அத்தியாயம் 84
அன்றைய தினம்… விக்கி வீட்டில் இருந்து ரிதன்யாவைப் பெண் பார்க்க வரும் படலம்… பெரியவர்கள் இடையே பெரிதும் அறிமுகம் இல்லாமல்… விக்கி-ரிஷி நண்பர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இரு குடும்பத்துக்குமே இது முக்கியமான நிகழ்வு..
நேற்றிரவே விக்கி குடும்பத்தார் சென்னை வந்து சேர்ந்திருந்தனர்…. ரிஷியின் ஏரியாவில் இருந்த அம்மன் கோவிலில்தான் இரு குடும்பத்தாரின் சந்திப்பு என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்க… பெண் வீட்டார் என்பதால் ரிஷியின் வீட்டில் பரபரப்பு கூடுதலாக காணப்பட்டது…
மகிளா அவளது குடும்பத்துடன் அதிகாலையிலேயே வந்து விட்டாள்…
“ரிது… சிம்பிள் மேக் அப் போதும்டி… அழகா இருக்கடி….” என்றபடி தோழியை ஆசையுடன் நெட்டி முறித்தவளின்…. கண்களில் ஆனந்தக் கண்ணீர்…..
“தேங்க்ஸ்டி… இவ வேற யாரோ வீட்டுக்கோ போய்ட்டான்னு… யாரோன்னு தள்ளி வைக்காமல்…. இன்னும் என்னை இந்த வீட்டுப் பொண்ணா நினைச்சுட்டு இருக்கிறதுக்கு” மகிளா ஆதங்கத்தோடு சொன்னாலும் அவள் முகத்தில் சோகம் இல்லை…
தன் தோழியிடம் ஆதுரத்தோடு பேசிக் கொண்டிருக்க…
“மகி…ரிதுவுக்கு மேக்கப்பை போட்டு விட்டு கூடவே அவளை அழவும் வைக்கப் போறியா… ஃபர்ஸ்ட் எனக்கு இந்த ஐலைனர போட்டு விடு“ ரிதன்யா மகிளாவுக்கு இடையே வந்து மகிளாவிடம் பேச ஆரம்பித்திருக்க… மகிளாவும் சிரித்தபடியே ரித்விகாவுக்கு கண்மையை போட்டு விட்டவள்… மீண்டும் ரிதன்யாவிடம்
“ஓக்கே… இப்போ நகை மட்டும் போட்டா போதும்டி” எனும்போதே கண்மணி கதவைத் தட்ட… மகிளா போய் அறைக் கதவைத் திறந்தாள்…
“சாரி… புடவை எடுக்கனும்…” மகிளாவிடம் சொல்லிவிட்டு உள்ளே வந்தவளை ரிதன்யாவும் சட்டை செய்யவில்லை… மகிளாவும் சட்டை செய்யவில்லை…
கண்மணி யாருக்கோ… யாரிடமோ பேசுகிறாள் என்ற ரீதியில் கண்மணியைக் கண்டு கொள்ளாமல் இருவருமே தவிர்த்தனர்…
“இந்த புடவை கட்டப்போறோம்னு… இது எல்லாம் செலெக்ட் பண்ணி வச்சுருந்தேன்… நீ வந்து எல்லாத்தையும் மாத்திட்ட” ரிதன்யா செல்லமாக தன் தோழியைக் கடிந்து கொண்டிருந்தாள்…
மகிளாவோ தன் பெட்டியை திறந்தபடியே
“அதெல்லாம் வேண்டாம்…. நானே எல்லாம் கொண்டு வந்திருக்கேன்” என்றபடியே அவள் கொண்டு வந்த பெட்டியை ஆராய… ரிதன்யாவும் ஆர்வமுடன் மகிளாவைப் பார்த்தபடியே இருந்த போதே… அவளின் பார்வை ஒரு மாதிரியான அதிருப்தியான பாவனையுடன் மாறி இருந்தது அந்த நகைகளைப் பார்த்த போதே
“இதைத்தான் போட போற” மகிளா அவள் கொண்டு வந்திருந்த தங்க நகைகளை எடுத்து ரிதன்யாவிடம் காட்ட… ரிதன்யாவின் முகத்திலோ சற்று முன் இருந்த புன்னகை எல்லாம் போய்… கோபத்தை தாங்கி இருக்க… இருந்தாலும் அடக்கியபடி
“மகி… இதெல்லாம் வேண்டாம் வை… நார்மல்.. ஜீவல்ஸே போதும்”
