அத்தியாயம் 54:
கண்மணிக்கு மாறான நிலையில் யமுனா இருந்ததை உணர்வுகளால் சூழப்பட்டு தன் வசம் இல்லாத கண்மணியால் கணிக்க இயலவில்லை… அதனால் அவள் யமுனாவிடமும் அதிகமாக பேசவில்லை… அவளைக் கவனிக்கவும் இல்லை… சாதாரணமாகவே கண்மணி அவ்வளவு ஈஸியாக யாரிடமும் பேசுபவள் கிடையாது. இன்று மட்டும் புதியதாக மாறுவாளா என்ன…
சேறு படிந்த உடைகளை மாற்றுவதற்காக மாற்றுடைகளை எடுத்தபடி… குளியலறைக்குப் போக… சரியாக அவளது அலைபேசியும் அடிக்க… நினைத்தது போல ரிஷியே தான்…
வேகமாக எடுத்தவள்…
“இண்டெர்வியூ முடிஞ்சுருச்சா ரிஷி… ஒண்ணும் பிரச்சனை இல்லை தானே… நல்லபடியா போனதுதானே…” அவனைப் பேசவே விடாமல் ஆரம்பித்து கேட்டவளின் குரல் வழக்கமாக ரிஷியிடம் பேசும் கண்மணியின் குரலாக இல்லை… அதே நேரம் அந்தக் குரலில் கவலையும் தொணிக்கவில்லை…
கண்மணியை… அவள் குரலை கவனிக்கும் ரிஷியுமே இல்லை எனலாம்… என்ன கண்மணி கவலையாக இருந்தாள்... இவனோ... அவளுக்கு மாறாக சந்தோசமாக இருந்தான்... அதுதான் வித்தியாசம்
கண்மணி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம்அவனிடமிருந்து பதில் இல்லை… மாறாக அவன் புறம் இருந்து எப்போது இவள் குரல் கேட்டானோ அப்போதிருந்து அவனின் கலகலப்பான சிரிப்புச் சத்தம் மட்டுமே கண்மணியின் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது…
அவன் புன்னகையைப் பார்க்க காத்திருந்தவள்தான் அவள் மனைவி… ஆனால்…. அர்ஜூனோடு பேசி விட்டு வந்திருந்ததில் அவளுக்கு ரிஷியின் தன்னை மறந்த சிரிப்பில் கவனம் இல்லை… மனம் கனத்து இருக்க… அவள் கவனமும் கணவனிடத்தில் குவியவில்லை… ஏதேதோ ஞாபகத்தில் கவனம் சிதறியிருக்க…
“என்ன ரிஷி… சொல்லிட்டு சிரிக்கலாம்ல…” கண்மணியை மீறி அவளது குரலில் எரிச்சல் இழையோட
“சாரி… சாரி… என்ன கேட்டம்மா… ஹான்… நல்லா போனதும்மா….. எங்க இருக்க… ஹர்ஷித்தைப் பார்த்தியா… மீட் அப்போ இடையில பேசினான்“ என்றவன் சிரிப்பை அடக்கியபடி…கஷ்டப்பட்டு சிரிக்காமல் பேசி இருப்பான் போல… வார்த்தைகளை முடிக்கும் போதே மீண்டும் சிரிக்க ஆரம்பித்திருக்க…
“ரிஷி…” இப்போது கண்மணியின் குரலில் கடுமை குறைந்திருக்க… அதே நேரம் ரிஷியும் வீடியோ காலுக்கு அவளை அழைத்திருக்க…
அவள் தற்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் கண்டிப்பாக என்ன நடந்தது என்று கேட்பான்… அர்ஜூனைத் தேவையில்லாமல் இழுக்க வேண்டி இருக்கும்… ரிஷி டென்சன் ஆவான்… இது தேவையா… என்று நினைத்தவள்… காணொளி அழைப்பைத் தவிர்க்க நினைத்தவளாக
