I’ve posted 29th-par2 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults Thanks Praveena Vijay
கண்மணி என் கண்ணின் மணி 29-2
“மரகதம் அக்கா…” சத்தமாக உரிமையாக கத்தியபடியே வரவேற்பறைக்குள் நுழைந்தவள்….…அங்கிருந்த சோபாவில் அமர…
அவள் அழைத்த மரகதத்திற்கு பதில் வேறொரு நடுத்தர வயது பெண்மணி.. அங்கு நிற்க… அந்தப் பெண்மணியோ கண்மணியை தெரியாத விருந்தினரைப் போல் பார்த்தபடி நின்றாள்…
”மரகதம் அக்கா இல்லையா” என்று தன் முன் நின்ற அந்த வீட்டின் புது வேலைக்காரப் பெண்மணியிடம் கொஞ்சம் ஏமாற்றம் கலந்த கலவையாக கண்மணி விசாரித்துக் கொண்டிருக்கும் போதே… கண்மணி அழைத்த மரகதமும் அங்கு வந்திருந்தாள்…
வந்தவள் முகத்தில் கண்மணியைப் பார்த்தவுடன் அப்படி ஒரு சந்தோசம்..
“மணி கண்ணு… எப்டி இருக்க கண்ணு… இந்தப் பக்கம் வர்றதே இல்லை” என்று மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் கேட்டவளுக்கு கண்மணியின் மஞ்சள் கயிற்றைக் கண்டவுடன் இன்னுமே முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்…
அவளை உடனே நெட்டி முறித்தவள்…
“கல்யாணாம் ஆயிருச்சா கண்ணு… உன்னைக் கட்டினா அவன் மவராசனாத்தான் இருக்கனும்” என்று சுற்றிப் போட்டவள்
“அம்மா சொல்லவே இல்லை” என்று தனக்குள் வருத்தபட்டுக் கொண்டவள் கண்மணியைப் பேச விடாமலேயே பேசிக் கொண்டே இருக்க…
”அக்கா… அக்கா…. கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க… அப்போதான் உங்க கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியும்… ஆன்டிக்கிட்ட போன்ல பேசிக்குவேன்… ஆன்ட்டியும் அடிக்கடி வெளிநாடு போறதால வர்றதில்லக்கா… எப்படி இருக்கீங்க…”
என்று கண்மணியும் அதே உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தவள்… தன் கழுத்தைக் காட்டி
”உங்க அம்மாக்கே இன்னைக்குத்தான் சொன்னேன்… அதுனால இப்படிலாம் முகத்தை வச்சுக்காதீங்க… சிரிங்க பார்க்கலாம்” என்று மரகதத்தின் முகவாயைப் பிடித்து கொஞ்சியபடி…
”வழக்கமா உங்க கையால கொடுப்பீங்கள்ள… அதே காஃபி… அதே நறுமணம்… அதே சுவையோட… இந்த மணிக்கண்ணுக்கு கொஞ்சம் தர முடியுமா” என்றபடியே அங்கிருந்த பத்திரிக்கைகளை புரட்ட ஆரம்பிக்க… அத்தனையும் மனநலவியல் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளே…. புரிந்தாலும் புரியாவிட்டாலும் படிக்க ஆரம்பிக்க…
“தோ கண்ணு… உடனே…” என்றபடியே கண்மணி கொஞ்சியதால் வெட்கமும் கூச்சமுமாக ஒன்று சேர்ந்த பாவனையில் உள்ளே போன மரகதத்திடம்… புதிதாக நியமிக்கப்பட்ட அந்த சமையல் கார பெண்மணி….
