I’ve posted 13th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
அத்தியாயம் 13:
ஏனோ தெரியவில்லை…. தலை விண் விண் என்று தெறித்தது ரிஷிக்கு… கோவிலை விட்டுக் கிளம்பியதில் இருந்தே ஒரு மாதிரியான மனநிலை… கடந்த இரண்டு வாரங்களாக அவன் பல வித மனக்குழப்பத்தில் தான் இருந்தான்… ஆனால் இன்றைய மனநிலை… அதிலும்… சில நிமிடங்களுக்கு முன் தோன்றிய இந்த உணர்வு… அவன் இது வரை அனுபவிக்காதது…. மனதுக்கு பிடிக்காத ஏதோ… மனதுக்கு ஒவ்வாத ஏதோ நடந்தது போல… நடப்பது போல… நடக்கப் போவது போல… காரணம் தெரியாத ஏதோ ஒன்று மனதுக்குள் தோன்றி அவனை அழுத்துவது போல இருக்க… வெளியில் காட்டிக் கொள்ளாமல் காரை ஓட்டி வந்தான்…
அவன் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும்… அவன் உணர்வுகளின் இறுக்கம் அவன் முகத்திலும் வந்திருந்தது… தன்னைக் கண்ணாடியில் பார்த்த ரிஷிக்கே அந்த முகம் அந்நியத்தனமாக இருக்க… தன்னை இயல்பு நிலைக்கு மாற்றவே பிரயத்தனப்பட… அதுவும் முடியாமல் போக விட்டு விட்டான்…
வீடும் வந்து விட்டது…
காரை நிறுத்திவிட்டு…. ஹாலுக்குள் பிரவேசித்த மகனின் முகத்தைக் கண்ட லட்சுமியின் முகம்… தாயாக தனையனின் முகமாற்றத்தை உணர்ந்து கொண்டு விசாரிக்க… ரிஷி பெரிதாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை…
“திடீர்னு தலைவலிம்மா… தூங்கினா சரி ஆகிடும்னு நினைக்கிறேன்… 2 மணிக்கு நாம கிளம்புறோம்… எழுப்பி விட்ருங்க” என்று சாதாரணமாக பேசிக் கொண்டே அறையை நோக்கிப் போய் விட்டான்…
தாயாக லட்சுமிக்குத்தான் மகனை சாதாரணமாக விட முடியவில்லை… உடனடி நிவாரணியாக மாத்திரையை எடுத்துக் கொடுக்க… அதையும் மறுத்து விட்டான் ரிஷி…. காரணம்… அவன்தான் காரை ஓட்டிச் செல்ல வேண்டும் என்பதற்காக... அதற்கு மேல் லட்சுமியும் பெரிதாக அவனை வற்புறுத்த வில்லை…. விட்டு விட்டார்
அமைதியாக அறைக்குள் வந்த ரிஷி… தன்னை அலைகழிக்கின்ற அருவமான உணர்வுகளின் தேடலுக்குள் போகப் பிடிக்காமல் கண்களை இறுக மூடிக் கொண்டவன்… உறக்கமாவது அந்த எண்ணங்களில் இருந்து தன்னை விடுவித்து விடாதா என உறக்கத்தை நாட… அதுவோ வருவேனா என்று அவனோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது…
அவனுக்கும் நித்திரைக்குமான இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அன்று மட்டுமல்ல… இனி வரும் நாட்களிலும்… தொடர்கதை ஆகப் போவது…. அவனுக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லாமல் போனதுதான் விதி
---
”ஆட்டோ வந்திரும்டா… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு… இப்போ எப்டி இருக்கு” மகளின் களைப்புற்ற முகம் பார்த்தபடியே அடுத்தடுத்த கண்மணியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் நட்ராஜ்…
மகளோ வேறொரு நினைவில்!!!
