top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி-41-1

அத்தியாயம் 41-1


/*நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ

தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு

காதல் இங்கே வெட்டிப் பேச்சு கண்ணீர் தானே மிச்சமாச்சு */



ரிஷி மண்டபத்தில் இருந்து கிளம்பிச் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகி இருந்தது… கண்மணியால் ரிஷியைப் போல உடனடியாக கிளம்பவும் முடியவில்லை… அதே நேரம் அங்கு இருப்புக் கொள்ளவும் முடியவில்லை


நட்ராஜ் அங்கு இல்லாததை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை… விழாவை அவர்தான் எடுத்துச் செலுத்திய முக்கிய நபர் என்ற போதும்… அங்கிருந்த மக்களைப் பொறுத்தவரை அவர் யாரோதான்… ஆனால் ரிஷி அங்கு இல்லை என்ற போது… ஒவ்வொருவராக ரிஷி எங்கே என்று கேட்க ஆரம்பிக்க… கண்மணிக்குத்தான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி மாள முடியவில்லை… இதில் அவள் அங்கிருந்து கிளம்ப முடியுமா???…


அதன்பிறகு மெல்ல மெல்ல உறவினர் கூட்டம் மண்டபத்தை விட்டுக் குறைய ஆரம்பிக்க… கண்மணி இலட்சுமியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்ப நினைத்த நேரத்தில் ரிஷியும் சரியாக அவளை அழைத்தான்


நட்ராஜ் ’கண்மணி’ இல்லத்துக்கு சென்றுவிட்டதாகக் கூறி கண்மணியை அங்கே போகுமாறு சொல்ல…


“நீங்க எங்க இருக்கீங்க ரிஷி… ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு… “ என்று அடுத்த நொடி அவனைப் பற்றிக் கேட்டாள் கண்மணி… அவன் குரலில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்தவளாக


“நான் சொல்றதை மட்டும் கேளு… நான் கம்பெனில இருக்கேன்… உங்க அப்பாவைப் போய்ப் பாரு… என் மேலதான் அவருக்கு கோபம்… என் கூட சண்டை போட்டுட்டு கோபமா அங்க கிளம்பிட்டாரு… அவரைச் சமாதானப்படுத்து… உன்கிட்ட மட்டும் தான் அவர் சமாதானமாவார்” என்றவன் குரல் இப்போது கல்லாக இறுகிய கட்டளையாக வர..


கண்மணிக்குள் பதட்டம் தானாக உருவாகியிருந்தது..


“என்ன ரிஷி ஆச்சு… உங்களுக்குள்ள என்ன பிரச்சனை ரிஷி…” கண்மணியின் குரலில் ஏன் அப்படி ஒரு நடுக்கம் என்றே அவளுக்கே புரியவில்லை… நட்ராஜ் ரிஷி இவர்களுக்குள் பிரச்சனையா… அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை…


“அங்கப் போன்னா போ..… உன் அப்பாவைப் பாருன்னா பாரு…” சட்டென்று போனை வைத்துவிட்டான் ரிஷி… ரிஷியின் குரலில் என்ன உணர்ந்தாளோ… உடனடியாக மீண்டும் அவனுக்கே போனில் அழைக்க


“என்ன”


“நீங்க ஓகே தானே… அப்பா ஏதும் திட்டிட்டாரா…” கண்மணி அந்த நிலையிலும் கணவனை நினைத்து… அவன் மரியாதையை நினைத்துக் கேட்க


ரிஷியிடமிருந்து மௌனமே….


“சொல்லுங்க ரிஷி… என்றவள் கொடுத்த அழுத்தத்தில்…


“உனக்கு உன் அப்பாதான் எப்போதும் முக்கியமா இருக்கனும்… அடுத்துதான் மத்தவங்களை எல்லாம் பற்றி கவலைப்படனும்… என்னைப் பற்றி நீ கவலைப்படாத… அதை நான் பார்த்துக்கறேன்… உன் அக்கறை எல்லாம் உன் அப்பாகிட்ட காட்டு…” என்று பட்டென்று போனை வைத்து விட்டான்..


போனையே வெறித்தபடி எத்தனை நிமிடங்கள் நின்றிருந்தாளோ கண்மணிக்கே தெரியவில்லை… அடுத்து ரிஷியே அழைத்த போதுதான் நினைவுக்கு வந்தாள் கண்மணி…


வார்த்தைகள் இன்றி இயந்திரமாக காதில் அலைபேசியை வைக்க … அவனோ சிடுசிடுத்தான்


“இவ்ளோ சொல்லியும்… இல்லை… நீங்க ஒரு மாதிரி டல்லா பேசுனீங்க… அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லிட்டு இங்க வந்து நின்ன… “ பேசிக் கொண்டிருக்கும் போதே


“சரி வரலை… என்ன பிரச்சனை … அதாவது சொல்லுங்க… அப்பாகிட்ட பேச… அவரச் சமாதானப்படுத்தவாவது எனக்கு நடந்தது ஏதாவது தெரியணும்தானே… அதைச் சொன்னால் தானே எனக்கும் யார் மேல சரி யார் மேல தப்புனு தெரியும்” என்று கண்மணியும் தெளிவாகப் பேச ஆரம்பிக்க


இப்போது ரிஷியும் தளர்வான குரலில்


“நட்ராஜ் சார் என்னைக்குத் தப்பு பண்ணிருக்கார்…” என்று மட்டும் சொன்னவன்


‘நீ போ… அவரே சொல்லுவார்… நான் லேட்டாத்தான் வீட்டுக்கு வருவேன்…. வீட்ல மத்தவங்க யார்கிட்டயும் ஏதும் காட்டிக்க வேண்டாம்” என்று வைத்து விட்டான்…


கண்மணி அதற்கு மேல் அவனைத் தொந்தரவு செய்யவில்லை… அவனும் இவளை அழைக்கவில்லை…


ரிஷியே தவறு தன் பக்கம் தான் என்று சொல்லாமல் சொல்லிவிட… இப்போது கண்மணியின் எண்ணமெல்லாம் தந்தையிடம் மட்டுமே… அவசர அவசரமாக வாடகைக் காரை அழைத்தவள்… தன் இல்லத்திற்கும் சென்றிருந்தாள்


