81-Continue
சற்று முன் கவலையோடு ஒலித்த தன் மனைவியின் குரலா இது எனும்படி கண்மணி குரலில் அப்படி ஒரு உற்சாகம்
ரிஷிக்கும் தெரியும்.. அவள் காட்டிக் கொள்ளாவிட்டாலும்… கண்மணிக்கு அர்ஜூனை எவ்வளவு பிடிக்கும் என்று… அர்ஜூனுக்கு அவள் மனதில் தனி இடம் உண்டுதான்… அதை ரிஷியால் மறுக்கவே முடியாதுதான்… ஆனால் அதற்காக என்ன செய்வது… அவள் என் கண்மணி… எனக்காக பிறந்தவள் எனும்போது… அர்ஜூன் அவன் வழியைப் பார்த்துக் கொண்டு போவதுதானே அவனுக்கும் நல்லது… அவன் வாழ்க்கைக்கும் நல்லது… இது எப்போது அவனுக்குத் தெரியப் போகிறதோ…” யோசித்தவனாக பெருமூச்சை விட்டபடியே… தலையைக் கோதிக் கொண்டவனாக…. மனைவியிடம் பேச ஆரம்பித்தான் மீண்டும்
”ஏய்.. என்னாச்சு உனக்கு… இப்படிலாம் பேச மாட்டியே நீ… இங்க என்ன ப்ராப்ளம் போய்ட்டு இருக்கு… அதைப் பற்றியெல்லாம் கேட்காமல்… நீ என்னடான்னா… மல்லிப்பூ.. அல்வான்னு… “ அவன் குரலில் வரவழைக்கப்பட்ட கோபம் அப்பட்டமாகத் தெரிய
“ப்ச்ச்… ஹலோ போங்காட்டம் இது… நீங்கதானே சொன்னீங்க எதுவா இருந்தாலும் என்ன தேவைனாலும்… என்கிட்ட சொல்லுனு… அப்புறம் இப்போ கோபப்பட்டா என்ன அர்த்தம்… ஒண்ணு பண்ணுங்க… இதெல்லாம் சொல்லலாம்… இதெல்லாம் சொல்லக் கூடாதுன்னு என்கிட்ட ஒரு பட்டியல் போடுங்க… சொல்றதெல்லாம் சொல்லிட்டு… இப்போ கோபப்பட்டா என்ன அர்த்தம்… கோபப்பட வேண்டியது நீங்களா …நானா.. . என்னமோ பிரச்சனை புதுசா வருகிற மாதிரி பேசுறீங்க… நமக்கு லெஃப்ட் ஹேண்ட்ல இல்லை ரைட் ஹேண்ட்லன்னு மாறி மாறி எப்போதும் பிரச்சனை இருந்துட்டேதான் இருக்கும்… என்னைக்கு உங்களுக்கு பிரச்சனை இல்லை… “ கண்மணி பேசிக் கொண்டே போக…
“ஏய்… இருடி… என்னடி… இப்படி படபடன்னு பேசினா எப்படி… வீட்ல ஒண்ணு புருசன் பேசனும்… இல்லை பொண்டாட்டி பேசனும்… இப்படி ரெண்டு பேருமே பேசினால் எப்டி்டி… குடும்பம் என்னாகிறது”
“அப்போ நீங்க பேசாதீங்க… நான் சொல்றதைக் கேட்கப் பழகிக்கங்க” கண்மணி பட்டென்று சொல்ல…
“ரொம்பப் பேசுறடி… இங்க விக்கியும் ரிதன்யாவும் வேதனையில இருக்காங்க… நீ என்கிட்ட விளையாடுறியா என்ன” ரிஷி கடுப்படிக்க
கண்மணியோ அலட்சியமான பாவனையில் அதைக் கேட்டவளாக
“ஹலோ… அவங்க லவ்… அவங்க வேதனை இதுல நான் என்ன கவலைப்பட வேண்டியிருக்கு…. இல்லை நீங்கதான் என்ன கவலைப்பட வேண்டியிருக்கு… இவ்ளோ சீன்லாம் தேவையில்ல… சரியா” அவனுக்கு சரியாக கண்மணியும் கடுப்பைக் காட்ட
“என்ன… என் தங்கச்சி மேல இருக்கிற கோபத்தை எல்லாம் காட்றதுக்கு டைம் கெடச்சிருச்சுனு காட்றியா என்ன” சந்தேகமாக இழுத்தவனின் மூளையில் மின்னல் வெட்ட… அடுத்த நொடியே அவளின் கோபத்துக்கு காரணம் கண்டவனாக
”விக்கி கூப்பிட்டு இங்க வந்ததால… உன்னை கூட்டிட்டு போகலேன்னு கோபமா என்ன… சாரின்னு சொல்லிட்டுத்தானேடி வந்தேன்… அப்புறம் ஏன் இவ்ளோ கோபம்…”
