I’ve posted 11th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
/ * HEALTH ADVISORY*/
SMOKING and LIQUOR DRINKING is injurious to health
மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்
அத்தியாயம்:11
மணி இரவு 7
கையில் மதுக்குவளையுடன்… வெட்ட வெளியை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்… கோடை மழையின் தாக்கத்தில்… இலேசான தூவானம் போட்டிருக்க… வெளியே வெப்பம் தணிந்திருக்க… ரிஷியின் உள்ளத்திலோ… அனலடித்துக் கொண்டிருந்தது…
இது எத்தனையாவது சுற்று என்பது அவனுக்கே தெரியவில்லை… அப்படியே ஒரே மடக்கில் குடித்தவனின் தொண்டை எரிய… இலேசாக நெஞ்சிலும் அந்த எரிச்சல் தொடர… முகத்தைச் சுழித்தவனாக அதை உள்வாங்கிக் கொண்டான்தான்… இருந்தும் மீண்டும் பாட்டிலில் இருந்து கையில் வைத்திருந்த குவளைக்கு மாற்றியவனின் மூளை இதுதான் கடைசி என்று எச்சரிக்க…
இப்போது வெட்டவெளியை வெறித்திருந்தவனின் பார்வை கையில் வைத்திருந்த மதுக்குவளையை வெறிக்க… அந்த மதுக்குவளையுமே அவனைத்தான் வெறித்திருந்தது… தன்னைப் பிடித்திருக்கும் இந்த கைகளில் இனி மீண்டும் வர வெகு காலம் ஆகும் என்று தெரிந்ததால் வந்த வருத்தமோ என்ன…
ஒரு கையில் இருந்த கண்ணாடிக் குவளையும் மறு கையில் இருந்து சிகரெட்டையும் பார்த்த ரிஷியின் இதழ்கள் அவனையுமறியாமல் ஏளனத்தில் வளைந்தன…
”இந்த வீட்டில் விக்கி இருந்திருந்தால் இவை இரண்டும் தன் கையில் வந்திருக்குமா… கையில் என்ன இந்த வீட்டுக்குள் வந்திருக்குமா” அந்த எண்ணத்தில் வந்த ஏளனம் தான்…
கடந்த ஒரு வாரமாகவே இந்த நிலைதான் அவனுக்கு... எல்லாம் அவனின் தோழனின் பிரிவு... இனி பார்க்கவே முடியாதோ அப்படியே பார்த்தாலும்… என்று நினைக்கும் போது மனம் சுருக்கென்றது...
இதோ இந்த வீடு இருவருக்குமான நட்பை சொல்லுமே….
விக்கியின் முன்கோபம்... அதன் பின் அரவணைத்துப் போகும் குணம்... சில நேரம் சின்னதாய் சண்டை... சில நேரம் அறிவுரை என தன்னை முழுவதுமாக அறிந்து... நட்பை யாசித்தவன்...
கடைசியாக தன்னிடம் ஒரு வார்த்தை நேரில் சொல்லாமல்… ஒரு குறுஞ்செய்தி… தனக்கு ஆஸ்திரேலியாவில் படிக்க…. இடம் கிடைத்திருக்கிறதென்றும்… தன் தாத்தாவிடம் அனுமதி வேண்டி அது உடனே கிடைத்துவிட்டதால்… அவரின் மனம் மாறுவதற்குள்… அவசர அவசரமாக இடமாற்றம்…
ஆக தன் வெகு நாளைய கனவான அவனுக்குப் பிடித்த பல்கலைக்கழகம் என விக்கி அவனை விட்டு வெகுதூரமாக போயிருந்தான் அயல் தேசம் நோக்கி…..
விக்ரம் மேலும் தவறில்லை….. ரிஷி அவனது நண்பர்களோடு கோவா சென்றிருந்த சமயம்… அவனும் ரிஷியின் மொபைலுக்கு பலமுறை அழைத்திருந்தான்…. ரிஷி தான் எடுக்க தவறி இருந்தான்…. அதனால் குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு கிளம்பி விட்டான்….
