அத்தியாயம் 82-1
ரிஷியும் விக்கியும் கிளம்பி சென்ற சில மணி நேரங்களில்… ரித்விகாவும்… இலட்சுமியும் ரித்விகாவின் பள்ளித்தோழியின் வீட்டு விசேஷத்துக்குக் கிளம்பியிருக்க… ரிதன்யாவும் கண்மணியும் மட்டுமே ’கண்மணி’ இல்லத்தில்…
கண்மணி மற்றும் ரிதன்யா இவர்கள் இருவர் மட்டும் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்… வீடே நிசப்தமாக இருக்க… ரிதன்யா வீட்டினுள் இருக்க… கண்மணியோ வெளியில்…
துவைத்த துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தாள் கண்மணி… அப்போது… ரிதன்யா வெளியே வர…. கண்மணி அவளையேப் பார்த்தபடி துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தவள்… ரிதன்யாவின் கையில் இருந்த கைப்பையை பார்த்த கண்மணி் ரிதன்யாவும் வெளியே போகிறாள் என்பதை உணர்ந்தவளாக வேகமாக அவளை நோக்கி வர… ரிதன்யாவோ அவளைக் கண்டு கொள்ளாமல் வெளிக்கதவை நோக்கிப் போக…
“ரிது” என இப்போது கண்மணி சத்தம் போட்டு அழைக்க… நின்ற ரிதன்யா… பல்லைக் கடித்துக் கொண்டு கடுப்பாக கண்மணியைத் திரும்பிப் பார்க்க
“நானும் பாட்டி வீட்டுக்குப் போறேன்…. இப்போ கிளம்பிருவேன்… நீங்க இருப்பீங்கன்னு அத்தையும் சாவி எடுத்துட்டுப் போகலை… “ என கண்மணி பேச ஆரம்பிக்க…
“நான் பக்கத்தில தான் போறேன்…. சீக்கிரம் வந்துருவேன்… “
“அது தெரியும்… கீ எடுத்துக்கிட்டீங்களா…. என்கிட்ட எப்போதுமே ஒரு கீ இருக்கும்.. பக்கத்து வீட்டு அக்காவும் இல்லை… “
”ப்ச்ச்… இப்போ என்ன நான் ஒரு கீயை எடுத்துட்டுப் போகனும் அவ்ளோதானே… ” எரிச்சலுடன் சொன்னபடி ரிதன்யா வீட்டை நோக்கிப் போக எத்தனிக்க
அவளைத் தடுத்து நிறுத்திய கண்மணி
“நானே எடுத்துட்டு வர்றேன்” என்றபடி… வீட்டுக்குள் போய் அந்த வீட்டின் இன்னொரு சாவியை எடுத்து வந்து கொடுக்க..
அலட்சியமாக அதை வாங்கிக் கொண்டே ரிதன்யா திரும்பப் போக… அதே நேரம் கண்மணி… அவள் கரத்தைப் அழுத்திப் பிடிக்க…
“ஏய்,…” என தன் கையைப் பிடித்த கண்மணியின் கைகயை உதறியபடி… ரிதன்யா கோபத்துடன் திரும்ப… அங்கு கண்மணியோ நிற்க முடியாமல் தள்ளாடிய தன் நிலையைச் சரிப்படுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்க
‘ஏய் என்னாச்சு…” இப்போது ரிதன்யா பதறியவளாக… கண்மணியை விடாமல் மீண்டும் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டவளாக…
“இரு இரு… வா… இங்க வந்து உட்காரு” என கண்மணியைப் பிடித்துக் கொண்டு…. அருகில் இருந்த துவைக்கும் கல்லில் அமர வைக்க… கண்மணியும் இப்போது ஓரளவு இயல்புக்கு வந்தவள்…
“தண்ணி கூட இல்லை… வழுக்கவெல்லாம் இல்லை… தீடிர்னு… தலை சுத்துற மாதிரி ஃபீல்… இப்போ ஓகே” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாந்தி வருவது போல கண்மணிக்குத் தோன்ற… வேகமாக எழுந்தவள்… சற்றுத் தள்ளிச் சென்று எடுக்க ஆரம்பிக்க… அருகில் பிடிமானம் வேறு இல்லாமல் இருந்தது…
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரிதன்யா வேகமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கண்மணிக்குக் கொடுக்க… கண்மணியும் அசதியோடே வாங்கிக் கொண்டு முகத்தை அலம்பிக் கொள்ள…
‘இப்போ ஓகேவா… பெட்டரா இருக்கா” இயல்பான வார்த்தைகள் தான் ஆனாலும்… இயல்பாக ரிதன்யாவால் கேட்க முடியவில்லை… முகத்தை உம்மென்று வைத்தபடியேதான் கேட்டாள்…
“இல்லை.. இன்னும் ஒரு மாதிரிதான் இருக்கு” கண்மணி் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல…
கண்மணியின் அந்த பாவனையில்… ரிதன்யாவின் முகம் இப்போது கடுமையை விட்டிருக்க
“இங்க உட்காரு… நான் போய் லெமன் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வர்றேன்… எனக்குத் தெரிஞ்சது அதுதான்… “ என்றபடியே உள்ளே போக…
கண்மணிக்கு இப்போது அவளின் களைப்பையும் மீறி முகம் பிரகாசமாகியது
”ஹ்ம்ம்… என்ன ஆங்க்ரி பேர்ட் லவ் பேர்டா மாறுது… நம்ம இந்த ஆக்ட்ட முதல்லயே போட்ருக்கலாமோ… இவ்ளோ இலகிய மனசா நம்மாளுக்கு” என்று நினைத்துக் கொண்ட போதே
“என்ன சாப்பிட்டேன்… ஒரு வேளை இன்னைக்கு சீக்கிரமா… நாலு மணிக்கு எழுந்ததா… இல்லையே நாலு மணிக்கு நாம எழறதெல்லாம் புதுசு இல்லையே… ஏன் இப்படி” என தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த போதே ரிதன்யா வந்திருக்க… உண்மையிலேயே கண்மணி இயல்புக்கு வந்திருந்தாலும்… அயர்வாக இருப்பது போல் வேண்டுமென்றே முகத்தை மாற்றியபடி ரிதன்யாவைப் பார்க்க… அவளோ கொண்டு வந்த பழச்சாறை நீட்ட… அதை வாங்கிக் கொண்ட கண்மணியோ
“தேங்க்ஸ்… சால்ட் போட்ருக்கீங்களா… “
”ஹ்ம்ம்” ரிதன்யா சொல்ல…
“அப்புறம் இந்த சுகர்…” எனக் கண்மணி வேண்டுமென்றே ரிதன்யாவிடம் வம்பிழுக்க… ரிதன்யா மீண்டும் முருங்கை மரம் ஏறும் நிலைக்கு மாறி இருந்தாள்….
