா எனக்கு புரிய வைப்பா… ஐ மீன் நான் தப்பு பண்ற பட்சத்துல….” என்றவளிடம்…
“சாரி பேபி… பொதுவா… எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இடையில வேற யாரும் வர்றது எனக்கு அவ்ளவா பிடிக்காது… உன் சோ கால்ட் அம்மனா இருந்தாலும்… போலாமா… அதுனால உன் தங்கமலை ரகசியம் அப்புறம்… இந்த கம்பி கட்ற கதை எல்லாம் உன் கூடவே நிறுத்திக்க” என்றபடியே வேகமாக நடக்க ஆரம்பித்திருக்க
கண்மணிக்கே தெரியத்தான் செய்கிறது… அவனுக்கு பிடிக்காத ஒன்றை… ஆனால் இவளுக்கு பிடித்த ஒன்றை… அவன் செய்ய வேண்டும் இவள் எதிர்பார்ப்பது தவறான ஒன்றுதான்… ஆனால் மனம் அடம்பிடிக்கிறதே…. யோசித்தபடியே சந்நிதியின் முன் கணவனுடன் நின்றிருக்க
“மணி… வா வா… தீபாராதனை காட்ற நேரம் சரியா வந்துட்ட…. தாத்தா சொன்னாரு… இன்னைக்கு இங்க நம்ம ஆத்து ஃபங்ஷன்… முடியற வரை எல்லாம் பார்த்து பண்ணுனு” என்றபடியே அர்ச்சகரும் அர்ச்சனை செய்யப் போக…
அவரிடம் புன்னகைத்தவளாக
“ரிதன்யா – விக்ரம் இவங்க பேர்ல அர்ச்சனை பண்ணனும்… அவங்களுக்குத்தான் ஃபங்ஷன் “ என்றபடி அர்ச்சனைத் தட்டை நீட்ட…
ரிஷியின் கண்களில் வழக்கம் போல பெருமையும் சந்தோசமும் மட்டுமே தன் மனைவியைப் பார்த்த பார்வையில்…
கண்மணியும் அவனைப் பார்த்தாள் தான்… அடுத்த நொடியே… அம்மனிடம் திரும்பி… கண்களை மூடியபடி வேண்ட ஆரம்பிக்க… அதே நேரம் விக்கியின் தாத்தா வேங்கட ராகவனும் அங்கு வந்து சேர்ந்திருக்க… ரிஷி அவரைப் பார்த்து வேகமாக மகிழ்ச்சியுடன் புன்னகைத்தபடி பேசப் போக… அவரோ… இவனை எல்லாம் கண்டு கொள்ளாமல்… சந்நிதியில் இருந்த அம்மன் சிலையையும் பார்க்காமல்…. கண்மணியை கை கூப்பி ஆனந்தக் கண்ணீரோடு சிலையென பார்த்து நின்றிருக்க… அவரைப் பார்த்த ரிஷிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை…
ஆனால் அடுத்த நிமிடம்… அவரின் உணர்வு வயப்பட்ட நிலை…. அவர் கண்களில் இருந்த வடிந்த கண்ணீர்… அதில் இருந்த மகிழ்ச்சி…
“அப்படியென்றால் அவர் சொன்ன அந்தப் பெண் கண்மணி… என் கண்மணியா… என் மனைவியா… “ யோசித்த போதே
இப்போது ரிஷிக்கு விளங்கியது…
“ஒரு நாள் இரவு….தன் முதலாளிக்கு முடியாத போது… கண்மணியைத் தேடியபோது… அன்று அவளிடம் வாங்கிய அறை… அவள் மீது ஏற்பட்ட கோபம்” இப்படித்தான் அன்றைய தின ஞாபகம் அவனுக்குள் இருந்தது … இதோ இப்போது ஞாபகம் வந்தது அவள் அன்று தாமதமாக வந்த காரணமாகச் சொன்னது …
தன்னைத்தானே திட்டியும் கொண்டவனாக…. மீண்டும் விக்கியின் தாத்தாவைப் பார்க்க… அதே நேரம்
“அம்மனுக்கு தீபாராதனை காட்டப் போறேன்… பார்க்கலாம்” எனக் குருக்கள் சொல்ல… கண்மணியும் கண்களைத் திறந்தாள்…. அதே நேரம் தன்னை ஒருவர் மெய்மறந்து… மெய்சிலிர்த்து பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்பதெல்லாம் தெரியாமல்….
கணவன் புறம் திரும்பியிருந்தாள்… அவளுக்கு அவன் மட்டுமே முக்கியம்… மற்றதெல்லாம் அவள் கண்களுக்கு பட்டால் தானே….
“அந்தப் பக்கம் பார்க்கிறதை இந்தப் பக்கம் பாருங்க ரிஷிக்கண்ணா…” என்று அவன் முகத்தை திருப்பி அம்மன் முகம் நோக்கித் திருப்பியவள்…. தானும் அம்மனை தரிசிக்க ஆரம்பிக்க… ரிஷி அம்மனைப் பார்த்தபடியே… விக்கியின் தாத்தவையும் பார்க்க
அவரோ… கண்மணியை மட்டுமே… அவளை மட்டுமே பார்த்தபடி இருந்தார்…. அந்தப் பார்வையில் பக்தியும் பரவசமும் மட்டுமே… வார்த்தை கூட இன்றி… அவர் முகம் அத்தனை சந்தோச பரவசத்தில் திக்கு முக்காடி இருக்க… ரிஷிக்கோ எதிர் மாறான நிலை…. ஏனோ அவனால் அதை ரசிக்க முடியவில்லை…. யாரோ ஒரு பெண்ணை… குல தெய்வம்… அவர் வீட்டு சாமி…. எனச் சொன்னபோதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை…. ஆனால் அவள் தன் மனைவி எனும் போது… அதில் அவன் பெருமைப்பட முடியவில்லை… சந்தோசப்பட முடியவில்லை
கண்மணி அவன் மனைவி… அவ்வளவுதான்…. இன்னொருவர் தன் மனைவியை கடவுளுக்குப் ஒப்பாகப் பார்ப்பதைப் பார்த்து பொறாமை எல்லாம் இல்லை… அதே நேரம் அது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதே அங்கு முதன்மையாக இருந்தது….
அர்ச்சகர் தீபாராதனையை கொண்டு வந்திருக்க…. கண்களில் ஒற்றிக் கொண்ட கண்மணி…. அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள் என ரிஷி உணர்ந்து விலக நினைக்கும் முன்னேயே அவனுக்கு அவகாசம் அளிக்காமாலேயே அவசர அவசரமாக ரிஷியின் கண்களிலும் ஒற்றியவள்… அதே வேகத்தில் திருநீரையும் வைத்தவள்… அவன் கைகளையும் பிடித்துக் கொண்டபடி… கண் சிமிட்டி புன்னகைத்தவள்….
“ஒரே ஒரு நாள் ப்ளீஸ்… ப்ளீஸ் எனக்காக…. என் ரிஷிக்கண்ணால்லா” மெதுவான குரலில் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க… அவர்களைப் பார்த்த வேங்கட ராகவன் முகத்திலோ அப்படி ஒரு புன்னகை… அதிலும் அவர் ரிஷியைப் பார்த்த பார்வையோ… இப்படி ஒரு தெய்வப் பெண் கிடைக்க இவன் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்… அந்த ஒரு நிமிடத்திலேயே அந்தப் பெண்ணின் மொத்த அன்பும்… பார்வையும் அவளின் கணவன் மேல் இருப்பதையும் அவர் கண்டுக் கொள்ள… இப்போது அவரின் பார்வை ரிஷியிடம் பெருமிதமாக முடிந்திருக்க… இருவரையும் கண்களில் நிறைத்தார்….