“ப்ச்ச்… சும்மா இருடி… மாமா இருந்திருந்தா… இப்படி உன்னை விட்ருப்பாரா… அம்மா நேத்து நைட் எல்லாம் புலம்பல்… என் அண்ணன் இல்லையேன்னு… உன் நகையெல்லாம் ஊர்ல இருக்கிற லாக்கர்ல இருக்குனு அத்தை வேற சொல்லி இருப்பாங்க போல. “ என ஆரம்பித்த போதே
“இங்க பாரு…. இதெல்லாம் வேண்டாம்னா வேண்டாம்… எனக்குனு சில கொள்கைகள் இருக்கு… அதே மாதிரி எங்ககிட்ட பணம் இல்லைனு இல்ல… எங்க அப்பாவோட கம்பெனியை மீட்க போராடிட்டு இருக்கோம்… சீக்கிரம் எல்லாமே எங்க கைக்கு வரும்… அதுவரை இப்படித்தான்… என் அண்ணன் மாதிரிதான் நானும்… எங்க கௌரவம், எங்க சந்தோசம்… ஏன் எங்க அப்பா ஆத்மாவோட நிம்மதி எல்லாம் அந்தக் கம்பெனி எங்க கைக்கு வர்றதுலதான்… இந்த நகை பணத்துல இல்லை… புரிஞ்சுக்கோ மகி ”
“எல்லாமே எனக்கும் தெரியும் ரிது… ஆனால் இப்போ உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க ரிது… அவங்க முன்னால இந்த மாதிரி… இந்த செட் நகைகங்களோட ” எனும் போதே
“சீக்கிரம் இதெல்லாம் ஒரு நாள் மாறும் மகி… என் மேரேஜுக்கு முன்னால எங்க கம்பெனி எங்க கைக்கு வரும்… அதுக்கப்புறம் பாரு… என் அண்ணா கண்டிப்பா நிறைவேத்திக் காட்டுவாரு…. அவரே எனக்கு எல்லாம் பண்ணுவாரு…. அதுவரை ப்ளீஸ்… கம்பெல் பண்ணாத…”
“அப்போ நான் உனக்கு கொடுத்தால் வாங்கிக்க மாட்டியா… அப்போ நீயும் என்னைப் பிரிச்சுத்தானே பார்க்கிற… நான் தான், என் மாமா வீடு… என் அத்தை… என் ஃப்ரெண்ட்னு உங்கள சுத்தி சுத்தி வர்றேன்” எனும் போதே மகிளாவின் கண்களில் கண்ணீர் துளிகள் திரள ஆரம்பிக்க…
அதுவரை கண்ணில் போட்டிருந்த மையால் கண்களைத் திறக்காமல் இருந்த ரித்விகா இப்போது கண்களைத் திறந்தவளாக…
“ஏன் மகி… அழாத நீ… நகைதானே…. போட்டுக்குவா” என்றபடி மகிளாவுக்கு ஆதரவாக பேச…
அதே அறையில் இன்னொரு புறம் இருந்த அலமாரி அருகே நின்று கொண்டிருந்த கண்மணியும் இவற்றை எல்லாம் கேட்டபடி… கவனித்தபடிதான் இருந்தாள்…
“ரிது… மகிதான் சொல்றாள்ள… போட்டுக்கோ… அழறா பாரு… உங்க ரெண்டு பேருக்கும் இதெல்லாம் புதுசா என்ன… ஏன் அழ விடற அவளை” ரித்விகா பெரிய மனுஷி போல ரிதன்யாவிடம் பேச ஆரம்பித்திருந்தாள்
“இல்ல ரித்வி… அப்போ வேற… இது வேற… நமக்கிட்ட இல்லையா என்ன… அவசரத்துக்கு உடனே எடுக்க முடியல… மகியோடதுன்னு இல்லை… யார் கொடுத்தாலும் வேண்டாம்னுதான் சொல்வேன்… அப்படி ஒரு ஆடம்பரம் தேவையில்லைனு நினைக்கிறேன்… அண்ணா கொண்டு வந்து கொடுத்தால்… அதைப் போடனும்… அவ்ளோதான்” ரிதன்யா சொன்ன போதே மகிளாவின் கண்கள் இன்னும் அதிகமாக நீரை வார்த்தபடியே
