அத்தியாயம் 40-3
/*பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம் வயது தடுக்கிறதே பொன்மானே என் யோகம்தான் பெண்தானோ சந்தேகம்தான் என் தேவி*/
மண்டபத்தின் ஓர் தனி அறையில் ரிஷி மற்றும் கண்மணி மட்டுமே…
கண்மணியின் இரண்டு கைகளிலும் இரண்டு வண்ணங்களில் பஞ்சு மிட்டாய் பாக்கெட்…
ரிஷி இதை… அதுவும் கண்மணியிடமிருந்து சுத்தமாக எதிர்பார்க்கவில்லை… விளையாட்டாகத்தான் சொல்லி வந்தான்… அதைக் கண்மணி செய்து காட்டுவாள் என்று அவன் நினைக்கக் கூட இல்லை… அலைபேசியில் தன்னை அழைத்து இந்த அறைக்கு வரச் சொன்னபோது கூட ரிஷி… சத்தியமாக பஞ்சுமிட்டாய்க்காகத்தான் தன்னை வரச் சொல்லி இருக்கின்றாள் என்று ஒரு சதவிகிதம் கூட நினைத்து வரவில்லை… ஏதோ முக்கியமான விசயம் போல… தனியாகப் பேச அழைக்கிறாள் என்று நினைத்து வர…. அவளோ உள்ளே வந்தவனிடம் சிறு குழந்தை போல கையில் வைத்திருந்த பாக்கெட்டுக்களை காற்றில் ஆட்டி காட்ட…
ரிஷியின் மனமோ… மனைவியின் செய்கையில் காற்றில் பறக்கத்தான் செய்தது… இருந்தும் தன்னைத் தானே அடக்கியவனாக…
"நான் ஒரு பேச்சுக்கு சொன்னா… இதை வாங்கிட்டு வந்து நிற்பியா கண்மணி” என்று சொன்னவனின் கண்கள் மனைவியிடம் மட்டுமல்ல அந்த பஞ்சு மிட்டாயின் மேலும் இருக்கத்தான் செய்தது….
“பிடிக்குமா பிடிக்காதா” கண்மணி மிரட்டுவது போன்ற கறாரான தோரணையில் கேட்க
“பிடிக்கும் தான்… ஆனா” கண்மணி கேட்ட விதத்திலேயே ரிஷி மென்று முழுங்க…
“அப்போ சாப்பிடுங்க” என்று இரண்டு கைகளையும் நீட்ட…
“ரெண்டு எதுக்கு”
“ரெண்டு கலர் இருந்துச்சு… உங்களுக்கு பிடித்த கலர் எதுன்னு தெரியலை… ரெண்டுமே வாங்கிட்டு வந்துட்டேன் எடுத்துக்கங்க… என்ன கலர் பிடிக்கும்” பாக்கெட்டை பார்த்தபடியே அவனிடம் கேட்க
”இவ்ளோ பண்ணினவங்களுக்கு எனக்குப் பிடித்த கலர் தெரியாதா”
தனக்குப் பிடித்த வண்ணம் அவளுக்குத் தெரியவில்லையே என்ற மனக்குமுறல் வேறு ரிஷிக்கு என்பது தனிக்கதை
அதையும் விடாமல் சொல்லிக் காட்டியவனாக… அவள் கையில் இருந்த பஞ்சு வண்ணத்தை தன் கைகளில் வாங்கிக் கொண்டவன்… சாப்பிட்டபடியே
“உன்னை யாரும் ஒரு மாதிரி பார்க்கலை” என்று ரிஷி கேட்க..
“அதெல்லாம் பார்த்தால் பஞ்சு மிட்டாய் உங்க கைக்கு வந்திருக்குமா” சொன்னவள்…
“ரிதன்யா மட்டும் பார்த்துட்டாங்க… செம்ம லவ்ஸ் லுக் விட்டாங்க….” என்று சிரிக்காமல் சொன்ன கண்மணியை இமைக்காமல் பார்த்தபடி நின்றவன்…
“சாரி… ரிதன்யாவுக்குப் பதிலா நான் கேட்டுக்கறேன்” என்றான்… இன்று பேசிய வார்த்தைகளுக்கா என்றால் அது இல்லை… ரிதன்யா கண்மணியிடம் நடந்து கொண்ட கொண்டிருக்கும் முறைக்காக…
அதுவரை கண்மணியின் முகத்தில் இருந்த குறும்பு புன்னகை மறைந்து.. மில்லி மீட்டர் புன்னகையை மட்டும் இதழ் உதிர்க்க…
“மன்னிப்பு கேட்கிறதுன்றது தப்பு பண்ணினவங்க தப்பை உணர்ந்து கேட்கிறது… இன்னொருத்தருக்கு பதிலா கேட்கிற மன்னிப்பு வேல்யூ இல்லாதது ரிஷி… தேவையும் இல்லாதது..” கண்மணி தன் வழக்கமான பாணியில் தெளிவாக ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்திருந்தாள்
மறுக்க முடியாத உண்மை… ஆக ரிஷியும் அமைதியாகி விட்டிருந்தான்…
“அதுமட்டும் இல்லை… உண்மையிலேயே எனக்கு உங்க வீட்லயே பார்த்த உடனேயே எனக்கு ரொம்ப பிடிச்சதுன்னா அது ரிதன்யாவைத்தான்… அத்தைக்கு உடம்பு சரி இல்லாதப்போ ஹாஸ்பிட்டல்லதான் முதன்முதலா ரிதன்யாவைப் பார்த்தேன்… அந்தச் சூழ்நிலையில நீங்க எல்லோருமே மனசொடஞ்சு போயிருந்தீங்கதான்… ஆனாலும் ரிதன்யாகிட்ட மட்டும் அந்தச் சூழ்நிலைய சமாளிக்கிற ஒரு தைரியம் இருந்ததோன்னு எனக்குத் தோணும்… அப்புறம் ரொம்ப பாசமானவங்க… ஆனால் காட்டிக்க மாட்டாங்க… அவங்க பாசம் வச்சுட்டா அவங்கள எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டாங்க… பிடிச்சவங்க தப்பு பண்ணாலும் தைரியமா சுட்டிக் காட்டி திருத்த நினைப்பாங்க… கேரிங்கான பெர்சன்… லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ரொம்ப ரொம்ப ஸ்மார்ட் எல்லா விதத்திலயும்…” கண்மணி ரிதன்யா பற்றி அடுக்கிக் கொண்டே போனாள்..
