அத்தியாயம் 1
டிசம்பர் 31, இரவு மணி 11:30 அந்த புகழ்பெற்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் புதுவருடத்தை வரவேற்கும் விதமாக கோலாகல கொண்டாட்டத்துடன் ஒளி-ஒலி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது, அங்கிருந்த குடி மக்கள் பலரோ மது போதையில் மிதந்து கொண்டிருக்க. இன்னும் சிலரோ அந்த மது போதையைக் காட்டிலும் சற்று நேரத்தில் அவர்கள் கண்களுக்கு ராஜ போதை தரப் போகும் பிரபல நடிகையின் நடனத்தைக் காணக் கண்கள் சொருக காத்துக் கொண்டிருக்க....
இந்த பரபரப்பில் எல்லாம் கலந்து கொள்ளாமல் தனியே ஒரு கும்பல் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டிருந்தனர். இவர்கள் வேறுயாருமல்ல நம் நாட்டின் வருங்கால தூண்கள் என நாம் நம்பிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின் நானோ பகுதிதான் இந்த கும்பல்… வருங்காலத் தூண்கள் என நாம் நம்பிக் கொண்டிருக்க… அந்த தூண்களோ…. தாங்கள் அடித்த மதுவினால் ஏற்பட்ட போதை தள்ளாட்டத்தில் தங்களை தாங்களே நிலைப்படுத்திக் கொள்ளவே பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தனர்...
"டேய் ரிஷி இன்னும் அரை மணி நேரம் இருக்கேடா, புது வருஷம் பிறக்க அது மட்டும் இல்ல, உன் பிறந்த நாளுக்கும் அதே அரை மணி நேரம் இருக்கு… அதற்கு முன்னாலேயே கேக் வெட்டி, பார்ட்டி கொடுத்து கையில் கிளாஸையும் கொடுத்திட்ட ."
ரிஷியின் நண்பனில் ஒருவன் சந்தேகமாக தன் கேள்வியை ரிஷியை நோக்கி குளறலாக வீச.... அது நமக்குத்தான் குளறல்….
அந்த குளரல் ரிஷியின் மற்ற நண்பர்களுக்கு தெளிவாகவேப் புரிய… வாய் வார்த்தைகளால் பேச முடியாமல்… அதே கேள்வியை பார்வையால் ரிஷியை நோக்கி வீசினர் அந்த குடி மகன்களும்....
அவர்களின் கேள்வியின் நாயகன்… வேறு யாருமல்ல நம் நாயகன் ரிஷியே...
ரிஷி என்கிற ரிஷிகேஷ்… 19 வயது முடிந்து இருபதாவது வருட பிறந்த நாளை கொண்டாட தன் நண்பர்கள் குலாமுடன் இங்கு வந்திருந்தான்.
தனசேகர்-லட்சுமியின் மூத்த வாரிசு. செல்வ செழிப்பிலேயே பிறந்து வளர்ந்தவன்… செல்வ வளத்துடன் பிறந்தது அவன் தவறில்லை… ஆனால் அதன் அருமை தெரியாமல் அதை அனுபவிக்கும் விதம் மட்டும் அறிந்த இடத்தில் தான் அவன் செய்த பிழையே... அது அவன் பிழையா… பெற்றவர்கள் பிழையா… கேள்விக்குறியே...
இரண்டு தங்கைகள் மூத்தவள் ரிதன்யா, கடைக்குட்டி ரித்திகா. அவன் குடும்பமோ அவர்கள் சொந்த ஊரில் இருக்க.. பொறியியல் இரண்டாம் வருடம் சென்னையில் படித்துக் கொண்டிருந்தான் ரிஷி... சென்னை வந்த பிறகு அவனின் பழக்க வழக்கங்களும் அத்து மீறி வளர்ந்து கொண்டிருக்க... பசையுள்ளவன் என்பதால்… சில வேண்டாதவர்களின் பழக்கமும் அவனைச் சுற்றியிருந்தது.