கண்மணி இப்போது அமைதியாகி இருக்க… ரிஷியும் நிதானித்தான் இப்போது ஏதும் பேசாமல்… கண்மணியே ஆரம்பித்தாள்… ஒவ்வொரு வார்த்தைகளையும் ஏற்கனவே யோசித்து வைத்திருந்தாள் போல
“ஆனால் எனக்கு ஒரு ஒரு சந்தேகம் தான் திருவாளர் ரிஷிகேஷ் அவர்களே… நாங்க மட்டும் சாரை.. 24*7 மட்டும் இல்லாமல் ஒவர் டைம் போட்டு தாலாட்டிட்டே இருக்கனும்… ஆனால் சார் அம்மா… தங்கை… பிஸ்னஸ்… ஃப்ரெண்ட்.. ஏன் எனிமிஸுக்கு கூட டைம் ஒதுக்கி… இதெல்லாம் போக இருக்கிற இத்துனூண்டு பிஸ்கோத்து டைமை பொண்டாட்டிக்குனு ஒதுக்குவீங்க… அந்த டைம்லயும்… அம்மா… தங்கச்சி… ஃப்ரெண்டுனு… போயிட்டு வர்றேம்மா… சாரிம்மா… இன்னொரு நாள் பார்த்துக்கலாம்னு ஜஸ்ட் லைக் தேட்னு இன்ஃபர்மேஷன்… ஹான்.. அந்த இன்ஃபர்மேஷன் கூட பொண்டாட்டி பதில் எல்லாம் எதிர்பார்க்காத இன்ஃபர்மேஷன்…. ஆமா என்ன நெனச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல… என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது… ”
ரிஷியின் இதழில் மெல்லிய புன்னகை விரிய… இருந்தும் காட்டிக் கொள்ளாமல்…
“அம்மு தன்ணி குடிச்சுட்டு பேசுங்க….” எனும் போதே
“தேவையில்லை” கண்மணி வீராப்பாகப் பட்டென்று சொல்ல
”உனக்குத் தேவையில்லை… ஆனால் எனக்குத் தேவை… இவ்ளோ லென்த்தியா பேசிட்டே போனால்… எங்களுக்கும் பேச…. இல்லை இல்லை… யோசிக்க டைம் வேணும்ல…. எனக்கு ப்ரேக் வேணும்மா… டைம் கொடும்மா” என்றபடியே
“இனிமேல்… இன்ஃபர்மேஷன் கொடுக்கலை… பெர்மிஷன் கேட்கிறேன் போதுமா… ஆனால் ஒண்ணுடி… நமக்கு மேரேஜ் ஆகி கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆகப் போகுது… ஃபர்ஸ்ட் டைம் இன்னைக்குத்தான்… நீ பொண்டாட்டி ரோலை பிரமாதமா பண்ணிருக்க… பிரமாதம் டி… கலக்கிட்ட போ…” ரிஷியின் குரலில் அவளைக் குறித்த கலக்கமெல்லாம் போய்… நகைச்சுவை இழையோட கணவனாக அவளிடம் சமாளிக்க ஆரம்பித்திருக்க
“ஆமா.. எப்போதுமே இவரை கண்ணே மணியேன்னு கொஞ்சிட்டே இருப்பாங்களா என்ன… “ கண்மணி சலிப்பாகச் சொல்ல… அந்தக் குரலில் கோபமெல்லாம் இப்போது இல்லை…
சிரித்த ரிஷி….
“ரொம்ப சலிக்காதடி… உன் தப்பு அதெல்லாம்… ”
“என்னது” கண்மணியின் குரலில் அவளின் உத்திரதாண்டவம் மீண்டும் வந்திருக்க
“ஆ…ஆ… காது வலிக்குதுடி… நீதான் அப்படி பழக்கிட்ட… நானும் பழகிட்டேன்… இப்போ என்ன… எத்தனை மணிக்கு வந்தாலும் உன்னை லாங்க் ட்ரைவ் கூட்டிட்டு போகிறேன் போதுமா…”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… என்ன ஆச்சு” என கண்மணி அவன் வந்த விசயத்தைக் கேட்க
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட…”
“சரி விடுங்க… எனக்கும் தேவையில்ல…. நம்ம விசயத்துக்கு வருவோமா… அந்த மல்லிப்பூ… அல்வா… “ என வேண்டுமென்றே அவனை வாற
“ஏய் ஏய்… அடங்குடி… இதெல்லாம் ரெக்கார்ட் பண்ணிருக்கனும்… என் முதலாளிகிட்ட போட்டுக் காட்டிருக்கனும்…மனுசன் சந்தோஷத்தில புல்லரிச்சுப் போயிருவாரு..”
