அத்தியாயம் 82-2
பாண்டிச்சேரி….
“ஏண்டா… நாம எதுக்கு வந்திருக்கோம்.. என்ன பண்ணிட்டு இருக்கோம்” ரிஷி கையில் இருந்த இனிப்பை சாப்பிட்டபடி… விக்ரமின் அறையில் இருந்த தொலைக்காட்சியில் கவனம் வைத்தபடியும் விக்கியிடம் கேட்க
“தாத்தா… ஈவ்னிங் தான் வருவாராம்… வேற என்ன பண்ணச் சொல்ற… கனவா கண்டேன்… அவர் பண்ணைக்கு போயிருப்பார்னு… விடு பார்த்துக்கலாம்… தாத்தாவை சமாளிக்கிறேன்…… சம்மதம் சொல்ல வைக்கிறேன்னு நீ சொன்னதை நம்பி… நான் வேற தைரியமா இருக்கேன்… டிவியை பாரு… அதுவும் உனக்குப் பிடித்த படம் வேற… செண்டிமெண்ட் சீன்லாம் இருக்கும்.. வசனம் ஏதாவது வேணும்னா இதுல இருந்து சுட முடியுமான்னு பாரு….” விக்கி நக்கலாகச் சொல்ல…. நண்பனை கோபத்தோடு முறைத்தான் ரிஷி
“ஏண்டா… நேத்து வாழ்க்கையே போச்சுன்னு… அப்படி ஒரு சீன் போட்ட… இப்போ என்னமோ என்னோட மேரேஜுக்கு நான் என்னமோ சம்மதம் வாங்க வந்திருக்க மாதிரி என்னையே நக்கல் அடிக்கிற… ” ரிஷி கடுப்பாகக் கேட்டபோதே
“எல்லாம் உன் மேல இருக்கிற நம்பிக்கைதான்… யோசிச்சுப் பார்த்தேன்… நம்ம கண்மணி இருக்காள்ள… அவள்ளாம் எப்பேர்ப்பட்ட ஆளு… அவளையே உன் பக்கம் இழுத்துருக்க… என் தாத்தாலாம் என்ன… ஜூஜூபி உனக்கு… “ என்ற போதே…. ரிஷி மீண்டும் முறைக்க ஆரம்பித்தான் தான்… ஆனாலும்
“நம்ம கண்மணி இல்லை… என் கண்மணி… “ இன்னும் கடுப்பான முகத்துடன் ரிஷி விக்கியைத் திருத்த
”அப்படித்தான் சொல்வேன்… உனக்கு உன் பொண்டாட்டி கண்மணினா… எனக்கு என் தங்கை கண்மணி… அப்போ நம்ம கண்மணிதான்… இது ஒரு பிரச்சனையா உனக்கு” என்றவனிடம் ரிஷி வேறேதுவும் பேசாமல் அமைதியாக இருக்க
அவனின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த விக்கி…
”ஏண்டா…இப்படி மூஞ்சிய வச்சுருக்க… எப்போ பாரு… உம்முனே… ஏதாவது யோசிச்சுக்கிட்டே இருக்கிற மாதிரியே இருக்க… நம்ம காலேஜ் டேஸ்…. அந்த வீடு… உன் லூட்டிலாம் இன்னும் மிஸ் பண்றேண்டா ரிஷி… நான் எவ்ளோ சீரியஸா இருந்தாலும்… என்னை மாத்திருவியேடா…. அந்த ரிஷியை இன்னும் தேடறேண்டா… “
ரிஷி இப்போது நண்பனைப் பார்த்து புன்னகைத்தபடியே
“டேய் விக்கி… லூசாடா நீ… நான் நல்லாத்தாண்டா இருக்கேன்… எனக்கென்னடா குறைச்சல்… பெருசா சிரிக்கிறது இல்லை… அவ்ளோதானே தவிர…. வேறெதுவும் இல்லைடா எனக்கு… உண்மையைச் சொன்னால்… அப்டியே பழகிருச்சு… மற்றபடி அதே பழைய ரிஷிதான்… ஆனால் நீ சொல்ற மாதிரி யோசிச்சுட்டு இருக்கிறது உண்மைதான்…” எனும் போதே சத்யாவிடமிருந்து அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வந்திருக்க… பேச ஆரம்பித்தான் ரிஷி
“ஹ்ம்ம்ம் தெரியும்… கண்மணி இப்போதான் பேசினா… அவனுக்கு பெயில் கிடச்சு வெளியில வந்தா என்ன… சரி விடுங்க பார்த்துக்கலாம்.. ஹர்ஷித்தை சென்னைக்கு கூட்டிட்டு வந்திருங்க… அவன் மட்டும் தான் தனியா இருக்கான்… நான் அவன்கிட்ட பேசிட்டேன்… நீங்க சீக்கிரமா ஊட்டி கிளம்புற மாதிரி ப்ளான் பண்ணிக்கோங்க…“ என்று பேசி விட்டு வைத்தவன்… மீண்டும் விக்கியிடம் திரும்பியவன்
“கேட்டேல்ல… நான் யோசிச்சுட்டு இருக்கிறது இதுதான்… அந்த ஆதவனுக்கு பெயில் கிடைச்சுரும் போல…. அவனோட அடுத்த மூவ் என்ன… என்ன பண்ணுவான்…. அந்த யோசனையாவே இருக்கு விக்கி…. சரி விடு… இன்னைக்குப் பிரச்சனை உங்க தாத்தா… அவர்கிட்ட பேசுறது…” என்ற நண்பனையே இமைக்காமல் பார்த்தவன்…
“டேய்… முதல்லயாவது நீ தனியாளு… இப்போ நானும் உன் கூட இருக்கேன்… பார்த்துக்கலாம்டா விடு… “ என்ற விக்கியை கண்களில் நிறைவோடு பார்த்தவன் கண்களில் அடுத்த சில நிமிடங்களிளேலேயே துக்கம் சூழ ஆரம்பித்திருந்தது… விக்கியை விட்டு தள்ளி நின்றவன்
”நீ ஒருநாள் போன் பண்ணூனியே… நான் ஆஸ்திரேலியா போறேன்னு… அப்டியே மனசெல்லாம் வலிடா… நீ போறேன்னு சொன்னதை விட… அதைச் சொல்லும் போது ஒரு ஃபீல் கூட இல்லாம சொன்ன பாறேன்… அப்டியே செத்துறலாம் போல இருந்துச்சு தெரியுமா…. அன்னைக்கு முடிவு பண்ணேன்… இனி நம்ம குடும்பத்தை தாண்டி யார்கிட்டயும் நட்பு… பாசம் இதெல்லாம் வைக்கக் கூடாதுன்னு” என்றவன்
தன்னைப் பார்த்து தலை கவிழ்ந்து நின்ற விக்ரமிடம்…. இகழ்ச்சியாகச் சிரித்தபடி….