“இப்போ வீடியோ கால் முடியாது… சொல்லுங்க ரிஷி…” முடிந்த அளவு சாதாரண குரலில் பேசி முடிக்க… ரிஷியால் இப்போதும் அவளை... அவள் குரல் மாறுதலைக் கண்டுபிடிக்கமுடியவில்லை
”ஒகே… ஒகே… கோபப்படாதீங்க ரவுடி மேடம்… ஏன் சிரிச்சேன்னு சொல்றேன்… அதாவது மேடம் ரொம்ப சிம்பிள்... சிம்பிள்னு சீன் போடுவீங்களே… அது ஏன்னு இப்போ புரியுது சின்ன வயசுலயே… மொத்தமா முடிச்சுட்டீங்க போல… பவுடர் டப்பா… கண்மை டப்பா… எல்லாமே அப்போதே காலி பண்ணிட்டீங்க போல …”
”என்ன சொல்றீங்க…” அவன் சொல்ல வருவது புரியாமல் கண்மணி கடுப்பாகக் கேட்ட போதே… ரிஷி அவளுக்கு அலைபேசிக்கு புகைப்படத்தை அனுப்பி இருக்க… கண்மணியும் பார்த்தாள்…
அவளது பள்ளித் ஆண்டுவிழாவில்… கல்விக்கான முதல் பரிசு வாங்கிய புகைப்படம்… அதே விழாவில் அவள் நடனத்திலும் சேர்ந்திருக்க… அதற்க்கான அலங்காரத்தோடு… இல்லை… அலங்கோலத்தோடு வந்து பரிசு வாங்கி இருந்தாள்…
முகத்தில் ரோஸ் பவுடரும்… கண்களில் கண்மையும்… உதட்டில் உதட்டுச்சாயமும்… அள்ளித் தெளிக்கப்பட்டு… உதட்டுச்சாயம் போட்டது அவளது உதட்டிலா… பற்களிலா எனும்படி… புன்னகைத்துக் கொண்டிருக்க…
கண்மணி அவளையே பார்த்தபடி இருந்தாள்… பெரிதாகவெல்லாம் உணர்வுகளைக் காட்டவில்லை…
“அப்பாகிட்ட இருந்துச்சா” சாதாரணமாகக் கேட்டவள்…
“நீங்க சிரிக்கிறதுக்கு நான் காரணம்னா… நானும் ஹேப்பி…” உணர்வுகள் அற்று சொன்னவளிடம்… ரிஷி அடக்கி வாசித்தான் இப்போது… கோபித்துக் கொண்டாளோ??? என்று
“ஏய்… ஏய்… டென்ஷன் ஆகாத…. கிண்டல் பண்ணல… என் பொண்டாட்டி.. எவ்ளோ அழகுன்னு” சொல்லி முடிக்க முடியவில்லை… மீண்டும் சிரிப்பு வந்திருக்க... அவன் அம்முனையில் கஷ்டப்பட்டு வந்த சிரிப்பை அடக்க முயன்றது கண்மணிக்கே தெரிந்ததுதான்…
”என் பொண்ணுன்னு இந்த ஃபோட்டோவைத்தான் என் அப்பா பெருமையாக உலகத்துக்கே காட்டிருக்கார்… கரெக்டா…” கண்மணி இப்போது புரிந்தவளாக கேட்க…
“அதே அதே… ஹப்பா என் புத்திசாலி பொண்டாட்டி...” என்றபடியே
“காட்டியிருப்பார்தான்,… ஆனால் ஜஸ்ட் மிஸ்… கடைசி நேரத்தில் உன் ரிஷிக் கண்ணா காப்பாத்திட்டான்… அதைக் காட்டலை… இதை… “ என்றபடி… அடுத்த போட்டோவை அனுப்ப… அதில் கண்மணி அவள் வீட்டு மாமரக் கிளையில் இருந்து குதிப்பது போல புகைப்படம்… அவளது பத்து வயதில் எடுத்தது… இரண்டு பக்கமும் கன்னக்குழியோடு முகமெங்கும் புன்னகையோடு… அழகாக எடுக்கப்பட்டிருக்க…
“இந்தக் கண்மணி… சூப்பர்ல… என்கிட்ட பேசுற கண்மணி மாதிரி இருக்கதானே… யார் எடுத்தது… செமையா எடுத்திருக்காங்க…” என்றவன் அவளைப் பேசவே விடாமல்…