“யாரு இது….. உன் மூஞ்சில இவ்ளோ பல்ப் எரியிது “ என்று கேட்ட போதே
“நம்ம அம்மாவோட போட்டோல இருக்காங்களே… அந்த பவித்ரா அம்மா பொண்ணு” என்றவர்
”நான் சொல்லி இருக்கேனே…. “ என்ற போது மரகத்தின் முகம் இப்போது ஒளி வட்டத்தை இழந்தது போலத்தான் இருந்தது…
ஆனால் கேள்வி கேட்ட பணிப்பெண்ணின் முகம் கண்மணி யார் எனக் கண்டுகொண்ட பாவத்தில் விரிய… மீண்டும் ஓடி வந்து எட்டிப் பார்த்தாள்… வரவேற்பறையில் அமர்ந்திருந்த கண்மணியை
இப்போது அந்தப் பெண்ணின் முகத்திலும் பாவம் மற்றும் பரிதாபம் மட்டுமே கொட்டிக் கிடக்க…
“இந்த பொண்ணுக்கா,,, அம்புட்டு சோதனை… பார்க்கவே பாவமா இருக்கு… “ என்று நாடியில் கைவைத்தபடி சொன்னவவளிடம்…
”பத்து வயசுல இருந்து பார்க்கிறேண்டி… இன்னைக்கு எப்படி இருக்கு…. அது இங்க முதன் முதல்ல வந்தப்போ… இருந்த நிலையை நினைக்கும் போதே” என்று அன்றைய நினைவுக்கு போனவர்… கவலையாகப் பெருமூச்சு விட்டவராக
”அப்போலாம் அடிக்கடி வரும்… இப்போலாம் எப்பானாச்சும் தான் வருது… தங்கத்துக்கு கல்யாணம் ஆகிருச்சு… சந்தோசமா இருக்கனும் கொழந்தை… கட்டிக்கிட்ட மகராசனோட“ என்று இங்கிருந்தே சுற்றிப் போட…
“அவங்க தாத்தா கோடிஸ்வரங்க… ஆனாலும் கூப்பிட்டப்போ… அவங்க கூட போகலையே… அது பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் முழுக்க முழுக்க அவங்க அப்பாதான் ஒரு காரணம் … ஆனாலும் அப்பா கிட்டதான் இருப்பேன்னு சொல்லிருச்சு… பாசக்கார புள்ள… பந்தாவே இருக்காது” என்று வாய் பேசிக் கொண்டிருந்தாலும்…. கைகள் காஃபியை கண்மணிக்காக கவனமாக தயாரித்துக்கொண்டுதான் இருந்தது…
----
மரகதம் கொடுத்த காஃபி கோப்பையை வாங்கியபடியே… எழுந்த கண்மணி… அங்கிருந்த கிருத்திகாவின் மகனின் புகைப்படத்தில் பார்வையை வைத்தபடி…
“அக்கா… நித்தின்… வளர்ந்துட்டான்னு தெரியும்… ஆனால் மீசைலாம்… ஹ்ம்ம்… அதுவும் ஸ்டைலா போஸ் வேற… அக்கா அக்கானு சுத்திட்டு குட்டியா இருந்தவன்… காலேஜ்லாம் ஒழுங்கா போறானா” என்று மரகத்திடம் பேசிக் கொண்டே இருந்தவள் அங்கு அருகில் இருந்த புகைப்படத்தை பார்க்க தவிர்க்க நினைத்தாலும்… கண்கள் அங்குதான் நின்றது…
பவித்ராவும் கிருத்திகாவும் சேர்ந்து இருந்த புகைப்படம்… அவர்கள் கல்லூரி உல்லாச சுற்றுலாவின் போது எடுத்த புகைப்படம் அது…
கிட்டத்தட்ட… கண்மணியின் இப்போதைய சாயல் பவித்ராவிடம் இருந்தது… கண்மணி புடவையில் இருக்க… அவளது அன்னையின் புகைப்படமோ கொஞ்சம் மாடர்னாக ஸ்டைலாக இருந்தது …
மரகதம் இருவரையைம் ஒப்பிட்டபடி…
“இப்போ அப்படியே அம்மா மாதிரியே இருக்க கண்ணு… அதிலயும் அந்த மூக்குத்தி ரெண்டு பேருக்கும் அம்சமா இருக்கு கண்ணு” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே… கிருத்திகாவின் வாகனத்தின் ஒலி கேட்க…
”அம்மா வந்துட்டாங்க போல” என்று சொன்னபடி மரகதம் உள்ளே போய்விட…
கண்மணியின் கைகள் அவள் அன்னையின் புகைப்படத்தை அவளையறியாமல் வருடி… பவித்ரா அணிந்திருந்த மூக்குத்தியில் வந்து நின்றது…
இருவருக்குமான பந்தம் தொப்புள் கொடிக்கு பிறகு தொட்டுத் தொடர்வது இந்த மூக்குத்தியில் மட்டுமே… தங்கள் வீட்டில் தந்தையோடு இருக்கும் எந்த புகைப்படத்திலும் இந்த அணிந்திருக்கும் பவித்ராவை பார்க்க முடியாது…. இன்னும் சொல்லப் போனால் அவள் அன்னையின் மூக்குத்தி தான் அவள் அணிந்திருப்பது… வைதேகியிடம் பேத்தியாக ஆசையோடு கேட்டது இந்த ஒன்றை மட்டும் தான்…
தாயின் நினைவுகளில் தொலைந்து போகப் போனவளை…..