“நீ ஃபீல் பண்ணாத… நீ மட்டுமா…. அடுத்து என் அப்பா… அவர் கத்துக் கொடுத்தது என்ன தெரியுமா… தனியா பிறந்தியா… அதே மாதிரி தனியாவே இரு… தனியாவே போ… இதுதான் என் அப்பா சொல்லிக் கொடுத்தது.” கண்கள் பனித்திருந்தன ரிஷிக்கு…
”ரொம்பத் தெளிவாகிட்டேன்டா… எல்லாத்துக்கும் லிமிட்… கால்குலேஷன்… போட்டே பழகத் தெரிஞ்சுகிட்டேன்… அதுனால நீ என்ன… யார் என் கூட இருந்தாலும்… இல்லைனாலும்… தோள் கொடுத்தாலும்… கொடுக்கலைனானும்… எந்தக் கவலையுமில்லை… என்னால முடிந்ததை நான் பண்ணிக்கிட்டே இருப்பேன்… “
விக்கியின் முகம் இப்போது சுத்தமாக செத்துப் போயிருந்தது…
“ஏண்டா இப்படிலாம் பேசுற… ஒரு தடவை தெரியாமல் பண்ணின தப்பை மன்னிக்கவே மாட்டியாடா… மூணாம் மனுசன்கிட்ட பேசுறது மாதிரியே பேசுற… இதே மாதிரி கண்மணிகிட்ட சொல்வியாடா… அவளையும் இந்த லிமிட்லதான் வைக்கிறேன்னு…” விக்கி கேட்க
“அவகிட்டயும் நான் அப்படித்தாண்டா இருக்கனும்னு நெனச்சேன்… உண்மையச் சொல்லப் போனால் என்னோட எல்லைக்குள்ளதான் இன்னும் இருக்கேன்… என்ன வித்தியாசம்னா… என்னை வெளிய வர விடாமல்.. என் வட்டத்துக்குள்ள அவ வந்துட்டா… நான் வேற இல்லை அவ வேற இல்லைன்னு என்னை நினக்க வச்சுட்டா ” என்றவன்…
”ஆறு வருச வலிடா… இப்போ… கொஞ்ச நாளாத்தான்… எல்லாமே சந்தோசமா போகுது… அதுவரை தனியாளா… இருந்தேண்டா… சத்யாவும், நட்ராஜ் சாரும் மட்டும் இல்லைனா… என்ன ஆகிருக்கும் எனக்கு... எனக்கே தெரியலடா… சத்யா கூட என்னோட இருந்ததுக்கு காரணம் என் அப்பாகிட்ட இருந்த நன்றிக்கடன்… இந்த மனுசன் நட்ராஜ்... அவருக்கு நான் என்ன பண்ணினேன்… எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்… உங்க தாத்தா சொல்றாரே… சாமி…கடவுள்னு… அப்படி ஒருத்தர்னா… அது என் முதலாளிதாண்டா…. என்னை நம்பி தொழில் மட்டுமல்ல… வரம் கொடுத்ததும் அவர்தான்….
“உனக்குத் தெரியுமா… நீ என்னை விட்டுட்டு போனியே அந்த நிமிசத்துல இருந்து என்னோட தனிமை ஆரம்பிச்சதுடா… அந்த மாடி ரூம்ல வந்து கேளு… என் வலியும் வேதனையும் அது சொல்லும்… எத்தனையோ நாள் தூங்காமல் இருந்திருக்கேன்… பைத்தியம் மாதிரி… அந்த மொட்டை மாடில அலஞ்சுருக்கேன்…. அப்பா இல்லை… அம்மா தள்ளி வச்சுடாங்க… படிப்பு அதுவும் வரலை… தங்கைகளை என் கூட வச்சுக்க முடியலை… என்னை வெறுத்த மாமா கிட்டயே என் குடும்பத்தை விட்டுட்டு வந்த கையாலாகாத என் நிலை… அந்த வயசுல எதைடா பார்ப்பேன்… 20 வயசு… இதுல காதல் வேற… ஆனால் ஒண்ணு மட்டும் புரிந்தது…… அந்தக் காதல் மட்டும் தாண்டா அந்த வயசுல ஈஸியா பண்ண முடியும்.. மத்த ஒண்ணும் கிழிக்க முடியாதுன்னு… எவ்ளோ கேவலமான வாழ்க்கை வாழ்ந்தேன்னு உன்னால எல்லாம் யோசிக்க கூட முடியாதுடா… இன்னும் சொல்லிட்டே போகலாம்…”
“ஒருத்தி சொன்னா…இவன்லாம் ஒரு ஆளுன்னு… இவன் சொன்னான்னு நான் மேரேஜ் பண்ணிப்பேனான்னு… அந்த அளவுக்கு கேவலமான அற்பமான புழுவை விட வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேண்டா… “ எனும் போதே ரிஷியின் கைகள் நடுங்க ஆரம்பிக்க…
“டேய் மச்சான்… வேணாம்டா”
“என்னை பேச விடுடா… இதுல என்ன விசித்திரம்னா… சொன்ன அவகிட்டதான் நான் பைத்தியமா இருக்கேன்… சொன்ன அவளும் என்கிட்ட பைத்தியமா இருக்கா… ” நண்பனைப் பார்த்து இதழோரச் சிரிப்பை வைக்க
”டேய் ரிஷி… நான் ஏதோ பேசப் போய்… ஏண்டா… விட்றா… உன் வேதனை வலி எல்லாம் எனக்குப் புரியுதுடா… ” ஆனால் ரிஷி நிறுத்தவில்லை
“எல்லாரையும் பழி வாங்கனும்னு கூடத் தோணுச்சுதான்… நீலகண்டன்ல இருந்து அந்த அர்ஜூன்… கண்மணி எல்லாரையும்…”
”ஆனால் கடைசியில… அம்மா… அப்பா… தங்கை… நண்பன்… எல்லாமே எல்லா உறவுமே அவள் ஒருத்தி மட்டுமேன்ற மாதிரி மாறிட்டாடா… மாத்திட்டா… மாட்டக் கூடாதுன்னு நானும் போராடினேன்… முடியல…”
