I’ve posted 29th-par1 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
கண்மணி என் கண்ணின் மணி 29-1:
அடுத்த நாள் காலை… அம்பகம் பள்ளி…
வகுப்புகள் எடுக்கும் மனநிலையில் இல்லை கண்மணி… மாணவர்களுக்கு சில பயிற்சிகளைக் கொடுத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து விட்டாள்… அவள் மனமெங்கும் ரிஷி ரிஷி மட்டுமே…. நேற்றைய இரவு… ரிஷி அவனைப் பொறுத்தவரை அவனது குடும்பம்… கடந்த காலம்… ஏமாற்றங்கள்… லட்சியங்கள்.. என அனைத்தையுமே அவளிடம் சொல்லிவிட்டான்… கிட்டத்தட்ட அனைத்துமே இல்லையென்றாலும்… அவள் தெரிந்து கொள்ள வேண்டிய… அவசியமான அவனின் அனைத்து ரகசியங்களையும் அவளிடம் சொல்லி விட்டான்… இல்லை கொட்டி விட்டான் என்றே சொல்ல வேண்டும்… தன்னைப் பற்றி அவனிடம் சொல்லப் போனவளோ… அவனைப் பற்றிய விசயங்களையும் தனக்குள் கூடுதலாக சேர்த்து வைத்தவளாகிப் போயிருந்தாள்…
ஆனால்… இங்குதான் கண்மணி குழம்பிப் போனாள்… ரிஷி என்பவன் யார்?…
அவனின் நேற்றையை வார்த்தைகளில்…. உணர்வுகளின் வெளிப்பாட்டில்… அவனின் உண்மையான குணம் என்ன… என்பதே இன்று கண்மணிக்கு சிக்கலாகி விட்டது…
இதுவரை தான் பார்த்த ரிஷி… தான் உணர்ந்த ரிஷி இது எல்லாமே வேறு மாதிரியாக மாறி இருந்தது ஒரே இரவில்…
கணவனாக அவனிடம் அவன் குணங்களை எடை போடவில்லை… அதற்கான நேரமும் வர வில்லை என்பது வேறு கதை…. ஆனால் மனைவியாக அவனை எடை போட்டுக் கொண்டிருந்தாள் திருமதி ரிஷிகேஷ்…
இப்படியாக கண்மணி அவள் கணவனைப் பற்றிய குழப்பத்தில் இருக்க… அலுவலக பணியாள்… அங்கு வந்து… கண்மணிக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருப்பதாகச் சொல்ல…
யோசனையுடன் அங்கு போனவளுக்கு… காட்சி அளித்தது என்னவோ அர்ஜூன் தான்…. அதுவரை ரிஷியின் நினைவுகளில் இருந்தவள்… அமர்ந்திருந்த அர்ஜுனைப் பார்த்து ஒரு நிமிடம் கலங்கித்தான் போனாள்… இருந்தும் காட்டிக் கொள்ளாமல் பள்ளித் தாளாளர் முன் நிற்க…
இராஜமும் வேறு ஒன்றும் சொல்லவில்லை… ஏன் என்ன நடந்தது என்று கேட்கக் கூட இல்லை… கண்மணியின் வித்தியாசம் அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு மட்டுமே… அதைத்தவிர வேறு ஒன்றுமே அவளை வேறுபடுத்த வில்லை… நெற்றி வகிட்டில் குங்குமம் என்றெல்லாம் அவள் மாறி இருக்க வில்லை.. அதே போல மணமகளின் பூரிப்பும் அவள் முகத்தில் வந்திருக்க வில்லை…. நேற்றைக்கும் இன்றைக்கும் அவளிடம் உள்ள வித்தியாசங்களில் ஒன்றே ஒன்றுதான்… அது அவள் அணிந்திருந்த மஞ்சள் கயிறு மட்டுமே என்பது போல அவள் காட்சி அளிக்க… அந்த ஒரு வித்தியாசமே… அர்ஜூன் கண்களில் சொல்ல முடியாத ஆயிரம் வேதனைகளைக் கொண்டு வந்தது…
நேற்று அவன் இருந்த வேகத்தில் அவள் வீடு வரை சென்றவனுக்கு அங்கு கண்மணி இல்லாமல் போனது அவன் துரதிர்ஷடமே என்றுதான் நினைத்தான்… எங்கு போனாள் என்று யாரிடம் கேட்பது என்று கூடத் தெரியவில்லை அவனுக்கு… அந்த அர்த்த இராத்திரியில் கூட அவன் கண்மணிக்கு போன் செய்தான் தான்…