“இப்போ புரியுதுடி… ரித்வி சடங்கப்போ… கோல்ட் ஜூவல்ஸ் ஏன் அவாய்ட் பண்ணேன்னு…. இவ்ளோ க்ராண்டா ட்ரெஸ் போட்றப்போ…. கோல்டை விட… ஆர்ட்டிஃபிசியல் நகைங்க தான் இன்னும் எடுத்துக் கொடுக்கும்னு சொல்லி அன்னைக்கு ஏமாத்திட்டதானே” மகிளா ஆத்திரமாகப் பேச ஆரம்பித்திருக்க… ரிதன்யா மகியின் கோபத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல்
“இங்க பாரு… எனக்கு வேண்டாம்… உனக்கு பிடிச்ச மாதிரி எல்லாமே இருக்கனும்னு நினைக்காத… அடம் பிடிக்காத…. என்னோட உணர்வையும் மதிக்க கத்துக்கோ…” என்றபடியே
“ரித்வி இந்த ட்ரெஸ்க்கு மேட்சா நம்மகிட்ட என்ன இருக்குனு பாரு” என்று தங்கையிடம் திரும்ப…. ரித்விகாக்குத்தான் சங்கடம்… மகிளா பக்கம் பேசுவதா… ரிதன்யா பக்கம் பேசுவதா… ரித்விகா யோசித்தபடியே இருந்த போதே
“கண்மணி… என்னோட ட்ரெ….ஸ்” அழைத்தபடியே உள்ளே வந்த ரிஷி… வார்த்தைகளை முடிக்கும் முன்னே… அவனது பார்வையில் மகிளா பட்டிருந்தாள்.. அதுவும் கண் கலங்கிய நிலையில்
அவன் முகம் சட்டென்று யோசனையில் கூம்ப… உடனே தன் தங்கைகளைப் பார்க்க…
“ஹலோ… நான் ஒண்ணும் இல்லை… இவதான்” என ரித்விகா ஜகா வாங்கியபடி… காரணத்தை சொல்லியும் முடிக்க…
இப்போது ரிஷி… ரிதன்யா-மகியின் அருகில் போய் நின்றிருந்தான்
அதே நேரம் ரித்விகா… தப்பித்தோம் பிழைத்தோம் என்ற ரீதியில்… தன் அண்ணனைத் தோழிகளுக்கிடையே மாட்டி விட்டு விட்டு தன் அண்ணியின் அருகில் சென்றவள்…
“அண்ணி… இந்த ட்ரெஸ் எப்படி இருக்கு… மகி எனக்காக வாங்கிட்டு வந்தாள்” என கண்மணியிடம் காட்ட…
கண்மணி… சற்று தள்ளி… நின்றிருந்த மகிளா, ரிதன்யா, ரிஷியிடமிருந்த பார்வையை மாற்றி… ரித்விகாவிடம் திரும்பினாள்…
“சூப்பரா இருக்கு தங்கம்… ட்ரெஸ் மாடல்… கலர்… ஆர்னமெண்ட்ஸ்…அதுக்கு ஏத்த மாதிரி மேக்கப்.. என் அழகுக் குட்டி..” என ரித்விகாவை நெட்டி முறிக்க…
“அழகா இருக்குல்ல… மகி எப்போதுமே இதுல மாஸ்டர்தான்… சின்ன சின்ன விசயம் கூட நோட் பண்ணி பண்ணுவா… அவள்ளாம் ஏதாவது ஃபங்ஷனுக்குப் போனால்… கல்யாணப் பொண்ணு கூட தோத்துப் போயிருவாங்க…. அவதான் செண்டர் ஆஃப் அட்ராக்ஷனா இருப்பா… இப்டினு மேக்கப் கலைஞ்சா கூட டென்ஷன் ஆகிருவா… எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கனும்…” என்றவளிடம்…
சொன்ன ரித்விகாவிடம் பதில் பேசாமல் புன்னகையை மட்டும் சிந்தியவள்… அடுத்த நொடியே மீண்டும் ரிதன்யா… மகிளாவை யோசனையுடன் பார்க்க
”அவங்க ரெண்டு பேரும் அப்படித்தான்… இது அடிக்கடி நடக்கும்… நாம நடுவுல போனோம் செத்தோம்… நாட்டாமை வந்துட்டார்ல… நமக்கு இனி பிரச்சனை இல்லை… தீர்ப்பு…. மகிளாவுக்கு சாதகமாத்தான் முடியும்… எங்க அக்கா எப்படியும் மகிளா கொண்டு வந்த நகைகளத்தான் போடத்தான் போறா” ரித்விகா இயல்பாக பேசிக் கொண்டே போக…
கண்மணி சுவாரஸ்யமும்ம் ஆர்வமும் கலந்த கேள்விப் பார்வையோடு ரித்விகாவை பார்க்க…