“இதுல… அந்த அர்ஜூன் வேற…. விட்டுப் போய்த் தொலைய மாட்டேங்கிறான்…. நம்ம வயசு கூட இல்லைடா அவருக்கு… வயசு இருக்கு காலம் ஒரு நாள் அவனை மாத்திரும்னு விட்டுப் பிடிக்க கூட முடியாது… அவனுக்கு பணம் இல்லையா… அழகு இல்லையா… கம்பீரம் இல்லையா… எல்லாமே நம்மள விட அதிகப்படிதான்…. யோசிச்சுப் பாரு அவங்க அப்பா அம்மா எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்கன்னு…. கெத்தா வாழ வேண்டியவர்டா… கில்ட்டியா ஃபீல் ஆகுதுடா எனக்கு“ என்றவன்… எங்கோ பார்த்தபடி
”கண்மணிக்கே அர்ஜூனைப் பிடிக்கும்டா…” சொன்ன போதே ரிஷியின் குரல் மாறியிருக்க… அவன் கண்கள் கலங்கியிருந்ததோ என விக்கிக்கும் தோன்ற ஆரம்பித்த போதே… ரிஷி வேகமாக கண்களைத் துடைத்தபடி…
“ப்ச்ச் நான் ஏன் ஃபீல் பண்றேன்…… அவ அடிக்கடி சொல்வா … டெஸ்டினி… விதின்னு… நான் கூட கிண்டல் பண்ணுவேன்… ஆனால் அது உண்மைதான் போல அவளுக்கு நான்… எனக்கு அவ… இதுல யார் இடையில வந்தாலும்… அவங்களால தொடர முடியாது… ” என பெருமுச்சு விட்டவனாக விக்கியைப் பார்க்க…
“ரிஷி…. “ என்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டவன்…
“டேய்… கண்மணியாவது… உன் மேல இருக்கிற காதலை… அன்பை… எல்லாருக்கும் தெரியுற மாதிரி காட்டி நடந்துக்கிறா…. ஆனால் நீ உள்ளுக்குள்ளேயே அடக்கி வச்சுருக்க மாதிரி தெரியுதுடா… என்கிட்டயே நீ இன்னைக்குதான் இவ்ளோ பேசுற… இந்த அளவுக்கு எக்ஸ்பிரஸ் பண்ற… “
‘அப்டிலாம் இல்லடா… எல்லோருக்குமே தெரியும்… என் அம்மா கூட புலம்புவாங்க… இப்போ இருக்கிறது அவங்களோட ரிஷிக்கண்ணா இல்லைனு… ”
“ஹ்ம்ம்… “ என்றபடியே….
“ஆமாம்… தாத்தாகிட்ட எப்டிடா பேசப் போற… என்ன பேசப் போறேன்னு ஏதாவது ஐடியா இருக்கா…” விக்கி பேச்சை வேண்டுமென்றே திசை மாற்ற…
”ஆமாடா… நான் மேடைல நாடகம் போடப் போறேன்… ஒத்திகை… ஐடியான்னு… ஃப்ளோல போக வேண்டியதுதான்… “ என்ற போதே கண்களில் கலவரத்தோடு பார்த்த நண்பனைப் பார்த்துச் சிரித்த ரிஷி…
“மச்சான்… லைஃப்ன்றது கிராஃப் புக் மாதிரி… அதுல நாம ஒரு புள்ளி… நம்மோட வாழ்க்கை இன்னொரு புள்ளி… நாம எப்போதுமே பூஜ்ஜியத்துலேயே நிற்க முடியாது… மைனஸ்…பிளஸ்… மேல கீழன்னு நம்ம வாழ்க்கைன்ற புள்ளி ஓடிட்டே இருக்கும்…. நாமளும் அதைத் துரத்திட்டு… அது பின்னாலேயே ஓட ஆரம்பிக்கனும்…” என்ற போதே
“தத்துவம்… அதுலயும் கணக்குப் பாடத்தை வச்சு…. மவனே… கணக்கு டீச்சர் புருசன்னு காட்றியா என்ன…. உன்னை” என விக்கி துரத்த… அவனிடம் மாட்டாமல் போக்குக் காட்டியவன்
“கான்ஸ்டண்ட்… அது வச்சு தத்துவம் சொல்லலையே… அது இன்னும் இண்ட்ரெஸ்டா இருக்கும்டா… அப்புறம்… அந்த இண்டெக்ரல்… டெரிவேஷன்…கால்குலஸ் அதுல கூட தத்துவம் சொல்லலாம்டா…”
“டேய் நீ மாட்டுன…. எனக்கே பாடம் எடுக்கிறியாடா…” விக்கி ரிஷியைத் இன்னும் வேகமாகத் துரத்த ஆரம்பிக்க…
அதே நேரம் விக்கியின் அறைக் கதவு தட்டப்பட…. இருவரும் அமைதியாகி…. கதவைத் திறக்க…
“ஐயா வந்துட்டாங்க…. உங்க ரெண்டு பேரையும் கீழ கூப்பிட்டாங்க தம்பி” விக்கி வீட்டு வேலையாள் வந்து சொல்ல… நண்பர்கள் இருவரின் முகமும் தீவிரமாகியது…
----
விக்கியின் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதால்… மொத்தக் குடும்பமும் அந்த வீட்டின் வரவேற்பறையில் கூடியிருக்க… ரிஷி மட்டும் தனி ஆளாக தனித்து தெரிந்தான்.. அதே நேரம் குடும்பத்தில் இருந்த அத்தனை உறுப்பினர்களுக்கு ரிதன்யா மருமகளாக வருவதில் சந்தோசம் என்பதால் ரிஷியை அவர்கள் தங்கள் வீட்டு உறவினராகவே நடத்த மனதளவில் ரிஷிக்கு சந்தோசமே… அதுமட்டுமல்லாமல் அங்கிருந்த ஒவ்வொருவரும்… வேங்கட ராகவனிடம் எப்படி பேசினால் அவர் மனதைக் கரைய வைக்க முடியும் என்பதை வேறு ரிஷிக்கு காலையில் இருந்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தனர்..