அது என்னவோ தெரியவில்லை… நேற்று நடந்த திருமணமோ… ரிஷி மற்றும் கண்மணியை கணவன் மனைவியாகவோ இல்லை… அந்த இரவு அவர்களுக்கான அந்நியோன்ய இரவு என்ற எண்ணமோ சிறிதளவு கூட அவனுக்கு வர வில்லை… அதே போல் ரிஷி கண்மணியிடம் நெருங்க முடியும் என்றெல்லாம் அவன் எண்ணங்களில் மருந்துக்கு கூட வரவில்லை…
இத்தனை வருடங்களில் தன்னாலேயே முடியாதது… ரிஷி மட்டும் அவ்வளவு ஈசியாக அவளிடம் நெருங்க முடியுமா… கண்மணியை வலுக்கட்டாயமாகவெல்லாம் அடிபணிய வைக்க முடியாது என்பது அவனுக்கே தெரியும் என்ற போது… அர்ஜூன் அந்த இரவைப் பற்றி பெரிதாக நினைக்க வில்லை
ஆனால் அவனைப் பொறுத்தவரை கண்மணியிடம் பேச வேண்டும்… அந்த வெறி மட்டுமே அவனிடம் இருக்க மற்ற பதட்டம் எல்லாம் இல்லவே இல்லை… அதனால் கண்மணிக்கு அவளை அலைபேசியில் அழைத்துக் கொண்டே இருக்க… அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது …
ஆக அந்த இரவை அர்ஜூன் மதுவின் துணையால் மட்டுமே கடக்க வேண்டியிருக்க… இதோ காலையில் வந்து விட்டான் அவளைத் தேடி… இவனின் எந்த மெசேஜுக்கும் … அழைப்புக்கும் எதிர் முனையில் பதில் இல்லை எனும் போது என்ன செய்ய… நேரடியாக பள்ளிக்கே வந்து விட்டான்…
தன் முன் வந்து நின்றவளை உரிமையுடன் நோக்கியவன் கண்களில் முதலில் அந்த மஞ்சள் கயிறுதான் பட… முகச் சுளிப்புடன் வேறு புறம் திரும்பியவன்… சில நிமிடங்கள் கழித்து மீண்டும் திரும்பினான் கண்மணியின் புறம் …வேறு வழி இல்லையே… அவளிடம் தானே பேசி ஆக வேண்டும்…
இராஜம் இருவருக்கும் தனிமை அளித்தபடி அங்கிருந்து வெளியேற… கண்மணி அமைதியாகவே நின்றாள்…
அவளாக அர்ஜுனிடம் பேச ஆரம்பிக்காமல் இருக்க…
அர்ஜுனுக்கு அவளது அழுத்தமான குணம் புதிதான ஒன்றா என்ன… பல்லைக் கடித்தவனாக…. எழுந்து நின்றவன்… அவள் கழுத்தில் இருந்த கயிற்றைக் காட்டி…
“இது நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சுரும்னு நினைக்கிறியா” வார்த்தைய முடிக்க முடியாமல் அர்ஜுன் தடுமாற…
“கண்மணி ரிஷிகேஷ்” நிதானமாகச் சொன்னவள்…
”இப்படி முடிச்சுருங்க அர்ஜூன்… இப்போ தாராளமா என் பெயரைச் சொல்லலாம்”
”நட்ராஜ் பொண்ணத்தானே பிடிக்காது… ரிஷிகேஷ் மனைவியா சொல்லலாம் தானே”… என்ற போதே…. முடிக்க வில்லை…
பட்டென நாற்காலியில் இருந்து எழுந்தவன் கைகள் கண்மணியின் குரல்வளையை பற்றி இருக்க… அவன் கைகளின் அழுத்தமோ கண்மணிக்கு இருமலைக் கொண்டு வந்திருந்தது…
கொஞ்சம் கூட அசராமல்… அவனைத் தடுக்காமல்… இருமிக் கொண்டு மட்டும் இருந்தவளை பார்த்து.. முழுக்க முழுக்க கோபம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாமல்... இயலாமல்
”ச்ச்சேய்” என்றபடி கடுப்பாகவே விட்டவன்…
“ஒரு கால்… மெசேஜ் பார்த்தால் கூட எடுக்க முடியாத அளவுக்கு நான் என்னடி பண்ணேன் உனக்கு… பைத்தியமா அலைய விடுறதுன்னு முடிவு பண்ணிட்டதான…”
”என் போன் நம்பர் மாறிருச்சு… மாத்திட்டேன்” இருமியபடியே… அவன் கேட்ட மற்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் இதுதான் முக்கியம் என்பது போல கண்மணி சொல்ல…
புருவம் நெறித்த கேள்விக்குறியாக நோக்க….
