அத்தியாயம் 2
"மகி" என்று ஆரம்பித்த அவனின் குரலிலேயே எதிர்முனையில் இருந்த மகிளாவுக்கு அவனின் நிலை தெளிவாக விளங்க ....
"குடிச்சிருக்கியா மாமா, இந்த கருமத்துக்குத்தான் இந்த வருஷம் ஊருக்கு வரலையா" என்ற குரலில் ஒரு பக்கம் கடுப்பும் மறுபக்கம் ஏக்கமும் இருக்க..
ரிஷியோ.... அவளை விட மிகக் கடுப்பாக
"போனை வைக்கவா... அத்தை மக ஆசையா பிறந்த நாள் வாழ்த்து சொல்வா , நியூ இயர் விஷ் சொல்வானு.... இந்த மாமன் மகன் ஆசையா போன் பண்ணினால் என்னையே கேள்வி கேட்கிற... உனக்கு தெரியுமா மகி… ரிது , அம்மா லாம் கூட போன் பண்ணி இருந்தாங்க... அவங்களுக்கு கூட திரும்பி போன் பண்ணாமல் உனக்கு போன் பண்ணினேன் இல்ல என்னைய சொல்லணும்” என்று ரிஷி கோபமாய் பேச
அவன் சொன்ன ரிது , அம்மாவுக்குக் கூட போன் செய்யாமல் உனக்கு போன் செய்தே என்ற வார்த்தையில் உருகினாள் மகிளா.
இந்த நட்ட நடு ராத்திரியில் … எவனாவது தாய்க்கும் தங்கைக்கும் அழைப்பானா….
அவன் ஏன் தன் அம்மா தங்கைக்கு போன் பண்ணவில்லை என்ற அடிப்படைக் காரணத்தை கூட மறந்த மகிளா… அதில் மயங்கியவள்தான்… பின்
அவன் கோபப்படுகிறான் என்பதை உணர்ந்தவளாக
"சரி சரி நான் எதுவும் கேட்கலை" என்று சமாதானமாக பேச ஆரம்பித்தவள் அவனுக்கு புதுவருட மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூற, ரிஷியும் தன் புதுவருட வாழ்த்துக்களைக் கூறியவன், மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட்டதாலும், அவனால் பேச முடியாத காரணத்தினாலும் மகிளாவிடமிருந்து விடைபெற நினைக்க, அவளோ ரிஷியை விடவில்லை.
"மாமா" என்று சிணுங்கியவள் "போன வருஷம் உன் பிறந்த நாளுக்கு கொடுத்த மாதிரி… இந்த வருஷமும் என " என்று இழுக்க
கேட்ட ரிஷிக்கோ அடித்த போதையெல்லாம் இறங்குவது போல இருக்க… போதையில் இருந்த போதிலும் சுதாரிப்பாய் ஆனான்… அதற்கு காரணமும் இருக்க…
“அடி வாங்கப் போற மகி… ஏற்கனவே சொல்லிட்டேன்… இப்போ படிக்கிற வேலைய மட்டும் பாருனு ” என்றான் கொஞ்சம் உள்ளே போன குரலில்…
“அப்போ நீயும்… நான் படிச்சு முடிச்ச பின்னால… சொல்லிருக்கனும்… இப்போ நான் மட்டும் தான் உன்னை நினைத்து ஏங்கிட்டு இருக்கேன்… போ மாமா… தனியா இருந்தவகிட்ட நீதானே வம்பு பண்ணி கொடுத்த… அப்போ பயம் இருந்துச்சு… இப்போ பயம் தெளிஞ்சுருச்சு… இப்போ கொடுக்கப் போறியா இல்லையா” என்ற போதே… அவளை அதற்கு மேல் பேச விடாமல்…
"மகி செல்லம் அதுக்கு நீயும் நானும் வாங்கி கட்டிக்கிட்டதுலாம் ஞாபகம் இருக்குதானே” என்று சொல்ல
"ப்ச்ச்… மாமா… அதெல்லாம் இருக்கு இருக்கு…. போன்லதானே கேட்கிறேன்” என்று மகியும் தைரியமாய் பேச அவளை அடக்கினான் ரிஷி.
"இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் வச்சிட்டு ..... பேசற பேச்சாடி இது… ரிதன்யா சொல்லிட்டு இருந்தா நீ கனவு லோகத்திலதான் ஆல்வேஸ் இருக்கிறேன்னு" என்று ரிஷி கடிய...