தாத்தா வீட்டுக்கு போகலாமா… வேண்டாமா என்று அவளுக்குள் ஒற்றையா இரட்டையா என்று ஆடிக் கொண்டிருந்தாள் கண்மணி…
சற்று முன் வேறு நட்ராஜ் வேறு கண்டிப்புடன் சொல்லிவிட்டார்…
“இதற்கு மேல் எங்கும் போக வேண்டாம் என்று…. நேராக வீடு போய்ச் சேருவோம்” என்று…
அர்ஜூனை மட்டும் அன்று சந்திக்காமல் இருந்திருந்தால்… தந்தையிடம் தடுமாற்றம் இல்லாமல்… தாத்தா வீட்டுக்குத்தான் போவேன் என்று கண்மணி அடித்துப் பேசியிருப்பாள்… ஆனால் இன்று அர்ஜூனும் அங்கு இருக்கின்றானே…. போகலாமா வேண்டாமா என்று தனக்குள்ளேயே தடுமாறிக் கொண்டிருந்ததால்… அவள் தந்தை வீட்டுக்குத்தான் போக வேண்டும் என்று சொன்ன போது கண்மணி மௌனமாகவே இருந்து விட… அவள் மௌனமே சம்மதம் என்று நினைத்துக் கொண்டார் நட்ராஜ்…
ஆட்டோ இன்னும் வராமல் இருக்க… நடராஜ்… ஏதோ ஞாபகம் வந்தவராக
“விக்கி, ரொம்ப நல்ல பையன்மா... திறமையான பையன்... படிக்கிறதுக்காக வெளிநாடு போயிருச்சாம் அந்த தம்பி... ரிஷி தம்பி சொன்னுச்சு… சில பசங்க இந்த வயசுல எது முக்கியமோ அதை நோக்கி போகத்தான் செய்றாங்க”
ரிஷியைப் பற்றி மட்டமாகச் சொல்லவில்லை... ஆனால் விக்கியை உயர்த்திச் சிலாகித்துச் சொன்னார் நட்ராஜ்.... அது அவர் குரலிலேயே அப்பட்டமாகத் தெரிய
அதுவரை அர்ஜூனின் எண்ண ஓட்டங்களில் இருந்த கண்மணி… பட்டென்று
“ரிஷி கூட ரொம்ப நல்ல பையன் தான்.... உங்களுக்கு ரிஷி அவங்க அத்தைப் பொண்ணை இண்ட்ரட்யூஸ் பண்ணி பேசின விதம் பிடிக்கலைனு தெரியுது…. இந்த வயதில் காதலிக்கிறது தப்பா இருந்தாலும்... இந்த வயதிலேயே.... அந்தப் பொண்ணைக் கன்வின்ஸ் பண்ணி... 2 குடும்பத்தையும் கன்வின்ஸ் பண்ண வச்சுருக்காங்கதானே அதுவும் ஒரு திறமை தானே... அது மட்டும் இல்லாமல் இது என் காதலி, வருங்கால மனைவினு சொல்ல தனி துணிச்சல் வேண்டும்... “ என்று ரிஷியைப் பற்றி தன் அபிப்ராயத்தைச் சொன்னவளுக்குத்... தெரியவில்லை… அர்ஜூனுக்கும் அதே துணிச்சல் இருக்கின்றது என்று…
மகள் தன்னைத் தவறாக நினைத்து விட்டாளோ என்று வேகமாக நட்ராஜ்...
“இல்லடாம்மா நான் ரிஷியைப் பற்றி தப்பா சொல்ல வரலை” எனும் போதே கண்மணி....
“நீங்க விக்கிய பற்றி சொன்னதால நான் ரிஷியைப் பற்றி பேசலை... ரிஷியோட திறமை உங்ககளுக்கு இருந்திருந்தால்… அம்மாவோட அப்பா உங்களை எதிரியா பார்க்காமல் இருந்திருக்கலாம்.... அம்மா உயிரோட இருந்திருக்கலாம்... என்னை நீங்க வெறுக்கா....” என்று நிறுத்தியவள்... அதற்கு அந்தப் பேச்சை தொடராமல்...
“இன்னும் இப்படி எத்தனையோ நடக்காமல் இருந்திருக்கலாம் “ என்று நிறுத்திக் கொண்டாள் கண்மணி...
அவளின் பேச்சைத் தாங்காமல்.... நடராஜ்... தன் மகளைக் கண் கலங்கப் பார்த்தபடி...
“நீ எப்பதாண்டா இந்த அப்பாவைப் புரிஞ்ச்சுக்க போற.... எனக்கு நீ மட்டும் தான் உலகம்... உனக்காகத்தான் உன் அப்பனோட உயிர் வாழுதுனு உனக்கு தெரியும்... ஆனால் “ என்றவரிடம்
“உங்க மாமனார்க்கு தெரியும்…. என்னோட பாசம் என்னனு” தந்தையைப் பார்த்தபடியே நக்கலாகத் தொடர்ந்தாள்…
“எனக்கு உங்க மாமனார் மாப்பிள்ளை பார்த்து வச்சுருக்கார் “
சட்டென்று கண்மணியைப் பார்த்தார்…. நாரயண குருக்கள் தன் மகளை தன்னிடமிருந்து பிரித்து விடுவாரோ என்ற பரிதவிப்பு அவர் பார்வையில் அப்பட்டமாக தெரிந்தது…
“நானும் சரினு சொல்லிட்டேன்…” என்று நிறுத்தியவள்…. தன் தந்தையின் முகம் கோபத்தில் கொந்தளிப்பத்தை பார்த்து…
“ஆனால் ஒரு கண்டிஷனோட…. நடராஜன அவங்க மாப்பிள்ளைனு ஒத்துகிட்டா…. நானும் அவங்க பார்க்கிற மாப்பிள்ளைய கண்ணை மூடிட்டு ஒத்துக்கிறேன்னு சொன்னேன்……..” எங்கோ பார்த்தபடி சொல்ல….
