அத்தியாயம் 40-1:
/* விழியசைவில், உன் இதழ் அசைவில், இதயத்திலே இன்று, ஒரு இசை தட்டு சுழலுதடி,
ஓ..ஓ..
புதிய இசை, ஒரு புதிய திசை, புது இதயம் என்று, உன் காதலில் கிடைத்ததடி */
பிரேம் அன்று சொன்னது போலவே அடுத்த நாளே சென்னையின் மிகப்பெரிய மண்டபத்தை அணுகி விழாவுக்காக முன்பணம் கொடுத்து பதிவும் செய்து விட்டான்…
அடுத்தடுத்து அதற்கான வேலைகளில் இறங்கியும் விட்டான்… ரித்விகாவின் பூப்புனித நீராட்டு விழா நாளும் வந்தது…
அதிகாலை மூன்று மணிக்கே அந்த மண்டபத்தில் விழாவுக்கான ஆரவாரமும் பரபரப்பும் ஆரம்பமாகி இருக்க… விழா நாயகி ரித்விகாவைத் தவிர மற்ற அத்தனை பேரும் ஆளுக்கொரு திசை ஆளுக்கொரு வேலை என மூழ்கி இருந்தனர்… நட்ராஜை பிரேம் நேற்றிரவு வந்து அழைத்துச் சென்றிருக்க… கண்மணி, இலட்சுமி… ரிஷி இவர்கள் மூவருமோ கண்மணி இல்லத்தில்…
இலட்சுமியை கண்மணியும் ரிஷியும் விழா அன்று காலையில் அழைத்து வருவதாக முடிவு செய்யப்பட்டிருக்க அதனால் இவர்கள் மூவரும் இங்கே…
மண்டபத்தில் இருந்த பரபரப்புக்கு குறைவில்லாமல் ’கண்மணி’ இல்லத்தில் கண்மணியும் அதிகாலையில் எழுந்தவள்… குளித்து முடித்து… பட்டுப் புடவை அணிந்து… விழாவுக்குத் தயாராகி இருந்தாள்…
பெரிதாக மெனக்கெடவில்லை… பள்ளிக்கு போகும் போது சாதரண புடவை அணிந்திருப்பாள்… இன்று பட்டுப்புடவை அவ்வளவே அவள் மெனக்கெடல்…
கண்ணாடியில் தன்னைப் பார்க்க…
எப்போதும் போலவே இன்றும் சின்னதாகப் பொட்டு… காதில் சிறு தோடு… கையில் கண்ணாடி வளையல்… மூக்குத்தி.. தாலிக் கொடியோடு மெல்லிய செயின்…
திருநீறு குங்குமம் சந்தனம் என நெற்றியில் அடுக்கும் பழக்கம் இருந்த கண்மணிக்கு ஏனோ… தான் திருமதி என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் முன் உச்சியில் குங்குமம் வைக்கும் பழக்கம் இன்னும் வரவில்லை…
இலட்சுமிக்கும் உதவி செய்து அவரையும் விழாவுக்கு தயார் செய்தவள்.… ரிஷி இன்னும் கீழே இறங்கி வராமல் இருக்க… மாடி அறைக்குச் சென்றாள்…
அறையில் ரிஷி இல்லாமல் போக… “வேறு எங்கு சென்றிருப்பான்… அந்தப் கைப்பிடிச்சுவருக்கு வாய் இருந்தால் அழுதிருக்கும் இவன் எப்போதும் கொடுக்கும் அழுத்தத்தில்…” தனக்குள்ளே சொல்லிக் கொண்டவள்… வீட்டுக்காரம்மாவாக சலித்தாளா… அவன் வீட்டுக்காரியாக சலித்தாளா… கண்மணிக்கே வெளிச்சம்
மொட்டை மாடிக்குப் போக… நினைத்தபடியே வழக்கமாக நிற்கும் அதே நிலையில்தான் வெளியே வெறித்தபடி நின்று கொண்டிருந்தான் ரிஷி… கையில்லாத டிஷர்ட்… ட்ராக்ஸோடு…
