அத்தியாயம் 56
அதிகாலை வீட்டை விட்டுக் கிளம்பியது….ஹர்ஷித்… அர்ஜூனோடு வாக்குவாதம்… பின் ரிஷியின் அழைப்பு… அவன் கடைசியாக சொன்ன அந்த டிசம்பர் 25…. அதன் பின் மருதுவின் நினைவுகள் என பல்வேறு மனநிலைகளின் கொந்தளிப்புகளின் உச்சகட்டத்தில் இருந்தபடி வந்தவள்… யமுனாவை அவளது வீட்டில் இறக்கி விட்டபோது… மற்றதெல்லாம் மறந்திருந்தாள்… இலட்சுமி மற்றும் ரித்விகா மட்டுமே அவளது நினைவில்… ரிதன்யாவும் அலுவலகத்துக்குச் சென்றிருப்பாள்இலட்சுமி மாத்திரை போட்டு விட்டால்… அதன் பின் அவர் அதிகாலையில் தான் எழுந்திருப்பார்… … ரித்விகா மட்டுமே தனியே இருப்பாளே… கண்மணியின் எண்ணங்களில் இது மட்டுமே இப்போது
ரிஷியிடமும் சொல்லி இருந்தாள் இரவே வந்து விடுவதாக… அதனால் தான் ரிதன்யாவுமே அலுவலகம் புறப்பட்டதும்…
மணி இரவு 11… பெய்த மழையால் சாலை எங்கும் ஆறாக தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க… சீக்கிரம் வீட்டுக்குச் செல்ல வேண்டுமே என்ற பதட்டத்துடன் வந்து கொண்டிருந்தவளுக்கு… அவள் ஏரியாவை அடைந்த போதுதான் பதட்டமே குறைந்திருக்க… அதுவும் சில நிமிடமே… அதாவது அவள் பார்வையில் ரிதன்யா படும் வரை மட்டுமே…
மணி 11… அலுவலகத்தில் அல்லவா அவள் இருக்க வேண்டும்… யோசித்தபடியே பார்க்க… அவளது பின்னேயே ஒரு இளைஞன்… அதுமட்டுமல்லாமல் ரிதன்யாவின் முகம் சரியே இல்லை என்பது போல் இருக்க… வாகனத்தை அவர்கள் அருகில் நிறுத்தச் சொன்னவள்… இறங்கும் போதே… அவன் ரிஷியின் நண்பன் விக்ரம் என்பதையும் கண்டு கொண்டாள்…
ரிஷியோ விக்ரமோ… இவர்களுக்கு இந்த ஆறு வருடங்களில் அந்த வயதுக்கான உடல் மொழி மற்றும் முக பாவனைகளில் மட்டுமே முதிர்ச்சி கூடியிருக்க… முகவடிவில் மாறுதல்கள் இல்லை… கண்டுபிடிப்பதில் கண்மணிக்குமே சிரமம் இல்லை…
ஆனால் கண்மணியைத்தான் விக்ரமால் கண்டுபிடிக்க முடியவில்லை… அவன் பார்த்த கண்மணியோ பள்ளி மாணவி… இப்போதோ அவள் இளம்பெண்… ரிதன்யாவையே கண்டுபிடிக்க முடியாதவன் கண்மணியை மட்டும் கண்டுபிடித்திருப்பானா என்ன… தங்கள் அருகில் இறங்கி நின்ற கண்மணியைப் பார்த்து… பெரிதாக அவனிடம் முக மாறுதல்கள் இல்லை…
இறங்கிய போதே ரிதன்யாவின் அருகில் இருந்த அந்நிய இளைஞன் விக்ரம் என கண்டுகொண்டதால் மற்ற பயமெல்லாம் நீங்கி… முகம் மலர்ந்த படியே அவர்களை நோக்கி கண்மணி வர…
கண்மணியைப் பார்த்த விக்கியின் முகத்தில் இருந்த கேள்வியான பாவனையில்… “கண்மணி” என அவனது அருகில் சென்று மெதுவாக ரிதன்யா சொல்ல…
விக்கியின் முகம் அப்படியே மாறியிருந்தது… ரிதன்யாவை மீண்டும் பார்த்த போது அவள் யாரென தெரிந்த போது மின்னலென பளிச்சிட்ட அவன் முகம்…. கண்மணியை மீண்டும் பார்த்த போது… அவள் யாரென தெரிந்த போது… அதே முகத்தில் இருள் சூழ்ந்திருந்தது….