’கோவா’ என்று நினைத்த போதே… அருவருப்பும்… அந்த நண்பர்களின் மீதான கோபமும் வந்து போக… அந்த கேடு கெட்ட கூட்டங்களை தூக்கி எறிந்ததைப் போல அன்றைய எண்ணங்களை தூக்கி எறிந்தவனுக்கு… வெகு நேரமாய் தூக்கமே வரவில்லை…… கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான்தான் ஆனால் தூக்கம் தான் வரவில்லை… பல்வேறு நினைவலைகள்…
விக்கி எத்தனையோ முறை கண்டித்தும் கூட அவன் பேச்சைக் கேட்காமல் அலட்சியபடுத்தி அந்தக் கூட்டத்தோடு நட்பை வைத்தது தவறு என்பது இப்போது புரிந்தது… எப்போது புரிந்தானோ… அப்போதே அவர்களை விட்டு விலகியும் சென்றவனுக்கு கோவா இன்னுமொரு பக்கத்தையும் காட்டி இருந்தது….
தெரிந்தோ தெரியாமலோ அவனறியாமல் அவனைச் சூழ்ந்த கெட்ட பழக்கங்கள்… அவனையுமறியாமல் அவனை விட்டு ஒன்றொன்றாக விலகத் தொடங்க ஆரம்பித்திருக்கின்றது என்பது அறியாமல்… தோழனின் பிரிவில் உழன்று கொண்டிருந்தான்
ஆஸ்திரேலியாவுக்கு சென்றதும் அங்கிருந்து விக்கி போன் செய்தான் தான்… ரிஷி…. அவனிடம் சண்டை ஏதும் போடாமல்… அவன் சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டு வாழ்த்துக்கள் சொல்லி போனை வைத்தவன் தான்…. இதோ ஒரு வாரம் ஆகியும் அவனால் சாதரணமாக இருக்க முடியவில்லை… எத்தனையோ இரவுகள் அவனை தனியே விட்டு வெளியில் சுற்றி வருபவன் தான்… ஆனாலும் தன் நண்பன் வீட்டில் இருப்பான் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நள்ளிரவானாலும் வீடு வந்து சேர்வான் ரிஷி...
மனம் சோர்வாக இருந்தது… மகியுடனும் பேசுவதைக் குறைத்திருந்தான்… இந்த சில நாட்களில்… அதற்கும் காரணம் இருந்தது… கெட்ட பழக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விடை பெற ஆரம்பிக்க… நல்ல எண்ணங்கள் அவனைச் சூழ ஆரம்பித்திருந்தன… மகிக்கும் தனக்குமான உறவில் இன்னும் தெளிவாக இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் வந்திருக்க… முதல் முறை யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
அவசரமாக காதல் சொல்லி விட்டோமோ… பள்ளி செல்லும் பதின்ம வயதில் தேவையில்லாத விசயங்களை எல்லாம் அவள் மனதில் விதைத்து விட்டோமா….. என அவனுக்குள் பல எண்ணங்கள்… அது தந்த அழுத்தம்…. இந்த இரண்டு வாரங்களாக நாடாத குடிப்பழக்கம் இன்று மீண்டும் வந்திருந்தது…
வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்தபடி…. விக்கியை, மகியை நினைத்தபடியே பெருமூச்சை விடுவித்தவனுக்கு…. தன் அன்னை மற்றும் தங்கைகள் நாளை வருவது ஞாபகம் வர... மற்ற கவலைகள் எல்லாம் பின்னுக்கு போக... அடித்திருந்த போதையும் வெகுவாக குறைந்திருந்தது இப்போது…
தன் குடும்பத்தை அழைக்க அதிகாலை 4 மணிக்கே ரயில் நிலையம் செல்ல வேண்டும் என்பதால் அதற்கு மேல் உறங்கவும் இல்லை… கிட்டத்தட்ட 3 மணிக்கே எழுந்தவன்... தான் தங்கியிருந்த வீட்டை தயார் செய்ய ஆரம்பித்தான்....
