அத்தியாயம் 41-2
/*தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் தொடு வானமாய் பக்கமாகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய் தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்*/
ரித்விகாவின் விழா முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்திருக்க… ரிஷி-கண்மணி குடும்பம் மீண்டும் பழையபடி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மாறி இருந்தது… இதில் ஒரே மாற்றம் என்னவென்றால் ரித்விகா கண்மணியோடு பள்ளிக்கு வந்து செல்ல ஆரம்பித்திருந்தாள்…ரிதன்யா அவளாகவே அலுவலக சென்று வர அனுமதி கொடுத்திருந்தான் ரிஷி
காரணம் நாம் அறியாதது இல்லை… எப்படியும் ரிஷி அடுத்த வாரம் ஆஸ்திரேலியா கிளம்பிவிடுவான்… அவன் வெளிநாட்டில் இருக்கும் போது எப்படி தன் தங்கைகள் இருக்க வேண்டுமோ…. அதை அவன் இருக்கும் போதே பழக்க ஆரம்பித்திருந்தான்… அவனும் அதற்கு பழகிக் கொண்டான்…
அதிலும் இந்த இரண்டு வாரங்களாக ரிஷிக்கு நிற்கக் கூட நேரம் இல்லை என்று தோன்றும்படி ஊன் உறக்கம் மறந்து ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்தான் என்பதே உண்மை…
கண்மணியிடமோ அவன் தங்கைகளிடமோ அவனுக்கு பேச நேரம் இல்லை என்பது ஆச்சரியமில்லை தான்…. என்ன ஆனாலும் அவன் தினமும் அவன் தாய் இலட்சுமிக்காக காலை மாலை அரை மணி நேரம் செலவழிப்பான்… இந்த இரண்டு வாரங்களாக அது கூட இல்லை என்பதே ஆச்சரியம்
இந்த இரண்டு வாரங்களில் அவன் வீட்டுக்கு வந்தது இரண்டோ மூன்றோ முறையோ தான்…. அதுவும் தாயைப் பார்க்க மட்டுமே…
ரிஷி தான் இப்படி என்றால் நட்ராஜும் அப்படியே… ரிஷி எந்த அளவுக்கு ஓய்வில்லாமல் இருந்தானோ அதே அளவு அவரும் இருக்க… யாருக்கும் ரிஷியின் நடவடிக்கைகளில் பெரிதாக வித்தியாசம் தோன்றவில்லை….
ஆனால் கண்மணிக்கு மட்டுமே ரிஷியிடம் பெரிய மாறுதல் இருந்தது போல் தோன்றியது…. தோன்றியது என்ன… அவனிடம் மாற்றம் இருந்தது… ஆனால் எந்த மாதிரி என்பதைத்தான் அவளால் பிரித்துச் சொல்ல முடியவில்லை…
தன்னால் ரிஷியின் மாற்றத்தை இன்னதென்று சரியாக கண்டறிய முடியவில்லை என்பதே கண்மணியை முழுமையாக ஆட்கொண்டிருக்க… இதோ வகுப்பறைக்குச் செல்லும் வழியிலும் அவன் நினைவுதான்…
அன்று அவன் ’நன்றி’ என்று தன்னிடம் சொன்னபோது ஒட்டாத தன்மையை உணர்ந்தாள் தான் … ஆனால்… அதன் பிறகு அவன் பேசிய வார்த்தைகள்….
---
”என்ன ரிஷி… தேங்க்ஸ்லாம் சொல்றீங்க” கண்மணி கேட்டதன்னவோ இயல்பாகத்தான்…
“வேற என்ன சொல்லச் சொல்ற…” முகத்தில் அடித்தாற் போலக் கேட்டான் ரிஷி..