“ஏன்… என் அப்பாக்கு இதில என்ன சந்தோசம்…” கண்மணி புரியாமல் கேட்க
“அவர்தான் என் பொண்ணு பழைய மாதிரி திரும்பக் கிடைக்கனும்… அவ பழைய மாதிரி பட பட பட்டாசா இருக்கனும்னு சொல்வாரு… அதுக்குச் சொன்னேன்” என ரிஷி அவனையுமறியாமல் சொல்லிவிட… சொல்லிவிட்ட பின் தான் அவனுக்கே அவன் சொன்ன வார்த்தைகள் புரிய… அதே நேரம்
எதிர்முனையில் நீடித்த அமைதியில் …தன்னையே தலையில் குட்டிக்கொண்டவனாக
”ஏய்…. வீட்டுக்கு வந்து பேசுறேண்டி… விக்கிக்கிட்ட பேசனும்… டைம் வேற போயிட்டு இருக்கு… ப்ளீஸ்டி… கொஞ்சம் புருசன் போஸ்ட்ல இருந்து ரிலீஸ் கொடேன்”
“போங்க.. யார் வேண்டாம்னு சொன்னா… ஆனால் நீங்களே கட் பண்ணிட்டு போங… “ கண்மணி கொஞ்சம் கூட சளைக்காமல் விட்டே கொடுக்காமல் பேச
ரிஷியே ஒரு கட்டத்தில்
“அம்மா! தாயே! ஏதோ ஒரு அவசரத்துல… உன்கிட்ட பெர்மிஷன் வாங்காமல்… உன் பதிலைக் கூட கேட்காமல் வந்துட்டேன்…. தப்புதான்… அதுக்கு வீட்டுக்கு வர்றேன்… என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ… இப்போ மேடம் நீங்க எனக்கு பெர்மிஷன் கொடுத்தா விக்கி கிட்ட பேசப் போவேன்….” குரலில் கடினத்தன்மை வந்திருக்க
“கோபமா ரிஷி… ” கண்மணி அவனது குரலை உணர்ந்து மெல்லக் கேட்க
“கோபம்லாம் இல்ல அம்மு… என் செல்லம் உன்கிட்ட எதுக்குடி கோபப்படப் போறேன்… உம்மா…. போதுமா… விக்கி கிட்ட பேசனும்டி… வந்ததில இருந்து பேசவே இல்லை… கோபத்துல நாலு வார்த்தை திட்டிட்டுதான் வந்தேன்… பை சொல்லுடி என் செல்லம்ல” எனும் போதே கண்மணி இப்போதும் பேசாமல் இருக்க
“ஏண்டி படுத்துற… பை சொல்லுடி… கெஞ்ச வைக்காதடி… உன் ரிஷிக்கண்ணா பாவம்ல.” ரிஷி கெஞ்ச ஆரம்பித்திருக்க…. கண்மணி அந்த கெஞ்சலுக்கெல்லாம் கிஞ்சித்தும் மயங்காமல் இருக்க
“படுத்தாதடி… நீ சமாதனாமா என்னைப் போகச் சொன்னால் தான் எனக்கும் அங்க பேச முடியும்… பார்த்து பண்ணுடி “ ரிஷியின் கதறலில்
“சரி சரி… ஆனால் இதுதான் லாஸ்ட் வார்னிங்… ” அவளின் செல்ல மிரட்டலில் ரிஷி சிரிக்க
”பை… வைக்கிறேன்…”
“பை ரிஷிக்கண்ணா… “ ரிஷி திருத்த
“ஓகே… அப்படியே வச்சுக்கங்க…” கண்மணி அவன் சொல்லச் சொன்னது போல ‘ரிஷிக்கண்ணா” என விளிக்காமல் போனை வைத்திருக்க… அதில் ரிஷி ஒரு வித கவலை கலந்தயோசனையுடன் நின்ற போதே
“பை ரிஷிக்கண்ணா…” என கண்ணடிக்கும் ஸ்மைலிகளோடு அவனுக்கு குறுஞ்செய்தி வந்திருக்க… இப்போது ரிஷியின் முகம் மலர்ந்து விகசித்தது
---
அர்ஜூன்… பவித்ர விகாஸுக்கு கிளம்பியிருக்க.. ரிதன்யா… சமையலறையில் விக்கியின் அண்ணிக்கு சமையலில் உதவிக் கொண்டிருந்தாள்…
விக்கியும் ரிஷியும் அறையில் அங்கிருக்க…
“சாரிடா மச்சி… உன் நிலைமை புரியுது தான்…. நானும் கோபப்பட்டிருக்கக் கூடாது” ரிஷி நண்பனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க
“என்ன பண்றதுன்னே தெரியலடா…. அவரை எப்படி சமாதானப்படுத்துறது எனக்குத் தெரியவே இல்லை… எனக்கு என் குடும்பம் தாண்டா ஆணிவேர்… அதே நேரம் ரிது இல்லாத வாழ்க்கைய நினைக்கவே பயங்கரமா இருக்கு… அந்த பயத்துல தான் இப்படி எல்லாரையும் படுத்தி எடுக்கிறேன்னு நினைக்கிறேன்… நான் பண்ணின வேலைல அர்ஜூன் சார் கூட அவர் ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டாரு என்னால… நெக்ஸ்ட் வீக் போஸ்ட்போன் பண்ணிட்டாரு” விக்கி சொன்ன போதே… ரிஷியின் முகம் அஷ்டகோணலாக மாறியதைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன
“உங்க அர்ஜூன் சார்… உன் அக்கா சொன்னதால டிரிப்பை கேன்சல் பண்ணினாரா… இல்லை நிஜமாவே உன் மேல அக்கறையினாலா கேன்சல் பண்ணினாரா… இல்லை இதுதான் சாக்குனு ஓடி வந்துட்டாரா… எங்கேயோ இடிக்குதே… அது என்ன அடுத்த வாரம்… ஏன் நாளைக்குலாம் ஃப்ளைட் இல்லையா என்ன… நெக்ஸ்ட் வீக்காவாது போவாரானு பார்ப்போம்… ” எனும் போதே விக்கியின் முறைப்பில்…
“முறைக்காதடா… அந்த அர்ஜூனை விடு… உன் பிரச்சனைக்கு வருவோம்… தாத்தாவை எப்படி சமாளிப்பது… சமாதானப்படுத்துவது… அதைத்தான் யோசிச்சுட்டேன் இருக்கேன்…” என்று அவனிடம் பேச ஆரம்பிக்க…
“அவரோட வீக்னெஸ் என்ன… அந்தப் பொண்ணுதானே… ஒண்ணு பண்ணுவோமா… இந்த வயசுல அவருக்கு அந்தப் பொண்ணு முகமெல்லாம் ஞாபகம் இருக்குமா என்ன… அவர் சொன்ன அடையாளம் வச்சு … ஏதாவது ஒரு பொண்ணை ஆக்ட் பண்ண வச்சுருவோமா… ”
விக்கி முறைத்தபடியே
“ஏன்டா…. படுத்துற… அவர் பாட்டுக்கு… என் குல தெய்வம் வீட்டுக்கே வந்துருச்சுனு… அந்த நிமிசமே என்னை தாலி கட்டச் சொன்னாலும் சொல்வாரு… போடா”
“அடேய்… இவ்ளோ யோசிச்சவன் அதை யோசிக்க மாட்டேனா… பொண்ணையே நடிக்க வைக்கிறோம்… அவளுக்கு புருசனையும் பிடிக்க மாடோமா என்ன.. மஞ்சக் கயிரோட தம்பதி சகிதமா ஆக்ட் பண்ண வைக்கிறோம்… உன் பிரச்சனையை எல்லாம் முடிக்கிறோம்” எனும் போதே
“டேய் உன் தங்கச்சிக்கு அண்ணன் மாதிரியாடா பேசுற… என் ஃப்ரெண்டாத்தான் என்னைக் கலாய்ச்சிட்டு இருக்க… ” விக்கி சொல்ல... ரிஷியோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்
“அந்தப் பொண்ணு பேர் என்ன சொன்ன…” யோசிப்பவன் போல பாவனை செய்தவன்
“மணியா… கனமணியா… கானமணியா…. “ எதுவுமே தெரியாதது போல ரிஷி அப்பாவியாகக் கேட்க
“டேய் சாகடிக்கப் போறேன் உன்னை… கண்மணிக்கு நீயெல்லாம் தேவையே இல்லை… அவள்ளாம் தனியாளா நின்னாலும் கெத்துதான்…” என்றபடியே ரிஷியின் கழுத்தைப் பிடிக்க
”நான் தேவையா இல்லயான்னு என் பொண்டாட்டி சொல்லனும்… நீங்கள்ளாம் சொல்லக்கூடாது… டேய்… உனக்குப் போய் ஐடியா கொடுத்தேன் பாரு… போ…“ எனத் தள்ளி அமர்ந்தபோதே…. ரிஷியின் குரலில் கோபம் இருக்க… விக்கியும் தன் வார்த்தைகளை உணர்ந்தவனாக…
“சாரிடா… ஏதோ ஒரு ஃப்ளோல வந்துருச்சு…” வருத்தமுடன் மன்னிப்புக் கேட்க
”ப்ச்ச்… விட்றா.. இங்க பாரு யோசிப்போம்… ஆனால் எனக்கென்னமோ உங்க தாத்தா கோபம் ஒரு பெரிய பிரச்சனையா தெரியலடா… ரிதன்யாவே அவ்ளோ தைரியமா இருக்கா… எது வந்தாலும் பார்த்துக்கலாம்னு… உனக்கென்னடா… ” ரிஷி தீவிரமாகப் பேச
“ப்ச்ச்… டேய் ரிஷி… ஒரு மாதிரி இருக்குடா… தலையெல்லாம் வலிக்குதுடா இந்த திங்கிங்க மறக்கனும்னு தோணுது… பார்க்கு போகலாமா”விக்கி கேட்க
“என்னது” ரிஷி சத்தமாகவே கேட்க
“கம்பெனி கொடுடா… ரிதுகிட்ட கூட பெர்மிஷன் கேட்டுட்டேன்…” விக்கி மெல்லிய குரலில் சொல்ல
“எப்போ இருந்துடா இந்தப் பழக்கமெல்லாம் ஆரம்பிச்ச” விக்கியிடம் ரிஷி கடுப்பாகக் கேட்க
“சும்மா பார்ட்டில எல்லாம் லைட்டா எடுத்துப்பேன்… அவ்ளோதான்… ஆனா இன்னைக்கு என்னால முடியல… போலாமா…” எனும் போதே