ரிஷிக்கு அதில் பெரிய நிம்மதி… தன் தங்கைக்கு அவள் புகுந்த வீட்டில் இத்தனை ஆதரவு இருக்கின்றது என்பதே அவனுக்கு பெரிய பலத்தைக் கொடுத்திருக்க… எல்லாம் கேட்டு… சாப்பிட்டு… பின் ஓய்வெடுத்து இதோ ரிஷி விக்கியின் தாத்தா வேங்கட ராகவன் முன் அமர்ந்திருந்தான்…
”நல்லா இருக்கியாப்பா… ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்னைப் பார்க்கிறேன்… உன் நண்பன் உன்னைப் பற்றி அடிக்கடி சொல்லிட்டே இருப்பான்.. உன்னை ஒரு ரெண்டு தடவை இல்லை மூணு தடவை பார்த்திருப்பேனா… “ என்றவரிடம்
“ஆமாம் தாத்தா… உங்களுக்கு என்னைத் தெரியுதா தாத்தா… எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு“ என்ற போதே
“எனக்கும் உன்னை நல்லா ஞாபகம் இருக்கு… ஒரு நாள்… வீட்ல பூஜை முடிச்சுட்டு தீபாராதனை கொடுத்த போது… அதை வாங்காமல் வெளியேறிப் போன பையன் தானே நீ உன்னைப் போய் மறப்பேபேனா ” விக்கியின் தாத்தா மிலிட்டரி தோரணையில் சொல்ல..
ரிஷி அதிர்ச்சியுடன் விக்கியின் தாத்தாவைப் பார்த்து விட்டு… விக்கியைப் பாவமான பாவனையில் பார்க்க…
விக்கியின் மனதில்… இதுதான் தோன்றியது…
“முதல் பந்திலேயே அவுட்டா… ”
பரிதாபமாக விக்கியும் ரிஷியை நோக்க…
”அண்ணனே இப்படி… அப்போ தங்கை… என்னமோ என்னைச் சமாதானப்படுத்தி… சம்மதம் சொல்ல வைக்க வந்திருக்கியாமே” வேங்கட ராகவன் எல்லாவற்றையும் எதிர்பார்த்தே பேச வந்திருப்பார் போல… எடுத்த எடுப்பிலேயே அதிரடியாகப் பேச ஆரம்பித்திருந்தார்
“இங்க பாருப்பா… நான் சம்மதிக்கலைனு சொல்லல… சம்மதம் சொல்லிட்டேன்… நான் வரமாட்டேனுதான் சொன்னேன்… இது என் பேரனுக்கும் எனக்கும் இடையில இருக்கிற பிரச்சனை… நீ யாரு… என்கிட்ட வந்து பேச… என் பேரனே எனக்கு வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்டேன்… நீ யார் இடையில” என அலட்சியமாகப் பேச
ரிஷி அமைதியாக சில நிமிடம் அவரையே பார்த்து விட்டு பின்…
“கண்டிப்பா… உங்க பேரனுக்கும் உங்களுக்கும் இடையில நான் வரலை… இங்க நான் விக்கியோட ஃப்ரெண்டா பேச வரலையே தாத்தா… அப்படி வந்திருந்தால் தாத்தா பேரனுக்கு இடையில நான் ஏன்னு கேட்கலாம்… அது நியாயம்… ஆனால். உங்க நான் உங்க பேரன் மேரேஜ் பண்ணிக்கப் போகிற பொண்ணோட அண்ணனா வந்திருக்கேன்…. அப்போ பேசித்தானே ஆகனும்… நீங்க கேட்டுத்தானே ஆகனும்” என்று விக்கியின் தாத்தாவைப் பார்க்க
நிமிர்ந்து அமர்ந்து ரிஷியைப் பார்த்தார் வேங்கட்ராகவன்… ரிஷியும் அவரை நேருக்கு நேராக நோக்கி அமர்ந்தவனாக
“இப்போ பேசலாமா நான்…” தோரணையாக ரிஷி கேட்டாலும்… அதில் பணிவையும் கொண்டு வந்து கேட்க… வேங்கடராகவனும் பார்வையாலே மேலே பேசும்படி சைகை செய்ய…. பேச ஆரம்பித்தான் ரிஷி
“உங்க பேரன் விக்கி மேல உங்களுக்கு கோபம் இருக்கலாம்.. ஆனால் என் தங்கை என்ன பண்ணினா… அவளுக்கு அவ வாழ வரப் போகிற இந்த வீட்ல இருக்கிற ஒவ்வொருத்தவங்க வாழ்த்தும் ஆசீர்வாதமும் முக்கியம்னு நினைக்கிறேன்… கிடைக்கனும்னு நினைக்கிறேன்… குறிப்பா இந்த வீட்டோட கடவுளா இருக்கிற உங்க ஆசிர்வாதம் வேணும்னு நினைக்கிறேன்… ஒரு அண்ணனா இது என்னோட ஆசை…. இது தவறா…”
”இந்த கோவில்… பூஜை அறை… அதுல இருக்கிற சிலை… அங்க இருக்கிற போட்டோஸ்… இது எல்லாம் எனக்கு எப்போதுமே பெரிய விசயமா தெரிந்ததே இல்லை… அதுல எனக்கு உடன்பாடும் இல்லை… அந்த ஆசிர்வாதமும் தேவையில்லை எனக்கு… ஆனால் நமக்கு உயிர் கொடுத்த… நம்ம மேல அக்கறை வச்சுருக்க நல்ல மனுசங்க ஆசிர்வாதம் வேணும்னு நினைக்கிறவன் தாத்தா…”
“ஒண்ணே ஒண்ணு சொல்லுங்க… விக்கி மேல உங்களுக்கு கோபம் இருக்கலாம்.. ஆனால் அவன் நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைப்பீங்களா தாத்தா… சொல்லுங்க.. அப்படி நீங்க நெனைக்கிறவர்னா… கண்டிப்பா நான் உங்க முன்னாடி வந்து பேசிட்டு இருக்க மாட்டேன்… இந்தக் குடும்பத்து மேல உங்களுக்கு இருக்காத அக்கறையா எனக்கு பெருசா வந்துறப் போகுது… எனக்கும் தெரியும்… விக்கி மேலயோ… அவன் காதல் மேலயோ உங்களுக்கு வருத்தம் இல்லை… “ என்று அவரைப் பார்த்தவன்…
“விக்கி சொன்னான் ஒரு பொண்ணு எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்க அத்தனை பேர் உயிரையும் காப்பாத்திருக்கான்னு… அவளைத் தெய்வத்துக்கு நிகரா வச்சு கொண்டாட்றீங்கனு… இதெல்லாம் விக்கி சொன்னபோது அந்தப் பொண்ணு மேல எனக்குமே மரியாதைதான் வந்துச்சு… சாமியே இல்லைனு சொல்ற எனக்குக் கூட அந்தப் பொண்ணை பார்த்தால்… கையெடுத்து கும்பிடனும் போலத்தான் தோணுச்சு…. எனக்கே அப்படினா…. உங்களுக்கு… அவளை… அவ பண்ணின உதவியை நேர்ல பார்த்த உங்களுக்கு… சொல்லவே தேவையில்ல…” என நிறுத்தியவன்
“ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தேகம்… அதை மட்டும் கேட்கலாமா தாத்தா… நன்றிக் கடன் செலுத்த சொந்தமாக்கித்தான்… அதாவது சொந்த பேரனுக்கு அந்தப் பொண்ணை மேரேஜ் பண்ணிக் கூட்டிட்டு வந்துதான்… நன்றிக் கடன் செலுத்தனுமா என்ன…. அங்கதான் உங்க குணம் இடிக்குது… யோசிச்சுப் பார்த்தா… அடேங்கப்பா…. இது எப்பேர்ப்பட்ட மிகப்பெரிய சுயநலம்,,,, ஏன் அந்தப் பொண்ணுக்கு நன்றிக்கடனை திருப்பிச் செலுத்த வேற வழியே இல்லையா என்ன… இதுக்குப் பேர் நன்றிக்கடன் இல்லை தாத்தா… போனா போகுதுனு அந்தப் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிற மாதிரிதான் தெரியுது… ”
கோபத்தில் வேங்கட ராகவனின் கண்கள் இடுங்கத் தொடங்க ஆரம்பித்திருக்க
“உண்மையிலேயே சொல்றேன்…. இப்படி ஒரு எண்ணத்தோட அந்தப் பொண்ணைத் தேடுனா… கண்டிப்பா இந்த ஜென்மத்தில இல்லை… ஏழேழு ஜென்மத்துக்கும் உங்க கண்ல பட மாட்டாள்… “ என்ற போதே
ஆக்ரோஷத்துடன் இறுகியது வேங்கட ராகவனின் முகம்… அதில் ஆவேசத்துடன் எழ…
விக்கி உட்பட அவனது குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் பதட்டமடைய… அதே பதட்டத்தோடு அத்தனை பேரும் ரிஷியை அமைதியாக இருக்கும் படி சொல்ல…. வேகமாக எழுந்த ரிஷி
“மன்னிச்சுக்கங்க தாத்தா… ப்ளீஸ் உட்காருங்க… நான் என் மனசுல பட்டதை சொன்னேன்… அவ்ளோதான்… மன்னிச்சுக்கங்க… நான் இங்க பேச வந்தது என் தங்கை அவ மேரேஜ் விசயமா…. அதைப்பற்றி மட்டும் பேசுறேன்..” எனும் போதே வேங்கட ராகவன் மீண்டும் அமைதியாகி அமர்ந்து அவனைப் பார்க்க ஆரம்பித்திருக்க
”அப்பா இல்லை எனக்கு… அவர் போன போதே எங்க குடும்பத்தில இருந்த சந்தோசத்தையும் அவரோடயே எடுத்துட்டு போயிட்டார்… என் அப்பா இருந்த இடத்தில இருந்து… அவர் அளவுக்கு இல்லைனாலும்… என்னால முடிந்த அளவுக்கு என் அம்மா… தங்கை இவங்களை வாழ வைக்கனும்னு நினைக்கிறேன் தாத்தா…. பெருசா யாருக்கும் பிடித்த மாதிரி எந்த ஒரு விசயமும் எங்க வீட்ல நடக்கலை… அப்பா இறந்ததுக்கு அப்புறம் என் வீட்ல நடக்கிற… அதிலும் எல்லோரும் சந்தோசப்பட்ற அளவுக்கு ஒரு விசயம்னா… அது இவங்க மேரேஜ் தான் தாத்தா…”
”என் பையன் சொல்லிருக்கான் உங்க வீட்டு நிலவரம் எல்லாம்…. உன்னைப் பற்றியும்… உனக்கும் மேரேஜ் ஆகிருச்சு தானே” என்றவர்… இப்போது ரிஷியை சாந்தமாகப் பார்க்க
”எனக்கும் மேரேஜ் ஆனதுதான்… ஆனால் எங்க வீட்ல யாருக்கும் பிடிச்சு பண்ணலை… என்னோட மேரேஜ் யாரோட இன்வால்வ்மெண்ட்டும் இல்லாமல் சந்தோஷமோ துக்கமோ இல்லாமல்… சில மணி நேரங்கள்ள முடிவெடுத்து நடந்த ஒரு நிகழ்ச்சி..… அதுக்கு கூட நான் யாரோட ஆசிர்வாதத்தையும் எதிர்பார்க்கலை…. ஆனால் என் தங்கைக்கு எல்லாம் கிடைக்கனும்னு நினைக்கிறேன்… இதுல ஏதாவது தப்பு இருக்கா…” விக்கியின் தாத்தாவைப் பார்க்க
”நான் உன் தங்கையை வேண்டாம்னு சொல்லலையே…” எனும்போதே
“ப்ளீஸ் தாத்தா… உங்க சம்மத்ததோட ஆசிர்வாதம் மட்டும் கொடுங்க…. என் அப்பா இல்லை…. அவரோட ஆசிர்வாதத்தையும் உங்க மூலமா என் தங்கைக்கு கொடுங்க… “ கெஞ்சுதலான பாவனையோடு அவர் முன் வந்து நின்றவன்… அடுத்தடுத்து ஒவ்வொன்றாகப் பேச ஆரம்பிக்க… எல்லாம் கேட்டவர்… ரிஷி முடித்த போது. ஒன்றும் சொல்லாமல் எழுந்து நடந்தவர்… சற்று தூரமாகச் செல்ல…. ஒட்டு மொத்தக் குடும்பமும் அவரையே கவலையோடு பார்த்துக் கொண்டிருக்க
வேங்கட ராகவன் தான் நின்ற இடத்திலேயே இருந்து… இப்போது தன் மகனை அழைத்தவராக
“சென்னைக்கு நாளைக்கு கிளம்புறோம்… ரிஷி தங்கையைப் பார்த்து பேசி நாள் குறிக்க நானும் வர்றேன்…” என்று சொன்னவர்… ரிஷியைப் பார்க்க…. மொத்த குடும்பமும் சந்தோசத்தின் உச்சத்திற்குச் செல்ல… ரிஷி அமைதியாக அவரைப் பார்த்து
“நன்றி தாத்தா…” எனக் கைகூப்ப
“உன் நண்பனுக்காகவோ… உன் தங்கைக்காகவோ இல்லை… உன்னோட பாசத்துக்காக… எனக்கு எதுவும் வேண்டாம்… ஆனால் என் தங்கைக்கு எல்லாம் வேணும்னு நினைக்கிற உன் மனசுக்கு… தகப்பன் ஸ்தானத்தில இருந்து தங்கைக்கு ஒரு குறையும் இல்லாமல் வாழ வைக்கனும்கிற இந்த மனசுக்கு… ஆனால் உன் ஃப்ரெண்ட் மேல எனக்கு இருக்கிற கோபம்… அது அப்டியேதான் இருக்கும்… ” என்றவர்….