அவளை அவனுக்குப் பிடிக்காததற்கு ஆயிரம் காரணம் சொன்னாலும்… தன்னைப் பார்த்து அவள் உடையைச் சரி செய்த அந்த நிமிடத்தில் இருந்து விக்கிக்கு கண்மணியைப் பிடிக்கவில்லை என்பதே உண்மை… ஏனென்றால் தன்னை தன் பார்வையை சந்தேகப்பட்ட ஒரே பெண் என்றால் கண்மணிதான்… அதுதான் அவள் மீதிருந்த வெறுப்புகளின் அடித்தளம்… பின் அடுத்தடுத்து அவனே காரணங்களை வெறுப்புகளாக அடுக்கி வைத்திருந்தான்… ஆனால் அதன் பின் பெரிதாக சந்திப்புகள் இல்லை… பிரச்சனைகளும் இல்லை… ஆனால் இன்று நேரில் பார்த்த போது… அவன் மனதில் இருந்த வெறுப்பு… இன்றும் மாறாமல் அப்படியேதான் இருந்தது அவனுக்கு…
அவனது நண்பனின் மனைவி என்றாலும்… அவன் தான் அப்படி நினைக்கவே இல்லையே… ஆனாலும் கண்மணி அருகில் வந்த போது கண்மணியையும் மீறி… அவள் மீதிருந்த வெறுப்பையும் மீறி…. ரிஷியை அவன் முன்னால் நிறுத்தியதுதான்… காரணம் கண்மணியின் கழுத்தில் இருந்த அந்த தடிமனான தாலிச் சங்கிலி… இவளின் கணவன் என் நண்பனா… என்று நினைக்கும் போதே அவன் முகம் இன்னுமே கடுத்தது
விக்கிதான் இப்படி இருந்தான்… கண்மணிக்கோ பெரிதாக விக்கியின் மீது வெறுப்பெல்லாம் இல்லை… இரண்டு மூன்று சந்திப்புகள் சுமூகமாக இல்லை… அதன் பின் பார்க்கவேயில்லை… இன்று சந்தித்த போதோ… அவன் தன் கணவனின் நண்பன் என்ற ரீதியில் மட்டுமே பார்த்தவள்…
“நீங்க ரிஷி ஃப்ரெண்ட்… விக்கி சார்தானே” என்று மரியாதையாகத்தான் ஆரம்பித்தாள் கண்மணி… ஏனோ விக்கியால்தான் அவள் கொடுத்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை….
தன்னை நோக்கி பேசிய கண்மணியை சற்றும் கண்டுகொள்ளாமல்… அலட்சியப்படுத்தியவனாக…
“ரிதன்யா… நான் கிளம்புகிறேன்..” என்று ரிதன்யா மட்டுமே அங்கு இருப்பது போல் விக்கி சொல்ல.. கண்மணிக்கு அப்போதுதான் புரிந்தது…. விக்கி தன்னைத் தவிர்க்கிறான் என்பதே.. புரிந்தவள் அமைதியாகியும் விட்டாள்… அவளைப் பொறுத்தவரை அவன் பேசவில்லை என்பது அவளுக்கு ஒரு பெரிய விசயமாகவேப் படவில்லை… கண்மணியும் ஒதுங்கிக் கொண்டாள்…
இங்கு விக்கியுமே இப்போது முடிந்த வரை அங்கிருந்து சீக்கிரம் செல்ல நினைத்தான்… சில பேரைப் பார்த்தால் நல்ல உணர்வு ஏற்படும்… சில பேரைப் பார்த்தால்… எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்… கண்மணியைப் பார்த்த போது விக்கிக்குமே அப்படித்தான்… ஏனோ இங்கு இருந்தால் பிரச்சனை வரும் போல தோன்றியது… அதனாலேயே விக்கியும் ரிதன்யாவிடம் இருந்து விடைபெற...
