/* அத்தியாயம் 64 -இன் தொடர்ச்சி நாளை.... */
அத்தியாயம் 64:
ஃபேபியோ வீட்டிற்கு சென்று விட்டு…. அப்போதுதான் திரும்பி இருந்தனர்… இருவருமாக…
இன்னும் பின்னிரவு ஆகவில்லை… கார்லா குடும்பத்தினர் எவ்வளவோ வற்புறுத்தியும்… அவர் வீட்டில் நடைபெறப் போகும் புத்தாண்டு நிகழ்வுக்கான பார்ட்டியில் கலந்து கொள்ள மறுத்து விட்டான் ரிஷி…
எப்படியும் கண்மணி இங்கு புத்தாண்டு வரும் நேரத்தைக் கணித்து…. தன்னைப் போலவே அவளும் வாழ்த்துக் கூறுவாள் – இது அவனுக்கு நன்றாகத் தெரியும்… இங்கு இருந்தால் கண்டிப்பாக கண்மணியோடு நீண்ட நேரம் எல்லாம் பேச முடியாது… ஏற்கனவே அவள் பிறந்தநாளுக்கு ஒழுங்காகப் பேச முடியவில்லை… இவன் கொடுத்த அவள் தாயின் டைரியால்… இந்திய நேரப்படி கண்மணியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது… காரணம் இவன் என்பதால் விட்டு விட்டான்…
ஆனால் அவனது பிறந்த நாளை அப்படி விடக் கூடாது… ஆஸ்திரேலியா டைம் ஸோனின் நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து… அவன் மனைவியோடு பேச ஆரம்பித்து… இந்தியா டைம் ஸோனின் 12 மணிக்கு முடித்து வைக்க வேண்டும்… ரிஷி இப்படி முடிவெடுத்திருக்க… ஃபேபியோவின் புதுவருட விருந்தில் கலந்துகொள்வானோ?.... எப்படியோ ஃபேபியோவிடம் பேசி சமாளித்து வந்திருந்தான் ரிஷி…
ஃபேபியோவுக்கு இதில் வருத்தமே…. காரணம் ரிஷியின் பிறந்த நாளும் புது வருடமும் ஒரே நாள் என்பதால்… ரிஷிக்காக தனியே சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருக்க… அவன் பாதியிலேயே கிளம்புகிறேன் என்ற போது மனம் சுணங்கியதுதான்… அது ரிஷிக்கும் தெரிந்தாலும்… அவர் முகச் சுணக்கத்திற்காக மனைவியின் வாழ்த்தை முழுமையாக அனுபவிக்கும் நிமிடங்களை விட்டுக் கொடுக்க முடியுமா… வந்து விட்டான் தனது முதலாளியோடு….
ஃபேபியோ… அப்போதும் ரிஷியை விட வில்லை… ரிஷி கூடுதலாக இன்னொரு ஹோட்டல் அறை வேண்டுமென்று கேட்டிருந்த விசயம் அவர் காதுக்கும் போயிருந்தது… ஏனென்று ரிஷியிடம் விசாரிக்க… அவன் மனைவி கண்மணி வருவதால்… நட்ராஜுக்கு தனியறைக்குச் சொல்லியிருந்ததாகச் சொல்லி தங்கள் அறைக்குத் திரும்பி இருக்க
ஃபேபியோவோ… ரிஷி-கண்மணிக்கு அதே ஹோட்டலில்… ஹனிமூன் சூட் புக் செய்து விட்டு திருமணப் பரிசாக ஏற்றுக் கொள்ளுபடி… வற்புறுத்த… ரிஷியால் அதற்கு மேல் மறுக்கவும் முடியவில்லை… கண்மணி வந்த பின் அந்த அறைக்குச் செல்வதாகக் கூறி அவரின் அந்தப் பரிசை ஏற்றுக் கொண்டான்…
கண்மணி வருவாளா மாட்டாளா என்பது கூட நிச்சயமில்லை… உள்ளுணர்வு உந்துதலில் அனைவரிடமும் சொல்லி விட்டான்… வருவாளா… ??? யோசித்தபடியே…. அறைக்கு வந்தவன்… அவள் நினைவோடே குளியலறைக்கு சென்று விட்டான்
கார்லா… ரிஷிக்கு அவனுடைய பிறந்த நாள் பரிசாக… அவளே வரைந்திருந்த ஓவியத்தை ஃப்ரேமிட்டு பரிசாக அளித்திருந்தாள்… ஒன்று அவனது இளவயது… அந்தத் துறுதுறுப்போடு…. ஆனாலும் அந்தக் கண்களில் இருந்த ஆவேசம் இதுவரை நட்ராஜ் பார்த்தறியாதது…
அடுத்த பரிசு… ரிஷி-கண்மணி தம்பதிகளுக்கான பரிசு…. ரிஷி கண்மணி இருவருமாக சேர்ந்து இருக்கும் ஓவியம்…. இருவரின் திருமணப் புகைப்படத்தை பார்த்து வரைந்த ஓவியம் என்று தெரிந்தது…. அதைப் பார்த்தால்… அதில் இருக்கும் அவர்களின் பொருத்தம் பார்த்தால்… முதல் நாள் முடிவு செய்யப்பட்டு… அடுத்த நாள் திருமணம் செய்த மணமக்கள் என… முதன் முதலாகப் பார்ப்பவர்கள் நம்பவே மாட்டார்கள்… இருவரும் அத்தனை அழகாக புன்முறுவலோடு… புகைப்படத்திற்கு காட்சி அளித்துக் கொண்டிருந்தனர்…
கட்டாயக் கல்யாணம் அல்லதான்… ஆனாலும்… மனம் ஒன்றி திருமணம் செய்தவர்களும் இல்லைதானே… ஆனாலும் மணமக்களாக இருவரின் முகத்திலும் எப்படி இப்படி பாந்தமாக பொருத்தமான ஒரு தோரணை… மனம் நெகிழ்ந்தவருக்கு… அதே நேரம்… கார்லாவை நினைத்தும் மனம் நெகிழ்ந்தது…