“ஏய்… இங்க பாரு… எனக்குத் தெரிஞ்சத போட்டு எடுத்துட்டு வந்துருக்கேன்… இப்டியே… கேள்வி கேட்டுட்டே இருந்த அப்டியே வாங்கிட்டு போய்ருவேன்… பாவமாச்சேன்னு எடுத்துட்டு வந்தா ...” என ரிதன்யா கடு கடு பூனையாக மாறி இருக்க
வந்த புன்னகையை உள்ளுக்குள் மறைத்தபடி…
”சரி சரி… குடிக்கிறேன்” என வேகமாக ஒரே மடக்கில் குடித்தவள்… டம்ளரை ரிதன்யா கையில் கொடுத்தபடியே
“பரவாயில்ல… வாமிட் பண்றதைப் பார்த்துட்டு எக்கேடோ கெட்டு போன்னு விட்டுட்டு போகாமல் ஹெல்ப் பண்றீங்க… லைட்டா என் மேல உங்களுக்கு பாசம் இருக்கும் போல…” எனக் கண்மணி ரிதன்யாவிடம் வம்பிழுக்க…
“பாசமா… உன் மேலயா.. மனிதாபிமானம்… பிடிச்சவங்க…பிடிக்காதவங்களாம் பார்க்காது… போதுமா… இப்போ நல்லா இருக்கா…” என்றபடியே
”நல்லா ஆனதானலதாவே வாய் பேசுற…. “ என எரிச்சலுடன் ரிதன்யா அங்கிருந்து கிளம்ப ஆரம்பிக்க
“ரிது..” கண்மணி வேகமாக அழைக்க…
“ரிதன்யா… ரிதன்யான்னு சொல்லு… ’ ரிதன்யா பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல
”சரி நான் நீங்க சொல்லச் சொல்ற மாதிரி ’ரிதன்யா’னே சொல்றேன்… அப்போ நான் சொல்ற மாதிரிதான் நீங்க என்னைக் கூப்பிடனும்… கூப்பிடறீங்களா… டீல் ஓகேவா… இல்லைனா… நான் ரிதுன்னுதான் கூப்பிடுவேன்”
“என்ன… மிரட்டுற… ” ரிதன்யா கடுப்பாகக் கேட்டபடியே… மீண்டும் அவளருகே வர…
“அப்படீங்களா… மேடமை எப்படி கூப்பிடனும் சொல்லுங்க… கூப்ட்றலாம்” ரிதன்யாவும் அவளுடன் வாதாட ஆரம்பித்திருந்தாள்
“ரொம்ப சிம்பிள்… அண்ணி… அவ்ளோதான்… எங்க கூப்பிடுங்க பார்க்கலாம்”
கண்மணி தெனாவெட்டாக சொல்லி.. ரிதன்யாவைப் பார்க்க… ரிதன்யா முறைக்க ஆரம்பித்த பொதே
“முறைக்காதீங்க… அண்ணினு நீங்க என்னைக் கூப்பிடுங்க… நானும் உங்களை ரிதன்யான்னு கூப்பிடறேன்… எனக்கு பிடித்த மாதிரி நீங்க என்னைக் கூப்பிடுங்க…. உங்களுக்கு பிடித்த மாதிரி ரிதன்யான்னு கூப்பிடறேன்… இல்லைனா… நான் ரிது… இல்லை ரிதும்மானு என் இஷ்டத்துக்குத்தான் கூப்பிடுவேன்… எப்படி வசதி…” கண்மணி சுவாரசியமாக ரிதன்யாவிடம் வம்பிழுக்க……
கண்மணியைப் பார்த்து இகழ்ச்சியாகச் சிரித்த ரிதன்யா….