----


நட்ராஜ் நிலைகுலைந்து அமர்ந்திருந்தார் மனைவியின் புகைப்படத்தின் அடியில்…


நினைவுகள் பந்தாடிக் கொண்டிருக்க… அதுலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்… மனைவியின் நினைவுகளை மனதோடு மட்டுமே வைத்துவாழ்ந்து கொண்டிருந்தவரை… மகள் மட்டுமே இனி தன் வாழ்க்கை…. அவள் சந்தோசம் மட்டுமே தன் சந்தோசம் என தன் துக்கங்களை தனக்குள் புதைத்துக் கொண்டவராக வாழ்ந்து கொண்டிருந்தவரை… ரிஷி இன்று அவருடைய பழைய வாழ்க்கையை அதன் நிறைவேறாத மிச்சங்களை நோக்கி அழைக்கின்றான்…


அதுவும் இவருக்குத் தெரியாமல் அவன் செய்த வேலைகளை என்ன சொல்வது…


எது தன் மனைவியின் கனவோ… அது தன் இலட்சியமோ… மனைவியோடு சேர்ந்து எவற்றை எல்லாம் புதை தோண்டி புதைத்திருந்தாரோ… அவற்றை எல்லாம்... தன் உணர்வுகளின் வலி தெரியாமல்… என்னவென்று சொல்வது… அதுவும் தனக்குக் கூடத் தெரியாமல்…


பவித்ரா மட்டுமல்ல பவித்ராவின் கனவுகளுக்கும் உயிர் தர முடியாது இதுவே நட்ராஜின் எண்ணமாக இருக்க… ரிஷி என்பவன் பவித்ராவின் கனவுகளுக்கு நட்ராஜின் இலட்சியங்களுக்கு புத்துயிர் கொடுத்து மறுஜென்மம் கொடுக்க போராடிக் கொண்டிருந்தான் நட்ராஜிடம்


நட்ராஜுக்கு அவன் அவருக்குத் தெரியாமல் இவற்றை எல்லாம் செய்திருக்கின்றான் என்பது கூட பெரிய வருத்தம் இல்லை… ஆனால் தான் வேண்டாம் என்று தள்ளி வைத்திருக்கும் அனைத்தையும் மீண்டும் தனக்கு மீட்டுக் கொடுக்கிறானாம்…


கோபம் எல்லாம் இல்லை ரிஷி மேல்… வாழ்க்கையில் தோல்வியே கண்டவராக தன்னுடைய இயலாமையை அவனிடம் காட்டி விட்டார்… தன்னைக் கட்டுப்படுத்தமுடியாமல்…


ரிஷியை அறைந்த கைகளை இப்போது வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் நட்ராஜ்…. கண்களிளோ அவரையும் அறியாமல் கண்ணீர் கரை புரண்டோட ஆரம்பித்திருந்தது…


வெகு நாட்களுக்குப் பிறகு அந்த ஆறடி உருவம் இன்று மனைவியின் புகைப்படத்தின் அடியிலும் தஞ்சம் அடைந்திருந்தது…


எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ… பவித்ரா தன் மனைவியாக கிடைத்தது… அதே போல் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ அவள் தன்னை விட்டுப் போனது… ஆனால் அவளோடு வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் நொடியும் ஏழேழு ஜென்மத்துக்கும் போதும்… அந்த நினைவுகளோடு எத்தனை ஜென்மமும் அவர் வாழ முடியும்… நினைத்த போதே அவர் கண்களில் மீண்டும் நீர் ஆறாக பெருக ஆரம்பிக்க… வழிந்த கண்ணீரைக் துடைக்கக் கூடத் தோன்றாமல் கண் மூடி அமர்ந்தவர்… எத்தனை மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தார் என்று தெரியவில்லை…


அவர் செவிகளின் அருகாமையில் ஒலித்த வளைகரங்களின் வளை ஓசையில்… நனவுக்கு வர… கண்களைத் திறந்த போது… அவர் மகள் அருகே இருக்க… அவள் கரங்களோ அவர் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்க… ஏனோ இப்போது கண்கள் அவரையுமறியாமல் கண்ணீரைச் சொரிய ஆரம்பித்து இருந்தது…


அதுவும் கண்மணி.. ரிஷியைக் கூடப் பார்க்காமல் தன்னைத் தேடி வந்திருக்கின்றாள் என்பதை மகள் தேற்றிய வார்த்தைகளில் இருந்து புரிந்து கொண்டபோது… அவரால் அவரைக் கட்டுக்குள் கொண்டே வர முடியவில்லை…


“ம்மா… ரிஷி… நான் எதையெல்லாம் விட்டுட்டு ரொம்ப தூரமா வந்து நிற்கிறேனோ… அதை நோக்கி என்னைக் கூப்பிடறான்மா” என்றவர் கண்மணியின் மடியில் சிறு குழந்தை போல விழுந்து அழ ஆரம்பிக்க…


நட்ராஜ் இப்படி எல்லாம் உடைந்து அழுது கண்மணி இதுவரைக் கண்டதே இல்லை… அவரின் சோகத்தை எல்லாம் போதையில் மட்டுமே கரைத்துக் கொண்டது அவரது ஒரு காலத்து வழக்கம்.. தான் அவரின் உயிராக... வாழ்க்கையாக மாறிய பிறகு அதற்கும் விடை கொடுத்து விட்டார்…


தன் கவலைகளை எல்லாம் தன் மகளுக்காக தன் வாழ்க்கையில் இருந்தே அழித்துக் கொண்டு வாழும் இன்றைய நட்ராஜ்… பவித்ராவின் கணவன் அல்ல… கண்மணியின் தந்தை… அது மட்டுமே நிஜம்… அந்த பந்தத்துக்காக மட்டுமே அவர் வாழ்ந்து கொண்டிருப்பதே… தன் மகளின் சந்தோசம் அதை நோக்கியதே அவர் வாழ்க்கை…


இவை எல்லாம் கண்மணிக்கு மட்டுமே தெரிந்த விசயங்கள்…


கண்மணிக்கு என்ன சொல்லி அவரைத் தேற்றுவது என்றே தெரியவில்லை…


“ப்பா” என்றவள்…


“என்ன ஆச்சுப்பா… அவரும் சொல்ல மாட்டேங்கிறார்… நீங்களும் இப்படி அழுதீங்கன்னா… என்ன நடந்தது… “ - கண்மணியின் ஆறுதலாக பேச ஆரம்பித்தாள் தந்தையிடம்…


