/* இந்த அத்தியாயம் பெரிய அத்தியாயம் கிட்டத்தட்ட 50 பக்கம்... விட்டு விட்டு கொடுத்தால் நல்லா இருக்காது... அதுனால இந்த லேட்... மூனு அப்டேட்டா பிரிச்சு டெய்லி போடுகிறேன்....
கமென்ட்ஸ்... லைக் போட்ட அனைவருக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ்... அண்ட் லேட்டா வந்ததுக்கு ஒரு சாரி..
நன்றி
பிரவீணா */
அத்தியாயம் 68-1
/*
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ
*/
மாதம் ஒன்று கடந்திருந்த நிலையில்…
“இன்னைக்கு நான்… ஆதவன் சாரைப் பார்க்கனும்… இல்லை இங்க நடக்கிறதே வேற” மருது சத்தமாக கத்திக் கொண்டிருந்தான்… யார் தடுத்தாலும் அவன் கேட்காமல்… அடங்காமல்… கலவரம் செய்து கொண்டிருக்க
ஆதவனின் உதவியாளரோ… இந்த ஒரு மாத காலமாக அவன் வரும் போதெல்லாம் எப்படியோ ஆதவனை சந்திக்க விடாமல் தடுத்து விட்டவனால் இன்று முடியுமா என்று தெரியவில்லை…
மருதுவின் முன் வந்தவன்
”சார் டென்சனா இருக்கார்டா… இப்போ உன் சத்தம் கேட்டால் பெரிய பிரச்சனை ஆகிரும்டா.. அவர் நல்ல மூட்ல இருக்கும் போது நானே அந்த துரை விசயத்தை அவர்கிட்ட சொல்றேன்… இப்போ கிளம்பு” என்ற போதே அவன் சொன்னதை எல்லாம் கேட்காமல் மீண்டும் சத்தம் போட்டு கலாட்டா செய்ய ஆரம்பித்திருந்தான் மருது…
அதே நேரம் வீட்டினுள்ளோ… ஆதவனின் கண்கள் அங்கிருந்த தொலைக்காட்சித் திரையை வெறித்திருக்க… அவன் அருகில் விக்ரம் அமர்ந்திருந்தான்….
ரிஷியும் நட்ராஜும் கையில் விருதோடு பேசிக் கொண்டிருந்த காட்சி… அதன் பின் கண்மணி அவர்களோடு வந்து சேர்ந்து நின்றிருக்க… என அவன் கண்கள் ஒலிப்பரப்பாகிய காட்சிகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டிருந்தது
கண்மணி… ரிஷியின் மனைவி என்பது அவனுக்கு தெரிந்த விசயம் தான்… ஒரு மாத காலமாக ரிஷியைப் பற்றிதானே அவன் விபரம் சேகரித்துக் கொண்டிருந்தான்…
ஆனால் ரிஷியையும் கண்மணியையும் அவன் இன்றுதான் ஒன்றாகப் பார்க்கின்றான்… அதுவும் நேரடியாக இல்லாமல்… தொலைக்காட்சி வழியாக
இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அனுசரித்துக் கொள்ளும் விதம் பார்க்கும் போதே தெரிந்தது…
ரிஷி கண்மணியை அணைத்துக் கொண்டோ… இல்லை அவள் அருகிலோ நிற்கவில்லை… இடைவெளி இருந்தது… இடைவெளி விட்டு நின்றிருந்தாலும்… அவனின் பார்வை… அவளிடம் இல்லை என்றாலும்… கண்மணியை அந்த மேடையில் இயல்பாக வைத்திருக்கும் விதமாக அவனது நடவடிக்கை அனுசரனை இருக்க… இருவரும் மனமொத்த தம்பதியினர் என்பது பார்த்த சில நிமிடங்களிலேயே பார்ப்பவர் யாருக்கும் புரிந்து விடும்…
விக்கியும் இன்றுதான் கண்மணியோடு ரிஷியைப் பார்க்கின்றான்… வெகுநாட்களுக்குப் பிறகு… ஒருகாலத்தில் மருத்துவமனையில் ரிஷியின் அருகில் எப்படி உரிமையாக நின்றிருந்தாளோ அதே போல் தான் தெரிந்ததே தவிர… பெரிதாக அவன் கண்களுக்கு வித்திசாயம் தெரியவில்லை… ரிஷியை தங்களிடமிருந்து மொத்தமாக அபகரித்து விட்டவளாக மட்டுமே தோன்றியது அவனுக்கு….