நடராஜ்…. அவளிடம்…
“அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.... நமக்கு அவங்க சங்காத்தமே வேண்டாம்.... அவர் பொண்ணே இப்போ இல்லையாம்.... அவரு என்ன என்னை மருமகன்றது... நானே சொல்றேனே.... அவருக்கு மருமகனா இருக்க எனக்கு எப்போதும் விருப்பமில்லை” ஆத்திரத்தோடு வார்த்தைகளை விட்டவர்.... மகள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தன்னையே சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சிக்க....
கண்மணியோ…
“ஓ அதுனாலதான்... அவர் வேண்டாம்.. ஆனால் அவர் பொண்ணு மட்டும் போதும்னு அவர் பொண்ணை அவர்கிட்ட பிரிச்சு கூட்டிட்டு வந்துட்டீங்களா”
மகளின் வார்த்தைகளில் சாட்டையடி பட்டது போல் கண்மணியை நிமிர்ந்து பார்க்க..
“ஆசை ஆசையா பார்த்து பார்த்து வளர்த்த பொண்ணு... ஒரே பொண்ணு… உங்கள மாதிரி ஒரு பையன மேரேஜ் பண்ணிப்பேனு வந்து சொன்னா.... எந்த அப்பா அம்மாதான் ஏத்துப்பாங்க.... பெத்த பொண்ணு.... சந்தோசமா வாழப் போறதில்லேனு தெரிஞ்சா... எந்த அப்பா அம்மாதான் ஒத்துப்பாங்க.... நான் அப்படி வந்து நின்றால்…. நீங்க அந்த மாதிரி ஒரு இடத்தில் என்னை கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா” என்று தன் முன் வாதாடிய தன் மகளை எதிர்த்து வாதாட திராணியின்றி நின்றார்…
ஆனால் நடராஜ் மனதிற்குள்ளாகவோ….
”அந்தாளு என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாரா ஸ்கூல் படிக்கிற பொண்ணுகிட்ட என்ன கண்டவன நிறுத்தி பிடிச்சிருக்கானு கேட்டு… என் பொண்ணு மனச கெடுக்க பார்க்கிறாரா… ” என்று நாரயாண குருக்களைத் திட்டிக் கொண்டவர்… அதே நேரத்தில்
”ஆனால் அவ யார் பொண்ணு… அதுக்கெல்லாம் அசருவாளா....’ என்றபடி கண்மணியைப் பெருமையாக பார்க்க... அவரின் எண்ண ஓட்டமும் கண்மணிக்கும் புரிந்தது
ஆனால்… முதன் முதலாக… இதுவரை எல்லாம் வராத எண்ணம் கண்மணிக்குள் வர ஆரம்பித்திருந்தது…
”அர்ஜூனுக்கு தன் தந்தையைப் பிடிக்குமா…” என்று யோசிக்க ஆரம்பித்த கண்மணியின் மனது …
“ஒரு வேளை அவனுக்கு பிடிக்காமல் போய் விட்டால்….” என்ற கவலையில் தவிக்க ஆரம்பித்து இருந்தது இப்போது..
அடுத்த சில நிமிடங்களில் நடராஜ் அழைத்திருந்த ஆட்டோவும் வந்து விட… மகளை ஏறச் சொல்லி தானும் ஏறியவர் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க… சில நிமிடங்களில் கண்மணி சுதாரித்தாள்…
’தாத்தா பாட்டிக்கு பிரசாதம் பொங்கல் கொடுக்காமல் போகின்றோமே??…. அந்த அர்ஜூன் அங்கு இருந்தால் எனக்கென்ன… அவனுக்காக பயந்து… அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தாத்தா பாட்டியைப் பார்க்காமல் போக வேண்டுமா?? ’ தனக்குள் கேள்வி கேட்டவளாக… சில நொடிகள் தனக்குள்ளாகவே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவள்…. சட்டென்று முன்னால் இருந்த ஓட்டுனரிடம்
”அண்ணா… நெக்ஸ்ட் யூ டேர்ன் எடுங்கண்ணா… நான் சொல்ற அட்ரெஸ்ல என்னை இறக்கிவிட்டுட்டு… அதுக்கப்புறம் அப்பாவை வீட்ல இறக்கி விடுங்க” என்று சொன்னபடியே தந்தையைப் பார்க்க….