ரிஷியின் மீதான அவளது பாசத்தை… வேறு எப்படி எல்லாமோ நினைத்து… கடைசியில் இந்த வயதில் ஒரு ஆணிடம் பெண்ணுக்குத் தோன்றும் ஈர்ப்பு… என உணர்ந்து…. ரிஷிக்குத் திருமணம் ஆகி விட்டது என்று தெரிந்தால் தானாகவே சரி ஆகி விடுவாள் என ஓரளவு நட்ராஜ் தனக்குள் ஒரு முடிவெடுத்து கார்லா வீட்டுக்குச் செல்ல…
“எனக்கு வரையிறதுன்னா ரொம்ப இண்ட்ரெஸ்ட்… நான் அதிகமா வரைந்த ஓவியம்னா ரிஷி தான்…” என்று அறை முழுக்க அவனது ஓவியமாக அவள் காட்ட… நட்ராஜ் திகைத்துப் போயிருந்தார்… ரிஷியைப் பார்க்க… அவன் முகத்திலோ சிறிதளவும் திகைப்பில்லை… மாறாக… அந்தப் பெண்ணின் அன்பை மனம் நிறைந்து ஏற்றுக் கொண்டார்ப் போல திருப்தியான மலர்ந்த முகமே…
நட்ராஜுக்கு முதன் முதலாக ரிஷியின் மேல் கடுங்கோபம் வந்திருந்தது… அவன் மகிளா என்னும் பெண்ணை விரும்பி இருந்தான்…. அந்தப் பெண் அவனுக்காக வீட்டை விட்டு கூட வந்தாள்… இது எல்லாம் தெரிந்துதான் தன் பெண்ணை அவனுக்கு கொடுத்தார்…
ஏன் தன் மகள் கூட இவனை எந்த அளவு நேசிக்கிறாள் என்பதை உணர்ந்தவர்… இன்றைக்கு கூட அவள் அவனது மனைவி… கணவன் மேல் மனைவியாக நேசம் வைத்திருந்தது இயல்பே…. அதற்கு முன்னாலேயே ரிஷியை எல்லா விசயத்திலும் விட்டுக் கொடுக்காமல்தான் பேசுவாள்… வீடு வாடகைக்காக ரிஷி வந்து நின்ற போது… அப்போதே கண்மணி அவனுக்காக பேசினவள் தானே… உணர்ந்த போது ஒன்று மட்டும் புரிந்தது நட்ராஜுக்கு
ரிஷியின் தோற்றமோ… இல்லை பழகும் விதமோ… இல்லை எதுவோ… எப்படியோ ரிஷி பெண்களை வெகுவாக கவர்ந்து விடுகிறான்… இது நட்ராஜுக்கு புரிந்திருந்தது தான்
ரிஷியின் மேலும் சந்தேகம் இல்லை… ஆனால் தான் ஒரு சிறு பெண்ணின் மனதில் தேவையில்லாத எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூடவா தெரியவில்லை… அந்தப் பெண் சிறுபெண்… அவளுக்குப் புரியாது… திருமணவனாக விலகி நிற்கலாமே… சொல்லி புரியவைக்கலாமே…
யோசித்தவர்… இன்று அறைக்குத் திரும்பியதும் ரிஷியோடு பேசி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… முடிவெடுத்திருந்தார்… கார்லா பேசிக் கொண்டிருந்த போதே
”பார்டி அப்போ கொடுக்கலாம்னு இருந்தேன்… நீங்க பார்ட்டிக்கு இங்க இருக்க மாட்டீங்கன்னு சொல்லிட்டீங்க… நீங்க கிளம்புறதுனால… இப்போதே தருகிறேன்… ரிஷி உங்கள பிக்சர் பெர்ஃபெக்டா வரைஞ்சுவேன்… என் கண்ல இருக்கீங்க… ஆனால் கண்மணியை ஃபர்ஸ்ட் டைம்… அதுவும் போட்டோ பார்த்து வரைந்தேன்… எப்படி வந்திருக்குனு தெரியலை…. “ என்று கண்மணியும் ரிஷியும் சேர்ந்து மணக்கோலத்தில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து அவள் வரைந்திருந்த போர்ட்ரெயிட்டை அவர்களுக்கு காண்பித்த போது… நட்ராஜ் என்ன உணர்வு உணர்ந்தார்…. அவருக்கேத் தெரியவில்லை…
“கண்மணி… என்னைப் பொறுத்தவரை… மோஸ்ட் லக்கியஸ்ட் கேர்ள்… ” அவள் எந்த அளவு உணர்ந்து சொன்னாள் என்பதை அவளின் வார்த்தைகளின் நெகிழ்வில் நட்ராஜ் உணர்ந்து கொண்டிருக்க… கார்லாவின் தந்தையும்… தாயுமே நட்ராஜிடம் அதே உணர்வை பிரதிபலிக்க… இப்போதும்… தங்கள் அறைக்கு வந்த போதும்… நட்ராஜ் அந்தப் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்…. கண்மணியின் தந்தையாக…
”நல்லா வந்துருக்கு… போட்டோல இருக்கிறதை… அப்படியே பிக்சரைஸ் பண்ணிருக்காள்ள… வெரி டேலண்டட்..” என்று கார்லாவை சிலாகித்துச் சொன்னபடி… நட்ராஜின் அருகே அமர்ந்திருந்தவனின் பார்வை… அவன் மனைவியிடம் மட்டுமே நிலைத்திருந்தது… அவன் மனைவி… அவன் வாங்கி கொடுத்திருந்த புடவையில்… அவன் அணிவித்த மாங்கல்யத்தோடு…. ரிஷியின் கண்மணியாக மட்டுமே காட்சி அளித்துக் கொண்டிருந்தாள்… அவன் கண் மணியில் அவன் ’கண்மணி’ மட்டுமே நிறைந்திருந்தாள்…
புகைப்படத்தில் இருந்த தன் பார்வையை ரிஷியிடம் மாற்றிய நட்ராஜ்….