“உன்னை நான்… அண்ணினு… சான்சே இல்லை… “ என திரும்பி நடக்க ஆரம்பித்தவளிடம்
“ரிதும்மா… ரிதுக்குட்டி… ரிது செல்லம்.. ரிதுப் பட்டு…” எனக் கண்மணி வேண்டுமென்றே ராகம் போட்டு அழைத்தபடியே அவளை வம்பிழுக்க…
“ஹான்… மாமா உங்களை ரிதுக் கண்ணானு தானே கூப்பிடுவாங்க… நானும்… அப்டியே கூப்பிடவா… ரிதுக் கண்ணா…” என கண்மணி சத்தமாக அழைக்க…
“உன்னை அப்படியே விட்டுட்டு போயிருக்கனும்… உனக்குப் போய்ப் பாவம் பார்த்தேனே…” ரிதன்யா கோபத்துடன் மீண்டும் கண்மணியின் அருகில் வர…
சிரித்தபடியே… வேகமாக அவளிடமிருந்து தள்ளி நின்ற கண்மணி…
“ரிதுக் கண்ணாக்கு அப்படி என்ன கோபம்… “ எனும் போதே
“கண்மணி… கடுப்பாக்காதா…. இந்த செல்லம் பட்டு கண்ணா லாம் மாடில இருக்கார்ல அவர் கூட நிறுத்திக்கோ… இதுக்கெல்லாம் மயங்குற ஆள் நான் இல்லை…”
”ப்ச்ச்… எனக்கு எப்போதுமே உங்களப் பிடிக்கும்… உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்காதுன்னு நெனச்சேன்…. ஆனால் உங்களுக்கும் என்னைப் பிடிக்கும்னு சின்னதா டெமோ காட்டிடீங்களே… இனி பாருங்க…” எனக் கண்மணி உற்சாகத்துடன் சொல்ல…
”மனிதாபிமானம்னு சொன்னது காதுல விழலையா கண்மணி மேடத்துக்கு… இவளைப் பிடிச்சிருக்காம்… ஒழுங்கா ரெஸ்ட் எடு… ” சொல்லிக் கொண்டே…. ரிதன்யா அங்கிருந்து கிளம்பிச் செல்ல…
“ரிது… உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்… என்னை நீங்க அடிக்கடி ஹர்ட் பண்ணியிருந்தால் கூட… என்னமோ தெரியலை… பிடிச்சுருக்கு… உங்களோட கேரிங்.. அதுதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது… ரித்வியா இருக்கட்டும்… அத்தையா இருக்கட்டும்… உங்க அண்ணனா இருக்கட்டும்… உரிமையா நீங்க காட்டுகிற அந்தக் கோபம் கலந்த அக்கறை… அது அவ்ளோ பிடிக்கும் எனக்கு…. அது எனக்கு இன்னைக்கு கெடச்சுருக்கு… ஹேப்பி நான்…” தன் மனதோடு பேசிக் கொண்ட போதே அவளின் அலை பேசி அடிக்க… எண்ணிலிருந்து வர யொசனையுடன் எடுத்தாள் கண்மணி…
”மேடம்… ****** லேப்ல இருந்து கால் பண்றோம்… ரிஷிகேஷோட ரிப்போர்ட்ஸ் ” என வேலை செய்யும் பெண் பேச ஆரம்பித்திருக்க…
கண்மணியின் புருவம் இன்னும் சுருங்கியது இப்போது பதற்றத்தில்… நெற்றியில் வியர்வை பூத்திருக்க…. தடுமாற்றத்தோடு
“இல்லை… ஒண்ணும் இல்லைதான் சொன்னாங்க… எல்லாமே நார்மல்னு தானே சொன்னாங்க… ”
சற்று முன் மயக்கத்தால் வந்த படபடப்பு… இப்போது சாதாரணமாக அவளுக்குள் வந்திருக்க…. கண்மணியின் குரலில் இருந்த படபடப்பை உணர்ந்த எதிர்முனைப் பெண்மணி…
”மேடம்… மேடம்… ஜஸ்ட் ரிமைண்டர் கால் தான் இது… ரிஷிகேஷோட ரிப்போர்ட்ஸ்லாம் இன்னும் கலெக்ட் பண்ணாமல் இருக்கு… வந்து வாங்கிக்கோன்னு… ஒரு கால்… மெயில் ஐடியும் கொடுக்கல… அதுனாலதான்… இது எங்க ப்ரொசீஜர்… மற்றபடி அவரோட ரிப்போர்ட் ரிசல்ட் நார்மல் தான்… ” எதிர்முனைப் பெண்ணின் குரலில் கண்மணியின் மூச்சு இப்போது சீராகி இருக்க… நிம்மதியில் பெருமூச்சு விட்டபடியே
“தேங்கஸ் மேடம்… நார்மல்னு சொன்னதுனால நானும் விட்டுட்டேன்… வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்… ”
“இல்லை மேடம்… அது கூடத் தேவையில்லை…. மெயில் ஐடி கொடுங்க… அனுப்பி வைக்கிறேன்… “ என்று கேட்ட அந்தப் பெண்ணிடம் தன் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தவள்…
“ரிஷியோட ரிசல்ட்டை… நம்ம ஹாஸ்பிட்டல்ல ஒரு தடவை பார்க்கச் சொல்லனும்” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்…
---
’பவித்ரவிகாஸ் ’
”போதும் பாட்டி…போதும்… இதுக்கும் மேல சாப்பிட்டா என் வயிறு வெடிச்சுறப் போகுது… காலையில வேற வாமிட் பண்ணிட்டேன்…” என்ற கண்மணி சொன்ன போதே
“என்ன இது… இப்படி பேசிக்கிட்டு… நல்ல வார்த்தையா பேசு… வாயும் வயி…” எனும் போதே அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ஜூன் பார்வையாலே அவனது பாட்டி வைதேகியை முறைக்க… சட்டென்று பேச்சை நிறுத்தினார் அவரும்
கண்மணியிடம் பேசவே இல்லை அர்ஜூன்…. ஏன் ஒரு பார்வை கூட அவள் புறம் வைக்கவில்லை… மௌனமாகவே சாப்பிட்டவன்… மௌனமாகவே அங்கிருந்து எழுந்தும் செல்ல… கண்மணியும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை தான்…. ஆனாலும்… தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எழுந்து சென்ற அர்ஜூனை முறைத்துப் பார்த்தபடி இருந்தவளிடம்… வைதேகி பேச ஆரம்பித்தார்
“ஏண்டா… தலைக்கெல்லாம் சரியா குளிக்கிறியா… “ கண்மணியிடம் வைதேகி மெல்ல விசாரிக்க…
“அய்யோ பாட்டி… இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கறீங்களா என்ன… ஏதாவது குட் நியூஸ்னா நான் சொல்லாம இருப்பேனா” என்றவள் எழுந்தபடியே…. தன் பாட்டியின் யோசனையான முகத்தைப் பார்த்துவிட்டு
“இதுவரைக்கும் இல்லை… போதுமா… இருந்தால் உங்க கிட்ட சொல்லாமல் இருப்பேனா பாட்டி… உங்ககிட்ட தான் முதல்ல சொல்வேன்” எனச் சொல்லி விட்டு கை கழுவி விட்டு வந்தவள்…. தனது தாத்தாவிடம் வந்து நின்றாள்…
“நான் உங்க எல்லார் கிட்டயும் பேசனும்… முக்கியமா அர்ஜூன் கிட்ட…” என்றபடியே தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்த காகிதங்களை எல்லாம் வெளியே எடுத்தாள் கண்மணி…
---
நாராயண குருக்களின் அலுவலக அறையில் கண்மணியைச் சுற்றி.. மற்ற மூவரும் இருந்தனர்
“இது என்ன அர்ஜூன்…” தன்னிடமிருந்த காகிதங்களை எல்லாம் அவன் முன் நீட்ட
“தெரியலையா என்ன…. இதுல எல்லாம் நீ சைன் போடனும்… கூடவே அந்த ரிஷியும்… பார்த்திபன் கிட்ட சொல்லி இருந்தேனே… சொல்லலையா அவன்” அர்ஜூன் சாவகாசமாகச் சொல்ல….