மாதுவைத் தவிர மற்ற பழக்கங்களை எல்லாம் ஒவ்வொன்றாய் ரிஷிக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்தது அந்த கூட்டம்… தன் அன்னையின் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்ததாலோ, இல்லை இரண்டு தங்கைகளுடன் பிறந்திருந்ததாலோ இல்லை தன் மன மாளிகையில் தன் அத்தை மகள் மகிளாவை வைத்திருந்ததாலோ பெண்கள் விஷயத்தில்… வரம்பு மீறியதில்லை ரிஷி…
அந்த ரிஷியின் பிறந்த நாளும் ஜனவரி ஒன்றாம் தேதி, ஆக புத்தாண்டு கொண்டாட்டத்தோடு… ரிஷியின் பிறந்த நாள் என்பது அன்றைய தினத்தின் கூடுதல் உற்சாகமாக அந்த கும்பலுக்கு ஆகிப் போய் இருக்க… அதற்கு முன்னமே இவன் விருந்தை அளிக்க… அதில்தான் இந்த கும்பலுக்கு சந்தேகம்...
உச்சக்கட்ட போதையின் பிடியில் இருந்த ரிஷி தன்னைப் பார்த்துக் கேள்வி கேட்ட தன் நண்பர்களைப் பார்த்து…
"இது என் பிறந்த நாளுக்காகவும் இல்லை நியூ இயருக்காகவும் இல்லை…" கிட்டத்தட்ட உளறினான் என்றே சொல்ல வேண்டும்.
"பின்ன எதுக்குடா ... அப்போ இதோட பார்ட்டி முடிந்ததா" ஏமாற்றமாய் கோரஸாக அவனின் ஆதர்ஸ நண்பர்கள் கேட்க
"நோ நோ நோ .....இது தனி... நியூ இயர்க்கு தனி, என் பிறந்த நாளுக்கு தனி. நீங்க பயப்பட வேண்டாம். இன்றைக்கு இஷ்ட்டம் போல புகுந்து விளையாடுங்க… பேக் டூ பேக் பார்ட்டிதான்… என்ஜாய் டூட் " என்ற ரிஷியின் பதிலில்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் மற்றவர்கள்…
"இன்னையோட என்னோட டீன் ஏஜ் முடிஞ்சதுடா, இனிமேல் ஒருத்தன் கூட நீ டீன் ஏஜ் பையன்… உனக்கு விபரம் பத்தாதுன்னு சொல்லவே முடியாது… இந்த சுண்டு விரல் இல்லை சுண்டு விரல் அதை நீட்டி பேசவே முடியாது… அதுக்குதான் இந்த பார்ட்டி…” என்ற போதே மணி 12:00 என அடிக்க… புது வருடம் பிறந்த நிமிடங்களை தங்களுக்குள் வாழ்த்துச் சொல்லி பரிமாற... ரிஷிக்கு மட்டும் கூடுதலாய் அவன் பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் கிடைத்தது.
ரிஷி அங்கு சந்தோஷமாய் குதூகலத்துடன் இருக்க அதே நேரம் அவனுடன் தங்கியிருக்கும் அவனது நண்பன் விக்ரம் முன் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த ரிஷியின் மொபைலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் எனலாம்
’ராஸ்கல் போனை எடுத்துட்டு போடானு சொன்னா, அம்மா, ரிது போன் பண்ணினால் என்னால எடுக்காமல் இருக்க முடியாது... அதன்பிறகு நான் பேசுகின்ற விதத்திலேயே என் குடிப்பழக்கம் தெரிந்து விடும்னு செண்டிமெண்டா பேசி இப்போ என்னை புலம்ப வச்சிட்டியேடா’ என்று ரிஷியின் போனை எடுக்காமல் விக்ரம் தனக்குள் புலம்பிக் கொண்டிருக்க ......
இப்போது விக்ரம் மொபைல் ஒலித்தது… திரையில் 'ரிதன்யா' என்று மிளிர..
"அய்யோ இவன் தங்கச்சி விட மாட்டா போலிருக்கே" என்று நொந்தபடி தன் போனையும் எடுக்காமல் விட அதற்கும் சோதனை வந்தது
காரணம் அடுத்து விக்ரமின் வீட்டிலிருந்து அழைப்புகள் வர எடுத்து புது வருட வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டவன்..... இடையிடையே வந்த ரிதன்யாவின் அழைப்புகளில் கலவரம் ஆனதுதான் உண்மை. இதற்கு மேலும் ரிதன்யாவிடம் பேசாமல் இருக்க முடியாது என்பதால், அடுத்து ரிஷியின் தங்கை ரிதன்யாவின் அழைப்பு வர வேறு வழியின்றி எடுத்து பேசினான்.