உடற்பயிற்சி செய்திருப்பான் போல்… யார் மேலோ எதன் மேலோ இருந்த கோபத்தை எல்லாம் பயிற்சியில் காட்டி இருந்திருப்பான் போல.. அங்கிருந்த பொருட்களின் நிலையும்… வியர்வையில் குளித்தார் போல நின்ற அவன் நிலையும் சொல்லாமல் சொல்ல… அனைத்தையும் நோட்டமிட்டபடியே அவனை நோக்கிச் சென்றாள் மெல்ல அடி எடுத்து வைத்து…
இதற்கு முன்னால் எல்லாம் இவள் வரும் அரவம் உணர்ந்து ரிஷி திரும்பியாவது பார்ப்பான்… இன்று அது கூட இல்லை…
“ரிஷி… கிளம்பலையா… ” என்று அவன் அருகே போய் நின்று கேட்க…
”எங்க” கேட்டவன் கண்மணியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை…
”மண்டபத்துக்கு ரிஷி…”
“ஏன்… அங்க இருக்கிறவங்க உன் புருசன ஏற்கனவே ரொம்ப நல்லா நினைப்பாங்க… இப்போ இன்னும் நல்லா நினைக்கிறதுக்கா” எகத்தாளமான கேள்வி இவளை நோக்கி விழுந்ததே தவிர… இவள் புறம் திரும்பக்கூட இல்லை…
கண்மணி முகம் சுருங்கினாள்… அவன் பேசிய வார்த்தைகளுக்காக இல்லை… அவன் குரல் வந்து விழுந்து விதத்தில்… வார்த்தைகள் எகத்தாளமாக விழுந்தாலும்… சுரத்தில்லாமல் ஒலித்ததே….
வேகமாக அவன் தோள்த் தொட்டு அவனைத் திருப்ப… முதலில் திரும்ப மறுத்து பிடிவாதம் பிடித்தவனை… இவள் எப்படியோ கட்டாயப்படுத்தி தன்புறம் திருப்ப… அவனைப் பார்த்தவள்… அப்படியே திகைத்து நின்று விட்டாள்…
கண்கள் ரெண்டும் அப்படி சிவந்திருந்தன… அழுகையா… ஆத்திரமா… கோபமா… உணர்வுகள் வெளிகாட்டப்பட முடியாத தோல்வியில் கண்களோடு நின்று விட்டனவா… எனும்படி… ரத்தச் சிவப்பில் நரம்புகள் அவன் கண்களின் வெண்மைப் படலத்தையே மறைத்திருக்க… அதைப் பார்த்த கண்மணியோ பதறி விட்டாள்…
“என்னாச்சு ரிஷி… ஏன் ரிஷி இப்படி”
“நான் எதுக்குமே இலாயக்கு இல்லாதவன்னு மறுபடி மறுபடி அவமானப்பட்டு நிற்கிறேன் கண்மணி… இன்னைக்கு நான் இப்படி இருக்கிற சூழ்நிலைக்கு நீ தான் முக்கிய காரணம்” என்ற போதே ரிஷியின் குரல் மொத்தமாக இறங்கியிருந்தது… அவமானத்தில் மனம் குமைந்தவனின் மொத்த பார்வையும் வெளியேதான் வெறித்திருந்தன
“என்ன சுழ்நிலை… நாம் என்ன செய்தோம்… ரிஷி அவமானப்பட்டு நிற்கும் நிலைக்கு நான் காரணமா” புரியாமல் விழித்தது கண்மணிதான்…
“எனக்குப் புரியல ரிஷி… நான் எப்போதுமே அப்படி உங்கள ப்ரஜெக்ட் பண்ணதில்ல ரிஷி… பண்ண நினைத்ததுமில்ல… பண்ணவும் மாட்ட” கண்மணிக்கே வார்த்தைகள் தடுமாறி வந்தன… கணவனின் நிலை கண்டு