”இது வழக்கமா நடக்கிறதுதான் அண்ணி… எங்க அண்ணாக்கு மகிளா அழக்கூடாது… அவ்ளோதான்… மகிளாவா….நாங்களான்னா கேட்டா கண்ணை மூடிட்டு மகிளா பக்கம் கை தூக்கிருவான்…” என அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக… அவள் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பது போல…
ரிதன்யா ப்போது மகிளா கொண்டு வந்திருந்த நகைகளை அணிந்து கொண்டிருக்க…
”ரித்வி… ஆமாம் ரித்வி… நாட்டாமை தீர்ப்பு சொல்லியாச்சு போல… ரிதுவைப் பாரு… ஒத்துக்கிட்டாங்க போல… எப்படி ரித்வி… செம்ம டேலண்ட் நீ” என கண்மணி ஆச்சரியமாகச் சொல்ல…
’இதெல்லாம் நாங்க எதிர்பார்த்தது தான்…’ என்பது போல ரித்விகா அலட்சிய பாவனையோடு புருவம் உயர்த்தினாள்…
--
“லூசு… எதுக்கெடுத்தாலும் அழுது வடியாத… மேக்கப்லாம் அழிஞ்சு போச்சு பாரு… அப்புறம் அதுக்கும் அழப் போற… உன்னைலாம் எப்படி அந்த மனுசன் வச்சு சமாளிக்கிறாரோ…” என மகிளாவை பொய்க் கோபத்துடன் ரிஷி திட்ட
“ரொம்ப பேசாத… உன் தங்கச்சி எப்படி இருப்பா… உன்னை மாதிரிதானே இருப்பா… இதுக்கெல்லாம் யார் காரணம் நீதானே… எல்லாத்துக்கும் நீதான் மாமா காரணம்… பெருசா இப்போ பேச வந்துட்டாரு… இதுல என் புருசனை வேற சொல்றாரு…. போ போ ஏதாவது வேற வேலை இருந்தாப் போய்ப் பாரு” எனச் சாதாரணமாகச் சொன்னபடியே ரிதன்யாவிடம் கவனத்தை வைக்க…
ரிஷியும் அதற்கு மேல் அவர்களிடம் பேச்சு வார்த்தையை வளர்க்காமல்… கண்மணி… ரித்விகாவிடம் வந்து நின்றிருந்தான்
“என்ன ரெண்டு ரௌடியும் ஒரு மார்க்கமா நிற்கறீங்க” என்று அவர்களை பார்த்து வம்பிழுத்தபடியே
“பார்த்ததெல்லாம் போதும்… பீரோவை மறச்சுட்டு இருந்தா எப்படி… தள்ளிக்கோங்க…” எனக் கண்மணியைப் பார்க்க
கண்மணியோ கைகளைக் கட்டியபடி… உம்மென்ற முகத்துடன் அவனைப் பார்த்தபடியே இருக்க
“என்னடி” ரிஷி புரியாமல் கேட்க
“நாங்களும் கோபமா இருக்கோம்… எங்களையும் சமாதானப்படுத்திட்டு போங்க” கண்மணி அவனைப் பார்க்க…
ரிஷிக்கும் தெரியும் ஏன் அப்படி சொல்கிறாள் என்று… அவளின் பாட்டி கந்தம்மாளை இந்த விழாவிற்கு அழைத்ததால்தான் கண்மணி இப்படி சொல்கிறாள் எனத் தெரியாதா அவனுக்கு
“ஹ்ம்ம்ம்ம்… அப்படீங்களா மேடம்….” என்று இழுத்தவன்… நக்கலாகப் பார்வை பார்த்தபடியே
“அதெல்லாம் சமாதானப்படுத்த முடியாது போடி…. வைதேகி பாட்டி எவ்ளோ முக்கியமோ… அவங்க ஆசிர்வாதம் எப்படி வேணும்னு நினைக்கிறேனோ… அதே மாதிரி காந்தம்மாள் பாட்டியும் எனக்கு முக்கியம்…. நான் கூப்பிடத்தான் செய்வேன்… அப்படித்தான் பண்ணுவேன்… இதுல உங்கள சமாதானப்படுத்த வேற செய்யனுமோ… தள்ளிப் போ” என்று அவளைத் தள்ளி நிறுத்திவிட்டு…. பீரோவைத் திறக்கப் போக…
அவனை முறைத்தபடியே தள்ளி நின்றவளாக….