"ஹப்பா…" என்று சலித்தவள் ,
“உங்கூடத்தான் மாமா டூயட் பாடிட்டு இருக்கேன்… உனக்குத்தான் தெரியலை” ஏக்கமாகச் சொன்னபடி….
"மாமா…. 12த் எக்ஸாம்னு எனக்கு இங்கதான் கொடைச்சல் கொடுக்கறாங்கனா.... நீயுமா.... ஆமா இப்ப படிச்சி என்னத்த கிழிக்க போறேன்.... வீட்டில் ஒருத்தவங்க மெத்த படிச்சா போதும்.... அதுதான் நீ படிக்கிறியே” என்று நீட்டி முழங்க .... எதிர்முனையில் அதைக் கேட்ட ரிஷியோ
"ஹும்க்கும் நான் படிக்கிற இலட்சணம் எனக்குத் தானே தெரியும்" என்று மனதுக்குள் தான் படிக்கும் அழகை நினைத்து தன்னையே மெச்சிக்கொண்டவன்
"தாயே தெரியாமல் சொல்லிட்டேன்" என்றபடி மகியை வேறு வழியில் மடக்க நினைத்தான் ரிஷி.
"டார்லா, உன்னை ஏன் படிக்கச் சொல்றேன் தெரியுமா... நாளைக்கு நமக்கு குழந்தை குட்டிங்கன்னு ஆனா நீதானேடா சொல்லிக் கொடுக்கணும் அதுனால தான் சொன்னேன்" என்ற போதே குழந்தை என்ற வார்த்தையில் மகிளாவின் கற்பனைச் சிறகுகள் விரியத் தொடங்கிவிட
"மகி மகி " என்று பலமுறை கூப்பிட்ட பிறகுதான் நனவுலகிற்கு திரும்பினாள்…
அதன்பிறகு ரிஷியை வைக்க விடாமல் பேசிக் கொண்டேயிருக்க... ரிஷியோ உம் கொட்டிக்கொண்டே ஒரு கட்டத்தில் தூங்கிவிட மகிளா வேறுவழியின்றி வைக்க வேண்டியதாகப் போனது…
அடுத்த நாள் காலை ரிஷி எழுந்த போதுதான் மகிளாவிடம் பேசிக் கொண்டே தூங்கிய விஷயமே விளங்கியது…
நேற்று அடித்த போதையில் இந்த அளவு ஞாபகமாவது இருக்கின்றதே என்று தன்னை பெருமையாக நினைத்தபோதே கடந்த வருடம் அவனாலும் மகிளாவாலும் நடந்த குளறுபடிகள் அவன் நினைவுகளில் இப்போது வந்து போயின….
ரிஷிக்கு மகிளாவை சிறு வயதில் இருந்தே பிடிக்கும்… கடந்த வருடம் கல்லூரியில் சேர்ந்த பின்… இங்கு கேட்ட காதல் கதைகள்… பார்த்த காதல் ஜோடிகள் என… பருவத்து இளைஞனாக அவனது ஹார்மோனையும் உசுப்பேற்ற ஒருவழியாக தன் காதலை மகிளாவிடம் சொல்ல.. மகிளாவுக்கும் தன் மாமனைப் பிடிக்கும்தான் முதலில் மிரண்டு மறுக்க… மறுத்த மகிளாவையும் எப்படியோ கெஞ்சி கொஞ்சி சம்மதிக்க வைத்திருந்தான் தன் காதலுக்கு.
கடந்த வருடப் பிறந்தநாள் போது, நண்பர்கள் உசுப்பேற்றியதாலோ, பிறந்த நாள் உற்சாகமோ… இல்லை அந்த வயதின் உத்வேகமோ தெரியவில்லை மகிளாவை தனியறையில் வைத்து முத்தமிட்டு விட… எதார்த்தமாக அங்கு வந்த அவனது தங்கை ரிதன்யா கண்ணில் இருவரும் சரியாக மாட்டிக் கொள்ள.
அதன்பின் என்ன? ரிதன்யா தன் அன்னையிடம் சொல்லிவிட்டாள். நல்ல வேளை இருவரும் விரும்புகிறார்கள் என்பதை மட்டும் சொல்லியிருந்தாள் வேறு எதுவும் சொல்லாமல்…
முதலில் ரிஷி வீட்டில் கலவரம் வெடிக்க… அதன் பின் ஓரளவு சமாதானமான அவர்கள்.. மகிளா வீட்டில் பேச அங்கு ரிஷிக்கு மகிளாவை கொடுக்க மகிளாவின் தந்தைக்கு விருப்பமேயில்லை.