“கார்லாவுக்கு… அவங்க குடும்பத்துக்கு உங்க மேல இவ்ளோ மரியாதை… மரியாதைனு சொல்றதை விட… அதுக்கும் மேல… கார்லாகிட்ட மட்டும் நான் உணரலை… அவ அப்பா அம்மா கிட்ட கூட… இத்தனை நாள் வரைக்கும்… கார்லா அந்தப் பொண்ணுக்கு இந்த வயசுக்கான ஈர்ப்புனு நினைத்தேன்… இப்போ அப்படி நினைக்கத் தோணல… ஏதோ நடந்திருக்கு… கண்மணியோட அப்பாவா, உன்னோட முதலாளியா கேட்கலை… அப்படி கேட்கனும்னு நினைத்திருந்தால் வந்த போதே கேட்ருப்பேன்… இன்னைக்கு எனக்கு கேட்கனும்னு தோணுது… என்னை மாமனாரா… வெல்விஷரா… எப்படியாவது நினைத்துக்க… ஆனால் சொல்லு ரிஷி…” நட்ராஜ் ரிஷியைப் பார்த்துக் கேட்க…
அமைதியாக இருந்தவன்…
”ஒவ்வொருத்தவங்க வாழ்க்கைலயும்… சின்னதோ பெரிதோ… அழிக்கப்பட இல்லை கிழிக்கப்பட வேண்டிய பக்கங்கள் இருக்கும்… ஆனாலும் அழிக்கவோ நீக்கவோ முடியாது… படிக்கும் போது எப்படி நமக்கு பிடிக்காத பக்கத்தை ஸ்கிப் பண்ணி போவோமா… அதே மாதிரி வாழ்க்கைன்ற புத்தகத்தில அந்த கசப்பான நினைவுகளை இக்னோர் பண்ணிட்டு போகனும்… அந்த மாதிரிதான் கோவா சம்பவம் எனக்கும் கார்லாவுக்கும்… எனக்கு இக்னோர் பண்ண வேண்டிய நினைவுகள் மட்டுமே… ஆனால் கார்லா லைஃப்ல அந்த மாதிரி இல்லை… அவ அழிக்க முடியாது… ஆனால் அதே நேரம்… அவ பாஸிட்டிவ் கேர்ள்… அன்னைக்கு நடந்த கெட்ட சம்பவங்களை…. என்னோட அறிமுகம்னு ஒரு நல்ல நினைவால அதை சமன் செய்துட்டா… அவ்ளோதான் இதுதான் என் மீதான அவளோட வொர்ஷிப்புக்கு காரணம்…”
புரியாமல் பார்த்தவரிடம்…
“அப்பாக்கு… கண்மணிக்கு… சத்யாக்கு எல்லோருக்குமே தெரியும்… பெருசாலாம் விளக்கினது இல்லை… அது தேவையும் இல்லைனு தோணுச்சு… ஏன் கார்லா… அவங்க ஃபேமிலிட்ட கூட அதுக்கப்புறம் ஒரு நாள் கூட இதைப் பற்றி பேசியதில்லை… இந்த ஆறு வருசம் அவங்களோட பேசக் கூட நினைக்கலை… ஸ்பான்ஸரா அவர் வந்தப்போ கூட நான் கார்லாவுக்காக மட்டுமே யோசித்தேன்… மறுபடியும் அவள மீட் பண்ணி… அவளுக்கு தேவையில்லாத விசயங்களை மறுபடியும் ஞாபகப்படுத்தனுமான்னு… ஆனால் ஃபேபியோ கார்லாவைப் பற்றி எல்லாம் சொல்லி… அவ என்னை இன்னும் எந்த அளவுக்கு ஞாபகத்தில் வைத்திருக்கின்றாள் சொன்ன பின்னால தான் நான் இந்த ஆஃபர்க்கே ஓகே சொன்னேன்… ” என்றபடி சில நிமிடங்கள் மௌனமாக இருந்தவன்… என்ன யோசித்தானோ… அவனே ஆரம்பித்தான்
”யார்கிட்டயும் பெருசா சொன்னதில்ல… இப்போ உங்ககிட்ட சொல்றதுனால எனக்கும் ஒரு ரிலீஃப் கிடைக்கும்….” என்று ஆரம்பித்தவனுக்கு தெரியவில்லை… இனிமேல்தான் அவன் மனதின் சுமை கூடப் போகிறது என்று…
---
கோவா… இரண்டாம் நாள் இரவு…
முதல் நாள், இரண்டாம் நாள் பகல் பொழுது வழக்கமான கோவாவின் உற்சாக கேளிக்கைகளான… கேசினோ… ஸ்கூபா டைவிங்… பங்கி ஜம்ப்… பாரா செய்லிங்… பீச்… பப்… பார்ட்டி… என ரிஷியும் அவனது கல்லூரி நண்பர்களும் முழுக்க முழுக்க அதில் தங்களை மூழ்கடித்து கொண்டாடிக் கொண்டிருந்தனர்…
இவர்களோடு வந்திருந்த சில பேர்… அவர்களது பெண் தோழிகளுடன் வந்திருக்க… மற்ற சில பேருக்கோ அங்கிருந்த போதே கிடைத்த திடீர் பெண் தோழிகள் என சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்க… இரண்டாம் நாள் இரவும் வந்திருந்தது…