அவர் ஏதோ சொல்லப் போக…
“நான் போகனும்…” அழுத்தமாகச் சொன்னவள்… அதற்கு மேல் தந்தையைப் பார்க்காமல் வெளியே பார்வையை ஓட விட… நட்ராஜ்… மகள் மேல் கோபத்தைக் காட்ட முடியாமல் அவரும் வெளியே வெட்ட வெளியை வெறிக்க ஆரம்பிக்க…
இருவருக்குமான மௌனம்… ”பவித்ர விகாஸ்” என்று பெயர் தாங்கப்பட்டிருந்த அந்த பிரமாண்ட இல்லத்தின் முன் ஆட்டோ நின்ற போது கூட உடைப்படவில்லை…
மகள் இறங்கிய உடன்… நட்ராஜ் அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை… கோபத்தில் விருட்டென்று ஆட்டோவைக் கிளம்பச் சொல்லி விட்டார்…
கண்மணி தன் தாயின் பெயர் தாங்கியிருந்த அந்த பெயர்ப்பலகையை வழக்கம் போல நின்று சில நொடிகள் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாள்…
இவளைப் பார்த்த உடன் அங்கு சீருடையுடன் அமர்ந்திருந்த காவலாளி… எழுந்து மரியாதை கொடுக்க… அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டபடி உள்ளே செல்லப் போனவளிடம்… அவள் கையில் இருந்த பொருட்களைப் வேகமாக வாங்க அந்தக் காவலாளி முயல… அவண் உதவியை மறுத்து… கண்மணி நடக்க ஆரம்பித்தாள்… 2 நிமிட பயணமாவது இருக்கும் அந்த வீட்டின் தலை வாசலை அடைய…
அந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவளுக்கு பல்வேறு எண்ணங்கள்… எண்ணங்கள்தான் பல்வேறு… ஆனால் அந்த பல்வேறு எண்ணங்கள் எல்லாமே அர்ஜூன் ஒருவனிடத்தில் மட்டுமே குவிந்திருந்தது…
”நான் வந்திருக்கேன்னு தெரிந்தால் பார்க்க வெளியில் வருவாங்களா… என்னோடு பேசுவாங்களா… என்னிடம் தாத்தா சொல்லி வைத்திருப்பது போல அர்ஜூனிடம் சொல்லி வச்சுருப்பாங்களோ… அதுனாலதான் அவங்க என்னைப் அப்படி பார்த்தாங்களா…” கண்மணி கண்மணியாகவே இல்லை… அர்ஜூனைப் பார்த்த நொடியில் இருந்து…
அர்ஜூனை மனதுக்குள் நிரப்பி அலைபாய்ந்த எண்ணங்களுக்கு ஏற்ப… கண்மணியின் கண்களின் மணியும் அந்த அர்ஜூனின் உருவத்தை நிரப்புவதற்கு அலைபாய்ந்து கொண்டிருக்க… திடீரென ஒரு குரல்…
“டேய் ஒரு மணி நேரமா உனக்காக காத்துட்டு இருந்தேன்… இப்போதான் லைன்ல வருவீங்களோ” அந்த ஆளுமையான குரலை… கண்மணியின் செவி உணர்ந்த போதே… அவளின் கண்களும் அவன் பிரசன்னத்தை உணர்ந்திருக்க…
ஆம் அர்ஜூன் அவள் முன்னே… யாரை நினைத்தபடி வந்தாளோ அவனே அந்த அர்ஜூனே அவள் முன்…
புன்னகைத்தபடி அவள் வழியை மறித்தபடி அவள் முன் நின்றவன்… பொய்யாகப் பேசிய போன் கால் என்பதால் அலைபேசியை காதில் இருந்து எடுத்தபடியே… புன்னகைத்தவனைப் பார்த்து
“வெல்கம் பிரின்சஸ்” என்றான் முதல் வார்த்தையாக கண்மணியை நோக்கி…
கண்மணி திகைத்துப் பார்க்க…
அவன் கைகளிலோ ஒரு பெரிய சாக்லேட் பார் இருக்க… அதை அவள் கைகளில் திணித்தவனாக
“என்ன பிரின்சஸ்…” என்றவன் அவளைப் பார்த்தபடியே…. பின்னால் காலடிகளை எடுத்து வைத்து பின்னோக்கி நடக்க ஆரம்பிக்க…
தன் கையில் இருந்த சாக்லேட்டை சில நொடிகள் பார்த்தவள்… அது தந்த வேண்டாத நினைவுகளை… நொடியில் கிள்ளி எறிந்தவள்…
இப்போது அர்ஜூனைப் பார்த்து முறைத்தாள்…
“இது என்ன விளையாட்டு… முன்னால திரும்பி நடங்க” என்று மட்டும் சொல்லி அவள் வேகமாக நடக்க ஆரம்பிக்க…
இவனும் அவள் வேகத்திற்கு பின்னால் அடி எடுத்து நடக்க ஆரம்பிக்க… இது வேலைக்காகாது என்று கண்மணி வேகமாக அவனை விட வேகமாக நடந்து அவன் முன்னாடி சென்று…
“இப்போ என் பின்னால நிற்கறீங்க… ஒழுங்க முன்னால பார்த்து வாங்க…“ என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்க… அவனோ இப்போது அவள் முன் முன்னால் இருந்த அதே நிலையிலேயே… கண்மணிக்கு அவன் விளையாட்டுத்தனம் புரிய… வந்த புன்னகையை தனக்குள் மறைத்தப்படி
”அர்ஜூன்… இது என்ன விளையாட்டு… கொஞ்சம் வழியை விட்றேளா” அவளையுமறியாமல் அவன் பெயர் வாயிலிருந்து வெளியில் வர…
“வாவ்… பிரின்சஸ் வாயில இருந்து என் பேர்… ’அர்ஜூன்’… இந்த பேருக்கே ஜென்ம ஜாபல்யம் கெடச்சுருச்சு போ….” என்றபடியே… அதற்கு மேல் அவளிடம் விளையாடாமல் அவள் கையில் இருந்த பொருட்களை வாங்குவதற்கு கை நீட்ட… அவளோ என்று அவனிடமும் மறுக்க..