“அப்படியா… உனக்கு எதுவுமே புரியலையா… நீதானடி சொன்ன… மகிளா-பிரேம் இந்த ஃபங்ஷனை நடத்தட்டும்னு… எல்லாம் தெரிஞ்ச பெரிய இவ மாதிரி பேசுன… இப்போ ஒண்ணுமே புரியலையா உனக்கு” ரிஷி அவள் தோளைத் தொட்டு உலுக்க… சற்று முன் சுரத்தில்லாமல் ஒலித்தது இவன் குரலா என்று நினைக்கும் அளவுக்கு இப்போது ரிஷியின் குரல் உயர்ந்திருக்க
“நீங்க இவ்ளோ ஃபீல் பண்ற அளவுக்கு என்ன ரிஷி நடந்தது… ஜஸ்ட் ஒரு ஃபங்ஷன்… இதுல என்ன இருக்கு” கண்மணி இப்போதும் புரியாமல் கேட்க
ரிஷி அவள் முன் இன்னும் ஆத்திரத்தோடு பேச ஆரம்பித்தான்
”என் தங்கச்சி ஃபங்ஷன நடத்த அவங்க யாருடி… இது என்னோட உரிமை… அதை விட்டுக்கொடுக்கச்சொல்லி என்கிட்ட சொல்ல உனக்கு யார் உரிமை கொடுத்தது “ என்ற போதே
ரிஷிதான் வழக்கமாக உணர்ச்சிவசப்படுவான்… கண்மணி அமைதியாக இருந்து அவனை திசைதிருப்புவாள்… ஆனால் இன்று கண்மணியும் அவள் நிலையில் இல்லை… ரிஷியின் நிலை கண்டு…
“இவ்ளோ ஃபீல் பண்ற நீங்க… அன்னைக்கே இது முடியாதுன்னு தெளிவா சொல்லிருக்கலாமே… எனக்கு தப்பா தெரியலை… நான் சொன்னேன்… உரிமை அது இதுன்னு இவ்ளோ இதுல இருக்குன்னா நீங்க மறுத்திருக்கலாமே… இன்னைக்கு இப்போ அதுவும் கடைசி நிமிடத்தில் வந்து குதிச்சா என்ன அர்த்தம் ரிஷி”
கேள்வி கேட்டவளை ரிஷி புரியாத பார்வை பார்க்க
”என்னை அப்படி பார்க்காதீங்க ரிஷி… எனக்கு இப்போதுமே புரியல… இதெல்லாம் ஏன் நடத்துறாங்கன்னு எனக்கு உண்மையிலேயே தெரியலை… இதுக்கு நீங்க ஏன் இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிறீங்க… எமோஷனல் ஆகறீங்கன்னும்.. புரியல ரிஷி… “ என்ற போதே
ரிஷிக்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை… எப்படிக் கேட்பது என்றும் புரியவில்லை… நெற்றியை அழுந்தத் தேய்ந்து விட்டுக் கொண்டவனாக…
‘உனக்கு இதெல்லாம் தெரியாதுன்னா என்ன அர்த்தம் கண்மணி… நீயும் இதைத் தாண்டித்தானே வந்திருப்ப… இல்ல இதெல்லாம் பார்க்காமல் குதிச்சு வந்துட்டியா” கடுப்பாகச் சொன்னவனுக்கும் வார்த்தைகளின் வீரியம் புரியாமல் இல்லை… அதில் நிதானித்தவன்
“என்னை ஏதாவது பேச வச்சு டென்சன் ஆக்காத… நான் எங்கயும் வரல அவ்ளோதான்… நீங்க போங்க…” என்ற போதே
கண்மணி ஏதோ பேச வர… கைகாட்டி நிறுத்தியவன்
“அப்பா இல்லை… அது எல்லாருக்கும் தெரியும்… இந்தப் பொண்ணுக்கு அண்ணன்னு ஒருத்தன் இருந்தானே அவன் எங்கன்னு உங்க கிட்ட… இல்லை… என் அம்மா தங்கையை எல்லாம் இங்க இழுக்கக் கூடாது… உங்கிட்ட கேட்பாங்க… கேட்டாங்கன்னா செத்துட்டான்னு பதில் சொல்லு போ…” என்று அவளைத் தள்ளி விட… அசையாமல் நின்றாள் கண்மணி…
