அத்தியாயம் 78-3
பவித்ரவிகாஸ்…வழக்கம் போல… அதிகாலை பரபரப்பில் இருக்க…
நாராயண குருக்கள்-வைதேகி தம்பதியினரும் அவர்களின் வழக்கமான வைகறைப் பொழுதிலேயே எழுந்தபடி….
முந்தைய நாள் பெரும் காற்றில்… தோட்டத்தில் சேதாரமான மரங்களை எல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருக்க… அவர்களின் கண்களில் பட்டது அந்த மாமரம்...
அவர்கள் மகளுக்கு மிகப்பிடித்தமான அந்த மாமரத்தின் கிளைகளும் பழங்களோடு சேர்ந்து காற்றில் விழுந்திருக்க … மகள் ஞாபகத்தில் கண்கள் பனித்தது நாராயண குருக்களுக்கு
“பவிக்கு இந்த மரம்… இந்த மரப் பழம்னா அவ்ளோ உயிர்…” என்ற தன் கணவரின் வார்த்தைகளைக் கேட்ட வைதேகி… புன்னகைத்தபடி…
“அதுதான் அவ வீட்ல இதே மரத்தை வளர்த்து விட்டு போயிருக்காளே… இதே மரத்தோட செடிதான் போல… எப்போ எடுத்துட்டு போனான்னு தெரியலை…” வைதேகி… சிலாகித்து சொல்ல…
“அப்படியா… நான் கவனிக்கலை… “ என்றவர்…
“நம்ம பொண்ணுக்கு அப்படி என்னடி காதல்… அவன் மேல… அந்த ஓட்டு வீட்ல அவளோட வாழ்க்கையை பணயம் வச்சு முடிச்சுகிட்டா… இப்போ என் பேத்தியும்… ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு… ரிஷி அங்க இருந்து அவளை கூப்பிட்டுட்டு வந்துருவான்… எனக்கு அது போதும்” என்ற போதே…
அர்ஜுன் அவர்கள் முன் வந்து நிற்க… இரவெல்லாம் அவன் உறங்கவில்லை என்பது அவன் கண் சிவப்பிலேயே தெரிய… அதை விட அவன் முகம்… அது களையிழந்து… தொங்கிப் போயிருக்க…
”ஏண்டா இப்படி இருக்க… இதெல்லாம் என்னடா” வைதேகியும்…. நாராயண குருக்களும்… அர்ஜூனைப் பார்த்து புலம்ப…
“ப்ச்ச்… நான் நல்லாத்தான் இருக்கேன்… தென்… நெக்ஸ்ட் வீக் நான் கிளம்புறேன்… பார்த்திபனும் உங்க பேத்தியும் இனி எல்லாம் பார்த்துப்பாங்க…”
“என்னடா அர்ஜூன்… திடீர்னு.. இப்போ என்ன… நெக்ஸ்ட் மன்ந்த்தானே டிக்கெட்… இடையிலேயே என்ன” என அவனின் தாத்தா கேட்க…
”இனி எதுக்கு தாத்தா நான் இங்க இருக்கனும்… இந்தியா வரனும்…. எல்லாமே முடிந்த மாதிரி ஃபீல்… “ அர்ஜூன் குரல் தெளிவின்றி சுரத்தின்றி ஒலிக்க…
“நாங்க வேண்டாமா…” வைதேகியின் நெகிழ்ந்த குரலில்… அர்ஜூன் வேறு புறம் திரும்பியவன்
“நான் உங்களைச் சந்தோசப்படுத்தலையே… உங்க பேத்தியை இங்க… என்.. மனைவியா கூட்டிட்டு வருவேன்னு… இந்த வீட்டு இளவரசியா வந்து நிறுத்துவேன்னு உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிய… நிறைவேற்ற முடியாமல் அவளை தொலச்சுட்டேனே… நான் தான் உங்க பேரனுக்குரிய தகுதிய இழந்துட்டேன்… நான் இனி எதுக்கு உங்களுக்கு”
”டேய்… வாய மூடறியா… யார் வந்தாலும்… போனாலும்… நீ தாண்டா எங்களுக்கு முக்கியம்… என் பொண்ணு போனதில இருந்து நீதானேடா எங்களுக்கு எல்லா விதத்திலயும் ஆறுதலா இருந்த… உன் அப்பா அம்மாவை விட… அவங்க கூட இருந்தத விட… எங்க கூடத்தானடா இருந்தா…. இப்போ என்னடா ஆச்சு… நான் தான் எல்லாத்துக்கும் காரணம்… என் பேராசை… என் பேத்தி எங்க வாரிசா… எங்களுக்கு முழுசா கிடைக்கனும்ன்ற பேராசைல… உன் வாழ்க்கையை அழிச்சுட்டோமே…” நாராயண குருக்கள் புலம்ப ஆரம்பித்திருக்க…
“தாத்தா… நான் கொஞ்சம் பேசனும்… என்னைப் பேச விடறேளா ரெண்டும் பேரும்” அர்ஜூன் குரலை உயர்த்த… அந்த வயதான தம்பதியர் இருவரும்… அமைதி ஆகி இருந்தனர் இப்போது…
பேரனை பார்த்த பின்… அவன் கவலையால் துவளுவதைப் பார்த்தபின்… மனம் குன்ற ஆரம்பிக்க… அதற்கு மேல் இருவராலும் அங்கு நிற்க முடியவில்லை….