”பார்ட்னர்… பையன் பேச்சுல இப்போலாம் ஒரு திமிர்த்தனம் தெரியுதே…” கண்மணி ரித்விகாவை துணைக்கு அழைத்துக் கொண்டு வாயாட
”இப்போன்னு இல்ல அண்ணி… ரொம்ப நாளாவே…. உங்களுக்குத்தான்… உங்க கண்ணுக்கு இப்போதான் தெரிய ஆரம்பிச்சிருக்கு…” ரித்விகாவும் தன் அண்ணியுடன் சேர்த்து தன் அண்ணனை வறுக்க ஆரம்பித்திருக்க
“என்ன பண்ணலாம் பார்ட்னர்…” கண்மணி நம்பியார் போல கையை வைத்துக் கொண்டு ரித்விகாவைப் பார்க்க…
“உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க பார்ட்னர்… பையனுக்கு பாயாசத்தைப் போட்றலாம்” ரித்விகாவும் கண்மணிக்குச் சளைக்காமல் கவுன்டர் விட… இப்போது கண்மணி ஆவென்று பார்க்க…
ரிஷி கண்மணியைத் திரும்பிப் பார்த்தான்… இது உனக்குத் தேவைதான் என்பது போல…
தனக்கான உடையை எடுத்தவனாக… இருவரின் அருகில் வந்து நின்றவன்… அடுத்த நொடி ரித்விகாவின் காதைத் திருகியவனாக
”ரவுடின்னு சும்மா ஒரு பேச்சுக்குத்தான் நாங்க சொல்லிட்டு இருக்கோம்… ஓகேவா… அப்டியே ரெண்டு பேருக்கும் இந்த ஜில்லாவுக்கே ரவுடி மாதிரி நினைப்பு…. “ என்ற போதே
”நீங்க சொன்னாலும்… சொல்லலைனாலும்… நானும் என் பார்ட்னரும்… ரவுடிதான்… என்ன மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு…” என கண்மணி குரல் உயர்த்திய போதே
“கண்மணி…. “ என அழைத்தபடி இலட்சுமி வர… கண்மணி அப்படியே குரலை மாற்றி…
“சொல்லுங்க அத்தை… ஏதாவது வேலை இன்னும் இருக்கா…” தன் மாமியாரிடம் பேச ஆரம்பித்திருக்க…
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… சீக்கிரம் ரெடியாகும்மா…. நீ மட்டும்தான் இன்னும் ரெடி ஆகலை… அதைச் சொல்லத்தான் வந்தேன் … பிரேம் தம்பி… அங்க கத்திட்டு இருக்கு…. “ எனச் சொன்னபடி… தன் மகனிடம் திரும்பியவர்
“சம்பந்தி… எங்க கூட வர்றேன்னு சொல்லிட்டார்… அவங்க அம்மாவும் எங்க கூடத்தான் வர்றாங்க…. நீ மட்டும் பைக்ல வர்ற… அப்படித்தானே” என ரிஷியிடம் கேட்க…
ரிஷியும் ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டப் போக… அதற்குள் கண்மணி…
“இல்லத்த…. நானும் பைக்ல வர்றேன்… ஐ மீன் இவர் கூடவே வர்றேன்… ” எனக் கண்மணி வேகமாகச் சொல்ல… அங்கு யாரும் மறுத்துப் பேசவில்லை…. பேச முடியுமா என்ன… இலட்சுமி கிளம்பிட விட…