கண்மணி அவன் முகத்தைப் பார்த்தாள்தான்… தன்னை நக்கலடிப்பது போல பேசுகிறானா… என்று… ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை என்பது போல… புருவங்கள் முடிச்சிட மிகத் தீவிரமாகத்தான் இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்…
“ப்ச்ச் ரிஷி… உங்களுக்கு இவ்ளோதான் சந்தோசமா… நான் இதைச் சொல்லி உங்ககிட்ட வர்ற சந்தோசத்தை பார்க்க நினைத்தேன்…. ஆனால்”
“சந்தோசம் தான் யார் இல்லைனு சொன்னது… ரொம்ப ரொம்ப்ப ரொம்ப… சந்தோசமாத்தான் இருக்கேன்… இப்போ என்ன நான் எவ்வளவு சந்தோசமா இருக்கனும்னு நீ பார்க்கனும் அதுக்கு நான் சிரிக்கனும்… அதானே உன் ஆசை “ என்றவன் சத்தமாகச் சிரித்தும் வேறு காட்ட… ரிஷியின் சிரிப்பை ரசிக்கத்தான் முடியவில்லை கண்மணியால்
“இப்போ ஓகேவா… நான் சந்தோசமா இருக்கேன்னு நம்புறியா” என்றவனின் முகம் பிரகாசமாக மாறி இருந்ததுதான் இப்போது… ஆனால் கண்மணியின் முகம் கூம்பியிருக்க… கூர்பார்வையில் நோட்டமிட்டபடியே
“என்ன இதுவும் நீ எக்ஸ்பெக்ட் பண்ணினது இல்லையா… வேற என்ன எதிர்பார்த்த” அவளருகில் வந்து நெருங்கிக் கேட்டவனை விட்டு தள்ளித்தான் நிற்க முடிந்தது கண்மணியால்
எங்கோ எதிலோ…. ரிஷி கண்மணியின் அலைவரிசையில் இருந்து மெது மெதுவாக தள்ளிச் சென்றது போல் கண்மணிக்குள் உணர்வு… தோன்றிய உணர்வை தன் மனதிடத்தால்… நேர்மறை எண்ணங்களால் நீர்க்குமிழி போல் தோன்றிய வேகத்தில் அழித்தும் விட்டிருக்க…
“என்ன தள்ளி நின்னுட்ட” அலட்சியமாக அவளைப் பார்த்துக் கேட்டவன்….
“தெரியல கண்மணி… எனக்குள்ள விண்ண முட்ற அளவுக்குக்கு சந்தோசம்தான் நட்ராஜ் சார் சம்மதம் சொன்னதுக்கு… அதை உன்கிட்ட காட்டனும்னுதான் நினைக்கிறேன்… முடியலையே கண்மணி… இதுதான் நான் இவ்வளவுதான் நான்… இதுக்கும் மேல என்கிட்ட ஏதாவது எதிர்பார்த்திருந்தேன்னா… எதிர்பார்க்கிறேன்னா… ஆம் சாரி கண்மணி. சாரை நான் மார்னிங் பார்த்து பேசிக்கிறேன்… குட்நைட்… ” என்றபடி மேலே ஏறப் போனவன்… திரும்பி கண்மணியைப் பார்த்து…
”இன்னொரு முக்கியமான விசயம்… எதிர்பார்க்காத விசயம் நடந்தால் அதாவது நமக்கு பிடித்த விசயம் எதிர்பாறாமல் நடந்தால் ஆர்ப்பாட்டம் வரும்… அதே பிடிக்காத விசயம் நடந்தால் மரண அடி விழுந்த மாதிரி துக்கம் தொண்டையப் பிடிக்கும்… இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்… அதெல்லாம் கடந்து வந்துட்டேன் போல… அதான் என்னால பெருசா ரியாக்ட் பண்ண முடியலையோ என்னவோ???” கேள்வி என்னவோ கண்மணியிடம் தான் கேட்டான்… ஆனால் அதற்கான பதிலை தனக்குள்ளும் தேடிக் கொண்டிருந்தானோ???
சில நொடிகள்… மௌனித்து வெறித்தவன் இதழ்களில் மெல்லிய புன்னகை இழையோட
“ஆனா கண்டிப்பா நட்ராஜ் சார் சம்மதிப்பார்னு எனக்குத் தெரியும் கண்மணி” என்றவனின் இதழோரச் சிரிப்பு விரிந்திருக்க அவள் அருகே குனிந்தவன்…
“உன்னை மேரேஜ் பண்ணினதுல்ல… இந்த கணக்குதான் முக்கியமான கணக்கு கண்மணி… கரெக்டா ஒர்கவுட் ஆகலேன்னாதான் பிரச்சனை… “
கண்மணி இப்போது அமைதியாக அவனைப் பேசவிட்டாள்….