தயார் செய்வது என்றால் சுத்தப் படுத்தும் பணி இல்லை… மது பாட்டில்கள்… சிகரெட் டப்பாக்கள் என அவற்றை அப்புறப்படுத்தும் பணி.... ஏதாவது கிடந்து தன் மானத்தை அவன் தன் குடும்பத்தினரின் முன் வாங்கிக் கொள்வானா…
ஹால், கிச்சன், தனது அறை, விக்கியின் அறை என அனைத்தையும் இரவோடு இரவாக சரி செய்தவன்… தனது பீரோவையும் விட்டு வைக்க வில்லை…
பீரோவின் ஒவ்வொரு அடுக்கையும் சரி செய்தபடியே வந்தவன்.. மேல் அடுக்கில் ஏதாவது வைத்திருக்கிறோமா என்று பார்க்க… அவன் கையில் பணக் கட்டு தட்டுப்பட்டது… அது இரண்டு மாதம் முன்பு கண்மணி அவனிடம் ரொக்கமாக கொடுத்த பணம்… வங்கியில் போட வேண்டுமென்று வைத்திருந்தவன்… இன்று வரை போடவில்லை
வேகமாக எடுத்துப் பார்த்தவன்… தன்னைத்தானே தானே தலையில் அடித்துக் கொண்டு…
“இது அந்தப் பொண்ணு கொடுத்த பணம்… அப்பா கேட்காம விட்டதில… மறந்தே போய் விட்டேன்… சரி இருக்கட்டும்…. டைம் கிடைத்தால் பேங்க்ல போடுவோம்” என்றபடியே ரிஷி கண்மணி கொடுத்த பணத்தை பத்திரமாக பீரோ லாக்கரில் வைத்தான்…
-----------
அதிகாலை 4 மணி இரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவன்… இதமான குளிர் காற்றை அனுபவித்தபடி… தங்கள் ஊரில் இருந்து வரும் இரயில் வரும் அறிவிப்புக்காக காத்திருந்தான்….
இடையே தன் அன்னையிடமும் விசாரித்தும் விட்டிருந்தான்… இன்னும் 10 நிமிடத்தில் இறங்கி விடுவோம் என்று சொல்லி இருந்ததால் அவன் அவர்களை எதிர்பார்த்து அவர்கள் இருக்கும் பெட்டி நிற்கும் இடத்தில் நின்றிருக்க… அவனின் எதிர்பார்ப்பை வீணாக்காமல்… இரயிலும் வந்து சேர….
இறங்கிய அன்னையையும் அவனது கடைசித் தங்கையையும் பார்த்து அவன் முகம் புன்னகையில் விரிந்தது… அதே நேரம் ரிதன்யா அவர்களோடு இறங்கவில்லை என்பதை புரிந்து கொண்டவன்….. யோசனையுடன் அவர்கள் அருகில் போனவன்… தன் அன்னையைக் கட்டிக் கொண்டு…. அவரின் கையில் இருந்த பெட்டிகளை வாங்கியவன்… ரித்திகாவைப் பார்க்க... கோவாவில் நடந்த சம்பவங்கள் கண் முன் வந்து போக… சகோதரனாக உள்ளுக்குள் படபடத்தாலும்… தன்னை மீட்டெடுத்து வெளியில் சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டவனாக…
“ஹேய்…. குட்டிப் பிசாசு…. “ என்று தன்னை விட 10 வயது சிறியவளான தன் கடைசித் தங்கையைத் தூக்கி தட்டாமலை சுற்ற...