அருகில் இருந்த ஓய்வெடுக்கும் இடத்தில் போய் இருவருமாக அமர்ந்தபடி பேரனைப் பார்க்க
”இந்த வீக்ல டிக்கெட் போடப் போறேன்… சில விசயங்கள் பெண்டிங்ல இருக்கு… அதெல்லாம் சரி பண்ணிட்டு… உங்க பேத்திகிட்ட ஒப்படைச்சுட்டு கிளம்பிருவேன்… “ என்றவனிடம் அவன் தாத்தா மீண்டும் ஏதோ பேசப் போக…
”தாத்தா… என்னை விட்ருங்க… ” என்றபடி தன் கையில் இருந்த காகிதங்களை வெறித்தவன்…
“எவனுக்குமே இந்த நிலைமை வரக்கூடாது…” சொன்ன போதே… அர்ஜூன் குரலில் வருத்தம் கோபம் இயலாமை ஏமாற்றம்… என அனைத்தும் எதிரொலித்தது
அங்கிருந்த மேஜையின் மேல் அந்தக் காகிதங்களை வைத்தவன்…
“உங்க பேத்தியோட மெடிக்கல் ரிப்போர்ட்…“ என்று சில நிமிடம் நிறுத்தியவன்… குரலில் இலேசான தடுமாற்றம்…. சொல்ல முடியவில்லைதான்… ஆனாலும் சொல்லியாக வேண்டிய கட்டாயம்…
“கைக்கு அடிபட்டதுக்கான ரிப்போர்ட் இல்லை… அவளோட ப்ரெக்னன்ஸி ரிப்போர்ட்” அவன் சொல்லி முடிக்க வில்லை… வைதேகியும் நாராயண குருக்களும்… ஆவலோடு்ம்…. ஆசையோடும் அதை எடுத்துப் பார்க்க…
அர்ஜூன்… சிரித்தான் விரக்தியாக…
“பவி அத்தை வந்து… சொன்னப்போ… இதே சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் காட்டி இருக்கலாம்ல பாட்டி… ”
“அப்போ கருவை அழிக்க வான்னு அவங்கள கட்டாயப்படுத்துனீங்க… இன்னைக்கு… நீங்க அழிக்க நெனச்ச கருவுக்குள்ள இன்னொரு உயிர்…” பெருமூச்சு விட்டவனுக்குள்…
“நீ உன்னை அசிங்கப்படுத்திக்கலை…. அவளை அசிங்கப்படுத்துற”
காதில் ரிஷி சொன்ன வார்த்தைகள் இப்போதும் ஒலிக்க… இயலாமையுடன் அங்கிருந்த தூணில் தன் கையை ஓங்கிக் குத்துக் கொண்டவன்….
“இப்போ கூட… என்னால அவள அவன் பொண்டாட்டியா நினைக்க முடியலை தாத்தா… அத்தையை தெரியாமல் தவற விட்டுட்டோம்… அது நம்ம தப்பில்ல… ஆனால் கண்மணியை தெரிந்தே விட்டுட்டோம்… அவ பிறந்ததுல இருந்தே…” சொன்னவனின் குரலில் ஆத்திரம் மட்டுமே… தன்னை அடக்கிக் கொண்டவனாக…
“ஹ்ம்ம்… இனி பேசி என்ன ஆகப் போகுது… அதெல்லாம் விடுங்க… அவகிட்ட இதை சொல்லாதீங்க அவளுக்கா தெரிய வரும் போது தெரியட்டும்… டாக்டருக்கு சந்தேகம் வந்துதான் ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு… அவளுக்கு மெடிசின் ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்காங்க… வேற எங்கேயாவது பார்த்திருந்தால்… இந்த கரு இருந்திருக்குமா இல்லையான்னு தெரியல…. நம்ம ஹாஸ்பிட்டல்லன்றதுனால… எல்லாமே கவனமா பார்த்திருக்காங்க…… ரொம்ப யர்லி ஸ்டேஜ்… 15 டேஸ்னு சொன்னாங்க… அதுனாலதான் இப்போ வேண்டாம்னு சொல்றேன்… “
என்றவன் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட நிற்க வில்லை… அவன் சென்ற விதம். முதியவர்கள் இருவருக்கும் பெரிய வருத்தத்தைக் கொண்டு வந்திருக்க… வைதேகிதான் முதலில் சமாளித்தவராக…
“சீக்கிரம் இவனுக்குனு ஒரு பொண்ணைப் பார்க்கனும்ங்க…”
”மேரேஜுக்கு சம்மதம் சொல்வானா..” கவலையோடு கேட்டவரிடம்….