"சொல்லு ரிது " என்று பவ்யமாய் இவன் ஆரம்பித்து முடிக்க வில்லை ......பட பட வென்று பட்டாசாய் பொறிந்தாள் ரிது என்கிற ரிதன்யா.
"ரிஷி எங்க போய்ட்டான்??? போனை ஏன் அட்டெண்ட் பண்ண மாட்டேங்கிறான்??… சரி அவன்தான் போன் எடுக்கலை... உங்களுக்கு போன் பண்ணினால் நீங்களும் ஏன் போன் எடுக்கலை??… ரிஷிக்கிட்ட போனைக் கொடுங்க " என்று கேள்வியால் ஆரம்பித்து.... கோபத்தையும் புகுத்தி கட்டளையாய் முடிக்க….
விக்ரம் பதில் சொல்ல முடியாமல் திணறினான் என்றே சொல்ல வேண்டும். இருந்தும் தன்னை சமாளித்தவாறு
"ரிது நான் ரிஷியோடு இல்ல... ரிஷி நம்பருக்கு ட்ரை பண்ணவும் இல்லை… வெயிட்.... அவனுக்கு போன் பண்ணிப் பார்க்கிறேன் " என்று ரிதன்யாவை சமாதானப் படுத்துவது போல் கூற ரிதன்யாவோ
"பொய் சொல்லாதீங்க என் அண்ணன் இப்போ எங்க இருக்கான்னு தெரியாது உங்களுக்கு? நியூ இயர் கொண்டாட எந்த ஹோட்டலில் இருக்கிற பார்ல போய் கும்மியடிக்க போயிருக்கானோ… அப்படித்தானே " என்று ரிதன்யா ஆவேசமாக பேச
"இல்லம்மா அவன் எப்போதாவது தான் " என்ற போதே
"உங்களை மாதிரி நல்ல பிரண்ட்ஸ் அவனுக்கு எடுத்து சொல்ல மாட்டீங்களா... நாம மட்டும் நல்லவங்களா இருந்தால் போதாது… நம்ம சுத்தி இருக்கறவங்களுக்கும் நம்ம நல்ல குணத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்… என்றவள் குரல் கம்ம
" அண்ணா அடிக்கடி குடிக்கிறானா " என்று கேட்க ..... வேகமாய் விக்ரம்
"அடிக்கடி இல்லம்மா… எப்பொழுதாவது பார்ட்டி என்று வரும் போதுதான்… நான் சொன்னாலும் கேட்கலை அவன்… வாழ்க்கையை அனுபவிக்க தெரியலைனு எனக்கே பாடம் எடுக்கிறான்... விட்டுப் பிடிப்போம்… அவனுக்குனு பொறுப்பு வரும் போது அவன் மாறிடுவான்"
ரிதன்யாவின் வருத்தம் தோய்ந்த குரலில் அவளை ஆறுதல் படுத்தும் விதமாய் சொன்னவன்.. அடுத்த நிமிடமே
"ஹாப்பி நியூ இயர்" என்று வாழ்த்தைச் சொல்ல… தன் அண்ணனைப் பற்றிய கவலை மறந்து சிரித்த ரிதன்யா
"சாரி நியூ இயர் அதுவுமா உங்களை திட்டிட்டேன் ..... ஹாப்பி நியூ இயர்" என்ற போதே
"தேங்க்ஸ்.. பராவாயில்லை… இப்போவாது சிரிச்சியே... ஸ்டடீஸ்லாம் எப்படி போகுது 12th முடிச்சிட்டு என்ன பிளான் " என்று கேட்க
"இன்ஜினியரிங் தான் உங்க காலேஜ்க்கு தான் வரலாம்னு நினைக்கிறேன் ரிஷிதான் வேண்டாம்னு ஒத்தக் கால்ல நிற்கிறான்… வந்தால் உங்க மொள்ளமாரித் தனம்லாம் எனக்கு தெரிஞ்சிரும்னு" என்று முடிக்கும் முன்னரே
"ஹலோ உங்க இல்ல உன் அண்ணனோட" என்று திருத்த… அவனின் முன்னெச்சரிக்கை திருத்தலில்
"தப்பு செய்றவங்களை விட தப்பை மறைக்கறவங்களுக்குதான் அதிக தண்டனையாம் மைலார்ட் " என்று நிமிர்த்தலாய் ரிதன்யா சொல்ல
சிரித்தான் விக்ரம் … அவள் சொன்ன விதத்தில்…
"சாரி உங்களை திட்டினதுக்கு. அப்புறம் இன்னொரு சாரி 12 மணிக்கு மேல பேசினதுக்கு… தென் தேங்க்ஸ் விஷ் பண்ணினதுக்கு" என்று குறும்பாக சொன்னவள் சற்று அமைதியான குரலில்