கண்மணி இப்போது… ரிதன்யாவிடம் திரும்பி
“போகலாமா ரிதன்யா…” என்று கேட்க…
“ஹல்லோ… உங்க கூடவா நான் வந்தேன்… நீங்க போங்க… எனக்கு எப்போ வீட்டுக்கு வரணும்னு தெரியும்… குழந்தை மாதிரி ட்ரீட் பண்ற ஆக்டிங்லாம் என்கிட்ட வேண்டாம்… “ சுள்ளென்று விழுந்தாள் ரிதன்யா…
எப்போதும் போல ரிதன்யாவின் குத்தலான வார்த்தைகளை இன்றும் கடந்து செல்ல நினைத்தவளாக கண்மணி ஏதும் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள்…
ரிதன்யாவை வற்புறுத்தவெல்லாம் இல்லை… அதேபோல் விக்கியையும் ரிதன்யாவையும் சேர்த்து சந்தேகமும் படவில்லை… அவள் வரும் போது வரட்டும்… எனச் செல்ல ஆரம்பிக்க
“இப்டிதான் விக்கி… அப்படியே நல்லவ மாதிரி ஆக்ட் பண்ணுவா… என்கிட்டயே இப்டினா அண்ணாகிட்ட எப்படின்னு பார்த்துக்கங்க… அத்தனையும் நடிப்பு… ” என்ற போதே கண்மணி நின்றிருந்தாள்… நின்றதோடு மட்டுமல்லாமல் மீண்டும் அவர்களை நோக்கி வந்தும் இருந்தாள்…
ரிதன்யா தன்னை நேராகப் பார்த்து தன்னிடம் பேசிய வார்த்தைகளை அவள் ஒருபோதும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை… தன் கணவனின் தங்கை… என்றாவது ஒருநாள் புரிந்து கொள்வாள்… புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை… என்று கடந்து சென்றிருந்தாள் இதுவரை… ஆனால் இன்றோ… யாரோ ஒரு முன்றாம் மனிதன் முன்… அதுவும் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காதவன் முன் தன்னைப் பற்றிச் சொன்னதை சாதரணமாக விட முடியவில்லை அவளால்… அதுதான் காரணமா இல்லை காலையில் இருந்து அவள் அனுபவித்த பல்வேறு அனுபவங்களின் விளைவால் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லையா அவளுக்கே தெரியவில்லை
“ரிதன்யா… வார்த்தைகளை பார்த்து விடு… யார் முன்னால… யார்கிட்ட பேசுறோம்னு தெரிந்து பேசு” என்று விரல் காட்டி பத்திரம் என்பது போல் கண்மணியும் எச்சரிக்கை விடுத்தவள்… ரிதன்யாவுக்கு வழக்கமாக கொடுத்த மரியாதை விளிப்புகளை எல்லாம் தூக்கி தூர எறிந்திருந்தாள்
“தெரிஞ்சுதான் பேசுறேன்… நான் இப்படித்தான்… உன்னால என்கிட்ட பேச முடியாது… உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்… ட்ராமா குயின் நீன்னு எனக்கு நல்லாவே தெரியும்… அது எனக்குத் தெரியும்னு உனக்கும் தெரியும்… உன்னோட ட்ராமாலாம் என்கிட்ட செல்லாதுன்னு … எங்கே என்கிட்ட பேசுனா… வம்பு வச்சுகிட்டால்… உன் சாயம் வெளுத்துரும்னு என் கிட்ட பேசாமல் கோழை மாதிரி ஓடி ஒளிஞ்சுக்குவ… இப்போ என்ன… இன்னைக்கு என்ன… புதுசா தைரியம் வந்திருக்கு” ரிதன்யா கண்மணியை விட்டு விளாச ஆரம்பித்திருக்க…
விக்கிக்கோ ஆச்சரியமாக இருந்தது… கண்மணியை… அந்தத் திமிர் பிடித்தவளை… தன்னவள்… வார்த்தைகளில் பிடி பிடித்துக் கொண்டிருந்ததையும்… கண்மணி வார்த்தைகளின்றி நிற்பதையும் பார்த்து…
கண்மணி இப்போதும் முயன்று பொறுமையாக இருக்க முயன்றவளாக… பொறுமையை வரவழைத்தவளாக
“நான் கோழைனே வச்சுக்க… வீட்டுக்குப் போகலாம் வா… அங்க வந்து என்னை என்ன வேணும்னாலும் பேசு… ரிஷியோட மனைவியா… அந்த வீட்டு மருமகளா எனக்கு உன் மேல உரிமை இருக்கு” என்றபடி கைகளைப் பற்ற… சட்டென்று உதறினாள் ரிதன்யா…