காரணம் ரிஷியின் பொறுப்பற்ற தனம்தான்… பாசக்காரனாக இருந்த போதிலும் அவனுக்கு விபரம் போதவில்லை என்பது அவரது எண்ணம். ஆனால் தன் ஒரே செல்ல மகளின் பிடிவாதத்தால்… வேறு வழியின்றி சம்மதித்து வைத்தார்.
இந்த கலவரத்தின் போதுதான் மகிளாவின் தந்தை வார்த்தையை விட்டிருந்தார்.
"டீன் ஏஜ் கூட தாண்டலை... இதுங்க பண்றதுக்கு பேர் காதல்னு சொல்லி நீங்களும் இதைப் பெருசா பேசறீங்க... எது நல்லது கெட்டதுனு பிரித்துப் பார்க்க முடியாத விபரம் இல்லாத வயசு... இதுக்கு நீங்களும் ஒத்தூதரீங்க" என்று சொல்லிவிட அதை மனதில் வைத்தே ரிஷி நேற்று கொண்டாடிய பார்ட்டி......
அது ஒருபுறம் இருக்க ரிதன்யா பார்த்துவிட்டாள் என்பதால் அதன் பிறகு மகிளாவிடம் எல்லை மீற நினைக்கவேயில்லை…
அதே போல் ரிதன்யாவும் அன்று நடந்த கலவரத்திற்கு பிறகு தன் அண்ணனைப் பற்றி மகிளா மூலம் தனக்குத் தெரிந்த அவனது கெட்ட பழக்க வழக்கங்களை பற்றி எல்லாம் வீட்டில் மூச்சு விட வில்லை. ஏன் ரிஷிக்கு கூட ரிதன்யாவுக்கு தெரியும் என்பது தெரியாது.
தன் கடந்த வருட நினைவுகளை அசை போட்டபடியே எழுந்த ரிஷி மறக்காமல் தன் பெற்றோருக்கும் தன் தங்கைகளுக்கும் போன் செய்ய மறக்கவில்லை… அவர்களுக்கு புது வருட வாழ்த்துக்களைச் சொன்னவன்… தன் பிறந்தநாளுக்கான ஆசிர்வாதங்களை பெற்றோரிடமிருந்தும்… வாழ்த்துக்களை தன் சகோதரியிடமிருந்தும் வாங்கியபடி அன்றைய தினத்தை ஆரம்பித்தான்
கிட்டத்தட்ட 10 மணி அளவில் அவனோடு வந்திருந்த அவனது நண்பர்கள் கூட்டம் கிளம்பிச் செல்ல.... விக்கியும் ரிஷியும் தங்கள் டெமோ மாடலுக்காக சொல்லி வைத்திருந்த இடத்திற்கு கிளம்ப ஆயத்தமாக.... அதன் முதலாளியே அவர்களை போனில் தொடர்பு கொண்டு தற்போது வேறு வேலை இருப்பதாக கூறி மாலை 4 மணி அளவில் தன்னை வந்து சந்திக்குமாறு கூறி விட...
நண்பர்கள் இருவரும் பகல் பொழுதை அன்று வெளியான திரைப்படத்திற்கு தாரை வார்த்துவிட்டு… பொறுப்பாக நான்கு மணி அளவில் அந்த முகவரியைத் தேடிப் போனார்கள் நண்பர்கள் இருவரும்...
ஆனால் ஏனோ அந்த முகவரியை… இருவராலும்.தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போக
ரிஷி அந்த நேரத்திலும் "ஏன் விக்கி… நேற்று என் கண்ணுக்குத்தான் கண்மணி இல்லம் தெரியலை.... இன்னைக்கு உனக்குமாடா” என்று விக்கியை வம்பிழுத்தபடி இருக்க…
விக்கி அவன் மேல் கோபம் கூட பட முடியாத நிலையில் இருந்தான் காரணம்… விக்கி அவனுக்கு தெரிந்த நபர்களின் மூலம் தேடில் கிடைத்த இடம் என்பதால் எல்லாம் என் தலை எழுத்து… என ரிஷியின் கிண்டல்களை எல்லாம் பொருத்தபடி வந்து கொண்டிருந்தான்.