அன்றைய இரவு நைட் கிளப் என்று முடிவு செய்யப்பட்டிருக்க… அதற்கான சந்தோசத்தை முன்னிரவில் இருந்தே அந்தக் கூட்டம் அனுபவிக்க ஆரம்பித்து இருந்தது…
இதமான நிலவொளியோடு கூடிய கடற்கரை ஓரங்களில்… எங்கும் கூட்டம்… அந்த ஊரின் மக்கள்… இந்திய தேசத்தின் மாநில மக்கள்… அந்நிய நாட்டு மக்கள்… யார் யாரென தெரியாத படி பெரு வெள்ளமாக மக்கள் கூட்டம்… அந்தக் கூட்டத்திலும் அவன் நேரம்… வட இந்தியா சுற்றுலா வந்திருந்த நீலகண்டன் பார்வையிலும் பட்டிருந்தான் என்பது தனிக்கதை
அதெல்லாம் அறியாமல்… யார் என்ன செய்தாலும் ஏனென்று கேட்க ஆளில்லாத சுதந்திரமான இடமென… ரிஷியும் கட்டுப்பாடுகள் மறந்து… துறந்து… ஏன் அவனையே மறந்து உல்லாசம் மட்டுமே தன் ஒரே குறிக்கோள் என ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தான் தன் நண்பர்களுடன்…
”டேய் மச்சான்… எங்களுக்குத்தான் ஆள் இல்லை… சும்மா வந்திருக்கோம்… உனக்கென்னடா… உன் தலை எழுத்தா என்ன… எங்களோட சுத்திட்டு இருக்க” வழக்கம் போல மகிளாவை இழுத்திருந்தனர் அவன் நண்பர்கள்
”எனக்கே பெர்மிஷன் இல்லையாம்… இதுல என் ஆள் வேறயா…“ ரிஷி கடுப்படிக்க…
“மச்சி… ஸ்கூல் புள்ளைய லவ் பண்ணிட்டு இவ்ளோ கடுப்பு வெறயா…” ஒருவன் வேண்டுமென்றே ரிஷியை வம்பிழுக்க
“நாமதாண்டா… கோவாக்கு… பீச்சுக்குனு கூட்டிட்டு வரனும்.. மச்சிக்கு அந்தக் கவலையே இல்லை… வீட்லயே வச்சு… எல்லாத்தையும் முடிச்சுருப்பாண்டா… கொடுத்து வச்சவண்டா… மந்த்லி ஒன்ஸ் மச்சான் அவனோட பட்சியைத் தேடி பறந்து போறது தெரியாதா… மச்சான் இன்னுமா பேச்சுலரா இருப்பான்னு நினைக்கிற… இல்லை அந்தப் பொண்ணத்தான் விட்டு வச்சுருப்பான்னு நினைக்கிறியா”
கேவலமாக கண் சமிக்ஞை செய்து…. ரிஷியையும் மகிளாவையும் இரட்டை அர்த்ததுடன் கிண்டல் செய்து கொண்டிருக்க… அவர்களின் கிண்டலில் கோபப்பட வேண்டிய ரிஷியோ போதையில் அவர்களோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்…
சிரித்ததோடு மட்டுமல்லாமல்
“அடப் போங்கடா… ஒரே ஒரு சின்ன முத்தம்… அவசர அவசரமா… லிப் கூட டச் பண்ணுச்சான்னு கூட தெரியல… இப்போ அதுக்கு கூட வழி இல்லை” ரிஷி உளறிக் கொண்டிருந்தான் கூட்டத்தில் தன் நிலை மறந்து…
“என்னடா ஆச்சு… “
“என் தங்கச்சி பார்த்துட்டாடா… கொஞ்சம் நல்லவ.. லவ்வ மட்டும் சொல்லிட்டு கிஸ் பண்ணுனதை சொல்லாமல் விட்டுட்டா… எப்படியோ எங்க ஃபேமிலி ஓகே சொல்லிட்டாங்க… வீட்ல மத்தவங்க கிட்ட சொல்லலைனாலும் என் தங்கச்சி… மகிளா பக்கத்துலயே என்னை அளோ பண்ண மாட்றாடா… வில்லி… எப்போ பார்த்தாலும் மகிளா கூடயே ஒட்டிட்டு இருக்கா… அவ அப்படின்னா… மெகா வில்லன் என் மாமனார்… எனக்கு என்னமோ அந்தாளு மேல நம்பிக்கையே இல்லை… அவன் பொண்ண எனக்கு தருவான்னு… நீலகண்டன் ஏதோ ப்ளான் பண்றாண்டா” ரிஷியின் முகம் கவலையாக மாறி இருக்க… வழக்கம் போல் போதையில் அவனுக்கு ஊறுகாயாகவும் மகிளாவின் தந்தை மாறி இருந்தார்…
“ஏதாவது ஐடியா சொல்லுங்கடா போட்டுத் தள்றதுக்கு அந்த ஆளை… இல்லை மாமனாரைக் கரெக்ட் செய்வது எப்படி… யாராச்சும் கோச்சிங் எடுக்கறாங்களான்னு கேட்டுச் சொல்லுங்கடா… அட்லீஸ்ட் புத்தகமாவது இருக்கான்னு பாருங்கடா… ’நீலகண்டன’ அன்பால அசரடிச்சிருவோம்… “ என்ற போதே…. அவன் மொபைல் சிணுங்க…