“ஐயா… தீபாராதனை எடுத்துக்கோங்க…” அர்ச்சகரின் வார்த்தைகளில் தான் வேங்கட ராகவன் சுய நினைவுக்கே வர… கண்மணியும் இப்போது அம்மனிடமிருந்து… கணவனிடமிருந்து…. எதிரே பார்வையை மாற்றி இருந்தாள்…
“கண்மணி… விக்கி தாத்தா” என ரிஷி சாதரணமான குரலில் அவரை அறிமுகப்படுத்த முயல… கண்மணியோ… அந்த அறிமுகத்துக்கெல்லாம் காத்திருக்கவில்லை… அது தேவையும் இல்லை என்பது போல
“தாத்தா… நீங்களா… எப்படி இருக்கீங்க… எல்லோரும் எப்படி இருக்காங்க… “ எனக் கொஞ்சம் கூட யோசிக்காமல்… சட்டென்று அவரை அடையாளம் கண்டவளாக… ரிஷியை விட்டு விட்டு அவரிடம் போய் நின்றிருக்க… ரிஷியோ இப்போது தனித்து நின்றிருந்தான்
தன் முன் வந்து நின்றவளின் கைகளைப் பற்றி… தன் கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டவர்
“என் குல தெய்வமே… உன்னை எங்கெல்லாம் தேடினேன்… இப்படி ஒரு தரிசனம் கிடைக்கிறதுக்காகத்தானா தாயி…” அவரின் கண்களில் கண்ணீர் ததும்ப… கண்மணி வேகமாகத் திரும்பி ரிஷியைப் பார்க்க… அவனோ என்ன பாவனையைக் காட்டுவது என்ற தொணியில் வேறு புறம் திரும்பிக் கொண்டான்
“ப்ச்ச் தாத்தா… இவ்ளோ நீங்க உணர்ச்சி வசப்பட்டதாலதான் அன்னைக்கு நான் என் பேரை மட்டும் சொல்லிட்டு வந்துட்டேன்…. அன்னைக்கு சக மனுஷியா… யாரா இருந்தாலும் உதவி பண்ணியிருப்பாங்க… ”
வேங்கட ராகவனோ... அதை மறுத்தவராக
“ஆம்புலென்ஸ் வரச் சொல்லியிருப்பாங்க… அவ்ளோதான் பண்ணிருப்பாங்க… உன்னை மாதிரி தைரியமா இருந்திருக்க மாட்டாங்கம்மா… போயும் போயும் இந்தக் கிழவனுக்கு மட்டும் தான் சுயநினைவு இருந்தது… என்னோட நீ பேசி… தைரியம் கொடுத்து… எனக்குள்ள உத்வேகத்தை வரவச்சது… உன்னோட வார்த்தைகளும் தைரியமும் தான்மா… உன்னை அந்த இடத்துல பொண்ணா பார்க்கலம்மா… என்னைப் பொறுத்தவரை… முப்பெரும் தேவியர் தனித்தனி… ஆனால் அவங்க மூணு பேரையும் உன் ஒருத்தி ரூபத்துல பார்த்தேம்மா…”
இப்போது ரிஷி அவரிடம்…
“தாத்தா… பேசலாம் தாத்தா… வாங்க ” என இடையில் வரும் போதே… ரிஷியை எல்லாம் கண்டு கொள்ளாமல்
“அம்மா… அதுமட்டுமா… கல்யாணம் ஆகாத பொண்ணு நீ… அப்போ கூட என் நிறை மாத என் பேத்தி அரை மயக்கத்துல இருந்த போது… அவ குழந்தை இந்த உலகத்தை பார்க்க காரணமா இருந்தது நீதானம்மா… உன் தைரியம்.. பத்து குழந்தை பெத்தவங்களுக்கு கூட வராதும்மா… உனக்குத் தெரியுமாம்மா… உன் பேர் தான்மா பாப்பாக்கு வச்சுருக்கோம்” வேங்கட ராகவன் சந்தோசமாக உணர்ச்சி வயப்பட்டவராகாவே பேசிக் கொண்டிருக்க…
”கண்மணி நீ ஏதாவது பண்ணேன்…” ரிஷி கண்களாலேயே சைகை காட்ட…. அவளைப் பேச விட்டால் தானே அவர்.... கண்மணி அவர் பேச்சை நிறுத்த முடியாமல் ரிஷியை பார்த்தாள்...
“ஏண்டாம்மா உன்னை அடையாளம் காட்டிக்காமலே போய்ட்ட… உனக்கு ஒரு நன்றி கூட சொல்ல வாய்ப்பு தரலையேம்மா… “ அவளைப் பிடித்திருந்த கைகளை அவர் விடவே இல்லை… கூடவே அந்தக் கைகளில் இருந்த நடுக்கம்… அவரின் நிலையைக் கண்மணிக்குத் தெளிவாக விளக்க… அவஸ்தையாகக் அவரைப் பார்த்தவள்…
“தாத்தா…. இவ்ளோ எமோஷனல் ஆகுற அளவுக்கு என்ன ஆச்சு… நிதனாமா இருங்க” என மெல்லிய குரலில் ஆறுதல் சொன்னபடியே…
”அன்னைக்கு நீங்களும் ஒரு கட்டத்துல மயக்கமாயிட்டீங்க… அங்க இருந்த டீம்.. மீடியாவை கூப்பிட்டு இருந்தாங்க… ஒரு மாதிரி உங்கள.. என்னை எல்லாம் வைத்து விளம்பரம் தேட்ற மாதிரி இருந்தது… எனக்கு அது பிடிக்கலை… அதே நேரம் உங்க ரிலேட்டிவ்ஸும் அங்க வந்தாங்க… அவங்க பார்த்துப்பாங்கன்னு உடனே வந்துட்டேன்… அதுமட்டும் இல்லை இங்க அப்பாக்கும் அன்னைக்கு உடம்பு சரியில்லாம ஆகிருச்சு…” என்றவள்…
“அதுப்புறம் அடுத்த நாள் வந்தேன் சார்… நீங்க ஹாஸ்பிட்டல் சேஞ்ச் பண்ணீட்டீங்கன்னு சொன்னாங்க… எல்லோருமே நல்லா இருக்காங்கன்னு கேட்டு உறுதி பண்ணிட்டுத்தான் வந்தேன்” எனக் கண்மணி சாதாரணமாக முடிக்க
“நீ சாதாரணமா சொல்லிட்ட… ஆனால் எனக்கு இன்னுமே மறக்க முடியலம்மா…” என மீண்டும் வேங்கட ராகவன் ஆரம்பிக்க…
கண்மணி அவரை அவர் நெகிழ்ச்சியை சமாளிக்க முடியாமல் திணற… ரிஷிதான் சமாளித்து அவரைத் தன்புறம் இழுத்தவன்…
”தாத்தா… இவளை நீங்க மட்டும் பார்த்தால் போதுமா பாராட்டினால் போதுமா… உங்க குடும்பம் எல்லோரும் பார்க்க வேண்டாமா… முக்கியமா உங்க பேரன்… ரொ….. ம்…. ப…. சந்தோசப் படுவான்…. “ என்றவன்… தாத்தாவின் முகம் பார்த்து
“நீங்க சொன்ன அந்தக் கண்மணியை பிடிக்காது…. ஆனால் இந்த ரிஷியோட பொண்டாட்டி கண்மணியா இவள அவனுக்கு ரொம்ப பிடிக்கும் தாத்தா…. கிட்டத்தட்ட தங்கை மாதிரி” அழுத்திச் சொல்ல…
வேங்கட ராகவன் மற்றதெல்லாம் மறந்து சிரித்தவர்…
“அவனை ரொம்ப படுத்தி எடுத்துட்டேன் தம்பி… அவன் கிட்டதான் மன்னிப்பு கேட்கனும்… சரி சரி வாங்க வாங்க… “ என இருவரையும் அழைத்துக் கொண்டு போன போதே
ரிஷி தயங்கி நிற்க… கண்மணியும் தாத்தாவும் அவனை கேள்விக்குறியாகப் பார்க்க
“தாத்தா… நான் ஒண்ணு சொன்னால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே “ என்றவன்… கண்மணியைப் பார்த்தபடியே
“அவளை இனிமேல இந்த சாமி… குல தெய்வம்… அப்டிலாம் சொல்லாதீங்க ப்ளீஸ்… யாரோ ஒரு கண்மணி அப்டின்றப்போ எனக்கு அந்த வார்த்தைகள் பெருசா தோணலை… உங்களோட பிரமிப்பா நினைத்தேன்…. ஆனால் என் பொண்டாட்டி கண்மணினு வர்றப்போ எனக்கு அது பிடிக்கலை… இந்த சாமி… தெய்வம் இதெல்லாம் வேண்டாமே… “ அவன் சொன்ன போதே கண்மணி ரிஷியைப் புருவம் சுருங்கிப் பார்க்க
“எனக்குப் புடிக்கலடி…. என்னை விட்டு உன்னை தூரமா நிறுத்தி வைக்கிற ஏதுமே எனக்கு பிடிக்காது…” வேங்கட ராகவனை எல்லாம் இலட்சியம் செய்யாமல் கொஞ்சம் கூடத் தயங்காமல் சொன்ன போதே
“ரிஷி… வேணும்னா உன் முன்னால சொல்லலப்பா… என் சாமியை சாமின்னு சொல்லக் கூடாதுன்னா…. அது என்னால முடியாதுப்பா…” ரிஷியை விட அவர் பிடிவாதமாக இருக்க… கண்மணியை மட்டும் தான் ரிஷியால் முறைக்க முடிந்தது …