"ரிஷியோட கெட்ட பழக்கமெல்லாம் எனக்குத் தெரியும்னு அவனுக்கு தெரியாது. மகி சொல்லித்தான் எனக்கே தெரியும். நானும் அவன்கிட்ட தெரியும்ன்ற விதத்தில் நடக்க மாட்டேன்.... என் அண்ணன்கிட்ட நான் விசாரிச்சதை சொல்ல வேண்டாம்” என்றவள் வைக்கப் போகும் முன்
"எப்போதாவதுதான் குடிக்கிறான்னு சொல்றீங்களே.. ஒரு கொலை பண்ணினாலும் அவன் கொலைகாரன் தான் பத்து கொலை பண்ணினாலும் அவன் கொலைகாரன்தான்" என்று சொன்னவள் விக்ரம் பதிலுக்காக காத்திருக்காமல் போனையும் வைத்திருந்தாள்.
ரிதன்யா பேசி முடிந்தபின்னும் விக்ரம் போனை கையில் வைத்து அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
விக்ரம்
ரிஷியோடு ஒன்றாக தங்கி இருந்தாலும், சில பழக்க வழக்கங்களில் இருவருக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் இருக்கும்…
ரிஷி பணக்காரனாய் இருந்தபோதும் எளிதில் அனைவரிடமும் பழகுவான். வேற்றுமை பார்க்க மாட்டான். உதவும் மனப்பான்மை அதிகம் , ஆனால் விக்ரம் எல்லாவற்றிலும் தன் அந்தஸ்த்தையும் பார்ப்பவன். அதே நேரத்தில் கல்வியிலும் சிறந்தவன்.
முதலில் விடுதியில் தான் இருந்தனர்.. அங்கு இருவரும் எப்படியோ நண்பர்களாகியும் இருந்தனர்… விடுதி ஒத்து வராமல் போக… ரிஷி தந்தை தனசேகரிடம் முறையிட… செல்ல மகனின் முகச்சுணக்கம் தாங்காத தனசேகரும்… அவர்களுக்குச் சொந்தமான வீடு சென்னையிலும் இருக்க… அதை மகனின் வசதிக்கு மாற்றிக் கொடுக்க... அங்கு நண்பர்கள் தங்கி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தனர்
விக்ரமின் புண்ணியத்தில்தான் ஏதோ நான்கைந்து பேப்பர்களில் மட்டும் அரியர் வைத்திருந்தான் ரிஷி. இல்லை ரிஷியின் பாடு திண்டாட்டம்தான். ரிஷிக்கு கோபம் என்பது அவ்வளவு ஈஸியாய் வராது. ஆனால் விக்ரம் அவனுக்கு நேர்மாறு… கோபம் கோபம் மட்டுமே அவனிடம் இருக்கும்… அப்படிப்பட்ட விக்கியையே தன் புன்னகை பேச்சில் மடக்கி விடுவான் ரிஷி…
இன்று அவன் தங்கையோ கேள்விகளால் விக்கியை அசரடித்திருக்க… அதில் குழம்பி இருந்தான் விக்ரம் ...
”இவ அண்ணன்கிட்ட இந்த அட்வைஸ் மழைலாம் சொல்லாமல் என்கிட்டே ஏன் இவ சொல்றா… நல்லவங்களுக்கு காலமே கிடையாதுடா சாமி ” எனப் புலம்பியவன்…
“இப்படி ஒரு பாசமான குடும்பத்தில் இருக்கறவனுக்கு… இதெல்லாம் தேவையா…” என்றும் பெருமூச்சு விட்டவன் ரிஷியின் குணங்களை நினைத்து…
ரிஷியும் பாசக்காரன்தான் ஆனால் எப்படி அவனை சில பழக்கங்களில் இருந்து வெளிக் கொணர்வது என்று யோசித்தவனுக்கு ஒன்றும் வழி தெரியவில்லை.... அது மட்டுமின்றி விக்கியின் கனவே வெளிநாட்டில் படிப்பது என்பதுதான். இந்த வருடம் எப்படியும் சீட் கிடைத்து விடும். அப்படிக் கிடைத்துவிட்டால் தானும் இவனை விட்டு போய் விடுவோமே என்று நினைத்தவனுக்கு முதலில் இருந்த கோபமெல்லாம் போய் இப்போது ரிஷியைப் பற்றிய கவலை குடிக்கொண்டது.