”அவ்ளோ பெரிய கூட்டத்தில அந்த போட்டோவா காட்றதுன்னு… சார் கிட்ட… வேற கேட்டா… உன்னோட ஐடி கார்ட் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கலெக்ஷன்ஸ் தான் இருந்துச்சு… எப்டியோ… இந்த போட்டோ கிடைச்சது… இது தான் ஓகேவா இருந்துச்சு…. ஆனாலும் அந்த ஃபோட்டோ ஸ்பெஷல்… எனக்கே எனக்கான ஃபோட்டோ… ” நிறுத்தாமல் அவன் பேசிக் கொண்டேயிருக்க…
“ஹல்லோ… எங்க அப்பாகிட்ட இருந்த ஃபோட்டோஸ்ல நல்ல ஃபோட்டோ இல்லை… பாஸ்போர்ட் சைஸ் போட்டோதான் எல்லாமே… அதெல்லாம் விடுங்க… மிஸ்டர் ரிஷிகேஷ் கிட்ட அவரோட மிஸஸ் ஃபோட்டோ ஒண்ணு கூட இல்லையா… ஆயிரம் இருக்குமே.. அதை எடுத்து காட்டியிருக்கலாம்ல… இவ்ளோ பேசுறதுக்கு…” இப்போது தோதான இடம் பார்த்து அமர்ந்திருந்தாள் கண்மணி… கணவனை இன்று விடுவதாக இல்லை என்பது போல…
இப்போது ரிஷி விழிக்க…
மாட்டிக் கொண்டதால் பதில் பேசாமல் எதிர் முனையில் அமைதியின் உருவமாக மாறி இருந்த கணவனின் முகபாவனை எப்படி இருக்கும் என கற்பனை செய்த போதே கண்மணிக்கு… அவளையுமறியாமல் சிரிப்பு வர… இப்போது கண்மணி தன் சிரிப்பை அடக்கியபடி
“என்ன பதிலக் காணோம்…. எந்த போட்டோவை எடுத்துக் காட்றதுன்னு… ஆர்கே வுக்கே குழப்பமா… கேலரில அவ்ளோ ஃபோட்டோஸ் இருக்கோ” இப்போது ரிஷி வாயடைத்துப் போய் இருக்க…
”அட்லீஸ்ட் ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ என்னோடது ஏதாவது உங்ககிட்ட இருக்கா ரிஷி …” கண்மணி மிரட்டலான தொணியில் கேட்டபடியே
“ஒரு ஸ்டாம் சைஸ் ஃபோட்டோக்கு கூட வழி இல்லை நம்மகிட்ட… என்ன ஒரு பேச்சு… ஆனால் என் அப்பாவை பற்றி குறை சொல்லும் போது யாருக்கோ சரளமா வார்த்தை வந்துச்சு… இப்போ எங்க…” கண்மணி இப்போது சிரிப்பை அடக்கியபடி கணவனை மிரட்டிக் கொண்டிருக்க…
ரிஷி இப்போது வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்திருந்தான்…
“நான் ஏன் மொபைல்ல வச்சுருக்கனும்… கேலரில தேடனும்… நான் இந்த கேட்ஜெட்லாம் நம்புறதில்ல மிஸஸ் ஆர்கே… ஒன்லி ஹார்ட் தான்…” தன்னைச் சமாளித்தானா… கண்மணியைச் சமாளித்தானோ… எப்படியோ தப்பிக்கும் விதமாக பதில் சொல்லி முடிக்க…
”ஹ…ப்ப்பா… ஃபில்மி டைலாக்… இதெல்லாம் நான் கதைல கூட யூஸ் பண்றதில்லை… வேற ஏதாவது நல்லதா ட்ரை பண்ணுங்க… ” அசட்டையான தொணியில் அலட்சியமாகச் சொன்னவளிடம்…
“அடிப்பாவி… என்னது… ஃபில்மி டைலாக்கா… ஆர்ட்டிகிள் எழுதிட்டு கதை எழுதுறேன்னு சொல்லிட்டு திரியுற நீயெல்லாம் அதை பேசக் கூடாது… ஓகே..”
