/*... ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
இதுவரை வந்த எனது கதைகளில் எந்த இடத்திலும்... கதபாத்திரங்களுக்கான மரியாதையை எங்குமே முகம் சுளிக்கும் வித்தத்தில் வைத்தது இல்லை... அதாவது நெகட்டிவ் கதாபாத்திரங்கள் என்ற பெயரில்... ’என் உயிரே என் உறவே’ நாவலில் பிரதாப்பாக இருக்கட்டும்... அவனால் கடத்தப்பட்ட போது மதுவைக் காட்டியதாக இருக்கட்டும்... இரண்டாவது நாவலான ‘அன்பே நீ இன்றி’ - இல் தீக்ஷா கடத்தப்பட்ட போது... அவளை காட்டிய விதம்.. மூன்றாவது நாவலான ’சந்திக்க வருவாயோ’ -இல் கணேஷன்... சந்தோஷ்... மற்றும் சந்தியா அதீனா ஜெயில் சீன் என கத்தி முனையில் நடப்பது போல கவனத்துடன்... இந்த காட்சிகளை எல்லாம் படிப்பவர்களை அடுத்த காட்சிக்கு ந்கொண்டு சென்று விடுவேன்...
இந்த நாவலிலும்... அதே போலத்தான்... எந்த ஒரு கதாபாத்திரத்தின் மதிப்பையும் குறைக்க மாட்டேன்... என்னால் அப்படி எழுதவும் இயலாது என்ற உறுதியுடன் இந்த அத்தியாயத்தை எழுதுகிறேன்...
நன்றி தோழமைகளே...
*/
அத்தியாயம் 35-2:
மிதமான கடற்கரை காற்று… மித வேகமான அலை… வாகனத்தை கடலை விட்டு தூரமாகத்தான் நிறுத்தியிருந்தான் அர்ஜூன்…
கடற்கரை… எங்கும் விளக்கொளியுடன்… மக்கள் கூட்டத்துடன்… ஜனரஞ்சமாக அத்தனை அழகாக இருக்க… நீல நீர்ப்பரப்பை விட அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்த மக்களைத்தான் கண்மணி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
சிறு குழந்தைகள்… இளைஞர்கள்… வயதானவர்கள்… காதலர்கள்… தம்பதிகள்… குடும்பங்கள் என பாகுபாடில்லாமல் மக்கள்…
கண்மணி எப்போதுமே இப்படித்தான்… கடற்கரைக்கு வந்தால்… கடலை ரசிக்க மாட்டாள்.. அங்கிருக்கும் மக்களைத்தான் ரசிப்பாள் தன்னை மறந்து….
அங்கு அவள் கானும் முகங்களில் உள்ள ஒவ்வொரு சிரிப்பையும்… அணு அணுவாக ரசிப்பாள்.. அது அவளுக்குப் பிடிக்கும்… தனக்கு வராத ஒன்று… வராத என்பதை விட … தான் இடையில் தொலைத்த அந்த சிரிப்பை… முன் பின் தெரியாத முகங்களில் காண்பது அவளுக்குத்தான் எத்தனை ஆனந்தம்…
முகம் மலர்ந்தபடி அந்தக் கூட்டத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவளை… தன் அருகே நின்றவளை… விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்…
அர்ஜூன் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்ந்தவளாக… அவன் புறம் திரும்பி ஒரு நொடி பார்த்தவள்… பின் தூரத்தில் தெரிந்த கடல் அலைகளின் மேல் பார்வையை மாற்றினாள்… அவன் பேச ஆரம்பிக்கலாம்… சொல்ல வந்ததைச் சொல்லலாம் என்பதன் சமிக்ஞையாக..