அவளை முறைத்தபடியே தானாகவே அவளிடமிருந்து தன் கைகளுக்கு மாற்றிக் கொண்டவனாக…
“வா… தாத்தாவும் பாட்டியும் இந்த அருமைப் பேத்திக்காகத்தான் காத்திருக்காங்க… எங்க மாத்திரை போட்டால்… தூங்கிருவோம்னு பேத்திய பார்க்க முடியாம போயிருமோன்னு வெயிட்டிங்… “ என்று அவளோடு சேர்ந்து நடக்க ஆரம்பிக்க…
கண்மணி மனதுக்குள் குற்ற உணர்வு வந்திருந்தது… சற்று நேரத்திற்கு முன் இங்கு வர வேண்டுமா வேண்டாமா என்று நொண்டியடித்த மனதினை நினைத்து…
“அவங்க நம்புனாங்களோ… இல்லையோ… நீ வருவேன்னு பிரின்சஸ் நான் நம்பினேன்….” சொன்னவனை முறைக்க முயன்று தோற்றாள்தான் கண்மணி…
அவன் அவளோடு பேசும் ஒவ்வொரு வாக்கியத்திலும் ’பிரின்சஸ்’ என்ற வார்த்தை அவனுக்கு இயல்பாக வந்திருக்க… இவளுக்குத்தான் அந்த வார்த்தைகள் அந்நியத்தனமாக இருந்தது….
ஆனால் அதே நேரத்தில் அவனிடம் அந்த மாதிரி என்னைச் சொல்லி அழைக்காதே என்று சொல்லவும் ஏன் தோன்றவில்லை என்பதுதான் கண்மணிக்குத் தோன்றிய வியப்பு…. சொல்லப்போனால் முதன் முதலாக அவன் கூப்பிட்டபோது உணர்ந்த அந்நிய உணர்வு… அடுத்தடுத்த அவன் விளிப்புகளில்… அவள் மனம் அந்த அழைப்புக்கு பழகிக் கொள்ள துடித்தது போல ஓர் உணர்வு… அவளையுமீறி தோன்றிய உணர்வுகளின் தாக்கம் புரியாமல் அர்ஜூனோடு நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்மணி….
----
கிட்டத்தட்ட அரை மணி நேரமாகியும் ரிஷிக்கு உறக்கமே வரவில்லை… பதிலாக இன்னும் தலைவலி அதன் வீரியத்தை அதிக அளவிலேயே காட்ட ஆரம்பித்திருக்க… எழுந்து அமர்ந்து தன் கைகளால் நெற்றியை அழுத்திப் பிடித்துப் பார்த்தான்… வலி நிவாரணி தேய்த்துப் பார்த்தான்… ம்கூம்… வலி கூடியதே தவிர குறையவே இல்லை…
”என்ன செய்யலாம்… மாத்திரை போடாமல் என்ன செய்தால் தலைவலி குறையும்” வழிகளைத் தேடியது மனம்…. இந்த திடீர் தலைவலியில் இருந்து விடுதலை பெற…
கேசத்தை அழுந்த கோதியவன்…
“ஷ்ஷ்ஷ்” என்று அவனையுமறியாமல் குரல் எழுப்பியவன்… யோசித்தபடி “ஏன் கை வலிக்கிறது” என்று கைகளைத் திருப்பிப் பார்க்க…
சிறு மெல்லிய கீறல்… இரண்டு செண்டிமீட்டருக்கு… இலேசாக இரத்தம் அதில் உறைந்து… நின்றிருக்க…. சில இடங்களில் இப்போது அவன் தலை கோதிய விளைவால் அவனது தலைமுடி அந்தக் கீறலில் பட்டும் இலேசாக இரத்தம் கசிய ஆரம்பித்திருக்க…
புருவம் சுருக்கினான் ரிஷி… இது என்ன காயம் என்று… வலது கையையே பார்த்திருக்க… சில நிமிடங்கள் கழித்தே ஞாபகத்துக்கு வந்தது…
சில மணி நேரத்துக்கு முன் கண்மணி மயங்கி விழுந்த காட்சி…. அவள் கையில் அணிந்திருந்த வளையல்கள் உடைந்து விழுந்த போது… உடைந்த வளையல் தன்னைக் கீறி இருக்கிறதென்று…
அதே நேரம் தனக்கே சிறு கீறல் என்றால்… அவள் கையிலும் கிழித்திருக்குமே என்று தோன்ற… மெதுவாக கையில் கசிந்த இரத்தத்தை துடைக்க ஆரம்பித்தவன்… முடித்த போது… கண்மணியின் நினைவுகளும்…. தூரமாகப் போயிருந்தன….