”ஏய்… இந்த தொடுற வேலையெல்லாம் வச்சுகிட்ட… என் வீட்ல வேலை பார்த்த வேலைக்காரி கூட உன் ரேஞ்சுக்கு இருக்க மாட்டா… எங்க வீட்டு மருமகளா நீ…” ஆத்திரத்தோடு படபடத்தாள் ரிதன்யா…
கண்மணிதான் ரிஷியின் மனைவி என்று தான் சொன்னபோது விக்கி காட்சிய அலட்சியம்… கண்மணியே அவளை தானாக விக்கியிடம் அறிமுகம் செய்த போது விக்கி அவளைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிய விதம் பார்த்தவளுக்கு மனம் குமுறியது… கண்மணியை நினைத்து அல்ல… தன் அண்ணனை நினைத்து
நண்பனின் மனைவி என்று கூட விக்கி நினைக்கவில்லையே… அந்த மரியாதையைக் கொடுக்க வில்லையே… கண்மணியை அவன் பார்த்த விதம் ரிதன்யாவுக்குமே புரிய… அப்போதும் கண்மணியை அவள் நிலையை நினைத்துப் பார்க்கவில்லை ரிதன்யா… விக்கி ரிஷியின் நெருங்கிய நண்பன் அவனே கண்மணியை மதிக்கவில்லை… ஒரு பொருட்டாக மதிக்க வில்லை… இதே போல் தானே ரிஷியைச் சார்ந்த மற்றவர்களும் நினைப்பார்கள்… ஆக மொத்தம் இந்தக் கண்மணியால் தன் அண்ணனுக்கு கீழான நிலையே… அவன் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும்… மனைவியால் தன் அண்ணனுக்கு பெருமை இல்லை தானே…
இந்த எண்ணம் வலுப்பெற வார்த்தைகளை விட்டிருந்தாள் ரிதன்யாவும்…
உணர்ச்சி வசப்பட்டிருந்த ரிதன்யாவைப் பார்த்த விக்கிதான் சுதாரித்தவனாக…
“ரிதன்யா..” என்று அதட்டலைப் போட…
“ரிஷியோட மனைவின்னு சொன்னப்போ நீங்க எவ்ளோ இளக்காரமா பார்த்தீங்க…. நீங்க சொல்லுங்க…. இவ என் அண்ணனுக்கு ஏத்த பொண்ணா… என் அண்ணனோட நிலை நாளைக்கே மாறிரும்… ஆனா இவ என் அண்ணாவோட வாழ்க்கைல இருந்து போயிருவாளா…”
”அப்படி என்ன குறை கண்டுபிடிச்சுட்ட என்கிட்ட” கண்மணியும் தன்னைக் கட்டுப்படுத்த நினைத்தாள் தான்… முடியாமல் போக… அவளும் தன்னை மறந்து ரிதன்யாவிடம் பேச ஆரம்பிக்கும் போதே… அருகில் சென்ற வாகனம் கண்மணியின் மீது மீது சேற்றை வாறி இறைத்து விட்டு போக… ரிதன்யா சிரிக்க ஆரம்பித்திருந்தாள் சத்தமாக… கண்மணியின் நிலையைப் பார்த்து…
“இதுதான் நீ…. என் அண்ணன் கோபுரம்… ஆனால் நீ…. கீழ இருக்கிற… அதை நான் சொல்லத் தேவையே இல்லை… இப்டியே கண்ணாடில போய்ப் பாரு…. நீ என் அண்ணனுக்கு தகுதியானவளான்னு புரியும்… அறிவாளி புத்திசாலின்னு ஊர் சொல்லுதுள்ள… யோசி… அதெல்லாம் இருந்துச்சுன்னா… என் அண்ணனை விட்டு ஒழிஞ்சுரு… உனக்கு புண்ணியமா போகும்…” கையெடுத்துக் கும்பிட்டிருக்க… நாக்கில் விசம் இருக்குமா என்ன… ரிதன்யாவின் வார்த்தைகளில் அது உணர்ந்தாள் கண்மணி…
அதைச் சீரணிக்க முடியாமல் கண்மணி தடுமாறினாள் தான்… ஆனாலும் தாங்கிக் கொண்டாள் தான்…
“ரிஷியை விட்டு விலகி விடு” அர்ஜூன்… பார்த்திபன்… ரிதன்யா என ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் இருந்து அவள் மனதில் இந்த வார்த்தைகளை கண்மணியிடம் பதித்துக் கொண்டே இருக்க.. ஆனாலும் கண்மணி அவர்களின் வார்த்தைகளை எல்லாம் தன்னை நெருங்கவே விட வில்லை… தைரியமாகவே எதிர்க் கொண்டாள்தான்… தக்க பதிலடி கொடுத்தாள் தான் வார்த்தைகளாலே…
ஆனால் விக்கியிடம் மட்டும்?????