“ஆனால் நீ சொன்னதிலயும் ஒரு உண்மை இருக்கு… என் தெய்வம்… குல சாமி… என் கண்ல படாம இருக்கிறதுக்கு… நீ ஒரு காரணம் சொன்னியே… ரொம்ப நன்றி… என் கண்ணத் திறந்து வச்சதுக்கு… இப்போ சம்மதம் சொல்லிட்டேன்ல… இனி கண்டிப்பா என் குலசாமி எனக்கு எனக்கு காட்சி தரும்னு நம்பிக்கை வந்திருக்கு… அதுனால கூட இந்த கல்யாணத்துக்கு மனப்பூர்வமா சம்மதம் சொல்றேன்… வந்து நிற்கிறேன்” என்றவர் விக்கியிடம் திரும்பி…
“நீ புண்ணியம் பண்ணியிருந்தால்… அவ தாலி எடுத்துக் கொடுக்கிற பாக்கியம்னாலும் உனக்கு கிடைக்கனும்னு நினைக்கிறேன்….” சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட
மொத்த குடும்பமும் ஆராவாரம் செய்ய… அங்கு மகிழ்ச்சிக்கும்… உற்சாகத்துக்கும் வரம்பே இல்லாமல் போயிருக்க… விக்கியின் அன்னைதான் மீண்டும் பேச ஆரம்பித்தார் இப்போது
“ரிஷி… விக்கி எல்லாமே சொல்லிருக்கான்…. இப்போ நீ இருக்கிற வீடு வரை… “ எனும் போதே மலர்ந்திருந்த ரிஷியின் முகம் மாற ஆரம்பித்திருக்க
“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி… மாமா இப்போதான் சம்மதம் சொல்லிருக்கார்… அதை மறுபடியும் கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கிறேன்… நீங்க இருக்கிற இடத்தைப் பார்த்து மறுபடியும் பிரச்சனை வேண்டாம்னு நினைக்கிறேன்”
“எங்களுக்கு ரிதன்யா மருமகளா வரணும்… அதுதான் முக்கியம்… முதன் முதலா பார்க்க வரும்போது அந்த மாதிரி ஒரு இடம்னா… அதுதான் யோசிக்கிறேன்… தேவையில்லாத பிரச்சனைகளை எல்லாம் கொண்டு வர வேண்டாம்… ஒரு கோவில்ல…. உங்க ஏரியால இருக்கிற கோவில்னா கூடப் பராவாயி்ல்லை…. அங்க வைத்தே ரிதன்யாவை பேசி முடிச்சிறலாம்… அப்புறம் கூட உங்க வீட்டுக்கு” எனும் போதே விக்கி தன் அன்னையை முறைக்க
“டேய் … முறைக்காதடா… ரிஷி அந்த வீட்ல நிரந்தரமா இருக்கப் போறதில்ல… சீக்கிரமா மாறிருவான்னு சொன்னதான்… இருந்தாலும்… முதன் முதலா ரிதன்யாவைப் பார்க்கப் போகும் போது அந்த மாதிரி ஒரு இடம் நம்ம அந்தஸ்துக்கு நல்லா இருக்குமா… நாம மட்டும் போகல… நம்ம சொந்தக்காரங்களும் வருவாங்க…” எனும் போதே விக்கி ஏதோ பேசப் போக…
ரிஷி… அவனை தடுத்து நிறுத்தியவனாக
“பரவாயில்லம்மா… நீங்க சொல்ல வர்றது புரியுது…. உங்க இடத்தில இருந்து யோசிக்கும் போது…. நீங்க பேசுறதும் சரிதான்… நாம கோவில்லயே பார்க்கலாம்… எங்க ஏரியால ஒரு அம்மன் கோவில் இருக்கு… அங்கே ஓகேயா உங்களுக்கு” என விக்கியின் தாய் ஆரம்பித்த பிரச்சனையை முடித்து வைக்க.. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில்… விக்கியின் குடும்பம் சென்னை வர முடிவு செய்யப்பட்டது…
----
”சாரிடா மச்சான்…. உனக்கு ஹர்ட் ஆகி இருக்கும்னு எனக்குத் தெரியும்டா” விக்கி தன் நண்பனிடம் தனிமையில் பேச ஆரம்பிக்க
‘ப்ச்ச்… இதெல்லாம் எதிர்பார்த்ததுதாண்டா… அதை விடு…. இப்போ ஹேப்பியா… ரிதுவுக்கு ஒரே சந்தோசம்டா… அவ இவ்ளோ சந்தோசமா இருந்து பார்த்து எத்தனையோ நாள் ஆகிருச்சுடா… அவளை இதே சந்தோசத்தோட வாழ்நாள் பூரா வச்சுக்கோடா” ரிஷி சொன்ன போதே
சந்தோசமாக தலை அசைத்த விக்கியிடம்
“என் அப்பாக்கு அப்புறம் அவளுக்கு உன்கிட்டதான் சந்தோசம் கிடச்சிருக்கு… என் மேரேஜ் விசயத்துல … அவளுக்கு என் மேல ரொம்பக் கோபம்டா… என்னை விட்டு விலகிட்டா…. அந்தக் கோபம் கூட என் மேல இருந்த பாசம் தான் காரணம்… ஆனால் பாசம் ஒருபக்கம் இருந்தாலும்…. கிட்டத்தட்ட எதிரி மாதிரிதான் பிகேவ் பண்ணிட்டு இருந்தா“ சொன்னவன்… விக்கியின் முகம் மாறுவதை உணர்ந்தபடி
“இனிமேலாவது மாறுவாளான்னு பார்ப்போம்… அப்போ நான் கிளம்புறேன்… என்னை பஸ் ஸ்டாண்ட்ல மட்டும் இறக்கி விடு” என ரிஷி விக்கியிடம் கேட்க…
“டேய்… இப்போ என்னடா அவசரம்… மிட் நைட்ல தான் வீட்டுக்கு போகனும்…”