ரிஷி தன் விளையாட்டுத்தனத்தை விட்டவனாக… தீவிர பாவத்துடன்
”சரி சரி சீக்கிரம் கிளம்பு… நான் வேஷ்டி மட்டும் தான் மாத்தனும் …. லேட் பண்ணிறாத…” எனும் போதே
“ஹலோ… நீங்க வேஷ்டி கட்டி முடிக்கிறத்துக்குள்ள நாங்கள்ளாம் கோவில்லயே இருப்போம்…. பை த வே ரிஷிக்கண்னா… வேஷ்டி கட்ட ஹெல்ப் வேணுமா…” கண்மணி இப்போதும் ரிஷியுடன் விளையாண்டு கொண்டிருக்க
“ஏய்” என ரிஷி முறைத்தவன்
“என்ன என்ன… ஒரு காலத்துல எங்க அப்பாகிட்ட ஹெல்ப் கேட்டு கட்டிக்கிட்டவர் தானே… இப்போ என்ன துரைக்கு மீசை துடிக்குது… அடங்குப்பா” கண்மணி வாற…
“போடி போ உன் அத்தை கூடவே போ… இன்னைக்கு என் வண்டில உனக்கு இடம் கிடையாது” என்றபடி வேகமாகச் சொல்லி விட்டு… அங்கிருந்து கிளம்ப நினைக்க…
அதே நேரம்… மகிளா… கண்மணியின் கையில் இருந்த புடவையைப் பார்த்தவள்…
“கண்மணி… இந்தப் புடவையவா கட்டப் போற… ரொம்ப சிம்பிளா இருக்கே” எனக் கேட்க
“இல்ல… இதுதான் கட்டலாம்னு இருந்தேன்… ஆனால் இப்போ என்னோட கல்யாணப் புடவையைக் கட்டிக்கலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்” ரிஷியின் கையில் இருந்த பட்டு வேஷ்டியை பார்த்தபடியே யோசனை பாவத்துடன் கண்மணி சொல்ல…
மகிளா.. வேகமாக
“கண்மணி… நான் எக்ஸ்ட்ரா ஒரு புடவை கொண்டு வந்திருக்கேன்… அது உனக்குப் பிடிச்சிருந்தால் கட்டிக்கோ… உனக்கு நல்லா இருக்கும்… அழகாவும் இருக்கும்” என்றபடியே கண்மணியைப் பார்க்க.. கண்மணியும் மறுப்பு சொல்லாமல் இருக்க… மகிளாவும் அவள் மௌனத்தைச் சம்மதமாக எடுத்தபடி…. புடவையை எடுக்கப் போக… ரிஷியோ இடை மறித்தான் மகிளாவை
“இல்ல மகி… அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது” ரிஷி சொல்லி முடிக்கவில்லை…
“மகி… எனக்கு காட்டுங்க… எனக்குச் சரியா இருந்தால் நான் போட்டுக்கிறேன்” என்று மகிளாவிடம் கண்மணி சொல்ல… அதில் அதிர்ச்சியுடன் ரிஷி கண்மணியைக் கடுகடுத்த முகத்துடன் பார்க்க…
அவனைக் கவனிக்காமல் கண்மணியும் மகிளாவும் புடவையை பார்த்தபடி பேசிக் கொண்டிருக்க… ரிஷியோ கோபத்தோடு வேகமாக வெளியேறி இருந்தான்….