ஒரு நிமிடம்… இரண்டு நிமிடம்… நிமிடங்கள் கடக்க அர்ஜூனிடம் இருந்து எந்த ஒரு வார்த்தையும் வரமால் போக…
“ஹ்ம்ம்… ரிஷிகேஷ்… தண்ணி… தம்… முன்னாள் காதல்… பார்ட்டி… பப்… பொறுப்பில்லாதவன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…”
”இப்படித்தான் ஆரம்பிக்கப் போறிங்கன்னா… சாரி அர்ஜூன்… ஐ தின்க் டைம் வேஸ்ட்ன்னு…” இப்போது அர்ஜூனைப் பார்க்கவே இல்லை… எங்கோ வெறித்தபடி கண்மணி சொல்ல…
கண்மணி சொன்ன வினாடி… அப்படியே ஸ்தம்பித்து நின்றவன் தான் அர்ஜூன்… கண்மணியே திரும்பி…. அவனைப் பார்த்து அவன் பெயரை அழைத்த போதுதான்… அர்ஜூன் நடப்புக்கே வர… அதை விட அவன் முகம் செந்தழலைப் பூசி இருக்க…
அதே கோபத்துடன் அர்ஜூன்… அவளைப் பார்த்து ஏதோ கேட்கப் போக…
“வெயிட்… வெயிட்… நான் இன்னும் சொல்லி முடிக்கலை… இப்படிப்பட்ட ஒருத்தன தேடிக் கண்டுபிடிச்சு அவனை மாத்துற தியாகிலாம் நான் இல்லை… அதேபோல… நான் மேரேஜ் பண்ணின ரிஷிகேஷுக்கும் எனக்கு அந்த பட்டம்லாம் தருகிற ஐடியா இல்ல போல… ஏன்னா.. என்னை மேரேஜ் பண்ணும் போது… எனக்கு அவரும் அந்த வேலை எல்லாம் வைக்கலை…”
அர்ஜூனின் குழம்பிய முகத்தைப் பார்த்தவன்…
“நீங்க சொன்ன எல்லா விசயமும்… ரிஷியோட பாஸ்ட்… ரிஷியோட ப்ரசண்ட் மட்டுமே நான் பார்க்கிறேன்… சோ வேற என்ன… இதுதான்னா… நாம வேற ஏதாவது பேசலாம்… எனக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகனும் அர்ஜூன்… சொல்லுங்க உங்க பிஸ்னஸ்லாம் எப்படி போயிட்டு இருக்கு… நல்லாத்தானே போயிட்டு இருக்கு… அதுல கான்செண்ட்ரேட் பண்ணுங்க சார்… தேவையில்லாத விசயங்களுக்கெல்லாம் மைண்ட டைவர்ட் பண்ண வேண்டாமே… அது எல்லாருக்குமே… எல்லாத்துக்குமே நல்லது…”
அவன் முகம் மாறும் போதே….
“அத்தை மாமாலாம் எப்படி இருக்காங்க… பொண்ணு தீவிரமா தேடிட்டு இருக்காங்க போல…” என்ற படியே…. அவன் கையில் இருந்த ஃபைலை வாங்கியவள்… அதைத் திறந்து பார்க்க… ரிஷி ரிஷியின் புகைப்படங்கள் மட்டுமே…
ரிஷி என்பவன் சிறகடித்து பறந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனச் சொல்லாமல் சொல்லிக் காட்டின அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும்… அவன் முகத்தில் இப்போது இல்லாத.. கண்மணி ரசித்த அந்த சிரிப்பு… அதை ரசித்தபடியே ஒவ்வொரு புகைப்படமாக பார்க்க ஆரம்பித்தவள்… அதிலிருந்து சிலவற்றை மட்டும் எடுத்து… தன் கைப்பையில் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டவள்… சில புகைப்படங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டாள்…
மீண்டும் அர்ஜூனிடம்… அந்தப் ஃபைலைக் கொடுத்தவள்… அவர்களுக்கு சற்று அருகில் இருந்த கடையின் அருகில் சென்றவள்….