“ரிஷிகிட்ட தான் என் நம்பர் இருக்கு… அவரோட நம்பர்… என்கிட்ட” என்ற போது அவள் வார்த்தைகளில் மொத்தமாக நொந்தவன் அர்ஜூனாகிப் போக…
“*** ராஸ்கல்… நம்பரையே மாத்திட்டானா அவன்… ஒரே நாள்ள உன்னை மிரட்டி நம்பரையே மாத்த வைக்கிற அளவுக்கு.. அவன் **** **** ” என்றவன் கண்மணியை விட்டு விட்டு ரிஷியிடம் தன் மொத்த கோபத்தையும் திருப்பினான்… ஆனால் அந்தக் கோபத்தைக் காட்ட ரிஷி என்பவன் அங்கு இருந்தால் தானே… ரிஷி என்பவனை அடிக்க முடியாமல்… அந்த ஏமாற்றத்தில் தன் கை முஷ்டியால் அங்கிருந்த மேஜையை ஓங்கி குத்த… அங்கிருந்த பொருட்கள் எல்லாம் சிதறி அறையெங்கும் விரவியது…
அர்ஜூனின் முட்டாள் தனமான செயலை உணர்ந்த கண்மணி… சட்டென்று அவன் கையைப் பிடித்து நிறுத்த… அவளின் ஒரு கைபற்றல் அவன் கோபத்தை எல்லாம் வினாடியில் கட்டுக்குள் கொண்டுவர
“ஏன்டி… இந்த முடிவுக்கு வந்த… எனக்குத் தெரியும் அவ்வளவு ஈஸியாலாம் இதுக்கு நீ சம்மதிச்சுருக்க மாட்ட… உனக்கு என்னடி பிரச்சனை… ஏதாவது சிக்கல்ல மாட்டிகிட்டியா… அதை வச்சு… அவன் உன்னை மிரட்டுறானா… என்கிட்ட சொல்லுடி… என்கிட்ட மறைக்காதடி… அது எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்… அதுல இருந்து உன்னை நான் காப்பாத்துறேன்…“ என்றவன் அவனையுமறியாமல் கண்மணியின் அருகே அனிச்சையாகவே நெருங்கினான்… அவனைப் பொறுத்தவரை கண்மணி அவனது இளவரசி தான் இப்போதும் எப்போதும்… அந்த எண்ணம் மட்டுமே அவனுக்குள்…
கண்மணி இப்போது நகர்ந்தாள் அனிச்சையாக அவனை விட்டு… எப்போதும் அர்ஜுன் அவள் அருகே வரும் போது நகராதவள்… இன்று ரிஷியின் மனைவியாக அவனிடமிருந்து நகர ஆரம்பித்திருக்க…
அர்ஜூன் முதன் முதலாக அவளின் வித்தியாசம் உணர்ந்து.. கண்களை மூடி… நடந்ததை எல்லாம் தனக்குள் கிரகித்துக் கொண்டு… தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன்
“அந்த ரிஷி… அவன் நல்லவன்னு நினைக்கிறியா கண்மணி… ஒண்ணாம் நம்பர் ஃப்ராடு…. நடிக்கிறான்… என்கிட்டயே சொல்றான்” என்று அவன் பேச
“உங்கள பழி வாங்க…. என்னை அதாவது இந்த வேலைக்காரிய மேரேஜ் பண்ணிருக்காரு…“ கண்மணி அவன் வார்த்தைகளை முடிக்க… அதிர்ச்சியாகப் பார்த்தான் அர்ஜூன்…
”ரிஷி எல்லாமே என்கிட்ட சொல்லிட்டாரு.. உங்ககிட்ட பேசினது வரை…” நிதானமாகச் சொன்னவள்…