----
அர்ஜூன் வெளியே போடப்பட்டருந்த ஒரு பெரிய இருக்கையில் அமர்ந்தபடி தன் மடிக்கணியை வைத்தபடி… ஏதோ வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்…
கவனம் முழுவதும் கண்மணி-வைதேகி-நாரயண குருக்களின் மீது தான் இருந்தது….
கண்மணியைப் பார்த்ததும் இத்தனை நாள் அவள் மீது வைத்திருந்த காதல் அனைத்தையும் கொட்டத்தான் மனம் துடித்தது…. ஆனால் அவள் வயது காரணமாக அவனால் அவன் காதலை காண்பிக்க முடியவில்லை… ஆனால் உணர்ச்சி வயப்படாமல்…. ஓரளவு அவனைக் கட்டுக்குள் வைத்திருக்க இவனின் வயதும் ஒரு காரணமாக இருந்தது….
”எங்கே போகப் போகிறாள்…” என்று நினைத்தவன் ஒரு பெரு மூச்சை விட்டபடி… அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்
தாத்தாவும் பாட்டியும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க… கண்மணி அவர்களுக்குப் பதில் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தாள்…
“இவ்ளோ லேட்டா ஏண்டா வரணும்… கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கக் கூடாதா…“ கண்மணியின் பாட்டி வைதேகி கேட்க… அதற்கான பதில் வந்தது…
“அர்ஜூன் ரெண்டு நாளைக்கு இங்கதான் இருப்பான்” நாராயண குருக்கள் சொல்ல…
“ஓ…” என்று கண்மணி சொன்ன போது அர்ஜூனும் அவளை விழி உயர்த்திப் பார்க்க.. அவளும் பார்க்க… நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்ட விழிகள்… சில நொடிகள் ஸ்தம்பித்து பின் மீண்டன என்றே சொல்ல வேண்டும்…
கண்மணிக்குள் மீண்டும் அதே உணர்வு… அவன் காரில் இருந்து பார்த்த போது தோன்றிய அதே மின்னல் வெட்டிய உணர்வு… இருந்தும் தன்னைச் சமாளித்துக் கொண்டவளாக
“பாட்டி… இந்த பிரசாதம் கொடுக்கத்தான் வந்தேன்… லேட்டாகிருச்சு… ஸ்கூல் லீவ்தானே நாளைக்கு வருகிறேன்… ” என்று இருவருக்கும் பிரசாதம் கொடுத்தவள்… தானே வைத்த பொங்கல் படையலையும் அவர்களுக்கு கொடுத்து முடித்தவள்… எழுந்தாள் அடுத்து அர்ஜூனுக்கும் கொடுக்க…
அதே நேரம்… வைதேகியும்… அவர் வீட்டு பூஜையில் செய்த பிரசாதங்களை எடுக்க… உள்ளே போக நாராயண குருக்களும் மனைவியோடு உள்ளே போய் விட…
அர்ஜூன் ஒன்றுக்கு இரண்டு முறை உள்ளே எட்டிப் பார்த்து விட்டு…
”வேலை பார்த்துட்டு இருக்கேன் பிரின்சஸ்” என்று நெற்றியை அவள் முன் காட்ட.. நிமிர்ந்து பார்க்க… அவன் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த பாவனையில் இருக்க… வேறு வழி இன்றி… வீபூதி குங்குமத்தை அவன் நெற்றியில் இட்டு விட…
“தேங்க்ஸ் பிரின்ஸஸ்” என்று முகம் மலர்ந்து சொன்னவனிடம்…
“பொங்கல்” என்று அப்பாவியாகக் கேட்டாள்… கண்மணி….