“ரிதன்யா என்னைப் பற்றி தப்பா பேசும் போதெல்லாம்… நான் அவங்ககிட்ட அட்மையர் பண்ற பாஸிட்டிவ் விசயங்களை லிஸ்ட்ல முன்னால கொண்டு வந்துருவேன்… எனக்கு இதுநாள் வரை நெருங்கிய தோழின்னு யாருன்னு கிடையாது… பொதுவா நான் யார்கிட்டயும் அவ்வளவா பேச மாட்டேன்… ரெண்டாவது என்னோட விசயங்களை ஷேர் பண்ணிக்க மாட்டேன்… அதுனாலேயே பெருசா ஃப்ரெண்ட்ஸ்னு எனக்குக் கிடையாது… அதுக்காக பெருசா ஃபீல் பண்ணது கிடையாது… ஒருவேளை என்னொட வேவ்லென்த்ல யாரும் கிடைக்கலையோன்னு தோணும்… சில உணர்வுகளை நம்ம ஃப்ரெண்ட்ஸ்கிட்டதான் மட்டும் தான் சொல்ல நினைப்போம்… அப்படி“ என்று ஆரம்பித்த போதே ரிஷி அவளை கேள்விக்குறியாகப் பார்க்க…
“உடனே அப்படி பார்க்காதீங்க… நீங்க… உங்க ரிலேஷன்ஷிப் வேற… நான் சொல்றது ஃப்ரெண்ட்ஸ்… தோழி… அந்த ரிலேஷன்ஷிப் பற்றி சொல்றேன் “ என்று கணவன் பார்வையில் அவனுக்கும் தெளிவைக் கொடுக்க நினைக்க…. அப்போதும் ரிஷியின் முகத்தில் தெளிவு வந்திருக்கவில்லை… அவனுக்குள் யோசிக்க ஆரம்பிப்பது போல் தோன்ற… பேச்சை திசை திரும்ப எண்ணியவளாக
“சரி விடுங்க… ரிதன்யா என்னைக்காவது என்னைப் புரிஞ்சுக்குவாங்க… அவங்க ஒரு பிரச்சனையே இல்லை எனக்கு போதுமா… ”
சொன்னவள் ரிஷியைப் பார்க்க…. இப்போதும் ரிஷி தன்னையேப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவளாக…
“சாரி ரிஷி” கண்மணி இப்போது மன்னிப்புக் கேட்க… ஆச்சரியமாக அவளைப் பார்த்தவன்.. ரிஷியே !!!
அந்த ஆச்சரியம் ரிதன்யாவைப் பற்றி சொன்னதற்கும்… கண்மணி ’சாரி’ என்ற வார்த்தையைச் என்று சொன்னதற்கும் பொதுவாக அமைந்து விட… ரிதன்யாவைப் பற்றிய பேச்சை வளர்க்காமல் விட்டு விட்டவன்… கண்மணியின் மன்னிப்பைப் பிடித்துக் கொண்டான்
“எதுக்கு சாரி” அவள் வேண்டிய மன்னிப்பின் காரணம் புரியாதவனாக விளக்கம் கேட்க
“ஊட்டியிலருந்து திரும்பி வரும்போது… நானும் உங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணிருக்கலாம்… நீங்க கோபப்பட்டது எங்க சேஃப்டிக்காக… எங்க பாதுகாப்புக்கு எந்தக் கவலையும் இல்லைனு உங்களுக்கு புரிய வைக்காமல் அன்னைக்கு அப்படி வந்தது தப்புதான்… சாரி ரிஷி” பவ்யமாக ஒன்றுமே தெரியாத குழந்தை போல பேசிய கண்மணியை ரசித்துக் கொண்டிருந்தான் ரிஷி அவனையுமறியாமல்….
பேசி முடித்த கண்மணியோ ரிஷியிடமிருந்து பதிலை எதிர்பார்க்க… அவனிடமிருந்தோ வார்த்தை வராமல் இருக்க…
“இன்னும் கோபமா ரிஷி… ” தாயிடம் அடி வாங்கிய குழந்தை தாயிடமே வந்து ஒன்றுமே அது போன்ற பாவம் கண்மணியிடம்…
அது கொடுத்த உணர்வோ என்னவோ ... தாள முடியாமல்.. சட்டென்று தன் புறம் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்…
“விடு… இனி மேல் அந்த மாதிரி பண்ணாத… எனக்கு உன் மேல எப்போதோ கோபம் போயிருச்சு… ஆனால் உன் மேல கோபம் இருந்தது உண்மை… உன் விசயத்தில சின்ன சின்ன விசயமா இருந்தால் கூட நான் ஏன் இவ்ளோ எமோசனல் ஆகுறேன்னு தெரியல கண்மணி ” ரிஷி சொல்ல… திகைத்து நிமிர்ந்தாள் கண்மணி…
ஆம் ரிஷியிடமிருந்து கண்மணி எதிர்பார்க்காத வார்த்தைகள்… கண்மணியைப் பொறுத்தவரை தான் என்றுமே அவனது பலவீனமாக இருக்கக் கூடாது… தான் அவன் எண்ணங்களை பெரிதாக ஆக்கிரமிக்காமல் இருக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள்…
அவன் மட்டுமல்ல… தானும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்க… கண்மணி அதன் எல்லைகளைத் தாண்டி விட்டதை நன்றாகவே உணர்ந்து விட்டாள்… ரிஷி என்பவன் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறத் தொடங்கியதை அவள் உணராமல் இல்லை…
ஆனால் ரிஷியும் அதே கோட்டில் பயணிக்கிறானா… மனம் யோசிக்க ஆரம்பித்தது…
கண்மணி என்பவள் யாரிடமும் காட்டாத தன் அன்பை ரிஷி என்ற ஒருவன் மேல் மட்டும் மழை போல் கொட்டுகின்றாள் என்றால்… யாரிடமும் வெளிப்படுத்தாமல் தனக்குள் மட்டுமே வைத்திருக்கும் கண்மணியின் மீதான ரிஷியின் அன்போ யாரும் அறியாதது… மண்ணில் புதைந்திருக்கும் வைரம் போன்றது… ஏன் கண்மணியே அறியாதது…. முரணான உணர்வுகள் என்று ஒரே புள்ளியில் சந்திக்க...??? சந்திக்குமா
கண்மணியின் மனதிலோ!!! ரிஷி பேசிய வார்த்தைகளால் தீவிரமான யோசனைகள் ஓடிக் கொண்டிருக்க… அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகளோ!!! அவள் எண்ண ஓட்டத்திற்கு மாறாக குறும்புத்தனமாக வெளி வந்திருந்தது…
“உண்மையிலேயே பஞ்சு மிட்டாய்க்கு வேல்யூ அதிகமாத்தான் இருக்கு… இனி நீங்க கோபமா இருந்தால்… இது போதுமா” என்றவளை ரிஷி முறைக்க….