”அப்போ நான் முட்டாளாவே இருந்துக்கிறேன்… இப்போ என் கூட வா” என்றவள்… பேசியதோடு மட்டுமல்லாமல்… ரிதன்யாவின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக தன்னோடு இழுக்க…
விக்கி வந்திருந்தான் இருவருக்கும் இடையே
“அவதான் வர மாட்டேங்கிறாள்ள… நீ கிளம்பு… நான் கொண்டு வந்து விடுகிறேன்” என்றவனை இப்போது கண்மணி அலட்சியம் செய்திருந்தாள்…
ரிதன்யாவோ கண்மணியிடமிருந்து அவளது கைகளை விலக்க முயன்று கொண்டிருக்க… கண்மணியின் பிடிமானம் வலுவாக இருக்க… அவளால் முடியவில்லை…
“சொல்றேன்ல… அவள விடுன்னு… காது கேட்கலையா” ரிதன்யாவின் நிலை தாங்காமல் விக்கி கோபத்தோடு கண்மணியிடம் வந்து நிற்க…
“இவ என் ஹஸ்பண்டோட தங்கை… நான் அவளோட அண்ணி… நீங்க யாரு சார் இடையில…” விக்கியை கண்மணி தள்ளி நிறுத்த
”அதை அவ நினைக்கனும்… உன்னைலாம் மனுசியாவே நினைக்க முடியாது… இதுல அண்ணினு வேற நினைப்பாங்களாமா” விக்கி எள்ளலாகப் பேசியபடி கண்மணியைப் பார்க்க
“ரிஷியோட ஃப்ரெண்ட்னு பார்க்கிறேன் விக்கி… போயிருங்க….”
‘ஆனால் என்னால முடியலயே… ரிஷியோட வைஃப்னு நினைக்கத் தோணலையே” நக்கலாகச் சொன்னவன்
“ஆமாம்… என்ன பண்ணுன நீ… எப்படி அவனை மடக்கினேன்னு தெரியலையே… அவன்லாம் இந்த மாதிரி ஒரு லோ கிளாஸ் பொண்ணுகிட்ட சாயுற ஆளே கிடையாது… இவ சொன்னதில இருந்து அதைத்தான் யோசிச்சுட்டு இருக்கேன்… அன்னைக்கு நீ ஹாஸ்பிட்டல்லயே அவனை பார்த்த பார்வை சரி இல்லை… அப்போவே அப்படின்னா” சொல்லியபடி கண்மணியைப் பார்த்த அவன் பார்வையில் அப்படி ஒரு கீழான பார்வை…
கண்மணியின் கண்களில் நெருப்பு ஜூவாலை தான்… கண்மணியை ’லோ கிளாஸ்’ என்று சொன்ன விக்கியின் வார்த்தைகளில் தான் மிக மிக மட்டமான வார்த்தைகள் வந்திருந்தது… உணராமலா சொல்லியிருப்பான்…
இல்லை கேட்டவள் உணராமல் இருப்பாளா….