“ஸ்பூன் இருக்குதானே…. ரெண்டு வாய் ஊட்டி விட்டுட்டு போயிரு… “ கேட்டது அதிகப்படிதான் என்று தோன்றினாலும்… நெற்றியில் திருனீறு இட்டது போல இதையும் செய்வாள் என்று மனம் ஏனோ நிச்சயமாக நம்ப… அந்த அதிகப்பட்ச நம்பிக்கையில்… அவள் முன் வாயை திறந்து ஆவென்று காட்ட…
இப்போது முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் கண்மணி அவன் முன்னே…
‘கொஞ்சம் லிமிட் தாண்டிட்டோமோ… நம்ம ஆளுகிட்ட’ மனதுக்குள் சொல்லிக் கொண்டவனாக இலேசாக நாக்கைக் கடித்துக் கொண்டவன்… அதற்கு மேல் வம்பளக்காமல் அவள் கையில் வைத்திருந்த டப்பாவில் இருந்த பொங்கலை ஸ்பூனின் உதவியால் எடுத்துக் கொண்டவன்… பள்ளி செல்லும் சிறுவன் போல பவ்யமான தோரணையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க…
அவன் செய்கைக்கும் அவன் தோற்றத்திற்கும் இருந்த முரணில் கண்மணிக்கே இப்போது புன்னகை வந்திருந்தது…
இப்போது கண்மணியின் தாத்தா பாட்டி…. வெளியே வந்திருந்தனர்…
வைதேகியின் கையில் ஒரு பெரிய பார்சல் அடங்கிய பை… இன்னொரு கையில் பிரசாதம் அடங்கிய பை… அது போக சிறு வைரக்கற்கள் பதித்த ப்ரெஸ்லெட்டும் கையுல் இருக்க…
கண்மணி பதறியபடி…
“பாட்டி… ப்ளீஸ் பாட்டி… இதெல்லாம் வேண்டாமே…. மூக்குத்தி கூட அம்மா போட்டுண்டுருந்தாள்ன்னு நீங்க சொன்னதாலதான் குத்திண்டேன்… இந்த மாதிரிலாம் வேண்டாம்னு சொல்லிருக்கேனே… கேட்க மாட்டேளா” என்று முடிக்கும் போது குரலில் கடுமை வந்திருக்க…
அர்ஜூன்… கைகளைக் கட்டியபடியே…. மூவரையும் அதிலும் கண்மணி அவர்கள் பாஷையில் இயல்பாகப் பேசுவதையும் சுவாரசியாமாகப் பார்த்துக் கொண்டிருக்க..
”ப்ச்ச்… அர்ஜூன் வாங்கிண்டு வந்தான்… எதுனாலும் அவன்ட்ட கேட்டுக்கோ” என்று வைதேகி சொல்லிக் கொண்டிருக்க…
இந்த முறை அர்ஜுனை கண்மணி பார்க்கவில்லை… வேண்டுமென்றே தவிர்த்திருந்தாள்… எதற்கு பார்ப்பானே… மின்னல் வெட்டுவானேன் என்று சுதாரித்திருந்தாள் கண்மணி…
பின் வைதேகியிடம்
“இதை வீட்டுக்கு போட்டுண்டு போனா… அப்பாக்கு பிடிக்காது பாட்டி…. கம்பெல் பண்ணாதேள்… உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்…” என்ற போதே அர்ஜுனின் கண்களில் உருத்திரம் வந்திருக்க
கண்மணியின் முன் நின்றிருந்தான்… ருத்திரனாக
கண்மணியிடம் காதல் சொல்லுவதில் தன்னைக் கட்டுக்குள் வைத்திருந்தவன்… கண்மணியின் தந்தை நட்ராஜ் விசயத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தான்….
“நட்ராஜுக்கு பிடிக்காதுன்னா… அப்போ இதைக் கண்டிப்பா எடுத்துட்டுப் போகனும்… இல்லையில்லை போட்டுட்டுப் போகனும்…” என்று அவளது இடதுகையைப் பிடிக்க… வலியில் முகம் சுருக்கினாள் கண்மணி…
அவளின் முகச்சுருக்கத்தில்… பதறியவனாக அர்ஜூன் அவள் கைகளைப் பார்க்க…
”ஆங்காங்கே நான்கைந்து சிறு கீறல்கள்”
மூன்று பேரும் என்னவென்று ஒரே நேரத்தில் பதறியபடிக் கேட்க… கோவிலில் மயங்கி விழுந்த விசயத்தையும்… அப்போது வளையல்கள் உடைந்து கிழித்து விட்டதையும் கூறினாள் கண்மணி…
மயங்கியது… விழாமல் இருக்க.. ரிஷி கைகளை அவளையுமறியாமல் பிடிக்க முயற்சித்தது மட்டுமே அவளுக்கு ஞாபகம் இருக்க… அதன் பிறகு நடந்தவை எல்லாம் அவளுக்கு தெரியவில்லை… மயக்கம் தெளிந்து நன்றாக விழிப்பு வந்து பார்த்த போது… ரிஷி-மகிளாவெல்லாம் இல்லை… தந்தைதான் சொன்னார்… மயங்கி விழுந்த விஷயத்தையே…
வைதேகி பதறியவராக… பிரேஸ்லெட்டை போடும் முயற்சியை எல்லாம் விட்டு விட்டு… பேத்தியின் கைகளுக்கு மருந்து போட ஆரம்பித்திருந்தார்…
அதன் பின்… கண்மணியை அவள் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக… அர்ஜூன்… காரை எடுக்கப் போக… இரவு 11 மணி ஆகி விட கண்மணியும் பெரிதாக மறுக்கவில்லை…
தன் தாத்தா பாட்டியிடம் விடைபெற்றபடி… அர்ஜூன் தனக்காக காத்திருந்த இடத்தின் அருகே வந்து…. காரைப் பார்த்தவள் திகைத்து… வேகமாக அர்ஜூன் அமர்ந்திருந்த பக்கம் வந்து அவனை காரில் இருந்து இறங்குமாறு சொல்ல… அர்ஜூனும் புரியாமல் இறங்கினான்…
அடுத்த சில நிமிடங்களில் அவள் சொன்னதைக் கேட்டு தான் இருந்த காரை மாற்றி சாதரணக் காரை கேரேஜிலிருந்து வெளியே எடுத்து வர… இப்போது கண்மணி அவனருகில் அமர… புன்னகையோடு காரை எடுத்தான் அர்ஜூன்
இருவரும் ஜோடியாகப் போவதையேப் பார்த்தபடி இருந்த நாரயணகுருக்களின் கண்களில் அத்தனை நிம்மதி….