”சும்மா ரிஷி… இதுக்கெல்லாம் கோபப்பட்டா எப்படி… நிமிசத்துக்கு நிமிசம் இப்படி கோபப்பட்டால் அந்த பஞ்சு மிட்டாய் காரன் நம்பர் ஒன் பணக்காரனா ஆகிறப் போகிறான்… அப்புறம் அவன் கிட்ட பஞ்சுமிட்டாய் வாங்குறதுக்குப் பதிலா அவனோட கம்பெனி ஷேர் வாங்குற நிலைக்கு நாம போகனும்…” கண்மணி சொல்ல ரிஷி இப்போதுதான் கண்மணியைக் கொலை வெறியோடு அவளை முறைக்க…
“ஒகே ஒகே…. நோ மோர் காமெடி… ” என்றவள் அவனை விட்டு விலகி… அவன் முன்னால் நின்றபடி
”நாம நமக்குள்ள ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம்… அதாவது இந்த மாதிரி இன்னொரு தடவை நமக்குள்ள சண்டை வந்தால் என்ன பண்றது?… உங்களுக்கு எப்படியோ… இந்த மாதிரி நாள் கணக்கா நீங்க யாரோ நான் யாரோன்னு என்னால இருக்க முடியாதுப்பா… சோ அதுக்கு ஒரு தீர்வு… அதாவது… இனி நமக்குள்ள சண்டை வந்ததுன்னா… என்ன செய்வோம்னா… யார் தப்பு செய்யலையோ அவங்க சாரி கேட்ருவோம்… தப்பு செய்யலேன்னாலும் கொஞ்சம் நேரத்திற்கு முன்னால நான் கேட்டேனே… அந்த மாதிரி…”
“தப்பு செய்யாதவங்களுக்கு ஈகோவும் இருக்காது ரிஷிம்மா…” அவளது வார்த்தையாடலைக் கேட்ட ரிஷி ரசித்துச் சிரித்தபடியே…
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… இதோ இந்த வாய் தான் யார் தப்பு செய்றாங்களோ… அவங்கதான் மன்னிப்பு கேட்கனும்… அது இதுன்னு தத்துவம் சொன்னுச்சு”
“அது அடுத்தவங்களுக்கு… நமக்கிடையில இல்லை… சோ” என்று இழுத்தவள் சாப்பிட ஆரம்பிக்காத அந்த பஞ்சு மிட்டாயை கையில் வைத்து சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க…
”அது சரி… நல்ல விளக்கம் தாம்மா… ஹ்ம்ம்… சொல்லுங்க மேடம் இன்னும் சொல்ல வந்ததை முடிக்கலை போல… அந்தப் பாக்கெட்ட சுற்றி ஊர்வலம் போனது போதும்… அதை நிறுத்திட்டு கேட்க வந்ததை கேளுங்க” என்க
“நான் கேட்கிறதுக்கு ஏதும் இல்லை… நீங்கதான் சாரி கேட்கனும்… இப்போ என்கிட்ட சாரி கேளுங்க” கண்மணி சொல்ல... அவள் என்ன தவறு செய்தாள் புரியாமல் ரிஷி புருவம் உயர்த்த
“இது அன்னைக்கு மகிளா பற்றி சொல்லி… உங்கள டெஷிஷன் எடுக்க கட்டாயப்படுத்தினதுக்கு… அன்றைக்கு நான் தான் தப்பு பண்ணினேன்… ஆனால் நம்ம ரூல்ஸ் படி நீங்க முதல்ல மன்னிப்பு கேட்கனும்”
எப்படியும் மகிளா விசயம் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனையில் வந்து நிற்கும் என்று முன்னமே உணர்ந்தவள்… அதையும் இந்தப் பேச்சு வார்த்தையிலேயே முடித்து வைத்திருக்க… ரிஷியும் அவள் எண்ணம் உணர்ந்தவனாக…
”கேடிடி நீ… சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற…” என்ற போதே
“நான் சைவம்…” என்றவள் கைகளில் வைத்திருந்த பஞ்சு மிட்டாய்ப் பாக்கெட்டைப் பிரிக்காமல் வைத்திருப்பதைப் பார்த்தவன்
“ஓ...ஓ…. அவாளோ நீங்க…. சரிங்க ரவுடி மாமி இதை சாப்பிடலையா” ரிஷி அவளை கிண்டல் செய்ய ஆரம்பிக்க… அந்தக் கிண்டலைக் கண்டுகொள்ளாத கண்மணி…
“நல்லா இருக்குமா ரிஷி இது…” கையில் வைத்திருந்த பஞ்சு மிட்டாயைக் காண்பித்து கண்மணி கேட்ட கேள்வியில் ரிஷிக்கு ஆயிரம் மின்னல் அவனுக்குள் வந்து வெட்டிச் சென்றது போன்ற உணர்வு
”நீ இதுக்கு முன்னால இதைச் சாப்பிட்டதே இல்லைய???” கண்களில் ஆச்சரியத்துடன் கேட்க
இல்லையென்று தலையாட்டியபடி… உதட்டைப் பிதுக்கினாள்…..
அவள் கையிலும் அந்த மிட்டாய் பாக்கெட் இருந்ததால் அவளும் சாப்பிடுவாள் என்று ரிஷி கண்டுகொள்ளாமல் சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருக்க… ஆனால் அவளோ சாப்பிட்டதே இல்லை என்று சொன்னது… ஒரு மாதிரியாக அவன் மனதைப் பிசையத்தான் செய்தது ரிஷிக்கு…
என்ன சொல்வது என்று தெரியாமல் ரிஷி அவளை நோக்கியபடி….
“உண்மையிலேயே நீ சாப்பிட்டதே இல்லையா… இல்லப் பிடிக்காதா”
“பிடிக்கும்தான்… சின்னப் பிள்ளையா இருக்கும் போது சாப்பிடனும்னு ஆசைப்படுவேன்… ஆனால் வாங்கித் தர ஆளில்லை… ஆனால் இப்போ வளர்ந்த பின்னால வாங்கத் தோணலை…” என்று கண்மணி சொன்னபோது… வார்த்தைகள் வரவில்லை ரிஷிக்கு… மௌனம் மட்டுமே அவனுக்குள்
அவள் என்னமோ சாதாரணமாகத்தான் சொன்னாள்…. கேட்ட ரிஷிக்குத்தான் மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வு… ஏன் அவளுக்கு ஆளில்லை… நட்ராஜ் சார் இல்லையா… மகள் இம்மென்று ஒரு வார்த்தை சொன்னால் அதற்கு மறுவார்த்தை சொல்லாமல் நிறைவேற்றும் ஆள்… கேட்க மனம் நினைத்தாலும்… ஏதோ ஒன்று தடுத்தது… கண்மணியின் குழந்தைப்பருவம் நட்ராஜோடு இருந்ததில்லை என்று மட்டும் ரிஷிக்குத் தெரியும்… அதைப்பற்றி கேட்க நினைக்கும் போதே
“ஏன் ரிஷி… நான் நல்லா இல்லையா…” கண்மணி அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தவாறே கேட்க… அவள் ஏன் அப்படி கேட்கிறாள் என்று ரிஷி தெரியாதவனா…
மண்டபத்தில் கண்மணியைப் பற்றி பேசிய வார்த்தைகள் அரசல் புரசலாக இவன் காதிலும் விழத்தானே செய்தது….
”யார் சொன்னது நீ அழகில்லைனு… சொன்னவங்கள்ளாம் அவங்க போட்ருந்த மேக்கப் முகமூடிய கழட்டி வச்சுட்டு உன் முன்னாடி வந்து பேசச் சொல்லு பார்க்கலாம்…” என்றவன் மிதமான ஒப்பனையில் தன் அருகில் நின்றவளின் முகத்தில் கவனம் வைத்தவனாக
“உன்னைப் பற்றி பேசினவங்களுக்கெல்லாம்… நீ பியூட்டி மட்டும் இல்லை பியூட்டி ரவுடினு கூடத் தெரியாது… இந்த பியூட்டியோட ரவுடியிசம்லாம் பார்த்தால் கேட்டால் உன்னைப் பற்றி பேசின அவங்க வாய்ல இருந்து பேச்சு வராது காத்து மட்டும் தான் வரும் “ சொன்னவனிடம் பெருமை மட்டுமே
கண்மணி பொய்யாக முறைக்க… அதைப் பார்த்து கண்சிமிட்டி… குறும்புப்புன்னகை புரிந்தவன்….