“வேற ஏதாவது சொல்லனுமா அர்ஜூன்… ரிஷி நல்லவன் இல்லை… உன்னை வேலைக்காரியாத்தான் பார்க்கிறான்… அப்புறம் உங்களை பழிவாங்க… இது தவிர வேறு ஏதாவது… ஏன்னா… இது மட்டும் தான் உங்களுக்கு தெரியும்… இதுக்கும் மேல பல காரணம் அவர் சொன்னார்… ஆனால் அது உங்களுக்கு நான் சொல்லனும்னு அவசியம் இல்லை…” என்று நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி…
நொடியில் மூன்றாம் மனிதனாக மாற்றி இருந்தாள் கண்மணி அர்ஜூனை…
ஆனாலும்… அவன் அவளை முறைப்புடன் இன்னும் நோக்கிக் கொண்டிருக்க… கண்மணி அவனைப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தாள்
”உங்களை நான் லவ் பண்ணலை… உங்களுக்கு துரோகமும் பண்ணலை… புரிஞ்சுக்கங்க… ஆனால் நீங்க காட்டுகிற அன்புக்கு உங்கள மேரேஜ் பண்ணியிருந்தால் தான் துரோகம்…”
”தாத்தா என்னைப் பற்றி உங்களிடம் சொல்லி… உங்களப் பற்றி என்கிட்ட சொல்லி… முதன் முதலா உங்களப் பார்க்கும் போது என்னை அறியாமல் ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான்… ஆனால் என்னால அடுத்த லெவலுக்கு அதை எடுத்துட்டு போக முடியல அர்ஜூன்… உங்க அன்பு பிடித்ததுதான்… ஆனால் நீங்கதான் எல்லாம்னு சொல்ல முடியலை… எங்க அப்பா மேல நீங்க காட்டின வெறுப்புனாலதான் எனக்கு உங்ககிட்ட தயக்கமோனுன்ற எண்ணம் எனக்குள்ள இருந்தது… ஆனால் என் அப்பாவை சமாளிக்கிறது எனக்கு பெரிய விசயமே இல்லை… எனக்கு ஒரு விசயம் பிடிச்சா… அதுக்கு சம்மதம் சொல்ற முத ஆள் எங்க அப்பாதான்… நீங்கதான் எனக்கு முக்கியம்னு தெரிந்தால் என் அப்பா என்னை விட்டு கண்டிப்பா போயிருந்துப்பார்… அதுதான் என் அப்பா.. சோ…நான் தானே பிரச்சனை என் மனசுதானே பிரச்சனை.. இது இன்னைக்கு நேத்து இல்லை… உங்களோட அன்னைக்கு ஒரு வாக்குவாதம் வந்ததே அன்னைல இருந்தே எனக்குள்ள கேட்டுட்டு இருந்த கேள்வி… கடைசியா எனக்குள்ள கிடைத்த ஆன்சர் உங்க மேல அன்பு இருக்கு ... காதல் இல்லைன்றதுதான்…”
அர்ஜூன் பேச வில்லை… அவளை பேச விட்டு … கூர்மையான பார்வையோடு பார்த்துக் கொண்டே தான் இருந்தான்…
“ஏன்… ரிஷிகிட்டயும் அது எனக்கு இல்லைதான்”
“ஆனால் அவருக்கு மனைவியா இருக்கிற போது எனக்கு எந்த கில்டி ஃபீலிங்கும் இல்லை… ஆனால் உங்களுக்கு மனைவியா… நினைக்கும் போது எனக்கு குற்ற உணர்வு அதிகமாகுது அர்ஜூன்… இத்தனை வருடத்தில் நீங்க காட்டின அன்புக்கு… “ என்ற போதே அர்ஜூன் முறைக்க…
“சரி காட்டின காதலுக்கு… உங்க மேல ஏன் எனக்கு காதல் வர மாட்டேங்குதுன்னு”
“ஏன்னா நான் இளிச்சவாயன்…” சட்டென்று அர்ஜூன் சொல்லி முறைக்க… கண்மணி அமைதியானாள் இப்போது