“கண்மணி… அவ குழந்தைனு…. பார்த்தப்பிறகு … கண்டிப்பா மாறுவான்… அவனுக்குனு ஒருத்தி இனியா பொறக்கப் போறா… கண்மணி இல்லைனு தெரிஞ்சுகிட்டா போதும்… மத்ததெல்லாம் அவனுக்கு தானா நடக்கும்” என்றபடி… அர்ஜூன் பேச்சை விடுத்து… தன்பேத்தியைப் பற்றி பேச ஆரம்பித்தார்…
“என் பேத்திய இப்போதே பார்க்கனும் போல இருக்கும்… அவள நம்ம கூட வச்சுக்கனும் போல இருக்கு… தங்கத்தட்டுல வைத்து தாங்கனும் போல இருக்கு… நம்ம பொண்ணுக்கு செஞ்சு பார்க்க ஆசைப்பட்டதெல்லாம் என் பேத்திக்கு செய்யனும்… “ என சந்தோச வானில் பறக்க ஆரம்பித்த வைதேகியிடம்
“ஆனா நம்ம ரிஷி விடனுமே…… பார்ப்போம்… இவன் வேற நம்மகிட்ட சொல்லிட்டு… அதை... சொல்லக்கூடாதுன்னு வேற சொல்லிட்டு போறான் … சொல்லாமலே இருந்துருக்கலாமே” தன் பேரனை அலுத்துக் கொள்ள
“நாம அவளப் பார்த்துக்கனும் தான்… நம்மகிட்ட சொல்லிட்டு போகிறான்… அது புரியலையா உங்களுக்கு… “ என்றவாறு
“இப்போதே என் பேத்திக்கிட்ட பேசனும் போல இருக்கே… என் பேத்திக்கு பேசவா… ” என்ற வைதேகியை முறைத்தவர்…
“ஆடாம இரு… ஏற்கனவே அவளுக்கும் ரிஷிக்கும் பிரச்சனை… அது என்ன ஆச்சுனு தெரியலை… ரிஷி ஃப்ரெண்ட் விக்கி போன் போட்டு அவங்க சமாதானம் ஆகிட்டாங்க்னு சொன்னதோட எல்லோரும் வந்துட்டோம்… பொறு… அவங்க ரெண்டு பேரும் நார்மல் ஆகட்டும்… அவங்களே சேர்ந்து வந்து உன் கிட்ட வந்து சொல்வாங்க… இப்போ போனை போட்டு தொல்லை பண்ணாதா… கொழந்தை தூங்கட்டும்… நாளைக்கு அங்கேயேப் போய்ப் பார்த்துட்டு வரலாம்…” என நாராயண குருக்கள் சொல்ல… வைதேகி ஆச்சரியமாகப் பார்க்க…
”என் பேத்தி புகுந்த வீடு…. ரிஷி வீடு…” என திருத்த… வைதேகி புன்னகைத்தபடி…கணவனை சந்தோசமாகப் பார்த்தார்…
----
’கண்மணி’ இல்லம்…
ரிஷி… விக்கியை அனுப்பி விட்டு… மேலே மாடிக்கு ஏறி வர.. கண்மணியும் அதற்குள்… படுக்கையை தயார் படுத்தி வைத்து விட்டு… அவனுக்கு மாற்றுடையை எடுத்து வைத்துக் காத்திருக்க…
உள்ளே வந்தவன்…. அவளைப் பார்த்தபடி… அறையைப் பார்த்தபடி சில நிமிடம் நிற்க… அவளோ… அவனிடம் ஏதும் பேசாமல்.. அவனிடம் அவனுக்கான மாற்றுடையை நீட்ட…
“இதெல்லாம் உன்னை யார் பண்ணச் சொன்னா… புடவை மாத்தலையா..” என்றபடியே அவள் கையில் இருந்த அவனுக்கான மாற்றுடைய வாங்க
”ஒரு கைய வச்சுட்டு… என்ன பண்ண… “ கடுப்பாகக் கேட்க…
“அப்போ இதெல்லாம் பண்ண முடிஞ்சதா… என்ன…” விரித்து வைத்திருந்த படுக்கையைச் சுட்டிக் காட்டி அவளைக் கேட்க…
”இப்போ என்ன… பண்ணியிருக்கக் கூடாதா... தப்புதான்.... அதைக் கலச்சு விட்றேன்…” என வேகமாக குனிந்து சரிபடுத்திய படுக்கையை கலைக்கப் போக…