“என்ன பார்க்கிற…. என் குடும்பம்… அந்த அர்ஜூன்… இதெல்லாம் தனிக் கணக்கு… இதுதான் மெயின் கணக்கு... இன்னைக்கு உன் அப்பாகிட்ட எனக்காக பேசினதானே… நான் தப்பே செய்திருந்தாலும் எனக்காக பேசி இருப்பதானே… இது யாரோ ஒரு ரிஷியா இருந்தால் பேசிருப்பியா… இல்ல அவருதான் யாரோ ஒரு ரிஷிக்காக இதுக்கெல்லாம் ஓகே சொல்வாரா…”
“ஆக நான் நினைத்தது எல்லாமே இப்போ கரெக்டா போய்ட்டு இருக்கு… ரிஷி ஹேப்பி… ” என்று நிறுத்தியவன்… கண்மணியையும் ஒரு பார்வை பார்த்து
”கண்மணியும் ஹேப்பிதானே…” என்று கண் சிமிட்டியவன்… கண்மணி நின்றிருந்த நிலையைப் பார்த்து…. என்ன நினைத்தானோ தெரியவில்லை
”இப்போ ஏன் இப்படி நிற்கிற… எனக்கு சந்தோசம் தான் கண்மணி… சில விசயங்களை நான் மறச்சிருக்கேனே தவிர” என்று அதுவரை அவளைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தவன்
”நான் என்னைக்குமே உன்கிட்ட பொய் சொன்னதில்ல… கண்மணி” இந்த வார்த்தைகளைச் சொன்னபோது அவன் பார்வை எங்கோ வெறித்திருந்ததை கண்மணியும் கவனிக்கத் தவறவில்லை…
அவன் பேசப் பேச கண்மணியும் திருப்பிப் பேசி இருக்க முடியும் தான்… ஏனோ ரிஷி அவனாக இல்லை என்பது போல அவளுக்குள் ஓடிக் கொண்டிருக்க… இந்த நேரத்தில் இவளும் பேசினால் என்ன ஆகுமோ அவளுக்கே தெரிய வில்லை… தன்னை மனதை அடக்கியவளாக… அமைதியாக நின்றிருந்தாள்… அவனிடமும் அதே நிலைதான்…
நிமிடங்கள் கழிய… பேச்சு வார்த்தையை நீட்டிக்க விரும்பாமல்
“நீங்க சந்தோசமா இருந்தீங்கன்னா…இருக்கீங்கன்னா… எனக்கும் சந்தோசம்…“ என்று மட்டும் சொன்னவளாக அவனை விட்டு விலகிச் சென்றவளைப் பார்த்தபடி இருந்தவன்…. அப்படியே நின்றிருக்க…
கண்மணி அவனிடம் மீண்டும் திரும்பினாள் ஏதோ ஞாபகம் வந்தவளாக…
“சாப்பிட்டீங்களா ரிஷி”
அவள் கேட்ட அந்த ஒரு நொடியில்… தடுமாறினான் தான் ரிஷி… இருந்தும் சமாளித்தவனாக…
“ஹ்ம்ம்” என்று மட்டும் சொல்லி விட்டு வேகமாக மாடிப்படியில் ஏறி தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான்… எப்போதும் கேட்கும் 'நீ சாப்பிட்டாயா’ என்ற வார்த்தை.. அதற்குக் கூட அவனிடம் இன்று பஞ்சமாகி இருக்க... கண்மணிக்கு நல்ல பசி…
வீட்டில் தோசை மாவு இருந்தது தான்… ரிஷி வந்தால் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று நினைத்திருக்க… புண்ணியவான் அதற்கும் ஆப்பு வைத்துவிட்டான்… இவள் ஒருத்திக்கு மட்டும் தோசை ஊற்றி சாப்பிடுவதெல்லாம் இவள் வாழ்க்கையில் புதிது இல்லைதான்… ஆனால் இன்று பிடிக்கவில்லை… அவளையும் மீறி எழுந்த சுயபச்சாதாபம் அவளை கடந்த கால நினைவலைகளுக்குள் சுருட்டிக் கொள்ள ஆரம்பிக்கப் போக… சட்டென்று சுதாரித்தவளாக… இதழ் கடித்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டாள்தான்…
பெருமூச்சு விட்டவளாக… சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவளுக்கு பசி வேறு வயிற்றைக் கிள்ள… வேறு வழி… தன் தந்தை வீட்டினுள் நுழைந்தாள்….