வேகமாக எடுத்தான் விக்கியின் எண்ணில் இருந்து வந்த அழைப்பு என்பதால்….
எடுத்த போதே போதையில் பேசினால் எடுத்தவுடனே நண்பனிடமிருந்து திட்டும் விழுமே … அந்த பயமும் ரிஷிக்கு இருக்கத்தான் செய்தது… நண்பர்களை விட்டு விலகி தனி இடம் வந்திருந்தான் ரிஷி….
“சொல்லுடா விக்கி” என்று இவன் ஆரம்பிக்கும் முன்னேயே
ரிஷி நிலையை எல்லாம் உணராமல்… வழக்கமான தன் உரிமையான திட்டல்கள் இல்லாமல்
“டேய் மச்சான்… குட் நியூஸ்டா… எனக்கு ஆஸ்திரேலியால சீட் கன்ஃபார்ம் ஆகிருச்சு… காலேஜ்ல ஃபார்மாலிட்டிஸ்லாம் முடிச்சு… டிசி வாங்கிட்டேன்… நைட்டே பாண்டிச்சேரிக்கு கிளம்புறேன்…. என்னோட திங்க்ஸ்லாம் பேக் பண்ணிட்டேன்… வெகேட்டும் பண்ணிட்டேன்… சாரிடா… பிஸியா இருந்தேன்… மெசேஜ் மட்டும்தான் பண்ண முடிந்தது… நாளைக்குத்தான் பேசலாம்னு நினைத்தேன்… நீ டெக்ஸ்ட் பார்க்கவே இல்லை… அதுனாலதான்… என்கிட்ட இருந்த கீயை… மெய்ட் கிட்ட கொடுத்துட்டு போறேன்… வாங்கிக்க… அண்ணாவும் அப்பாவும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… பைடா… ரிலாக்ஸ் ஆகிட்டு பேசறேன்…” என்றவன் ரிஷியின் பதில் வாழ்த்தைக் கூட எதிர்பார்க்காமல் வைத்து விட்டான்… அவனுக்கு இருந்த சந்தோசத்தில்…
அடித்திருந்த மொத்த போதையும் ஒரே நிமிடத்தில் இறங்கி இருந்தார்ப் போல உணர்வு ரிஷிக்கு…
இவனது ஒரு வாழ்த்தைக் கூட எதிர்பார்க்காமல்… வைக்கும் அளவுக்கு நண்பனின் நட்பு இவனிடம் இருந்தாலும்… இவனுக்கோ திடிரென ஒரு வெற்றிடம்…. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…
இருந்த போதிலும் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லையே… இது அவன் கனவாகிற்றே…. என மனம் எடுத்துக் கொடுக்க… எத்தனையோ.. முறை முயற்சிக்க… விக்கி எடுக்கவே இல்லை… பின் பல அழைப்பிற்குப் பின் ஒரு அழைப்பில் அவன் எடுக்க…
”கங்கிராட்ஸ்டா விக்கி” ரிஷி தன் வேதனையை அடக்கிச் சொல்ல…
“ப்ச்ச்… இதுக்குத்தானா இவ்ளோ மிஸ்ட் கால்… நாளைக்கு பேசறேண்டா… பைக்ல போயிட்டு இருக்கேன்” என்றபடி வைத்துவிட… ரிஷி இதழ் சுழித்த ஏளனத்துடன்… கனமான மனதுடன் வைத்தான்
எத்தனையோ இரவுகள் அவன் குரலில் ஒலித்த எரிச்சல்… கோபம்… திட்டுக்கள் எல்லாம் உரிமையாக இருந்திருக்க… இன்றைய விக்கியின் எரிச்சல் ரிஷியை அந்நியப்படுத்தியது போல் இருக்க… என்னவோ ஒரு உணர்வு… வெறுமை மட்டுமே… அதுலிருந்து தப்பிக்க… வெகு தூரம் ஓட வேண்டும் போல் இருக்க… தன் கால் போன பாதையில் ரிஷி நடந்து கொண்டிருந்தான்…
“i don't like this chocolate taste... it’s not yummy… it feels somewhat different” குழந்தையின் குரல் தனித்து அவன் காதில் ஒலிக்க… அந்தக் குரலின் வித்தியாசம் உணர்ந்தவனாக திரும்பிப்பார்த்தான் ரிஷி… வெளிநாட்டு சிறுமி… சிறுமியின் அருகில் இருவர்…
அதே நேரம் அவனது அலைபேசியும் ஒலிக்க…
“டேய் எங்கடா இருக்க… நாங்க எல்லோரும் கிளம்பிட்டோம்…. உனக்காக வெயிட்டிங்” என்ற போதே…
“இதோ வர்றேண்டா” என பதில் சொன்னபடி… திரும்பிப் பார்க்க… அங்கு யாருமே இல்லை….