---
அதன் பிறகு… அங்கிருந்த ஒவ்வொருவரிடமும்… கண்மணியை அறிமுகப்படுத்தி முடித்திருக்க… அன்றைய தின விழாவின் நாயகியான ரிதன்யாவை விடுத்து அனைவரின் கவனம் கண்மணியிடம் திரும்பியிருந்ததை தவிர்க்க முடியவில்லை… பெண் பார்க்கும் படலமா… கண்மணியின் அறிமுகப் படலமா தெரியாத நிலை…
அர்ஜூன், நட்ராஜ்… நாராயணன் – வைதேகி, இலட்சுமி… ரித்விகா என எல்லோருமே அந்த சந்தோஷத்தில் மூழ்கி இருக்க… ரிதன்யா ஒதுங்கி நின்றிருந்தாள்… ஒதுங்கி நின்றாள் என்றாலும் விக்கி அவளுடன் இருக்க உண்மையிலேயே தனித்து இருந்தது ரிஷி மட்டும் தான்…
”இனி இங்க எதுக்கு… வாங்க ‘கண்மணி’ இல்லத்துக்கே போகலாம்… என் தெய்வம் இருக்கிற இடத்துலேயே சம்பந்தம் பேசலாம்” வேங்கட ராகவன் அனைவரையும் அங்கிருந்து கிளப்ப… ரிஷி இப்போது அந்த இடத்திலேயே இல்லை… அவர் கண்மணியைப் பார்த்து நெகிழும் காட்சியைக் காணவே முடியவில்லை முடிந்தவரை தவிர்த்தான்… தூரமாகவே நின்றும் கொண்டான்…
“இல்ல தாத்தா… கோவிலுக்கு வந்துட்டு… இங்க பேசாமல் போறது நல்லது இல்லை… பேச வேண்டிய நல்ல விசயங்களை எல்லாம் பேசி முடிச்சுட்டு… நாம அங்க போகலாம் தாத்தா… ப்ளீஸ்…” கண்மணி வேண்டிக் கேட்க… வேங்கட ராகவனும் அதைக் கேட்டுக் கொள்ளாமல் இருப்பாரா…
“சரிம்மா… நீ சொல்லி வேண்டாம்னு சொல்வேனா…… நீ சொல்ற மாதிரியே கேட்கிறேன்மா… ஆனால் மாப்பிள்ளை வீட்டு பக்கமா என்கூட என்பக்கமா நீதான் வந்து நிற்கனும்… “ வேங்கட ராகவன் யாரையுமே பேசவிடாமல் அவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்க…
நாராயணன் தான் பேசினார் இப்போது…
“சார்… நீங்க சொல்றதெல்லாம் சரி… ஆனால் என் பேத்தி அவ வீட்டுக்காரரோட சேர்ந்து நிற்கிறதுதானே முறை… அப்படி பார்க்கும் போது ரிதன்யாவோட அண்ணன் பொண்டாட்டி அவ தானே… அப்போ ரிஷி கூட அவ சேர்ந்து நிற்கிறதுதான் முறை... தம்பதியா சேர்ந்துதான் நிற்கனும்... பிரிக்காதீங்க... அது சரியா படலை எனக்கு “
நட்ராஜ் எதிலுமே தலையிடவில்லை… வழக்கம் போல அவர்கள் அனைவரிடம் இருந்து தள்ளி நின்று … தன் மகளை… அவளின் பெருமைகளை கண்களில் நிறைத்தபடியே… பார்த்துக் கொண்டிருந்தார்…
“ஆயிரம் பேர் சொந்தம் கொண்டாடினாலும்… உரிமை கொண்டாடினாலும் இவள் என் மகள் … என் இரத்தம் இவள்…” அந்தப் பெருமை அவருக்கு எப்போதுமே உண்டு… இன்று மட்டும் இல்லாமல் போய் விடுமா என்ன…
”ஏன் பிரிக்கனும்… உங்க மாப்பிள்ளை கொடுக்கட்டும்… எங்க குல சாமி வாங்கட்டும்…… ரெண்டு பேரையும் ஏன் பிரிக்கனும்” நாராயணன் கேள்விக்கும் வேங்கட ராகவன் விடாமல் பதில் அளிக்க
“இப்போ தெரியுதுடா உங்க தாத்தாவோட அட்ராசிட்டி… நீ தப்பிச்சுட்ட… நான் மாட்டிட்டேன்… என் தங்கச்சிய உன் வீட்டுக்கு கல்யாணம் பண்ணி அனுப்புறேன்னா என்னன்னு தெரியல… என் பொண்டாட்டிய இப்போ என் வீட்ல விட்டுட்டு போவாறான்னு தெரியலயேடா உன் தாத்தா” என ரிஷி புலம்பிக் கொண்டிருக்க
”டேய்… அவரை ஏதும் சொல்லதடா… என் மேரேஜ்டா… அது முக்கியம்… ஏதாவது சொல்லி ஏடாகூடம் பண்ணிறாதாடா “ என விக்கி பாவம் போல் முகத்தை வைத்துக் சொல்ல..
“உன்னை…” என கடுப்பாகச் ஆரம்பித்தவன்…. வேறு வழி இன்றி வேங்கட ராகவன் சொன்னது போல தம்பதியாக பெரியவர்களின் துணையோடு வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்ள…. ரிதன்யா-விக்கி இவர்களின் திருமணம் அங்கு உறுதி செய்யப்பட்டது… அங்கு பூரண சந்தோசம் நிரம்பி வழிந்திருந்தது
ரிதன்யாவுமே சந்தோசமாகத்தான் இருந்தாள்… தன்னை விட கண்மணி அங்கு முன்னிலைப் படுத்தப்பட்டது… அவளை அனைவரும் கொண்டாடியது… இதெல்லாம் அவள் கண்டு கொள்ளவே வில்லை… இது எல்லாமே… கண்மணியின் குணம்… அவள் பெருமை.. மற்றவர்கள் அவளைக் கொண்டாடுவது … அனைத்துமே…. அவள் அறிந்தது தான்… அவளைப் பொறுத்தவரை அண்ணாவின் மனைவி… இங்குதான் கண்மணிக்கும் அவளுக்கும் உள்ள முரண்பாடு… அதுதான் அவளுக்கு எப்போதுமே உடன்பாடில்லாத விசயம்…
கண்மணியை இப்போதும் தன் அண்ணன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வில்லைதான்… மற்றபடி விக்கி வீட்டின் குல தெய்வம் என்பதெல்லாம் அவளுக்கு உறுத்தலே இல்லை…
“நீ என்னை அண்ணினு சொன்னால் தான்… உன்னை இந்த வீட்டு மருமகளா ஏத்துக்குவேன்னு இப்போ சொன்னா என்ன பண்ணுவீங்க ரிது” ரிதன்யாவின் காதில் கண்மணி அவளுக்கு மட்டுமே கேட்கும் படி வம்பிழுக்க
ரிதன்யா சிரித்தாள்…
“கண்மணின்ற பொண்ணு… இந்தளவு சில்லித்தனமா சபையில நடக்க மாட்டான்னு எனக்கும் தெரியும்… இப்போதுமே வெங்கி தாத்தாவோட குலதெய்வம்ன்ற பட்சத்துல எனக்கு உன் மேல ஆச்சரியம் இல்லை… உன் குணம் எனக்கும் தெரியும்.. என் அண்ணாவோட மனைவி… அங்கதான் என்னால உன்னோட காம்ப்ரமைஸ் ஆக முடியலை… என்னோட அண்ணியாத்தான் உன்னை ஏத்துக்க முடியல… இதுதான் எனக்கும் உனக்கும் உள்ள பிரச்சனையே ”
கண்மணியின் முகம் சட்டென்று வாடியது ரிதன்யாவின் அந்த வார்த்தைகளில்…
“யார் யாரொவெல்லாம் அவளை எப்படி எப்படியெல்லாமோ பெருமையாகப் பேச… அதில் எல்லாம் அவள் மனம் மகிழ வில்லை… மாறாக இவளால் மட்டும் ஏன் என்னை ரிஷியின் மனைவியாகப் பார்க்க முடியவில்லை… அதில் தான் மனம் சுற்றியது” கண்மணியின் மனம் சட்டென்று கூம்ப… அதோடு அவளிடம் வம்பு வளர்க்கவில்லை…
அனைவரும் ஒருவரோடு ஒருவர் பேசிச் சிரித்தபடி கலகலப்பாக இருந்து கொண்டிருந்தது அந்த இடம்… பவித்ராவின் தோழி கிருத்திகா அங்கு வரும் வரை… அவள் வந்த போதோ எல்லாம் மாறியிருந்தது
அனைத்துமே சந்தோசமாக…. மகிழ்ச்சியாக… திருப்தியோடு போய்க் கொண்டிருக்க… கிருத்திகா தன் குடும்பத்தினருடன் அங்கு வந்தார்…
வருடத்திற்கு இரண்டு முறையாவது… பவித்ராவின் வீட்டிற்கு செல்வது கிருத்திகாவின் வழக்கம்… அதே போல் இன்றும் அங்கு சென்றிருக்க… பவித்ராவின் தாய் தந்தை இருவரும் வீட்டில் இல்லாமல் இருக்க.. உடனடியாக அலைபேசியில் தொடர்பு கொள்ள.