“எனக்குத் தெரியாமல் என்னோட ஒப்புதல் இல்லாமல் அவன் பண்ணின காரியங்களை என்ன சொல்றதுன்னே தெரியலை… ரிஷி பண்ணினது துரோகம்னு கூட சொல்ல முடியல… எல்லாத்தையும் பண்ணிட்டு… நீங்க என்ன வேண்டும்னாலும் என்னைத் திட்டிக்கங்க… வெறுத்துக்கங்க… இதைப் பண்ணினதுக்காக நான் வருத்தப்பட மாட்டேன்… மன்னிப்புக் கூட கேட்க மாட்டேன்னு தெனாவெட்டா பேசுறான்மா”


கண்மணிக்கே நட்ராஜின் வார்த்தைகள் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது… துரோகம்… என்ற வார்த்தையெல்லாம்… தன் தந்தையிடமிருந்து.. அதுவும் ரிஷியைப் பார்த்து…


ஏனோ ரிஷியை பற்றிய தவறான வார்த்தைகளை கண்மணியால் ஜீரணிக்கவே முடியவில்லை கண்மணியால்… அவன் தவறே செய்திருந்தாலும்… அதன் பின்னால் முக்கியமான வேறோரு நல்ல காரியம் இருக்கும்... இதுதான் ரிஷியைப் பற்றிய கண்மணியின் எண்ணம்… இதை யாராலும்… ஏன் ரிஷியால் கூட மாற்ற முடியாது…


அதனால் கண்மணியும் ஓரளவு திடமாக இருக்க… தன் தந்தையிடம் கேட்க ஆரம்பித்தாள்…


ரிஷி என்ன செய்திருந்தான்…. நட்ராஜும் சொல்ல ஆரம்பித்திருக்க… அதன் சாராம்சம் இதுவே


நட்ராஜ்… அவரின் இளம் வயதில் அவரின் மிகப்பெரிய ஈடுபாடு மோட்டார் வாகனம்… அதில் புதுப்புது முயற்சிகள் செய்வது கண்டுபிடிப்பது என தன் இளமைக்காலத்தை அதில் மூழ்கடித்துக் கொண்டிருக்க… பவித்ரா அவரது வாழ்க்கையில் வந்தாள் தற்செயலாக… ஏட்டறிவில்லாத அவரின் பட்டறிவு நுணுக்கங்களை கண்டுகொண்டவள்… மெல்ல மெல்ல காதலும் கொண்டாள்… மனைவியாக அவர் வாழ்க்கையை பகிர்ந்தும் கொண்டாள்…


வாழ்க்கையில் மட்டுமல்ல… தொழிலிலும் அவள் கணவனுக்கு கைகொடுக்க ஆரம்பித்தாள்… கணவனின் தொழில்நுட்ப அறிவை எல்லாம் எழுத்தில் ஏற்றி அது அத்தனைக்கும் காப்புரிமையும் வாங்கி இருந்தாள்… தன் கணவனின் அத்தனைக் கண்டுபிடிப்புகள் அத்தனையும் உலகம் அறிய வேண்டுமென்பதே அவளின் கனவு இலட்சியம்… அதற்காக போராடிய வேளையில் தான் காலம் செய்த கொடுமையாக அவள் மரணமும்…


இது எல்லாமே நடந்த கதை… கண்மணிக்கும் தெரிந்த கதை…


நட்ராஜின் கண்டுபிடிப்புகளும்… பவித்ராவின் கனவுகளும்.. அதோடேயே முடங்கி விட்டிருக்க… ரிஷியோ அவற்றை எல்லாம் தூசு தட்ட ஆரம்பித்திருந்தான்… நட்ராஜின் முக்கியமான பல கண்டுபிடிப்புகள் எல்லாமே இப்போதைய நவீன உலகத்தின் மாற்றத்தில் உபயோகமற்ற கண்டுபிடிப்புகளாக மாறி இருக்க… ரிஷி அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை… சரியான நேரத்தில் சரியான இடத்தை நோக்கி நட்ராஜின் கண்டுபிடிப்புகள் சென்றிருந்தால்… நட்ராஜ் இன்று இருக்கும் இடமே வேறு….


இனி என்ன செய்ய முடியும்… தனக்குள்ளே அவரை வியக்கத்தான் முடியும்


அப்படி நினைத்துக் கொண்டிருந்த போதுதான்…


ரிஷியின் எண்ணங்களில், விக்கியும் அவனும் முதன் முதலாக நட்ராஜை சந்தித்த காரணம் தோன்ற அந்த போட்டியில் அந்த மாடலுக்காக விக்கி முதல் பரிசு பெற்றது… விக்கி நட்ராஜ்தான் இதற்கெல்லாம் முழு முதல் காரணம் எனச் சொன்னது அதன் பின் சில வருடங்களுக்குப் பிறகு.. விக்கியையும் இவனையும் தேடி அந்த தொழில்நுட்பத்துக்கான விளக்கம் கேட்டு பல கார் கம்பெனிகள் வந்தது என… ஞாபகத்துக்கு வந்து போயின


விக்கி செய்த மாடலைப் பற்றின ஆராய்ச்சியை நட்ராஜின் கண்டுபிடிப்போடு தொடர்பு படுத்தி ஆராய ஆரம்பித்தவனுக்கு முதலில் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது என்றாலும்… ரிஷிக்கு அவனின் ஏட்டுக் கல்வியும்… கூடவே நட்ராஜோடு பயணித்ததால் அவரது அனுபவ அறிவும் கொஞ்சம் கைகொடுக்க… ரிஷி தற்போதிருக்கும் மனநிலையில் அவனையுமறியாமல் அந்தக் கண்டுபிடிப்புகளை நோக்கி தன் முழுக் கவனத்தையும் திருப்ப… நட்ராஜ் அறியமாலேயே அவரோடு பேசி அவரின் அறிவையும் அனுபவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் உள்வாங்கிக் கொண்டவன்… முடிவில் அதில் வெற்றியும் கொண்டான் என்றே சொல்லவேண்டும்… விக்கியின் செய்த மாடலின் தொழில்நுட்பத்தை விட இது இன்னுமே பல மடங்கு முன்னேற்றத்துடன் இருக்க… இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு நட்ராக் அறியாமல் இரண்டு மூன்று ஆட்டோ மொபைல் கம்பெனி ஏறி இறங்கினான் தான் ரிஷி ஆரம்பகாலக் கட்டத்தில்…. அதாவது பவித்ரா விட்டிருந்த பணியை ரிஷி ஆரம்பித்தான்… பவித்ராவுக்கு கிடைத்த அதே அனுபவங்கள் தான் ரிஷிக்கும் கிடைத்திருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா…