“மணி” உள்ளே வந்த கிருத்திகாவின் குரல் நடப்புக்கு கொண்டு வந்திருக்க… கூடவே கிருத்திகாவின் குரலின் மாற்றமும்… கண்மணி உணர்ந்தாள்
காரணம் கிருத்திகாவின் குரலில் சற்று பதட்டம் இருந்தது போல் தோன்ற… கண்மணி… புன்னகையுடன் தன் அருகே வந்து நின்ற கிருத்திகாவை நோக்கினாள்…
“ஆன்ட்டி… கூல்… கூல் நீங்கதான் எல்லாரையும் கூலா வச்சுக்கனும்… ஏன் இவ்வளவு பதட்டம்” என்றவளிடம்…
“திடீர்னு போன் பண்ணி எனக்கு மேரேஜ் ஆகிருச்சுன்னு சொல்ற… ஓகே அதுகூட பரவால்ல”
”அர்ஜூன் இல்லைனு சொன்ன பின்னால… டென்சன் ஏறாம என்ன பண்ணும்… ஆன்ட்டி அங்கிள் கிட்ட கூட பேசல நான்… ராஜ் கிட்டயும் பேசக் கூடாதுன்னு சொல்லிட்ட” என்று படபடத்தவரிடம்…
”மரகதம்… கிருத்தி ஆண்ட்டிக்கு ஒரு க்ரீன் டீ போட்டு எடுத்துட்டு வாங்க… இல்ல நித்தினுக்கு போன் போட்டுக் கொடுங்க… அவன் நாலு கடி ஜோக் சொன்னால் போதும்… ஆன்ட்டி அந்த கவுண்டர்லயே நார்மல் ஆகிருவாங்க” என்று கண் அடிக்க…
கண்மணி சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாலும்… கிருத்திகாவுக்கு உள்ளுக்குள் இடித்தது…
’காரணம் அவள் இங்கே வருகிறாள்… தன்னைத் தேடி வருகிறாள் என்றால் காரணம் இல்லாமல் இருக்காது…’ கிருத்திகா மனதுக்குள் கண்மணியைப் பற்றி எடைபோட்டுக்கொண்டபடியே…. முகத்தை சாதரணமாக மாற்றியபடியே… கண்மணியின் கன்னத்தை திருகியவள்…
“உன்னை… ”
”அப்டியே உன் அம்மா மாதிரியே… வாலு” என்றபோதே…
“ஆ..ஆ வலிக்குது ஆன்ட்டி” கண்மணி வலிப்பது போல் நடிக்க ஆரம்பிக்க…
“வெயிட் பண்ணு.. ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்…” சொன்னபடி ரெஃப்ரெஸ் ஆக அவர் உள்ளே போக…
“மெதுவா வாங்க… ஆன்ட்டி…” அவருக்கு பதில் சொன்னபடி…கண்மணி அவருக்காக காத்திருக்க ஆரம்பித்தவள் இப்போது பத்திரிகைகளை புரட்டவில்லை… மாறாக கிருத்திகாவிடம் என்ன என்ன பேசுவது என்று தனக்குள் ஒத்திகை பார்க்க ஆரம்பித்திருந்தாள்… கூடவே கண்மணியின் முகத்தில் வழக்கமான தீவிர பாவமும் முகத்தின் இறுக்கமும் வந்து சேர்ந்திருந்தது…
---
கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்திருந்தது…. கண்மணி பேச ஆரம்பித்ததில் இருந்து… அவள் பேசி முடிக்கும் வரை…. கிருத்திகா ஒரு வார்த்தை கூட இடையில் பேசவில்லை….