நாராயணும் வைதேகியும் கோவிலுக்கு வந்திருப்பதாகச் சொல்லி… கண்மணியும் கூட அவர்களுடன் இருப்பதாகச் சொல்லி கிருத்திகாவை அங்கு வரச் சொல்ல… கிருத்திகாவும் சந்தோசமாக வந்தார் தான்…
ஆனால் நட்ராஜ் அங்கு இருப்பான் என்று அவளிடம் யாராவது சொல்லி இருந்தால் கிருத்திகா வந்திருக்கவே மாட்டாள்… கிருத்திகா அங்கு வந்த போதுதான் அங்கு பெண் பார்க்கும் படலம்… என்பதும் தெரிய… சந்தோசமாக அவளும் ஆசிர்வாதம் ரிதன்யா விக்கிக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தபடி… அர்ஜூன் நாராயணன் வைதேகியுடன் பேசிக் கொண்டிருக்க… கண்மணி ரிஷியுடன் வந்தாள்…
“ரிஷி இவங்கதான் கிருத்திகா ஆண்ட்டி” என ரிஷியிடம் அறிமுகப்படுத்த…
“ரிஷி… அம்மாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்… சொல்லி இருக்கேன்ல ” என்ற போதே…. ரிஷியும் கிருத்திகாவும் வெறும் புன்னகையுடன் தலை அசைக்க… கண்மணி புருவம் சுருக்கினாள்…
“இதானே ஃபர்ஸ்ட் டைம் நீங்க ரெண்டு பேரும் மீட் பண்றது …” என்ற போதே ரிஷி சுதாரித்தவனாக…
“நீ அடிக்கடி பேசுற நபர்கள்ள…. இவங்களும் ஒருத்தவங்க… சொல்லி இருக்கதானே… புதுசா பார்க்கிற மாதிரி எனக்குத் தோணல” ரிஷி சமாளித்து வைக்க… கிருத்திகாவும் சமாளிப்பாக பேசி வைக்க…. கண்மணியும் கண்டு கொள்ளவில்லை… ரிஷியும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்…
கிருத்திகா வந்த நேரம் நட்ராஜ் கோவில் வளாகத்தில் இல்லை…
வேலையாக வெளியே சென்று விட்டு மீண்டும் கோவில் வளாகத்திற்குள் வந்த நட்ராஜின் பார்வையிலோ இப்போது யாருமே கண்களில் படவில்லை… கிருத்திகா மட்டுமே கண்களில் பட… அதே நேரம் கிருத்திகாவின் பார்வையும் நட்ராஜிடம் சென்றிருக்க…
“ராஜ்…” சட்டென்று கண்களில் நீர்த் திரையிட்டிருந்தது கிருத்திகாவிற்கு…
அவளையுமறியாமல்… வேகமாக நட்ராஜிடம் வேகமாகச் செல்ல…
“எப்படி இருக்க ராஜ்…” என்றவள்… அவசர அவசரமாக
“சாரி ராஜ்… நீ இங்க இருப்பேன்னு தெரிந்திருந்தால் வந்துருக்க கூட மாட்டேன்…. அதே நேரம் உன்னைப் பார்த்துட்டு உன் கூடப் பேசாமல்… உன்னைப் பார்க்காமலும் போக முடியாது” என்றவளிடம் வெற்றுப் புன்னகை உதிர்த்தவர்
“பார்துட்டேல்ல… பேசிட்டேல்ல… கெளம்பு” முகத்தில் அடித்தாற் போல பேசியவனின் குணத்தில்…
“ராஜ்… ஏதாவது என்கிட்ட பேசுனா என்ன ராஜ்…” எனும் போதே
“எத்தனை தடவை சொல்றது… நீ மட்டும் என்னைப் பார்க்க வராதேன்னு…” பல்லைக் கடித்துக் கொண்டு நட்ராஜ் அமைதியான குரலில் சொன்னபடி… கிருத்திகாவை விட்டு தாண்டிச் செல்ல நினைக்கும் போதே…
”பவித்ரா… என்ன ஆசைப்பட்டாளோ… அந்த இடத்துக்கு வந்திருக்கீங்க தானே… இன்னும் ஏன் இப்படி இருக்கீங்க ராஜ்… இப்படி நீங்க இருக்கிறது பவிக்கு பிடிக்குமா ராஜ்… ”
“ஏய்… கிளம்புன்னு சொல்றேன்ல… ” என ராஜ் உச்சஸ்தாயில் கத்த…
மொத்த குடும்பத்தின் பார்வையும் நட்ராஜ்… கிருத்திகாவிடம் திரும்பியிருந்தது… நிமிடத்தில்
---
“நீ என் முன்னால வராத… என் கிட்ட பேசாத… இங்க இத்தனை பேர் முன்னால நிற்கும் போது… நான் நட்ராஜ்… ஆனால் நீ…. நீ வந்தால் என் பவியோட ராஜ் அவனை ஞாபகப்படுத்துறேன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டியா… போ… என்னை பரிதாபமா நீ பார்க்கிற பார்வை எனக்கு ஆயிரம் ஊசியா குத்துது…. இங்க இருக்கிற இத்தனை பேர் கிட்டயும் என்னால சாதாரணமா பேச முடியும்… ஆனால் உன் கிட்ட…” எனும் போதே நட்ராஜ் உடைந்திருக்க… அவரது குரல் தழுதழுக்க ஆரம்பித்திருந்தது…
“நீ அவளை ஞாபகப்படுத்துற… நான் எவ்ளோ பெரிய துரதிர்ஷ்டசாலின்னு… உன்னைப் பார்க்கிற… உன் முன்னால நிக்கிற ஓவ்வொரு செகண்ட்லயும் என் இரத்தம் கொதிக்குது… வேண்டாம் வேண்டாம்னு விலகி விலகி ஓடிப் போன என்னை… தேடி வந்து… எல்லாம் கொடுத்துட்டு என்னை விட்டு விலகிப் போனாளே… அவ ஞாபகம் வருது கிருத்தி… உன்கிட்ட எவ்ளோ கெஞ்சி இருப்பேன்… எனக்கும் அவளுக்கும் ஒரு விசயம் கூட ஒத்தே வராதுன்னு … செட்டே ஆகாதுன்னு…. கேட்டீங்களா ரெண்டு பேரும்... இப்போ அது உண்மைதானே”
இப்போது கிருத்திகாவும் அழ ஆரம்பித்திருக்க
“போ… என் முன்னால நிக்காத… நான் என் பொண்ணுக்காக வாழனும்னு நினைக்கிறேன்… கண்மணியோட அப்பா நட்ராஜ்… அவன் தான் இங்க இருக்கான்… உன் ஃப்ரெண்டோட ராஜா நினைக்க வைக்காத… அவன் கைக்கு கிடைச்ச ஒரு பொக்கிஷத்த காப்பாற்ற முடியாத ஒரு கோழை… வாழவே தகுதி இல்லாதவன்…. ” நட்ராஜ் உணர்ச்சி வசப்பட்டால் என்ன ஆகும்… வழக்கம் போல அவர் திணற ஆரம்பித்திருக்க… ரிஷி அதற்கு மேல் அவரைப் பேச விடுவானா என்னா… வேகமாக அவர் அருகே ஓடி வந்தவனாக
”மாமா… ப்ளீஸ்… ஏன் மாமா… உங்களுக்காக நாங்க இத்தனை பேர் இருக்கோம்… நான் இருக்கேன் மாமா உங்களுக்கு….” என்றவன்… சற்று தள்ளி நின்ற கண்மணியைக் காட்டி…
“இவ இவளுக்காகத்தானே நீங்க இருக்கீங்க… நீங்க சொல்வீங்க தானே…. கிருத்திகாகிட்ட பேசனும்னு சொல்வீங்க தானே… உன் ஃப்ரெண்ட் ஆசைப்பட்ட மாதிரி… அவ நினைச்ச மாதிரி அந்த இடத்துக்கு வந்துட்டேன்னு அவங்ககிட்ட சொல்லனும்னு சொல்வீங்க தானே… இப்போ என்ன ஆச்சு சார் உங்களுக்கு” ரிஷி அவரிடம் பேசியபடியே நட்ராஜின் மனநிலையை மாற்ற முயல
”இல்ல ரிஷி… இவ முன்னால நிக்கும் போது… என் பவிதான் ஞாபகத்துக்கு வர்றா… என் பெருமை பேசி என்ன ஆகப் போகுது… அவ இல்லையே… இவ முன்னாடி நிக்கும் போதுதான் பவி என் பக்கத்துல இல்லை… ஏன் என்னை விட்டுப் போய்ட்டான்னு தோணுது… என்னால முடியல ரிஷி… அவ ஏன் என்னைப் பார்க்காமல் கூடப் போய்ட்டா… அவ சொல்லித்தானே நான் அவளை விட்டுப் போனேன்… அவ ஆசைப்பட்ட மாதிரி அவ அப்பா அம்மா முன்னால வாழ்ந்து காட்டனும்னு… பெரிய உயரத்துக்கு போகனும்னு சொன்னதுனாலதானே நான் போனேன்… நான் வந்து பார்க்கும் போது என்கிட்ட ஏன் சொல்லாமல் போனா… இன்னைக்கு அவ இல்லை… அவ சொன்ன மாதிரி அவ அப்பா அப்பா முன்னால நிற்கிறேன்… என்னை ஏத்துக்குவாங்களா இவங்க… இதுக்குத்தானே ரிஷி அன்னைக்கு அவ போராடுனா… ” ரிஷியின் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க…
மொத்தக் குடும்பமும் நட்ராஜை மட்டுமே பார்த்தபடி இருக்க… கண்மணியோ நட்ராஜின் அருகில் செல்லவே இல்லை… அவரை வெறித்தபடி தூரமாக நின்றவளின் பார்வையில் வெறுமை மட்டுமே…
இப்போது விக்கி… வேலன்… தினகர் என நட்ராஜின் அருகே வந்திருக்க… வேங்கட ராகவன் குடும்பம் கூட நட்ராஜின் அருகே சென்றிருக்க…. நாராயண குருக்கள் கோப முறைப்புடன் நட்ராஜைப் பார்த்தபடி நின்றிருந்தார்…. அர்ஜூனோ அதைவிட தன் பங்குக்கு அவன் முறைப்பைக் காட்டிக் கொண்டிருக்க…
நட்ராஜ்… கிருத்திகாவிடம் இப்போது நிதானமாக பேச ஆரம்பித்தார்
“கிருத்தி… நீ எப்போதுமே எனக்கு நல்லதுதான் செய்துருக்க… என் பொண்ணை எனக்கு திருப்பித் தந்ததும் நீதான்… நீ இல்லேன்னா என் பொண்ணு என் கிட்ட வந்துருக்க கூட மாட்டா… என் அப்பாதான் எனக்கு முக்கியம்னு இவங்க எல்லாரையும் மீறி வந்துருக்கான்னா… அது நீ என்னைப் பற்றி அவகிட்ட சொன்ன விதத்துலதான்… எல்லாமே புரியுது… ஆனால் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் பவியோட வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் ஞாபகத்துக்கு வருதே… “ எனும் போதே நட்ராஜுக்கு வழக்கமான பிரச்சனை வந்திருக்க… கண்மணி வேகமாக இப்போது அவரருகில் சென்று அவருக்கு தேவையான முதலுதவிகளைச் செய்ய ஆரம்பித்திருக்க…. ரிஷி நட்ராஜை அவளிடம் ஒப்படைத்து விட்டு… நாராயணனிடம் வந்திருந்தான்….