ஆனால் ரிஷி அங்குதான் கொஞ்சம் முன்னோக்கி சிந்தித்தான்… கையில் வெறும் காகிதங்களை வைத்துக் கொண்டு எத்தனை கம்பெனி படி வாசல் ஏறுவது…பவித்ரா செய்த அதே செயலைத் தொடராமல் … வேறு மாதிரியாக சிந்திக்க ஆரம்பித்தான் …


நாம் ஒவ்வொரு கம்பெனியையும் தேடித் தேடி அலைவதை விட… அவர்கள் அனைவரின் பார்வையையும் ஒரே நேரத்தில் தங்கள் மீது விழ வைத்தால்…. இந்த யோசனையின் முடிவில் அவனுக்கு கிடைத்த மிகப் பெரிய தெளிவு வந்தது… வழியும் கிடைத்தது


அதுதான் ரியாலிட்டி ஷோ…. நம் நாட்டில் ஆட்டோ மொபைலுக்கான ரியாலிட்டி ஷோவெல்லாம் பெரிதாக இல்லை… அனைத்துமே வெளிநாட்டில் மட்டுமே இருக்க… ரிஷி அவற்றையும் ஆராய ஆரம்பிக்க… முடிவில் அவனுக்கு விடையும் கிடைத்தது… ஆஸ்திரேலியாவில்… ஒரு மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ… இது போல படிக்காத பாமரர்கள் கூட பட்டறிவு மூலம் தங்கள் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிக் கொணரலாம்… உடனடியாக ரிஷி சத்யாவை வைத்து அதன் மூலங்களை ஆராய ஆரம்பித்தான்… அதிலும் இருவர் ஜோடியாக பங்கேற்கலாம் என்று தெரிய வந்த போது ரிஷி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்…


நட்ராஜ் மட்டும் தனியாகச் செல்ல வாய்ப்பே இல்லை… அப்படியேச் சென்றாலும் தன் கண்டுபிடிப்புகளை அவரால் அங்கு வெளிப்படுத்த்தி வெற்றி கொள்ளும் பேச்சுத்திறமையும் அவருக்கு இல்லை… ஆக வெற்றிவாய்ப்பு அது கூட வேறு விசயம்… அவரது கண்டுபிடிப்புகள் பெரிதாகச் ஜொலிக்காது… ஆனால் ரிஷி அவரோடு கூட்டாகச் சேரும் போது ரிஷியின் பேச்சுத்திறமையும்… யாரையும் கவரும் அவனது உடல்மொழியும்… ஒன்று சேர கண்டிப்பாக இவர்களது முயற்சிகள் பல கம்பெனிகளைச் சென்றடையும்…. நட்ராஜ் உலகத்திற்குத் தெரிய ஆரம்பிப்பார்… அதன் பின் இவர்களுக்கு அடையாளம் தேவையில்லை… தானாகவே நட்ராஜின் கண்டுபிடிப்புகள் நவீன தொழில்நுட்பத்துடன் சேரும் போது இன்னும் மெருகேரும்… இது எல்லாம் நடக்க வேண்டுமென்றால்… அந்த ரியாலிட்டி ஷோவில் ரிஷியும்-நட்ராஜுமாக பங்கேற்க வேண்டும்… ஆனால் நட்ராஜ் கேட்பாரா… அதனால் தான் ரிஷி அவருக்குத் தெரியாமல் பல காரியங்களைச் செய்தது… சிறு அளவில் கூட அவருக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை… நட்ராஜைப் பற்றி மட்டுமே சிந்தித்தவன்… என்ன எடுத்த வழி மட்டுமே தவறே தவிர… அவனது எண்ணம் அனைத்தும் நட்ராஜும் அவரது கண்டுபிடிப்புகளும் உலகம் இல்லையில்லை இன்றைய மிகப்பெரிய ஆட்டோ மொபைல் கம்பெனிகள் அறிய வேண்டும் என்பதே…


கடந்த இரண்டு வருடங்களாக முயன்றவனுக்கு இந்த வருடம் அடித்தது ஜாக்பாட்… அந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அழைப்பு வந்திருக்க… ரிஷிக்கு ஒரு வாரத்திற்கு முன்னமே தெரியும்… நட்ராஜுக்கு அழைப்பு இன்றுதான் வந்திருந்தது… அதாவது அவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்க்கான நேர்காணலுக்கான அழைப்பு… அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திக்கான இந்திய முகவரிடமிருந்து வந்திருந்தது… அந்தத் தொலைபேசி அழைப்புக்குப் பின்னர்தான் நட்ராஜ் … அதைக் கேட்டபின் தான் நட்ராஜ் கோபமாக மண்டபத்தை விட்டு வெளியேறியது…. நேரடியாக கம்பெனிக்குச் சென்றது…


மண்டபத்தில் கோபத்தைக் காட்ட முடியாமல் கம்பெனி வந்தவர்…. அறையில் பீரோவில் எனப் ஆராய ஆரம்பிக்க… அனைத்துமே வைத்தது வைத்த போல் தான் இருக்க… பிறகு எப்படி ரிஷிக்கு இதெல்லாம் தெரியும் என்று யோசிக்க ஆரம்பித்தவராக யோசனையில் இருந்த போதுதான் அவரது கையில் அந்த நோட்டு சிக்கியது….