“டேய் அண்ணா… என்ன பாசம் செமையா வழுக்குது” என்று கிண்டல் செய்தபடி ரித்திகா சிரிக்க…
“உனக்கு இருக்கிற வாய் இருக்கே… அம்மா இந்த வானரத்தை எப்படி வீட்ல வச்சு சமாளிக்கிறீங்க” அவள் தலை முடியை களைத்தபடி.. வம்பிழுத்தவன்…. இன்னும் இரயிலின் உள்ளேயே பார்வையை வைத்தபடி இருந்தான்… ரிதன்யாவை எதிர்பார்த்தபடியே
“அண்ணா… இன்னும் என்ன பார்க்கிற…. எங்க கம்பார்ட்மெண்ட்ல.. அழகான பொண்ணு யாரும் வரலை…. நீ பார்க்கிறது வேஸ்ட்” என்று ரித்திகா தன் அண்ணனை மீண்டும் கலாய்க்க…
தன் தங்கையின் தலையில் குட்டு வைத்தபடி.. தன் அம்மாவிடம் திரும்பி….
“அந்த பெரிய பிசாசு எங்க… அதெல்லாம் சென்னை வந்தால்… சென்னை தலைகீழா மாறிரும்னு கூட்டிட்டு வரலையா” என்று விளையாட்டாகச் சொன்னாலும்… ரிதன்யா வரவில்லையே என்ற ஆதங்கம் அவன் குரலில் அப்பட்டமாக தெரியத்தான் செய்தது….
ரிஷியின் அம்மா அவனைப் பார்த்து சிரித்தபடி…
“ரிதுவும் வந்திருக்கா…. ஆனால் எங்களோட வரலை ரிஷி… இந்த ட்ரெயின்லயே வேற கோச்” என்றபடி அதன் எண்ணைச் சொல்ல….
ரிஷி அவர்களை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு…. தன் தங்கையைத் தேடிச் சென்றான்….
ரிதன்யா வந்த பெட்டியின் அருகே போய்க் கொண்டிருந்தவன் கண்களில் முதலில் விழுந்த நபரைப் பார்த்த்தும் சந்தோசத்தில் அதிர்ந்தவன்… கண்களில் காதலும் பொங்கியது… ஆம் ரிதன்யாவோடு மகிளாவும் வந்து கொண்டிருந்தாள்…
என்னதான் கடந்த சில நாட்களாக மகிளா விசயத்தில் கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்… தள்ளி நிற்க வேண்டும்… படித்து முடிப்போம்… நமக்கென சொந்தக் காலில் நின்றபின் இதைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டுமென நினைத்திருந்தாலும்… மகியைப் பார்த்த பின் அந்த எண்ணமெல்லாம் எங்கோ காணாமல் போய் விட்டது என்பதே உண்மை… அவளை நேரில் பார்த்த பின் அவளைப் பார்த்து கண்களில் வந்த மகிழ்ச்சி அவனையும் மீறி வந்து விட
துள்ளலோடு அவள் அருகே போக….. ரிதன்யா இடையில் வந்து நின்றாள்… ரிஷிக்கு மகிளாவுக்கும் இடையில்
“ஹல்ல்லோ…. நாங்களும் வந்திருக்கோம்” என்று இடுப்பில் கைவத்து முறைத்தவளைப் பார்க்காமல்…. மகிளாவைப் பார்த்தபடியே… அவளோடு கண்களால் காதல் மொழி பேசியபடியே… ரிதன்யா தோள் தொட்டு தள்ளி நிறுத்தியவன்
“தெரியுது தெரியுது…” என்று தன் அருகில் வந்து நின்ற மகிளாவின் கையில் இருந்த பெட்டியை வாங்க…
ரிதன்யா கடுப்போடு…
“என்னோட லக்கேஜ்”
“தின்னு தின்னு உடம்பை வளர்த்து வச்சிருக்கேல்ல… எடுத்துட்டு போ…. மகி பாவம்… அவளே ஒல்லி… இந்த லக்கேஜ்லாம் எடுத்து வந்தா அவ காலிதான்” என்று மகியின் தோள் மீது கை போட…
ரிதன்யா கோபமும் சலிப்புமாக தன் நடையைத் தொடர்ந்தாள்…
ரிதன்யா சற்று பூசினாற் போல் இருப்பாள். அதனால் ரிஷி அவளை சில சமயங்களில் குண்டு பூசணி என்று வம்பிழுப்பான்…