எப்போது கண்மணி வந்தாளோ… அப்போதே அந்தக் காட்சிகளைத் தவிர்க்கும் பொருட்டு… தொலைக்காட்சியையில் இருந்து பார்வையை எடுத்து… அலைபேசியைப் பார்க்க ஆரம்பித்திருக்க… ஆதவனோ… தன் கண்களை தொலைக்காட்சித் திரையை விட்டு விலக்கவில்லை…
காரணம்… அவன் புகைப்படத்தில் பார்த்த அந்த கண்மணிக்கும்… ரிஷியின் அருகில் நின்ற இந்த கண்மணிக்கும் அவனுக்கு நன்றாகவே வித்தியாசம் தெரிந்தது… பெருமிதமா… நாணமா… சந்தோஷமா என கண்டுபிடிக்கவே முடியாத வகையில் ஏதோ ஒன்று கண்மணியின் முகத்தில் இருக்க… சில நிமிடங்கள் அவளையே பார்த்தபடி இருந்தவன்.. அதற்கு மேல் அவன் கண்மணியைப் பார்க்க வில்லை… ஆதவனின் மொத்த கவனமும் ரிஷியின் புறம் திரும்பி இருந்தது…
ஆதவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை… இவனெல்லாம் தன் கவனத்தை மொத்தமாக அவன் புறம் திருப்புவான் என்று… சின்னப் பையன் என்று முக்கியத்துவம் கொடுக்காத ஆதவனின் கண்களுக்கு ரிஷிகேஷ்… ’ஆர் கே’ என்ற விஸ்வரூபமாகத் தெரிய ஆரம்பித்திருந்தான்… அதன் விளைவு இந்த ஒரு மாத காலமும் அவனைப் பற்றித்தானே நினைத்துக் கொண்டிருக்கின்றான்…
இதோ இன்றும் அவனைப் பார்க்கவே அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதுமே…
தனசேகரின் மகனாக மட்டுமே ஆதவன் ரிஷியைப் பார்த்திருக்க… இந்த ரிஷி அனைவரும் அழைக்கும் ‘ஆர் கே’ என்ற வார்த்தைகளுக்கு ஏற்ற மாதிரி இருந்தான்..
அவனது நடை உடை பாவனை என அத்தனையும் மாறி இருந்தது இன்று ரிஷியைப் பார்க்கும் போது…
சில விழாக்களில் தனசேகரோடு சேர்ந்து ரிஷியைப் பார்த்திருக்கின்றான்… பள்ளி… கல்லூரி மாணவனாக… அந்த வயதுக்கேற்ற விளையாட்டுத்தனம்… குறும்போடு இருந்தவனா… இருந்த தனசேகரின் மகனா இவன் என்றுதான் ஆதவன் அதிர்ந்தான்
அதுவும் இன்று ஃபார்மலான கோட் சூட் என நின்றிருந்த போது அவன் உடையை விட அவனது அணுகுமுறை… கண்களின் கூர்மை என அத்தனையும் ஆதவனை அசைத்துப் பார்த்திருந்தது…. அதிலும் அவன் மனைவி கண்மணி பாந்தமாக அவன் அருகே நின்றிருக்க போது அவர்களின் பொருத்தமும் ரிஷி என்பவன் எல்லாவகையிலும் முழு ஆண்மகன் என்பதைப் பரிபூரணமாக பதிவு செய்திருக்க…
இவனெல்லாம் ஒரு ஆளா என்ற வகையில் ரிஷியை இலேசாக விட்டுவிட்டோமோ என்று இலட்சம் முறையாக யோசித்திருந்தான்… அந்த சில வாரங்களில் மட்டும்….
அருகில் அமர்ந்திருந்த விக்ரமைப் பார்க்க… அவனும் யோசனையுடனே அமர்ந்திருக்க… அவன் முகமோ… போரில் தோற்ற வீரனைப் போல முகம் தொங்கிப் போயிருந்தது…
தொலைக்காட்சியைக் கூட அவன் பார்க்கவில்லை அவனது என்பதிலேயே விக்கி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றான் என்பது ஆதவனுக்கும் புரிந்தது….