தந்தை சாப்பிட்டது போக மீதமிருந்த ப்ரெட் பாக்கெட்டுகளை எடுத்து வந்தவள்… தங்கள் வீட்டுக்குள் போக நினைத்தாள் தான்… ஆனால் ரிஷி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்க… மீண்டும் மரத்தடியிலேயே அமர்ந்து விட்டாள்… ஒருவாறாக அவள் பசி அடங்க… ரிஷியின் நினைவு மீண்டும்… அவனும் சாப்பிடவில்லை என்பது இவளுக்குத் தெரியாதா என்ன… தன்னிடம் பொய் சொல்கிறான் என்பது அவன் சொன்ன போதே தெரியத்தான் செய்தது… அப்போது அவன் மீது வராத கோபம் காட்ட முடியாத கோபம் இப்போது அவளுக்குள் வர… என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை….
“போடா உனக்கும் சேர்த்து நானே சாப்பிட்டுக்கறேன்…” மரியாதையெல்லாம் காற்றில் பறக்க விட்டவளாக…. மொத்த பிரட் பாக்கெட்டையும் சாப்பிட முடியாமல் தொண்டை அடைக்க சாப்பிட்டு காலி செய்து தூக்கித் தூரப் போட்டவளுக்கு… இப்போது கொஞ்சம் கோபம் போயிருந்தது எனலாம்…
கோபம் பசி எல்லாம் போக இப்போது தூக்கம் கண்களைச் சுழற்றியது… அதிலும் ரித்விகா விழா நிகழ்ச்சிகளால் இந்த ஒரு வாரமாக ஒழுங்கான தூக்கம் இல்லை…
விழா நாளான இன்றும் அதிகாலையிலேயே எழுந்திருக்க… படுத்தால் அடுத்த நொடி தூங்கி விடுவாள் தான்… ஆனால் தூங்கப் பிடிக்கவிலை… முடியவில்லை…
மாடி அறையைப் பார்த்தாள்… விளக்கு எரிந்து கொண்டிருந்தது இன்னும்…
அவன் உறங்கவில்லை எனும் போதே… ஏதோ ஒரு வேதனை அவனை அலைகழிக்கின்றது கண்மணி உணர்ந்தாள் தான்… இந்த மாதிரி சூழ்நிலைகளில் இருந்த போதெல்லாம் அவள் அவனைப் பார்த்திருக்கின்றாளே… இன்றும் அவன் அவன் அந்த நிலையில்தான் இருப்பான் என்று மனதுக்கு தெரிந்தபோதும் அவனிடம் செல்ல முடியவில்லை… யாரோவாக இருந்த போது… எதையும் யோசிக்காமல் அவனருகில் இயல்பாகச் சென்ற கண்மணிக்கு… இன்று அவனை நெருங்க முடியவில்லை…
ஆக ரிஷி விழித்துக் கொண்டிருக்க அவனை நினைத்துக் கொண்டிருந்தவளுக்கோ… தூங்கப்பிடிக்கவில்லை… வந்த தூக்கத்தையும் விரட்டி விட்டிருந்தாள்….
அவன் அருகில் சென்று உனக்காக நான் இருக்கின்றேன் என அவன் துக்கத்தைத்தான் பகிர்ந்து கொள்ள முடியவில்லை அவன் மனைவியால்… ஆனால் உனக்காக நான் இருக்கின்றேன் என்று தான் இருந்த இடத்தில் இருந்தே கணவனை நினைத்து… நட்ட நடு இரவில்… அந்த மாமரத்தடியில் தன்னந்தனியே விழித்துக் கொண்டிருந்தாள் கண்மணி…
கிட்டத்தட்ட இரண்டு மணி அளவில் ரிஷியின் அறையில் விளக்கு அணைக்கப்பட… அதைப் பார்த்துவிட்டு அதன் பிறகுதான் கண்மணியும் உறங்கச் சென்றிருந்தாள்… விளக்குகளை அணைத்தவன் உறங்கினானா??… அது கண்மணிக்குத் தெரியவில்லை… ஆனால் உறங்கச் சென்றவளோ உறங்கவில்லை… அன்றைய தினம் இப்படித்தான் முடிந்தது….