அவளின் குழந்தைத் தனமான… கோபத்தை ரசித்தபடியே… அவள் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தியவனிடம்… கண்மணி இப்போதும் உம்மென்று இருக்க… இப்போது என்ன கோபம் அவனுக்கும் தெரியவில்லை… ஆனாலும் சமாளிக்க வேண்டுமே…
“இப்போ எதுக்குடி… மூஞ்சியக் காட்ற… புடவைதானே மாத்தனும்…. நான் எதுக்கு இருக்கேன்” என்று ரிஷி அவளின் அருகில் வர…. அவனைத் கை வைத்து தள்ளிவிட்டவள்
“என் பாட்டி வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டீங்கள்ள… சிரிச்சுட்டு இருப்பாங்களா என்ன… இதெல்லாம் யோசிச்சுதான் என் பாட்டி என்னை அங்க கூட்டிட்டுப் போறேன்னு கேட்டாங்க… எல்லா பக்கமும் இருந்து யோசிக்கனும் ரிஷிக்கண்ணா” என்றவளிடம்…
“ரிதன்யாவை விடு… என் அம்மா உனக்குப் பார்க்க மாட்டாங்களா கண்மணி…” ரிஷியின் குரல் கனிந்து வர… கண்மணியும் அமைதியாக இருக்க… அவளைத் தன்னோடு அணைத்தக் கொள்ள… இப்போது கண்மணி ரிஷியைத் தள்ளவி்ல்லை… அவளுக்கும் அவன் அணைப்பு தேவைப்பட… அவன் மார்பில் சாய… இன்னும் அதிகமாக அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டவனின் அணைப்பை... அனுபவித்தபடியே...
“பார்ப்பாங்க ரிஷி… ஆனால் எனக்கு ஒரு மாதிரி இருக்கும்… பாட்டிகிட்டயும் அப்படித்தான்… ஆனாலும்” என இழுக்கும் போதே
“எனக்குத் தெரியும்டி… நீ யார்கிட்டயும் ஒட்ட மாட்டேன்னு எனக்குத் தெரியும்… உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா” எனும் போதே
“அப்படியா… அப்புறம்… வேற என்ன என்னலாம் தெரியும்” கண்மணி குறும்ப்போடு இதழ் சிரித்துக் கேட்க…
”உனக்கே தெரியாதது கூட… சொல்லவா…” கண் சிமிட்டியவன்…. அவள் அருகே குனிந்து
“கொஞ்சம் வெயிட் பண்ணு… நம்ம ரெண்டு பேர்க்கும் இடையில இவ்ளோ இடைவெளி இருக்கு…. இந்த கேப் கூட இல்லாத டைம் வருமே… உன் மூச்சுக் காத்துக்கு கூட என்கிட்ட கெஞ்சுவேல்ல.. அப்போ சொல்றேன்…“ காதுமடல்களில் மீசை உரசப் பேசியவனின் கிசுகிசுப்பான வார்த்தைகளில்…. அவள் மூக்கு நுனி சிவக்க…
இப்போது அவளை விட்டு தள்ளி நின்றவன்… அவளைச் பார்த்து… ரசித்தபடியே.. சிரித்தபடியே… குளியலறைக்குச் சென்றவன்… திரும்பி வந்த போதோ… கண்மணி படுக்கையில் கண் மூடி படுத்திருக்க… அதிர்ந்தவனாக
“தூங்கிட்டாளா…” யோசித்தபடியே உடை மாற்றியவன்… அவள் அருகே சென்று அமர்ந்தவன்…
“ஓய் ரவுடி” காதோரம் குனிந்து மோனகுரலில் அவளிடம் வம்பிழுக்க…
“ஷ்ஷ்…. தூங்குங்க….” என்று கண் விழிக்காமலேயே ரிஷிக்கு இடம் கொடுத்து தள்ளிப்படுக்க….