---
மகிளா, ரித்விகா… ரிதன்யா மூவருமாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்… பல கோணங்களில்… பல்வேறு விதங்களில்
கண்மணி அவர்களோடு எல்லாம் சேராமல்… அதே நேரம் அங்கு நின்றபடி அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க… அப்போது
“கண்மணி… எங்க மூணு பேரையும்… ஒரு போட்டோ எடுக்கிறியா…” மகி கண்மணியிடம் கேட்க… ரித்விகா தன் அண்ணியை சங்கடமாகப் பார்த்தாள்… மகிளா இப்படிக் கேட்டதால்…
ரித்விகாவுக்கு கண்மணியை மட்டும் விட்டு புகைப்படம் எடுக்கின்றோம் என்று இருந்தாலும்… மகிளா ரிதன்யா கண்மணி இவர்கள் மூவருக்கும் அவ்வளவாக பிடித்தம் இல்லை என்பதால் கண்மணியை அவர்களுக்கிடையே கூப்பிடவில்லை…
இப்போது மகி கூப்பிட்டு விட… சங்கடமாகத் தன் அண்ணியைப் பார்க்க…
கண்மணியோ சிறிதும் முகம் சுருக்காமல்… துள்ளளுடன் வேகமாக வந்து நின்று… மகிளாவின் அலைபேசியை வாங்கியவள்… அலைபேசித் திரையில் மூவரின் முகம் பார்த்தவளாக…
“ஹலோ… மிஸ் கல்யாணப்பொண்ணு… கொஞ்சம் சிரிங்க… உம்முனு இருந்தால் என்ன அர்த்தம்…” ரிதன்யாவை வேண்டுமென்றே வம்பிழுக்க… ரிதன்யா கடுப்பான பாவத்தைக் காட்டி… பின் வேறு வழியின்றி புகைப்படத்துக்கென்று சிரித்து வைக்க…
“இன்னும்… இன்னும்… பத்தலையே... இன்னும் கொஞ்சம் அதிகமா” உள்ளுக்குள் சிரித்தபடியே... வெளியே சிரிப்பை அடக்கியபடியே... வேண்டுமென்றே கண்மணி ரிதன்யாவை ஓட்ட
”இங்க பாரு கண்மணி… இப்போ போட்டோ எடுக்கிறியா இல்லையா… இல்ல திரும்பிக்கவா” ரிதன்யா கடுப்பாகக் கேட்க…
“அண்ணி … அண்ணி சொல்லுங்க பார்க்கலாம்… சொல்லலைனா… உங்க ஃபேஸ்ல வேற ஏதாவது அனிமேஷன் வச்சுருவேன்… அப்புறம் என்னைச் சொல்லக் கூடாதுப்பா….. போட்டோ எடுக்கவா வேண்டாமா..“ மிரட்டலாகச் சொன்ன போதே
”இவள அண்ணினு சொல்லித்தான் எனக்கு இந்த போட்டோ எடுக்கனும்னா…ஒண்ணும் தேவையில்லை” சொன்ன ரிதன்யாவின் முகம் இன்னும் கோபத்தில் சிவக்க….
“ஓகே…ஓக்கே… கூல்… அந்தப் பஞ்சயாத்தை அப்புறமா பார்த்துக்கலாம்” என்று புகைப்படத்தை எடுத்தவள்… அதே இடத்தில் இருந்து திரும்பி நின்று தன்னையும் சேர்த்து அவர்களோடு செல்ஃபி எடுக்க… ரித்விகா ஆச்சரியத்துடன் பார்த்தவள்… திரும்பி தன் சகோதரியைப் பார்க்க…. வேறு வழியின்றி சிரிக்க முயற்சிக்க… கண்மணி சிரித்தபடியே புகைப்படத்தை சொடுக்கியவள்…
“சாரி… உங்க பெர்மிஷன் இல்லாமல் உங்க போன்ல எடுத்துட்டேன்…. ரித்விக்கு இதை மட்டும் அனுப்பிருங்க” என்று மகிளாவிடம் அவளது அலைபேசியை ஒப்படைத்தும் இருந்தாள்…
அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை… நிற்கவும் நினைக்கவில்லை…
கண்மணிக்கு எப்போதுமே ரிதன்யா, மகிளா, ரித்விகா பாசப்பிணைப்பை பார்க்கும் போது ஏக்கமாகவே இருக்கும்… ஒற்றைப் பெண்ணாக பிறந்ததால்… அதுவும் தாயில்லாமல் தந்தையில்லாமல் இளம் வயதில் எந்த உறவுமில்லாமல்… தனித்தே வாழ்ந்தவள் அவள்…
பல பேர் பழகினர் தான்… என்னதான் நெருங்கிப் பழகுவது போல் காட்டிக் கொண்டாலும்… இவளை அனைவருமே ஒரு எல்லையில் நிறுத்தி விடுவர் …
ஏன் இன்று ரித்விகாவே அவளை அழைக்கவில்லையே… தன் அண்ணி தங்களோடு புகைப்படம் எடுக்க வர மாட்டாள் என்று அவளாகவே அனுமானித்து அழைக்கவில்லை… அது கண்மணிக்கும் தெரியாமல் இல்லை…
அவளின் துரதிர்ஷ்டன்ம் பிறப்பில் இருந்து இன்று வரை அவளைத் தொடர்கிறது… கண்மணியின் இதழ் வளைந்தது… விரக்தியில்..