“இவ்ளோ நாள் உன்னை விட்டு வச்சுருந்தேன்ல… சின்னப் பொண்ணு… அப்படி இப்படின்னு… மேரேஜுக்கு பின்னால என் காதலைக் காட்டனும்னு நினைச்சுருந்தேன்ல… உனக்கு காட்ட வேண்டியதெல்லாம் காட்டிருந்தால் என் காலைச் சுத்திட்டு இருந்திருப்ப… நல்லவனா இருக்க கூடாதுடி… உங்களுக்கெல்லாம்… ”
வார்த்தைகளை கண்டமேனிக்கு கண்மணியிடம் விட…
”அர்ஜூன்” கண்மணி கத்தி விட
“என்னடி அர்ஜூன்… அதாண்டி… உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் என்னை மாதிரி நல்லவனுங்க கண்ணுக்கு தெரியாது…. இந்த மாதிரி அயோக்கியனுங்க… துரோகிங்க இவங்ககிட்ட தான் மாட்டுவீங்க… “
”உண்மையச் சொல்லவா.. இவன் கூடலாம் எவ்ளோ நாள் வாழ்ந்திருவேன்னு நானும் பார்க்கிறேன்… நீ கோபுரம் டி… அதை புரிஞ்சுக்கவே இவனுக்கு பல வருசம் ஆகும்… உன்ன மாதிரி பொண்ணெல்லாம் அவனுக்கு செட்டாகாது… கண்டிப்பா நீ அவனை விட்டுட்டு வருவ… அது மட்டும் நிச்சயம்…”
என்று நிறுத்தியவன்… அருகில் வந்து… அவள் கண்களைப் பார்த்து…
”நீ எனக்கு… எனக்கு மட்டும்தான்… “
”சபாஷ் அர்ஜூன்… நட்ராஜ் பொண்ணா இருந்தா மட்டும் தான் பிரச்சனை உனக்கு… எவன் பொண்டாட்டியா நான் இருந்தாலும் உனக்கு கவலை இல்லை… என்ன ஒரு முரண்… என்ன ஒரு பரந்த நோக்கு…” சொன்னவளிடம்…
அதுவரை அர்ஜூனிடம் இருந்த மரியாதை எல்லாம் கண்மணியிடம் காணாமல் போய் இருக்க… அர்ஜூன் அதை எல்லாம் கண்டு கொள்ள வில்லை… மாறாக அவளின் கோபம் கண்டு … சிறு புன்னகை வர… அதே புன்னகையோடேயே
“ஏன்னா நான் உன்னைக் காதலியா பார்க்கல…. என்னோட மனைவியாத்தான் பார்த்தேன்… பார்க்கிறேன்… பார்ப்பேன். “ அவன் சொன்ன தீவிர பாவனையில் கண்மணி அவனை இன்னும் அதிக கோபத்துடன் பார்க்க…
“கோபம் வருதா… நீ கண்டிப்பா என்கிட்ட வருவ… இந்தக் கண்மணி யாரோட கண்மணின்னு அப்போ உனக்கு மட்டுமில்ல எல்லொருக்குமே புரியும்” என்றவனிடம்… எகத்தாளமாக இதழ் சுழித்தாள் கண்மணி
“இவ்ளோ நாள் ப்ரின்சஸ்… இப்போ கண்மணியா… “அவனை விட்டு கைகளைக் கட்டியபடித் தள்ளி நின்றவள்…
”ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கங்க…. நான் யாரோட கண்மணியும் இல்லை… இன்னைக்கு மட்டும் இல்லை… எப்போதுமே… அப்படி என்னை யார்கிட்டயும் முழுசா ஒப்படைக்க முடியாது… ” என்றவளின் முகம் அப்படி ஒரு சோகத்தை கொண்டு வந்திருக்க… இருந்தும் தன்னைச் சமாளித்து பேச ஆரம்பித்தாள்…