அதிகாலை 2 மணி அளவில் தன் கூட்டத்தை ஒருவாறு அந்த ஹோட்டலில் இருந்து கிளப்பி தன் காரில் ஏற்றி இருந்தான் ரிஷி...
போகும் வழியிலும் ஆட்டம் பாட்டத்திற்கு குறைவில்லாமல் ஆர்பரித்தபடி ரிஷி மற்றும் அவனது நண்பர்கள் சென்று கொண்டிருந்தனர்… அனைவரும் ரிஷி வீட்டிலேயே தங்க முடிவெடுத்ததால் ரிஷியின் ஏரியாவை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒன்வே என்று போடப்பட்டிருந்ததையும் அலட்சியப்படுத்தி வேகமாய் ரிஷி தன் காரைச் செலுத்த… அவன் போதாத நேரம் வழியில் சோதனையாக இரண்டு காவலர்கள் நிற்க…
அவர்கள் நிறுத்தி தங்களைக் கேள்வி கேட்கும் முன்னே அவர்களைக் கடந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இன்னும் வேகமாக ரிஷி காரைச் செலுத்த ரிஷியே ஆச்சரியப்படும் வகையில் அந்தக் காவலர்கள் இவர்களை நிறுத்தவில்லை…
காவலாளிகள் ஒருவர் வயது முதிர்ந்த ட்ராபிக் கான்ஸ்டபிள் மற்றொருவர் ரோந்துப் பணியில் நின்றிருந்த காவலர்…
ரோந்து பணியில் நின்றிருந்த காவலர்
"என்னமா ஆட்டம் போட்டுட்டு இவ்வளோ ஸ்பீடா போறானுங்க, நிறுத்தி ரெண்டு தட்டு தட்டி கம்பி எண்ண வைக்காமல் இப்படி விட்டுட்ட" என்று சலிப்பாய்ச் சொல்ல
ட்ராபிக் கான்ஸ்டபிளோ, பதில் சொல்லாமல் புன்னகைக்க…
"அட்லீஸ்ட் பைசாவது வாங்கியிருக்கலாம்" என்று சலிப்பாய் ரோந்து பணியில் நின்றிருந்த காவலர் சொல்லி முடித்த போது ரிஷியின் கார் மீண்டும் அவர்கள் அருகே வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கிய ரிஷி ட்ராபிக் கான்ஸ்டபிளிடம் பேசுவதற்கு பதில் அருகில் இருந்த காவலரிடம் பேச ஆரம்பித்தான்.
குடிபோதையில் அவனுக்கு ட்ராபிக் கான்ஸ்டபிள் யார் என்பது கூட தெரியவில்லை… அந்த அளவிற்கு போதை அவனை ஆட்கொண்டிருந்தது.
"ஏன் சார், உங்களை எல்லாம் நம்பித்தானே மக்கள் ரோட்ல நடமாடறாங்க… இப்படி உங்க வேலையை ஒழுங்கா பார்க்காமல் இருக்கறதுனாலதான் எக்கச்சக்க விபத்துக்கள் நடக்குது" என்று ரிஷி சொல்ல… காரில் இருந்த இவனின் நண்பர்களோ அடுத்து என்ன ஆகுமோ எனறு அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்… இவனது நடவடிக்கையில்….
"வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாமல் உழைக்கணும் தலைவா..." என்றபோது அவன் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த காவலாளி ரிஷியைப் பார்த்து முறைக்க அந்த முறைப்பை எல்லாம் பின்னால் தள்ளியவன்.