அவள் அப்படியே நிற்க… எரிச்சலான பார்வையுடன்…. அவளை விட்டு விட்டு நகர்ந்து சென்றவனைப் பார்த்தபடியே இருந்தவள்…… என்ன நினைத்தாளோ… அவன் பின் சென்றவள்
”சத்தியமா நீங்க இவ்ளோ ஃபீல் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது ரிஷி… சாமியே கும்பிடாதவர் நீங்க… இந்த சடங்குக்கெல்லாம் இவ்ளோ இம்பார்ட்டண்ட் கொடுப்பீங்கன்னு தெரியாதும்மா… அதே மாதிரி மத்தவங்க என்ன சொல்வாங்கன்னு யோசிக்கிற ஆளும் கிடையாதுன்னு நினைத்தேன் ரிஷி… ஏன் நம்ம மேரேஜ் கூட எந்த ஒரு சடங்கு சம்பிராதாயம் இல்லாமல் தானே நடந்தது” என்று கண்மணியும் தன் பங்கு நியாயத்தை அவனிடம் முறையிட ஆரம்பிக்க
அவளையேப் பார்த்தவன்… வேகமாய் அவள் கைப்பிடித்து இழுத்து தன் அருகே கொண்டு வந்து… அதே வேகத்தில்
அவள் அணிந்திருந்த மாங்கல்யத்தை வெளியே எடுத்துக் காட்டியவன்… இதை நான் தானே வாங்கிட்டு வந்தேன்… இதோ நீ கட்டிருக்கியே இந்த புடவை… இது நான் வாங்கிட்டு வந்தது தானே… வேறொருத்தனை வாங்க வைக்கலையே… நீ சொன்ன மாதிரி சடங்கு சம்பிராதாயம் பார்க்கலதான்… ஆனால் என் பொண்டாட்டிக்கு என்னோட உரிமையை செய்யாமல் இருக்கலையே… அன்னைக்கு எந்த நிலையில இதெல்லாம் நான் வாங்கினேன்னு உன்கிட்டயும் சொல்லிருக்கேன்ல… சொன்னவன்…அவளை விட்டு விலகியும் நின்று வெளியே வெறிக்க ஆரம்பித்தான் வழக்கம் போல…
”என்ன சொல்லி அவனை ஆறுதல் படுத்துவது” தெரியாமல் கண்களை மூடித் திறந்தவள்…
”இப்போ என்ன உங்க தங்கச்சிக்கான விழாவை நீங்க நடத்தனும் அவ்வளவுதானே… வாங்க பார்த்துக்கலாம்…” என்று அவன் கைகளைப் பிடிக்கப் போக… சட்டென்று கைகளை இழுத்துக் கொண்டவன்…
“நீ எப்போதுமே என்னை சரியான திசை நோக்கி கூட்டிட்டுப் போவேன்னுதானே கண்மணி… உன் கையைப் பிடிச்சுட்டு நிற்பேன்…. ஏண்டி என்னை ஏமாத்திட்ட… நீ சொன்னா சரியா இருக்கும்னு என்னை அறியாமல் அன்னைக்கு நான் பிரேம் -மகி நடத்தட்டும்னு தலை ஆட்டிட்டேன்… இப்போ அதை மாத்த முடியாமல் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல” என்றவன்
விரக்தியின் உச்சக்கட்டத்தில் எப்போதும் என்ன செய்வானோ அதைச் செய்ய முயற்சிக்க… எட்டிப் அவன் கைகளைப் பிடித்து விட்ட கண்மணி …
”ரிஷி… வாங்க போகலாம்… யார் என்ன சொன்னாலும் நீங்கதான் உங்க தங்கச்சிக்கு எல்லாம் பண்றீங்க…” உறுதியான குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“அதெல்லாம் ரிஷி பண்ண முடியாது… “
குரல் வந்த திசையை திடுக்கிட்டு இருவரும் நோக்க… அங்கு நின்றவன் பிரேம்தான்… இன்முகத்தோடு…
கூடவே மகிளாவும்… நட்ராஜும் அவனோடு வந்திருந்தனர்…