”அண்ணா… தீப்பெட்டி கிடைக்குமா” என்று கேட்க… அவரும் கொடுக்க… வாங்கி வந்தவள்…
தன் கையில் இருந்த சில புகைப்படங்களை மட்டும் தீயிலிட்டு கொழுத்தியபடி… அர்ஜுனைப் பார்த்தவள்…
“இதுல ரிஷி மட்டும் சம்பந்தப்படல… இன்னொரு பொண்ணும் இருக்கா… அந்தப் பொண்ணுக்கும் ஒரு லைஃப் இருக்கு… மகிளா-ரிஷி… அவங்கவங்க லைஃப் மாறிருச்சு… நீங்க எப்படி இந்த கண்மணி சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறீங்களோ… ரிஷியும் அதே மாதிரிதான்… ப்ளீஸ் இந்த மாதிரி விசயங்களை அவாய்ட் பண்ணிருங்க… அர்ஜூன்…”
அர்ஜூன் இப்போதும் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் தான்… ஆனால் இப்போது அவனது முகத்தில் கோபம்தான் இல்லை… மாறாக பெருமை கனிந்த கனிவுதான் இருக்க…
“நீ எல்லாம்… தேவதைடி… ஆனால் உனக்கெல்லாம் அவன்… ச்ச்சேய்….” என்று வேகமாக வேறு புறம் திரும்பியவன்… சில நிமிடங்கள் கழித்து அவளிடம் பேச ஆரம்பித்தான்…
“நான் ஒண்ணே ஒண்ணு கேட்கவா கண்மணி…”
“உனக்கு பிடிக்காதது என்கிட்ட இருக்குன்னு ஏதாவது ஒண்ணு சொல்லு…. உங்க அப்பாவைத் தவிர… அந்த ஒரு காரணத்தை தவிர… என்கிட்ட என்ன இருக்கு சொல்லு… ஏண்டி என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போன… அவன்கிட்ட இத்தனை காரணங்கள் இருந்தும்… ஒரே நாள்ள அவனை மேரேஜ் பண்ணிக்க காரணம் என்ன” அவனுக்கும் காரணம் புரிய வில்லை… திரும்பத் திரும்ப அவனையும் கேட்டுக் கொண்டிருந்தான்… இதோ கண்மணியிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்றான்…
கண்மணி யோசிக்கவே இல்லை…
“உங்களை மேரேஜ் பண்ணிக்கனும்னு மனசு நினைக்கும் போதெல்லாம்… கூடவே சாதக பாதகங்களையும் மூளை யோசிக்க ஆரம்பிச்சுரும் அர்ஜூன்… அது ஏன்னு எனக்கே தெரியல… ஆனால் ரிஷின்னு வந்தப்போ… என் மனசும் சரி… மூளையும் சரி… ஜஸ்ட் எம்ப்டி… இவர மேரேஜ் ஆனால் என்ன ஆகும்… இப்படி நடக்குமோ… அப்படி ஆகுமோ… அந்த மாதிரி நடந்திருமோ… இப்படி நாம நடந்தால் அவருக்கு பிடிக்குமா… நம்மள மேரேஜ் பண்ணினால்… நாம சந்தோஷமா இருப்போமா… அவர் நம்மால சந்தோஷமா இருப்பாரா… இல்லை நான் எதையும் மிஸ் பண்ணிருவேனோ… இப்படி எந்த குழப்பமுமே இல்லை… ஒரு மாதிரியான… ப்ளஸ் மைனஸ் இல்லாத பூஜ்ஜியத்துல இருப்போம்ல அந்த மாதிரியான நிலை… ரிஷின்னு வந்தப்போ ஏன் எனக்கு இப்படி ஒரு எண்ணம்னு… அதே உங்கள யோசிக்கும் போது பல விசயங்கள் என் முன்னால கேள்வியா வந்து நிற்கும்… ஒரு வேளை உங்க அளவு கடந்த காதல் கூட… என்னை என்கிட்ட உங்களுக்கான தேடலை நிறுத்தியிருச்சோ… கடைசி வரை… உங்க கண்ல நான் பார்த்த காதல… எனக்குள்ள கொண்டு வர முடியல… ஏன்னும் எனக்கும் புரியல”