“என்னது தூங்கவா…” அதிர்வலைகளோடு அவன் கேட்ட விதத்தில் இப்போது துணுக்குற்று கண்விழித்தவள்…
“பின்ன என்ன பண்ணச் சொல்றீங்க… மணி இப்போ என்ன… இன்னும் கொஞ்ச நேரத்துல விடியப் போகுது ரிஷி…” கணவன் பார்வையின் அர்த்தம் புரிந்து… அவனைப் புரிந்து கொள்ளமுடியாமல் கேட்க…
“மணி என்னன்னு எனக்கும் தெரியும்… விடியப்போகுதுன்னு எனக்கும் தெரியும்” என்றவன்… அவள் புறம் குனிந்து இரு புறமும் கைகளை வைத்து… அவளைத் தன்வசப்படுத்த… கண்மணியின் விழிகளோ… விரிந்தன…
”தூக்கம் வருது ரிஷி… விளையாடாதீங்க ரிஷி “ என்று அவனை விட்டு வேகமாக மெத்தையின் அந்த ஓரம் நழுவப் போனவளை… அடுத்த நொடி… கைகளால் கைது செய்தவனிடம் இருந்து… தப்பிக்க வழி இல்லாமல்… அதைவிட முயலாமல்… கெஞ்சலான பார்வை பார்க்க…
“என்னடி பார்க்கிற… இப்போ இப்படி பார்க்கிறவ… நிமிசத்தை விட்றலாம்… 3 மணி நேரம்… என்னைப் பார்க்காமலேயே தவிக்க விட்டேல்ல… அதுக்கு தண்டனை வேண்டாம்… அவ்ளோ ஈஸியா விட்ருவேனா” அவன் கைகள் அவள் இடையில் அழுத்தமாக பதிய… அது அவன் கோபத்தைக் காட்டியதா… இல்லை அவன் தவிப்பைக் காட்டியதா… தெரியவில்லை… அழுத்தம் மட்டுமே உணர
“அதுக்கு… அதெல்லாம் முடியாது… நேரம் காலம் கிடையாதா ரிஷிக்கண்ணா” செல்லமாக மிரட்ட…
அவள் மிரட்டல் எல்லாம்… அவன் மதித்தால் தானே… தன் பிடிவாதத்திலேயே இருந்தவன்… அவளிடம் பிடிவாதத்தை காட்ட ஆரம்பித்திருந்தான்…
”என்னை ஏண்டி பார்க்காம இருந்த… மனசு ஆறவே மாட்டேங்குது… எப்போதுமே உன் பார்வை என்கிட்ட மட்டும் தான் இருக்கும்…. அது இன்னைக்கு ஏன் எனக்குத் தராமல் போன… செத்துப் போயிட்டேன்… ” இறுக அணைத்தபடி… அவளிடம் கேட்க…
“நான் மிஸ் பண்ண… நீ என்னைத் தள்ளி வச்ச அந்த நிமிடங்கள்… உனக்கு வேணும்னா சாதாரணமா தெரியலாம்…எனக்கு அப்படி இல்லை… ஏண்டி அப்படி பண்ணின… “ வெறித்தனமாக அவளை உலுக்க்கியவனைப் பார்த்து கண்மணிக்குள் பய அலைகள் வந்திருக்க…
“ரிஷி… என்னை மறுபடியும் பயமுறுத்தாதீங்க..” கண்மணியின் குரலில்… நடுக்கம் வந்திருக்க… அவள் குரலின் மாறுதல் அவனை சற்று நிதானிக்கச் செய்தாலும்… அவனால் அவனை மாற்றிக் கொள்ள முடியவில்லை..
“நீ என்னை ஏன் பார்க்காமல் இருந்த… என்னால அந்த நினைப்பை விட்டு வெளிய வரவே முடியல கண்மணி… ஒரு மாதிரி இருக்கு… இப்போ நினைத்தாலும்…. தொட்டுப் பாரு” என அவள் கையைத் அவன் மார்பில் வைத்து காண்பிக்க… அதன் இதயத்தின் துடிப்பு… பல மடங்கு வேகத்தில் இருக்க…
“நீ இல்லேன்னா… ஒண்ணுமே இல்லடி நான்… நான் ஏன் இப்படி ஆனேன்னு எனக்குத் தெரியல… அதைப் பற்றி எனக்குக் கவலையும் இல்லை… எனக்கு நீ… அதை விட… நீ எனக்காக இருக்கனும்… உன்னோட ரிஷிக்கண்ணாவா என்னை எப்போதுமே உன் கைச்சிறைக்குள்ள உன் அன்புக்கு அடிமையா இருக்கனும்… என்னை பொண்டாட்டிதாசன்… அடிமை… இப்படி… யார் என்ன சொன்னாலும் பராயில்லை…” என்றவன்….