பவித்ரா வரைந்திருந்த சிறு குழந்தை முதல் வளைகாப்பு வரை வரைந்து வைத்திருந்த ஓவியங்கள்… எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் இன்றும் அதை எடுத்தபோது அவற்றைப் பார்க்காமல் வைக்க முடியவில்லை…


ஒவ்வொரு பக்கமாகப் புரட்டியபடியே வந்தவர்… திருமண கோலம் வரிந்திருந்த இடத்தில் வந்து நிற்க… கைகள் நடுங்கியது நட்ராஜுக்கு… பவித்ராவின் கனவுகள் இந்த இடத்திலும் நிறைவேறவில்லை… நிறைவேறவில்லை என்பதை விட இது நடக்கக் கூடாது என நிறைவேற முடியாமல் செய்தது தான் தான் என்பதை அவர் உணராதவரா என்ன? கண்மணிக்கு கூடத் தன் தாயின் ஆசை தெரியாமல் மறைத்து விட்டாரே…


அந்த விடலைப் பருவத்திலேயே… தன் மகளைத் தன்னிடம் இருந்து பிரிக்க நினைத்த அந்த அர்ஜூன் இப்போதுமே… அவருக்கு வேப்பங்காயாக கசந்தான்தான்…


அதிலும் மகளுக்கும் அவன் மேல் கொஞ்சம் ஈடுபாடு இருக்கிறது என்று தெரிந்த நொடி அவர் உயிர் மூச்சு கருகிய நொடி… தன் மனைவி உயிர் பிரிந்ததால் தான் தன்னை விட்டு பிரிந்தாள் … அந்த அர்ஜூன் மட்டும் தன் மகளைத் திருமணம் செய்தால்… உயிரோடு தன் மகளை தன்னை விட்டு பிரித்து விடுவான் அவன்… இப்போது நினைத்தாலும் மூச்சுத் திணறியது தான்…


எந்தக் காரணத்துக்காகவும் கண்மணியின் வாழ்க்கையை அர்ஜூனோடு இணைக்கக் கூடாது… மனைவியின் ஆசைதான், அவரிடம் தன் ஒரே ஆசையாக அதுவும் கர்ப்பமாக இருந்த போது கேட்டிருந்தாலும்…. தூக்கித் தூரப் போட்டிருந்தார்… தன் மகள் தனக்கு மட்டுமே என்ற ஒரே எண்ணத்தில்


ஆக தனக்காக தன் இலட்சியங்களை எல்லாம் தன் கனவாக சுமந்தவளின்… ஆசையைக் கூட நிறைவேற்றாமல் தன் மகள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற சுயநலமும் பயமும் கலந்து அவர் எடுத்த முடிவுதான் ரிஷியோடான கண்மணியின் திருமணம்…


ஆனாலும் வருத்தம் வரவில்லை நட்ராஜுக்கு… பவித்ராவின் எந்த ஆசை தான் நிறைவேறியிருக்கின்றது… இது நிறைவேறவில்லை என்று வருத்தப்படுவதற்கு… அவளது மகளின் திருமணம் அதில் ஒன்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் மனதளவில்… இதோ அந்த நோட்டைப் பார்த்துகொண்டிருக்கும் இப்போதும்…. இந்த நொடியுமே…


இப்படி நட்ராஜ் அவர் உணர்வுகளின் பிடியில் இருக்க… ரிஷியும் அங்கு வந்து சேர்ந்தான்….


அவன் முன்னே வந்து நின்றவன்…


“சார்” என்று ஆரம்பித்த போதே அடுத்த நொடி அவனது கன்னத்தில் பளாரென்ற அறை நட்ராஜின் கைகளில் இருந்து விழுந்திருந்தது…. பேசக் கூட விடவில்லை அவனை


ஆனால் ரிஷி அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை… இதை எல்லாம் எதிர்பார்த்துதான் வந்திருந்தான் என்பது போல அமைதியாகவே அவர் முன் நின்றிருந்தவன்…


மன்னிப்பெல்லாம் கேட்க வில்லை… மாறாக அவரிடம் தன் எண்ணங்களை… விளக்க ஆரம்பிக்க…


நட்ராஜ் விடவில்லை…


“என் மனைவியோட, அவளோட கனவு லட்சியம்… ஆசை எல்லாம்… அவளோடேபோயாச்சு… இனி அதுக்கு உயிர் கொடுக்கனும்னு நினைத்தால்… அது வேண்டாத வேலை… அது முடியவும் முடியாது… நான் எங்கேயும் வர மாட்டேன்… வேணும்னா… அந்த பேப்பர்ல இருக்கிற எல்லாவற்றையும் உன்னோடதா மாத்திக்க… இது கண்மணியோட அப்பாவா சொல்லல… என்னோட தொழில் வாரிசா… உன்னைப் புரிஞ்சுக்கிட்டதுனால சொல்றேன்…” என்றவர்…. ரிஷிக்கு அடுத்து பேச வாய்ப்பு கூடக் கொடுக்காமல் கிளம்பி விட்டார்….


மகளிடம் அனைத்தையும் சொல்லி முடித்தார் நட்ராஜ்..… இங்கு அனைத்தும் என்பது ரிஷியைத் தான் அறைந்தது உட்பட… ஆனால் அதே நேரம் மகளுக்கான தன் மனைவியின் எண்ணங்கள்… அவளது ஆசை இவற்றை வழக்கம் போல கண்மணியிடம் மறைத்து விட்டிருந்தார் நட்ராஜ்…


அமைதியாக, பொறுமையாகத் தன் தந்தை சொன்னதை எல்லாம் கேட்டவளுக்கு… ரிஷி செய்த செயல்களை நினைத்து கோபமா வரும்…


’ரிஷி, தன் தந்தையின் நல்லதுக்காக அவர் நலனுக்காக மட்டுமே அனைத்தையும் செய்திருக்கின்றான்… அதை விட… தன் தந்தை அவனை அறைந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் தன் முதலாளி மனம் வருந்திப் போயிருக்கின்றார் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு… அதனால்தான் தன்னை அவனைக் கூட பார்க்க வர வேண்டாம் என்று தந்தையைச் சமாதானப்படுத்த அனுப்பி வைத்திருக்கின்றான்…


இதற்கு மேல் ஒரு மனைவிக்கு கணவனிடத்தில் என்ன வேண்டும்… என்று நினைத்தவளுக்கு… ரிஷியை உடனே பார்க்க வேண்டும் என்று தான் தோன்றியது… அதுமட்டுமல்லாமல் தன் அப்பாவும் அவனை அறைந்து விட்டார் எனும் போது மனம் இன்னுமே கணவனை நினைத்துக் கலங்கத்தான் செய்தது…


இன்னும் எத்தனை அவமானங்கள் தான் அவன் பட வேண்டும் ஏன் அவனை யாருமே புரிந்து கொள்ள முயற்சிக்கவே மாட்டேன் என்கிறார்கள்… யார் யாரோ அவனைக் கேவலமாக என்ணியிருக்கிறார்கள்தான்… இழிவு படுத்தி இருக்கிறார்கள் தான்… ஏன் கை நீட்டியும் இருக்கிறார்கள்… ஆனால் இன்று தந்தையும் அதில் சேர்ந்து விட்டாரே…


தந்தையின் அருகில் இருந்தும் கணவனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள் கண்மணி….