“உண்மை சொர்ணாக்… இல்லல்ல… கண்மணி…” என்று அவளைக் கிண்டலடித்தவன் … இப்போது கிண்டல் தொணியை மாற்றி
”உனக்கு மேக்கப் போடப் பிடிக்காதா… கண்மணி… லைட்டா போட்டுக்கலாம்.. தப்பில்ல கண்மணி… ஆனால் உனக்குப் பிடித்தால் மட்டுமே” ரிஷி அங்கிருந்தவர்களின் பேச்சைக் கேட்டதாலோ என்னவோ மெதுவாகத் தயங்கியபடி அவளிடம் சொல்ல
“யார் சொன்னது பிடிக்காதுன்னு… பிடிக்குமே… ஆனால் எனக்கு மேக்கப் போடத் தெரியாதே… அடுத்தவங்க பண்றதும் பிடிக்காது…” என்றவளைப் பார்த்து சிரித்தவன்
“சரி விடு… உனக்கெல்லாம் எதுக்கு மேக்கப்… அதுவும் பவித்ரான்ற அழகு தெய்வத்துக்கு பிறந்த பொண்ணு... அதெல்லாம் தேவையா என்ன” என்று சொல்ல..
“நான் எங்க அம்மா மாதிரி இருக்கேனா” என்று நம்ப முடியாமல் கண்மணி இப்போது கேட்க…
“பின்ன இல்லையா என்ன… உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்… எனக்கு உன்னை முதன் முதலா பார்த்தப்போ கூட ஒரு ஃபீலும் வரல கண்மணி… ஆனால் உங்க அம்மாவை முதல் தடவை அதிலும் போட்டோல பார்த்தப்போ.. எங்கோ அவங்கள பார்த்த மாதிரி ஃபீல்” என்றவன் சொல்லி முடித்தவன் அதன் பின்னால் தான்… தான் உளறிக் கொண்டிருப்பதையே உணர… கண்மணி என்ன நினைப்பாளோ என்று தவறு செய்த பாவனையில் வேகமாக அவளைப் பார்க்க…
அவளோ பஞ்சு மிட்டாயை முதல் கடி கடித்தபடி “ஹ்ம்ம்… அது ஏன்னு எனக்குத் தெரியுமே” என்க…
“நாமளே உளறிட்டு இருக்கோம்… இவ என்ன இப்படி சொல்றா” என்று இவன் கேள்வியோடு நோக்க…
“அம்மாக்கு ஹிந்தி ஆக்ட்ரெஸ் மாதுரி தீக்ஷித்னா ரொம்பப் பிடிக்கும்… அவங்களோட மேக்கப்… ட்ரெஸ்ஸிங்… ஹேர் ஸ்டைல்… மேனரிசம் எல்லாமே அம்மா அப்படியே ஃபாளோ பண்ணுவாங்க… அதுனால உங்களுக்கு அப்படி தெரிஞ்சுருக்கும்… உங்களுக்கும் அந்த ஹீரோயின ரொம்ப பிடிக்கும் போல … அதுனாலதான் அம்மாவைப் பார்த்து எங்கோ பார்த்த மாதிரி ஃபீல் உங்களுக்கு வந்திருக்கு… அவ்ளோதான்… இப்போ புரியுதா” என்ற அவனது சந்தேகத்துக்கு சரியான விளக்கம் கொடுத்து அவனைப் பார்க்க…
ரிஷியோ மனைவியின் விளக்கத்தில் நொந்து போனவனாக…. கையெடுத்துக் கும்பிட்டவன்…
“அம்மா தாயே… என்ன ஒரு விளக்கம்…. புரிஞ்சதும்மா… நல்லா புரிஞ்சது… ஆனா நீ நல்லா வருவம்மா… என் வாழ்நாள்ல இனி மாதுரி தீக்ஷித் படம் நான் பார்ப்பேன்!!!???… பார்க்க முடியுமா என்ன!!??… டேய் ரிஷி இது தேவையாடா உனக்கு…”
“இந்த உலகத்திலேயே பொண்டாட்டியோட அம்மாவைப் எங்கோ பார்த்த மாதிரி ஃபீல் இருக்குனு சொன்னதுக்கு… இப்படி ஒரு விளக்கம் வாங்கிய முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்”
புலம்ப ஆரம்பித்தவனின் மனசாட்சியோ….
“உன் ரவுடிகிட்ட அடி வாங்காமல் தப்பிச்சேன்னு சந்தோசப்படுடா முட்டாள்… பொண்டாட்டியப் பற்றி பேசாமல் அவ அம்மாவைப் பற்றி பேசுறியா நீ...” அவனை நையாண்டி செய்து கொண்டிருக்க….
“ஆமாம் நானும் கேட்ருக்கக் கூடாது…” என்று தனக்குத் தானே தலையிலடித்துக் கொண்டவன்… தனக்குள் பேசியபடியே கண்மணியைக் கவனிக்க… அவளோ அந்த மிட்டாயே கவனம் என்பது போல ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்க…
’சொர்ணாக்கா…’ - கண்மணி என்பவளை பார்த்து அவனுக்குத் தோன்றிய இரண்டாவது எண்ணமே…
கண்மணியைப் பார்த்த போது முதன் முதலாகத் தோன்றிய அவனது எண்ணம்….. ’இவளுக்கெல்லாம் பிஸ்கெட் டப்பா போதும்’ என்பதே
ரிஷி அன்றே சரியாகக் கணித்தான் என்றே சொல்ல வேண்டும்… ஆனால் இன்று அந்த வளர்ந்த குமரிக்கு அது கூடத் தேவையில்லை என்று தோன்றியது…
நினைத்த போதே… புன்னகை மெல்ல அரும்பி… அவன் உதடுகளை மெல்ல விரிய வைக்க… குழந்தையாக மாறி சாப்பிட்டுக் கொண்டிருந்தவளோ குமரியாக இப்போது அவன் கண்களுக்கு மாறி அவள்பால் அவனை இழுக்க... அந்தக் குமரியின் கைகளைப் பற்றியவன்… தன் அருகே அவளை இழுக்க… கண்மணிக்கு வித்தியாசம் தெரியவில்லை… அவனைப் பார்த்தால் தானே அவனின் உணர்வுகளைக் கண்டு கொள்ள முடியும்… வழக்கம் போல அவன் கைகளுக்குள் அடங்கினாள்… எந்த ஒரு உணர்வும் இன்றி… எதிர்பார்ப்பும் இன்றி…
ரிஷியை மட்டுமே இளமை உணர்வுகள் மெல்ல தாக்கத் தொடங்கி இருக்க… அவனை அவனாலேயே கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை…
அவன் கைகளுக்குள் அடங்கியிருந்தவளைப் பிடித்திருந்த கைகள் அவளை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தன…. அவனையுமறியாமல்… அவனுக்கும் புரியத்தான் செய்தது கண்மணியிடம் எல்லை மீறுகிறோம் என்று… இதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று அவளிடம் சொல்லி தானும் தள்ளி நின்று… அவளையும் தள்ளி வைத்திருத்தோம் என்பது எல்லாமே… மூளை எல்லாவற்றையும் எடுத்துத்தான் சொன்னது… ஆனால் கேட்கும் நிலையில் அவனோ… அவன் தேகமோ இல்லையே…
ரிஷியின் கண்கள் அவன் இதழ் சேவைக்கான ஆராய்ச்சியை அவள் இதழில் ஆரம்பிக்க… பஞ்சு மிட்டாயோ அவள் இதழ்களில் உறவாடிக் கொண்டிருக்க… அதைப் பார்த்த அவனது கண்கள் பொறாமையில் அவளது கன்னத்துக் குழிக்கு முதலிடம் கொடுக்கலாம் என்று அவன் இதழுக்கு சிபாரிசு செய்ய நினைக்க… ஆனால் அவள் அணிந்திருந்த மூக்குத்தியோ… எனக்குத்தான் முதலிடம் வேண்டும் என்று போட்டி போட… அவன் பார்வை அவனையுமறியாமல் மூக்குத்தியில் நின்று நிலைத்தது…
கணவனின் கைகள் பற்றியிருந்த தோள்களில் அழுத்தத்தை உணர்ந்தபோதுதான் கண்மணி ஏதோ வித்தியாசமாக உணர்ந்து அவனைப் நிமிர்ந்து பார்க்க… ஆனால் அவன் பார்வை நிலைத்திருந்த இடம் மட்டுமே அவள் கண்களுக்கு தெரிந்தது…
“இது அம்மாவோட மூக்குத்திதான்… இதையும் எங்கோ பார்த்த மாதிரி இருக்குதா என்ன “ என்று சீண்டலாக அவன் பார்வையின் ஆராய்ச்சிக்குப் பதிலாகச் சொன்னவள் அப்போது குழந்தையாக மாறியிருந்தாளோ???… குமரியாக இல்லையோ??… ஆக மொத்தம் அவன் பார்வை மாற்றங்களின் பரிபாஷைகள் அவளுக்குள் கடத்தப்படவில்லை…. என்பதே உண்மை..