“அது தெரியுது… இதுல ஏன் ரிஷி பேர் வந்ததுன்னு கேட்டேன்…” கண்மணி அழுத்தமான குரலில் கேட்க
“அவன் உன் புருசன் தானே… அப்போ உனக்கு உன்னோட சொத்துக்கு… அடுத்த வாரிசுன்னா அது அவன் தானே” அர்ஜூன் நக்கலாகக் கேட்க
“ப்ச்ச்… ரிஷி பேர் இதுல வரக்கூடாது… ப்ளீஸ் மாத்திருங்க…அவ்ளோதான்…” என்று அந்த பத்திரங்களை எல்லாம் மீண்டும் மேஜையில் வைக்க…
“என்னடா…. உனக்கு அடுத்த வாரிசா அவரைப் போட்டதுனால உனக்கு என்னடா பிரச்சனை…” நாராயண குருக்கள் கேட்க
”வேண்டாம் தாத்தா… இப்டிலாம் பண்ணுனீங்க அப்புறம் நான் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டியதா இருக்கும்… எனக்கு ஏதுமே வேண்டாம்னு சொல்ல வைக்கிற அளவுக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிறாதீங்க…” எனும் போதே
அர்ஜூன் எள்ளலான ஒரு சிரிப்போடு…
“அய்யோ கண்மணி…. அப்டிலாம் பண்ணிறாத… பாவம் அப்புறம்…. அந்த ரிஷி… ஏமாந்துறப் போறான் கண்மணி… ” வேகமாகச் சொல்லி முடிக்க
கண்மணி அவன் புறம் திரும்பியவளாக
“புரியல… கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க” என கூர்ப்பார்வை பார்த்தாள் அர்ஜுனை நோக்கி
“நீ என்னதான் நெற்றிக் கண் காட்டினாலும்… அவன் ஒரு ஃப்ராட் தான்… இதெல்லாம் கால்குலேட் பண்ணாமல் தான் உங்கூட வாழ்றானா…. அவனுக்குத் தெரியும்டி… இன்னைக்கு நீ அந்த குப்பத்து வீட்ல வாழ்ந்தாலும்… நீ இந்த அரண்மணைக்குச் சொந்தக்காரின்னு… அதுதான் எல்லா விதத்திலயும் நீ அவனை விட்டு விலகாமல் இருக்க என்ன பண்ணனுமோ அத்தனையும் பண்ணி வச்சுருக்கான்… பொறுக்கி “ அர்ஜூன் ஆத்திரத்துடன் சொல்ல
“அர்ஜூன்… வார்த்தையைப் பார்த்துப் பேசுங்க… இல்லை” என எச்சரிக்க
“என்ன ரொம்பப் பேசுற… நான் அப்படித்தான் பேசுவேன்… என்ன பண்ணிருவ நீ” எனும் போதே இருவருக்கும் இடையில் வைதேகி வந்திருக்க
“என்னடா நீயும் இப்படி பேசுற… பேச வேண்டியதைப் பற்றி பேசுங்க… நீ ஏன் மாப்பிள்ளையை இழுக்கிற” எனும் போதே
“ஆமாம் அவரு பெரிய உத்தமரு…. அடப் போங்க பாட்டி… இவளும் பேச வந்துட்டா…. ஏய் இந்தப் பணத்துக்காகத்தாண்டி அவன் உன்னை மேரேஜ் பண்ணிருக்கான்… நல்லா வச்சுருக்கிற மாதிரி நடிச்சுட்டு இருக்கான்… என்னமா நடிச்சான்… நீ ஒரு பார்வை பார்க்கலைனு அன்னைக்கு… அவன் நடிப்பை நீ நம்பலாம்…. நான் நம்ப மாட்டேன்”
“நானும் நம்பச் சொல்லலை அர்ஜூன்… ப்ச்ச்… இப்போ அதைப் பற்றி பேச வரலை நான்… இதுல ரிஷி பேர் இருக்கக் கூடாது எடுத்துருங்க அவ்ளோதான்…” என்று கண்மணி உறுதியான குரலில் சொல்லி… அர்ஜூனைப் பார்க்க
“ப்ச்ச்… உனக்குனா அது நாளைக்கு அவனுக்குதானே… அது ஏன் விர்ச்சுவலா இருக்கனும்… அதிகாரப்பூர்வமாகவே எழுத்தா இருக்கட்டும்…. “ அர்ஜூனும் தன் பக்க விவாதத்தை வைக்க
“அவருக்கு அதெல்லாம் பிடிக்காது… அது தாத்தாவுக்குமே தெரியும்… “ என்றவளிடம்
அர்ஜூன் விழுந்து விழுந்து சிரித்து வைத்தான்…
”என்ன சிரிப்பு… “ கண்மணி எரிச்சலாகக் கேட்க
“பணம் புகழ்னு அவன் ஓட்றது உலகத்துக்கேத் தெரியும்…. அது ஏன்… உன் மூலமா ஈஸியா கிடைக்கிறதை வச்சுக்கிட்டு கெத்து காட்ட வேண்டியதுதானே… எதுக்கு இவ்ளோ மெனக்கெடற மாதிரி சீன் போடறான்…” அர்ஜூன் வார்த்தைகளை விட ஆரம்பிக்க…. கண்மணி தன் தாத்தா பாட்டியை முறைத்து விட்டு….