மகளின் அமைதி உணர்ந்தவராக…


“ரிஷிய அடிச்சுட்டேனேன்னு யோசிக்கிறியாம்மா… நான் தெரிஞ்சு” என்று குற்ற உணர்வுடன் பேச ஆரம்பித்தவரிடம்…


“ப்ச்ச்… அதெல்லாம் இல்லப்பா… உங்களை அவர் அப்பா ஸ்தானத்திலதான் வச்சுருக்காரு… அதையும் தாண்டி அவரோட குருவே நீங்கதான்… குரு கையால குட்டுப்படறது… எப்போதுமே நல்லதுதான்… “ என்று வருத்தத்தை மறைத்து சொல்லியவள் தந்தையைப் பார்க்க… நட்ராஜ் முகத்திலும் மெல்லிய ஆறுதல் பரவ ஆரம்பிக்க


“ஆனால் எனக்கு கஷ்டமா இருக்குப்பா… “ மகளின் தழுதழுப்பான வார்த்தைகளில் நட்ராஜின் முகத்தில் மின்சார அதிர்வு….


“நான் மட்டும் அங்க இருந்திருந்தால் ரிஷிய அடிக்க விட்ருக்க மாட்டேன்ப்பா… அவர யாருமே புரிஞ்சுக்கல… இப்போ நீங்க கூட” தந்தையைச் சமாதானப்படுத்த வந்தவள் கணவனுக்காக பேசிக் கொண்டிருந்தாள்…


“நான் அவன புரிஞ்சுக்கலைனு சொல்லலம்மா…. தப்பு பண்ணிட்டான்னு சொல்லலம்மா… எனக்குப் பிடிக்காத விசயத்தை என் சம்மதம் இல்லாமல் எனக்குத் தெரியாமல் பண்ணிட்டான்ற வேதனையில… வந்தது”


தந்தையின் கவலை புரியாதவளா???….


“நான் ஒண்ணு கேட்டா… தப்பா எடுத்துக்க மாட்டீங்கதானே”

“சொல்லுடாம்மா”


“நீங்க அடிக்கடி சொல்வீங்கள்ள… நான் வாழ்றதே என் பொண்ணுக்காக மட்டும்னு” கண்மணி அழகாக வார்த்தைகளை கோர்த்திருந்தாள்…


மகள் சொல்லி முடிக்கவில்லை….


“என் பொண்ணுக்காக மட்டும் இல்லை… அவ முகத்தில சந்தோசத்தையும் பார்க்கனும்ன்னு” நட்ராஜ் கண்மணி சொல்லாமல் விட்டதை சொல்லிக் காட்டி முடிக்க


கண்மணி புன்முறுவல் புரிந்தாள்….


“அந்தப் பொண்ணோட சந்தோசம்… இப்போ அவகிட்ட இல்லை அவ புருசனோட சந்தோசத்தில இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதாப்பா” கண்மணி அவர் கண்களைப் பார்த்துக் கேட்க… நட்ராஜே ஒரு நிமிடம் வார்த்தைகளின்றி விக்கித்துப் போனார்தான்


”மணிம்மா”


“ஆமாம்பா… வாழ்க்கைல ஜெயிக்கனும்… அவர ஏளனமா பார்த்தவங்க முன்னால வாழ்ந்து காண்பிக்கனும்… இதை நோக்கி கண்னு மண்ணு தெரியாமல் ஓடிட்டு இருக்கார்ப்பா… அவரோட இந்த வெறி அவரைப் பற்றிக் கூட சிந்திக்க வைக்க முடியாத அளவுக்கு அவரை துரத்திட்டு இருக்கு… சில சமயம் தப்பான வழியக் கூட அவர் தேர்ந்தெடுக்க நினைக்கிறாருதான்…. ஆனால் யாரையும் காயப்படுத்த நினைக்காமல் தான் அவர் அந்த வழியையும் தேடுவாரு… மனசளவுல யாருக்கும் அவர் துரோகம் பண்ண மாட்டாருப்பா… அப்படி ஒருத்தருக்கு அவர் துரோகம் பண்றாருன்னா… அவங்க கண்டிப்பா நல்லவங்களா இருக்க மாட்டாங்க… உங்களுக்கு அவர் பண்ணினது துரோகம்னு நினைக்கிறீங்களாப்பா… அவர் எதை நோக்கி ஓடிட்டு இருக்காரோ… அதுல உங்களையும் சேர்த்துக்க நினைக்கிறாரு… நீங்க இழந்ததைதையும் உங்களுக்கு கிடைக்கனும்னு நினைக்கிறாருப்பா… உண்மையைச் சொல்லனும்னா உங்க உழைப்ப அவர் திருடல… உங்களதான் முன்னிருத்த நினைக்கிறாரு…” என்ற கண்மணி… எழுந்து சன்னலோரம் சென்றாள்…


“ஆனால்… இன்னும் ஒண்ணு இருக்குப்பா… இப்போ எதை நோக்கி ஓடிட்டு இருக்காருன்னு சொன்னேனோ… இது எல்லாம் அவரோட இலக்கு இல்லப்பா… உங்கள வச்சு கோடி கோடியா அவர் சம்பாதித்தாலும் கூட அவர் உங்ககிட்ட இருக்க மாட்டாரு… இது எல்லாவற்றையும் விட… ரிஷியோட கனவு… அவரோட அப்பாவோட கனவு மட்டுமே… அந்த கம்பெனி… அந்த மக்கள்… அவங்க இழந்த அவங்க குடும்ப சொத்து வீடு…. அந்த பழைய வாழ்க்கை… அவர் அம்மா தங்கை முகத்தில அவங்க அப்பா விட்டுட்டுப் போன அதே சந்தோசம்… இதுதான்…. அவரோட லட்சியம்…


“இதெல்லாம் வேண்டாம்னு நினைத்திருந்தால்… சராசரி மனிதனா மட்டும் இருந்திருந்தால் மகிளாவோட கண்டிப்பா சந்தோசமா இருந்திருப்பார்…. அப்பா… அம்மா… தங்கை… குடும்பம் இதெல்லாம் அவர் நினைவிலேயே இருந்திருக்காது”