”யார்கிட்டயும் நான் அன்பை எதிர்பார்க்கலை… ஒரு காலத்தில் அதெல்லாம் எதிர்பார்த்த கண்மணிதான்... ஏங்கின கண்மணிதான்… அதுனால அடிபட்ட கண்மணிதான்… ஆனால் ஒரு கட்டத்தில என் மேல யார் காட்ற அன்பையும் தள்ளி நின்னு அனுபவிக்க கத்துக்கிட்டேன்…என்ன நான் சுதாரிச்சப்போ எனக்கு அது அளவுக்கதிகமா கிடைக்க ஆரம்பிச்சுருச்சு… அப்பா, தாத்தா… பாட்டி… நீங்க… இப்படி எல்லோரட அன்பும்.. என் மீது அளவுக்கு அதிகமா நீங்க எல்லொரும் காட்டின பாசம் என்னை ஒட்ட வைக்கல… என்னை எனக்காக மட்டுமே நேசிக்கிறதுக்கு யாருமே இல்லை… என்னோட கடந்த காலத்தை… இல்லை என்னோட வேதனைகளைப் பார்த்து… வைக்கிற அன்பா… ஓவர் டோசா மட்டுமே என் கண்ணுக்கு தெரியுது… இயல்பா இல்ல அது… எனக்கு கிடைக்கிற நேசம் இயல்பா கிடைக்கனும்னு நினைத்தேன்… ஏன் அதை உங்க கிட்ட எதிர்பார்த்தேன்… உங்க கிட்டயும் அது எனக்கு கிடைக்கல அர்ஜூன்…”
“இன்னும் சொல்லப் போனால்… எதிர்பார்பில்லாத அன்பு என் அம்மாவோட தொப்புள் கொடியோட போயிருச்சோன்னு தோணும்… என் கிட்ட யாருமே இயல்பா இல்லைனுதான் தோணுது… என்கிட்ட குறைகள் இருந்தாலும்… என்னைத் திட்ட நினைத்தாலும் எல்லோருமே என்னைத் திட்டாமல்… எதுக்கெடுத்தாலும் என்னை தாங்குறீங்க… அது எல்லாமே எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறதுக்கு பதிலா… வெறுப்பைதான் தருது…”
”ஆனா அதுக்காக நான் யாரையும் வெறுக்கலை… என்னோட பாசத்தை மட்டுமே எல்லோருக்கும் காட்டுவேன்… “ என்றவள்…
“உங்ககிட்ட மட்டும் தான் நான் தோத்துட்டதா ஃபீல்… ” தன்னை மீறிப் பேசிக் கொண்டிருந்தவளை பரிதாபமாகப் பார்த்தவன்.. அது தாங்காமல்
“ஏன்டி.. இப்படிலாம் பேசுற” தழுதழுத்தவனாக அருகில் வர…
கண்மணியோ அவனை விட்டு… வேகமாக பல அடிகள் பின்னால் போனவளாக…
“ப்ளீஸ் என்னை விட்டு தூரமா போயிருங்க அர்ஜூன்… கண்மணியா வாழ மட்டுமே தகுதியான பொண்ணு… அந்த சாதாரண வாழ்க்கை கூட நான் அனுபவிக்கலை நான் இன்னும்… அந்த சாதாரண கண்மணியாகவே நான் வாழவில்லை எனும் போது இந்த பிரின்சஸ்… இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்… அந்தக் கொடுப்பினை எனக்கு இருந்திருந்தா என் அம்மா உயிரோட இருந்திருப்பாங்களே… வயிற்றில இருந்த பத்து மாதமும் என்கிட்ட பாசத்தைக் காட்டி… எனக்கு அப்போதே பேர் வைத்து கொஞ்சின என் அம்மா… அந்த பாசத்தை எல்லாம் நான் பிறந்து வந்தப்போ காட்ட முடியாம எப்போ என்னை விட்டு போனாங்களோ… எந்த பாசத்தை காட்டக் கூடாதுனு என் அப்பா தள்ளி வச்சாங்களோ… அந்தப் பாசம் எனக்கு எப்போதுமே யார்கிட்டயுமே கிடைக்காது… அது கிடைத்தாலும் அதை அனுபவிக்கத் தெரியாத துரதிர்ஷ்டசாலி தான் நான் போதுமா… இப்படியெ இருந்துட்டு போறேன்… ப்ளீஸ்” என்று கையெடுத்துக் கும்பிட்டவளிடம்…