இதுவே ரிஷி சொன்ன இடம் என்றால்... இவ்வளவு அலைச்சலுக்குப் பதில் நாம் வேறொருவரின் உதவியை நாடிக் கொள்ளலாம் என்று ரிஷியை திரும்ப அழைத்துச் சென்றிருப்பான்…
முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்ற வைராக்கியம் நிறைந்தவன் விக்கி… அதனால் எப்படியும் கண்டுபிடித்து விட வேண்டும் என்று டென்ஷனாக இருக்க.... ரிஷியோ எந்த விதக் கவலையோ பதட்டமோ இன்றி கூலாக வந்து கொண்டிருந்தான். போதைக்குறைக்கு காதில் வைத்த போனை வேறு வைக்காமல் பேசியபடி வந்து கொண்டிருந்தான். அது வேறு விக்கியின் முகத்தில் இன்னும் கடுமையை ஏற்றிக் கொண்டிருக்க...
ஒரு வழியாக நண்பர்கள் இருவருக்கும்… அங்கு இருந்த டீக்கடை மூலம் 'கண்மணி’ இல்லத் தேடல் படலம் முடிவுக்கு வந்தது. டீக்கரை முதலாளியிடம் வழியைக் கேட்டபடி பைக்கில் இருவரும் ஏறப் போக… வழி சொன்ன கடை முதலாளி வேகமாய்
"தம்பிங்களா நான் சொன்ன வழியில் பைக்ல எல்லாம் போக முடியாது...நடந்து தான் போக முடியும்... நடந்து போனா 3 நிமிஷம். பைக்ல போனால் மெயின் ரோடு வழியா சுற்றி போகணும்....” என்று சொல்ல ...
"டேய் விக்கி டூ வீலர்க்கே வழி கிடையாதாம்... நான் வேற கார்ல போகலாம்னு சொன்னேன்... நல்ல வேளை பைக்ல போகலாம்னு நீ சொன்ன... நீ ஒரு தீர்க்கதரிசிடா" என்று பேசியவன் டீக்கடை முதலாளியிடம்
"ஒகேண்ணா, நாங்க பார்த்துக்கிறோம்… மெயின் ரோடு போற வழிய சொல்லுங்க… பைக்லயே போய்க்கிறோம் அந்த வழியை சொல்லுங்க" என்ற போதே
விக்கியோ " இல்லடா நடந்தே போவோம்” என்று கூற
"ஓகே… நீ சொல்லிட்ட்டேல… போயிரலாம்" என்று தொளைக் குலுக்கியபடி நண்பனுடன் சேர்ந்து நடக்கலானான் ரிஷி…
அப்போது… கடையில் டீ வாங்க வந்த சிறுவனிடம் டீக்கடை முதலாளி ஏதோ சொல்ல அச்சிறுவன் வேகமாய் ரிஷி மற்றும் விக்கியை நோக்கி ஓடி வந்தான்…
"நில்லுங்க அண்ணா" என்றவன்
மணி அக்கா வீட்டுக்குப் போறீங்கனு டீக்கடை அண்ணாத்தே சொன்னாரு ...வாங்க நான் இட்டுக்குனு போறேன்" என்று தானாகவே முன்வர...
"எங்க மேல அவ்ளோ பாசமாடா தம்பி" என்று ரிஷி நீட்டி முழங்கி கேட்க ரிஷியை மேலும் கீழும் பார்த்தவன் நக்கலாக
"இன்னாது ஒங்க மேல பாசமா... எங்க மணி அக்கா வீட்டுக்கு போறீங்கனுதான் வந்தேன்… அப்பாலிக்கா மணி அக்கா என்னைத் திட்டிருச்சுனா… " என கோபமாய் இழுக்க …
ரிஷிக்கி அந்த கோபம் சிரிப்பைத்தான் வரவைத்தது… இருந்தும்
"தம்பி தம்பி… இந்த சின்ன வயசுல இவ்வளோ கோபம்லாம் படக் கூடாது.... வயசு இருக்குடா கண்ணா... நமக்குலாம் வயசு இருக்குடா… “ என்றபடி
"சரி சரி உங்க மணி அக்கா வீட்டுக்கு இந்த அண்ணங்களை இட்டுக்குனு போங்க"
என்று வழி காட்டிய சிறுவனின் கோபத்தினை தணிக்க… அவன் போக்கிலேயே இறங்கிப் போய்ப் பேச…. மணி அக்காவின் பாசமிகு அந்த தம்பியும் இப்போது கோபம் குறைந்து அவர்களை அழைத்துச் சென்றான்…
விக்கி இவர்களின் உரையாடல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் தள்ளி நடந்து வந்து கொண்டிருக்க
இப்போது ரிஷி… விக்கியியின் அருகில் வந்து அவன் காதருகில்…
‘ஹ்ம்ம்ம்ம் இந்த மணி அக்கா இங்க பெரிய ஆள் போல… ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் மணி அக்கா.. மணி அக்கான்னு சொல்றாங்களே… அவங்க பேரே மணியா இல்லை….. மணின்ற பையனோட அக்காவா” என்று தன் சந்தேகத்தை விம் போட்டு விளக்கிக் கேட்க…
ஏற்கனவே எரிச்சலில் இருந்த விக்கி…. ரிஷி கேட்ட சந்தேகத்தில் இன்னும் சுள்ளென்று விழுந்தான்…
‘ரொம்ப முக்கியம்டா…. என்னைக்காவது சப்ஜெக்ட்ல சந்தேகம்னு ஒரு வார்த்தை கேட்ருப்பியா….. மணி அக்கா , சொர்ணா அக்கானு… கண்மணி இல்லம்னு படிச்சேல்ல… அந்த கண்மணிதான் மணி அக்கா… புரிஞ்சுதா…” என திட்டிக் கொண்டே விளக்கம் கொடுக்க…
“இப்டி அன்பா சொன்னா… புரியலேன்னாலும் புரிஞ்சு கிழிச்சுரும்… ஆனால் மணி அக்காக்கு நீ கொடுத்த விளக்கம் புரியுது” என்ற படி
அதோடு வாயை மூடியவன் தான் ரிஷி…. செவிக்கு மட்டும் வேலை கொடுத்தான்….