”ரிஷி ப்ரோ… இந்த ஃபங்க்ஷன் நீங்க நடத்த வேண்டிய ஃபங்ஷன் கிடையாது… நாம தேதி மட்டும் தான் ஃபிக்ஸ் பண்ணுவோம்… மத்ததெல்லாம் தாய்மாமன்தான் பண்ணனும் செலவு உட்பட… நீங்க டேட் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டீங்க… ஜஸ்ட் அதை மட்டும் தான் நான் பண்ணினேன்… மற்றதெல்லாம் பண்றது இதோ உங்க மாமா தான்… அவரு உரிமைல நீங்க தலையிடக்கூடாது” என்று நட்ராஜைக் கைகாட்ட… ரிஷியும் கண்மணியும் நட்ராஜை நோக்கினர்
”நீங்க ரெண்டு பேரும் ரூம்ல பேசிட்டு இருந்தப்போ… சார்தான் அவரே வந்து என்கிட்ட பேசினார்… நீங்க சார தாய்மாமன் ஸ்தானத்தில வைத்து ரித்விகாவுக்கு முதல் தண்ணீரை ஊற்ற சொன்னீங்கதானே… அப்போ அவர்தானே இந்த விழாவையும் நடத்தனும்… இன்னொரு விசயம் நட்ராஜ் சாருக்கு அவங்க மனைவி இல்லை… அவர் பொண்ணோ உங்க மனைவி… வேற வழி் தெரியாமல் மகிளாவை வைத்து மங்கல காரியம் எல்லாம் பண்ணச் சொன்னார்… “ என்றவன்
ரிஷியின் அருகே வந்து…
“நாம ஒரு பைசா செலவழிக்கக் கூடாது ப்ரோ… மாமன் வீடு அவங்கதான் பார்க்கனும்… நாம கால் மேல கால் போட்டுட்டு வரவு வைக்கலாம்” என்று கண்சிமிட்டிக் கூற…
ஆனந்தத்தில் கீழுதட்டை அழுந்திய ரிஷிக்கு வார்த்தைகள் இல்லை… நட்ராஜ் மற்றும் பிரேமின் நடுவே சென்று இருவரின் கைகளையும் ஒன்றாகப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொள்ளவே முடிந்தது…
ரிஷியின் சந்தோஷத்தில் மகிழ்ந்த நட்ராஜ்… அதே சந்தோசத்தோடு தன் மகளைப் பார்க்க
சந்தோஷத்தோடு தன்னைப் பார்த்த தன் தந்தையின் கண்களை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் தலை குனிந்தாள் கண்மணி … அவள் வாழ்நாளில் முதன் முறையாக…
---
அதன் பின் அவர்கள் ரிஷி-கண்மணியை விரைவாக கிளம்பி வரச் சொல்லியபடி… விழா நடக்கும் மண்டபத்துக்கு கிளம்பிச் சென்று விட… இப்போது கண்மணி ரிஷி மட்டுமே தனியாக நின்றனர்…
“இப்போ ரிஷிக்கண்ணாக்கு ஹேப்பியா” அவனைப் பார்த்தபடியே கைப்பிடிச் சுவரில் சாய்ந்தபடி… கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டவளாக… திருப்தி பரவிய சந்தோச முகத்துடன் இருந்த கண்மணி, தன் கணவனைச் சீண்ட
அவள் கேட்டு முடிக்கவில்லை… வேகமாக அவள் அருகே வந்தவன்… சேர்ந்திருந்த அவள் கைகளைப் பிரித்து தன்னைக் கட்டிக் கொள்ளச் செய்தவனாக தானும் அவளைக் கட்டிக்கொண்டவன்… அவள் தோள்களில் முகம் பதித்து தன் உச்சக்கட்ட சந்தோசத்தின் அளவை அவளிடம் கொடுத்து… தன்னை நிதானத்துக்கு கொண்டு வர முயற்சிக்க..