என்ன பேசுவான் அர்ஜூன்… கலங்கிப் போனான் கண்மணியின் வார்த்தைகளில்… ரிஷி எல்லாம் அவன் நினைவில் கூட இல்லை…
அவனால் எதுவுமே செய்ய இயலாத நிலை… என்ன செய்வதென்றும் புரியாத நிலை… அவளை மீறி அவளிடம் நெருங்க முடியவில்லை… கண்மணியை மிரட்டியெல்லாம் எந்த ஒரு காரியமும் சாதிக்க முடியாது என்று அர்ஜூனுக்கு நன்றாகவேத் தெரியும்… அவளைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் அவனால் அவளை நெருங்க முடியவில்லை… தன்னவளாக்கிக் கொள்ள முடியவில்லை… கை நழுவ விட்டு விட்டானோ… அப்படியே அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து அமர்ந்து விட்டான் அர்ஜூன்…
ஆனால்… கண்மணியைப் பற்றி ஒன்றும் அறியாமலேயே… தன் நேசத்தை அவளிடம் முழுமையாக காட்டாமலேயே தன் இயல்பான குணத்தாலேயே… இயந்திரப்பாவையாயான கண்மணியை கொஞ்சம் கொஞ்சமாக தன் கண்ணின் மணியாக அவள் கணவன்… மாற்றியதுதான் காலத்தின் விசித்திரம்…
அடுத்து என்ன செய்ய என்று புரியாமல் அர்ஜூன் அப்படியே கல்லாக சமைந்து அமர்ந்திருக்க… நாராயண குருக்கள் உள்ளே வந்தார்… அர்ஜூன் கண்மணி பேசிக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டார் அவர்… இடையில் குறுக்கிடவில்லை...
தன்னால் தான் எல்லாமோ என்ற குற்ற உணர்வு… அவருக்குள்… கவனமாக கையாண்டிருந்தால் தன் பேத்தி அர்ஜூனுக்கு கிடைத்திருப்பாளோ…
தன் மகளைப் போல பேத்தியையும் தவற விட்டு விடக் கூடாது என்று… என்று அர்ஜூனிடம் கண்மணியைப் பற்றியும் நட்ராஜைப் பற்றியும் அனைத்தும் சொல்லி… கண்மணி மேல் அவனை நேசம் கொள்ள வைத்ததும்… நட்ராஜ் மேல் துவேசம் கொள்ளவும் வைத்தது தவறாகி விட்டதோ… கலங்கித்தான் போனார்…
அதே நேரம்… கண்மணியையும் அவரால் வெறுக்க முடியவில்லை… மகளைத்தான் வெறுத்து ஒதுக்கினார்… தன் பேத்தியிடம் அப்படி இருக்க முடியவில்லை…
இப்போதும் தன் பேத்தியிடம் தான் போய் நின்றார்…
“அம்மாடி… நீ ஏண்டா இவ்வளவு பேசுற… நம்ம அர்ஜுன் … மனசு தாங்காம பேசுறான்… நான் பார்த்துக்கறேன்…” என்று கண்மணியை அழைத்து ஆறுதலாகப் பேச
“தாத்தா” என்று அர்ஜூன் கத்த
அவனைக் கண்டு கொள்ளாமல்…
“நீ சந்தோசமா அந்தப் பையனை கல்யாணம் பண்ணின்டா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லடாம்மா… ஆனால் உன்னைக் கண் கலங்க வச்சான்” என்ற போதே….