"ஒன்வே… குடிபோதை… ஓவர் ஸ்பீட் வேற.. பைன் போடுங்க சார் " என்று ரிஷி அடம் பிடிக்க
ரிஷியின் நண்பர்கள் "டேய் ரிஷி நீ லூசாடா… மாட்டினால் வச்சு செய்யப் போறாங்கடா… வா போகலாம்" என்று பதறியபடி அவசரப்படுத்த
"சாரி சார்… எனக்கு டைம் இல்ல ஃபைன் போடறீங்களா இல்லையா" என்று அவன் சொன்ன போதே நாக்கு குழறியது அவனுக்கு.
"நீங்க பில் போடுற வரை எனக்கு பொறுமை இல்ல .....இந்தாங்க” என்று 2000 ரூபாயை அவரிடம் அழுத்தியவ…. அருகில் இருந்த வெள்ளை உடை அணிந்த காவலாளிடம்…
"ஓ உங்களுக்கும் குடுக்கணும்ல" என்றபடி இன்னொரு 2000 ரூபாயை எடுத்தவன் அவர் கையில் வைக்க போக.. ஆனால் அது தவறி கீழே விழுந்திருக்க அதை எல்லாம் ரிஷி கவனிக்க வில்லை… அதற்கு மேலும் அவன் அங்கு நிற்கவில்லை… தன் பணி முடிந்ததென காரில் ஏறி பறந்திருந்தான்…
கீழே கிடந்த 2000 ரூபாயை பார்த்து ட்ராபிக் கான்ஸ்டபிள் அதை எடுத்தபடி … ரிஷி சென்ற திசையை நோக்கியபடி
"இவனுங்களை எல்லாம் அப்படியே விட்டுடனும் . அப்போதான் எங்கயாவது முட்டி மோதி கை கால் ஒடிஞ்சு புத்தி வரும்… என்ன இதுங்க மரத்தில முட்டாமல் அப்பாவி ஜனங்க மீதுதான் மோதுறானுங்க... அதுதான் கவலையே...” என்று கவலைப்பட்டவர்
“அப்பன் சம்பாதித்த பணமெல்லாம் இதுங்களுக்கு பேப்பர் மாதிரிதான்" என்று தன் அனுபவத்தில் சொன்னவர்… தன் கையில் இருந்த நோட்டைப் பார்த்தபடி
"ம்ஹும்.... பணத்தோட அருமை தெரியாம வளருதுங்க...." என்று கையில் வைத்திருந்த ரூபாய் நோட்டை வெறித்தவர் தன் முன் அந்தப் பணத்தை வீசி எறிந்தவனை நினைத்தபடி.
"இவனெல்லாம் ஒருநாள் கைல 10 பைசா கூட இல்லாமல் தெருவுலதான் நிற்கப் போறான்" என்று முணுமுணுத்தபடி பில் நோட்டை எடுத்து அந்த பணத்தை ஃபைனாக எழுத ஆரம்பித்தார்...
அந்த காவலாளி சொன்னது போல அன்று எதுவும் பலிக்கவில்லை ரிஷிக்கு. எந்த வித சேதாரமின்றி பத்திரமாக வீடு வந்து சேர்ந்தான்… தன் நண்பர்கள் அனைவரும் உறங்குவதற்கு ஏற்பாடு செய்தவன்,
தன்னையே முறைத்தபடி நின்று கொண்டிருந்த விக்கியின் அருகில் வந்தான்… அவன் ஒருவன் இருப்பது அப்போதுதான் உணர்ந்தவன் போல..
"சாரிடா… விக்கி" என்றபடி
"என் மொபைல் எங்கடா" என்று தேடிக் கொண்டிருக்க ரிஷியின் கையில் அவனது மொபைலை வைத்தான்.
"தேங்க்ஸ்டா காலையில் பேசிக்கலாம்" என்று ரிஷி நழுவ அவனை போக விடாமல் விக்கி அவனை நிறுத்தி அவனிடம் பேச வர....