ஆதவனுக்கும் பணம்… மட்டுமே… ஆனால் விக்ரமுக்கோ… அவனது கனவு இலட்சியம்… நம்பிக்கை அத்தனையும் அவனிடமிருந்து ரிஷி பறித்துக் கொண்டார் போல அவன் முகம் காட்டி இருக்க…
தன்னை விட விக்கியை நினைத்துதான் ஆதவன் அதிகமாக கவலை கொண்டான்…
ஆதவனை அப்படி நினைக்க வைக்கும் அளவிற்கு… அப்படி ஒரு தோற்றத்தை விக்கி அவனுக்கு கொடுத்திருந்தான் என்பது புரியாமல் ஆதவன் இருந்தான்… அந்த அளவுக்கு விக்கியின் நடிப்பு இருக்க… ஆதவன் ஏமாந்திருந்தான் விக்கியிடம்… ரிஷி அடுத்து விக்கி… என ஆதவன் சறுக்க ஆரம்பித்திருந்தான்…
---
விக்கி இப்போதும் சோகமாக இருப்பது போல முகத்தைத் தூக்கி வைத்து கொண்டிருந்தான்… நடிப்பு என்று சொல்ல முடியாது… கண்மணியைப் பார்த்து அவன் முகம் அப்படி மாறி இருக்க… வழக்கம் போல ஆதவன்… விக்ரமைச் சமாதானப்படுத்துவது போல…. அவன் தோள்களில் கை போட… விக்கியும் சுதாரித்து நடிக்க ஆரம்பித்திருந்தான்…
“இப்போ நான் என்ன பண்றது ஆதவன்…. நட்ராஜை வைத்து என்னோட ரிசர்ஜ் எல்லாம் கேள்விக் குறியா ஆக்கிட்டான் இந்த ரிஷி…”
”விக்கி… ஒண்ணும் ஃபீல் பண்ணாத… பார்த்துக்கலாம்…” என ஆதவன் அவனுக்கு ஆறுதல் கூற… அமைதியாக அவனைப் பார்த்தான் விக்கி… பின்…
“எப்படி ஆதவன்… எல்லா கம்பெனியும் நம்மள விட்டு அவங்ககிட்ட போயிட்டு இருக்காங்க… இந்த உலகத்தில் உண்மையான திறமைக்கு மதிப்பே கிடையாது.. வெறும் ஷோ ஆஃப்க்குத்தான் வேல்யூவா… ஃபீல் பண்ணாம இருன்னா…” என்று ஆவேசமாக ஆரம்பித்தவனிடம்…
“ரிஷியா ஏதும் இன்வால்வ் ஆகலதானே விக்கி… “
“அப்படி நினைக்கிறீங்களா ஆதவன்… என்னமோ அவன் என்னை டார்கெட் பண்ற மாதிரி இருக்கு…” விக்கி வேண்டுமென்றே ஆதவனிடம் சொல்ல… ஆதவனோ…
“இல்ல விக்கி… அவன் என் மேல இல்ல.. எங்க அப்பா மேல இருந்த கோபத்தை இதுல காட்ற மாதிரி இருக்கு” என்றவன்…
“சம்டைம் அந்த ரிஷி அவ்வளவு பெரிய ஆளான்னு யோசிக்கத் தோணுது… சம்டைம் இவ்ளோ ப்ளான் பண்ணி பண்ணிருக்கான்னா… அவன் எவ்வளவு டேஞ்சர்னு நாம தெரிஞ்சுக்காம இருந்துட்டோமேன்னு தோணுது…”
“ஆனால் உன் கூட ஏன் போட்டி போடனும்… உன்னை அவனுக்குத் தெரியுமா” ஆதவன் சந்தேகத்தோடு கேட்க…
“அவனை எனக்குத் தெரியாது… ஆனால் நட்ராஜைத் தெரியும்… நான் நட்ராஜுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு நினைக்கிறான்… அவரோட பேஸ் ஐடியாவை வச்சுத்தான் நான் காலேஜ்ல மாடல் பண்ணேன்… சொல்லிருக்கேனே” விக்கி யோசனை பாவனையுடன் நடிக்க
“ஹ்ம்ம்ம்.. ஆனால் அது இப்போதைய நடைமுறைக்கு ஒத்து வராதுனுதானே… நீ அதை இம்ரூவ் பண்ண… … ஆனால் நீ சொல்றதும் வேலிட் பாயிண்ட்தான்… அதை வச்சுதானே இப்போ வின் பண்ணிருக்கான்… இப்போ எல்லோருடைய பார்வையும் நட்ராஜ் மேலயும் அந்த ரிஷி மேலயும்… மத்ததெல்லாம் பிரச்சனை இல்லை… நம்ம கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட் நம்ம விட்டு போகக் கூடாது”
“ஆனால் மினிஸ்டர் அந்த ரிஷிகிட்ட பேசிருக்காரே… எனக்கென்னமோ… நமக்கு க்ரேட் லாஸ் ஆகப்போற மாதிரியே இருக்கு… உங்களுக்கு உங்க பணம்னா…. எனக்கு என்னோட கனவு… அர்ஜூன் சார் கிட்ட வேற லேண்ட்லாம் பேசிட்டு அது நம்ம கைக்கு வர்ற நேரம் அதுவும் கிடைக்கல… எனக்கு எதுவும் சரியா படலை ஆதவன்…. இதுல ரிஷி ஏதாவது கோர்ட் கேஸ்னு போவானோன்னு வேற தெரியல” விக்கி முடிந்த அளவு ஆதவனை ஏற்றி விட… ஆதவன் மனம் யோசனையுடன் இருந்தாலும்
“விக்கி… அவ்ளோ தூரம்லாம் போகவிட மாட்டேன்… என்னால தோல்வியை ஏத்துக்கவே முடியாது… தென் ரிஷிய மீட் பண்ணலாம்னு ஒரு ஐடியா எனக்கு… அதாவது அவன்கிட்ட டீல் பேசலாம்…. அவங்க அப்பாவோட பிஸ்னஸை அவன்கிட்டயே கொடுக்கலாம்னு நினைக்கிறேன்… நட்ராஜை நம்மகூட கனெக்ட் பண்ணிடலாம்னு… “
“ப்ச்ச்… அந்த ரிஷியோட அப்பா பிஸ்னஸ் அவ்ளோ வொர்த்தா என்ன” இளக்காரமாக விக்கி சொல்ல…
“அவனுக்கு அது வேல்யூ… ஒத்து வருவான்னு நினைக்கிறேன்… பார்ப்போம்… இல்லைனா… “ என்ற போதே ஆதவனின் முகம் பாறையைப் போல் இறுக்கமாக மாறி இருந்தது…
“மயிலே மயிலேன்னு இறகு போடச் சொன்னா போடனும்… இல்லை வலி அவனுக்குத்தான்” குருரச் சிரிப்பும் ஆதவனின் முகத்தில் சேர்ந்திருந்தது …
“ரிஷிக்கு அவன் குடும்பம் முக்கியம்னு தெரியும்… ஆனால் இப்போ அந்த கண்மணி… அவன் வைஃப்… ரொம்ம்ம்ப முக்கியம் போல அவனுக்கு…. அவனுக்கு மட்டுமல்ல நட்ராஜ்…. அர்ஜூன்… அவரோட தாத்தா…. இப்படி எல்லோருக்குமே அந்தக் கண்மணி மட்டும் தான் உலகம் போல… தனித்தனியா நாம போராட வேண்டியதில்ல….” திரையில் கண்மணியும் ரிஷியும் நட்ராஜும் புன்னகை முகத்துடன் இருந்ததைப் பார்த்தபடியே அவன் பேசிக் கொண்டிருக்க….