சுற்றிலும்… அந்நிய நாட்டவர்கள் .. குடும்பம் குடும்பமாக இருக்க… ரிஷியும் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தான்…
----
”டேய் மச்சான்…. எதை அடிச்சாலும்… போதையே ஏற மாட்டேங்குதுடா… ” விக்கி கல்லூரியை விட்டுப் போனதை மற்றவர்களிடமும்… சொல்ல…
”போவான்னு தெரியும்… அவன் இல்லாம இருக்கப் போறோம்னு யோசிச்சு மைண்ட் வைஸ் செட்டில் ஆகக் கூட டைம் கொடுக்காமல் போயிட்டாண்டா…”
“ஓ மச்சி… அவ்வளவு குழந்தையா என்ன நீ… அவன் இல்லாத வாழ்க்கையைப் உனக்கு பழக்கிட்டு போவான்னு வேற நினைச்சுட்டு இருந்தியா… அடப்போடா… ஃப்ரெண்ட்…. அவன் போனதுக்கே இவ்ளோ ஃபீல் பண்ற… இன்னும் எவ்வளவோ இருக்கேடா… என்ன பண்ண போற நீ” என்று ஒரு நண்பன் கலாய்க்க…
“ப்ச்ச் சும்மா இருடா… அவனே ஃபீல் பண்ணிட்டு இருக்காம்… சரியான செல்ஃபிஷ்டா அவன்… நல்ல வேளை நாங்கள்ளாம் அவன் கூட பழக்கம் வச்சுக்கலை… நீ ஃபீல் பண்ணாதடா மச்சி… நாங்கள்ளாம் இல்லை உனக்கு… “ என்ற ரிஷியின் சீனியர் நண்பன்… ரிஷியின் வகுப்புத் தோழனில் மிகவும் நெருக்கமானவனை அழைத்து… காதுக்குள் ஓதினான்
“டேய்… நான் சொல்ற ப்ராண்ட் நோட் பண்ணிக்கோ… சிப் அடிச்சாலே… வேற லெவல் ஆகும்… கூடவே சைட் டிஸ்ஷா… நம்ம ஏஜெண்ட் கிட்ட சொல்லி இருக்கேன்… ஆள அனுப்புவாரு… இன்னைக்கு அவனுக்கு எல்லாத்தையும் காட்டிருவோம்… இவ்ளோ நாள் எஸ்கேப் ஆகிட்டே இருந்தான்… இன்னைக்கு அனுபவிக்கட்டும்… அப்புறம் தெரியும்… எது சொர்க்கம்னு… ஃப்ரெண்டாம்… போயிட்டானாம்… இவ்ளோ ஃபீல் பண்றான்… இவன்லாம் ஒரு பொண்ண வேற லவ் பண்றானாம்….” தலையிலடித்துக் கொண்டே செல்ல..