அதாவது மொபைலில் பாடலைப் போட்டு ஹேண்ட்ஸ்ஃப்ரீயை காதில் வைத்தவன் தான்…. கண்மணி இல்லம் முன் வந்த பின்னர்தான்…. தன்னைச் சுற்றியுள்ள உலகின் ஒலிகளை தன் காதில் வாங்கினான்… அது மட்டும் இல்லாமல் தன் கண்களைச் சுழற்றி ’கண்மணி இல்லம்’ என்ற அந்த வீட்டினையும் நோட்டமிட்டான் ரிஷி…
’கண்மணி இல்லம்’ என்பது ஒரு தனி வீடு போல் இல்லாமல் ஒரு சுற்றுச் சுவருக்குள் 3 வீடுகள் இருக்க….. அதில் 2 கட்டிடங்கள், 2 அடுக்குகள் கொண்ட கான்கீரிட் கட்டிடம்…. இரண்டு கட்டிடங்களுக்கு நடுவில் ஒரு ஓட்டு வீடு…. அந்த வீட்டைச் சுற்றி இருபுறமும் மரங்களால் சூழ்ந்திருக்க… ரிஷியின் பார்வை சுவாரசியமாக வீட்டை சுற்றிக் கொண்டிருக்க… அவன் மனமோ… இந்த மாதிரி ஏரியால இப்படி ஒரு இடமா…. என்று நினைத்தது…
அப்போது…. இருவரையும் அழைத்து வந்த சிறுவன்… வெளியில் இருந்தபடியே…
“அதுதான் மணி அக்கா வீடு…” என்று அந்த ஓட்டு வீட்டைக் காட்டியபடி… வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல… நகரப் போக… அப்போது ரிஷி
அந்தச் சிறுவனிடம்…
”வீடு பூட்டியிருக்கு….உங்க மணி அக்கா எப்போ வருவாங்க…” என…. அந்த வீட்டைப் பார்த்தபடியே கேட்க…
அவனோ…. இடுப்பில் கை வைத்தபடி… எதிர் கேள்வி கேட்டான்…. ரிஷியை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி
‘நீ மணி அக்காவை பார்க்க வந்தியா… இல்ல…. அவங்க நைனாவை பார்க்க வந்தியா”
அந்த சிறுவன் விட்ட கேவலமான பார்வையில்…. இப்போது விக்கி
”இந்த அசிங்கம் தேவையாடா உனக்கு” என்பது போல் ரிஷியை ஒரு பார்வை பார்த்தபடி…
”அவங்க நைனா… ச்ச்ச்சேய்…” என்று தலையை சிலுப்பியவன்…
”அவங்க அப்பா எப்போ வருவாங்க” என்று புத்திசாலித்தனமாய்க் கேள்வி கேட்க…
அந்தச் சிறுவனோ…
‘அவர் எப்போ வருவார்னு யாருக்குத் தெரியும்… மணி அக்காவைப் பற்றி கேட்டீங்கன்னா எனக்குத் தெரியும்’ என்று அசால்ட்டாகச் சொல்ல…
‘ஹப்பா.. முடியலைடா சாமி” என்றிருந்தது விக்கி, ரிஷி இருவருக்கும்…
“இவன் என்னதாண்டா சொல்ல வருகிறான்… பொண்ணைக் கேட்டா… அப்பாவ கேளுன்றான்.. அப்பாவைப் பற்றி கேட்ட… அவர் பொண்ணப் பற்றி கேட்டால் மட்டும் விபரம் தெரியும்ன்றான்… தலையால தண்ணி குடிக்க வைக்கிறான்” என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க….