அதே நேரம் வெளியே சத்தம் கேட்க… ஆதவன் தன் உதவியாளரை அழைத்து விசயம் என்னவென்று கேட்க…. அவன் மருதுவை பற்றி சொல்ல… மருதுவை உள்ளே அனுப்பச் சொன்னவன் தொலைக்காட்சித் திரையை அணைத்தும் விட்டிருந்தான்
---
“சோ உன்னோட ஃப்ரெண்ட் ஒரு மாதமா காணலை… போலிஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்க வேண்டியதுதானே…” தன் முன் நின்றிருந்த மருதுவிடம் எரிச்சலாகக் கேள்வியைத் தொடுக்க ஆரம்பித்திருந்தான்…
“சார்… எங்க மேல ஏகப்பட்ட கம்ப்ளெயிண்ட் இருக்கு…” என முணங்கியவன்….
“என்னால போலிஸ் ஸ்டேஷன் போக முடியாது… நீங்க ஏதாவது பண்ணுங்க சார்.. துரைக்கு ஏதாவது ஆகிருச்சோன்னு பயமாருக்கு..” ஆதவனிடம் மருது சொல்லி முடிக்க…
ஆதவன் மருதுவை மேலும் கீழுமாகப் பார்த்தான்… எள்ளலாகப் பின்
“உனக்கும் உன் ஃப்ரெண்டுக்கும் நான் பாடிகார்ட் வேல பார்க்கனுமா என்ன… இல்லை எனக்கு ஒரு டவுட்… நீ என்கிட்ட வேலை செய்யறியா… நான் உன்கிட்ட வேலை செய்யறேனான்னு” உறுமிய ஆதவனிடம்
“சார்… எங்களுக்கு ஏதாவதுன்னா… உங்ககிட்ட தானே வரமுடியும்…” மருதுவும் நிமிர்ந்து ஆதவனைப் பார்த்துக் கேட்க… அடுத்த நொடி மருதுவின் கண்களின் நெருப்பு பொறி பறந்திருந்தது…. ஆதவன் மருதுவின் கன்னத்தில் விட்ட பளார் அறையில்.
அவமானமும் வலியும் ஒரு சேர… கன்னத்தைத் தடவியபடியே மருது ஏதோ பேசப் போக
“ஷட் அப்… நான் வச்சுருக்கிற அடி ஆளுங்களுக்கு என்ன ஆச்சுன்னு கவலைப்பட சொல்றியா என்ன… என்ன தைரியம் இருந்தா… உன் ஃப்ரெண்டுக்கு என்ன ஆச்சுன்னு நான் உனக்கு வேலை பார்க்கனும்னு சொல்வ”
மருது மீண்டும் ஏதோ பேச ஆரம்பித்த போதே… அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல அவன் அருகே போன ஆதவன்… அதன் பின்ன் என்ன நினைத்தானோ… அவன் உதவியாளனிடம்
“இவன் இன்னொரு தடவை ஹெல்ப் அது இதுன்னு கேட்டுட்டு என்கிட்ட வந்தான் அவ்வளவுதான்… முடிஞ்சா என்கிட்ட வேலை பார்க்கச் சொல்லு இந்த நா***… இல்லையா… கிளம்பச் சொல்லு…” முடித்த ஆதவன்… அதன் பிறகு ஒரு நிமிடம் கூட மருதுவிடம் பார்வையை வைக்கவில்லை…
விக்ரமும் அங்குதான் இருந்தான்… ஆதவனின் கோபம்… அவனிடம் வேலை பார்க்கும் யாரோ ஒரு அடியாளிடம் அதைக் காட்டிய விதம்… என இவர்களைப் பார்வையாளனாக பார்த்தபடியே இருந்த போதே…. அவன் அலைபேசி அவனை அழைக்க… எடுத்துப் பார்க்க…. ரிதன்யாதான் அழைத்திருந்தாள்… வேகமாக அழைப்பைக் கட் செய்ய… அவளோ தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது
இப்போது மருது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்க… ஆதவனின் கவனம் விக்கியின் மேல் மாறி இருக்க… நிமிடத்தில் ஆதவனும் தன் கோபத்தை மாற்றி விக்கியிடன் சிநேகமாகச் சிரித்தான்… கூடவே கலாய்க்கும் விதமாகவும்
”என்ன விக்கி… கேர்ள் ஃப்ரெண்டா”