தன் தங்கையின் கோபத்தை ரசித்தபடி…. மகிளாவோடு பின்னால் வந்தான்…
“மகி டார்லா என்ன ஒரு இன்ப அதிர்ச்சி… உங்கப்பா என் வில்லன் எப்படி அனுப்பினார்” என்று கேட்க…
இப்போதுதான் மகிளா வாய் திறந்தாள்…
“அப்பா எங்க அனுப்பினார்… அத்தை கிட்ட கேட்டா அவங்களும் ஓகே சொல்லலை…. அப்புறம் லாஸ்ட் வீக் சரி வான்னு சொன்னாங்க்க… அப்பா 1 மந்த் நார்த் இண்டியா டூர் போயிருக்கார்.. அந்த கேப்ல…. 2 நாள் உண்ணாவிரதம் இருந்து அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கினேன்…” என்றபோதே…
ரிதன்யா…. மகியிடம்…
“அடேங்கப்பா… உண்ணாவிரதத்துக்கே அவமானம்.. போயும் போயும் இவனுக்காக…” என்று ரிஷியை நக்கலாகப் பார்க்க…
மகி.. அவளிடம்
“போடி… எனக்கு என் மாமா தான் இந்த உலகத்திலேயே பெஸ்ட்” என்று ரிஷியின் கைகளை இறுக்கமாகப் பற்றியவளின் கரங்களை ரிஷியின் கரங்கள் சில நொடிகள் தயங்கி பின் தன் கரத்தோடு கோர்த்துக் கொண்டது…
சொல்லப் போனால்… மகியின் இந்த குணம் தான் ரிஷிக்கு மிகவும் பிடிக்கும்… மற்றவர் அனைவரையும் விட ஒரு படி மேலே அவளுக்கு அவனைப் பிடிக்கும்… அவனும் அவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான்…..
சிறு வயதில் இருந்தே தன் தங்கைகளை விட மகிளாவுக்குத்தான் அவனின் சப்போர்ட் இருக்கும்... பின்னாளில் காதல் என்று வந்த பின் … இன்னும் அவளோடான உறவும்… உரிமையும் அதிகமாகிப் போனது…
ஆனால் ஏனோ இந்த சில தினங்களாக தனக்கும் மகிக்குமான உறவில் பலவிதமான யோசனைகள்… அதிலும் அவளின் இந்த ரெண்டுகெட்டான் வயதில் காதல் என்று சொல்லி அவள் மனதை கெடுத்து விட்டோமோ என்ற யோசனைதான் அதிகம்… ஏனென்றால் மகிளா அவனை விட இந்த காதலில் அதி தீவிரமாக இருப்பது போல் தோன்றியது… அதிலும் படிப்பு அவளுக்கென்று தன் அடையாளம் என்பதை விட ரிஷிக்கு மனைவியாக வேண்டும் என்ற எண்ணங்களே அவளை அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றதோ என்று தோன்றும் அளவுக்கு அவளின் செயல்பாடுகள் இருக்க… கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாமோ என்று நினைத்த போதுதான்… மகிளாவே அவனருகில்…
என்னதான் அவளைப் பார்த்தவுடன் உள்ளம் துள்ளினாலும்… அவளிடம் தனிமையில் பேச வேண்டும்… இருவருக்கும்தான் திருமணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும்… அதற்கான காலம் இன்னும் வெகு தூரத்தில் இருக்க… மகிளாவுக்கும் சில விசயங்களை புரிய வைக்க வேண்டும்… என்று மனதில் நினைத்துக் கொண்டவனாக இரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தான் ரிஷி… தன் குடும்பத்தினரோடு
------
காரில் தன் அருகில் அமர்ந்திருந்த ரித்திகாவைப் பார்த்து மகி வெளிப்படையாகவே முறைக்க…