“நீ என்ன சொன்ன… என்னைச் எல்லா நேரமும் சகிச்சுக்க முடியாதா...” அவள் வெற்றிடையில் படர்ந்திருந்த கரங்களினால் அவளை முரட்டுத்தனமாக தன் புறம் இழுத்து அவன் மேல் விழ வைத்து பின்… அழுத்தமாக அவள் இதழில் தன் முத்திரையை வைத்து நிமிர்ந்தவன்…
“பிடிக்குதோ இல்லையோ…. என்னைச் சகிச்சுதான் ஆகனும்… “ மீண்டும் அவளின் இதழிடம் வன்மையாக அவன் உரிமையைக் காட்டியவனிடம் கண்கள் அதிர்ந்து பார்க்க… அப்போதும் மாறாமல்… அவளைப் பார்த்தபடியே… அவனின் அணைப்பு இன்னும் அதிகமாக இறுக…
அவன் அணைப்பின் வேகமும்… ஆக்ரோஷமும்… அவளுக்கு மூச்சு முட்ட…
“ரிஷி…” என்றாள் உடலளவில் அவனை ஏற்க முடியாமல்…
“டயர்டா இருக்கு… எ… என்னால முடியாது… ” திக்கித் திணறிச் சொன்னவளை நிமிர்ந்து பார்க்க.. அவன் ஏக்கப் பார்வையைச் சந்திக்கும் திராணி இல்லாமல் வேறு புறம் திரும்ப… இப்போதும் விடவில்லை அவன்…
வலுக்கட்டாயமாக அவள் முகம் பற்றி திருப்பியவன்…
“அப்புறம் இன்னொன்னு சொன்னியே… அது என்ன…” அவளிடமே கேட்க… தெரியாமல் கண்மணி விழிக்க…
“மறந்துருச்சா… எனக்கும் ஞாபகம் இருக்கு கண்மணி… என்னன்னு சொல்லவா”
“மனசளவிலா… இல்லை உடலளவிலா… இந்தச் சமாதானம்”
“கேட்டதானே… பதில் வேணுமா” என்றபடி… அவள் இடையில் இருந்த அவன் கரங்கள் தேகங்களில் தடம் மாற ஆரம்பித்து… உணர்வுளோடு விளையாட ஆரம்பிக்க… கண்மணி… உணர்வுகளின் பிடியில் ஆட்கொள்ளப்பட்டு.. தடுமாறி… பின் தவிக்க ஆரம்பிக்க… கணப் பொழுதில்… நொடியில் கணவனாக சமாதானப்படுத்தி… அவளைத் தேற்றியவன்… மூச்சிறைத்தபடி…
“உன்னை… எல்லா விதத்திலயும் மனதோ.. உடலோ… நான் மட்டும் தான் சமாதானப்படுத்த முடியும்.. அம்மு… எல்லாம் தெரிந்து ஏன் அப்படி கேட்டடி” ரிஷி இப்போதும் அவளை அணைத்திருந்தான் தான்… அவனிடம் அழுத்தமில்லை … மாறாக கண்மணி அவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்திருக்க….
”சாரி…” என்றான் அவளின் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து… எதற்கென்றே சொல்லாமல்
“இது எதுக்கு… லேப்டாப் உடச்சதுக்கா” பதிலுக்கு கண்மணி அவன் மார்பில் இதழ் பதித்து நக்கலாகக் கேட்க… மனம் விட்டு சிரித்தவன்…
“அது ஒரு ஓரமா இருந்த கடுப்பு… ரொம்ப நாளா இருந்துச்சு…. வாய்ப்பு கெடச்சது காட்டிட்டேன்” என்ற போதே எழுந்து அமர்ந்திருந்த கண்மணி… அவன் சட்டைக்காலரை பிடித்து இழுத்து… அவனையும் தன் அருகில் அமர வைத்தபடி… முறைக்க… அவனோ கூலாக
“அப்படித்தான்… உயிருள்ள எல்லா விசயங்களும்… நபர்களும்… என் பின்னால இருக்காங்க… ஆனால் இந்த கற்பனை கதாபாத்திரங்கள்… என்னை விட முழுசா ஆக்கிரமிக்கிறாங்கன்ற கோபம்” ரிஷியும் உண்மையை ஒத்துக் கொள்ள…
மூக்கைப் பிடித்து திருகியவள்…
“இது எப்படி தெரியுமா இருக்கு… ஆப்பிள் டூ ஆரஞ்ச் கம்பேரிஷன் மாதிரி இருக்கு ரிஷிக்கண்ணா… போட்டி போட ஒரு நியாயம் வேண்டாமா… “ என்று ஆரம்பித்தவள்…
“அப்போ நான் எழுதுறது பிடிக்கலையா…” அவள் முகம் வருத்தத்தில் கூம்ப….