“ஆமாம் உங்களுக்கு என் புருசனப் பற்றி என்ன தெரியும்னு… அவரைப் பற்றி பேசுறீங்க” கண்மணி அர்ஜூன் முன் நேருக்கு நேராகப் பார்த்து கேட்க ஆரம்பித்தவள்
“அவர் அப்பாவோட பணத்திலயே ஒத்தப் பைசாவ கூட தொட்டுப்பார்க்காமல் வாழ்ந்துட்டு இருக்கிறவர்… இந்தப் பணத்துக்காக ஆசைப்படுவாரா… அவரோட சொந்த உழைப்பை மட்டும் தான் அவர் நம்புறார்… அடுத்து அவர் அப்பாவோட கம்பெனி… அது மட்டும் தான் அவரோட குறிக்கோள்… அதை மீட்க அவரும் சில தேவையில்லாத வேலைகள் பண்ணிட்டு இருக்காரு… மற்றபடி பண ஆசைலாம் அவருக்கு கிடையாது… அதைப் புரிஞ்சுக்கோங்க..”
“என்னை மேரேஜ் பண்ணினது கூட… பணத்துக்காக இல்லை… அதையும் இங்க சொல்லிக்க விரும்புறேன் மிஸ்டர் அர்ஜூன்…” என்றவளிடம்
“பார்த்தீங்களா தாத்தா… எப்படி பேசுறாள்னு… அந்த ரிஷிலாம் பேசாமல் அரசியல்ல நிற்கலாம்… இவள் மேடை மேடையா பேசி பேசியே ஜெயிக்க வச்சுருவா… ரொம்ப மெனக்கெட வேண்டாம் அவன்” எரிச்சலாக அர்ஜூன் சொல்ல
“அவருக்குப் பிடிச்சு அரசியல்ல நின்னா… நீங்க சொன்ன அதையும் செய்வேன்… இதுல உங்களுக்கு என்ன வந்தது” கண்மணியும் எரிச்சலாகச் சொல்லி அர்ஜூனைப் பார்க்க
“பைத்தியம் தாண்டி பிடிச்சிருக்கு உனக்கு… முட்டாள் ”
“புருசனுக்கு சப்போர்ட்டா பேசுறது… பைத்தியக்காரத்தனம்னா… நான் பைத்தியக்காரியாவே இருந்துட்டு போறேன்… முட்டாளாவே இருந்துட்டு போறேன்…” கண்மணியும் பதில் கொடுக்க
ரிஷிக்கு ஆதரவாக கண்மணி பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்… ஒவ்வொரு அனல் துளிகளாக அவனது இரத்தத்தில் சூடேற்றிப் போக… வார்த்தைகளில் எல்லை மீற ஆரம்பித்திருந்தது
“என்ன பண்றது… உன் உடம்புல ஓடுறது பாதி அந்தப் பொறுக்கியோட ரத்தம் தானே… அதுதான் இன்னொரு பொறுக்கிக்கு சப்போர்ட் பண்ணுது” அர்ஜூன் தயங்காமல் சொல்ல… கண்மணி இப்போது நிதானமாக அவனைப் பார்த்து
”வாவ்…. கரெக்டா சொல்லிட்டீங்க அர்ஜூன் … ஆனால்… ஒரு சின்ன திருத்தம்… நட்ராஜோட இரத்தம் இல்லை… பவித்ராவோட ரத்தம்.. என் அம்மாதான் என் அப்பாக்கு சப்போர்ட் பண்ணாங்க…. அதே மாதிரி நான் ரிஷிக்கு சப்போர்ட் பண்றேன்… தாயைப் போல மகளும்… அதுதானே சரி… அப்போ எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு… பவித்ராவோட ரத்தம் ஓட்றதுனாலதான்… பொறுக்கியை நானும் தேடிட்டேன்… அவன் தான் என் உயிர்… என் மூச்சுனு சொல்றேன்… இப்போஒரு உண்மை எனக்கு புரியுது… என் அப்பா பிரச்சனை இல்லை போல அர்ஜூன்… என் அம்மா இரத்தம் எனக்குள்ள ஓடுறதுனாலதான் எல்லா பிரச்சனையுமே… அதுனாலதான்… பாருங்க இவ்ளோ பெரிய வசதி வாய்ப்பெல்லாம்… ஏன் இந்த பாசக்கார அர்ஜூனை விட்டுட்டு… அந்த ரிஷி பின்னால போயிட்டேனோ… கடைசியா பவித்ரா பொண்ணுனு நிருபிச்சிட்டேனே நானும்… ப்ச்ச்… எனக்கு பவித்ரா பொண்ணா இருக்கப் பிடிக்காதுதான்… ஆனால் என்ன பண்றது… எனக்குள்ள ஓடிட்டு இருக்கிற பவித்ராவோட இரத்தம் இவ்ளோ வேலை பார்க்க வைக்க வைக்குதே… சோ சேட்.”