உணர்ச்சியற்ற குரலில் சொன்னவள் சட்டென்று தன் குரலை மாற்றி…


“ப்ளீஸ்ப்பா… எனக்காக நான் எதையும் இதுவரைக் கேட்டதில்ல…. ஆனா …. இன்னைக்கு உங்ககிட்ட கேட்கிறேன்…” என்றவள் என்ன சொல்ல வருகிறாள் சொல்லப் போகிறாள் என்று புரிந்து கொள்ள முடியாத முட்டாளா நட்ராஜ்…


அமைதியாக அமர்ந்திருந்தார்…. மீண்டும் அவளருகில் வந்தவள்… அவர் முன் அவர் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவளாக…


”ரிஷிய மட்டும் வச்சு நான் சொல்லலப்பா… உங்களையும் நினைத்துதான்… இத்தனை வருசமா… நான் ரொம்ப கர்வமா இருப்பேன்…. என் அப்பா எனக்கு அப்பாவா இருக்கத் தேவையில்ல… ஆனால் நான் அவருக்கு மகளா அவருக்குத் தேவையானதை எல்லாம் செய்வேன்னு… இன்னைக்கு ரிஷி அந்த கர்வத்தையும் உடச்சிட்டாரு… உங்க பொண்ணா நான் செய்யத் தவறினதை அவர் கைல எடுத்துக்கிட்டாரு…. எனக்கு நீங்க முக்கியம்பா… யாருக்காகவும் உங்கள விட்டுக் கொடுக்க மாட்டேன்பா… “ என்ற போதே


அது நட்ராஜுக்குத் தெரியாதா…. ஒரு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியாக வாரிசாக அவளது தாத்தா-பாட்டி அழைக்க அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த வயதிலேயே தன்னிடம் வந்தவள் தானே அவள் மகள்…. பருவ வயதில் அவளுக்கான ஆசைகளை தன் நலன் கருதியே பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அர்ஜூன் மாதிரி ஒருவனையே நிராகரித்தாள் என்றால் அது தனக்காக மட்டுமே…


இதை எல்லாம் புரியாதவரா என்ன… ரிஷியை எதற்காக அவளது வாழ்வில் இவர் இணைத்து வைத்தார்…


யோசித்தார் நிதானமாக… ஆழமாக…


ரிஷி என்று ஒருவனுக்காக தன் மகள் நித்தமும் கவலை கொள்கிறாள் என்பதை விட… அவன் சந்தோசத்துக்காக அவள் அவளாக மாறிக் கொண்டிருப்பதும் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்கின்றதே…எல்லாம் நினைத்தது போல் நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது தனக்கு இந்தப் பிடிவாதம் தேவையா???

தன் மகளே சொல்லி விட்டாள் தன் கணவனின் சந்தோசம் தான் தன் சந்தோசம் என்று… இனி என்ன….


முடிவெடுத்தவராக மகளை நோக்கி மலர்ந்த முகத்துடன் நிமிர்ந்தார்….


---

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது… ரித்விகா ரிதன்யா இலட்சுமி என அனைவரும் விழா முடிந்து மகிளாவின் வீட்டுக்குச் சென்று விட்டனர்… அனைத்துச் சொந்தங்களும் வந்திருக்க… சொந்தங்களோடு அங்கேயே அன்றிரவு தங்க முடிவு செய்திருந்தனர்… இது முன்னமே எடுத்த முடிவுதான்… கண்மணி ரிஷியும் அங்குதான் இருந்திருக்க வேண்டும்…


இடையே நட்ராஜால் வந்த குளறுபடியால்… கண்மணி நட்ராஜோடு ’கண்மணி’ இல்லத்தில் தங்கும்படி நேர்ந்து விட…. ரிஷியோ இன்னும் வரவில்லை… மாலையில் பேசியதுதான்… நட்ராஜ் சம்மதித்து விட்டார் என்ற செய்தியைச் சொல்ல அழைத்த போது கூட அவன் எடுக்கவில்லை… நட்ராஜ் சம்மதம் சொன்னதை செய்தியாக அனுப்பி விட்டு… அவனை பிரேம் வீட்டுக்கு போகவேண்டாம் என்றும் இங்கு வரும்படி கூடுதல் தகவல் வேறும் அனுப்பி இருந்தாள்…


ரிஷி கண்டிப்பாக இங்குதான் வருவான் என்று அவனை எதிர்பார்த்து கண்மணி காத்திருக்க… நட்ராஜோ எப்போதோ உறங்கியிருந்தார்…


இரவு உணவு ஏதும் வேண்டாமென்று… இவள் வற்புறுத்தலில் வெறும் ப்ரட் மட்டுமே போதுமென்று அதைச் சாப்பிட்டுவிட்டு… உறங்கச் சென்றவர்….… தூக்கம் வந்ததோ இல்லையோ…. நினைவுகளை அசைபோட்டபடி படுத்திருந்தவருக்கு அன்றைய தின வேலைகள் கொடுத்த களைப்போ… இல்லை உணர்வுகள் தந்த தாக்கமோ… படுத்த சற்று நேரத்திலேயே தூங்கியும் விட்டார்…


கண்மணி எந்த வீட்டினுள்ளும் செல்லவில்லை… போகவும் பிடிக்கவில்லை.. கணவன் அழைப்பை அல்லது அவனது செய்தியை எதிர்பாத்தபடி… மொபைலைப் பார்த்தபடியே நேரத்தைக் கடத்தியவளாக கணவன் தங்கும் மாடி அறையிக்குச் செல்லும் மாடிப்படியில் அமர்ந்திருந்தாள்…. எப்போதும் ரிஷியும் கண்மணியும் சந்திக்கும்… இல்லை சண்டை போடும் இடம் அங்குதான் ஆரம்பம் ஆகும்… ஒன்று அவன் அமர்ந்திருப்பான்… இல்லை இவள் அவனுக்காகக் காத்திருப்பாள்… இன்றும் அதேபோல அமர்ந்திருந்தவளின் மனம்… இந்த இடம் ராசியான இடம் இல்லை… எப்போது இங்கு அமர்ந்தாலும் தனக்கும் ரிஷிக்கு ஏதாவது வாக்குவாதம் தான் வரும்… ஏனோ எதிர்மறையாக மனம் சிந்திக்க ஆரம்பித்தது…