ரிஷியின் நினைவுகளைச் சுமந்தபடியே நடந்து வந்தபடி வகுப்பறைக்குள் நுழைந்தவள்… நுழையும் போதே அவனது நினைவுகளை மனதில் ஒதுக்கி வைத்தபடி…. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக மாறி இருந்தாள்…
உற்சாகமாக மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்திருக்க… மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதும் ஒரு தவமே… அந்த தவத்தில் மூழ்கி விட்டாள்… தவத்தில் மூழ்கி இருந்தவளை…
“மேம்… “ என்று குரல் அழைக்க…குரல் அழைத்த திசையைக் கணித்து திரும்ப
“இந்தக் க்ளாஸ் முடிந்த பின்னால…. மேடம் அவங்க ரூம்க்கு வரச் சொன்னாங்க” என்று அலுவலக உதவியாளர் சொல்லி விட்டுப் போக… காரணம் தெரிந்தது தான் என்பதால்… பெரிதாக யோசிக்கத் தேவையிருக்கவில்லை… ஆக வகுப்பு முடிந்தபின்… நேராக இராஜம் அறைக்கும் சென்றாள்…
இவளுக்காகக் காத்திருந்த இராஜமும்… கண்மணியை அழைத்துக் கொண்டு பார்த்திபனின் அறைக்குச் சென்றார்
இவர்கள் இருவரும் உள்ளே போக… பார்த்திபனோ இவர்களைப் பார்த்தவுடனே அவனது இருக்கையில் இருந்து எழ… கண்மணியும் கேள்வியாகப் பார்த்தாள்…
அவள் பார்வை புரிந்தவனாக
”அர்ஜூன் சார் பேசனும்னு சொன்னார்… கனெக்ட் பண்ணிட்டேன் நீங்க பேசிட்டே இருங்க” என்றபடி பார்த்திபன் கிளம்பிவிட்டான்… கிளம்பிவிட்டான் என்று சாதரணமாகச் சொல்வதை விட அவசர அவசரமாக வெளியேறினான் என்றே சொல்ல வேண்டும்…
ஏனோ இப்போதெல்லாம் அவன் தேவதை வருவதில்லை…. ஆனாலும்… இனி வரவே மாட்டாளோ என்று அவன் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருந்தான் அவளைப் பார்க்காத இத்தனை நாட்களாக… ஆனாலும் அவன் மனதின் ஓரத்தில் எங்கோ ஒரு நம்பிக்கை…. மீண்டும் அவள் வருவாள் … அவளைப் பார்ப்போம் என்றே தோன்ற… அதை புறந்தள்ளாமல் இந்த நேரத்தை அவளுக்காக ஒதுக்கி ஒவ்வொரு நாளும் அவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்…
இன்றாவது அவன் தேவதை வருவாளா…. வந்தால் கண்டிப்பாக அந்தச் சந்தர்ப்பத்தைக் நழுவ விடக் கூடாது… அவளிடம் தன் மனதை அலைகழித்துக் கொண்டிருக்கும் விசயத்தைச் இவன் சொல்வானோ இல்லையோ… ஒரு வார்த்தையாவது அவளைப் பேச வைத்து அவள் யாரென தெரிந்து கொள்வது என முடிவு செய்திருந்தான்….