தன்னைப் பற்றி அல்ல தன் கணவனைப் பற்றி என்று கண்மணி ஆரம்பித்த போதே… அவள் சொல்வதை எல்லாம் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்து இருந்தார கிருத்திகா…
ரிஷிக்கும் தனக்குமான திருமணம் நடந்த விசயத்தில் ஆரம்பித்து… நேற்றைய இரவில் நடந்த அவனுக்கும் தனக்குமான உரையாடல்களை முழுவதுமாகச் சொல்லி முடித்த … கண்மணி கிருத்திகாவின் முகத்தைப் பார்க்க…
கிருத்திகாவின் முகத்தில் பெரிதாக மாறுதல் இல்லை… மாறாக கண்மணியின் முகத்தில் கவலை சூழ்ந்திருக்க… கிருத்திகா அமைதியாக இருப்பதை உணர்ந்தவாறே
“சொல்லுங்க ஆன்ட்டி…. ரிஷி நார்மலாத்தானே இருக்கார் ஆன்ட்டி… நான் பார்த்த உணர்ந்த… பழகின ரிஷி இல்லை இது…. இந்த இறுக்கமான முகம்… தீவிரம் … பொறுமை… இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு நான் என்னையே பார்த்தாற் போல இருந்தது…” கண்மணி சொல்லி முடிக்க…
கிருத்திகாவின் முகத்தில் இப்போது மெல்லிய புன்னகை மெல்ல படர ஆரம்பித்தது…
“மகிளா-ரிஷி காதல்…. உன்னை வேலைக்காரினு சொன்னது… அப்புறம்… அர்ஜூனைப் பழிவாங்க மேரேஜ் பண்ணினது… இதெல்லாம் யோசிக்க தோணலை… ரிஷி நார்மலா இருக்காறா… வேற மாதிரி இருக்காரா ஹ்ம்ம்ம்.. என்ன ஒரு கவலை உனக்கு” என்றவரிடம்…
“ப்ச்ச்… “ என்றவளிடம்…
“உன் அவர்கிட்ட பேசினாத்தான் சொல்ல முடியும்… நீ சொல்றதை எல்லாம் வச்சு… நான் எப்படி சொல்ல முடியும் மணி” மருத்துவராக கிருத்திகா… சொல்ல…
“நான் சொன்னதை வைத்தே சொல்லுங்க… எனக்குத்தான் குழப்பம்… நான் எப்போதுமே குழப்பம் தானே… “ என்றவளை முறைத்தபடியே
“ரிஷி நார்மலாத்தான் இருக்கார்… இன்னும் சொல்லப் போன தெளிவாத்தான் இருக்கார்… அவர் வாழ்க்கைல… அவருக்கான பாதையை நோக்கிப் போக இருக்கிற தடைகளை நெனச்சுத்தான் அவர் கவலைப்படுறாரு தடுமாறுறாரே தவிர… குழப்பங்கள் இல்லை.. ”
எனும் போதே கண்மணி இடையில் குறுக்கிட்டாள்…
“நேரத்துக்கு… இடத்துக்கு… ஆளுக்கு தகுந்த மாதிரி அவர் குணம் மாறுது… இது நான் பார்த்த கள்ளம் கபடம் இல்லாத ரிஷி இல்லை… எதைப் பண்ணினாலும்… லாப நஷ்டம்.. அவருக்கு எவ்வளவு நல்லது… இந்த மாதிரி திங்க் பண்ற ரிஷி இல்லை… அவர்… எப்டியோ அவர்கிட்ட தெளிவா பேசிட்டு வந்தாலும்… எனக்கு குழப்பம் தான் ஆன்ட்டி… குழப்பமா இருந்துச்சு… நேரா உங்ககிட்ட வந்துட்டேன்…” என்றவளின் குழந்தைத்தனமான பாவனையில்…
அவளின் அருகே அமர்ந்தவர்…
“ஒரு பிரச்சனையும் இல்லைடா… ரிஷிக்கு சப்போர்ட் பண்ண நினைக்கிறேல்ல… அதை மட்டும் பண்ணு… அதை மட்டும் பண்ணிக்கிட்டே இரு…” என்றவர்… நிதானமாக
“அவர்கிட்ட உன்னைப் பற்றி சொன்னியா நீ…” கவனமாகவே கேள்வியைக் கையாண்டார் கண்மணியிடம் வார்த்தைகள் ஆழமாக இருந்தாலும் சாதரண கேள்வி போல இயல்பாக கேட்பது போலக் கேட்க…
கண்மணியோ தலையை ஆட்டினாள்…
“இல்லை ரிஷிக்கு ஏற்கனவே பல கவலை… என்னைப் பற்றி சொல்லல..”