அப்படி நடந்திருந்தால் ரிஷியின் பார்வைகளுக்கு விளக்கம் தேடி கண்மணியின் பயணமும் தொடர்ந்திருக்குமோ…
கண்மணி அப்படி இருக்க…. ரிஷிக்கோ… ஆரம்பத்திலேயே பட்டென்று நிறுத்தப்பட்டது கணவனாக மனைவியிடத்தில் அவன் தேடல்களின் பயணம்… அதற்கான காரணம் கண்மணி அணிந்திருந்த பவித்ராவின் மூக்குத்தியினாலா…. இல்லை பவித்ராவினாலா… கேள்விக்குறியே.. ஆனால் அதன் பதில் அர்ஜுன் என்பவனிடம் முடிவடைந்தது தான் ரிஷியின் துரதிர்ஷ்டம்... வழக்கம் போல ரிஷியின் அதிர்ஷ்ட தேவதை அவனை வெல்ல வைப்பாளா... பொறுத்திருந்து பார்ப்போம்
கண்மணி தாயின் மூக்குத்தி என்று சொன்னவுடனேயே…
“என்னது” என்று படபடத்தவனாக ரிஷி கேட்க… அதே நேரம் அவனது போனும் அடிக்க… எடுத்துப் பேசியபடியே… எதேச்சையாக கண்மணியை விட்டு விலகுவது போல விலகியவன்… எதிர்முனையில் கேட்ட குரலில்… ரிஷி முற்றிலுமாக இயல்புக்கு வந்திருந்தான்…
அலட்சியமான தொணியில்… எதிர்முனைக்கு பதிலளிக்க ஆரம்பித்திருந்தான்
“ஹ்ம்ம்…”
“---
“லெஃப்ட் சைட்ல… தேர்ட் ரூம்…”
“தனியாத்தான் இருக்கேன்… வாங்க” கண்மணியைப் பார்த்தபடியே சொன்னவன் போனையும் வைக்க…
கண்மணியோ ரிஷியிடம் கேட்காமல் தனக்குள்ளாக யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்க… கதவும் தட்டப்பட… ரிஷி போய்த் திறக்க… அங்கு வந்ததோ நீலகண்டன்… மகிளாவின் தந்தை
----
அலைபேசியில் கேட்டபோது தனியாக இருப்பதாக சொன்னானே… ஆனால்… அவனோடு இவளும் இருக்கின்றாளே என்று யோசனையோடே ரிஷியைப் பார்த்தவர்… கூடவே இருவர் கையிலும் இருந்த பஞ்சு மிட்டாயையும் பார்க்கத் தவறவில்லை..
நீலகண்டனின் முகத்தில் நக்கல் கலந்த ஏளனப் புன்னகை தானாகவே ஒட்டிக் கொள்ள…
“ஹ்ம்ம்… என்னதான் நான் பெரிய ஆளாகிட்டேன்… எனக்கும் மெச்சுரிட்டி வந்துருக்கு… அப்படின்னு சொன்னாலும்… ஊரெல்லாம் நம்ப வைத்தாலும் நாம இன்னும் மாறல… அப்படியேத்தான் இருக்கோம்… அப்படித்தானே ரிஷி” உள்ளே வந்தவர்… முதலில் இதைத்தான் ரிஷியிடம் உரைத்தார்….
கேட்ட ரிஷிக்கு கோபமெல்லாம் வரவில்லை… உண்மையில் யார் முன்னிலையில் பெரிய ஆளாக வர வேண்டுமென்று நினைத்தானோ அந்த வரிசையில் முதல் நபராக இருப்பவர் நீலகண்டன் தான்… அவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வர ரிஷி கோபம் கொள்ள வேண்டும்தான்… ஆனால் அவனோ சிரித்தபடி…
“எவ்வளவுதான் பெரிய ஆளாக இருந்தாலும்… அவங்களுக்குள்ள இருக்கிற குழந்தைத்தனம் எப்போதுமே மாறாது… மாறவும் கூடாது… இது என்னோட தனிப்பட்ட விசயம்… அதை விடுங்க… ஏதோ பேசனும்னு சொன்னீங்களே அதைச் சொல்லுங்க” என்றவன் மாமா என்ற வார்த்தையைத் தவிர்த்தான் வேண்டுமென்றே…
“ஹ்ம்ம்… பேசத்தானே வந்திருக்கின்றேன்” என்றவர் கண்மணியைப் பார்த்துக் கொண்டே…
“பேசனும்னு மட்டும் சொல்லல… தனியா பேசனும்னு சொன்னேன்… உனக்குப் புரியலையா ரிஷி” நீலகண்டன் அழுத்தம் கொடுக்க
ரிஷியோ… அசராமல் பதில் அளித்தான்… அதே அழுத்தத்தோடு
“நானும் தனியாத்தான் இருக்கேன்னு சொன்னேன்… உங்களுக்கு அது கேட்கலையா”
உண்மையிலேயே நீலகண்டனுக்கு பொறுமை மெல்ல மெல்ல கரைய… அவனிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்தவராக… கண்மணியிடம் திரும்பியவர்
“இங்க பாரும்மா… ரிஷிக்கு அவ்ளோ சீக்கிரம் சில விசயங்கள் புரியாது… இப்படித்தான் விளையாட்டுத்தனமா இருப்பான்… பார்த்ததானே நான் முக்கியமான விசயம் பேச வந்துருக்கேன்னு சொல்றேன்… விளையாண்டுட்டு இருக்கான்… நீ புத்திசாலி… உனக்கு சொல்ல வேண்டாம்… நான் சொல்லாமலே நீ புரிஞ்சுக்குவ… நான் ரிஷி கூட தனியா பேசனும்… ” என்று முடித்தவர்…
நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்லி கண்மணியை வெளியேறுமாறு சொல்ல….