அவள் பேசப் பேச… அர்ஜூனின் மனம் யோசனைக்குப் போனாலும்…. கோபம் மட்டுமே அவனிடம் அதிகமாக இருக்க… அவனும் கோபத்தில் எகிறினான் இப்போது…
“அவன்கிட்ட மட்டும் கண்டுபிடிச்சுட்டியா என்ன”
மறுத்து தலை ஆட்டினாள்… கண்மணி பார்வை இப்போது கடலின் தொலை தூர தொடுவானத்தை நோக்கி இருக்க…
கடலும்… வானமும்… இங்கிருந்து பார்த்த போது ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருப்பது போலத் தோன்றினாலும்… தொட முடியாத தொலைவில்… கண்மணி ரிஷியின் வாழ்க்கையும்… அதே தொடுவானம் தானா…
விடை தெரியாத வினாக்கள் மட்டுமே…
”எப்போ என்ன விட்டுட்டு…” என்று ஆரம்பித்தவன்… கண்மணியின் முகம் மாறிய விதத்தில்
“உன்ன திட்டக் கூட முடியலடி… ஆனால் உன்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு அவன்லாம்… திங்க் பண்ணக் கூட முடியல” என்றபடி… அவன் முன் வந்து நின்றவன்… சில நிமிடங்கள் யோசித்து விட்டு பின் பேச ஆரம்பித்தான்…
“இந்த போட்டோவை உனக்கு காமிக்க கூடாதுன்னுதான் போட்டோ காப்பியா எடுக்கல… ஆனால் எனக்கு வேற வழியில்ல… நீ அவன விட்டு வரணும்னா… அவனைப் பற்றி தெரிஞ்சுக்கத்தான் வேண்டும்….”
புருவ முடிச்சுகள்… கேள்வியில் வந்து நிற்க… கைகளை நீட்டினாள்…
“இதை பார்த்து தொலை… அப்போதாவது பைத்தியம் தெளியுதான்னு பார்க்கலாம்” என்று காட்ட… அவன் போனில் காட்டிய புகைப்படத்தைப் பார்த்து கண்மணியின் கண்களில் ஆயிரமாயிரம் மின்னலை உள்வாங்கியது போன்ற உணர்வு… ரிஷி-மகிளா புகைப்படத்தை சுலபமாக கடந்து வந்தவளால்… இந்த புகைப்படத்தை அப்படி சுலபமாகக் கடக்க முடியவில்லை…
அர்ஜூன் முகத்தில் இப்போது திருப்தியான பாவம் வந்திருக்க… கண்மணி வேகமாக போனை வாங்கிப் பார்த்தாள்… பார்த்துக் கொண்டே இருந்தாள்
தனசேகர்… ரிஷிகேஷ் அப்பா… யாரோ ஒரு பெண்ணோடு… அருகில் ஒரு சிறுவன்… படபடத்த நெஞ்சத்தோடு அர்ஜூனைப் பார்க்க…
“என்ன இத்தனைப் பதட்டம்… ரிஷிக்கு இவ்ளோ சின்ன வயசுல தம்பின்னா… இல்ல சின்ன மாமியார்னா…” நக்கலாகக் கேட்க… கண்மணி அவனின் நக்கலை எல்லாம் கண்டு கொள்ளாமல் பதட்டத்தோடு…
“அர்ஜூன்… விளையாடாதீங்க… இறந்த ஒரு ஆத்மாவோட மரியாதையை கொச்சைப்படுத்துறல உங்களுக்கு அப்படி என்ன ஆசை… அந்த அளவு உங்க தராதரம் இறங்கிருச்சா…” கண்மணியின் குரலே முற்றிலும் இறங்கியிருக்க… ஒரு மாதிரியான பதற்றம் மட்டுமே…