“ ஆனால் நான் என்னைப் பற்றி எல்லாத்தையும் சொல்லத்தான் போனேன்… அப்புறம் என்னைப் பற்றின கவலையோ இல்லை பரிதாபமோ அவருக்கு இன்னும் கூடுதலா ஆகிரும்னு தான் நான் சொல்லலை… இனி அவருக்கான கவலைகள் சுமைகள் எல்லாம் அவரை விட்டு போகும் போது கூட நான் சொல்லுவேனான்னு தெரியலை… அவருக்கா யார் மூலமாவது தெரிந்து கேட்டால் சொல்லலாம்னு விட்டுட்டேன்…” என்றவளைப் பார்த்தபடியே இருக்க
அவரின் அமைதியில்… கண்மணியே தொடர்ந்தாள்…
”நான் சரியாத்தானே இருக்கேன் ஆன்ட்டி… இருந்தாலும் எதையாவது மனசுக்குள்ள வச்சு… என்னையவே நான் குழப்பி… தேவையில்லாததை இழுத்து வைக்க வேண்டாம்னு உங்ககிட்ட வந்து கொட்டிட்டேன்… இப்போ நான் ஃப்ரீ…” என்று தன் நிலையையையும் அவருக்கு விளக்கியபடியே
”ஆனால் அர்ஜூன நெனச்சும் கவலையாத்தான் இருக்கு… நான் இன்னும் அவர்கிட்ட தெளிவா முதல்லயே சொல்லிருக்கலாமோன்னு கில்ட்டி ஃபீலா இருக்கு… அன்னைக்கு… அர்ஜூனைப் பற்றி பேசத்தான் உங்ககிட்ட போன் பண்ணேன்… ஆனால் இங்க இல்லைனு சொல்ல… டேக் டைவர்ஷனா பீச் பக்கம் போய்ட்டேன்… ஆனால் அதுகூட நல்லதுக்குத்தான்… அன்னைக்குத்தான் ஒரு ஃபேமிலியே ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கிட்டாங்க… அதிலயும் ஒன்பது மாதம் கர்ப்பமா” என்று ஆரம்பித்தவள்..
“ப்ச்ச்… அதை அப்புறமா சொல்றேன்… இந்த ரிஷி வேற சும்மா இருந்திருக்கலாம்… அர்ஜூன் கிட்ட போய்ப் பேசி…. இப்போ அர்ஜூன் அதையும் எடுத்துக்கிட்டாரு… நீ என் கிட்ட எப்படியும் வருவேன்னு சொல்லிட்டு வந்து நிற்கிறாரு…”
கண்மணியின் இந்தப் படபடப் பேச்சுக்கள் கிருத்திகா மட்டுமே அறிந்த ஒன்று…
புன்னைகையுடன் அவள் சொல்லி முடித்ததை எல்லாம் … கேட்டவர்…
“அர்ஜூன் பற்றி விடு… நீ சந்தோஷமா இருக்கேன்னு தெரிந்தால்... அவர் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாரு… “ கிருத்திகாவின் வார்த்தைகளில் கண்மணியின் முகம் இன்னும் இன்னும் அதிகமாகப் பிரகாசமாகியது…
“இது… இதுதான் நானும் அர்ஜூன் கிட்ட ஃபீல் பண்ணேன்… எனக்கு கிடைக்காததை எல்லாம் கொடுக்கனும்னு நினைக்கிறார் அவர்… என்கிட்ட சந்தோசத்தை மட்டுமே பார்க்கனும்னு நினைக்கிறார்… அவர்கிட்ட அதைத்தான் நான் ஃபீல் பண்ணேன்… காதலை இல்ல… அதுனால என்னால அந்த உணர்வை உள்வாங்க முடியல… முதன் முதலா பார்த்தப்போ நான் என்ன ஃபீல் பண்ணினேன்னு எனக்கே தெரியல… அன்னைக்கு இருந்த டயர்ட்ல மயங்கி அதுக்கப்புறம் அப்பாகிட்ட அவர் பேசின விதத்துல குழம்பினதுதான் மிச்சம்…. ஆனாலும் அவர் என் மேல காட்டின அக்கறை… பாசம் எல்லாம் பார்த்து என்னால அவரை விட்டு தள்ளி போக முடியல… லவ் பண்ணுவோம்னு நினத்தாலும்… முடியலை… ஆக” என்று நிறுத்தியவள்…
“அப்பா விலகி விலகிப் போனாலும்… அப்பாவை அம்மா துரத்தி துரத்தி லவ் பண்ணாங்கன்னு சொல்வீங்களே… அதெல்லாம் அவங்க பொண்ணோட ஜீன்ல ட்ரான்ஸ்ஃபர் ஆகல போல….”