‘ஏய்” அர்ஜூன் அவள் முன் வந்து நிற்க
“என்ன… என்ன கோபமா கத்துறீங்க… உங்ல அத்தையைப் பற்றி பேசினால்… அவங்க இரத்தத்தைப் பற்றி பேசினால்… கோபம் வருதா என்ன… மிஸ்டர் அர்ஜூன்… உன் அத்தைதான் இதெல்லாம் தூக்கிப் போட்டுட்டு நீங்க சொல்ற அந்த சோ கால்ட் பொறுக்கி பின்னால ஓடி வந்தாங்க… அப்போ யார் மேல தப்பு… சோ உங்க அத்தையைப் பற்றி மட்டும் பேசுங்க… என் அப்பாவை… என் புருசனைப் பற்றி பேசாதீங்க… அதுக்கு ஒரு உரிமையும் இல்லை உங்களுக்கு சரியா… இதுக்கும் மேல அவங்களப் பற்றி பேசுனீங்க”
“என்னடி பண்ணுவ… நான் அப்படித்தான் பேசுவேன்… வந்துட்டா சப்போர்ட் பண்ண … ரெண்டு பொறு” என்று அர்ஜுன் ஆரம்பிக்கவில்லை
”நிறுத்துடா… உனக்குலாம் அவ்ளோதான் மரியாதை… “ என கண்மணியும் அவன் முன் வந்து நிற்க
அடுத்த நொடி… அர்ஜூனின் கைகள் அவள் முன் ஓங்கியிருக்க… அதற்கு முன்னமே தடுத்து நிறுத்தியவள்…
“அடிக்கலாம் மிஸ்டர் அர்ஜூன்… உங்களுக்கு இல்லாத உரிமையா… ஆனால் அதுக்கும் முன்னால… ஆனால் என் அப்பா , புருசனை எல்லாம் மரியாதை இல்லாம பேசுனீங்களே… அதுக்கு வாங்கிக்கோங்க… அப்புறம் எனக்குக் கொடுங்க… அதுதானே சரி…”
“என்ன பார்க்கறீங்க… நீங்க என்ன வேணும்னாலும் பேசுவீங்க… நான் பார்த்துட்டு இருக்கனும்… ஆனா நான் பேசினால் சார் கை நீட்டுவிங்க … உங்க லிமிட் இதுதான்…” எனும் போதே
அர்ஜூன் அவள் வார்த்தைகள் தந்த வேதனையுடன் அவளைப் பார்க்க ஆரம்பிக்க… இப்போது பெரியவர்கள் இருவரும் இளையவர்கள் இருவருக்கும் இடையே சமாதானப்படுத்த வந்திருக்க…
“பாட்டி… இவர் என்னை வரம்பு மீறி பேச வைக்கிறார்… சொல்லி வைங்க…” என்றவள்… அவள் தாத்தாவிடம் திரும்பி…
“தாத்தா… ரிஷி பேரை எடுத்துருங்க… அப்டி இவர் பிடிவாதம் பிடிச்சார்னா… என்னையும் இன்வால்வ் பண்ணாதீங்க… அப்புறம் உங்க இஷ்டம்…. நான் யார் விசயத்திலயும் தலையிடலையே அப்புறம் ஏன் எல்லோரும் என் விசயத்தில… என் வாழ்க்கைல முடிவெடுக்க நினைக்கிறீங்க…” தன் தாத்தாவிடமிருந்த தன் பார்வையை மாற்றி அர்ஜூனை மீண்டும் பார்த்தபடியே …
“அந்தப் பொண்ணு நிவேதா உனக்காகவே உங்ககிட்ட வார்த்தைக்காகத்தான் காத்துட்டு இருக்கான்னு நானும் கேள்வி பட்டேன்… நான் அதைப் பற்றி ஒரு வார்த்தை உங்ககிட்ட கேட்ருப்பேனா… அட்வைஸ் பண்ணியிருப்பேனா… காதல்ன்றது அவங்கவங்க மனசு சம்பந்தப்பட்டது… பிடிக்காத விசயத்தை பண்ணுனு சொல்றது… அட்வைஸ் பண்றது எவ்ளோ கேவலம் தெரியுமா… “ என்றவள்…
”உங்க மனசுல நிவேதா இருக்கான்னு தெரிந்தால் கண்டிப்பா நானே அட்வைஸ் பண்ணியிருப்பேன்… ஆனால் நீங்க இப்போ வரைக்கும் அந்த நிவேதாவை ஏத்துக்க நினைக்கலை… உங்களுக்குப் பிடிக்காத ஒண்ணை செய்யுங்கன்னு நான் உங்கள கட்டாயப்படுத்தலையே அர்ஜூன்… ஆனால் நீங்க… எனக்குப் பிடிச்சு வாழ்ந்துட்டு இருக்கிற வாழ்க்கையை… விடச் சொல்லி கட்டாயப்படுத்துறீங்க.. ஏன்…… ஆயிரம் தடவை சொல்லிட்டேன்… நான் சந்தோசமா இருக்கேன்னு… அதை ஏன் நம்ப மாட்றீங்கன்னு தெரியலை… என்னால புரிய வைக்கவும் முடியலை…..” என்றவள்
“தாத்தா… பாட்டி வர்றேன்” என்றபடி முன்னால் நடந்தவளின் முன் வேகமாகச் சென்று அவள் வழியை மறித்து அர்ஜூன் நிற்க
”டேய் அர்ஜூன்… என்னடா இப்படி பண்ற… அவளை ஏண்டா டென்ஷன் பண்ற…” பெரியவர்கள் இருவரும் வேகமாகச் சென்று அர்ஜூனிடம் எடுத்துச் சொல்ல
“சந்தோஷமா இருக்கியா… அதை என்ன நம்பச் சொல்ற… சந்தோஷமா இருக்கேன்னு காட்டிட்டு இருக்க… நடிச்சுட்டு இருக்க…. அப்படி வேணும்னா சொல்லலாம்… ஆனால் ஒருநாள் என்கிட்ட வந்து நிற்படி… அதுக்கப்புறம்… நீ நெனச்சாலும் என்னை விட்டு உன்னால போக முடியாது… பார்க்கலாமா… ”
“ஓ… அப்டியா… அது நடந்தால் அப்போ பார்த்துக்கலாம்… அதுவரை அப்படி ஒரு ஓரமா நின்னு கனவு கண்டுட்டு இருங்க… இப்போ வழிய விடுங்க மிஸ்டர் அர்ஜூன்” என்றவளிடம்…
அர்ஜூன் ஏதோ பேச ஆரம்பிக்கப் போக… கண்மணியின் அலைபேசி அடிக்க… வேண்டுமென்றே கண்மணி எடுத்தாள்… அர்ஜூனைத் தவிர்க்கும் பொருட்டு
“கண்மணியா” என்றபடி வந்த குரலை அடையாளம் காண முடியாமல்… ஏற்கனவே அர்ஜூன் வார்த்தைகளில் எரிச்சலுடன் இருந்தவள்… இன்னும் கடுப்பாக பேச ஆரம்பித்திருந்தாள்
“நீங்க யாருங்க… அதைச் சொல்லுங்க” எனும் போதே
“நான் யார்ன்றது முக்கியம் இல்லை… நான் சொல்றதை மட்டும் கேளு…” எதிர்முனை பேச ஆரம்பிக்கும் போதே
“அப்போ வை… போறவன் வர்றவன்… முகம் தெரியாதவன் சொல்றதை எல்லாம் கேட்கிற அளவுக்கு முட்டாள் இல்லை…” கண்மணி வைக்கப் போக
“ஏய்… ஒரு நிமிடம்… ரிஷியை பற்றி சொல்லனும்… எச்சரிக்கை பண்ணனும்” என்ற வார்த்தையில் இப்போது கண்மணி நிதானிக்க