சிறிதளவும் எதிர்பாராத ரிஷியின் இந்தத் திடீர் செய்கையால்… அதை எதிர்பார்க்காத கண்மணி தடுமாற… ரிஷியோ அவள் தடுமாற்றத்தை எல்லாம் கண்டுகொள்ள வில்லை
கண்மணி தான் தன்னைச் சுதாரித்து அவனைத் தாங்கியவளாக… சுவரில் சாய்ந்து நிலைப்படுத்திக் கொண்டவளுக்கு… உள்ளுக்குள் ஆரம்பித்திருந்த போர்களத்தைத்தான் நிறுத்தமுடியவில்லை…
கணவன் தான் என்றாலும்… இருவரும் கணவன் மனைவி என்ற எல்லையின் அருகே கூட சென்றிருக்காத நிலையில்… அதுவும் இப்படி காற்று கூட புக முடியாத அளவுக்கு அவளை ஆட்கொண்டிருந்த ஆணின் அருகாமையை… அந்த இருபத்து இரண்டு வயது இள மங்கை சமாளிக்க பெரும்பாடுதான் பட வேண்டியிருந்தது…
எப்போதும் தாயாக அவளைத் தேற்ற நினைத்து அனிச்சையாகவே அவன் தலை கோத நீளும் கரங்களுக்கு இன்று என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை… தன் கைகளை அவனிடமிருந்து பிரிக்க முடியவில்லை…
கண்மணிக்கு நன்றாகவேத் தெரிந்தது… ரிஷி அவளிடம் சரணடைந்திருந்தது பசுவைத் தேடும் கன்றுக்குட்டியின் நிலை போலத்தான் என்பது… அவளுக்குள் தான் மொத்த தடுமாற்றமும்… அவனைக் கட்டிக் கொண்டிருந்த கைகளை விலக்க நினைக்க… இத்தனை நாள் அவனை இயல்பாக எதிர்கொண்டவளால் இன்று அது முடியாமல் போக…
”ரி…..ஷி…” என்ற அவன் பெயர் கண்மணிக்கு தட்டு தடுமாறி வர…
“கன்ட்ரோல் யுவர்செல்ஃப்” யாருக்கு சொன்னாள்… அவனுக்கா… தனக்கேவா… ???
சந்தோஷத்தில் உணர்ச்சிவசப்பட்டு இருந்தவன்… இவளை உணரும் நிலையிலா இருப்பான்… ஆக கண்மணிதான் தன்னை இயல்பாக்கிக் கொள்ள வேண்டிய நிலை… புரிந்து கொண்டவள்… கடினப்பட்டு தன்னை இயல்புக்கு மாற்றிக் கொண்டவள்…
”யாரோ… கொஞ்ச நேரத்துக்கு முன்னால… அவங்க கையைப் பிடிக்க வந்ததுக்கு கோபம் வந்துச்சு” என்று எப்படியோ கேட்டு முடித்தவள்… அவனையும் நடப்புக்கு கொண்டு வந்திருக்க
இவள் கேள்வியில் அவள் முகம் நோக்கி நிமிர்ந்தவனின் கரங்களும் இப்போது நெகிழ்வாகி இருக்க… கண்மணிக்கு எதிலிருந்தோ தப்பித்த உணர்வு… அவளையுமறியாமல் நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் அவனைப் பார்த்துப் புன்னகைக்க…
“அது கோபமெல்லாம் இல்லை… எக்சசைஸ் ஒரே ஸ்வெட்… அதுனாலதான்” என்றவன் மீண்டும் அவளை இறுக்கக் கட்டிக் கொள்ள…
பேச ஆரம்பித்தால் தன்னை விட்டு விலகுவான் என்று கண்மணி நினைத்திருக்க… அவனோ மாறாக நடக்க… கண்மணிக்கோ அவஸ்தையின் உச்சக்கட்டம்… அதைக் காட்டிக் கொள்ளக் கூட முடியாத நிலையோ அதை விடக் கொடுமை…
“இப்போ மட்டும் சாருக்கு ஃப்ரெஷா இருக்கிற மாதிரி நினைப்பா” கேட்டபடியே சாதாரணமாக அவனை விட்டு விலகுவது போல விலக நினைக்க… அவன் விட்டால் தானே… அவளை இன்னும் இறுக்கின அவன் கரங்கள்…