விக்கியும் மறுக்க வில்லை… அதே நேரம் ஆதவனுக்குப் பதில் சொல்லவும் இல்ல…
“ஒன் மினிட் ஆதவன்” என்றபடி ஆதவனிடம் சொன்னவனாக அவனை விட்டு தள்ளி வந்தவன்… இப்போது ரிதன்யாவின் அழைப்பை எடுக்க
“ஓய் பாஸ்… பொண்டாட்டி கூப்பிட்டால் உடனே எடுக்கனும்னு தெரியாதா” விக்கியிடம் ரிதன்யா வெகு உற்சாகக் குரலில் பேச ஆரம்பித்தவள்…
“ஒண்ணுமில்ல… ஏற்கனவே சொன்னதுதான்…. நேட்டிவ் போறோம்… ஃபேமிலியோட… அண்ணா மட்டும் வரலை… கிளம்பிட்டு இருக்கோம்… இன்னைக்கு மூணு மணி போல கிளம்பிருவோம்… அதை சொல்லத்தான் போன் பண்ணேன்… அண்ணாகிட்ட பேசுனீங்களா… அப்புறம் அர்ஜூன் கிட்ட பேசுனீங்களா”
வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள்… நேரம் காலம் எல்லாம் புரியாமல்… இருக்கும் இடமும் தெரியாமல்
“இப்போ ஆதவன் வீட்ல இருக்கேன்… வைக்கவா… போய்ட்டு வா… டேக் கேர் பை” என்று மட்டும் சொல்லி விட்டு… சட்டென்று வைத்தும் விட்டிருந்தான்…
---
எதிர்முனையிலோ… போனை வெறித்துக் கொண்டிருந்தாள் ரிதன்யா… அதே நேரம்… தன்னைத்தானே திட்டியும் கொண்டாள்….
“அந்த ஆதவன் வீட்ல இருந்ததுனாலதான் விக்கி போனை எடுக்கலையா… அது தெரியாமல நாம வேற அடிக்கடி கால் போட்டு டார்ச்சர் பண்ணிட்டோம் போல… நம்ம ஆளு குரல்லயே நம்ம மேல இருந்த காண்டு தெரிஞ்சதே… மறுபடியும் போன் போடும்போது செம டோஸ் விழுமே… சமாளி ரிது.. உன் விக்கிய நீ சமாளிக்காமல் வேற யார் சமாளிப்பா” என்று தோளைக் குலுக்கியபடியே… வீட்டுக்குச் சென்றவள்… நேராக அறைக்குள் செல்ல… அங்கோ … ரித்விகாவும்… கண்மணியும்… பேசியபடியே தங்களுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் பெட்டியில் அடைத்துக் கொண்டிருந்தனர்…
“அண்ணி… ஒன் வீக் லீவ்… எங்க ஊர்… எவ்ளோ நாள் ஆச்சு… என் ஃப்ரெண்ஸ்லாம் ஒருத்தர் விடாம பார்க்கனும்…” என்று ஆரம்பித்து பேசிக் கொண்டே இருக்க… ரிதன்யாவும் அவர்களுடன் வந்து கலந்து கொண்டாள்… ரிதன்யாவுக்குமே மிக சந்தோசமாக இருந்தாள்…
இலட்சுமி… வேண்டுகோளுக்கிணங்க… குலதெய்வ கோவிலுக்கு செல்வதாகவும் ஏற்பாடு… சொந்த ஊர் செல்ல அது காரணமாகிப் போக… நீலகண்டன் அனைத்து ஏற்பாடும் செய்திருந்தார்…. அதேபோல் மகிளாவும் குழந்தைப்பேறுக்காக சொந்த ஊரில் இருக்க… இதோ இவர்களும் அங்கு மகிளாவோடு சேர்ந்து அவள் வீட்டில் ஒரு வாரம் தங்கப் போகிறார்கள்…
ரிதன்யாவுக்கு ஒரே ஒரு பிரச்சனை… அது என்னவென்றால் கண்மணி மட்டுமே அவளும் அவர்கள் கூட வருவது… அது மட்டுமே ரிதன்யாவுக்குப் பிடிக்கவில்லை… கண்மணி வரவில்லையென்றால் இன்னும் சந்தோசமாக இருந்திருப்பாள்… அது நடக்கவில்லை… ஆனாலும் ரிதன்யாவுக்கு இருந்த சந்தோசத்தில்… பெரிதாக படவில்லை… கண்மணியைக் கண்டுகொண்டால் தானே… விட்டு விட்டாள்…