இன்று அதுபோல நேர வாய்ப்பில்லைதான்… ரிஷியிடம் இவள் சொல்லப் போகும் விசயம் அப்படிப்பட்ட விசயம்… கேட்டு அவன் சந்தோசப்படப் போகும் விசயம்தான்… இருந்தாலும் இடத்தை மாற்றுவோம் என்று மாமரத்தின் அடியில் வந்து அமர்ந்தாள்…


இங்குதான்!!! இங்கு அமர்ந்திருந்த போதுதான்…


ரிஷி தன் தந்தையிடம் அவர் அறியாமல் கையெழுத்து வாங்கிய தினம் ஞாபகத்துக்கு வந்தது கண்மணிக்கு… அதே நேரம் அன்றைய தினம்தான்… ரிஷி கண்மணியின் கணவனாக தன் நெருக்கத்தை, உரிமையைக் காட்டிய தினமும்… இப்போதும் அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்து வளைவில் உறவாடிக் கொண்டிருப்பது போல உணர அவளையுமறியாமல் உடல் சிலிர்த்ததுதான்… அன்றைய அவனின் செய்கைகளை இன்று நினைத்தவளுக்கு…. மெல்லிய கீற்றலாக புன்னகை அவள் இதழோடு அவளையுமீறி ஓட்டிக் கொண்டது….


ரிஷியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ… அந்த தெருவின் முனையில் அவனது இருசக்கர வாகனம் வரும்போதே அதன் ஒலி இவள் செவிகளை அடைய ஏனென்று தெரியாத, எப்போதும் இல்லாத பரவசம் அவளுக்கு…


“உன் முதலாளி… ஆஸ்திரேலியாவுக்கு வர சம்மதம் சொல்லிட்டாரு” முன்னிரவு நேரம் என்பதையெல்லாம் மறந்து அந்தக் ’கண்மணி’ இல்லமே அதிரும்படி அவனிடம் சொல்ல வேண்டும்… அதைக் கேட்டவுடன் அவன் முகத்தில் தோன்றுமே அந்தச் சந்தோசத்தைப் பார்க்க வேண்டும் என்று அவள் மனம் அடங்காத ஆட்டம் ஆட…. அது தந்த உற்சாகத்தில் அவன் பைக் வரும் முன்னமே மெயின் கேட்டின் அருகே நின்றவள் அதைத் திறந்து விட…


வந்த ரிஷியோ…. அவளைப் பார்த்தும் நிறுத்தாமல்…. நேராக பைக் நிறுத்துமிடத்திற்கு விரைந்திருந்தான்….


பைக்கை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டைக் கையில் எடுத்தபடி தன் மாடி அறையை நோக்கிய படிக்கட்டின் அருகில் நின்று அதன் பின் தான் அவளைப் பார்க்க… கண்மணி சந்தோஷமாக வேகமாக அவனை நோக்கிப் போனவள்… அதே உற்சாகத்தோடு மலர்ந்த முகத்தோடு அவன் முகம் பார்க்க… ஒரு நொடி தனக்குள் விதிர் விதிர்க்க மீண்டும் அவனை நோக்கினாள்…


ரிஷியின் முகமா அது… இது போல அவனை இப்படி பார்த்ததே இல்லை…. கண்மணி அவன் முகத்தைப் பார்த்தே அவன் எந்த நிலையில் இருக்கின்றான் என்பதைக் கணிப்பாள்… ஆனால் இன்று அவளால் முடியவில்லை… முடியவில்லை என்பதை விட இவள் இவள் கண்டுபிடிக்கக் கூடாது என்று அப்படி இருந்தானா என்று தெரியவில்லை…


இவளின் உற்சாகமெல்லாம் அவன் முகத்தைப் பார்த்த அந்தக் கணமே வடிந்து போயிருக்க… சொல்ல முடியாத ஏதோ உணர்வு இவள் தொண்டையை அடைத்தது….


இதுவரை அவள் பார்த்த ரிஷி உணர்ச்சிக் குவியலாக மட்டுமே அவளிடம் தன்னைப் பிரதிபலித்திருக்க… இன்று பார்த்த ரிஷியோ உணர்வுகளையே வெளிக்காட்டாத நடைபிணம் போல காட்சி அளித்தான் அவளுக்கு


கண்மணி அவனைத் தேற்றும் போதெல்லாம்… ஏதாவது ஒரு உணர்ச்சியின் பிடியில் இருப்பான்… இவளும் அதைக் கணித்து அவனை சமாதானப்படுத்துவாள்… ஆனால் இவன் இப்படி இருக்கும்போது என்ன சொல்வது… யோசித்தபடியே…


“என்னாச்சு ரிஷி… உடம்பு சரி இல்லையா” கண்மணியின் கைகள் இயல்பாக அவன் நெற்றியை நோக்கி நீள…


பட்டென்று அவள் தொட முடியாதாவாறு தன் தலையை விலக்கியவன்…


“தேங்க்ஸ் கண்மணி…. சார்கிட்ட பேசி ஓகே சொல்ல வைத்ததுக்கு….” என்ற போது ரிஷியின் குரலில் இருந்த அந்நியத்தனத்தனத்தை புரிந்துகொள்ள முடியாத அறிவிலிப் பெண்ணாக அவள் இருந்திருக்கலாமோ என்று தான் கண்மணிக்குத் தோன்றியது…


இவள் மேல் அக்கறையோடு தேன் கலந்த வார்த்தைகளைப் பேசுபவன் இல்லைதான்… ஆனால் இப்படி ஒட்டாத குரலில் பேசுபவனே இல்லை…


எனக்கு மட்டும் தான் ரிஷியைப் பற்றி தெரியும்… அவன் உணர்வுகள் பற்றி தெரியும்… இங்கு இருக்கும் யாருமே ரிஷியைப் பற்றி புரிந்து கொள்ள நினைக்கவில்லை… நான் மட்டுமே அவனைப் புரிந்து வைத்திருக்கின்றேன் என்று பெருமையாகப் பேசி வந்தவளுக்கு முதல் அடி அன்றுதான் விழுந்தது…


/*சுதி சேரும் போது விதி மாறியதோ அறியாத ஆடு வழி மாறியதோ

தங்கப் பூவே சந்திப்போமா சந்தித்தாலும் சிந்திப்போமா மாயம் தானா */

2,486 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page