அதே போல ரிஷிக்கு இதெல்லாம் தெரியாது… தெரிந்திருக்காது என்றே கண்மணி… உறுதியாக நம்பினாள்… முதல் புகைப்படத்தைப் பார்த்த நொடியில்
காரணம்… அவளறிந்த வரை… ரிஷி என்பவனுக்கு அவனது தந்தை… கோவிலில் இருக்கும் கடவள் போன்றவர்… ரிஷிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை… அந்த இடத்தில் அவனது தந்தையைத்தான் வைத்திருக்க… இந்த புகைப்படம் கண்மணிக்கு பேரதிர்ச்சியே…
அந்த அதிர்ச்சியில் அவள் உறைந்திருந்த போதே.. அடுத்த அதிர்ச்சி… கண்மணிக்கு…
”ஒரே போட்டோல அதிர்ச்சி ஆகிட்டேன்னா எப்படி… அடுத்து மூவ் பண்ணு…” அர்ஜூன் சொல்ல… கண்மணியின் விரல்கள் சாவி கொடுத்த பொம்மை போல.. அடுத்த புகைப்படத்தை நகர்த்த…
அந்த புகைப்படத்திலோ…
முதலில் இருந்த புகைப்படத்தில் இருந்த சிறுவனோடு ரிஷி சிரித்தபடி… நின்று கொண்டிருந்தான்…
”ரிஷிக்கும் தெரியுமா…” கண்மணி திகைப்புடன் அர்ஜூனைப் பார்க்க…
“இவன் ஊட்டில படிக்கிறான்… கார்டியன் யார் தெரியுமா… மிஸ்டர் ரிஷிகேஷ்…”
கண்மணியின் அதிர்ந்த முகம்… அர்ஜூனுக்கு அவனது குரலில் இன்னும் உற்சாகத்தைக் கூட்ட…
“இன்னும்… தோண்டினால்… ஏராளமான விசயம் சிக்கும்… வெயிட் பண்ணு… இது ஃபர்ஸ்ட் லெவல் ஆஃப் இன்வெஸ்டிகேஷன்… நமக்கு எதுக்கு அந்த குப்பைனு… உன்னைத் தேடி வந்துட்டேன்… சொல்லு… இவன்… இவன் அப்பா… எதுவுமே சரி இல்லை கண்மணி… இன்னும் என்னென்ன இருக்கோ… உன்னால இவனோடலாம் வாழவே முடியாது கண்ணம்மா… புரிஞ்சுக்கோடா…” அர்ஜூனின் குரலும் இப்போது இறங்கி இருக்க…
“ஸ்டாப் இட் அர்ஜூன்… ”கத்தியே விட்டாள் கண்மணி….
“இன்னொரு தரம்… எனக்கு நல்லது பண்றேன்னு… இந்த மாதிரி கேவலமான காரியம்” என்றபோதே அர்ஜூனும் கத்த ஆரம்பித்து விட்டான்…
“என்னடி இவ்வளவு சொல்றேன்… அதுவும் ஆதாரத்தோட…. அவன் உன்கிட்ட இதெல்லாம் சொல்லி இருக்கானா… நல்லவனா இருந்தா சொல்லி இருப்பான்… அவன் ஒண்ணா ம் நம்பர் கேடி… நல்லவன் மாதிரி உன் அப்பன ஏமாத்திருக்கான்… உன் அப்பன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்… அதைப்பற்றி ஒரு கவலையும் இல்லை… ஆனால் அந்தாள வச்சு… உன்னை பலிகடா ஆக்கிட்டானே… இப்போ நீயும் மாட்டிக்கிட்ட... உன்னை அவன் கிட்ட இருந்து காப்பாத்துறத்துக்குத்தான் நானும் போராடிட்டு இருக்கேன்” அர்ஜூன் படபடத்த போதே
“அர்ஜூன்… ப்ளீஸ்… கெளம்புங்க… “
“இவ்ளோ சொல்றேன்… இன்னும்” என்ற போதே… கையெடுத்துக் கும்பிட்டவளாக
“வேண்டாம்… எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்… நீங்களும் உங்க ஆராய்ச்சி வேலையெல்லாம் இதோட நிறுத்திக்கங்க..”