“பரவாயில்லடா… நான் பார்த்துக்கிறேன்… என்னை பஸ் ஸ்டாப்பிங்ல மட்டும் ட்ராப் பண்ணு….” ரிஷி தன் பிடிவாதத்திலேயே இருக்க
”ஏண்டா…. நைட் அங்க போய் தூங்கப் போற…. அதை இங்க பண்ணினா என்ன… இன்னைக்கு வந்த மாதிரியே நாளைக்கும் சீக்கிரமா கிளம்பிடலாம்” என விக்கி அலுக்க
ரிஷி முறைத்தான் விக்கியை…
“சீக்கிரம் மேரேஜ் பண்ணி சம்சாரி ஆகிற வழியப் பாரு . அப்போ தெரியும்.. போகனும்டா நான்... புரிஞ்சுக்கோடா... ” என்றவனிடம்
”புரியுது… புரியுது… அவ்ளோ மடச்சாமியார்லாம் இல்லை நான் … தெரியாமல் கேட்டுத் தொலஞ்சுட்டேன்… “ என விக்கியும் ரிஷியைப் புரிந்து பேசியவனாக
“நானும் உன் கூடவே வர்றேன்… ஆனால் நைட் டின்னர் முடிச்சுட்டுத்தான் கிளம்புறோம்… ஓகேவா “ எனச் சொல்லி முடிக்க… அதற்கு மேல் ரிஷியும் மறுக்கவில்லை
---
”எப்டி சத்யா… அவனுக்கு பெயில் கிடைக்கல… ஆச்சரியமா இருக்கு… சரி விடு… எப்டியோ… அவன் உள்ளதான் இப்போதைக்கு…. கொஞ்சம் ரிலாக்சா இருக்கலாம்” தன்னை மீண்டும் அலைபேசியில் அழைத்த சத்யாவிடம் ரிஷி சந்தோஷமாகச் சொல்ல
“ஆர் கே… இன்னொரு சந்தோஷமான விசயம்… இதுக்கு கண்டிப்பா நீங்க வானத்துல பறப்பீங்க…”
ரிஷி சிரித்தபடியே கேட்டான்
“நம்ம கம்பெனியோட கேஸ் ஃபைனல் ஜட்ஜ்மெண்ட் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களா”
“எப்படி ஆர்கே… ஆமாம் நெக்ஸ்ட் வீக்… கிட்டத்தட்ட நம்ம பக்கம் தான் சாதகமா முடியும்… எனக்கே ஒரு மாதிரி பறக்கனும் போல இருக்கு… பழைய மாதிரி அங்க மெஷின் சத்தம் லாம் கேட்கப் போகுது ரிஷி” சத்யா சந்தோசமாகப் பேச ஆரம்பிக்க
ரிஷியும் அவனிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு… சென்னைக்கு அன்றே கிளம்புவதாகத் தகவலைச் சொல்லி விட்டு… போனை வைத்தவன்… அடுத்து தன் மனைவிக்கு அழைத்தான்… கண்மணியும் உடனே எடுத்தாள்
“ஹேய் ரௌடி” என ரிஷி உற்சாகமாக எடுத்த எடுப்பிலேயே பேச
“என்ன பாஸ்க்கு… குரலெல்லாம் வீணை மீட்டுது… தங்கைக்கு மேரேஜ்னு சொன்ன உடனேயே ஆளைக் கையில பிடிக்க முடியலயே… நீங்க மட்டும் இல்லை… அத்தை… ரித்விகா கூட செம ஹேப்பியா இருக்காங்க…. சீக்கிரம் வாங்க அவங்க ஃபேஸ்ல அவ்ளோ ஒரு சந்தோசம் தெரியுமா… எனக்கே அதைப் பார்க்கும் போது அப்படி ஒரு ஃபீல் ஆகுது… நீங்க வந்தீங்கன்னா அவ்ளோ சந்தோசப் படுவீங்க ரிஷி… அப்போ நான் உங்களைப் பார்க்கனும்… அந்த திருப்தியான சந்தோசத்தை என் ரிஷிக்கண்ணா கிட்ட பார்க்கனும் நான்” கண்மணி சொல்ல
“ஏண்டி… எப்போ பாரு… சிரி சிரின்னா… முதல்ல என்னைப் பேச விடு…”
“எனக்கு என் புருசனோட சந்தோசமான முகத்தைப் பார்க்கனும்… அவ்ளோதான்… பார்க்க முடியுமா… முடியாதா… இப்போ என்ன கேட்டேன்னு இவ்ளோ கோபப்பட்றீங்க… சலிச்சுக்கறீங்க… ” கண்மணி படபடவென்று ஆரம்பிக்க…
”சரிடி… ஹப்பா… படபட பட்டாசு மாதிரி கொட்டித் தீர்த்துருவியே….” எனச் சிரித்தவன்… எதிர் முனையில் மனைவியின் மௌனத்தில்
“என் பொண்டாட்டி கேட்டு மாட்டேன்னு சொல்வேனா… என்னைத்தானே… என் முகத்தைத் தானே பார்க்கனும்… நானும் கிளம்பிட்டேன்” என ரிஷி குறும்போடு சொல்ல
வேகமாக மணியைப் பார்த்தவள்
“மணி என்னாச்சு… இதுக்கும் மேல கிளம்பி வந்தால் மிட்நைட் ஆகிருமே…” கண்மணி வேகமாகச் சொல்ல
“அதெல்லாம் ஒரு பிரச்சனையா…. எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணு… அது போதும்... ”
“என்ன”
“நான் நம்ம ஏரியா மெயின் ரோட்டுக்கு வந்த பின்னால…. உனக்கு கால் பண்றேன்…. என்னை பிக் அப் பண்ணிட்டு போ…. விக்கி காரை நம்ம ஏரியாக்குள்ள கொண்டு வந்து திரும்ப போறதுக்குள்ள… அவனுக்கு இன்னும் லேட் ஆகிரும்…. வர்றியா”
“மணி 1 மணிகிட்ட ஆகிருமே ரிஷி” கண்மணி இழுக்க
“ஏண்டி…. நீ ஒரு மணிக்கெல்லாம் வெளிய வந்ததே இல்லை… என்னமோ புதுசா வர்றவ மாதிரி அலுத்துகிற” ரிஷி கடுப்பாகக் கேட்க
“ப்ச்ச்… சரி வர்றேன்… நம்ம ஏரியா வர்றதுக்கு பத்து நிமிசம் முன்னால கால் பண்ணுங்க.. நான் வந்து வெயிட் பண்றேன்… சரியா “ எனும்போதே