வருவாளா???… பார்த்திபன் தன் தேவதையை நோக்கிச் சென்றிருந்த தருணம்….இங்கு அறையிலோ… வீடியோ காலில்… நாராயணனும் வைதேகியும்…. கண்மணியுடனும் ராஜத்துடனும் பேசிக் கொண்டிருந்தனர்…
நாராயணனும் வைதேகியும் சென்னையில் இல்லை… அமெரிக்காவில் அர்ஜூன் வீட்டில்… அர்ஜூன் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் தங்கப் போகிறேன் என்று சொல்லி இருக்க… தங்கள் மொத்த தொழில் உலகத்தையும் அர்ஜூன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியில் அவர்கள் இங்கிருந்து அங்கு செல்ல… அர்ஜூன் அடுத்த வாரம் இங்கு கிளம்பி வருவதாக முடிவு செய்திருக்க… ஆக அடுத்த ஆறு மாதத்திற்கு சென்னை வாசிதான்...
நாராயணனுக்கும் வைதேகிக்கும் வெகு நாட்களுக்குப் பிறகான வெளிநாட்டுப் பயணம்… பேத்தியை விட்டு இத்தனை நாட்களாக எங்கும் செல்லாதவர்கள்… இப்போதும் அவளை விட்டுப் போகப் பிடிக்கவில்லைதான்… அர்ஜூன் தான் எப்படியோ அவர்கள் மனதை மாற்றி அங்கு வரவழைத்திருந்தான்… ஆக அவர்கள் போய் இறங்கியதும் உடனே தொடர்பு கொண்டது தங்கள் பேத்தி கண்மணிக்குத்தான்…
தன் தாத்தா-பாட்டியோடு மட்டுமல்லாமல் அர்ஜூனின் பெற்றோர்களோடும் கண்மணி பேசிக் கொண்டிருக்க… தன்னைத் தவிர்த்து மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தவளை உரிமையோடு பார்த்துக் கொண்டிருந்தது அர்ஜூனின் கண்கள்….
கண்மணி அவளாக இவனிடம் பேசுவாள் என்று இவன் எதிர்பார்த்திருக்க…. அவளோ அர்ஜூன் என்ற ஒருவன் இருக்கின்றான் என்பதையே உணராதவள் போல…. அவன் பெற்றோர் தாத்தா பாட்டியிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவனாக…
“என்ன மேடம்… கண்டுக்கவே மாட்டீங்கறீங்க… தாத்தா பாட்டி இங்க இருக்காங்க… நான் மட்டும் தான் சென்னைல வந்து தங்கப் போகிறேன்… என்னைப் பத்திரமா பார்த்துக்குவீங்களா மேடம்” அர்ஜூன் கண்மணியைப் பார்த்து அப்பாவியாகக் கேட்க.. கண்மணி இப்போது அவனைப் பார்த்தாள் தான்… ஆனால் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கொடுக்கவில்லை…
ராஜம் புன்னகைத்தபடியே… அவனைப் பார்த்து
“சீக்கிரமா உங்க சுபத்ராவைத் தேடிக் கண்டுபிடியுங்க அர்ஜூன்… ” என்று கிண்டலடித்துக் கொண்டிருக்க… அர்ஜூனின் கண்களோ கண்மணியிடம் அப்படியே சில நொடிகள் நிலைத்து நின்றிருந்தது… வலுக்கட்டாயமாகத் தானாகவே கண்மணியிடமிருந்து பார்வையைப் பிரித்தெடுத்தவன்
“ஹ்ம்ம்ம்…. அந்த மகாபாரத அர்ஜூனன் மாதிரி நானும் ரிஷி வேடம் போட்டுட்டு போனாத்தான் உண்டு…” என்று இராஜத்தைப் பார்த்து சலிப்புடன் சொல்ல
கண்மணி அவனைக் கண்டு கொள்ளாமல்…
“மாமா… மாமி… நீங்களும் அர்ஜூனோட வாங்க… எப்போதுதான் இந்தியா வர்றதா ஐடியா” கண்மணி பேச்சை மாற்றி அர்ஜூனின் பெற்றோர்களோடும் தாத்தா பாட்டியோடும் பேச ஆரம்பித்திருக்க…
அர்ஜூனின் தாயோ...