அதில்… அவர்களது முகத்தில் என்ன பார்த்தானோ அந்தச் சிறுவன்… தெரியவில்லை…. பின் அவனாகவே
’அக்கா ஸ்க்கூலுக்கு போயிருக்காங்க…. வர்ற டைம்தான்…. அவங்க கிட்ட அவங்க நைனா எப்போ வருவாங்கனு கேளுங்க’ என்றபடி தன் கடமை முடிந்தது என்பது போல் சிட்டாகப் பறந்து விட்டான்…
அவன் போவதையே பார்த்த ரிஷி..
‘டேய் விக்கி…. நாம தப்பா கேள்வி கேட்டோமா இல்லை அவன் தப்பா பதில் சொல்லிட்டு போறானா…. கண்ணைக் கட்டுதுடா விக்கி இப்பவே’’ என்று புலம்பியபடி ரிஷி ’கண்மணி இல்லத்திற்குள்’ தன் முதல் அடியை எடுத்து வைத்தான்
‘ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்…. நீ தப்பா கேட்ட கேள்விக்கு கரெக்டா ஆன்சர் சொல்லிட்டு போறான்…. நான் கரெக்டா கேட்ட கேள்விக்கு தப்பா கூட ஆன்சர் பண்ணலை…” என்று…. என்று விக்கி முடிக்கவில்லை….
‘ஏண்டா…. நீயுமாடா… எல்லாரும் ஃபார்ம்ல இருப்பீங்க போல…. ஆள விடுங்கடா சாமி’ …” வடிவேலு பாணியில் கெஞ்ச… ரிஷியின் குரல் தோரணையில் விக்கி சிரித்து விட…
இருவருமாய் நடராஜுக்காக காத்திருந்தனர் அவர் வீட்டுத் திண்ணையில்…
வீட்டின் முன்னால் மணலால் ஒரு பகுதி நிரப்பப் பட்டிருக்க…. அதன் முன் கரும்பலகை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது… சற்று தூரத்தில் தென்னை, பலாமரம், மாமரம், வேப்ப மரம்… வேப்ப மரக் கிளையில் ஊஞ்சல்…. என இருக்க…
இவர்களை கூட்டி வந்த சிறுவன் வேறு…. ”மணி அக்கா…ஸ்கூலுக்கு போயிருப்பதாக” சொல்லிச் சென்றிருக்க
மணி அக்கா என்பவர்…. ஒரு பள்ளிக்கூட ஆசிரியை போல என்று ரிஷி நினைத்தபடி…..
”கடமை தவறாத டீச்சர் போல…. நியூ இயர்ல கூட க்ளாஸ் வச்சு பசங்கள…. டார்ச்சர் பண்ணுகிற டீச்சர்….” என்று தனக்குள் கமெண்ட்ஸ் கொடுத்தபடி விக்கியைப் பார்க்க….