"அய்யா சாமி அட்வைஸ் எல்லாம் வேண்டாம்டா… அம்மா ரிது மகி போன் பண்ணியிருப்பாங்க சரிதானே… நான் சமாளித்துக்கொள்கிறேன் " என்றவன் அவனது முறைப்பில் போதையிலும் நியாபகம் வந்தவனாய்
"விக்கி காலேஜ்ல நடக்கற காம்பெட்டிஷனுக்காக நாம பண்ண போற மாடலுக்கு வெல்டிங் ஒர்க் பண்ண நம்ம ஏரியாலயே ஒருத்தர் இருக்கார்னு சொன்னியே… அட்ரஸ் வாங்கிட்டியா " என்று அதி முக்கியம் போல கேட்க
விக்கியோ மனதிற்குள்
"படிப்பை பற்றி பேசினா… நான் மூடு மாறிறுவேனு பேச்சை மாத்திட்டான்" என்றபடி கோப முகம் மாறாமல் தன் மொபைலில் பதிவு செய்திருந்த முகவரியை நீட்ட
" ஓ வாங்கிட்டியா " என்றபடி ரிஷியும் படிக்க ஆரம்பித்தான்.
"நட்ராஜன்.. என ஆரம்பித்து,... கண்மணி இல்லம்" என்று இருக்க
ரிஷியோ, "நடராஜ் , கணமணி இல்லம்" என்று வாசிக்க விக்கி பல்லைக் கடித்தபடி
"டேய் ரிஷி… கணமணினா இருக்கு " என்று கேட்க
"சாரி" என்றவன் தன் கண் இமையை சரி செய்தபடி... நன்றாக உற்று பார்த்து வாசித்தான்... ஆனால் மட்டும் சரியாக சொன்னானா அதுதான் இல்லை.....
"கானமணி' என்று மீண்டும் தவறாக வாசித்தவன், அது மட்டுமன்றி பின்னோடு தன் கமெண்ட்ஸையும் விக்கியிடம் விட்டான்.
"விக்கி நாம வெல்டிங் ஒர்க்குக்காகத்தானே போகிறோம்… இது பாட்டு கிளாஸ் அட்ரஸ் மாதிரி கானமணி இல்லம் அது இதுனு இருக்கு..." என்று நக்கலாய்க் கேட்க
போதையில் இருந்தவனை வாசிக்க சொன்ன தன்னை தனக்குள் திட்டிக் கொண்ட விக்கி… ரிஷியிடமிருந்து வேகமாய் மொபைலை வாங்கியபடி
"அது கணமணியும் இல்லை கானமணியும் இல்லை... கண்மணி" என்று திருத்த ரிஷியோ அலட்சியமாக
"ஓ கண்..மணியா… ‘கண்’ இந்த ரிஷி கண்ணுக்கு தெரியலை" என்று சொன்னவன்
"ப்ச்ச்… அத விடு” என்று ரிஷி தன் மொபைலின் கால் ஹிஸ்டரியைப் பார்த்தவன்
"அம்மா, ரிதுவுக்கு காலையில் பண்ணிக்கலாம்… இப்போ என் மகி டார்லாவுக்கு போன் பண்ணலாம் ” என்று போன் போட ஆரம்பிக்க , விக்கி பதறியபடி
" ரிஷி மணி மூணுடா "
"சோ வாட்…. உனக்கென்னடா அதைப்பற்றி கவலை... நானும் என் டார்லிங்கும் (???) தான் அதை நினச்சு கவலைப்படணும் ...." என்ற ரிஷி
"மகிக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தால் கூட இப்படி பதறி இருக்க மாட்டான் " என்றபடி மகிளாவின் நம்பருக்கு கால் செய்யப் போக
'கண்மணி' என்ற பெயரை அவன் வாசித்த இலட்சணம் பார்த்தவன் தானே விக்கி, விட்டால் இவன் மகிளாவுக்குப் பதில் வேறு யாருக்காவது போன் போட்டு விடுவானோ என்று பயந்து, ரிஷியின் போனை வாங்கி ரிஷியின் அத்தை மகள் மகிளாவுக்கு கால் செய்து ரிஷியிடம் நீட்டியபடி நகரப்போக
"தேங்க்ஸ்டா மாமு" என்று இரட்டை அர்த்தத்தில் பேசியபடி கண்சிமிட்டிய ரிஷியின் நக்கலுக்கு
"தேவைதான்டா எனக்கு" என்று தனக்குள் நொந்தபடி அவ்விடத்தை விட்டு அகன்றான் விக்ரம் .
விக்கி அந்த இடத்தை விட்டுச் சென்றவுடன் தனக்காக காத்துக் கொண்டிருந்த மகிளாவிடம் பேசத் தொடங்கினான் ரிஷி.
nice start sis