“அப்டீங்களா… “ என்றபோதே
“ஆமாம் நீ உங்க அப்பா அம்மா கதையை எத்தனை வருசமா எழுதி இருப்ப… ஆனால் நான் ஜஸ்ட்… ஒரே AV ல ஜஸ்ட் 5 மினிட்ஸ்ல முடிச்சுட்டேன்… உன் நாவல்லாம் அவுட்டேட்டட் ஆகிருச்சு… இன்னையோட” எனப் பெருமையாகச் சொல்ல…
கண்மணி ஆச்சரியத்தில் விழி விரித்தாள்… மற்றதெல்லாம் மறந்தவளாக…
“என்ன ரிஷி பண்ணுனீங்க… என்ன நடந்துச்சு ஃபேன்ஸ் மீட்ல… ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க… சந்தோசமா வேற இருக்கீங்க”
”சர்…ப்ரை…ஸ்…”
“ரிஷி… ரிஷி… ரிஷிம்மா… பிளிஸ்… என் செல்லம்ல.. என் அம்முல்ல… என் புஜ்ஜில்ல”
“சில விசயங்களுக்கு மட்டும்…. இவ்விடம் லஞ்சம் வாங்கப்படுவது இல்லை… போனை வைக்கிறேன்… டிசம்பர் 25 டிவில டெலிகாஸ்ட் ஆகும் பார்த்துக்கோ… இன்னைக்கு 23… இடையில் ஜஸ்ட் ஒரு நாள் தானே… சர்ப்ரைஸ் என்னன்னு யோசிச்சுட்டே இரு… பை…” என்று வைக்கப் போக
அவன் சொன்ன டிசம்பர் 25 என்ற தேதியில் மொத்தமாக கண்மணியின் நிலை மாறி போயிருந்தது… ஹர்சித் அவனைச் சந்தித்த பின் என்ன நடந்தது என்றெல்லாம் கண்மணியிடம் விசாரிக்காமல்... அவளை கலகலப்பாக்கி இருந்தவன்.. மீண்டும் அவளது இதயத்தை கனமாக்கி இருக்க…
“ரிஷி…” என்றவளின் குரல் மாற்றம் இப்போது உணர்ந்தான் ரிஷி...
“டிசம்பர் 25… அப்பா கொஞ்சம் பார்த்துக்கங்க… அம்மாவை உயிரோட பார்த்தது.. லாஸ்ட்டா பேசினது… அந்த நாள்தான்… என்கூட இருக்கிற வரை… நான் பார்த்துக்கிட்டேன்… இப்போ…” என்றவளிடம்
“ஹ்ம்ம்… இதுக்குத்தான்... இப்படி குரல் மாறுச்சா... அதெல்லாம் விடு… நான் பார்த்துக்கறேன்… ” என்ற போது ரிஷியின் குரலுமே தணிந்திருக்க…
“ரிஷி….” குரலில் கவலை எல்லாம் மாறி ஏக்கமாக நிறைந்திருக்க…
“சொல்லும்மா” ரிஷி வழக்கம் போல தன் அக்மார்க் விளிப்பை வைக்க
“ரி….ஷி….” என ஏக்கமாக இழுத்தவளின் குரலில் காந்தம் இருந்ததோ என்னவோ…
“என்னம்மு…” ரிஷியும் அந்தக் குரலில் தன்னிலை மறந்திருந்தான் அவனையுமீறி…
“எனக்கு ஒரே ஒரு ப்ராமிஸ் பண்ணித் தர்றீங்களா” கண்மணி கேட்டபோதே…
“என்னன்னு சொல்லு…” மனைவியின் குரல் தந்த மயக்கத்தில் இருந்து தன்னை விடுவித்தவனாகி உஷாராகக் கேட்க
“நீங்க எப்போதுமே என் கூடவே இருக்கனும்… எவ்ளோ சண்டை வந்தாலும்… எவ்ளோ பிரச்சனை வந்தாலும்… அன்னைக்கு சொன்னீங்கள்ள… நான் உன்னை போகச் சொல்ல மாட்டேன்… நீயே போக நினைத்தால் நான் தடுக்கவும் மாட்டேன்னு… ஒருவேளை அப்டி நானே உங்கள விட்டு போனாலும் நீங்க என்னை விட்டு போகக் கூடாது… என்னைப் போக விடக் கூடாது…”