”பார்த்தீங்களா…. அவரைப் பார்த்தீங்களா… உங்க பொண்ணு இல்லாமல் எந்த இடத்துல நிற்கிறார்னு பாருங்க… அப்படி என்ன சார் உங்களுக்கு ஈகோ… அந்தஸ்துதான் பிரச்சனையா… சரி மாப்பிள்ளையா ஏத்துக்கல்ல… ஏத்துக்க முடியல அட்லீஸ்ட் மனுசனாவாது இவரை ஏத்துக்க முடியலையா… உங்க பொண்ணு ஆசைப்பட்ட மாதிரி இன்னைக்கு நல்ல நிலைமைல வந்து நிற்கிறாரே…. அப்போ கூட ஏத்துக்க முடியலையா…” என்ற போதே
“எப்போதுமே இவனை ஏத்துக்க முடியாது… என் பொண்ணை எங்ககிட்ட பிரிச்சவனை என்னால எப்படி ரிஷி ஏத்துக்க முடியும்…. மகாராணி மாதிரி துருதுருன்னு வளைய வந்தவளை… பிச்சைக்காரியா அதுவும் உயிரே இல்லாத பொணமா கொடுத்தவன் இவன்…. தங்கத்துலயும் வைரத்துலயும் கொண்டாடின பொண்ணை… கண்ணாடி வளையலோட பெருமை பேச வைச்சவன்… அவளோட மனசுல இவன் மட்டும் தான் இருக்கான்னு என்ன ஒரு தெனாவெட்டா திரிஞ்சான்…. எவ்ளோ திமிரா திரிவான்… எங்க போனுச்சு அந்த திமிரு…. ஆங்காரம் எல்லாம்…. இவன் ஆடின ஆட்டத்துக்கு என் பொண்ணை பறி கொடுத்தது மிச்சம்… எந்தக் காலத்திலும் இவனை மன்னிக்க மாட்டேன்… இவனைக் கல்யாணம் பண்ணலேன்னா என் பொண்ணு இன்னைக்கு கண்டிப்பா உயிரோட இருந்திருப்பா… நாங்க இன்னைக்கு என் பொண்ணு இல்லாமல் இப்படி அநாதையா நிப்போமா… இவனை என்னைக்கோ கொன்றுக்கனும்… ” நாராயண குருக்கள் அதிகாரத் தொணியில் ரிஷியிடம் பேச
கை தட்ட ஆரம்பித்திருந்தான்…. ரிஷி…
“சபாஷ்… சார்… நீங்க அனாதையா நிற்கறீங்களா… இவரா உங்க பொண்ணை காதலிச்சார்…. விலகி விலகித்தானே போனாரு… உங்க பொண்ணு உயிரோட இருக்கும் போதே தள்ளி வச்சது நீங்க… அப்போ தெரியலையா... அநாதை ஆகிட்டீங்கன்னு இப்போ இவ்ளோ பேசுறீங்க… உண்மையைச் சொல்லப் போனால்…. இதோ இங்க நிக்கிறாங்களே இவங்க தான் பாவம்…” நட்ராஜின் தாய் தந்தையை காட்டியவன்….
“ஒரே மகன்… குடும்ப கஷ்டத்தை எல்லாம் தோள்ள சுமக்கப் போறான்னு கனவோட இருந்தவங்க… நீங்க பணத்தைப் பார்த்தவங்க… அவங்க அதை எல்லாம் அவங்க மகன் மூலமா பார்க்க நெனச்சவங்க… கடைசியில என்ன கிடைத்தது அவங்களுக்கு… நடைபிணமா ஒரு மகன்… அவன் மூலம் பணக் கஷ்டம்லாம் போகும்னு எதிர்பார்த்தால்… வெறும் கஷ்டம் மட்டும் தான்… கூட இன்னொரு சுமை… உங்க பொண்ணு பெத்த பொண்ணு… கோபத்தை யார்கிட்ட காட்ட முடியும்… மொத்த கோபத்தையும் பவித்ரா பெத்த பொண்ணுகிட்ட காட்டிட்டாங்க…”
”இவ்ளோ வன்மம்… கோபம்… ஈகோ… இதெல்லாம் இந்த மனுசன்கிட்ட ஏன் சார்…. என்னை ஏத்துக்க முடிந்த உங்களால ஏன் இவரை ஏத்துக்க முடியல” எனும் போதே அர்ஜூன் இடையில் வந்தான்
“உன்னையும் யாரும் இங்க ஏத்துக்கலை” என ஆரம்பித்த போதே
ரிஷி அர்ஜூனை இடை மறித்தவன்
“மிஸ்டர் அர்ஜூன்… இங்க யாரும் உங்க அத்தை பொண்ணைப் பற்றி பேசலை… அப்படி பேசினா அப்போ மட்டும் நீங்க உள்ள வாங்க… இது என் மாமா நட்ராஜுக்கான போராட்டம்… என் மாமாவோட மாமானார்கிட்ட நான் பேசிட்டு இருக்கேன்… நீங்க தேவையில்லாம வராதீங்க… ப்ளீஸ் கொஞ்சம் ஓரமா போய் நிக்கறேளா…” என்ற போதே
”அர்ஜூன்…. நீ தலையிடாத இதுல… “ என்று அர்ஜூனை அடக்கிய நாராயணன்…. ரிஷியை நேருக்கு நேராகப் பார்த்தபடி
“ரிஷி… உனக்கும் எனக்கும் எப்போதுமே பிரச்சனை இல்லை… என் பேத்தி அவளோட புருசன் இந்த மரியாதையை நான் எங்கேயுமே விட்டுக் கொடுத்து இல்லை… “ என ரிஷியிடம் ஆரம்பித்த போதே
”தாத்தா… ரிஷி… இப்போ இங்க என்ன நடந்துட்டு இருக்கு…. நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க… முதல்ல… இதெல்லாம் நிறுத்துங்க” என வாக்குவாதத்தை தடுத்து நிறுத்தப் பார்த்தாள் கண்மணி
”மேடம் இருங்க… நீங்க சமாதானத் தூதுவர்னு எல்லோருக்கும் தெரியும்…. உங்களுக்கு உங்க அப்பா வேணும்… தாத்தா பாட்டி வேணும்… எல்லோருமே வேணும்…. ஆனால் யாரையும் யார் கூடவும் சேர்த்து வைக்க மாட்டீங்க…. எப்போ உங்க பாச மழை தேவையோ…. அப்போப்ப அந்த இடத்துக்குத் தேவையோ பொழிஞ்சுட்டு வருவீங்க... ஆனால் ஆக்சுவலா என்ன பிரச்சனையோ அதை சரி பண்ண மாட்டீங்க…. அதுனால நீங்களும் தள்ளி நிற்கலாம்” ரிஷி கண்மணியை எகத்தாளமாகப் பேச
“இதுவரைக்கும் இவ்ளோ நாள் இவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்துருக்கா ரிஷி… வரலை தானே… அதுக்கு யார் காரணம்… இப்போ என்ன பிரச்சனை உங்க மாமனார்க்கு வந்தது…. இவ்ளோ நீங்க ஆக்ரோசம்… கோபப் படக் காரணம் என்ன ” எனக் கண்மணி கேள்வி கேட்டு நிறுத்த
நக்கலாகக் கண்மணியைப் பார்த்தவன்
“ஹ்ம்ம்ம்.. என் கோபத்துக்கு காரணம் என்னன்னு தெரியனுமா உனக்கு… என் மாமாவுக்கு மரியாதை…. அது கிடைக்கலை…. அதுதான் என்னோட பிரச்சனை… போதுமா… உன்னால உன் அப்பாக்கு வாங்கிக் கொடுக்க முடியலைதானே… அப்போ நீ ஒதுங்கிக்கோ… நான் பார்த்துக்கிறேன்” எனக் கண்மணியையே தள்ளி நிறுத்தியவனை கண்மணி முறைக்க… அவளைக் கண்டு கொள்ளாமல்… மீண்டும் நாராயணனிடம் திரும்பியவனாக
”அது எப்படி சார்… இவர் வேண்டாம்… ஆனால் இவரோட பொண்ணு… அதுவும் நட்ராஜோட ஒரு சின்ன அடையாளம் கூட இல்லாமல் பவித்ராவோட பொண்ணா முழுசா உங்களுக்கு உங்க குடும்பத்துக்கு இவ வேணும்… எவ்ளோ பெரிய பேராசை…. ” என்றவன்
“இப்போ அவ நட்ராஜ் பொண்ணும் இல்லை… பவித்ரா பொண்ணும் இல்லை… நட்ராஜ்-பவித்ரா பொண்ணு.. எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம்… அதாவது அப்பாக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு போய்ட்டு வந்த்திருக்கலாம்… உறவு கொண்டாடி இருக்கலாம்…. “
நிறுத்தியவன்
“ஆனால் அவ இப்போ மிஸஸ் ரிஷிகேஷ்… என்னோட பொண்டாட்டி…. அந்த உரிமையை நான் காட்டவா… உங்க வீட்டுக்கு போகக்கூடாதுனு தடுத்து நிறுத்துனா என்ன பண்ணூவீங்க” என்ற போதே….