“ஓய்… உடனே முகத்தை தூக்கி வச்சுக்காத… நீ ஏன் எழுதுறேன்னு தெரிந்தும் அதைச் சொல்வேனா… எழுது… ஆனால் பிரையாரிட்டி எனக்குத்தான் அது நீ எழுதுற கதையா இருந்தாலும்…. வேற எதுவா இருந்தாலும்... அப்புறம்… லேப்டாப்பை மடியில வச்சு எழுதாத… லேட் நைட் எழுதாத…” என ஆரம்பித்தவன்… வரிசையாக அவள் எழுதும் முறைகளை குறை சொல்ல ஆரம்பித்திருக்க…
அவன் வாயை மூடியவள்…
“நான் கதையே எழுதலை போதுமா… உங்க அட்வைஸ் மழையை நிறுத்தறீங்களா…” என்று வாய் சொன்னாலும்… ஏன் அவள் எழுத ஆரம்பித்தாள்… அந்த நாட்களுக்குச் சென்றது…
‘நீ எமோஷனலை லெட் அவுட் பண்ணனும் கண்மணி… அதை மனசுக்குள்ளேயே வச்சுக்கிறதுனாலதான் உன்னால இந்த விசயங்கள்ல இருந்து… வெளிய வர முடியலை… உன்னால காட்ட முடியாத உணர்வுகளை… உன் எழுத்துல… வார்த்தைகள்ள காட்டு… உனக்கு நல்ல ஒரு சேஞ்ச் கொடுக்கும்… ” நினைத்த போதே… அவள் தான்… அந்தக் கண்மணி் தான்… இன்று தன் கணவனுக்காக… தன் ரிஷிக்கண்ணாவுக்காக… உணர்வுப் போராட்டம் நடத்தினாள்… கண்கள் கலங்க ஆரம்பிக்க…
“ரிஷி… ஐ லவ் யூ… “ அவனை இழுத்து அவன் உதடுகளில் தன் இதழை பதிய வைத்தவளின் அன்பில்.. உணர்வுக் கொந்தளிப்பில்.. சிலிர்த்து அவளுக்குள் அடங்க…
அவனை விட்டு இதழை மட்டும் பிரித்துக் கொண்டவள் அதே நெருக்கத்தோடு…
“எனக்கு என்னை விட… நீங்க முக்கியம் ரிஷி… ஏ ஏன் ரிஷி… நான் இப்படி ஆகிட்டேன்… “
ரிஷியின் முகத்திலோ வழக்கமான பெருமிதப் புன்னகை… கூடுதலாக கள்ளமும் அதில் சேர்ந்திருக்க
அவளை விட்டு விலகி… படுத்தவன்… அவளையும் தன்னோடு சேர்த்து இழுத்து படுக்க வைத்தவன்… அவள் புறம் திரும்பி பார்த்தபடி… தன்னைப் பார்க்கும் படி அவள் முகத்தைத் திருப்பியவன்… அவளின் பார்வையை ரசித்தபடியே…. அவள் கண்களோடு தன் கண்களை உறவாட விட்டவன்
“ஏன்னு சொல்லவா..” கரகரத்த அவன் குரலில்… கண்மணி இமை உயர்த்த
அவன் சுட்டு விரலோ… கண்மணியின் முகத்தில் தன் ஊர்வலத்தை தொடங்கி இருக்க…
”இந்த கண் இருக்குத்தே… அது என்னோடது… அதில இருக்கிற பார்வை எனக்கே எனக்கானது… அடுத்து… “ ரிஷியின் வழக்கமான பிதற்றல் ஆரம்பித்திருக்க
சிரித்த கண்மணி… ஒரு கையால் அவனைக் கட்டிக் கொண்டபடி
‘இந்த மூக்கு… அதில இருக்கிற சிவப்பு… இந்தக் கன்னம்… அதுல விழற கன்னக்குழி.. இதுதானே இப்டியே போகும்… கேட்டு கேடு சலிச்சுட்டேன் ரிஷி... தூங்குங்க” ரிஷியை உறங்க வைக்க கண்மணி முயல… ரிஷியும் சிரித்தபடி…
“டீச்சரம்மா… இந்தப்பாடம் மட்டும் தான் தினமும் சொல்ல வைக்கிறீங்க…” என்றபடியே… அவளை அணைத்தபடியே… தூங்க முயற்சிக்க ஆரம்பித்தான் தான்… ஆனாலும் அவனால் உறங்க முடியவில்லை…. என்னதான் கண்மணியோடு சமாதானமாகி விட்டாலும்… அவன் வேதனை ஆழமாக அவனுக்குள் இருக்க… ஒரு கட்டத்தில் எழுந்து அமர்ந்தான்…