அர்ஜூன் மீண்டும் ஏதோ சொல்லப் போக…
”இதெல்லாம் ரிஷிக்குத் தெரியும் தானே… அப்போ விடுங்க”
“அவருக்குத் தெரியும்… எதை எப்போ என்கிட்ட சொல்லனும்னு…”
இப்போது அர்ஜூனுக்கு வந்த கோபத்திற்கு… கண்மணியை அறைந்தே விடுவான் போல அப்படி ஒரு ஆத்திரம் வந்திருந்தது… தன்னை அவன் அடக்கிக் கொண்டிருக்கும் போதே
“ரிஷியப் பற்றி ஒரு நல்ல விசயம் கூட உங்க கண்ணுக்கு கிடைக்கல… அப்படித்தானே அர்ஜூன்… எனக்கு நல்லது பண்ணனும்னு நெனச்சீங்கன்னா… உங்க சிபிஐ… எஃப்பிஐ வச்சு அப்படி ஏதாவது நல்லது கண்டுபிடிச்சு சொல்லுங்க… எனக்கும் சந்தோசம்” கண்மணி முதன் முதலாகப் படபட பட்டாசாக வெடித்துச் சிதறியதை பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்
“இதெல்லாம் என்னை ரிஷிக்கிட்ட இருந்து பிரிக்கும்னு நினைக்கிறீங்களா அர்ஜூன்… ஓகே அப்படியே நான் அவர்கிட்ட இருந்து பிரிந்தாலும்… உங்ககிட்ட வந்து சேருவேன்னு… அப்படி என்ன நம்பிக்கை…”
“ஆமாடி… எனக்கு நம்பிக்கைதான் இருக்கு… எப்பேர்ப்பட்ட இந்த உத்தம புத்திரனுக்காகவே இவ்ளோ பேசற நீ… எனக்காக ஒரு நிமிசம் யோசிக்க மாட்டியான்னுதான் நானும் நம்பிக்கையோட லூசா சுத்திட்டு இருக்கேன்…”
“அப்படி என்னடி… அவன் உனக்கு முக்கியமா போயிட்டான்… சொல்லித் தொலை… அன்னைக்கும் இதேதான் கேட்டேன்… இன்றைக்கும் கேட்கிறேன் உன்னை ஏதாவது சொல்லி மிரட்டுறானா…“ கண்மணியின் தோளைப் பிடித்து உலுக்கியவன்…
“இல்ல…“ என்று கேட்ட அர்ஜூனின் கண்கள் கண்மணியைப் பார்த்தபடியே ஒரு நிமிடம் தயங்கியதுதான்… இருந்தாலும் வேறு வழி இல்லாமல் கேட்டே விட்டான் அர்ஜூன் கண்மணியிடம்…
“உனக்கு வேற ஏதாவது பயமா… என்னோட மேரேஜ்… அந்த லைஃப் இதெல்லாம் ஃபேஸ் பண்ண பயமா இருக்கா கண்மணி… எனக்கு ஏதேதோ யோசிக்கத் தோணுதடி… இவ்ளோ அவனப் பற்றி சொல்லியும் அவனுக்கு சப்போர்ட் பண்றேன்னா… பேருக்கு … ஊருக்காக மேரேஜ் பண்ணிட்டு… “ என்ற போதே
கண்மணியின் கண்களில் அடிபட்ட வலியும்… வேதனையும் மட்டுமே…
“சாரிடா… எனக்கு வேற வழியில்லடா… கேட்டுத்தான் ஆகனும்… இப்போதான் யோசிக்கிறேன் கண்மணி… எனக்காக யோசிக்கும் போது பதட்டமும் குழப்பமும் வருது… அந்த ரிஷின்னு வரும் போது… எனக்கு ஒண்ணும் தோணலைன்னு சொன்னியே… அந்த நொடில இருந்து… என் மனசு இப்படித்தான் யோசிக்குது” அர்ஜூனும் இப்போது வலியோடு பேச…
“இது.. இது.. இதுதான் அர்ஜூன்… எனக்கு பிரச்சனையே… எங்க சுத்தினாலும்… எனக்கு நடந்த பிரச்சனையை நீங்க ஞாபகப்படுத்திட்டே இருக்கீங்க… எனக்கு சின்ன வயசுல நடந்த பிரச்சனையை.. கடைசியா என் தாம்பத்திய வாழ்க்கையோடவும் சேர்த்துட்டீங்க… நானே நார்மலா இருந்தாலும்… என்னை மறுபடியும் மறுபடியும்… அந்த இடத்துக்கே கொண்டு போய் விடற மாதிரி ஃபீல்.. எனக்கும் புரியுது… நீங்க என்னைக் குத்திக் காட்டலை… என் மேல அக்கறைலதான் கேட்கறீங்கன்னு… எல்லாமே புரியுது…” என்று நிறுத்தியவள்… தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவளாக…