“அப்டியே பவித்ராவைப் பார்த்த மாதிரியே இருக்கு அத்தை” கண்மணியைப் பார்த்தவாறே வைதேகியிடம் சொல்ல… தாயின் வார்த்தைகளைக் கேட்டபடியே அர்ஜூனின் கண்களும் இப்போது கண்மணியின் முகத்தில் பதிந்தது… இப்போது கண்கள் என்னவோ கண்மணியிடம் இருந்தாலும்…. அவன் எண்ணங்களில் அவனது அத்தை பவித்ராவின் முகம் தான்…
அன்று புரியவில்லை… அந்த முகத்தில் ஏன் அத்தனை சந்தோசம் இருந்தது என்று… இன்று புரிந்து கொள்ள முடிந்தது…
இவனோடு சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தது… அதன் தந்தையோடான வாக்குவாதத்தில் அணிந்திருந்த மூக்குத்தியை அங்கேயே வீசிச் சென்றது... அதைத் தான் தேடிக் எடுத்துக் கொடுத்தது என இன்றும் அவனது மனக்கண்ணில் நிழலாடியது… அன்று தரையில் வீசப்பட்டு தன்னால் எடுத்துக் கொடுக்கப்பட்ட தனது அத்தையின் அந்த மூக்குத்தி இன்று கண்மணியிடம் ஒளி வீசிக் கொண்டிருக்க… அவள் தன்னை விட்டு இன்னும் நீங்க வில்லையென்பதை … அந்த ஒளி பறைசாற்றியது போல் தோன்ற… அது தந்த நிம்மதியில் தன் அத்தை பவித்ராவின் நினைவுகளுக்கு மீண்டும் தாவினான்
அன்றைய தினம்தான் தன் அத்தையை உயிரோடு பார்த்த கடைசி தினம்… அதன் பின் எழு மாதம் கழித்து பவித்ராவின் உயிரற்ற உடலைத்தான் அவனுக்கு காண்பித்தார்கள்…
வருடத்தின் இறுதி நாள் பவித்ராவின் இறுதிநாளாகி இருக்க... உலகமே புத்தாண்டை வானவேடிக்கை வெடித்து வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருந்த போது... இவர்களோ துக்கத்தோடு அந்த வீட்டின் இளவரசியை உயிரற்றவளாக மீண்டும் அவர்கள் இல்லத்திற்குக் கொண்டு வந்தது துயரத்தின் உச்சம்.. இப்போது கண்கள் கலங்க ஆரம்பிக்க…. வீடியோவில் இருந்த காட்சி வட்டத்துக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அர்ஜூன்… அதன் பிறகு அந்தக் காணொளிக் காட்சிக்குள் வரவே இல்லை…
அர்ஜூன் இல்லையென்றாலும் மற்றவர்களோடு கண்மணி பேசிக் கொண்டிருக்கு போதே… அவளது அலைபேசி அழைக்க… யாரென எடுத்துப் பார்க்க… அழைத்ததோ பார்த்திபன்!!! …
இவன் ஏன் தன்னை அழைக்க வேண்டும்… என்று யோசித்தபடியே அவனது அழைப்பை ஏற்க… அவன் இருந்த இடத்திற்கு உடனே வரும்படி… கண்மணியைப் பார்த்திபன் அழைக்க… கண்மணிக்கு இன்னுமே யோசனை அதிகமாக… அவனிடம் வருவதாகச் சொல்லிவிட்டு… கட் செய்தவள்… தன் தாத்தா பாட்டியிடமும் விடைபெற்றுக் கொண்டு… பார்த்திபன் இருந்த இடத்திற்குச் செல்ல…
“வாங்க கண்மணி… இவங்க பேர் யமுனா” என்று அங்கிருந்த இளம் பெண்ணை அறிமுகப்படுத்தியவன்…
“மிஸ் யமுனா… இவங்க யாருன்னா…” என்று நிறுத்தியவன்…
“மிஸஸ் கண்மணி ரிஷிகேஷ்” ரிஷிகேஷ் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுக்க… யமுனா என்ற அந்தப் பெண்ணோ திகைத்துப் பார்த்திருந்தாள்… கண்மணியோ புரியாத பார்வையில் பார்த்திபனை நோக்கியிருந்தாள்…
/*காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரினை தேடும் வேரினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன் கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே மீண்டும் கண்கள் பார்க்கும் போது
லோகம் சூன்யம் ஆகுதே*/
Super