“அதெல்லாம் எப்போ விட்டேன்… என்னைக்கு கடைசியா தண்ணி அடிச்சேன்… எனக்கே தெரியலை… அதை எல்லாம் விட… வீட்ல வாடகைக்கு இருக்கிறவங்க கிட்டேயே என் பொண்டாட்டி ஹவுஸ் ஓனரா கறாரா இருப்பா… நீ வேற உனக்கு சும்மா கம்பெனிக்கு வந்தேன்னு தெரிஞ்சாலே போதும்… டைவர்ஸ் தான்… சொர்ணாக்கா அவதாரம் தெரியும் தானே… உன் காதல் படகைக் கரை சேர்க்கிறேன்னு… என் கல்யாணக் கப்பலை கவுத்துராதடா…” ரிஷி நக்கலாகச் சொன்னபடியே… அவனருகில் அமர்ந்தவன்
”இப்போ எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற… உனக்கு காதல் உன் தாத்தாக்கு பிரச்சனை இல்லை… அவர் சொன்ன பொண்ண மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னது அது கூட பிரச்சனை இல்லை… நீ அதிகப்பிரசிங்கித்தனமா பேசுனதுதான் பிரச்சனை… உன் தாத்தாவுக்கு ஈகோ பிரச்சனை அவ்ளோதான்… அதை உடச்சுட்டா போதும்… உன் ப்ராப்ளம் சால்வ்ட்… அதை விட்டுட்டு தண்ணி அடிக்கிறாராம்… மறக்கிறாராம்” ரிஷி பேசிக் கொண்டிருக்கும் போதே…. விக்கி அவனையே இமைக்காமல் பார்த்தபடியே இருந்தவன்
“எப்படிடா மகியை மறந்த நீ… அவளை விட்டு எப்படிடா விலகின… உன்மையிலேயே அவ்ளோ ஈஸியாடா… என்னால முடியலடா… “ விக்கி சட்டென்று ரிஷியிடம் கேட்க…
தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்தும்… இந்தக் கேள்வி இன்னும் என்னிடம் ஏன்…. முகம் பாறாங்கல்லாக இறுக ஆரம்பித்திருந்தது ரிஷிக்கு
சட்டென்று நிமிர்ந்தவன்… விக்கியைப் பார்க்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்டவனாக… சில நிமிடம் மௌனித்தவன்
“காதல் கல்யாணம் இதெல்லாம் வாழ்க்கைல கண் துடைப்புனு… என் அப்பா மூலம் தெரிஞ்சுகிட்ட போது… நான் எப்படிடா காதலுக்குலாம் முக்கியத்துவம் கொடுப்பேன்… மகிகிட்ட இருந்து அப்போதே நான் தூரமா போய்ட்டேன்…”
விக்கி புரியாமல் பார்த்தபடி
“என்னடா சொல்ற… அப்பாவா…” விக்கி கேட்க…
“அதெல்லாம் ஒரு நாள் விளக்கமா சொல்றேன்…” என்று முடித்தவன்
“ஆனால் அதே காதல் கல்யாணம்லாம் எந்த அளவுக்கு முக்கியம்னு…. இப்போ ஒருத்தி என்கிட்ட காட்டிட்டு இருக்காடா… அதுனால உன் வலி வேதனை எந்த அளவுக்கு இருக்கும்னு எனக்கு புரியாமல் இருக்குமாடா” சொன்ன போது ரிஷியின் கண்களில் அவன் கண்மணி மட்டுமே
“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை… “ விக்கி பிடிவாதமாகக் கேட்க.... ரிஷி விக்கியை நேருக்கு நேராகப் பார்த்தபடி
”மகி நான் பார்த்து வளர்ந்த பொண்ணுடா… என் காதலை விட…. அவ நல்லா இருக்கனும்னுதான் முதல்ல தோணுச்சு…. தப்புதான்… இதுல என்னோட சுயநலமும் இருந்ததுதான் உண்மை…. மனசுக்கு பிடித்த பொண்ணை விட குடும்பம் முக்கியம்…. இன்னொரு வேதனையை என் மனசுக்குள்ள ஏத்திக்க முடியாதபடி சூழ்நிலை… ஒருவேளை என் அப்பா இருந்திருந்தால்… என் மாமாகிட்ட மகிளாவுக்காக போராடியிருப்பேனோ என்னவோ… ஆனால் போலிஸ் ஸ்டேஷன்ல அத்தனை பேர் முன்னாடியும் என்னைக் கூட்டிட்டுப் போ… உன் கூட வந்துர்றேன்னு கதறுனாளே… அப்படியே அங்கேயே அவளை தலை முழுகிட்டு வந்தேனே… எனக்காக மண மேடைல கடைசி நிமிசம் வரை காத்திருந்தாளே… அதை எல்லாம் மறக்கவே முடியாதுடா… ரொம்ப ரொம்ப தப்பு பண்ணிருக்கேன் தான்… ஆனால் முடிந்த அந்த விசயத்தையே நீ திரும்ப திரும்ப இழுக்கிற… பரவாயில்ல… ஆனால் ப்ளீஸ் இதுவே லாஸ்ட் டைமா இருக்கட்டும்… உனக்கு என்னென்ன தோணுதோ அதெல்லாம் கேட்டுத் தொலை ” ரிஷியும் அவனுக்கு பதில் கொடுக்கத் தயாராகி இருந்தான்