அவனோ இவன் கொடுத்த கமெண்டுக்கு ஒரு சிறு பிரதிபலிப்பு கூட இல்லாமல்… பிடித்து வைத்த பிள்ளையார் போல அமர்ந்திருந்தான்…
“ம்க்கும்… இவன் மலை ஏறிட்டான் போல… இனி இந்த கல்லுகிட்ட பேசினா நமக்குத்தான் எனர்ஜி வேஸ்ட்” என்று புரிந்தவனாக விக்கியிடம் பேச்சுக் கொடுக்காமல்… மொபைலில் பாட்டை போட்டவன்… விக்கிக்கும் கேட்காமல்… தனக்கு மட்டும் கேட்க்கும்படி… ஹேண்ட்ஸ்ஃப்ரீயில் மாற்றி போட…. ரிஷிக்கு குத்துப் பாட்டு என்றால் பிடிக்கும் என்பதால்… அந்த வகைப் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருந்தது அவன் அலைபேசியில்…
விக்கி அமைதியாக இருக்க… ரிஷியோ…. மொபைலில் ஒலித்த குரலோடு தன் குரலையும் சேர்த்து பாடிக் கொண்டிருக்க… அப்போது முன்னால் காம்பவுண்ட் சுவரின் கேட் திறக்கப்பட… இருவரும் யார் என்று பார்க்க…
பள்ளி சீருடையில் இருந்தாள் அந்த பெண்…
அதற்கு மேல் ரிஷி அவளைக் கண்டுகொள்ளாமல்… பாடலில் லயித்தபடி…
”சிங்குன மணி சிங்குன மணி சிரிச்சுப்புட்டா நெஞ்சில ஆணீ….” என்று கண்களை மூடியபடி தானும் பாட ஆரம்பிக்க…. வந்தவளோ…. இவர்களைப் பார்த்தபடியே வந்து தன் மிதி வண்டியை நிறுத்தினாள்…
ஆனால் விக்கி… அந்தப் பெண்ணின் பார்வையில் என்ன உணர்ந்தானோ… உடனே தன் நண்பனின் மொபலை எடுத்து அதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை நிறுத்த
’நீ வந்தா என் பந்தா காலி’ என்று தன் குரலில் பாடி முடித்த ரிஷி…. பாடலை நிறுத்திய நண்பனைப் பார்த்து… ‘ஏண்டா’ என்பது போல் பார்வை பார்க்க
‘அந்தப் பொண்ணு பார்த்த பார்வை அப்படி… மொறைக்கிற மாதிரி இருக்குடா’ என்று குனிந்து ரிஷிக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண்….. இவர்களை நோக்கி வராமல்…. அங்கிருந்த இன்னொரு வீட்டின் முன் போய் கதவைத் தட்டிக் கொண்டிருந்தாள்….
விக்கி சொன்ன வார்த்தைகளில் அடக்க முடியாமல் சிரித்தான் ரிஷியோ… மிதிவண்டியில் அவள் விட்டுப் போயிருந்த அவளின் பாடப்புத்தகம் அடங்கிய புத்தகப்பையைப் பார்த்தபடி…
‘அவ நம்மள மொறைக்கிறாளாடா… அந்தப் புள்ளையே பயந்து போய்,,…. ஸ்கூல் பேகை சைக்கிளிலேயே விட்டுட்டு …. அவங்க வீட்டுக் கதவை தட்டிட்டு இருக்கு….இதுல நீ வேற மொறைக்கிறா கிறைக்கிறானு காமெடி பண்ணிட்டு… போடா” எனும் போதே….
‘இன்னா மணிக் கண்ணு கதவை இந்த தட்டு தட்டுற….’ என்றபடியே ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கதவைத் திறக்க…
”என்னது இவதான் மணியா…. கண்மணியா… இந்த ஸ்கூல் படிக்கிற பிள்ளைக்குதான்… இவ்வளவு பில்டப்ப்ப்ப்பா… இதுக்கு பிஸ்கெட் டப்பாவே போதுமே” என்றபடி விக்கியை ரிஷி நோக்க… விக்கியும் அதே பார்வையைப் பார்த்து… அசடு வழிந்தான்…
”மணி அக்கானா…. ஒரு 35 வயசுல இல்லல்ல 20, 25 வயசுல ஒரு பொண்ணுனு நெனச்சா… அடச்சேய்…” என்று நொந்து போனவனாய் மணி என்கிற கண்மணியை இப்போது நிறுத்தி நிதானமாக ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான் ரிஷி..…
ஒல்லியாக…. சராசரிக்கும் சற்று உயரமாக…. மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறத்தில் இருந்தாள்… கோட் மாடல் டைப்பில் இருந்தது அவளின் பள்ளிச்சீருடை… இரட்டைச் சடை மடித்துப் போட்டிருந்தாள்… அவளின் முகம் பக்கவாட்டில் மட்டுமே தெரிய…. அதற்கு மேல் ரிஷியின் பார்வை ஓட்டம் அவளை விட்டு…. அங்கு இருந்த சூழலின் மேல் தாவியது…
‘உங்க வீட்டுக்காரர் இருக்காரா…. இருந்தா வரச் சொல்லுங்க…. அவர்கிட்ட பேசனும்….’ என்று வாய் திறந்தாள் கண்மணி….