கண்மணியைப் பேச விட்டார் கிருத்திகா…. எங்குமே அவர் அவளை நிறுத்தவில்லை… அவள் மனதில் இருப்பதைக் கொட்டவைத்துக் கொண்டிருந்தார் மருத்துவராக…
கண்மணியும் தொடர்ந்தாள்
“காதல் இந்த ஜென்மத்துக்கு வராது நமக்குனு தெரிஞ்சு போச்சு… எனக்கு என் குடும்பம் … இலட்சியம் … எக்சட்ரா… எக்சட்ரா… முக்கியம்னு சொல்ற ஆள் கண்ணு முன்னாடி நிக்கும் போது… நமக்கும் இதுதான் சரின்னு தோணுச்சு… கூடவே அப்பாக்கும் பிடிக்கும்… ஈஸியாப் போச்சு.. ரிஷியை மேரேஜ் பண்ணிட்டேன்…” சாதாரணமாகச் சொல்லி தோளைக் குலுக்கியவளை ரகசிய அர்த்தப் புன்னகை தேக்கி நோக்கினார் கிருத்திகா….
”நான் இப்போலாம் மத்தவங்ககிட்ட என் மேலான அக்கறைய பாசத்தை எதிர்பார்க்கலை… காதலும் அப்படியே… சோ எனக்கு பெருசா ப்ராபளம் இல்லை இந்த மேரேஜ்ல… ரிஷியைப் பற்றி கேட்க தோணுச்சு அவளோதான்” என்றவளையே சில நிமிடங்கள்… பார்த்தபடி இருந்தவர்…
“இப்போ இருக்கிற தெளிவு எப்போதுமே இருக்குமா…” என்றவரிடம்
“ஏன்… குழப்பம் வருமா என்ன… ஏன் வரும்… இவ்ளோ தெளிவா நான் இருக்கும் போது ஏன் வரப் போகுது… ” கண்மணி அப்பாவியாக விழி விரித்துக் கேட்க…
கிருத்திகா சிரித்தே விட்டார்…
“உன்னைப் போய் எல்லாரும் டெரர் பீஸ்னு சொல்றாங்க பாரு… எனக்கு மட்டும் தான் நீ யாருன்னு தெரியும்… இந்த கண்மணியை.. இந்த இயல்பான கண்மணியை ரிஷி கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டார்னா போதும்…”
“நான் நார்மலாத்தான் இருக்கேன்… ரிஷிகிட்ட நான் அப்படித்தான் பேசுவேன்… ரெண்டு மூணு தடவை பிரச்சனை வந்தப்போ நான் தான் காமெடி பண்ணி… சால்வ் பண்ணேன் … “
ஆ வென்று ஆச்சரியத்துடன் பார்த்தவளை…
“ஆமாம்… ப்ராமிஸா… அது என்னமோ தெரியலை… எவ்வளவு கோபமா போனாலும் ரிஷிகிட்ட என்னால இப்படித்தான் இருக்க முடியுது… அவர் சாஃப்ட் ஹேண்டில்னு ஃபீல் பண்ணேன்… ஆனால் நேத்து தான் அது தப்போன்னு தோணுச்சு… இப்போ இருக்கிற ரிஷி உண்மையா… நான் அப்போ பார்த்த ரிஷி உண்மையான்னு”
மீண்டும் கண்மணியின் முகம் யோசனை பாவத்துக்குப் போக… கிருத்திகா பேச்சை மாற்றினார்… ரிஷியைப் பற்றி கண்மணி அவள் எண்ணங்களை வெளியில் சொன்னதாலேயே அவள் மனம் தெளிவாகி இருக்கும் என்று நினைத்ததால்… பெரிதாக தீர்வு என்று சொல்லி… அறிவுரை என்று கூறி… அவளைக் குழப்பாமல் இருப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தவராக…
கண்மணியின் பேச்சை திசை மாற்றினார் கிருத்திகா…. பவித்ராவின் தோழியாக
“ராஜ் எப்படி இருக்காங்க”
“அவருக்கென்ன… இப்போ நான்லாம் அவர் உலகம் இல்லை… அவர் மாப்பிள்ளைதான்…” என்றவள்…
“எனக்கும் ரிஷிக்கும் வேவ் லென்ந்த் ஒண்ணா இருக்கோ இல்லையோ… அப்பாக்கும் ரிஷிக்கும் செமையா இருக்கு….” கண்மணி சொன்ன பாவனையில்
”லைட்டா என் செல்லம் கண்ல பொறாமை தெரியுதே…” கிருத்திகா தனது தோழியின் மகள் கண்மணியின் பாசத்திற்குரிய ஆன்ட்டியாக மாற…