அமர்ந்தவன்… முன் நெற்றிக் கேசத்தை அழுந்தக் கோதியவனின் நிலையே… அவன் இன்னும் அமைதி இன்றி அலைப்புறுதலிலேயே இருப்பதைச் சுட்டிக் காட்ட… கண்மணிக்கு புரியாமல் போகுமா என்ன…
தன் புறம் அவனை இழுக்க… அவள் மேலேயே அவன் விழுந்தான் தான்… இருந்தும்… தன் பாரத்தை அவள் மேல் போடாமல் பார்த்துக் கொண்டான் ரிஷி… அதே நேரம் கண்மணியையும் கேள்வியாகப் பார்க்க
“நான் தயார்… உங்க பனிஷ்மெண்டுக்கு” இந்த வார்த்தைகளைச் சொன்ன போது மூடிய அவள் இமைகள் மட்டுமே அவனுக்கு காட்சி… அளிக்க…
”தண்டனைக்கு ரெடின்னு சொல்லிட்டு… கண்ணை மூடினால் எப்படி கண்மணி மேடம்” ரிஷி நக்கலோடு கேட்க… இப்போதும் கண்மணி கண்களைத் திறக்கவில்லை…
திடிரென்று இமையின் மேல் உணர்ந்த இதழ் உரசலில்… கண்களைத் திறக்க…
புருவம் உயர்த்தி…. அவளைப் பார்த்தவன்…
“தண்டனையே இந்த கண்ணுக்குத்தான் கண்மணி மேடம்”
”இதற்கு மேல் இன்னும் என்ன செய்ய வேண்டும்… என்ன எதிர்பார்க்கிறான்” இவளோ சோம்பலாக அவனைப் பார்க்க
தொண்டையைச் செறுமியவன்….
“டைம் இப்போ… 5.30… நான் தூங்கப் போகிறேன்… எட்டு மணிக்கு என்னை எழுப்பிவிடு… நீ இன்னைக்கு ஸ்கூல் போக மாட்டதானே” எனச் சொல்ல… எதிர்பாராத ரிஷியின் வார்த்தைளில் அவள் உணர்ந்தது என்ன… ஏமாற்றமா???… கண்மணி அதிர்ந்து பார்க்க….
சிரித்தபடியே… உறங்கும் தோரணையில் படுத்தவன்…
”கணக்குச் டீச்சரம்மா… இப்படியே காலையில 8 மணிக்கு வ்ரைக்கும் என்னைப் பார்த்துட்டே இருக்கனும்… அதுதான் உங்க தண்டனை… நான் தூங்கப் போகிறேன்…” என அவள் பதிலை எதிர்பார்க்காமல் கண்களை மூட…
’ஹான்’ என அதிர்ந்த பார்வை அலைகளை கண்மணி ஓட விட… இப்போது கண் திறந்தவனாக…
“பார்த்துட்டு இருக்கியா…” எனக் கேட்டு விட்டு மீண்டும் கண்களை மூட… கண்மணிக்கோ இப்போது சிரிப்புதான் வந்தது… அவன் தண்டனையை ஏற்றுக் கொண்டவளாக… தன் கைகளில் அவன் தலையை ஏந்திக் கொண்டவள்… அவ்னையேப் பார்த்தபடி இருக்க… ரிஷி.. அடுத்தடுத்த ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கண் திறந்து அவளை பார்த்துக் கொண்டிருக்கின்றாளா எனப் பார்த்துக் கொண்டே இருக்க… கண்மணி பொறுமை இழந்தவளாக
“இன்னொரு தடவை…. பார்த்தீங்க… பனிஷ்மெண்ட் கேன்சல்” எனச் செல்லமாக அடி வைத்தவளிடம் புன்னகைத்தபடியே கண் உறங்க… சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கும் போக…. அவனைப் பார்த்தபடியே இருந்த கண்மணியும் ஒரு கட்டத்தில் அவளையுமறியாமல் உறங்கி விட… விழித்த போதோ………. ரிஷி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்…
தன்னையேப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் தண்டனையை அவளுக்கு கொடுத்தவன்…. காலம் முழுவதும் தன் கண்ணின் மணியாக அவள் வேண்டும் என்ற வரம் வேண்டி… அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் தவத்தை தானாகவே எடுத்துக் கொண்டான்…
தவம் பலித்ததா… வரம் கிடைத்ததா… கிடைக்குமா…. ???!!
Lovely update
Over posasive hoom