இமையோரம் கசியப் போனக் கண்ணீரை… அது வரும் முன்னே அடக்க நினைக்கும் போதே…. அவளின் அலைபேசி ஒலிக்க… அழைத்தது அவள் கணவன் தான்…
“மேடம் ஒரு நிமிசம் மேல வந்துட்டு போறீங்களா” மரியாதையுடன் அவன் பேசிய விதத்திலேயே கண்மணிக்கு ரிஷியின் கோபம் புரிய… இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்…
“தெரியுமே… நீங்க போன் பண்ணுவீங்கன்னு தெரியுமே எனக்கு… நாமளே புடவை கட்டிட்டோமே… நம்ம ஆளைக் காணோமேன்னு நெனச்சேன்…. அப்புறம் தான் எனக்கு நீங்க வேஷ்டி எடுத்துட்டுப் போனது ஞாபகம் வந்தது… அப்போ இன்னும் கட்டலையா ரிஷிக்கண்ணா … இதோ வர்றேன்… ஹெல்ப்தானே… கண்மணி இருக்க ரிஷிக்கண்ணாக்கு கவலை ஏன்” கணவனுக்கு கொடுத்த பதில் குரலில் கண்மணியின் துள்ளல் மீண்டும் வந்திருக்க…
“ஏய்…” என ரிஷி ஆரம்பித்த போதே… அவனது அழைப்பைக் கட் செய்தவள் அதே துள்ளளுடன் கண்மணி கணவனைப் பார்க்கச் சென்றிருந்தாள்…
---
சில துளிகள் கண்மணி... என் கண்ணின் மணி- 84-2 - பகுதியில் இருந்து
“என்னடி… மகி கொடுத்த புடவையைக் கட்டிருப்பேனு பார்த்தா… நம்ம கல்யாணப்புடவையில வந்து நிற்கிற…. அழகுடி என் அம்மு” என்று அவளை கட்டிக் கொள்ள முயல…
அவனிடமிருந்து நழுவியபடியே
---
“பார்றா… நம்ம ‘ஆர் கே’ க்கு ரொமான்ஸ்லாம் வருதே… அடடே ஆச்சரியக்குறி…” சீண்டிய கண்மணியைப் பார்த்து ரிஷி முறைத்தபடியே… மீண்டும் அவளை வேகத்தோடு தன்னோடு அணைத்து… பின் அதே வேகத்தோடு விட்டு விலக்கியும் நிறுத்தியவன்
---
“ஏண்டி…” ரிஷி அவஸ்தையாக கண்மணியைப் பார்க்க…
”தோள் மேலத்தான் கை போடச் சொன்னேன்… வேற ஏதாவது பண்ணச் சொன்னேனா…. என்னமோ… ரொம்பத்தான் பண்றீங்க… உங்க செல்ல கந்தம்ம்மா பாட்டிக்கு முன்னால அநியாயத்துக்கு வெட்கப்படறீங்களே ரிஷிக்கண்ணா…. லேட் பண்ணுனீங்க… அப்புறம் வேற மாதிரி சென்சாருக்கு சவால் விட்ற மாதிரி போஸ் கொடுக்கச் சொல்லிருவேன்… பார்த்துக்கோங்க… இப்போ போட்றீங்களா இல்லையா” எனக் கண்மணி மிரட்ட
---
”அப்புறம்… உங்க தகுதி… இன்னைக்கு எங்கேயோ போயிருச்சு…. ஆயிரம் பேர் வருவாங்க உங்களுக்காக… முடிந்தால் உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க…. ஹ்ம்ம்… ஒருவேளை அதுக்கு உங்களுக்கு இந்தக் குழந்தை தடையா இருக்கும்னு நினைக்கிற பட்சத்தில்”
இப்போது கண்மணியிடம் வார்த்தைகள் தடுமாற…. ரிஷி… மீண்டும் தன் நிலைக்கு வந்திருந்தான்
“சொல்லு… தடையா இருந்தால்… உன்கிட்ட வந்து கொடுக்கவா”
---
அவன் கண்களைப் பார்க்க முடியாமல்
“என் அப்பா… இல்லைனா… என் தாத்தா பாட்டிகிட்ட கொடுத்துருங்க” அவளால் இந்த வார்த்தைகளைச் சொல்ல முடியாமல்.... எப்படியோ சொல்லி முடிக்க
Today night update irrukka mam shall I