“உங்க ஃப்ரெண்ட் ’மிஸஸ் பவித்ரா நட்ராஜ்’ இருந்திருந்தாத்தான்… அவங்க ஆத்துக்காரர் மேல பொஸஸிவ்னெஸ்ல… டென்சன் ஆகிருப்பாங்க… இவங்க பண்ற வேலையெல்லாம் பார்த்து… நான் ஏன் ஆகிறேன்” தோளைக் குலுக்கினாள் குறும்பாக கண்மணி…
”ஆனால் என்னதான் பேசுறாங்கனே தெரியாது ஆன்ட்டி… ஃபேக்டரிலதான் பேசுறாங்கன்னா… வீட்லயும் ஆல்வேஸ் டிஸ்கஷன் தான்… அம்மா இருந்திருந்தால் ரிஷியை வேலையை விட்டு எப்போதோ தூக்கி இருப்பாங்க” என்று சொன்ன கண்மணியிடம்
“இது என்னவோ வாஸ்தவமான பேச்சுதான் கண்மணி… உங்க அம்மா பொஸஸிவென்ஸ்லாம் சான்ஸே இல்லை…” என்று இருவருமாக பேச ஆரம்பிக்க…
வழக்கம் போல அவள் தாயைப் பற்றிய விசயங்கள் எல்லாம் இயல்பாகவே பவித்ராவின் தோழியாக கிருத்திகாவின் வாய் வழியே ஆரம்பிக்க… கண்மணி அதில் இலயிக்க ஆரம்பித்தாள்…
அவள் அன்னையைப் பற்றி அவளுக்கு சொல்லும் ஒரே நபர்… சில சமயம் தன் தோழியைத் திட்டியும் , கொஞ்சியும்… அவள் குறும்புகளில் பிரமித்தும்… நட்ராஜனுக்காக… அவர் காதலுக்காக தன் தோழி செய்த செயல்களை சொல்லும் போதும்… தாயின் நினைவுகளில் அவளையுமறியாமல் சந்தோஷமாக கலப்பாள் கண்மணி…
பவித்ராவை கிருத்திகா செல்லமாகத் திட்டினால்… கண்மணி தன் தாய்க்கு ஆதரவாகப் பேசுவதும்.. சில சமயம் தன் தாயை குறும்பாக வம்பாக பேசுவதும் என கண்மணி கிருத்திகாவிடம் மட்டுமே பவித்ராவின் மகளாக மாறி இருப்பாள்…
ஆக அவள் தாய்க்கும் இவளுக்குமான தொடர்பு கிருத்திகாவின் மூலமே கிடைத்தது… அது மூலமாகவே… அதாவது கிருத்திகாவின் வார்த்தைகள்தான்… கண்மணி என்ற உடைந்து போன சிறுமியை மீட்டெடுத்து வந்தது என்றால் அது மிகையல்ல என்றே சொல்லலாம்….
ஆனால்… அதே நேரம் கண்மணி கிருத்திகாவிடம் தாய்ப் பாசத்தையும் தேட மாட்டாள்… அவரிடம் பாசத்தையும் எதிர்பார்க்க மாட்டாள்.. ஆனால் இருவரும் பேச ஆரம்பித்தால்…. பவித்ராவைப் பற்றி எப்படியாவது கிருத்திகா பேச ஆரம்பித்து விடுவார்… அதனால் கண்மணியும் அவளையுமறியாமல் மன அமைதி ஆகி விடுவாள்…
இன்றும் அப்படித்தான்…
தன் தோழியைப் பற்றி சிலாகித்தவளாக பேசிக் கொண்டிருந்த கிருத்திகா…
“இப்படி என்னைப் பேச வச்சு… பேச வச்சே… கதையே எழுதிட்ட உங்க அம்மா அப்பாவைப் பற்றி… எழுதி முடிச்சுட்டியா ” என்ற போதே…
வேகமாக கட்டை விரலை உயர்த்திக் காட்டியவள்…
“ஆனால் அடுத்த கதைக்கு இப்போ என்கிட்ட ஒரு நாட் மாட்டிருக்கு… ஆர்ட்டிக்கிள் எழுதி… அம்மா அப்பா பையோக்ராஃபி எழுதி… ரொமான்ஸ் நாவல் எழுதுற அளவுக்கு முன்னேறிட்டேன்” கண்மணி கண் சிமிட்ட…
“யார் அந்த ஜீவன் உன்கிட்ட மாட்டினது” கிருத்திகாவும் விடாமல் கேட்க…
“லிவிங் டெமோ… 21 வயசுல அப்பா இறந்தது…. அப்புறம் லவ் ஃபெயிலியர்… “ என்ற போதே
“சேர்த்து வச்சுருவோமா” கிருத்திகா கண்மணியைச் சீண்ட…. கண்மணி கோபம் எல்லாம் படவில்லை…. மாறாக