கண்மணியோ ரிஷியையும் மிஞ்சி இருந்தாள்…. நீலகண்டன் பாஷையில் சொல்வதென்றால்… விளையாட்டுத்தனத்தில்
”அப்படியா… எனக்கு அவர் விளையாட்டுத்தனமா இருக்கிற மாதிரி தெரியலயே சார்… சீரியஸா பேசிட்டு இருக்கார்… எனக்கு அப்படித்தான் தெரியுது… நீங்கதான் அவரப் புரிஞ்சுக்கலை… அவர் சொன்னது உங்களுக்குப் புரியலையா என்ன… ” சொன்ன கண்மணியை நீலகண்டன் புரியாமல் பார்த்ததோடு இல்லாமல் முறைக்க வேறு செய்ய… ரிஷி இடையிட்டான் இப்போது
“ரிஷி வேற கண்மணி வேற இல்லை… இதெல்லாம் அவருக்குத் தெரியாது கண்மணி…” ரிஷியின் குரலில் ஏகத்துக்கும் நக்கல் வழிந்தோட… நீலகண்டனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை…
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து நீலகண்டனிடம் வார்த்தைப் போர் புரிந்தால் அவர் தாங்குவாரா என்ன… கல்லாக நிற்கத்தான் முடிந்தது நீலகண்டனால்
இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்… கண்மணி ரிஷியின் வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை… நீலகண்டனை அவனுக்குப் பிடிக்காது… ஆக அவரின் முன் தன்னைப் பற்றி… தங்கள் உறவின் நிலைப்பாடு பற்றி கூறியதைப் பெரிதாக உணர்வுப்பூர்வமான வார்த்தையாக எடுத்துக் கொள்ளவில்லை… தனக்குப் பிடிக்காதவர் முன்… அவன் காதலை துச்சமாக மதித்தவர் முன் தன் திருமண வாழ்க்கையைப் பெருமையாக காட்டிக் கொள்ளவே இப்படி பேசுகிறான் என்றே நினைக்க… கண்மணி ரிஷியின் வார்த்தைகளைச் சாதாரணமாக விட்டு விட்டாள்… காதல் வந்தால்… பிழைகளும் வருமோ… அடுத்தவர்களை… சரியாக கணிக்கும் கண்மணி… கணவன் விசயத்திலோ… மெல்ல மெல்ல சறுக்க ஆரம்பித்திருந்தாள்… அவனுக்கான அவளின் புரிதலே சில விசங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல்… காரண காரியங்களை அடிப்படையாக வைத்து புரிந்து கொண்டு பழகும் குணம் இப்போதும் அப்படியே நினைத்து வைத்தது அவளை….
இதற்கிடையே ரிஷியின் வார்த்தைகளைக் கேட்டு கல்லாகச் சமைந்திருந்த நீலகண்டன்… உணர்வுக்கு வந்தவராக… கண்மணி-ரிஷி இருவரையுமே ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே
“இந்தப் பொண்ணு இங்க இருக்கிறதுனால… எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை… நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டு போயிடறேன் “ என்றவர் கண்மணியிடம் திரும்பி…
“நான் பேசப் போறது உன்னை ஏதாவது பாதிச்சதுன்னா… அதுக்கு நான் பொறுப்பில்லம்மா… “ சொன்னவர்… ரிஷியிடம் பேச ஆரம்பித்தார்
“இங்க பாரு ரிஷி… நீயோ… உன்னோட வாழ்க்கையோ… இதைப் பற்றியெல்லாம் நம்ம குடும்பத்து ஆளுங்களுக்கு பெரிய பிரச்சனை இல்லை… ஏதோ முடிவெடுத்துட்ட… என்னமோ பண்ணித் தொலச்சுட்ட… ஆனால் இதே மாதிரி முட்டாள் தனமான முடிவை… ரிதன்யா விசயத்திலயும் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்… அதை நினைத்து நான் மட்டும் இல்லை… நம்ம சொந்தக் காரங்களும் பயப்படுறாங்க.. “ நிறுத்தினார் நீலகண்டன்… ரிஷியின் கூர்ப் பார்வையில்… அதன் வீச்சைத் தாங்க முடியாமல்
“சொல்லுங்க… ஏன் நிறுத்திட்டீங்க…” கைகளைக் கட்டிக் கொண்டவன்… சாவகாசமாக அங்கிருந்த டேபிளின் மேல் சாய்ந்து கொண்டபடி… அவரைப் பார்க்க
“அதாவது ரிதன்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிற விசயத்தை நாங்க பார்த்துக்கிறோம்… நீ எவளோ ஒருத்திய மேரேஜ் பண்ணின மாதிரி… இந்த ஏரியால இருக்கிற எவனையாவது ரிதன்யாக்கும் பண்ணி வச்சுட்டேன்னா… அதை நாங்க வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க முடியாது… அதுனால” என்ற போதே
கை மறித்து அவரை நிறுத்தியவன்…
“அது என்ன இந்த ஏரியா… ரிதன்யாக்கு பொருத்தமானவன்னு தோணுச்சுன்னா அது யாரா இருந்தாலும்… எந்த இடத்தில இருந்தாலும் அந்தப் பையன ரிதன்யாக்கு நான் மேரேஜ் பண்ணி வைப்பேன்… அது ரிதன்யாக்கு சம்மதம் எனும் பட்சத்தில்… இங்க என் முடிவை விட… ரிதன்யா என்ன சொல்றாளோ அதை வைத்துதான் என்னோட முடிவும் இருக்கும்… அஃப்கோர்ஸ் இந்த ஏரியால.. யாரோ ஒரு பையன பிடிச்சு ரிதன்யா என்கிட்ட வந்து கேட்டான்னா… அந்தப் பையன் நல்ல பையன்னா கண்டிப்பா மேரேஜ் பண்ணிக் கொடுப்பேன்… இது என்னோட குடும்பம்… நானும் என் குடும்பத்தில இருக்கிறவங்களும் மட்டுமே முடிவெடுப்போம்… வேற யாருக்கும் இங்க இடம் இல்லை… அவங்கவங்க குடும்பத்தில் ஆயிரம் கவலை இருக்கும்… அதை மட்டும் பாருங்க… எங்க குடும்பத்தைப் பற்றி யாருக்கும் இங்க கவலை வேண்டாம்…” என்ற படபடவெனப் பேசிக் கொண்டிருக்கும் போதே
“ரிஷி… நல்ல இடத்தில இருந்து பொண்ணு கேட்கிறாங்க” என்று நீலகண்டன் தயங்கியவராக சொல்ல ஆரம்பிக்க… ரிஷி அவரைப் பேச விட்டால் தானே
“என் தங்கச்சி அவ… அவளை நான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல… அவளுக்கு எப்போ என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும்… ” என்ற போதே ரிஷியின் குரல் உயர்ந்து விட..