தன்னை எரிச்சலோடு பார்த்த ரிஷியிடம்
“சாரிடா மச்சான்… அர்ஜூன் சாரைப் பாரு… காதலிச்ச பொண்ணு… மேரேஜ் ஆகியிருச்சுனு தெரிஞ்சும்.. அந்தப் பொண்ணை மறக்க முடியாமல் தவிக்கிறாரே… அந்த பெயினை என்னால இன்னைக்கு உணர முடியுது… ஆனால் நீ… உண்மையிலேயே தெரியாமல் தாண்டா கேட்கிறேன்… நீ இப்போ கண்மணியை லவ் பண்ற அதெல்லாம் புரியுது…. ஆனால் நீ மகிளாவை லவ் பண்ணினது உண்மைதானே”
”இல்லை… காதல்னு நெனச்சுட்டு இருந்தேன்… அதுதான் உண்மை... எனக்கான தேவதையை பார்க்கலை அவ்ளோதான்… பார்த்த போதும் தெரியலை… நான் ஏண்டா இவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்கு அப்போ தெரியலைடா… ஆனால் அதோட முடிவு என் கண்மணி இதோ இங்க வந்தப்போ… தெரிஞ்சுகிட்டேன்… ” நெஞ்சைத் தொட்டுக் காட்டியவன்…
“மகிளா இப்போதும் எனக்கு முக்கியம் தான்… என் குடும்பம்னு ஒரு உலகத்துல அவ இப்போதும் இருக்காதான்… ஆனால் கண்மணி என்னோட உலகம் இல்லைடா… என் உயிர் மூச்சு… அது இருந்தால் தாண்டா மத்ததெல்லாம்… “
விக்கியும் அதற்கு மேல் அவனிடம் வேறு ஏதும் கேட்கவில்லை.... கண்களை மூடி அமர்ந்திருந்தவன்
“நான் ரிதன்யாவை மிஸ் பண்ணிருவேனான்னு பயமா இருக்குடா…” விக்கியின் குரலில் தடுமாற்றம் வந்திருக்க…
”என் குடும்பம் தேவையில்லேன்னு… ரிது கழுத்துல தாலி கட்ட ஒரு நிமிடம் போதாதுடா… ஆனால் என் தாத்தா மனசு எனக்கு மட்டும் தான் தெரியும்… இந்தக் குடும்பத்துல இருக்கிற ஒவ்வொரு உசுருக்கும் அவர் எவ்ளோ முக்கியத்துவம் கொடுப்பார்னு… அதை விட்டுட்டு அந்த பாசத்தை விட்டுட்டு என்னால வர முடியலடா… ஏன் அன்னைக்கு காப்பாத்துச்சே அந்த பொண்ணு மேல கூட ஏன் இவ்ளோ பாசம்… காரணம்… அவர் உயிரா மதிக்கிற குடும்பத்தை தனியாளா இருந்து காப்பாத்துக் கொடுத்ததுதான்… அவரோட ஆசிர்வாதம் இல்லாமல் நான் மேரேஜ் பண்ணி… நான் நல்லா வாழ்ந்துருவேனா…” பேசிக் கொண்டிருக்கும் போதே
ரிதன்யா இப்போது சாப்பாட்டோடு வந்திருக்க…
“பட்டினி கெடந்தால் மட்டும் … உங்க தாத்தா சம்மதிச்சுருவாங்களா விக்கி… ரெண்டு நாளா சாப்பிடாமல் சின்னப்பிள்ளை மாதிரி இருந்துட்டு வந்துருக்கீங்க… முதல்ல சாப்பிடுங்க… அப்போதான் மத்த எல்லாத்துக்கும் பெர்மிஷன்” என்றபடி அவன் அருகில் அமர்ந்தவள் விக்கியின் வாயில் உணவை ஊட்டி விட…
”ஏண்டி… இங்க ஒருத்தன் நான் இவ்ளோ வேதனைப் பட்டுட்டு இருக்கேன்… நீ என்னடான்னா இவ்ளோ கூலா பேசுற… பாருடா இவளை… அண்ணனுக்கு தப்பாத தங்கச்சி” என்றவனிடம்
“அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு… சொல்லப் போனால் என் தங்கச்சியா இருக்கப் போய் உனக்கு சாப்பாடு ஊட்றா… வேற ஒருத்தினா ஒரு லவ்வுக்கு சம்மதம் வாங்கிட்டு வர துப்பில்லை… நீயெல்லாம் எதுக்கு இவ்ளோ நாள் கெத்து காட்டிட்டு திருஞ்சேன்னு உன் மண்டை மேலேயே போட்ருப்பா”
விக்கி அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவனாக
“படுபாவி… இதுதான் போற போக்குல கோர்த்து விட்டுட்டு போறதா…” என நண்பனை முறைக்க….