”ஹலோ என் அத்தை மக ரத்தினமே நான் தான் உங்களுக்கு பாடி கார்ட்… அத்தை சொல்லி அனுப்பி இருக்காங்க… உன்னை நம்பிதான் மகிய அனுப்புறோம்னு.. ரொம்ப பண்ணின… பேசக் கூட விட மாட்டேன்…” என்று ரித்திகா பெரிய மனுஷி போல் பேச…
ரிஷி புன்னகைத்தபடி…
“சரிங்க சூப்பர்வைசர் மேடம்… நீங்க முன்னாலேயே உட்காருங்க…” என்றபடியே…. ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவனாக…. முன்னால் இருந்த கண்ணாடியை மகி தெரியும்படி சரி செய்து வைத்து… தன் தங்கைக்காக சிறு மன்னிப்பைக் கண்களால் வேண்ட… மகியும் இப்போது சாதரணமாகி இருந்தாள்…
ரிஷியின் அன்னை இதையெல்லாம் கண்டும் காணாமலும் தான் வந்து கொண்டிருந்தார்…
ரிஷி கடந்த சில நாட்களாகவே. விக்கி தன்னை விட்டு போனதை எண்ணி அவரிடம் புலம்பிக் கொண்டிருந்தான்… மகனின் கவலை உணர்ந்த அவனது அன்னை.... சரி மகிளாவையும் கூட்டிப் போகலாம் என்று முடிவு செய்து அவளையும் கூட்டி வந்தார்...
இருந்தும் அவருக்கு உள்ளுக்குள் கலக்கம் தான்... பஞ்சையும் நெருப்பையும் அருகருகே வைத்திருக்கும் நிலைமைதான்.... ரிது ரித்தி என கூட வந்திருந்தாலும்... தாங்கள் எங்கு போனாலும் மகியையும் கூட்டிப் போகும் பழக்கம்தான் என்றாலும்... என்றைக்கு ரிஷி-மகி காதல் விஷயம் தெரிந்ததோ அன்றிருலிருந்தே இருவரையும் தனியே விட பயம் தான்... ஆனாலும் தான் அருகில் இருக்கும் போது என்ன பயம் என்ற தைரியத்தில் மகியையும் கூட்டி வந்து விட்டார்… அதிலும் தன் மகனுக்கு இன்னும் பொறுப்பு என்பதே வரவில்லை என்பதையும் அந்த தாயின் உள்ளம் அறிந்திருக்க.... மகனின் மற்ற செயல்பாடுகள் எல்லாம் அறியாத தாயின் மனம் இதற்கே மகனைப் பற்றி வேதனையோடு இருந்தது…
-----
சினிமா.... ஷாப்பிங்... கேளிக்கை... பீச்.. என தன் ரிஷி குடும்பத்தோடு ஐக்கியமாகி விட்டான்... விக்கியின் பிரிவைச் சுத்தமாக மறந்து விட்டான்... இந்த ஒரு வாரமும் அனைவருக்கும் சந்தோஷமாகவே கழிந்தது…. லட்சுமி நினைத்தது போல ரிஷி-மகி விசயத்தில் பெரிதாக நடக்கவில்லை… மகியோடு தனியாக இருக்க வேண்டுமென்று ரிஷி மெனக்கெடவே இல்லை என்பது நடவடிக்கைகளின் மூலம் தெரிய ரிஷியின் அன்னைக்கு பெருத்த நிம்மதி மகனைக் குறித்து…
இதோ… இன்று அவர்கள் அனைவரும் ரிஷியோடு.... மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் தினம்… இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுதான்… அங்கிருந்து வரும் போது இரயிலிலும் இங்கிருந்து போகும் போது ரிஷியை அழைத்துக் கொண்டு காரிலும் செல்வதென்பதும்… அதன் படி நள்ளிரவு 2 மணிக்கு மேல் சென்னையிலிருந்து காரில் செல்ல தீர்மானித்திருந்தனர்...
அன்று வெள்ளிக் கிழமை.... மாலை அந்தப் பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற அம்மன் கோவிலில் திருவிழா என்பதால் செல்ல முடிவு செய்த லட்சுமி இளையவர்களிடம் அதைச் சொல்லிவிட்டு... மதிய நேரத்தில் சிறு தூக்கம் போட ஆரம்பிக்க...