இதற்கு மேல் இவனிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்தவராக… நீலகண்டன் முறைத்தபடி… வெளியேற... கதவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நீலகண்டனின் முதுகை கோபத்துடன் வெறித்தபடியே நின்றிருந்த ரிஷி… ஏதோ நினைவு வந்தவனாக… அவரைக் கை சுண்டி அழைக்க… நீலகண்டனுக்கு வந்ததே கோபம்…
தான் பார்த்து வளர்ந்த பையன்… தன்னை விரல் சுண்டி அழைப்பதா… தன்மானம் அவரை தாக்க…. வேகமாகத் திரும்பி ரிஷியின் அருகில் வந்தவர்… அதே வேகத்தில் எட்டி அவன் சட்டைக் காலரையும் பிடிக்கப் போக… வினாடியின் இருவருக்கும் இடையில் கண்மணி வந்திருக்க… நீலகண்டனால் ரிஷியை நெருங்க முடியவில்லை… கண்மணியைத் தாண்டி…
“என்னம்மா… புருசனுக்கு ஓவர் சப்போர்ட் போல… அவனுக்கு சரி எது தப்பு எதுன்னு சும்மாவே தெரியாது… அப்படி அவங்க அம்மா அப்பாதான் வளர்த்து விட்டுட்டாங்க… நீயாவது அவனுக்கு எடுத்துச் சொல்வேன்னு பார்த்தா… நீ அவன் அப்பா அம்மாவை விட அவனுக்கு அதிகமா சப்போர்ட் பண்ற…” என்றவரிடம்
“மரியாதைன்றது கேட்டு வாங்குறது இல்லை… அது தானா வர வேண்டும்… உண்மையைச் சொல்லப்போனால் நான் அவர் இடத்தில இருந்திருந்தா இதை விட மோசமா நடந்திருப்பேன்… ரிஷி மரியாதை இல்லாமல் அப்படி சுண்டிக் கூப்பிட்டது தப்புதான்… அதைச் சரின்னு சொல்லலை… ஒத்துக்கறேன்… நீங்க சொல்ல வந்தது நல்ல விசயமா இருந்தாலும்… சொன்ன விதம் சரியில்ல…” என்று கண்மணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே… நீலகண்டன்…
“ஆமாம்… தராதரம் தெரிஞ்சு நானும் சொல்ல வந்திருக்கனும்… நான் வந்தது.. சொன்னது எல்லாமே தப்புதான்… ” என்றவர் கிளம்ப எத்தனிக்க…
“மிஸ்டர் நீலகண்டன்… ஒரு நிமிசம் இருங்க… நான் சொல்ல வந்ததை கேட்காமலேயே போறீங்க… அதையும் கேட்டுட்டுப் போங்க” என்ற ரிஷி… இப்போது அவர் முன் போய் நின்றபடி…
“நான் ஏதோ முடிவெடுத்தேன்… என்னமோ பண்ணினேன்னு சொன்னீங்கள்ள… அந்த முடிவுதான் என் வாழ்க்கைல நான் எடுத்த ரொம்ப ரொம்ப சரியான முடிவு… அதாவது நான் இவள மேரேஜ் பண்ண முடிவெடுத்தது… அதுக்கப்புறம் தான் தெரிந்ததுது… அதுக்கு முன்னாடி வரைக்கும் ஒரு முடிவெடுத்தால் குழப்பத்தோடத்தான் இருப்பேன்… நான் எடுக்கிற முடிவுகள் சரியா இருக்குமான்னு… கண்மணிக்கும் எனக்குமான திருமணம்… அதுக்கான பதிலைக் கொடுத்திருச்சு… எனக்கு ஒரு தெளிவும் கொடுத்தது… இப்போ நான் பெருமையா நான் சொல்வேன்… உறுதியா சொல்வேன்… இனி நான் எடுக்கப்போற முடிவுகளும் சரியா இருக்கும்னு… அந்த அளவு எனக்கு கான்ஃபிடெண்ட் இருக்கு…” என்று சொன்னவன்… நீலகண்டனின் பாராட்டு மொழிகளையா எதிர்பார்ப்பான்… அதற்கு மேல் அவரிடம் பேச ஒன்றுமில்லை என்பது போல அவரை மறித்திருத்திருந்த வழியை ரிஷி விட … நீலகண்டன் விருட்டென்று கிளம்பி விட்டார்…
அவர் சென்று விட ரிஷியும் கண்மணியும் இப்போது அமைதி ஆகி விட்டிருந்தனர்… சற்று முன் இருந்த மனநிலை மாறியிருந்தது இருவருக்குமே…
ரிஷிக்கோ வேறு மாதிரியான ஒரு போரட்டம் அவனுக்குள்… கண்மணியின் அருகே தனியாக இருக்க முதன் முதலாக அவனுக்குள்ளே போராடிக் கொண்டிருந்தான்… கண்மணியோ அது எல்லாம் உணராமல் பஞ்சு மிட்டாயோடு உறவாடிக் கொண்டிருக்க….
அவளைத் தொந்தரவு செய்யாமல் தள்ளி நின்று… அவளை ரசிக்க ஆரம்பித்தவனுக்கு பஞ்சு மிட்டாயில் தொடங்கி… அவள் அணிந்திருந்த மூக்குத்தி வரை அவன் எதிரிகள் வரிசையில் புதியதாக இணைய… இத்தனை நாட்களாக அவனைக் குளிர்வித்த அவள் அணிந்திருந்த மூக்குத்தி… இன்று பிடிக்காமல் போயிருக்க… அவன் மனைவிக்கு கண்வனாக அவன் முதல் பரிசு என்பது மூக்குத்தி தான்… மனதில் குறித்து வைத்துக் கொண்டான் ரிஷி…
ஆக மூக்குத்தி வாங்கியபின் தான் அவளருகில் போக வேண்டும் என்று முடிவெடுத்தவனுக்கு… போராட்டம் முடிவடைந்து இப்போது நிம்மதி பெருமூச்சு வந்திருக்க… அது கொடுத்த தைரியத்தில் அவள் அருகில் நெருங்கியவன்…
“கண்மணி… சீக்கிரம் சாப்பிடு போகலாம்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே… வேலனும் தினகரும் அங்கு பிரசன்னம் ஆக… கண்மணியும் ரிஷியும் இயல்பாக அவர்களை வரவேற்க… வந்த வேலன் மற்றும் தினகரின் முகங்களில் தான் இப்போது பேயறைந்தார்ப் போல தோற்றம்…
“என்னடா… ரெண்டும் பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிட்டே வர்றீங்க… அதுவும் பேயறைஞ்ச மாதிரி இருக்கிறீங்க… அப்படி என்ன பார்த்தீங்க” என்ற போதே… அவர்கள் இருவரின் பார்வைகளும் கண்மணி கையில் வைத்திருந்த பஞ்சு மிட்டாயின் மேல் இருக்க…
இருந்தும் அதைப் பற்றிக் கேட்காமல்… தாங்கள் சொல்ல வந்த விசயத்தை சொல்ல ஆரம்பித்தனர்
“அண்ணாத்த… நட்ராஜ் சார் கிளம்பிட்டாரு…” தினகர் ஆரம்பிக்க “நாங்க அவர் கிளம்பின வேகத்தைப் பார்த்து என்னன்னு கேட்டோம்” வேலன் தொடர்ந்தான்…
”சார் பதிலே சொல்லலண்ணா… கோபமா இருந்த மாதிரி இருந்துச்சு… சாப்பிடக் கூட இல்லைனு நினைக்கிறேன்… அவர் இப்படி முகம் மாறி நான் பார்த்ததே இல்லை…“ கொஞ்சம் பதட்டமும் இருந்தது இருவரின் முகத்திலுமே…