ரிஷி பதில் பேசாமல் இருக்க கண்மணி தொடர்ந்தாள்…
“நான் எதுக்குமே பயப்பட மாட்டேன் ரிஷி…. ‘அன்பு..’ இந்த ஒரே ஒரு விசயத்தைத் தவிர… இது என் பக்கத்தில வந்தாலே பயமா இருக்கு ரிஷி எனக்கு… நான் அதை விட்டு ரொம்ப தூரமா ஓடி வந்துட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன் ரிஷி… ஆனால் அது என்கிட்ட மறுபடியும் ரொம்ப ரொம்ப பக்கமாக நெருக்கமா வந்து என்னைப் பயமுறுத்துது ரிஷி… நான் நார்மலா இல்லை ரிஷி… எனக்கே தெரியுது… ஏதேதோ என்னை பயமுறுத்துது ரிஷி… எனக்கு சொல்லத் தெரியலை ரிஷி… உங்கள மிஸ் பண்றதால எல்லாமே என் கண்ட்ரோல்ல இல்லை ரிஷி… சீக்கிரம் வந்துருங்க ரிஷி“ கண்மணியின் குரல் தழுதழுத்திருக்க…. கூடுதலாக படபடப்புமே…
‘ரிஷி’ என்ற பெயரை ஆயிரம் முறை உச்சரித்தால் அவன் அருகே இருப்பது போல உணர்வு கொடுக்கும் என்று நினைத்து விட்டாள் போல... அத்தனை முறை அவன் பெயரை அழைத்திருந்தாள் கண்மணி
எல்லாம் உணர்ந்தும் ரிஷியோ எதிர்முனையில் மௌனித்திருந்தான்… கண்மணியிடம் அவன் சொல்ல நினைத்த விசயங்கள்… ஆனால் அவள் சொல்லிவிட… சமாதானத்தை அவளிடமிருந்து எதிர்பார்த்து வந்தவனால் அவளைச் சமாதானப்படுத்த முடியுமா என்ன... அது அவனால் முடியவில்லை…. அதனால் அமைதியாக இருக்க…
“நாம ரெண்டு பேரும் சேம் போட்ல ட்ராவல் பண்றோம் கண்மணி… பட்… இந்தப் ப்ராமிஸ் இப்போ என்னால கொடுக்க முடியாது கண்மணி…” மரத்துப் போன குரலில் சொன்னான்…
”ஏன் ரிஷி” புரியாமல் குழம்பியவளாக கண்மணி கேட்க
“சொல்றேன்… வெயிட் டில் இயர் எண்ட்…” என்று கண்மணியின் பிறந்தநாளைக் குறிப்பிடாமல்…. அதே நேரம் பவித்ராவின் டைரியையும் மனதில் வைத்து ரிஷி சொல்லி விட்டு அடுத்த நொடியே வைக்க… கண்மணியோ அலைபேசியையே வெறித்தபடி இருந்தாள்…
டிசம்பர் 31… அவளுக்குப் பிடிக்காத… வாழ்க்கையில் வெறுக்கும் நாள்… ஆனால் இந்த வருடம் தன் கணவனுக்காக அவன் 6 வருடங்களாக மறந்த பிறந்த நாளை அவனுக்கு மீட்டெடுத்துக் கொடுக்க… தன் பிறந்த நாளை கொண்டாட நினைக்கிறாள்… இத்தனை வருடங்களாக யாரிடமுமே கேட்காத… வாங்காத... வாங்கப் பிடிக்காத தன் பிறந்த நாள் வாழ்த்துக்களை அவனிடமிருந்து… வாங்க நினைக்கின்றாள்… அவனுக்கு தன் பிறந்த நாள் தெரியுமா தெரியாதா அதெல்லாம் அவள் கவலையில்லை… தெரியாவிட்டாலும்… டிசம்பர் 31 அவளே அவனை அழைத்து அவனிடமிருந்து வாழ்த்துக்களை வாங்கிவிடுவாள்… அவளைப் பொறுத்தவரை… ரிஷியை ஆறு வருடங்களுக்குப் பிறகு அவன் பிறந்த நாளைக் கொண்டாட வைக்க வேண்டும்… வேறு வழி தெரியவில்லை… தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதைத் தவிர…