ரிஷி-மகிளா அதை தங்களுக்கு சாதகமாக மாற்ற இதோ மகி ரிஷியின் அறையில் இருந்தாள்...
ரிஷிதான் மகிளாவை அழைத்திருந்தான்… காரணம் அவனுக்கு மகிளாவிடம் சில விசயங்கள் பேசியாக வேண்டும்… இருவரின் வருங்காலத்துக்கு காதல் மட்டும் முக்கியமில்லை… அதன் உறுதியும்… தாங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் அவசியம் என்பதை அவளுக்கு உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்க…
ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை ரிஷிக்கு… திடிரென இந்த ஞானதோயம் எப்படி வந்தது என மகிளா கேட்டால்… அதற்கான விடை தெரிந்தும் அவளிடம் இப்போதைக்கு சொல்ல மனமில்லை… இப்படி மகிளாவை அருகில் வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்க
மகிளாவுக்கு ரிஷியின் நடவடிக்கைகள் ஏனோ வித்தியாசமாகப் படவில்லை… ரிஷி எப்போதும் போல தனிமையில் பேச அழைப்பது போலவே இன்றும் எடுத்துக் கொண்டாள்…. அந்த உணர்வோடு …. ரிஷியைப் வெட்கப் பார்வை பார்த்தபடியே
“என்ன மாமா… கூப்டுட்டு பேசாமல்... இப்படியே இருந்தால் என்ன அர்த்தம்...” சிணுங்கலும்... உரிமையுமாக கேட்டபடியே அவன் பக்கமாக நெருங்கி அமர.... என்னதான் தனக்குள் உறுதி மொழிகள் எடுத்து வைத்திருந்தாலும் மகிளாவின் அருகாமை அதையெல்லாம் சுக்கு நூறாக்கிக் கொண்டிருக்க…. ஏனோ ரிஷிக்கு கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது…
தன்னை சமன் செய்ய.. சட்டென்று இரண்டு சூயிங்கம்மை எடுத்து வாயில் போட்டவன் அதை மென்றபடியே மகிளாவைப் பார்த்து பேச ஆரம்பிக்கப் போக…
தவறான நேரத்தில் அவன் செய்த தவறான செயல்… இன்னும் சூழ்னிலையைத் தீவிரம்தான் ஆக்கியது
"மாமா எனக்கு" என்று அவன் வாயைப் பார்த்தபடியே மகிளா கேட்க… ரிஷி வேகமாக பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுக்கப் போல…
மகிளாவோ… கைகளைக் கட்டிக் கொண்டு… அவன் உதடுகளையே பார்த்துக் கொண்டிருக்க… அவள் எந்த ஜூயிங்கம்மை கேட்கின்றாள் என்று ரிஷிக்கும் புரிய…. மகியின் எதிர்ப்பில்லாத நிலையை உணர்ந்த ரிஷியின் இளம் ரத்தம் சூடானது... தன்னையுமறியாமல்… அதே வேகத்தோடு அவளை நெருங்கியும் கொண்டிருந்தான்...
----
மாலை 5 மணி அளவில் தன் முன் நின்ற தன் மகளைப் பார்த்த நடராஜ்.... ஒரு நிமிடம் அயர்ந்து போனார்...
மாம்பழ வண்ண பட்டுப் பாவாடை.... இளஞ்சிவப்பு நிற தாவணி… காதுகளில் பெரிய ஜிமிக்கி… இரண்டு கைகளிலும் கை நிறைய வளையல்கள்… மெல்லிய நகைகள்… என அந்த அம்மனே வந்து நின்றது போல கண்மணி அவருக்கு காட்சியளிக்க… தந்தையாக தன் மகளைப் பூரிப்போடு பார்த்தவர்...
“கோவிலுக்கு போறியாடாம்மா” என்றவரிடம்...