”இன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு மேரேஜ் ஆன்ட்டி… ரொம்ப நல்ல பொண்ணு” உண்மையிலேயே கண்மணி வருத்தமாகச் சொன்னவள்… அவளது போனைக் காட்டியவள்…. மகிளாவிடம் இருந்து வந்த அழைப்புகளையும், திறக்கப்படாத குறுஞ்செய்திகளையும் காட்டினாள்… கிருத்திகாவிடம்
“எதையும் படிக்கலை ஆன்ட்டி…. வந்த முக்கால் வாசி கால்ஸ் எல்லாத்தையும் கட் பண்ணிட்டே இருந்தேன்… இந்த நிராகரிப்பு அவங்களுக்கு இப்போ கண்டிப்பா தேவை… ரிஷிகிட்ட இந்த நம்பர் இருந்திருந்தா அவருக்கு உண்மையிலேயே கஷ்டமாகிருக்கும் ஆன்ட்டி… ஏன்னா, அவரோ மகிளாவோ ஒருத்தொருக்கொருத்தர் பிடிக்காம விலகலை… மகிளா நல்லா இருக்கனும் அவர் நினைக்கிறார்… சோ ரிஷி நினைக்கிற நல்லது மகிளாவுக்கு நடக்கனும்னா… சில கசப்புகளை சகிச்சுதான் ஆகனும்… மகிளாவுக்கு கண்டிப்பா இந்த நிதர்சனம் புரியும் போது நல்லா இருப்பாங்க…”
பெருமையாக தன் தோழியின் மகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே….நித்தினும் அங்கு வந்து சேர… மீண்டும் கலகலப்பாகியது அந்த இடம்…
ஆக மொத்தம்… அங்கிருந்து கிளம்பும் போது கண்மணி சந்தோஷமாகவே கிளம்பினாள்…
-----
கண்மணி இப்படி இருக்க… ரிஷியின் மனம் ஒரு நிலையில் இல்லை… காரணம் இன்று மகிளாவின் திருமணம்… நேற்றைய அவன் திருமணத்தின் போது கூட யோசிக்க நேரம் இல்லாமல் பரபரவென நேரம் காலம் போயிருக்க… இன்று அப்படி அல்ல… மனமெங்கும் மகிளாவின் எண்ணங்களே…
நினைக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறான்… அதே நேரம் தவறாகவெல்லாம் நினைக்கவில்லை… இந்நேரம் மகிளா அந்த பிரேமின் மனைவி ஆகி இருப்பாள்… அவன் வேண்டுவது எல்லாம் இது மட்டுமே… பிரேம் மகிளாவைப் புரிந்து கொள்ள வெண்டும்… மகிளாவும் எல்லாம் மறந்து அவனோடு வாழ ஆரம்பிக்க வேண்டும்… இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்…
இந்த எண்ணங்கள் மட்டுமே தவிர… மகிளாவை இழந்து விட்டோம் என்ற வருத்தமெல்லாம் அவனிடம் துளி அளவும் இல்லை….
எதையோ எதையோ நினைத்தபடி வேலையையும் முடித்திருந்தான் ரிஷி… இனி அனைத்தையும் உடனே டெலிவரி செய்து விட வேண்டும்… அவனிடம் கண்மணியின் அலைபேசி எண் இருந்ததால்…. தினகரிடம் அழைத்தவன் அவனிடம் சொல்லி டெலிவரி வேனுக்கு தொடர்பு கொள்ளச் சொன்னவன்… ஆர்டர் கொடுத்திருந்த முகவர்களிடம் பேசிவிட்டு… முகம் அலம்ப வந்தவன் தண்ணீரில் நனைந்திருந்த முகத்தை துடைப்பதற்காக… கைக்குட்டையை எடுக்க… அப்போதுதான் கண்மணியின் ஞாபகமே வர…
அவனையும் மீறி நேற்றைய இரவுக்கு நினைவுகள் தாவின…
---
நாளை... கண்மணி... என் கண்ணின் மணி-29- பார்ட் 3
அதுவரை ... கண்மணி... என் கண்ணின் மணி-29- பார்ட் 3 டீசர்
அருமை..கண்மணியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடிந்தது..When Krithika said Raj, I was thinking who is he.. Then only realised that is Natraj. Interesting. Conversation between Kanmani and Krithika is nice.