ஆனால் அதே டிசம்பர் 31 இரவு… கண்மணி தன் பிறந்த நாள் வாழ்த்தை தன் கணவனிடமிருந்து பெறுவதற்குப் பதிலாக அர்ஜூனிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்தாள்… சந்தோசத்தோடு….
---------
ரிஷியிடம் பேசிய பிறகு.. சிறிதும் தாமதிக்கவில்லை... அர்ஜுன் மேல் இருந்த கோபத்தில்... அர்ஜூனிடமும் பார்த்திபனிடமும் சொல்லிக் கொண்டு கூட கிளம்பவில்லை கண்மணி... சென்னைக்குப் புறப்பட்டு இருந்தாள் தனி வாகனத்தில்...
யமுனா மட்டுமே பார்த்திபனை அலைபேசியில் அழைத்து சொல்லிவிட்டு கிளம்பினாள்...
காரில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கண்மணியின் மனம் முழுவதும் ரிஷி அனுப்பிய அந்த புகைப்படமும் அதை எடுத்த தினமுமே ….
----
“மருது… இப்போ நீ என்ன பண்றேன்னா… நான் இந்தக் கிளையில இருந்து குதிப்பேனாம்… நீ என்னை குதிக்கிற மாதிரி போட்டோ எடுப்பியாம்… அப்புறம்… என்னையும் பிடிக்கனும் ஓகேவா…” என்றவளிடம்
“லூசா பாப்பா நீ… போட்டோவும் எடுக்கனும்… உன்னையும் பிடிக்கனும்னா எப்படி…”
“அதெல்லாம் முடியாது… போட்டோவும் நீதான் எடுக்கனும்… என்னையும் நீயேதான் பிடிக்கனும்… “ அடம் பிடித்தவளிடம்… மருது என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்த போதே மருதுவின் நண்பன்…
“நான் ரெண்டும் பண்ணுவேன்… நீ குதி மணி பாப்பா…” என்றவனிடம்…
“ஹான்… அப்டியா… “ என்று அவன் வார்த்தைகளில் துள்ளிக் குதித்தவள்… மருதுவின் தீப்பார்வையில்…
“அப்போ நீயே எடு… எதுக்கு முறைக்கிற…” என்றாள் கண்மணி மருதுவைப் பார்த்து…
“சரி… எடுக்கிறேன்… ஆனால் ஒருவேளை உன்னைப் பிடிக்காமல் நான் விட்டுட்டேன்னு வை… கை கால் கட்டு போட்டுட்டு நகராமல் ஒரே இடத்தில் ஒரு மாதம் இருக்க வேண்டி இருக்கும்… உன்னால முடியுமா… சொல்லு…”
“ஆ…” என்று யோசித்து பார்த்து அதிர்ந்தவளாக…
“வேண்டாம்… வேண்டாம் நீ என்னைப் பிடி… அவன் கிட்ட கேமாராவைக் கொடு அவன் போட்டோ எடுக்கட்டும்” என்க அதன்படி மருதுவின் நண்பன் போட்டோவை எடுக்க ஆயத்தமாக… மருதுவோ குதிக்கப் போகும் கண்மணியைப் பிடிக்கத் தோதாக அவளைப் பார்த்தபடி தயாராகி நின்றான்…
“கன்னத்துல இருக்கிற குழி தெரியனும்… அது முக்கியம்… அப்புறம்… “ என ஆரம்பித்தவள் அடுத்தடுத்து வாயே மூடாமல் பல வித கோணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க… இப்போது மருதுவும் அவன் நண்பனும் ஒரு சேர கண்மணியை முறைக்க