அவள் அப்படி இருக்க… இலட்சுமிக்கு மட்டும் ஒரு வருத்தம்… மகன் அவர்களோடு வரவில்லை என்று… மகனும் மருமகளும் சேர்ந்து குலதெய்வம் கோவிலுக்கு வரவேண்டும் என அவ்வளவு ஆசை.. அதனாலேயே இந்த ஏற்பாடை ஆரம்பிக்க… எடுத்த எடுப்பிலேயே ரிஷி மறுத்துவிட்டான்… கண்மணியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்…
“இப்போதைக்கு வர முடியாது கண்மணி… முதல்ல எனக்கு நேரமே இல்லை…ப்ளீஸ் கம்பல் பண்ணாத… உன்னை போகச் சொல்லிட்டேன்ல..” எனச் சொல்லி விட கண்மணிக்கும் அவன் நிலை புரிந்ததுதான்…
ஆஸ்திரேலியாவில் இருந்து… இந்தியா வந்தபிறகு… நட்ராஜுக்கும்… ரிஷிக்கும்.. ஓய்வே இல்லை… வீட்டுக்கு வருவதே அத்தி பூத்தாற் போலத்தான்… அதுவும் அடிக்கடி டெல்லி… ஆஸ்திரேலியா என மீண்டும் மீண்டும் பயணத்தில் தான் இருந்தான்… அவனது சூழ்நிலையும் புரிந்ததுதான்….
அவன் ஆஸ்திரேலியாவிலேயே சொல்லித்தான் இவளை அழைத்தும் வந்திருந்தான்…
இன்னும் சில மாதங்களுக்கு… நட்ராஜும்… அவனும் கண்டிப்பாக பிஸியாக இருப்பார்கள் என்று… அது போலவே தான்… நடந்தது… நடந்து கொண்டிருக்கின்றது…
கண்மணி ரிஷியையும் வற்புறுத்தாமல் இருக்க… அவனை விட்டுவிட்டு இவர்கள் மட்டுமே செல்வதாக ஏற்பாடும் ஆனது…
----
”ஏன் அண்ணி… அந்த கார்லா என்கிட்ட பேச மாட்டாளா… உங்ககிட்ட மட்டும் அடிக்கடி… பேசறா… அண்ணன்… இப்போ நீங்க… எனக்கு கடுப்பா வருது” சற்று முன் வந்த கார்லாவின் காலை அட்டெண்ட் செய்து விட்டு மீண்டும் அறைக்கு வந்த கண்மணியிடம் … ரித்விகா கேட்க கண்மணி சிரித்தாள்…
“இவ்ளோ நாள்… ரிஷிகிட்ட பேசுனா பிடிக்காது… இப்போ என்கிட்ட கார்லா பேசுனா பிடிக்கலையா….” என்றவளுக்கு… ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பும் போது ஏர்போர்ட்டில் வைத்து கார்லா அவளிடம் சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகம் வந்தது…
”நீங்க ரொம்ப லக்கி… அதுனாலதான் ரிஷி உங்க ஹஸ்பண்டா கிடச்சிருக்காங்க” கண்மணிக்கு இப்போது நினைத்தாலும் புல்லரித்தது கார்ல சொன்ன அந்த வார்த்தைகளை நினைத்த போது…
ரிஷிக்கு கண்மணி கிடைத்தது… ரிஷி செய்த புண்ணியம்…ரிஷின் அதிர்ஷ்டம் என்று தான் அவள் பெரும்பாலும் கேட்ட வார்த்தைகள்… இல்லையென்றால் ரிதன்யா மாதிரியா ஆட்களின் இளக்காரமான பார்வை…
முதன் முதலாக தான் உணர்ந்ததை சொன்ன இன்னொரு உள்ளம்… ரித்விகா போலவே தான் கார்லாவும்… அதனால் அங்கிருந்த இரண்டு வாரங்களும் கண்மணிக்கு அவளோடு இயல்பாக பழக முடிய… விடைபெறும்போது கார்லா சொன்ன வார்த்தைகளும் கார்லாவைக் கண்மணிக்கும் இன்னுமே நெருக்கமாக்க… தினமும் அலைபேசி உரையாடல்கள்… என கார்லாவோடு இன்னுமே கண்மணி தொடர்பில் இருக்க… அது பொறுக்க முடியாமல்தான் ரித்விகா கண்மணியை கேட்டுக் கொண்டிருந்தாள்…
பொறாமை பாதி… கோபம் பாதி என கலவையான உணர்வுகளோடு கேட்ட தன் கணவனின் இளைய தங்கையை செல்லமாகக் கொஞ்சிய கண்மணி..