அர்ஜூன் ரிஷியின் சட்டையைப் பிடித்திருந்தான்
“என்னடா மிரட்றியா…. எங்காத்துக்கு அவள வர விடாமல் பண்ணிருவியா என்ன… “
அவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்ட ரிஷி…
“அஃப்கோர்ஸ்… கண்டிப்பா அவளைப் போகக் கூடாதுன்னு சொல்வேன்…” என்றவன்… கண்மணியின் பார்வையின் உஷ்ணம் அறியாமல் இருப்பானா????
“ப்ச்ச்… சொல்றதைக் கேட்கிற ஆளா இருந்தால் சொல்லலாம்… ஆனால் அவ அப்படி இல்லையே… என்னால அவகிட்ட சொல்ல முடியல… “ என்றவன்…
“அதுனாலதான் நான் என் மாமாவுக்காக பேசுறேன்” எனும் போதே வேங்கட ராகவன் ரிஷியிடம் வந்தவர்
“தம்பி… அவ பெரியவர்… அவர்கிட்ட இப்படி பேசுற…. “ எனச் சொல்ல அடுத்தடுத்து அனைவரும் ரிஷியைச் சமாதானப்படுத்த ஆரம்பித்திருக்க… ரிஷியும் அடங்கினான் ஒரு கட்டத்தில்
”வேலா… முதலாளியை வீட்ல இறக்கிவிடு… இங்க இருந்தால் இன்னும் டென்ஷன் தான் ஆவாரு…. “ நட்ராஜை ரிஷி அனுப்பி வைத்து விட்டு அமர்ந்து விட்டான் ஆயாசமாக..…
ஒரு வழியாக மீண்டும் அமைதி வந்திருந்தாலும்… ரிதன்யா-விக்கி விஷேசம்… அந்த சந்தோசம் எல்லாம் காணாமல் போயிருந்தது…
கிருத்திகா… ஏன் நாராயணன் வைதேகி யாருமே அங்கு இல்லை… கிளம்பி இருக்க… இலட்சுமி… தரையில் அமர்ந்திருந்த தன் மகன் அருகே வந்தார்…
தன் அருகே வந்த தன் அன்னையை உணர்ந்தவனாக
“ம்மா... அட்வைஸ்லாம் பண்ணாதீங்கம்மா… அப்பாக்கு அப்புறம் எனக்கு அவர்தான் எல்லாமேம்மா… அந்த மனுசன் கஷ்டப்படுறதை பார்க்க முடியலம்மா…” என்றபடியே நிமிர… அவன் தாய் இலட்சுமியோடு… நீலகண்டன் அவரது குடும்பம் என அனைவரும்… அங்கு நிற்க…. பிரேமிடம் மட்டும் பேசினான்
“பிரேம்… மாமா… மகி… அம்மாவை எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க… “ என்று சொல்ல… அவர்களும் அங்கிருந்து செல்ல… நீலகண்டன் மட்டும் ரிஷியை நோக்கி வர… அவரைப் பார்த்தவன்
“சும்மாவே இவர் அட்வைஸ் மழை பொழிவாரு…. இன்னைக்கு என்ன சொல்லக் காத்திருக்காரோ…. ரிஷி பொறுமைடா… அவர் என்ன சொன்னாலும் சொல்லிட்டு போகட்டும்…. “ என்று தனக்குள் சொல்லி கொண்டு இருக்க… முன்னால் வந்து நின்றவரின் கண்களில் கண்ணீர் மட்டுமே… ரிஷி என்ன உணர்ச்சியைக் காட்டுவது என்ற மனநிலையில் இருக்க
“நட்ராஜைப் பார்த்தால் பொறாமையா இருக்கு ரிஷி… எனக்கு ஒரு பையன் இல்லையேன்னு எப்போதுமே கவலை இருக்கும்… என் பொண்ணுக்கு மாப்பிள்ளை மட்டும் எதிர்ப்பார்க்கலை நான்... என் எதிர்பார்ப்புக்கும் ஆசைக்கும் தகுதியானவன எதிர்ப்பார்த்தேன்…. அந்த எதிர்ப்பார்ப்புதான் உன்னைத் தள்ளி வச்சதுக்கும் காரணம்…” எனும் போதே…
“பிரேம் மாதிரி ஒரு பையன் கிடைக்க கொடுத்து வச்சுருக்கனும் நீங்க…. தயவுசெஞ்சு முடிந்து போன விசயங்களை பேச வேண்டாமே… நீங்களும் நானும் ரொம்ப தூரம் விலகி வந்துட்டோம்…. விட்றலாமே….” என்றவன்
“நட்ராஜ் என் மாமானார் அப்படின்றதுனால… அவர் பொண்ணைக் கட்டினதுனால நான் பேசுறேன்னு நினைச்சீங்கன்னா அது தப்பான எண்ணம்… அவர் என்னோட மாமனார்ன்றதை விட என்னோட முதலாளி… என்னோட குரு… என் அப்பா இல்லாத இடத்தை நிரப்பினவர் அதுதான் உண்மை… அதை மட்டும் புரிஞ்சுக்கோங்க” சொல்லிவிட்டு… அங்கிருந்து நகர்ந்து…. வேகமாக விக்கியை நோக்கிச் சென்றவன்…. அங்கு அவன் குடும்பத்தார் அனைவரிடமும் நடந்த கலவரத்திற்காக மன்னிப்பை வேண்ட
வேங்கட ராகவன் கொஞ்சம் கூட முகம் சுளிக்கவில்லை… மாறாக…
“அந்த தம்பி அர்ஜூன் பற்றி விக்கி சொல்லிருக்கான்… நிவேதா விசயம் கூட… நிவேதா பற்றி இவங்கிட்ட பேச நினைத்தேன்… இப்போ யோசிக்கனும்னு நினைக்கிறேன்” என்றவரிடம்…
”சேச்சே… இல்ல தாத்தா… அவங்க மோசமானவங்கள்ளாம் இல்லை… சொல்லப் போனால்…. இங்க இருக்கிற எல்லாரை விட அர்ஜூன் ரொம்ப நல்லவர்… பேசுங்க உங்களுக்கும் அவரைப் பிடிக்கும்… நிவேதாக்கா ஒருத்தருக்காக இவ்ளோ நாள் வெயிட் பண்றாங்க… இவருதான் வேணும்னு நினைக்கிறாங்கன்னா…. அது தப்பா இருக்குமா… கண்மணி கிட்ட கேளுங்க அர்ஜூனைப் பற்றி… சொல்லப் போனால் என்னை விட அர்ஜூனுக்குத்தான் கண்மணி அவ்வளவு சப்போர்ட் பண்ணுவா… பாசக்காரர் தாத்தா…. மிஸ் பண்ணிறாதீங்க… “ ரிஷி மனம் நிறைந்து சொல்ல… வேங்கட ராகவனும் சம்மதமாக தலை அசைத்தார்…
ஒரு வழியாக எல்லோரையும் சமாளித்து… நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் மனைவியைத் தேட… அவள் அம்மன் சன்னிதிக்கு அருகே அமர்ந்திருக்க…
எல்லாம் செய்துவிட்டு... இப்போது ஒன்றுமே செய்யாத மிகவும் நல்ல பிள்ளை போல் பவ்யமாக அவள் அருகே அமர… கண்மணியோ அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல்… பொருட்களை எல்லாம் சரிபார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருக்க
“எனக்குத் தெரியும் என் மேல உனக்கு செம்ம காண்டுனு… கோபம்னு” அவன் வார்த்தைகளில் திரும்பியவள்…
‘அதெல்லாம் இல்லையே… சொல்லப் போனால் ரொம்ப சந்தோசம்” என்று கண்மணி கோபத்தை அடக்கியபடி பல்லைக் கடிக்க
”எதுக்கு” ரிஷி புரியாமல் கேட்க
“மிஸஸ் ரிஷிகேஷ்… எப்டியெல்லாம் இருக்கனும்னு ரூல்ஸ்லாம் போட்ற அளவுக்கு வளர்ந்துருக்கீங்களே….” சொன்ன போதே
“ஏண்டி… கூடவே டிஸ்க்லைமர் வச்சுத்தானே சொன்னேன்… உனக்குலாம் ரூல்ஸ் போட்டா அப்புறம் நான் டைவர்ஸ் பேப்பர்லதானே சைன் போடனும்… ” சீரியஸான தொணியில் சொல்லி முடிக்க … முறைத்தவளிடம்….