”ஓகே… ஓக்கே … அழகா எடுக்கனும் அவ்ளோதான்… ஒன் டூ த்ரீ… ” என்றபடி கிளையில் இருந்து மருதுவை நோக்கி கிழே குதிக்க… மரத்தில் இருந்து குதித்த கண்மணியைப் பிடித்தது மருது அல்ல… மருதுவின் நண்பன்…
கண் சிமிட்டும் நேரத்தில்… மருதுவின் முன்னால் வந்து ஒரு கையால் கேமாராவை பிடித்தபடி… மறு கையால் கண்மணியைப் பிடித்திருந்தான்…
“வாவ்… செம்ம…” என்றபடியே சிரித்தவளுக்கு…. மருது தன்னைப் பிடிக்காமல் அவன் நண்பன் தன்னைப் பிடித்துவிட்டான் என்பதெல்லாம் ஒரு விசயமாகவேத் தெரியவில்லை… யாரோ ஒருவர் தன்னைக் கீழே விழ விடாமல் பிடித்துவிட்டார்கள் என்ற நிம்மதி மட்டுமே….
ஆனால் அவனை விட்டு கண்மணி இறங்க முயற்சித்த போதுதான்… திடீரென்று ஒரு மாதிரியான உணர்வு… அவளைப் பிடித்திருந்த கரங்கள் அவளை இறங்க விடாதபடி இடையை அழுந்தப் பிடித்ததுப் போல் உணர்வு…
இருந்தும் அந்த உணர்வை புறம் தள்ளியவளாக... அவன் கைகளை தன் இடையில் இருந்து எடுக்க முயற்சித்தபடி... கீழே இறங்க முயற்சிக்க கண்மணியால் அது முடியவேவில்லை… இப்போது அவளையும் மீறி
”விடு என்னை” என்று சத்தமாக சொல்ல நினைக்கும் போதே....
அதே நேரம் மருது அவன் சட்டையைப் பிடித்திருக்க… இப்போது மருதுவின் நண்பன் மருதுவைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடி கண்மணியை இறக்கி விட்டிருக்க… அவனை விரல் காட்டி எச்சரித்தபடி… கேமராவை வாங்கிய மருதுவிடம்… அவன் நண்பன் பெரிதாக பல்லைக் காட்டியபடி… ஏதோ சொல்ல…. அடுத்த நிமிடம் இருவரும் மோதலில் இறங்கி இருக்க… கண்மணிதான் இருவரையும் பிரித்து மருதுவை அங்கிருந்து தன் வீட்டுக்குள் கூட்டிச் சென்றவளுக்கு... தனக்காகத்தான் சண்டை போடுகிறான் என்பது கூடத் தெரியவில்லை… அந்த வயதில்
“ஏன் மருது அவன் கிட்ட கோபப்படுற… சண்டைலாம் போடாத… உன்னை இப்படி கோபமா பார்த்தால் பயமா இருக்கு… அவன் என்ன சொன்னான்… மடிக்கிறதா… மடக்குறதா… அப்படின்னா என்ன அர்த்தம்…” என்றவளிடம் பேசாமல் மருது இன்னும் கோபத்தோடே அமர்ந்திருக்க
“இப்போ ஏன் இப்படி இருக்க… சரி உனக்காக பாட்டு பாடவா…. டான்ஸ் ஆடவா… ” அப்போதும் உம்மென்று இருந்தவனிடம்…. ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனவள்… திரும்பி வரும் போது அவள் கையிலோ சிகரெட் இருக்க…