“பாஸ்… அவனுக்கு பிடிச்சு இதெல்லாம் ஓகேனாலும் பரவாயில்ல… கொஞ்சம் பயப்படுவானே…” உண்மையிலேயே அவனது நண்பன் ரிஷியை உணர்ந்து சொல்ல…
“அடேய்… அவன் இங்க வந்தப்போ… நாம உசுப்பேத்தி தானே அவனையே லவ்வே சொல்ல வச்சோம்… அதே மாதிரிதான் இதுவும்… இதுவும் என்ஜாய்மெண்ட்னு அவனுக்கு புரியும் போது நம்மோட ஐக்கியமாகிருவான்… விடு… நம்ம ரிஷிடா… அனுபவிக்க கத்துக் கொடுக்கனும்டா… சொல்றதை சொல்லிட்டேன்… அப்புறம் உங்க இஷ்டம்“ என சொல்லி அனுப்பி வைக்க… ரிஷியின் வகுப்புத் தோழனும் ரிஷியிடம் திரும்பி இருந்தான்…
”இது உன்னோட ரூம் கீ….” என்றபடி கொடுக்க… அவனைத் தெரிந்தவனாக முறைத்தான் ரிஷி…
“போய்த் தொலைங்க… எதுவா இருந்தாலும் சேஃபா இருங்கடா… “ என்றவனிடம்…
”பராவாயில்லடா மச்சி… இந்த அளவுக்கு உனக்குத் தெரியுமா என்ன???… அப்போ டேக் இட்… ஒரு வேளை உனக்கும் யூஸ் ஆகும்” என்றபடி ரிஷியின் நண்பன் தன் கையில் வைத்திருந்த பாக்கெட்டை அவனிடம் கொடுக்க… அவன் முகத்திலேயே அதை தூக்கி எறிந்த ரிஷியிடம்…
”என்னோட ரூம் நம்பர்… 771 தாண்டா… தேவைப்பட்டா வந்து வாங்கிக்கோ” என்றபடி அவனது அறைக்குப் போக
“தர்ம அடி உனக்குத்தான் தேவைப்படும்… வாங்கிக்கறியா… போடா” என்றபடியே தன் அறைக்கு வந்த போது… அந்த அறையே…. அதன் அமைப்பே ரிஷிக்குப் பிடிக்கவில்லை…
பேசாமல் நேற்று வரை தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கே போய்விடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்திருந்தான் ரிஷி…
உடல் அசதி… அதற்கு மேல் யோசிக்கவிடவில்லை… அப்படியே கட்டிலில் சாய்ந்தவன் மனதில் விக்கியின் பிரிவுதான் இப்போதும் நினைவில்…
“போகிறான்” என ஏன் விட முடியவில்லை…
”ஒருவேளை நேரடியாகச் சொல்லிச் சென்றிருந்தால் இந்த அளவுக்கு வருத்தப்பட்டிருக்க மாட்டோமோ…. தன்னை விட்டு பிரிந்து செல்கிறோம் என்று ஒரு சின்ன வருத்தம் கூட அவன் குரலில் இல்லையே….” மனம் ஊமையாக அழ ஆரம்பித்து இருக்க… கட்டிலில் படுத்தபடி வெறிக்க ஆரம்பித்தவனுக்கு அந்த நிலை பிடிக்காமல் தன்னுடன் வந்திருந்த நண்பனுக்கு மீண்டும் கால் செய்தான்…
”டேய்… நான் பாருக்கு போறேண்டா… வர்றியா”
“நீ போயேண்டா… என்னை ஏண்டா டிஸ்டர்ப் பண்ற..” பல்லைக் கடித்தபடி வள்ளென்று விழ…
“ரூமுக்கு வந்து… இழுத்துட்டு போவேண்டா… எப்படி இருந்தாலும்… யார் கூட இருந்தாலும்” ரிஷியும் விடவில்லை அவனை…
”ஐயோ இவன் சொன்னது போல செய்தாலும் செய்வானே” கவலையோடு யோசித்த அவன் நண்பனுக்கு…. சீனியர் சொன்னது ஞாபகம் வர…
”எதுக்குடா… அங்கல்லாம்… ரூம் செர்வீஸ் இருக்கே… எல்லாம் அரேஞ்ச் பண்ணிருக்காங்கடா… வெயிட் பண்ணு… உனக்கு அனுப்பச் சொல்றேன்” என்று வைத்த ரிஷியின் நண்பன்… அவனது சீனியருக்கும் போன் செய்ய ஆரம்பித்தவன்…
அலைபேசியை வைத்த போது…
“இனி நம்மை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்” தனக்குள் சொல்லிக் கொண்டான்…
---
அறை தட்டப்படும் ஓசை கேட்க… ரிஷிதான் போதை ஏறவில்லை என்று சொல்லி பாட்டில் பாட்டிலாக அடித்துக் கொண்டிருந்தான்… அவன் ஆனால் நடை என்னவோ… அப்படி சொல்லவில்லை… எப்படியோ திறந்தவன்… வந்தது யார் எனக் கூடப் பார்க்கவில்லை… மீண்டும் கட்டிலில் சரிந்திருக்க…
அவன் முன்னே மது நிரம்பிய… குவளையுடன்… தன் முன் கை நீண்ட போதுதான் ரிஷியே உணர்ந்தான்… அதுவும் பெண்ணின் கை என்பதையும்…
குப்பென்று வியர்க்க… எழுந்து அமர்ந்தவனிடம்
“ஒன் ஆஃப் மை செர்வீஸ்” என்று அந்தப் பெண் நீட்ட… ஆடை பாதி ஆள் பாதி என்று கூட இல்லாமல்… அதை விட… குறைந்த பட்ச ஆடையோடு இருந்தவளின்… சந்தன நிற வெற்று தேகமும்… அப்பட்டமாக அவள் மேனியின் வளைவு நெளிவுகளுமாக அவன் கண் முன்னால் அந்தப் பெண்