அவளையும் மீறி விக்கியின் கன்னங்களை நோக்கி உயர்ந்தது தான்… இருந்தும் அப்போதும் இடம் பொருள் ஏவல் எல்லாம் உணர்ந்தவளாக… கைகளை இறக்கியவள்
ரிதன்யாவிடம் திரும்பி…
“இவ்ளோ கேவலமா ஒருத்தன்… உன் அண்ணன் பொண்டாட்டிகிட்ட பேசுறதைக் கூட… நீ பார்த்துட்டு இருப்பியா ரிதன்யா… நான் உன்னல்லாம் எங்கோ வச்சுருந்தேன்” ரிதன்யாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே
“என்ன… பெரிய ரவுடின்னு காட்டுறியா என்ன… கையை ஓங்கிட்டா பெரிய ஆளுன்னு நினைப்பா… அது அப்படி இல்லை உன் லோ கிளாஸ் மெண்டாலிட்டிய காட்டுது… ஞாபகம் வச்சுக்கோ… எனக்கும் கை இருக்கு…. அடிச்சுருப்பேன்… போனால் போகுதுன்னு… விடறேன்… அதுவும் உனக்காக இல்லை… கழுத்துல போட்ருக்கியே அந்த தாலி என்னை தடுக்குது… அது மட்டும் இல்லாமல் இருந்திருக்கனும்…. வேற மாதிரி ஆகி இருக்கும்… “ விக்கியும் கர்ஜனைக் குரலோடு பேச ஆரம்பித்திருந்தான்… கண்மணி தன்னைக் கைநீட்டிய போதே கோபத்தின் உச்சக்கட்டத்தில் நின்றிருக்க… கண்மணி விசயத்தில் கவனமாக நடக்க முயன்ற விக்கியும் தன்னிலை கடந்தவனாக நின்றிருந்தான்
”என்ன மாதிரி இருந்திருக்கும்… காட்டுங்க பார்க்கலாம்” கண்மணி அவன் முன் நின்றபடி கேட்க… விக்ரமும் ஆவேசத்துடன் பார்க்க…
ரிதன்யாவுக்கு அப்போதுதான் புரிந்தது… விக்கிக்கு கண்மணியை எந்த அளவுக்கு பிடிக்காது என்பதே… அவனே அவனைக் கட்டுப்படுத்தியபடிதான் இருந்திருக்கின்றான்… தான்தான் நிலைமையை பெரிதுபடுத்தி விட்டோம் என்று கூட தோன்றியதுதான்…
கண்மணியை அவளால் சமாதானப்படுத்த முடியாது… விக்கியின் அருகில் போக…
“நீ இரு ரிதன்யா… என்கிட்டயே இவ்ளோ திமிரைக் காட்டுறான்னா… அப்போ உங்க கிட்டலாம்… நீ சொன்னப்போ கூட விட்டுட்டேன்… என்ன பண்ணிருவா இவ… ரிஷி இந்தியா வரட்டும்… அப்புறம் இவளுக்கு இருக்கு” என்ற போதே
“என்ன பண்ணுவீங்க…” கண்மணி நக்கலுடன் கேட்க
”ரிஷிக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது… எல்லாமே எனக்குத் தெரியும்… உன்னையும் அவனுக்குப் பிடிக்காது… வேற வழி இல்லாமல் வீட்டுக்கு வேலைக்காரி… உரிமையான வேலைக்காரி… அவ்ளோதான் அவனைப் பொறுத்தவரை நீ… இதுதான் நான் புரிஞ்சுக்கிட்டது… சீக்கிரமா இந்த தாலி இங்க இருந்து இறங்கும்… அப்போ இருக்கு” சொல்லி முடிக்க வில்லை… விக்கியின் கன்னத்தில் கண்மணியின் கரங்கள் ஆக்ரோஷத்துடன் பதிந்திருந்தது….