“வெயிட்லாம் பண்ண வேண்டாம்… நான் வந்து இறங்கிட்டு கால் பண்றேன்… அதுக்கு முன்னால வரவேண்டாம் ஓகே வா… ” என்றவனிடம்
“மிட்நைட்ல வரச் சொல்லிட்டு… முன்ன வந்தா என்ன… பின்னால வந்தா என்ன… பெரிய அக்கறைதான்” எனத் தனக்குள் முணங்கியவள்… அடுத்த நொடியே
“ஹலோ ரிஷிக்கண்ணா…” எனக் கண்மணி குறும்பாக இழுக்க
“என்னடி…. நீ ராகம் பாடினாலே… பயமா இருக்கே… “ ரிஷி பயந்தவனாகக் கேட்க
“இல்லை… அர்த்த இராத்திரில… ட்ரைவர் வேலை எல்லாம் பார்க்கிறேன்… சும்மாலாம் பார்க்க மாட்டேன்பா…. எனக்கு என்ன தருவீங்க” என கறாராகக் கேட்க
“கதை எழுதிட்டு இருக்கியாடி….” ரிஷி நக்கலாகக் கேட்க
“ஆமாம்... ஏன்… எப்படி கரெக்டா கேட்கறீங்க”
“இல்லை அந்த மோட்லயே இருக்கியே… உன் ஹீரோயினுக்கு வசனம் எழுதுறேன்னு மறந்து போய் என்கிட்ட பேசிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்..”
“ஹலோ… பேச்சை மாத்தாதீங்க… என்ன தருவீங்க”
“ஹ்ம்ம்ம்… தந்துறலாம்தான்…. கொடுக்கிற வள்ளல்தான் நான்… வாங்குற நீதான் கொஞ்சம் தடுமாறுவ… பராவாயில்லையா” ரிஷி சல்லாபக் குரலோடு பேச ஆரம்பிக்க
“பை ரிஷிக்கண்ணா… வந்ததும் போன் பண்ணுங்க…” எனக் கண்மணி அடுத்த நொடி வைத்தும் விட…. அதை உணராத ரிஷி…
“ஏய்… ஏய்… ஏய் ரௌடி… வச்சுறாதடி…” என்ற இவனது குரலுக்கு நிசப்தமே… பதிலாகக் கிடைக்க
“வச்சுட்டா… அப்டியே பயந்தவ மாதிரி… என்னமா ஆக்ட் விட்றா” ரிஷியும் சிரித்தபடியே அலைபேசியில் இருந்த… தன்னவளின் முகம் பார்த்து சொன்னவன்… அதில் தன் முத்திரையை வைக்கப் போக… மீண்டும் கண்மணியிடமிருந்து அழைப்பு…
“விட மாட்டாளே” என்று சலித்தபடியே அவளது அழைப்பை எடுக்க
“அரசரே… எனக்கு ஒரு சந்தேகம்… தங்கள் ரதத்தில் வர வேண்டுமா… இல்லை என் ரதத்தை எடுத்து வர வேண்டுமா” கண்மணி குறும்போடு கேட்க
“அடிங்… நக்கல் தாண்டி உனக்கு… இதுல தூய தமிழ் வேற… ”
“உத்தரவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றேன்… மகாராஜா…” கண்மணி அடக்கத்தின் மொத்த உருவமாக… பவ்யமாகக் கேட்க…. ரிஷி பல்லைக் கடித்தபடியே
”மகாராணி… அவங்க ஸ்கூட்டியவே எடுத்துட்டு வாங்க… அதிகப்பிரசிங்கித்தனம் பண்ண வேண்டாம்…”
“மன்னா…” எனக் கண்மணி... ஆரம்பித்த போதே
“வைடி போனை…. உனக்கு விளையாடுற நேரமாடி இது…” என்று பொய்க் கோபத்தோடு வைத்தாலும்… அவளை வைக்கச் சொன்னாலும். ரிஷியின் முகத்தில் உண்மையான சந்தோசம் பெருமிதத்தோடு நிறைந்து வழியத்தான் செய்தது
---------
Super
Semaaaaa episode.
waiting for next epi
அதெப்படி! குலங்காத்த தெய்வத்தை அந்தக் கோவிலில் தானே பார்க்க வேண்டும்…வேறு கோவிலுக்கு வரவைத்துப் பார்ப்பது என்ன முறை🤫
Arumai👏👏👏 eagerly waiting for next mam
Nice update
Semmmaaaaa superrrrrrrrr
Semma super.
Supero super
Rishi Viki conversation 👌👌👌👌
Sirichikitte padichen Nice
Kanmani Rishi conversation epayum alagu 😍.. nice writing sis.... Kanmani Rishi piriva ipa vaikathenga atha payama iruku
Wonderful episode. After a long 6 years of struggling Rishi is trying for a smooth sailing.But how far it will work ? as they are going to get separated.Too much tension at the same time you are a marvelous writer woven a beautiful story.
அருமை
Smooth ud jii.. Rk's care for Rithanya as a brother quite interesting.. He did his brother role perfectly there..
"எனக்கு எதுவும் வேண்டாம்… ஆனால் என் தங்கைக்கு எல்லாம் வேணும்னு நினைக்கிற உன் மனசுக்கு…" Great feel jii.. Waiting for Vicky's Grandpa meet with RK.. Such a moment.. Wanna see Rithanya's expression n others too.. Is the problem arise there btwn R💞K..? Eagerly waiting jii..
Superrrr