நிமிர்ந்து அந்தப் பெண்ணின் முகம் பார்க்கக் கூடத் திராணியற்று… இருந்தவனின் தாடை தீண்டி... அவன் உதட்டில் கை விரல் பதித்து… மதுக்கிண்ணத்தை வைக்க… அந்த நொடி… ரிஷியும் அவனாக இல்லை…
அந்தப் பெண்ணின் சிறு விரல் தீண்டலே… அவனை அறியாமலேயே அவன் அறியாத இளமையின் அடுத்த பக்கங்களைத் தேடச் சொல்லி அவன் தேகம் அவனது மூளைக்கு கட்டளை இட… அனிச்சையாகவே… ரிஷியின் கரங்கள் உயர்ந்து அந்தப் பெண்ணின் இடையில் அழுத்தம் கொடுத்து அவனை நோக்கி இழுக்க… தன் மேல் சரிந்த அந்தப் பெண்ணின் முகம் அவன் வெகு அருகில்… அதிலும் அவள் அணிந்திருந்த வடக்கத்திய மூக்குத்தியில் பார்வை பதிய… ரிஷியின் உதடுகள் விரிந்தது… புன்னகையில்
“ஐ லவ் திஸ் ஆர்னமெண்ட்… பட் ஐ டோண்ட் நோ வை…” இளமையின் தடுமாற்றத்தில் பிதற்ற ஆரம்பித்தவனின் கண்கள்… தன் தேடலை அவளிடம் ஆரம்பித்திருந்தது… தேடலின் முதல் நிலையாக… அந்தப் பெண்ணின் கண்களைப் பார்க்க… காமம் இல்லை… காதல் இல்லை… மோகம் இல்லை… இயந்திரமாக அவனைப் பார்த்து புன்னகைத்தவளின் ஒரே பார்வையில் பட்டென்று அவனது மோகம் களைந்து… மீண்டவன் சட்டென்று எழுந்திருந்தான்… அதே நேரம் நிதானமாக
“வெளில போ…. கோ அவுட்” சொல்லி கை காட்ட… அந்தப் பெண்ணும்… பெரிதாக அவனிடம் கெஞ்சவில்லை…. வெளியேறி இருக்க… தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டான் ரிஷி…
அந்தப் பெண் வந்து போனதெல்லாம் அவன் நினைவில் இல்லை… அந்தக் கண்களில் அவன் தேடியது என்ன… அவன் எதிர்பார்த்தது என்ன… அவனுக்கே புரியவில்லை…
“வெட்கமா… காதலா… காமமா… மோகமா… குறும்பா” எது… அவனுக்கே தெரியவில்லை
இவை எல்லாவற்றையும் விட மகிளாவைத்தானே…. அவளின் அந்தத் துறு துறு விழிகள் தேடித்தானே தோற்றுப் போயிருக்க வேண்டும்… தன்னை அணைத்தவளை விட்டு விலகி இருக்க வேண்டும்… அதுவும் இல்லை….
அவன் என்ன எதிர்பார்த்தான்… அந்தக் கண்களில்… அவனுக்கே புரியவில்லை… அவன் தேடல் என்ன… மகிளாவை கண்ணுக்குள் கொண்டு வந்தான் வலுக்கட்டாயமாக… மகிளாவின் இறைஞ்சலான குறும்பான காதலான பார்வையை மீண்டும் மீண்டும் நினைக்க… அந்தப் பார்வை அவனைத் திருப்திப்படுத்தவே இல்லை…
வந்து சென்ற பெண்ணை விட… இந்த எண்ணம் தான் ரிஷியை அலைகழிக்க வைக்க… கண்களை மூடியபடி படுத்திருந்தவனின் கண்களின் மணி மட்டுமே அசைந்து… அது மட்டுமே அவனை ஆட்சி செய்து கொண்டிருக்க… தன்னை ஆட்சி செய்யப் போகும் பார்வையைத்தான் அவன் தேடிக் கொண்டிருக்கின்றான்… என்பது அவனுக்கே தெரியவில்லை அப்போதும்… இப்போதும்…
சட்டென்று தன் அலைபேசியை எடுத்தவன்… அந்தத் திரையில் இருந்த மகிளாவை பார்த்தபடியே இருந்தவன்…
“உன்னைத் தவிர… வேற யாராலும் என்கிட்ட நெருங்க முடியாது டார்லா… உன்னை நான் லவ் பண்றேன்… வேற யாரையும் இல்லை…” என்று சொல்லி வைத்தாலும்… அவன் மனம் சமாதானம் அடையவில்லை… தேகம் மனம் என அதுவும் மகிளாவிடம் சென்றடைய மறுக்க…. உதடுகள் மட்டும் மகிளாவின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது…
முதன் முதலாக ஏதோ ஒரு தேடல்…. மகிளாவிடம் எதிர்பார்த்து ஏமாற்றமானது போல உணர்வு…. ஆனாலும் அவள் தான் மனைவி… அவளிடம் தான் என் தேடல் முடியும்… முடியவேண்டும் மனதில் உரு போட்டுக் கொண்டான் ரிஷி… அதன் பின்குளியலறைக்குச் சென்று ஷவரின் அடியில் நிற்க… விக்கி ஞாபகம் மீண்டும் வந்தது….
“நீ நீயாகவே இருக்க மாட்டேயே… உன் பெயரே உனக்குத் தெரியாது…. பிறகு எதைத் தடுப்பாய்” அவன் கேள்வி கேட்டது இன்றும் ஞாபகம் வர…
“அவன் சொன்னது போல என்னை அறியாமல் தான் இருந்தேன்… எனைத் தடுத்தது என்ன….” கேள்விக்கு பதில் தான் இன்னும் அறியவில்லை…. மகிளாவின் காதலன் என சொல்லிக் கொண்ட போதும்….
---
Nice update