“உன் புருசன் ரொம்ப ஆடிட்டு இருக்கான்… உனக்கு உன் புருசன் உயிர் முக்கியம்னா… அவனை இந்த ஆதவன் விசயத்தில தலையிடாமல் இருக்கச் சொல்லு… “
“யார்டா நீ… லூசா… ஏற்கனவே யார் மேலடா கோபத்தைக் காட்டுவோம்னு இருக்கேன்… தேவையில்லாமல் நீ மாட்டிக்காத… ஒழுங்கா போயிரு” எனும் போதே
“இந்த பாரு… அந்த ரிஷி இனிமேல எங்க ஆதவன் சார்” என்று ஆரம்பிக்க
“டேய் இன்னாங்கிற இப்போ… மூஞ்சிக்கு முன்னால வந்து பேச துப்பில்லை… நீயாவது அட்லீஸ்ட் பேசுற… அந்த ஆதவன் உன்னை விட ரொம்ப தைரியசாலியா இருப்பான் போல… அவன் கூட போட்டி போடற ரிஷியை விட்டுட்டு என்கிட்ட வந்து… புருசன்… உயிர்… பூவு பொட்டுனு அரதப் பழசான வசனம் லாம் பேசுறீங்க…“ என ஆரம்பித்தவள்… தன் பாஷையில் இறங்கிப் பேச ஆரம்பித்திருக்க
அர்ஜூன்… வைதேகி… நாராயணன் இவர்கள் கூட சற்று தள்ளி நின்றனர் இப்போது அவளை விட்டு…
அதே நேரம்.. எதிர்முனையில் பேசிக் கொண்டிருந்தவன்… அலைபேசியை மூடியபடி…
“சார்… இந்தப் பொண்ணு என்ன சார் இப்படி தரை லோக்கலா பேசுது” என்ற தன் உதவியாளனை முறைத்தபடியே ஆதவன்…. இப்போது அலைபேசியை தன் கையில் வாங்கியவனாக
“கண்மணி… நான் ஆதவன் பேசுகிறேன்” என்று நிதானமாக அழுத்தமாக கர்ஜனையான குரலில் ஆதவன் பேச ஆரம்பிக்க
”நீ ஜெயில்லதானே இருக்க… அதுவும் அப்பாவையே கொலை பண்ணிட்டு… இன்னும் கேவலமான தப்பெல்லாம் பண்ணிட்டு… கம்பி எண்ணிட்டு இருக்கதானே… அப்புறம் என்ன இவ்ளோ தென்வெட்டா பேச்சு… என்ன சொல்லு… ரிஷிகிட்ட நேரடியா பேச முடியாமல் என்கிட்ட வந்திருக்கிறது சமாதானத் தூது… அதுவும் கொல்லைப் புறமா… இவ்ளோலாம் சீன்லாம் தேவை இல்லை உனக்கு …சீக்கிரம் சொல்ல வந்ததைச் சொல்லு… “
ஆதவன் அதெல்லாம் கண்டு கொள்ளாமல்
”நான் கேள்விப்பட்டவரை நீ ரொம்ப புத்திசாலி… அதுனாலதான் உன்கிட்ட பேச நினைத்தேன்… போன் போட்டேன்”
“தேங்க்ஸ்… உங்க செர்டிஃபிகேட்டுக்கு… “ எனக் கண்மணி நக்கலாக ஆதவனுக்கு சொல்லியபடி அர்ஜூனையும் பார்வை பார்க்கத் தவறவில்லை…
“உன்னை மிரட்றதுக்காக நான் பேசலை கண்மணி… மிரட்டல் இல்லை… ஹ்ம்ம்…. வார்னிங்னு கூட வச்சுக்கலாம்… இன்னைக்கு எனக்கு பெயில் கிடைக்கக் கூடாதுன்னு ரிஷி பல வேலை எல்லாம் பார்த்தான்… அத்தனையும் வேஸ்ட்… இன்னைக்கு எனக்கு பெயில் கிடைக்கப் போகுது… இனிமேலாவது அவன் ஒழுங்கா இருக்கனும்னுதான் உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைத்தேன்… நாளைக்கு ஏதாவது ஆனால் என்னை குறை சொல்லக் கூடாது பாரு… நீ சொன்னால் அவன் கேட்காமல் இருப்பானா… சொல்லி வை… அவன் கூட ரொம்ப நாள் வாழனும்னு ஆசை இருக்குதானே… அல்ப ஆயுசுல போய்ச் சேர்ந்துறப் போறான்…. அப்புறம் நீதான் கண்ணைக் கசக்கிட்டு நிற்கனும்… மகாராணியா வாழ வேண்டிய பொண்ணு நீ… அதுனால ஒழுங்கா பொறுப்பா இருந்து அவனைக் காப்பாத்திக்கோ…. உன் ராஜாவை இழந்துறாதம்மா… அதுதான் உன்கிட்ட சொன்னேன்…”
“அப்டீங்களா… சொல்லிட்டீங்க தானே… நாங்க பார்த்துக்கிறோம்…. போனை வைக்கலாமா…. ” என்ற போதே… அர்ஜூன் அவளிடமிருந்து அந்த அலைபேசியை பறித்து…
“ஏய் …. என்ன யாரை மிரட்டிட்டு இருக்க நீ…” என்ற போதே எதிர்முனையில் நிசப்தம்… ஆதவனும் அலைபேசியை வைத்திருக்க…
“”யார் அர்ஜூன் அது… நம்ம பொண்ணையே மிரட்றது… என்ன இதெல்லாம்” எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே…
“தாத்தா… அவன்லாம் பெரிய ஆள் கிடையாது… ரிஷியே சமாளிச்சுப்பார்…. பெருசா கவலைப்படத் தேவையில்லை… பார்த்தீங்க தானே… ரிஷிகிட்ட பேச முடியாமல்… என்கிட்ட பேசிட்டு இருக்கான்… ” தன் தாத்தாவிடம் சொன்னவள்…. தன் பாட்டியின் கவலையான முகத்தைப் பார்த்த உடனேயே
“பாட்டி… இவ்ளோ கவலைப்படற அளவுக்கு ஒரு விசயமும் இங்க நடக்கலை… ” என்றவள்…அர்ஜூனைக் காட்டியபடி
“உங்க பேரன்…. அவர்தான் என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்காரு… அந்த ஆதவன்லாம் இல்லை… அவன்லாம் ஒரு ஆள்னு… நீங்க வேற…” என்றவள்… அடுத்த நொடியே அங்கிருந்து வெளியேறியும் இருக்க…
அர்ஜூன்… அவளையே அவள் போன திசையையே வெறித்துக் கொண்டிருக்க… வைதேகி அவனின் தோள் தொட… திரும்பவில்லை அர்ஜூன்… மாறாக
“ஒரு சின்ன நூலிழைல என்னோட பொக்கிஷத்தை தவற விட்டுட்டேன் பாட்டி… மறுபடியும் அதை மீட்டெடுக்க முடியாமல்… தெரியாமல் தவிச்சுட்டு இருக்கேன்…” அவன் பார்வை கண்மணி சென்ற திசையை மட்டுமே பார்த்தபடி இருக்க… நாராயண குருக்களோ தனது அலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றிருந்தார்….