----
கண்மணி ரிதன்யா இருவருமே… வீடு வந்து சேர்ந்திருந்தனர்… இதில் கண்மணி முன்னதாகவே வந்து விட…
வீட்டின் உள்ளே வந்த போது…. கண்மணி எதிர்பார்த்தது போல இலட்சுமி உறங்கவில்லை… அதாவது அவருக்கான மருந்துகளை உட்கொள்ளவில்லை என்பது தெரிய… வீட்டின் வெளியே செருப்பை கழட்டி விட்டது போல… வெளியே நடந்த மற்றதெல்லாம் தனக்குள் புதைத்துக் கொண்டவளாக
“நான் தான் வந்துருவேன்னு தெரியும்ல அத்தை… நேரத்துக்கு டேப்லட் எடுத்துக்கங்க… இவ்ளோ தூரம் வந்துட்டு… இப்போ மெடிக்கேஷன ஒழுங்கா எடுத்துக்கலைனா… என்ன ஆகும்…” உரிமையோடு அதட்டியவளாக… ரித்விகாவையும் அதட்டினாள்… ஏன் மாத்திரைகளைப் போட வைக்கவில்லை என்பதற்காக
ரித்விகாவிடம் இலட்சுமிக்குத் தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொடுக்கச் சொன்னவள்… மழையில் நனைந்திருந்த படியால்… குளிக்கப் போனாள்… தனது தந்தை வீட்டுக்கு…
எப்படியும் ரிதன்யாவும் வருவாள்… அவளும் குளிக்க வேண்டும் என்பதை அறிந்தவளாக…
இவள் வெளியேறும் போதே… ரிதன்யாவும் உள்ளே நுழைய… இருவரின் பார்வைகளும் அக்னி தாங்கிய வேல் போல ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டதுதான்… காட்டிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் கடந்தும் சென்றிருந்தனர்…
---
அந்த இரவிலும்… மழைக்காலத்திலும்… தலையோடு குளித்திருந்தாள் கண்மணி… வெளியே எப்படியோ… அவளுக்குள்ளோ அனல் தான்… காலையில் இருந்து சற்று முன் நடந்த நிகழ்வுகள் வரை… மொத்தமாக அவள் மனம் கனத்திருக்க… குறைந்த பட்சம் தண்ணீரை தலையில் ஊற்றியாவது அனலைக் குறைக்க நினைத்தாள்… தலையில் தண்ணீர் பட்டதும் கொஞ்சம் மனம் இலேசான உணர்வு கொடுத்திருக்க…
தலையைத் துவட்டியபடி… அமைதியாக தன் அன்னையின் புகைப்படம் முன் நின்றவள்… அனைத்தையும் மறந்து பவித்ராவின் முகத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்...எதையோ நினைத்து தனக்குள்ளாக சிரித்துக் கொண்டவளுக்கு.. மீண்டும் உணர்வுகள் வந்த போதே… தான் வீட்டுக்கு வந்ததை ரிஷிக்கு இன்னும் சொல்லவில்லை என்பதை உணர்ந்தவளாக… எத்தனை மணிக்கு வந்தாலும் அவனை அழைத்துச் சொல்லச் சொல்லியிருக்க… அதன் பொருட்டு அவனுக்கு போன் செய்ய போனை தன் கைப்பையில் தேடும் போதே விக்கியின் வார்த்தைகள் எல்லாம் ஞாபகம் வந்தது…
அதிலும் கடைசியாக ரிதன்யாவிடம் அவன் சொன்னது….