“என் செல்லக் குட்டிக்கு ஈகுவலா கண்மணிக்கிட்ட யாரும் வர முடியாது” ரித்விகாவை அணைத்தபடியே சொல்ல…
“அப்போ ரிஷி அண்ணா????… அண்ணாவா நானா சொல்லுங்க” ரித்விகா கண்சிமிட்டிக் கேட்க…
“சந்தேகமே வேண்டாம்… என் ரித்வி செல்லம் தான் எனக்கு ஃபர்ஸ்ட்…” என்று கண்மணியும் கண்சிமிட்டிச் சொல்ல…
“ஹ்ம்ம்… அண்ணி நீங்க பொய் சொல்வீங்கன்னு இன்னைக்குத்தான் எனக்குத் தெரியுது” ரித்வியின் சிறு சுழிப்புடன் கூடிய சிணுங்கலில் கண்மணியும் கலகலப்பாகச் சிரிக்க… அதே நேரம் இலட்சுமியும் உள்ளே வந்தார்…
“கண்மணி… அவனுக்கு போன் போடும்மா… எப்போ வருவான்னு கேளு…. பிரேம் 3.30 க்கு வர்றேன்னு சொன்னாரும்மா… இவன் வேற போனையே எடுக்க மாட்டேங்கிறான்… இன்னைக்கு டிவில ஷோ பார்த்துட்டு அவன்கிட்ட பேச ட்ரை பண்றேன்… எடுக்கவே மாட்டேங்கிறான்… ஊர்கண்ணே உங்க மேலத்தான்… அவன் வந்தா உன்னையும் அவனையும் ஒண்ணா நிக்க வச்சு சுத்தி வைக்கனும்னு பார்க்கிறேன்… வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேங்கிறான்... இன்னைக்காவது கண்டிப்பாக சுத்தி வைக்கனும் ” என்றவர்…
“ரெண்டு பேரும் அவ்ளோ அழகா இருக்கீங்க கண்மணி… அந்த ஸ்டேஜ்ல உங்கள பார்த்த போது என் கண்ணே பட்ருச்சும்மா” என்று மருமகளைச் கைகளால் சுற்றி நெட்டி முறித்த போதே… ரிஷியும் கண்மணிக்கு அழைத்திருக்க…
“ரிஷிதான் அத்தை…” என்றபடி போனை எடுத்தபடியே தன் அத்தைக்குப் பதில் சொன்னாள் கண்மணி…
“சீக்கிரம் வரச் சொல்லும்மா” என்றபடி இலட்சுமியும் வெளியேறி இருந்தார்….
---
”ரிஷி… அத்” என்று இவள் கண்மணி ரிஷியிடம் ஆரம்பிக்கும் போதே…
“கண்மணி நீ இன்னைக்கு போக வேண்டாம்… அம்மா கிட்ட சொல்லிரு…. நீ அவங்க கூட வரலைனு” என்று அழுத்தக் குரலில் சொன்னவன்… அவளைப் பேசவே விடாமல்
“நீ ஊருக்குப் போகல… என் கூடத்தான் இருக்கனும்… நான் சொல்றது புரியுதா” என்று அடுத்த வார்த்தையாகச் சொல்ல… கண்மணி புரியாமல் விழித்தாள்…
இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த உடனேயே இலட்சுமி குலதெய்வக் கோவிலுக்கு போகவேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க… ரிஷி வழக்கம் போல பிடிவாதம் பிடித்தான்…
“கோவிலாவது… சாமியாவது… நான் வரலை… கண்மணி வர்றாதானே… அவ வந்தா என்ன நான் வந்தா என்ன… ” என்றபடியே… அவனுக்கு தொழில் விசயமாக பல சந்திப்புகள் இருந்ததால்… தனக்கு நேரமே இல்லை என்று சொல்லிவிட்டிருக்க… இலட்சுமிக்கு முகமே தொங்கிப் போயிற்று மகனின் விட்டேற்றியான பதிலில்
திருமணம் முடிந்த இத்தனை மாதங்களில் மகன் – மருமகள் இருவரும் தம்பதியாக குலதெய்வ கோவில் செல்லவே இல்லை… இலட்சுமிக்கு தன் மேல்தான் கோபம்… தான் நன்றாக இருந்திருந்தால் இருவரையும் அழைத்துச் சென்றிருக்கலாம்… என்பதால் வந்த குற்ற உணர்ச்சியில் வந்த கோபம்
இதுவரை அது முடியவில்லை… இப்போது ஓரளவு எல்லாம் சரியாகி இருக்க… மகனை அழைத்தால் இப்படி பேசுகிறானே என்று கவலையோடு இலட்சுமி இருந்தார்
…
அவர் கவலையெல்லாம் கவனிக்கும் நிலையில் மகன் இருந்தால் தானே… தொழில் சந்திப்பு… தொழிற்சாலை விரிவுபடுத்தல் என வீட்டுப் பக்கமே வராமல் ஓடிக் கொண்டிருக்கிறான்…