அர்ஜூன்… விருட்டென்று எழுந்தவன்… அங்கிருந்து வெளியேறி விட… நாராயண குருக்களும் சில நிமிடங்கள் கண்மணியோடு பேசிவிட்டு… அர்ஜூனைத் தான் பார்த்துக் கொள்வதாக… அவனிடம் தான் பேசுவதாக சமாதானமாகக் கூற… நம்ப முடியாமல் தன் தாத்தாவைப் பார்த்தவள்…
“என்னைத் திட்ட முடியாமல்… ரிஷிக்கிட்ட உங்க பணபலத்தையும் ஆள்பலத்தையும் காட்ட நினைச்சீங்க” என்று கண்மணி அவளையும் மீறி பேச…
”என்னோட ஆள் பலம் … பண பலம் இதெல்லாம் காட்டனும்னு நினைத்திருந்தால்… உன் அம்மா என்னை மீறி போனப்பவே காட்டி இருந்திருப்பேன்… அந்த நட்ராஜை போட்டுத்தள்ளிட்டு… என் பொண்ண கூட்டிட்டு வந்திருக்க முடியாதாம்மா… அப்படிலாம் பண்ணித்தான் என் பொண்ண என் கூட தக்க வைக்கனும்னு நினைக்கல… தலை முழுக மட்டும் தான் என்னால முடிந்தது… எப்படி வளர்ந்த என் பொண்ணு… டாக்டருக்கு படிச்சவ… கடைசியில… உன்னை இந்த உலகத்துக்கு கொண்டு வருகிற போராட்டத்தில… “ என்றவரின் கண்கள் கலங்கி விட…
”அவ படிச்ச படிப்பு கூட அவளுக்கு கை கொடுக்கல”… கண்மணியின் முகம் முற்றிலும் இறுக்கமாகி இருக்க… இருவருமே அதற்கு மேல் பேசவில்லை… அங்கு நிசப்தம் தான்… அதன் பின் ராஜம் அங்கு வர… நாரயண குருக்கள் அதன் பின்னர் கிளம்பிவிட்டார்…
இப்போது ராஜம் கண்மணியிடம் பேச ஆரம்பிக்க… கண்மணியோ… பெரிதாக எல்லாம் விளக்கம் எல்லாம் கொடுக்காமல்… அவளுக்கும் ரிஷிக்கும் நடந்த திருமணத்தை பற்றி சுருக்கமாகச் சொல்லி விட்டு…
“எனக்கு இன்னைக்கு ஹால்ஃப் டே லீவ் வேண்டும் மேடம்” என்று மட்டும் சொல்ல…
இராஜமும் அவளிடம் பெரிதாக விசாரிக்காமல்… உடனடியாக அவளுக்கு கேட்ட விடுப்புக்கு அனுமதி அளிக்க… அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் அந்த மிகப்பெரிய இல்லத்தின் முன் இறங்கி இருந்தாள்…
’கிருத்திகா’ அந்தப் பெயரோடு மனநல மருத்துவருக்கான அவர் படித்த அத்தனை டிகிரியும் சேர்ந்து பெயர்பலகையில் மின்னிட… அந்த இல்லத்துக்குள் நுழைய கண்மணிக்கு யாருடைய அனுமதியும் தேவைப்படவில்லை… அவள் உள்ளே நுழையும் போதே அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் மரியாதையோடு அவளைப் பார்த்து புன்னகைக்க… அவர்கள் அனைவருக்குமே… புன்முறுவலோடு தலை அசைத்தபடியே உள்ளே நுழைந்தாள் கண்மணி…
நாளை... கண்மணி... என் கண்ணின் மணி-29- பார்ட் 2
அதுவரை ... கண்மணி... என் கண்ணின் மணி-29- பார்ட் 2 டீசர்
Nice epi. It gives the reason why Kanmani married Rishi instead of Arjun. Trying to understand her emotions. Nicely written.