”ஹ்ம்ம்… அதெல்லாம் எனக்குத் தெரியாது… ஸ்மெல் வந்துச்சுன்னா… புடவைய மாத்திக்க… இல்ல என்னமோ பண்ணு… அது உன் கவலை” என்றவன் அவளை விடும் எண்ணமே இல்லாமல் மீண்டும் அவளிடமே சரணடைய இப்போது கண்மணியும் அவனை விட்டு விலகவில்லை… அதே நேரம் அவளும் நிதானத்திற்கு வந்திருக்க…. அவனாக அவளை விட்டும் விலகும் வரை அமைதியாகவே நிற்க… சில நிமிடங்கள் கழித்தே… அவள் அமைதி உணர்ந்து ரிஷிக்கு மெல்ல மெல்ல தான் இருந்த நிலை உணர… அதற்காகவெல்லாம் அவன் கவலைப்படவில்லை…
மெதுவாக கரங்களை விலக்கியவன்… அவளை விட்டு விலகாமல்
“நான் சமாதானம் ஆகிட்டேன்னு நினைக்காத… இது வேற… ஊட்டி கோபம் வேற… அது இன்னும் இருக்கு” அவளிடம் கிசுகிசுத்தவன்… தன் அறைக்கும் சென்று விட்டான்…
அவன் விலகிச் சென்ற போதும் அதே இடத்தில் அப்படியே நின்று விட்டாள் கண்மணி… ரிஷி அவனது அறையில் இருந்து அவள் பெயரை விளித்து சத்தமாக அழைக்கும் வரை…
“கண்மணி” காதில் எதிரொலித்த ரிஷியின் உரிமையான குரல் இன்று அவளுக்குள் வேறொரு புதுவித உணர்வை படரவிட்டது என்பதே உண்மை…
இயந்திரப் பாவை.. சாவி கொடுத்த பொம்மையாக மாறிய தருணம்… அந்தத் தருணம்
ரிஷியின் குரல் கேட்ட உடனேயே அறைக்குப் போக… ரிஷி அவனுக்காக காத்திருந்தவன் போல அவள் அருகே வந்தான்…
இன்றைய விழாவுக்கு அவன் அணியப் போகும் ஆடைகள் அவன் கையில் இருக்க
“ப்ளீஸ் இதை மட்டும் அயர்ன் பண்ணிக் கொடுத்துரு கண்மணி.. 2 மினிட்ஸ்ல குளிச்சுட்டு வந்துடறேன்” என்றவன் அவள் கைகளில் அதைக் கொடுத்து விட்டு… குளியலறை நோக்கி நகர…
”2 மினிட்ஸ்… போதுமா ரிஷி” கண்மணியையும் அறியாமல் வார்த்தைகள் வந்து விட…
திரும்பிப் பார்த்தவன்… கள்ளப் புன்னகையை இதழோரம் பதுக்கியவனாக
”நான் மட்டும் தானே… போதும்னு நினைக்கிறேன்… ” என்றவன் சொன்ன வார்த்தைகளின் பொருள் புரிந்து கண்மணி முறைக்க நினைக்க… அந்தோ!!! அது முடியாமல் போனது… அது ஏன் என்று அவளுக்கும் புலப்படவில்லை…
ஆனால் ஆரம்பித்து வைத்தவள்…. அவள் தானே…
“நான்… ட்ரெஸ் அயர்ன் பண்றதுக்கு கேட்டேன்” கண்மணிக்குள்ளும் கள்ளத்தனம் வந்திருக்க… அது அவள் குரலில் அப்பட்டமாகத் தெரிய…
“ஆனால் நான் அயர்ன் பண்றதை மீன் பண்ணிச் சொல்லல” என்றவன்…. அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை.. வெளியேறி விட்டவன் அவன் சொன்ன 2 நிமிடத்தில் இல்லையில்லை 10 நிமிடம் கடந்தும் வரவில்லை…
அதற்குள் கண்மணியோ அவனது உடைகளை இஸ்திரி போட்டு முடித்திருக்க… குளியறைக் கதவைத் தட்டியவள்…
‘ரிஷி… டேபிள் மேல ட்ரெஸ் வச்சுருக்கேன்… எடுத்துக்கங்க… நான் கீழ போகிறேன்… சீக்கிரம் வாங்க” என்று கீழே இறங்கிப் போன கண்மணி பீரோவில் இருந்து விழாவுக்கு அணிந்து போவதற்கான கொஞ்சம் ஆடம்பரம் குறைந்த சில்க் காட்டன் புடவையை பார்வையிட்டு அதில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து மாற்ற ஆரம்பித்தாள்….