ஒரே ஒரு ஆறுதல்… கண்மணி அவர்களோடு வருவது… இலட்சுமியும் அந்த சந்தோஷத்தோடு… ஊருக்குச் செல்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்…. இன்று மாலை மகிளாவின் கணவன் பிரேம் அவர்களை ஊருக்கு அழைத்துச் செல்வதாக ஏற்பாடு…
இப்படிப்பட்ட சூழ்நிலையில்… ரிஷி அவளைப் போகக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்க… கேட்ட கண்மணியோ திகைத்து நின்றிருந்தாள் என்ன சொல்வதென்று தெரியாமல் கணவனின் திடிர்க் கட்டளையில்…
“ஏன் ரிஷி… நீங்களும் வர்றீங்களா… உங்க கூட என்னைக் கூப்பிட்டு போறிங்களா” என்று அவன் மொட்டையாகச் சொன்னதைத் இவள் திருத்திக் கேட்க
“அதெல்லாம் இல்லை… நானும் வரலை… நீயும் போக வேண்டாம்… நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்… வந்து பேசுறேன்…. “ என்று அவசர அவசரமாகப் போனை வைக்கப் போக
”ரிஷி… ரிஷி” என்று இவள் வேகமாக அவனை இடை மறிக்க… அவனும் வைக்காமல் காத்திருந்தான்
“திடீர்னு சொன்னா எப்படி ரிஷி… அத்தை ஏற்கனவே நீங்க வரலேன்னு… கொஞ்சம் வருத்தமா இருக்காங்க… இப்போ என்னையும் போக வேண்டாம்னு சொல்றீங்க… கஷ்டப்படுவாங்க ரிஷி”
”என்கூடத்தான் இருக்கனும்… அவ்ளோதான்… 2 நாள் நான் கொஞ்சம் ஃப்ரீ…”
“அப்போ… வாங்க எல்லோரும் சேர்ந்து போகலாம்…” கண்மணி ஆர்வமாகக் கேட்க
“ஊர் சுத்துற அளவுக்கு… மத்தவங்க கூடலாம் ஸ்பெண்ட் பண்ற அளவுக்கு ஃப்ரீ இல்லை… என் பொண்டாட்டி கூட டைம் ஸ்பெண்ட் பண்ற அளவுக்கு மட்டும் கொஞ்சமே கொஞ்சம் நேரம் ஃப்ரீ… அப்போ எனக்கு என் பொண்டாட்டி என் கூட இருக்கனும்… என் பக்கத்தில இருக்கனும்…. அவ எனக்காக மட்டுமே இருக்கனும்” என்றபடி அடுத்த வினாடியே போனையும் வைத்து விட கண்மணி தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டாள்...
---
/*
நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது */
அத்தியாயம் 68-2 இல் இருந்து சில வரிகள்...
பாப்பா… நீ கொஞ்சம் வெளிய போறியா” என்ற போதே கண்மணி வேகமாகத் திரும்பிப் பார்க்க… ரித்விகா தன் அண்ணனைப் பார்த்து குழம்பியவாறே… வெளியேறி இருக்க…
சட்டென்று கண்மணியும் அவனை உணர்ந்தவளாக... அவனின் அடுத்த நடவடிக்கையை அனுமானித்தவளாக வேகமாக நாற்காலியில் இருந்து இறங்க எத்தனிக்க…
---
“என்னம்மா ஆச்சு… ஏன் இவ்ளோ கோபமா போனான்… அங்க போய்… அவன் கோபத்தை எல்லாம் அந்தக் கதவுல காண்பிக்கிறான்” இலட்சுமி… கவலையும் படபடப்புமாக கண்மணியிடம் கேட்க…
ரித்விகாவோ
“அண்ணா… உள்ள வரும் போதே கொஞ்சம் சீரியஸாத்தான் இருந்த மாதிரி இருந்துச்சு… ஆனால் என்னைப் பார்த்து சிரிச்சாங்க… அண்ணிக்கிட ஏதோ உங்ககிட்ட சொன்னீங்களான்னு கேட்டாங்க… அண்ணி பதில் சொல்லலை… அதுக்கப்புறம்தான் அண்ணா கோபமாகிட்டாங்க” என்று தனக்குத் தெரிந்ததை சொல்லி விட
---
“மேடம்… நாம நாளைக்கு இந்தியா போகிறோம்… ஞாபகம் இருக்கா” அவனுக்கே உரித்தான மோனக் குரலில் கேட்க
“ஹ்ம்ம்…” என்று மட்டுமே சொன்னவளின் கன்னத்தில் முத்தமிட்டவன்
---
“அப்போ… இந்த 12 நாள் … அது கிஃப்ட் இல்லையா அம்மு” குறும்பாகக் கேட்ட போதே
“நான் உங்களுக்கு கிஃப்ட்டா” என்று அவன் வாயிலேயே செல்லமாக அடிக்க…
---
“நான் உங்க கண் பார்வைல இல்லை… ஆனா என்னை ஃபீல் பண்றீங்களா” கண்மணி கேட்க
“என்னடி… மாயஜாலம் காட்டிட்டு இருக்க” ரிஷி நக்கலாகக் கேட்க…
----
Nice update