“ஒகே… அதெல்லாம் விட்றலாம்… எனக்கும் ரிஷிக்கும் எந்த பிரச்சனையுமில்லை… இதுக்கு மேலும் பிரச்சனை வரவும் வாய்ப்பு இல்லை… அவங்க அப்பா… அவரோட வாழ்க்கை… இதுக்கு ரிஷி என்ன செய்வார்… இதுல நான் ரிஷிய வெறுக்க என்ன காரணம் இருக்கு…” மீண்டும் ரிஷியிடமே வந்து நின்றாள் கண்மணி
அர்ஜூன் தான் இப்போது வெறுத்துப் போனான்
”நீ… உன்கிட்ட போய் என்னை புரிய வைக்க ட்ரை பண்றேன் பாரு… உன்னை என்னவெல்லாமோ நெனச்சேன்… புத்திசாலி… அறிவாளினுலாம் வெளில சொல்லாத…” என்றவன்… என்ன நினைத்தானோ
சட்டென்று நிறுத்தி ….
“வா… கிளம்பலாம்… இப்போ என்ன பேசினாலும்… நீ உன் பாயிண்ட் ஆஃப் வியூலதான் இருப்ப… உனக்கும் டைம் வேண்டும்” என்று கையைப் பிடித்து இழுக்க… இழுத்த அவன் கையை பட்டென்று தட்டி விட்டவளாக…
“நீங்க போங்க…” என்று மட்டும் சொன்னபடி நிற்க…
“ஓகே… ஒக்கே… என் மேல உனக்கு கோபம் இருக்கு… ஒத்துக்கறேன்… உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன்… புரிஞ்சுக்கோ … டைம் ஆகிருச்சு… வா… அன்னைக்கும் இப்படித்தான் நாம சண்டை போட்டுட்டு… நீ லேட்டா வீட்டுக்கு போய்…” என்ற போதே….
“கெளம்புங்க…” என்றவள் இப்போதும் இறுகிய முகத்துடன் இருந்தாள்… இருந்தாலும்
”எனக்கு கோபம் இல்லை அர்ஜூன்… எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும்…“
“நல்லா யோசி… ஆனால் வீட்ல விட்றேன்… அங்க தனியா திங்க் பண்ணு… நான் சொன்னதெல்லாம்… யோசி” அர்ஜூனும் விடாமல் பேச…
“எனக்கு என் புருஷன் கிட்ட பேசனும்… உடனே பேசனும்… இப்போதே பேசனும்.. அதுக்குத்தான் நான் கேட்ட தனிமை… போதுமா… இதுக்கு மேல வேற ஏதாவது சொல்லனுமா…” என்றவள் மொபைலை எடுத்து ரிஷிக்கு தொடர்பு கொள்ள… அர்ஜூன்… அவளிடமிருந்து போனைப் பறித்தவன்… போய்க் கொண்டிருந்த அழைப்பை கட் செய்தவனாக
“கண்மணி… இங்க ஒருத்தன் உனக்காக பைத்தியக்காரன் மாதிரி பேசிட்டு இருக்கேண்டி… என்னோட சந்தோசம் உனக்கு முக்கியம் இல்லையா… என்னை ஒரு நிமிசம் கூட நினைக்க மாட்டியா” அர்ஜூனின் குரல்… ஏகத்தும் எகிற…
அங்கிருந்த அத்தனை பேரும் இவர்களை திரும்பிப் பார்க்க…
“அர்ஜூன்… நான் இதை விட கத்துவேன்… அதுவும் லோக்கலா… யாரும் இருக்காங்கனுலாம் பார்க்க மாட்டேன்.. உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்னு.. நொடிக்கு நொடி சொல்லிட்டு… என்னாச்சு அர்ஜூன்… இது நீங்களே இல்லை அர்ஜூன்… நீங்க இன்னொருத்தர் மனைவிகிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கு தோணலையா… ” என்றவள்…