காரணம் இருந்தது…
ரிஷி பட்டு வேஷ்டி சட்டை அணிவான் என்று நினைத்து அவனுக்கு சமமாக தான் இருக்க வேண்டுமென்றுதான் அவள் திருமணப் புடவையை அணிந்திருந்தாள்… அது மட்டுமே அவளிடம் இருந்த விலை உயர்ந்த புடவை…
ஆனால் அவனோ மிகச் சாதாரணமான பேண்ட் சட்டையை விழாவுக்கு அணியத் தேர்ந்தெடுத்திருக்க… அவள் மட்டும் எப்படி ஆடம்பரமாக வளைய வருவது… அணிந்திருந்த திருமணப்புடவையைக் களைந்து… சிறிய கரை வைத்த இந்த சில்க் காட்டனுக்கு மாறி இருந்தாள்…
கணவன் கட்டாயம் கேட்பான்… ”ஏன் புடவையை மாற்றினாய் என்று?” அதற்கும் அவளிடம் பதில் இருந்தது… சற்று முன் அவன் சொன்னானே… வியர்வை வாடை வந்தால் புடவையை மாற்றிக் கொள்ளும்படி… ஆக அவனுக்கு சொல்வதற்கென்று பதிலையும் வைத்திருக்க… கீழே இறங்கி வந்தவன்… அவளைப் பார்த்த போதே புடவை மாறி இருந்ததைப் பார்த்து புருவம் உயர்த்தினான் தான் கண்டுகொண்டதாக
ஆனால் ஏன் என்று காரணம் எல்லாம் கேட்கவில்லை… பார்த்தான் அவ்வளவுதான்…
அதன் பின் பிரேம் அவர்களுக்காக அனுப்பி இருந்த காரில் தன் தாயை அழைத்துப் போய் அமர வைத்தவன் மீண்டும் வீட்டுக்கு வந்து பொருட்களை எடுத்தபடி மனைவியோடு சேர்ந்து கதவைப் பூட்டும் வரைகூட இவளிடம் ஏன் என்று ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை…
“புடவைய மாத்துனேன்னு கோபமா இருக்கீங்களா ரிஷி” என்று பொறுமை இழந்து கேட்க…
”இல்லை” என்ற விதத்தில் தலையை அசைக்க…
”அப்போ ஏன் ஏன்னு கேட்கல” என்று பொறுமை இழந்து கேட்க…
”எதுக்கு கேட்கனும்” என்று சாதாரணமாகச் சொல்லி அவளை விட்டு கடந்து சென்றவன்… கண்மணி வராமல் தான் நின்ற இடத்திலேயே நிற்பது புரிந்து… மீண்டும் திரும்பியவன்
“பதில் தெரியலைனா கேள்வி கேட்கலாம்… பதில் தெரிந்த கேள்விக்கு… அதிலும் ரெண்டு பதில் இருக்கிற கேள்விக்கு… என்னன்னு கேட்கச் சொல்ற… வா… டைம் ஆகிருச்சு… நான் தான் உன் மேல கோபமா இருக்கேன்… ஞாபகம் வச்சுக்கோ… ” என்று சொல்லிவிட்டு தன் அன்னையை நோக்கிச் சென்று விட்டான்… அவளுக்காகக் காத்திருக்காமல்
/*ஓ..ஓ… காதலை நான் தந்தேன், வெட்கத்தை நீ தந்தாய், காதலை நான் தந்தேன், வெட்கத்தை நீ தந்தாய்,
நீ நெருங்கினால், நெருங்கினால், என் இளமை சுடுகிறதே
ரோஜா பூந்தோட்டம், காதல் வாசம், காதல் வாசம், பூவின் இதழ் எல்லாம், மௌன ராகம், மௌன ராகம், */
அப்பாடா நல்லவேளை function prem நடத்தல, அது ஏனோ அவன allow பண்ணினது, இஷ்டமும் இல்ல accept பண்ணிக்கவும் முடியல😏😏.
மனசுக்குள்ள வைச்சுக்காம இரண்டு பேரும் ஒருத்தர் மத்தவங்க செய்யிற தப்பை சொல்லி அவங்களுக்கு இடையே சரியாகிக்கிறது super😘😘.
இப்போ இந்த வில்லி ரிதன்யா என்ன பண்ண காத்திருக்காளோ 🤔🤔