“ரிது… இங்க நடந்ததெல்லாம் உன் அண்ணாகிட்ட சொல்லி வைக்காத.. அவனுக்கு இந்த ப்ராஜெக்ட் முக்கியம்… அவன் மைண்ட் வைஸ்… ஸ்டேப்ளா இருக்கணும்… ஏதாவது சொல்லி அவனைக் குழப்பி வைக்காத… பொறுமையா இரு.. இவளப் பார்த்துக்கலாம்“ அந்த நிலையிலும் விக்கி ரிஷியை கணித்துச் சொல்ல… விக்கியின் ரிஷி மீதான அக்கறை கூட கசந்தது இப்போது கண்மணிக்கு…
தான் மட்டுமே ரிஷியின் எல்லாமுமாக இருக்க வேண்டும்… அப்படித்தான் இதுநாள் வரை இருந்தது…. ரிஷியை நலன்… இப்போதைக்கு அவனுக்கு எது முக்கியம்… விக்கி உணர்ந்து சொன்னது எதுவுமே… முக்கியமாக ரிஷியைப் பற்றி விக்கியின் அக்கறை… கண்மணிக்குப் பிடிக்கவில்லை…
திடீரென்று அவன் தனக்கும்-ரிஷிக்கும் இடையே வந்தது போல் உணர்வு…
மகிளா… அர்ஜுன் இவர்கள் எல்லாம் ரிஷி-கண்மணி வாழ்க்கையில் இப்போதும் இருக்கிறார்கள் தான்… ஆனால் அவர்கள் கொடுக்காத உணர்வை விக்கி கொடுத்திருந்தான் கண்மணிக்கு… விக்கியிடம் எழுந்த உணர்வை தவிர்க்கவே முடியவில்லை…
வேண்டாம் என்று நினைத்தாலும்… பல உணர்வுகள் அவளைச் சூழ்ந்து அலைகழிக்க… ரிஷியை… இல்லையில்லை அவன் வார்த்தைகள்… அது மட்டுமே போதும் என்பது போல… அவனைத் தேட ஆரம்பித்தவள்… அவனுக்கு அதிகாலை என்பது தெரிந்தாலும்… இன்று அவனோடு வெகு நேரம் பேச வேண்டும்.. என்று முடிவு செய்தவளாக… போனை எடுக்க… பல தவறிய அழைப்புகள்… ரிஷி… அர்ஜூன்… யமுனா… நட்ராஜ்… பார்த்திபன் என வரிசை நீண்டிருக்க… ’ரிஷி’ என்ற பெயர் மட்டும் அவள் முகத்தை மலர வைக்கத்தான் செய்திருந்தது….
அதைப் பார்த்துக் கொண்டிருந்த போதே அவனே அழைக்கவும் செய்ய… அவனிடம் இருந்த அலைபேசியின் ஒலியே… சற்று முன் அவள் அனுபவித்த அத்தனை மனக்கலக்கத்தையும் தூர ஓட்டியது போல் இருக்க… இன்றிருந்த அவள் மனநிலைக்கு ரிஷியிடமிருந்து வந்த அவனின் அழைப்பு மணியே… அவ்வளவு சந்தோசம் கொண்டு வந்திருந்தது கண்மணிக்குள்
விக்கி-ரிதன்யா விசயம் எல்லாம் பேசி… ரிஷியையும் குழப்ப கண்மணி தன்னையும் குழப்பிக் கொள்ள தயாராக இல்லை… ரிஷியோடு பேசிவிட்டால் போதும் தன் மனதில் இருக்கும் மற்ற குழப்பமெல்லாம் போய்விடும்… என சந்தோசத்தோடு எடுத்தாள் தான் கண்மணி… ஆனால் அவளின் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் அடியோடு மாற்றியது மட்டுமல்லாமல்.. அன்றைய தினத்தில் கண்மணியை மனக் கஷ்டத்தில் தள்ளிய நபர்களின் இடத்தில் முதல் இடத்திற்கு வந்திருந்தான் அவளின் மணவாளன் ரிஷி என்கிற ரிஷிகேஷ்…
/*Some snippets from கண்மணி... என் கண்ணின் மணி-57
“சாரிலாம் கேட்க முடியாது… விக்கி உங்க ஃப்ரெண்ட்னா அது உங்களோட… நான் அதுக்கு அசிங்கபட முடியாது… நான் போனை வைக்கிறேன்” கண்மணியும் கறாராகவே சொல்ல…
---
“ஓ அப்படிங்களா மேடம்… நீங்க கண்மணி மட்டும் இல்லை… கண்மணி ரிஷிகேஷ்… என் பொண்டாட்டி இப்படித்தான் இருக்கனும்னு நினைக்கிறது தப்பா…. அதை உங்ககிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணக் கூடாதா… ”
---
“என்ன மிரட்டறியா…” ரிஷி நிதானமாகக் கேட்க…
---
கண்மணியும் தூக்கித் தூரப் போட்டிருந்தாள் அலைபேசியை…
நாளை பதிவிடப்படும்
*/
Rithu neryellam che
Viki worst behaviour