“நம்ம பேத்தி… இன்னைக்கு எப்படி இருக்கா பாரு… கோவில் வாசல்ல கண்மணியைப் பார்த்தபோது ஒரு நிமிசம் எனக்கே ஷாக்… அப்படியே பவித்ராவ பார்த்த்து மாதிரி இருந்தது…. கோவில் சிலை மாதிரி இருக்கா…. ஆனால் அந்த படுபாவி… நம்ம பொண்ணை பிரிச்ச மாதிரியே கண்மணியையும் நம்மகிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறான்…” என்று புலம்பியவரை வைதேகி... சமாதானப்படுத்த வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்க.... இவரோ தொடர்ந்தார்...
“என் பேத்திய அர்ஜூன் மூலமா நம்மகிட்ட கொண்டு வந்து சேர்த்திடனும் வைதேகி....“ என்று ஆக்ரோசமும் சஞ்சலமுமாக பேச....
“ப்ச்ச்... என்ன இது... கண்மணிக்கு 17 வயது கூட முடியலை... இது என்ன இப்படி ஆரம்பிச்சுட்டேள்... அது மட்டுமல்ல அர்ஜூனுக்கு இப்போதே 25 வயது… வயது வித்தியாசம் வேற… தேவையில்லாமல் சின்னப் பசங்க மனசில ஆசைய வளர்க்காதேள்..... நடக்காமல் போயிருச்சுனா அவாளுக்கும் கஷ்டம் நமக்கும் கஷ்டம்....” என்று அந்த வயதுக்கே உரிய பக்குவத்தில் பேச...
“என் பேத்தி அவ... இந்த வீட்டு பொண்ணு... நமக்கு மட்டுமே அவ உரிமை…” உணர்ச்சி வசப்பட ஆரம்பித்திருந்தார் நாரயணகுருக்கள்…. அதில் அவர் கண்களும் கலங்க ஆரம்பித்து இருக்க…
”அந்த சேரில என் பேத்தி வளர்றதை நினைக்கும் போது.............. முதலில் என் பொண்ணை நினைத்து….... இப்போ அவ பெத்த பொண்ணை நினைத்து...” அதற்கு மேல் பேச முடியாமல் திணறியவரை வைதேகி தான் எப்படியோ சமாளித்து படுக்க வைத்தார்...
-----
“சார் மூவாயிரம் சார்…” ஃபுல் டேங்கை நிரப்பியபடியே… அந்த பெட்ரோல் கிடங்கு பணியாளர் பில் தொகையை சொல்ல… அதற்கான பணத்தை அவர் நீட்டிய மெஷினில் க்ரெடிட் கார்ட் மூலம் கட்டியவனாக… வெளியேறினான் ரிஷி…
தலைவலி சுத்தமாக போகவில்லை…. வேறு வழி… தம்மடித்தால் கொஞ்சம் குறையும் போலத் தோன்ற…. அன்னையிடம் பெட்ரோல் நிரப்பப் போகிறேன் என்று சொல்லி விட்டு… வெளியேறியும் இருந்தான்…
பெட்ரோல் நிரப்பி முடித்துவிட்டு… அருகில் இருந்த கடையில் முழு சிகரெட் பெட்டியை வாங்கியவனாக… அதில் இருந்து ஒவ்வொரு சிகரெட்டாக ஊதித் தள்ள ஆரம்பித்திருந்தான் ரிஷி… வெறித்தனமாக
Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults Thanks Praveena Vijay
What happened Rishi??????? Y restless?????