கண்மணிக்குள்ளும் அவர்களின் பதட்டம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது… தந்தை கவலையோடு கிளம்பிச் சென்றிருக்கின்றார் என்று கேட்டவுடனேயே…
“விழாவுக்கு வந்தவர்கள் ஏதாவது சொல்லி அதைத் தாங்க முடியாமல் தந்தையின் மனம் வருந்திவிட்டதோ… கோபமும் வந்து விட்டதோ” இதை யோசித்த போதே கண்மணியின் முகம் சட்டென்று மாறிவிட்டது… தந்தையின் நிலையை எண்ணி…
கவலையோடு ரிஷியை நோக்க… அவன் முகத்திலோ பெரிதாக மாற்றமில்லை… இது எதிர்பார்த்ததுதான் என்பது போல… அமைதியாக இருந்தான்… ஆனாலும் எதையோ யோசிப்பது போல… அதற்கான தீர்வை தேடுவது போல பாவனை மட்டுமே இருக்க…
தொண்டையைச் செறுமிக் கொண்டவன்…
“சரி நான் பார்த்துக்கிறேன்… நீங்க போங்க” என்று சொல்ல… தினகரும் வேலனும்… கிளம்பினர்…
ஆனால் கதவு வரைப் போனவர்கள்… என்ன நினைத்தார்களோ… இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்… பின்
“அண்ணாத்த இங்க வாங்க” ரிஷியை மட்டும் தங்கள் அருகே அழைக்க… ரிஷியும் சென்றான்… வந்த ரிஷியிடம்
“தல… கதவைப் பூட்டிக்கங்க” என்று தினகர் சொல்ல…
ரிஷி அவர்களை புரியாத பார்வை பார்த்தான்…
“இல்ல அண்ணாத்த… நாங்களும் வாலிப வயசைத் தொட்டுட்டோம்” ரிஷியின் புரியாத பார்வையைப் பார்த்தபடியே வேலன் நக்கலாகச் சொன்னான்
நீலகண்டன் வெளியேறிச் சென்ற போது கதவை திறந்து விட்டே சென்றிருக்க.... வேலன் -தினகர் வரும் போது கதவு திறந்திருந்தது தான்... ஆனால்... அவர்கள் வரும்போது இடைவெளி விட்டே ரிஷி கண்மணி நின்றிருந்தனர்…
அப்படி இருக்க… வேலன் -தினகர் இது போலச் சொல்ல… முறைத்தான் ரிஷி…
“முறைக்காத தல… ரொமான்ஸ்னா என்னன்னு இப்போதான் நாங்க கத்துக்கிற வயசு… உங்கள பார்த்து இதான் ரொமான்ஸுன்னு நாங்களும் அதையே ஃபாளோ பண்ணிடப் போறோம்…” என்று கடுப்பாகச் சொன்னவன்…
“அதாவது பஞ்சு மிட்டாய் சாப்பிடறதுதான் ரொமான்ஸுன்னு வேலன் நினச்சுடப் போறானாம்” தினகர் விளக்கமாக வேறு சொன்னவன்…
“டேய் வேலா… இவர் தியேட்டருக்கு படம் பார்க்க வந்து… படம் பார்க்காமல் கண்ண மூடிட்டு தூங்கும் போதே தெரியாதாடா உனக்கு” சிரிக்காமல் தினகர் சொல்லி முடிக்க… ரிஷியின் முகத்தில் முறைப்பை மீறி புன்னகை பரவத் தொடங்கியதுதான்… இருந்தும்… நொடியில் மாற்றிக் கொண்டவன்…
“நட்ராஜ் சார் ஏன் கோபமா போனாருன்னு… நானே குழம்பிட்டு இருக்கேன்… உங்களுக்கு இப்போ இது ரொம்ப முக்கியம்… போங்கடா” என்று அவன் அதட்டும் போதே அதில் இருந்த போலித்தனம் அவன் குரலில் அழகாக வெளிப்பட… தினகரும்-வேலனும் விடுவார்களா என்ன…
“போறோம்… போறோம்… இன்னும் வேற ஏதாவது வேணுமா தல… இந்த சொப்பு சாமான்… பபுள்ஸ் பாக்ஸ் இதெல்லாம் வேண்டுமா… ரெண்டு பேரும் மாத்தி மாத்தி காத்துல பபுள்ஸ் விட்டுட்டே விளையாடலாம்… லாலிபாப்பையும் லிஸ்ட்ல வச்சுக்கலாம்… எவ்வளவு நேரம் பஞ்சு மிட்டாயே சாப்பிடறது” சொன்னவர்கள்…. சொல்லி முடித்த வேகத்தில் காற்றாகப் பறந்தும் இருந்தனர்… ரிஷி உண்மையாகவே இப்போது கோபத்தைக் காட்டப் போகிறான் என்று புரிந்ததால்…
அவர்கள் வேகமாக ஓடி மறைந்ததை முறைத்தபடியே பார்த்திருந்தவன்… இவர்களா முக்கியம் இப்போது?? நினைத்தவனாக… நட்ராஜ் சார்!!… அவரின் கோபத்தைத் தணித்து… எப்படி சம்மதம் சொல்ல வைப்பது… யோசனையோடு கதவை மூடியவன்… கண்மணியின் அருகில் வந்தான்…
அவளோ கவலை படிந்த முகத்தோடு யோசித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தவனுக்கு… இப்போதெல்லாம் ஓரளவு அவளைப் புரிந்து கொள்ளும் திறன் வந்திருக்கத்தான் செய்தது… அதன் விளைவு
“இங்க அவருக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது கண்மணி… யார் என்ன சொன்னாலும் அதை மண்டையில ஏத்திட்டு குழம்புற மனுசன் கிடையாது… உங்க அப்பா கோபத்துக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியும்… எதிர்பார்த்த ஒன்றுதான்… ஆனால் எப்படி அவரைச் சமாளிக்கப் போறேன்னுதான் தெரியலை…” என்று கண்மணியிடம் சொல்லி ஆற்றாமையோடு அவளைப் பார்த்தான்
கண்மணி ரிஷியைக் குழப்பமாகக் பார்க்க
“உங்க அப்பா எடுக்கிற முடிவுலதான்… அவர் கைலதான் நான் ஆஸ்திரேலியா போறதே இருக்கு… நான் கம்பெனிக்கு போகிறேன்… உங்கப்பா அங்கதான் போயிருப்பாரு…. நீ இங்க எல்லாம் ஓரளவு முடிந்த பின்னால வா… கண்டிப்பா வா” என்றவன்… உடனடியாக கிளம்பியும் விட்டான்…
யாருக்காகவும்.. யாரிடமும்… யாரின் முன்னும் ரிஷியை விட்டுக் கொடுக்காத கண்மணி… தன் தந்தையா , ரிஷியா என்று வரும்போது… அவர்கள் இருவரும் எதிரெதிரே நிற்கும் போது யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பாள்… கணவனா??? தந்தையா???… இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் படி கண்மணியையும் காலம் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது…
/* உன் விழி ஓடையில்
நான் கலந்தேன்
பொன் கனி விழும் என
தவம் கிடந்தேன் பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு
நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆஹா ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆஹா*/
Sema update.