அர்ஜூனோ தன் பாட்டியிடம் பேச ஆரம்பித்திருந்தான்
“தாத்தா சொல்லித்தான் அவள நான் விரும்ப ஆரம்பிச்சேன்… ஆனால் நாளாக நாளாக… அவளோட தைரியம்… அந்தப் பேச்சு… அவ பேசும் போது எப்போதுமே ஒரு தெனாவெட்டு இருக்கும் தாத்தா… அவளோட அன்பு கூட மிரட்டலாத்தான் இருக்கும்… அவளோட திமிர் இப்படி எல்லாமே எனக்குப் பிடிச்சுப் போச்சு… இது எல்லாம் எனக்கே எனக்கானதுன்னு நினைச்சுட்டு இருக்கும் போது… வேற ஒருத்தன் மொத்தமா அபகறிச்சுட்டு போயிட்டான்னு நினைக்கும் போது… அதுவும் அவளோட அருமை தெரியாத ஒருத்தன்…. நினைக்கும் போதே எரியுது பாட்டி” சொல்லும் போதே அர்ஜூனின் கண்கள் சிவந்திருக்க…
“மாப்பிள்ளையும் அவ மேல பாசமாத்தான் இருக்காரு அர்ஜூன்… அவர் மேல குறை சொல்ற அளவுக்கு என்ன இருக்கு ” வைதேகி சொன்ன போதே அர்ஜூனின் முறைப்பில் வைதேகி மௌனமாகி இருக்க
இப்போது நாராயண குருக்கள் வெளியே வந்திருக்க
”அர்ஜூன்… என்கூட வா… கண்டவன்லாம் என் பேத்தியை மிரட்டிட்டு இருப்பான்… அதை நான் பார்த்துட்டு சும்மா இருக்கனுமா” என்றபடி வைதேகியிடம் விடைபெற்றபடி அவரும் அர்ஜூனுடன் வெளியேறி இருந்தார்…
---
நாளை அடுத்த பதிவு
ஆனால் நீ சொன்னதிலயும் ஒரு உண்மை இருக்கு… என் தெய்வம்… குல சாமி… என் கண்ல படாம இருக்கிறதுக்கு… இனி கண்டிப்பா எனக்கு காட்சி தருவான்னு நம்பிக்கை வந்திருக்கு… அதுனால கூட இந்த கல்யாணத்துக்கு மனப்பூர்வமா சம்மதம் சொல்றேன்…” என்றவர் விக்கியிடம் திரும்பி…
“நீ புண்ணியம் பண்ணியிருந்தால்… அவ தாலி எடுத்துக் கொடுக்கிற பாக்கியம்னாலும் உனக்கு கிடைக்கனும்னு நினைக்கிறேன்….” சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட
---
“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி… மாமா இப்போதான் சம்மதம் சொல்லிருக்கார்… அதை மறுபடியும் கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கிறேன்… நீங்க இருக்கிற இடத்தைப் பார்த்து மறுபடியும் பிரச்சனை வேண்டாம்னு நினைக்கிறேன்”
---
“சீக்கிரம் மேரேஜ் பண்ணி சம்சாரி ஆகிற வழியப் பாரு…. அப்போ தெரியும்… போகனும்டா நான்... புரிஞ்சுக்கோடா... ” என்றவனிடம்
“புரியுது… புரியுது… அவ்ளோ மடச்சாமியார்லாம் இல்லை நான்…. தெரியாமல் கேட்டுத் தொலஞ்சுட்டேன்… “ என விக்கியும் ரிஷியைப் புரிந்து பேசியவனாக
---
“மணி 1 மணிகிட்ட ஆகிருமே ரிஷி” கண்மணி இழுக்க
“ஏண்டி…. நீ ஒரு மணிக்கெல்லாம் வெளிய வந்ததே இல்லையா என்ன… என்னமோ புதுசா வர்றவ மாதிரி அலுத்துகிற” ரிஷி கடுப்பாகக் கேட்க...
----
“இல்லை… அர்த்த இராத்திரில… ட்ரைவர் வேலை எல்லாம் பார்க்கிறேன்… சும்மாலாம் பார்க்க மாட்டேன்பா…. எனக்கு என்ன தருவீங்க” என கறாராகக் கேட்க
Lovely update
Loosu Arjun
Ana thaniya irundalum unna thedi varamata thonudu