முதன் முதலாக கண்மணியின் குரல் ரிஷியின் செவியை அடைந்தது…
சத்தமாக எல்லாம் குரல் உயர்த்தி எல்லாம் அவள் பேசவில்லை…. ஆனால் அவள் குரலிலேயே ஒரு அதிகாரம் இருந்தது…
சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த இவர்களுக்கே ஒரு அப்படித்தான் தோன்றியது…
கண்மணியின் அதிகாரக் குரலில் அந்தப் பெண்மணியும் குரலை உயர்த்த ஆரம்பித்தாள்…
”இன்னா… மணிக் கண்ணூ……. உன் வீட்டுகாரரா???…. மாமுலா அண்ணாத்தேனு மரியாதையா சொல்வ…. இன்னைக்கு இன்னாச்சு உனுக்கு….. வாடகை கொடுக்கலனா மரியாதை இல்லாம பேசுவியா நீ….” என்று பேச ஆரம்பிக்க…
கை மறித்து… நிறுத்திய கண்மணி…
‘இந்த அளவு மரியாதை போதும் உனக்கு….. எனக்கு உங்கிட்டலாம் பேச வேண்டிய தேவை இல்லை…. அவர்கிட்ட தான் பேசனும்… வீட்ல இருந்தார்னா பேசச் சொல்லுங்க… இல்ல வந்தவுடனே எங்க வீட்டுக்கு வரச் சொல்லுங்க…. இந்த வீட்டுக்கு வரும் போது அட்வான்ஸ் கொடுத்தவர் அவர்தான்… வீட்டைக் காலி பண்ணும் போது அவர்கிட்டதான் பேசனும்” என்றபடி…. தன் வீட்டை நோக்கி நடக்க….
‘யேய் இன்னது வீட்டை காலி பண்ணனுனா… என்னடி ரொம்ப தெனாவெட்டா பேசுற…. எங்களுக்கும் ஆள் இருக்கு…. ஒரு போன் போட்டேனா போதும் வண்டி வண்டியா இறங்குவாங்க எங்க ஏரியால இருந்து…….” எனும் போதே…. அந்தப் பெண்மணியை நோக்கித் திரும்பிய கண்மணி….
‘எந்த ஏரியா…. நீ பொறந்த ஏரியாவா…. இல்லை உன் புருசன் பொறந்த ஏரியாவா… இல்லை….” என்று நிறுத்தியவள்.. அந்த பெண்ணின் கண்களை நோக்கி…. அர்த்தப் பார்வை பார்த்தபடி…
’இல்லை… நீங்க கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் உங்க புது வீடு கட்டியிருக்கிற ஏரியாவா…. ” என்ற போதே அந்த பெண் வாயடைத்து நின்று விட்டாள் …
’தோ பாரு…. எங்க இருந்துனாலும் கூட்டிட்டு வா… எத்தனை பேர்னாலும் கூட்டிட்டு வா…. இந்தக் கண்மணி சமாளிப்பா… இந்த சவுண்ட்லாம் என்கிட்ட வேண்டாம்… என்ன புரிஞ்சுதா… நான் யார்னு இத்தனை வருசம் இந்த ஏரியால குந்திட்டு இருக்கிற உனக்கு தெரியாம இருக்குமா…” நீ லோக்கல்னா நான் தரை லோக்கல் என்றார் போல இருந்த கண்மணியின் சத்தமான வார்த்தைகளில்… சத்தியமாய்… வாயடைத்துப் போனது ரிஷிதான்…
”இவளைப் பார்த்தா நாம… நம்மளப் பார்த்து பயந்து ஓடினாள்னு சொன்னோம்…” என்று இருந்தது ரிஷிக்கு.
ரிஷியையும் கண்மணியையும் மாறி மாறி பார்த்த விக்கிக்கோ சற்று முன் ரிஷி சொன்ன “அந்தப் புள்ளையே பயந்துட்டு போறா” என்ற வார்த்தைகளை நினைத்து இப்போது சிரிப்பு வர…. சிரித்தபடியே
‘ஆளப் பார்த்தால் சொர்ணாக்கா மாதிரி இல்லடா ரிஷி… ஆனால்’ என விக்கி சொல்ல
‘வாய்சப் பார்த்தா சொர்ணாக்காக்கு மேல இந்த கண்மணி’ என்று ரிஷியின் வாய் தானாகவே தன் நண்பன் விக்கியின் வாக்கியத்தை முடித்து வைத்தது….
Kanmani supero super...
Lovely update
Heroine entry adiradi iruke
Ha ha Mahi appa sonnadu tan nadakum
thara local kanmani. school and college hero heroines. intersting
Nice
Mani intro..semma..
Super sema intro for Heroin
Ha ha nice intro
Nice
Super, very interesting sister
Heroine entry mass.
Kanmani Entry Super
heroine introduction - tharu... maru....
Varam varam oru update ah ):
Ayyo semma mani akka. Gethu heroine. Sema intro varuni.
கண்மணி கலக்குறா😍😍😍
ரிஷி அண்ட் கண்மணி சூப்பர்மா