“அண்ணா… நான் நாளைக்கு இவங்க தாத்தாவைப் பார்க்கப் போறேன்… “ ரிதன்யா சொல்ல… அதைக் கேட்ட விக்கிக்கு புரையேறி இருக்க… ரிஷி தங்கையை அர்த்தப் பார்வை பார்த்தபடி
“நீ வேண்டாம்… நான் போகிறேன்… இவனை உன்கிட்ட காட்டி மேரேஜ் பண்ணிக்கச் சொன்னது நான் தான்… அப்போ நான் போறதுதானே சரியா இருக்கும்… காலையில கிளம்பலாம்…. டேய் நீயும் என்கூட வர்ற…”
என எழுந்தவன்… மணியைப் பார்க்க… 11 மணியைக் காட்ட
“ ரிது கிளம்பலாமா” ரிதன்யாவைப் பார்க்க….
“அண்ணா… இவரை விட்டுட்டு எப்படின்னா… இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமே” ரிதன்யா கெஞ்சலோடு கேட்க…
வேறு வழி… தங்கையிடம் தலையாட்டி விட்டு வெளியே வந்தவன்… கண்மணிக்கு தகவல் சொல்ல..
”சாரிடி.. இப்போதும் உன்கிட்ட பெர்மிஷன் வாங்கலை… இன்ஃபர்மேஷன் தான்” ரிஷி குற்ற உணர்ச்சியோடு சொல்ல
“லூசா நீங்க… ரிது கூட இருந்து அவ வரும்போது அவளைக் கூட்டிட்டு வாங்க..” வழக்கமான அவனின் கண்மணியாக அவனவள் மாறி இருக்க…. அதே நேரம் அவனின் அலைபேசியில் அந்தச் செய்தி வந்திருந்தது…
கண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தவன்… உடனே அவளிடம் விடைபெற்றவனாக… அடுத்த நொடி சத்யாவுக்கு அழைத்தவன்
“சத்யா… அந்த ஆதவன் ஜாமின் கேஸ் நாளைக்கு கோர்ட்டுக்கு வருதாம்… கிட்டத்தட்ட அவங்க சைட் பாஸீட்டிவ் தான் ஆகுமாம்”
”சத்யா…. அந்த ஆதவன் இப்போ வெளிய வரக் கூடாது… ஏதாவது பண்ணனுமே… நாளைக்கு நான் வேற பாண்டிச்சேரி போறேன்...” எனும் போதே முதலில் வந்த எண்ணில் இருந்து மீண்டும் ஒரு தகவல்….