”உண்மை இல்லைனு சொல்லு பார்க்கலாம்… ” என்றவன்... கண் சிமிட்டியபடி
”அவ்ளோ சீரியஸா… என்னை மீறி பேசினாலும்… எவ்ளோ உஷாரா இருந்திருக்கேன்னு பாரு… எனக்கு எப்போதுமே என் பொண்டாட்டி முக்கியம்… ” அவள் அருகில் நெருங்கி அமர… வேகமாகத் தள்ளி அமர்ந்தவள்…
“இனிமேல … இந்த க்ளீன் ஷேவ் லாம் பண்ணாதீங்க… இன்னைக்கு ஒரு ஆட்டம் போட்டிங்கள்ள… இப்படி பார்க்கும் போது இன்னும் ரொம்ப கேவலமா இருந்துச்சு… நீங்க எப்போதும் போலவே இருங்க… நாடி நரம்பெல்லாம் துடிக்க பேசும் போது… அது இந்த மூஞ்சிக்கு செட் ஆகலை… இதுல விபூதி வேற.. இன்னைக்கு” கண்மணி கோபத்தோடு அவனைத் திட்ட ஆரம்பிக்க.. இப்போது ரிஷியும் அவளுக்கு பதிலடி கொடுத்தான்… விளையாட்டுத்தனத்தை விடுத்து
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்… நீ இதுவரை உன் அப்பாவை உங்க அம்மா ஃபேமிலி கூட சேர்த்து வைக்க ஏதாவது ஸ்டெப் எடுத்துருக்கியா சொல்லு…. “
“இங்க பாருங்க ரிஷி.. பாசம்.. பந்தம்லாம் தானா வரனும்…. கழுத்துல கத்தி வச்சு மிரட்ற மாதிரி… என்னோட பாசத்தை பணயமா வச்சு சேர்க்க மனசு வரலை… இது என்னோட கருத்து… ஆனால் ஒண்ணு சொல்றேன்… கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் சேருவாங்க… அதுக்கு நான் தான் காரணமா இருப்பேன்” கண்மணி உறுதியாகச் சொல்ல
“ம்க்கும்.. இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை… இதுக்கு மேலத்தான் நீ சேர்த்து வைக்கப் போற… எனக்கு ஒண்ணு தோணுது… நாராயணன் வாரிசும் சரி இல்லை… நட்ராஜ் வாரிசும் சரி இல்லை.. இந்த ரிஷியோட வாரிசுதான் இதெல்லாம் பண்ணுமோன்னு தோணுது… பார்க்கலாமா…” காலரைத் தூக்கி விட்டபடி ரிஷி பேச
“பேச்செல்லாம் பெருசாத்தான் இருக்கு… 24/7… என் வாரிசுன்னு… ஆனால் சார் வீட்ல இருக்கிறதுதான் பெரும் பாடா இருக்கும்… ’ஆர் கே’ சார் நாளைக்கு ஆஸ்திரேலியா போனா வர்றதுக்கு 2 வாரம் ஆகும்… அதுக்கப்புறம் அடுத்து இன்னொரு ப்ரோகிராம்… இதுல ரிஷியோட வாரிசாம்… அதுக்கெல்லாம் இன்னும் பல வருசத்துக்கு வாய்ப்பே இல்லைனு தோணுது… எப்படி... நம்ம ரித்விகா மேரேஜ் முடிந்த பின்னாடியாச்சும்… அதுக்கெல்லாம் வாய்ப்பு இருக்குமா ரிஷிக்கண்ணா…”
அதிர்ச்சியாக ரிஷி அவளைப் பார்க்க
“ரிதன்யாவைச் சொல்லல பாஸ்… ரித்விகாவைத்தான் சொல்றேன்… நல்ல வேளை உங்களுக்கு ரெண்டு தங்கச்சி… அந்த வகையில நான் ரொ………ம்ப புண்ணியம் பண்ணிருக்கனும்“ கண்மணி கடுப்பான பாவனையில் சொல்லி முடித்த போதே
“ஏய்த் திட்றியாடி….” ரிஷி பாவம் போல் முகத்தை வைத்துக் கேட்ட போதே… அவனுக்கு இருமல் வந்து விட…. பேச முடியாமல் இருமியபடியே…
தண்ணீர் வேண்டும் என்பது போல மனைவியிடம் சைகையில் கேட்க…
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாக…. இந்த வாய் இங்க இருந்து இது வரை பேசினுச்சு தானே… கை கால் எல்லாம் இப்படி அப்படினு ஆட்டி... நீட்டி பேச முடிந்தது தானே… தண்ணி மட்டும் எடுத்துக் கொடுக்க நான் வேனுமா…. எழுந்து போய்க் குடிங்க.. ” கண்மணி கொஞ்சம் கூட பாவம் பார்க்காமல் கறாராகச் சொல்லி விட்டு… தன் பாட்டுக்கு தன் வேலையை பார்த்தபடி இருக்க
“தண்ணி எடுத்து தரமாட்ட… அப்டித்தானே…” ரிஷியும் விடாமல் கேட்க… கண்மணியும் தன் பிடிவாதத்தை விடாமல் இருக்க
“அப்போ சரி….” என எழுந்தவன்… அம்மன் சந்நிதியை நோக்கிப் போக… கண்மணியோ புரியாமல்
“ரிஷி… அந்தப் பக்கம் தண்ணி இருக்கு... இந்தப் பக்கம் ஏன் போறீங்க” என்றவளிடம்
“ஹ்ம்ம்ம்ம்ம்…. நீதானே தங்கமலை ரகசியம் சொன்ன… அதுதான் செக் பண்ணப் போறேன்… என் பொண்டாட்டி கிட்ட தண்ணி கேட்டேன்… அவ எடுத்துத் தரலைனு மனு போடப் போறேன்” ரிஷி நக்கலாகச் சொன்னபடி அங்கிருந்த அம்மன் சிலையை நோக்கிப் போக…
“உங்கள….” என்றபடி…
“அப்டியே தலைவருக்கு ஸ்மார்ட்டா ஆக்ட் பண்றோம்னு நினைப்பு…. இம்சை…. வந்து தொலைங்க… எடுத்துட்டு வர்றேன்” என்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தவளிடம்
“ஹேய்… பொய் சொல்ற தானே… உன் புருசன் புத்திசாலித்தனத்தை மனசுக்குள்ள மெச்சிக்கிட்டதானே” என ரிஷி விளையாட… கண்மணியாலும் சிரிப்பை மறைக்க முடியவில்லை…. புன்னகையுடனே அங்கிருந்து நகன்றாள்
இப்போது ரிஷியும் அவளது சிரிப்பை ரசித்துச் சிரிக்க… விக்கியும் ரிதன்யாவும் அங்கு வந்திருந்தனர்… இவர்களைக் கவனிக்கவும் தவறவில்லை
“ஏண்டா… அவனனவனை இல்லாத டென்சன் எல்லாம் பண்ணிட்டு…. நீங்க ரெண்டு பேரும் மட்டும் சிரிச்சுட்டு இருக்கீங்க… நல்லா இருங்கடா…” என்றவன்…
“நீங்க ரெண்டு பேரும் அவசரமே இல்லாமல்… ரொமான்ஸ் பண்ணிட்டு மெதுவா வாங்க…. நாங்க கிளம்புறோம்” சொன்னபடி அவனிடமிருந்து விடைபெற… ரிஷி ரிதன்யாவிடம் திரும்பினான்…
“நீயுமா அவன் கூட போற…’” ரிதன்யாவிடம் ரிஷி ஆரம்பித்த போதே… விக்கி பதில் சொன்னான்
“அண்ணன்ற ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் போஸ்ட்லாம் ரிசைன் பண்ணிக்கலாம் நீ... ஏன்னா... இனி இவ உன் தங்கச்சி இல்லை… என் பொண்டாட்டி… சரியா… “ என்ற நண்பனை ரிஷி முறைக்க…
“ஏன் அந்த வார்த்தை உனக்கு மட்டும் தான் எழுதிக் கொடுத்துருக்காங்களா என்ன…. துரை முறைக்கிறீங்க… நாங்க உங்க தங்கச்சிய பார்த்துக்கிறோம்… இனி பொறுப்பை என்கிட்ட விட்ருங்க” என்றவன் ரிதன்யாவை அழைத்துக் கொண்டு கிளம்ப… ரிஷிக்கோ மறுபடியும் இருமல் வந்திருக்க….