“எனக்குத் தோணல… தப்பாவும் படல கண்மணி… இப்போ கூட நீ என்னை விட்டு போகலைனுதான் எனக்குத் தோணுது…” ஆணித்தரமாக அடித்துப் பேசியவனை… சலிப்பான பார்வை பார்த்தவள்…
“இதுக்கும் மேல என்ன சொல்ல அர்ஜூன்… எனக்குப் புரியல… தெரியாதவங்களுக்கு சொல்லி புரியவைக்கலாம்… உங்களுக்கு எப்படி”
“எனக்கு நீ புரிய வைக்க வேண்டாம்… நீ புரியாம பேசிட்டு இருக்கேல்ல அதை யோசி… ஆனால் ஒரு நாள் கண்டிப்பா புரியும்… புரிய வைப்பேன்… அதுவரை உன்னை நான் விட மாட்டேன்…“ என்றவன் அதற்கு மேல் ஏதும் பேசாமல்… அவள் அலைபேசியை அவளிடமே தூக்கி எறிந்து விட்டுவண்டியை ஸ்டார்ட் செய்தவன்… கிளம்பி விட்டான்…
உண்மை என்னவென்றால்…. கண்மணிக்கு அர்ஜூனிடம் விளக்கம் கேட்கவோ… இல்லை வாதடவோ தோணவில்லை என்பதே அப்போதைய நிலையாக இருந்தது… ஏன் இன்னும் சொல்லப் போனால் ரிஷியோடு கூட அவள் பேச நினைக்கவில்லை… அர்ஜூனை அங்கிருந்து கிளப்பவேண்டும் என்ற நோக்கத்தில் தான் ரிஷிக்குமே அழைத்தது…
அவளுக்குத் தனிமை வேண்டும்… ஆக அர்ஜூனை அங்கிருந்து கிளப்பி விட்டாள்… போன அர்ஜூனை…. கவலையாகப் பார்த்துக் கொண்டிருந்தவளின் நினைவுகளிலோ… ரிஷியின் எண்ணங்கள் மட்டுமே…
ஆனால் கண்மணியை நொடி கூட யோசிக்க விடாமல் ரிஷியே அழைக்க… கண்மணியோ சட்டென்று அலைபேசியை அணைத்து விட்டாள்… ரிஷியிடமிருந்து வந்த அழைப்பு என்று தெரிந்தும் கூட…
---
அத்தியாயம் 35-2 தொடர்ச்சி அத்தியாயம் 35-3 வியாழக்கிழமை அன்று...
/*
“உங்களுக்கு யாரை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்…”
----
“பதில்…” கண்மணி அதட்டிய அதட்டலில்…
“நீன்னு வச்சுக்க…”
“உண்மை கேட்டேன் ரிஷிக்கண்ணா…”
-----
“என் அப்பா…”
“அப்போ இனி… இந்த மாதிரி கையை உடைக்கிற அளவுக்கு கோபம் வந்தால்… மாமா அந்தக் கண்ணாடி மேல இருக்கிற மாதிரி நெனச்சுகங்க… இது மாதிரி செய்யத் தோணாது... ஒகே வா…” என்று வைத்து விட…*/
/*முக்கிய அறிவிப்பு...
KPN's ’என் மனதை ஆள வா’.. முடிவுற்ற நாவல் த்ரெட் ஏப்ரல் இறுதி வரை மட்டுமே நமது தளத்தில் இருக்கும்...
https://www.praveenanovels.com/forum/ennn-mnnntai-aall-vaa
அண்ட் KPN's 2 அடுத்த நாவல்களான
அழகே சுகமா?!
அன்பெனும் இதழ்கள் மலரட்டுமே.
நாளையில் இருந்து நமது தளத்தில்... ஆரம்பமாகின்றது....
‘என் மனதை ஆள வா’ கதைக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி தோழமைகளே
*/
நன்றி
பிரவீணா விஜய்...
Nice and interesting episode after long break.