அதிர்ச்சியாக அந்தத் தகவலையேப் பார்த்தபடி இருக்க
“ஆர் கே…” சத்யா பல முறை அழைக்க…. ரிஷி நினைவுக்கு வந்தவனாக
“அந்த ஆதவன் என் மேலயும் விக்கி மேலயும் செம்ம கோபத்துல இருக்கான்னு தெரியும்… அவனுக்கு ரிதுவை பற்றி எப்படியோ தெரிஞ்சுருக்கு…. விக்கிக்கு எனக்கும் பொதுவான ஒரு ஆள்னா… ரிதன்யான்னு… அவளைத் தூக்க ஸ்கெட்ச் போட்டுட்டு இருக்கானாம்…”
சத்யாவிடம் பேசிக் கொண்டே… ரிஷியின் மூளை… அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பித்திருந்தது…
வேகமாக… ஆதவன் வழக்கில் அவனுக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞரின் எண்களை அழுத்த ஆரம்பித்தவன்… அவரையும் தங்கள் அழைப்பில் இணைத்தவன்…. அடுத்த அரை மணி நேரத்தில் ஆதவன் இப்போதைக்கு வெளியே வராமல் இருக்க… என்னென்ன தேவையோ… அதையெல்லாம் விவாதித்து முடித்தும் இருந்தான்…
சத்யாவும்… ரிஷியும் மீண்டும் தனியே அலைபேசியில்…
”ஆர் கே… ஆதவன் கூட்டத்தில யாராவது ஸ்பை இருக்காங்களா என்ன… அன்னைக்கு கண்மணி பாப்பாவை கூட கரெக்டா காப்பாத்துனீங்க… இப்போ இன்னைக்கும்”
ரிஷி அமைதியாக இருக்க
“எனக்குக் கூட தெரியக் கூடாதா ஆர் கே…” சத்யாவின் குரலில் வருத்தம் தோய்ந்திருக்க…
அப்போதும் ரிஷி பதில் சொல்லவில்லை…
ஆனால் சத்யாவே ஒரு கட்டத்தில் ஊகித்தவனாக…
“ஆர் கே… மருது மாதிரி ஆளுங்க மேல எல்லாம் நம்பிக்கை வைக்காதீங்க… அவனெல்லாம் முதுகுல குத்துற சுயநலவாதி…. அதை விட அவன் ஒரு கேவலமான ஜந்து… அவனை நம்புறதுன்றது… ரெண்டு பக்கமும் கைப்பிடியே இல்லாத கத்தியை உபயோகிக்கிற மாதிரி… நம்மளையே அழிச்சுரும் ரிஷி… “
இப்போதும் ரிஷி காதிலேயே வாங்காமல் இருப்பது போல இருக்க
”கார்லா விசயத்தை மறந்துட்டீங்களா… துரையை போட்டது மாதிரி இவனையும் போட்டுத்தள்ள எவ்ளோ நேரம் ஆகும்… ஏன் அதை பண்ண மாட்டேங்கறீங்க…. இந்த மாதிரி ஆளுங்களோட எல்லாம் சகவாசம் வச்சுருக்கீங்கன்னு தெரிந்தால் கண்மணி மேடம் கண்டிப்பா உங்க மேல கோபப்படுவாங்க”
அடுத்த நிமிடம் சத்யாவின் அலைபேசி இணைப்பைத் துண்டித்தும் இருந்தான்…. விக்கி வீட்டின் வெளிப்புறப் படிக்கட்டில் வெறித்தபடியே அமர்ந்திருந்தவன் எத்தனை மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ…. அவனுக்கேத் தெரியவில்லை
அவன் எண்ணமெல்லாம் மருதுவிடம் மட்டுமே… அன்று அவன் பேசிய வார்த்தைகளில் மட்டுமே
”ஆயிரம் பேர் என் மணியோட அன்பை சம்பாதித்தாலும்… அவ ஆயிரம் பேரை கண்ட்ரோல் பண்ணினாலும்…. நான் நான் மட்டும் தான்… என்கிட்ட மட்டும் தான் அவ அடங்கிப் போவா… என் வார்த்தைக்கு மட்டும் தான் கட்டுப்படுவா… காட்டட்டுமா… அன்னைக்கும் சரி இன்னைக்கும் அப்படித்தான் இருப்பா… “ திமிராய் ஒலித்த மருதுவின் வார்த்தைகள் இப்போதும் அவன் காதுகளில் ஒலிக்க
“இந்த உலகத்தில நான் சாமிக்கு அடுத்து ஒருத்தனை நெனச்சுருந்தேன்னா அது மருதுதான் ரிஷி… அவ்ளோ நம்பினேன்… அவனுக்காக என் உசுரைக் கொடுன்னு கேட்ருந்தால் கூட தயங்காமல் கொடுத்திருப்பேன்… இன்னுமே அவனை அப்படி ஒரு அரக்கனா என்னால நினைக்க முடியல… அந்த அளவுக்கு என்கிட்ட நடந்துருக்கான் ரிஷி… என்னைப் பாதுகாத்தான்… ஆனால் அவன்தான் என்னை மனசளவுல கொன்னதும்… இப்போ நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறது என்னன்னா…. அவனை மறுபடியும் நான் பார்க்கக் கூடாது… பார்க்கவே கூடாது… எனக்கு பயமா இருக்கு ரிஷி… அவன் என்கிட்ட ஒரு வார்த்தை பாசமா பேசினால்.... பேசினால் என்ன பார்த்தால் கூட அவன் செய்த தப்பெல்லாம் மறந்துட்டு அவனை மன்னிச்சுருவேனோன்னு ” ஆதங்கம் ஆவேசம் நடுக்கம் என அனைத்தும் கலந்த மனைவியின் குரலும் அடுத்து ஒலிக்கத்தான் செய்தது…
உங்க கதைய படிச்சுகிட்டு இருக்கேன் இப்போது.. ரொம்ப super. கிட்ட தட்ட முடிக்க போறேன்.. இந்த episode ல நீங்க மருதுவ பற்றி சொல்றீங்க.. பின் வரும் episode களிலும் மருது spy வேல பாக்குறான்.. ஆனா மருதுவும் ரிஷியும் எப்போ meet பண்றாங்க? எப்படி அவன் spy Vela பாக்க othukkuraan? நான் ஏதாவது episode miss செய்து விட்டேனா?