“அப்பாகிட்டருந்து சுட்டுட்டேன்… அவர் பாக்கெட் பாக்கெட்டா குடிக்கிறாரு… இதெல்லாம் தெரியாது… அதுவும் இப்போ ஃபுல் தண்ணி... படுத்திருக்கிறாரு... பயப்படாத... கண்டுபிடிக்க மாட்டாரு... அதுனால இப்போ நீ குடிப்பியாம்… ஸ்டைலா புகை விடுவியாம்… நான் அதை புடிக்க ட்ரை பண்ணுவேன்…” என்ற போதே மருதுவுக்கு இருந்த கடுப்பில் வேகமாய் அவளிடமிருந்து சிகரெட்டை வேகமாக வாங்கி பற்ற வைக்க… அவன் ஊதித் தள்ளிய புகையோடு விளையாண்டபடியே…
“எனக்கும் கத்துத்தா மருது இது மாதிரி… இந்த மாதிரி் ஸ்டைலா“ என்றவளை முறைத்தபடியே…. தலையிலேயே விளையாட்டாக அடித்த… அந்த மருதுவின் முகம் கண்மணியின் நினைவில் இன்றும் இருக்கிறது…
அன்று கோபப்பட்டவன் தானே… ஆனால் அதன்பின் எப்படி அந்த துரையின் நட்பில் மொத்தமாக மாறினான்… கண்மணிக்கு இப்போது வரை புரியவில்லை…
நட்பென்றால் உயர்த்தும்… சாக்கடையில் தள்ளுமா… என்னை நேசமாகப் பார்த்துக் கொண்டவனையே… வேறு பார்வை பார்க்க வைத்தது அந்த துரையின் சகவாசம் தானே…
ஒருவேளை அந்த துரை மருது வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் நல்லவனாக இருந்திருப்பானோ… ஏன் இப்படி மருதுவை மாற்றினான்… அவன் வாழ்க்கையை… என் வாழ்க்கையை… ஏன் புதைகுழியில் தள்ளினான்…
மருதுவின் வாழ்க்கை… தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எல்லாம் காரணம் மருதுவின் நண்பன்… என்பது கண்மணியிடம் சிறு வயதில் இருந்தே பதிந்திருக்க… அந்த பாதிப்பு தந்த தாக்கமும் சேர்ந்து நட்பு என்பதையே தன்னிடமிருந்து தள்ளி வைத்திருந்தாள் கண்மணி….
---
அதே நேரம் சென்னை…
“அண்ணா… உன் பைக்கை எடுத்துட்டு போறேன்…” என்றபடி உல்லாச மனநிலையோடு வெளியே வந்த விக்கியின் மனதில்… ரிஷி மட்டுமே… ரிஷியோடு அவன் சேர்ந்து சுற்றிய இடங்களை பார்க்க கிளம்பியிருக்க… என்னவோ மீண்டும் கல்லூரி வாழ்க்கைக்கே திரும்பிய சந்தோசம் அவனிடம்…
ரிஷி அவனோடு பழகிய சந்தோச தருணங்கள்… சம்பவங்கள்… சின்ன சின்ன சண்டைகள்… என அவன் மனமெங்கும் ரிஷியோடு கழித்த நாட்களின் நினைவுகளே…
நட்பென்றால் அன்று ரிஷியிடம் மட்டுமே உணர்ந்தான்… அந்த உணர்வு இப்போதும் மாறாமல் அப்படியே இருக்க… அவனைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் விக்கிக்கு இன்னுமே அதிகமாகி இருந்ததுதான் உண்மை…
அதே வேகத்தில் தன் நண்பனும் அவனும் இரு சக்கர வாகனத்தில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த ஏரியாவை…. கல்லூரியைப் பார்க்கப் பறந்திருந்தான் விக்கி….
Nice update