“ஹ்ம்ம்ம்ம்ம்... வர 8 மணி ஆகும்.... பொங்கல் வைக்கப் போகிறேன்...” என்று பையில் தான் வைத்திருந்த பொருட்களைச் சரிபார்த்தபடியே நகரப் போனாள் கண்மணி......
“தனியாகவா போகிறாய்.... நானும் வருகிறேன்....” என்ற போதே மகளின் கண்களில் தெரிந்த நக்கல் கலந்த சூடான பார்வை நடராஜின் இதயத்தை கூறாகத்தான் தாக்கியது....
எப்போதுமே இந்த வார்த்தைகளை அவர் அவளிடம் நேரிடையாகக் கேட்க மாட்டார்... இன்று தன் மகளின் அதீத அழகில் அவரையுமறியாமல் வந்து விட.... கண்மணியின் குற்றம் சாட்டிய ஏளனப் பார்வை…. அதற்கு மேல் பேச வாய்ப்பு கொடுக்காமல் அவரைத் தலை குனிய வைத்து விட்டது....
” என் தந்தை தான்..... ஆனால் உன் சேவைகள் எனக்கு தேவையல்ல...”
”உன் மகள் நான் மட்டுமே…. அதனால் மகளாக தந்தையின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்...”
கண்மணியின் செயல்கள் அப்படித்தான் இருக்கும்… அவளுக்கு நடந்த விசயங்கள் அப்படி… இன்று தன்னைச் சுற்றி தனக்காக மட்டுமே இருக்கும் அத்தனை பேரையும் தள்ளி வைக்க காரணமாகி விட்டது என்றே சொல்லலாம்…
நடுக்கடலில் மூழ்கி கண்மணி என்ற உயிர் தத்தளித்த போது சிறு மரமாக கூட உதவிக்கு வராதவர்கள்… இன்று அதிநவீன சொகுசுக் கப்பலைக் கட்டி அந்த உயிருக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் மிகையாகாது…. அவளது தந்தை, தாத்தா, பாட்டி என தான் அவர்களிடம் பாசத்துக்காக ஏங்கிய போது கருவேப்பிலை அளவு கூட அவளை கண்டு கொள்ளாது எட்டித் தள்ளியவர்கள்தான்…. இன்று நீ மட்டுமே எங்கள் ஜீவன் என்று இவளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்…
தந்தை, தாத்தா-பாட்டி என நினைவுகள் சுற்றிய போதே…
“அர்ஜூன் வந்திருக்கான் கண்மணி” தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வந்து போக…
“பொங்கல் வச்சுட்டு பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வருவேன்” என்று மட்டும் தந்தையிடம் சொல்லியபடி வெளியேற…
தந்தை-மகள் இருவருக்கும் இடையேயான பனித்திரை அன்றும் விலகாமல் அவர்களிடையே மூட்டம் போட....
உள்ளுக்குள் கனல் பற்றி எறிந்த போதும்…. மகள் வார்த்தைக்குப் நடராஜன் மறுத்து ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியபடி ... “பத்திரம்” என்று சொல்லப் போனார்...
ஆனால் அந்த வார்த்தைகள் கூட கண்மணியின் பார்வையில் அவர் வாய் வழியே வராமல் தொண்டையில் சிக்கிக் கொண்டன....
அங்கு தாய் தன் மகன் வாழ்க்கை முறையில் கலக்கம் கொள்ள…. இங்கு தந்தை தன் மகள் வாழும் வாழ்க்கையிலேயே கலக்கம் கொண்டிருந்தார்…
அவரவர் வாரிசுகளைப் பற்றி கவலையில் இருந்தனர் கண்மணியின் தந்தை நடராஜ் மற்றும் ரிஷியின் தாய் லட்சுமி… இவர்களின் கவலை தீருமோ?????
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
கோவா பயணத்தின் விளைவுகள் ரிஷி வாழ்க்கையில் வருமா? Nice to read.
Very nice
Very nice
Appo vikki rithuva paarkaamaye poiddaane, rishi arjun meeting next epila irunthu starting