“இவ எங்க போனா… ” கண்மணியைத் தேட ஆரம்பித்த போதே… அவனிடம் கண்மணி கொடுத்துச் சென்ற கண்மணியின் அலைபேசி அடிக்க ஆரம்பித்திருக்க… அதைப் பார்க்க… அர்ஜூன் தான் அழைத்துக் கொண்டிருக்க
சற்று முன் மலர்ந்திருந்த ரிஷியின் முகம் இருண்டிருக்க… அழைப்பை எடுத்து அர்ஜூனிடம் பேச ஆரம்பித்தான்
“தலைவரே எங்க இருக்கீங்க….. பேசனுமே… இருக்கிற இடம் சொன்னால்… வருவேன்…. பேசனுமே… முக்கியமா நான் யார்னு உங்களுக்கு காட்டனுமே அர்ஜூன் சார்” ரிஷி பேசிய தொணியே அர்ஜூனை கடித்து குதறும் விதமாக இருக்க…
அர்ஜூனும் அசரவில்லை….
“கண்டிப்பா… பிரகாரத்துக்கிட்ட கொடி மரம் முன்னாடிதான் இருக்கேன்…. வா வா… நானும் வெயிட் பண்றேன் நட்ராஜோட சிஷ்யனுக்காக” சொல்லி விட்டு அர்ஜூனும் வைத்தும் விட… கண்மணி வருவதற்காக காத்திருந்த ரிஷி … அவள் வந்ததும் அவள் கொடுத்த தண்ணீரைப் பருகியவன்…. கண்மணியையும் தன்னோடு அழைத்து சென்றான் அர்ஜுன் இருந்த இடத்தை நோக்கி... to be continued
---
கண்மணி... என் கண்ணின் மணி- 85 -2 - ல் இருந்து சில துணுக்குகள் ...
”ஹலோ… ஹலோ… அர்ஜூன் சார் உன்கிட்ட சொல்லிட்டுத்தான் கிளம்பப் போனாரு… ஆனால் நான் தான் நிறுத்தி வச்சுருக்கேன்…. நீ பாட்டுக்கு அவரைக் கிளம்பச் சொன்னா என்னம்மா அர்த்தம்..” என்றபடியே…. ரிஷி… கண்மணியின் தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள… அர்ஜூன் முகம் சட்டென்று மாறி இருக்க
கண்மணியுமே ரிஷியின் இந்த மாதிரியான நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை…
----
“ரிஷி… இது பழிக்கு பழி வாங்குற நேரம் இல்லை… அர்ஜூனைக் காயப்படுத்துறேன்னு சொல்லி…. என் மனசைக் காயப்படுத்திறாதீங்க…. அர்ஜூன் பண்ணின அதே தப்பை நீங்களும் பண்ணாதீங்க” எச்சரித்தாள் கண்மணி
---
“மிஸஸ் ரிஷிகேஷ்… இப்போ நீங்க என்ன பண்றீங்கண்ணா… சார்க்கு சில விளக்கம் கொடுக்கனும்… என்னன்னா… இந்த உலகத்திலேயே இவர் மட்டும் தான் உங்களுக்கு சரியான ஜோடின்னு … இவருக்கு மட்டும் தான் எல்லா தகுதியும் இருக்குன்னு…. நெனச்சுக்கிட்டு... இன்னும் சுத்திட்டு இருக்கார்… ”
கண்மணியின் கண்கள் கோபத்தில் தீப்பிழம்பாக மாறி இருக்க…
----
”பசி இல்லடி…” அவள் முகத்தைப் பார்க்காமலேயே…. பைக்கை ஸ்டார்ட் செய்திருக்க…. அவனைப் போக விடாமல் பைக்கை ஆஃப் செய்தவளாக…
“அப்போ தப்பு செஞ்சிருக்கோம்னு தெரியுது… முகத்தைக் கூடப் பார்த்து பேச முடியல சார்க்கு… அந்த அளவுக்கு மனசாட்சி இருந்தால் போதும்” கண்மணி அவனின் முகம் பார்த்துக் கேட்க… அப்போதும் மௌனத்தின் உருவமாகவே ரிஷி தொடர
----
“அது எப்படி ரிஷி… எல்லாம் பண்ணிட்டு… எல்லாம் பேசிட்டு… நான் பண்ணினது தப்புதான்… தெரிஞ்சுதான் பண்ணேன்…சொல்ல முடியுது… என்ன ஒரே ஒரு முன்னேற்றம்னா… மன்னிப்புலாம் கேட்க மாட்டீங்க… இன்னைக்கு என்ன புதுசா மன்னிப்பெல்லாம்…” கடுப்பும் நக்கலுமாகக் கேட்டவள்…
“உங்க மனசுல… நான் அன்னைக்கு கேட்ட வார்த்தை இன்னும் ஒரு ஓரத்துல இருக்குதானே… ” என்று அவனைப் பார்த்தவளின் கண்களில் கோபத்தோடு வலியும் இருக்க
---
“சொல்லுங்க… நீங்க அவருக்கு வலது கை இடது கை எல்லாம் தாம்.. என்னதான் அவசரம்னாலும்… நேரம் காலம் இல்லையா…. “ கண்மணி சட்டென்று வார்த்தைகளை விட…
“மேடம் ரொம்ப முக்கியமான விசயம்… அதனால தான்… “ சத்யாவின் குரல் முற்றிலும் உள்ளே போயிருக்க… கண்மணி இப்போது நிதானத்திற்கு வந்து
---
கண்மணி இப்போது அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்…
“நீங்க போகக் கூடாது ரிஷி… என் பேச்சைக் கேட்பீங்களா மாட்டீங்களா… “ என்றவளிடம் ரிஷி பேச முடியாமல் இயலாமையாய் பார்க்க
---
”இருக்கக் கூடாது… இதெல்லாம் கேட்கக் கூடாத ஒருத்திதான்… எதிர்பார்க்காத ஒரு பொண்டாட்டிதான் நான் தேடினேன்னு உனக்குத் தெரியாதா…இவ்ளோ நாள் அப்டித்தானே இருந்த… இப்போதும் அப்டியே இரு…” என்றவன் அவளைக் கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாமல் கிளம்ப…
---
”அத்தைகிட்ட ஹர்ஷித் பற்றி சொல்லப் போறேன்… “ அவள் முடிக்க வில்லை…. அடுத்த நிமிடம் ரிஷியின் கை அவள் குரல் வளையில் இருக்க….
---
“விசாரிச்சுட்டோம்… நீங்க அந்தக் கண்மணியை மிரட்டுனதுதான் பிரச்சனை… அவளோட தாத்தா இன்ஃப்ளூயன்ஸ்..” என்று தகவலைச் சொன்னபடி
ஆதவன் முகம் யோசனைக்கு போயிருக்க
---
”இந்த லவ்வுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை… சார்க்கு ” தனக்குள் சொல்லிக் கொண்டவளாக… அடுத்துப் போக… கண்மணி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த ஓவியம் பட…
---
”குழந்தையாக இருந்த ரிஷியின் புகைப்படத்திலும்… வளர்ந்து இருந்த ரிஷியின் புகைப்படத்திலும் மாறி மாறி முத்தங்கள் வைத்தவள்… நிறுத்தவே இல்லை...”
--
“நேத்து நைட்தான் உன் புருசனோட சண்டை போட்ட கண்மணி… அது இன்னும் முடியல… ஞாபகம் இருக்கா என்ன... அவ்ளோதானா அவனோட இருந்த கோபமெல்லாம்... உன்னல்லாம் வச்சுக்கிட்டு” மனசாட்சி அவளுக்கு ஞாபகப்படுத்த… ரிஷியின் முன் கோபமாவது... மண்ணாவது... மனசாட்சியின் வார்த்தைகளை அலட்சியப்படுத்திவிட்டு அதை ஒரு புறம் தள்ளியவளாக…
Lovely update